“கிரிமினல் மாஃபியா” சசிகலா கும்பலின் பொம்மை எடப்பாடி ஆட்சியை
தூக்கியெறிவோம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
ஜனநாயகவாதிகளே!!
முன்னாள் முதல்வர்
ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்குப் பின்பு, கிரிமினல் மாஃபியா சசிகலா கும்பல் சதித்திட்டம்
தீட்டி அதிமுக கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றியுள்ளது. கட்சியை விட்டு நீக்கப்பட்ட
ஒருவர் மீண்டும் இணைந்து 5 ஆண்டுகள் ஆனபின்புதான் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு
வரமுடியும், கட்சியின் பொதுச் செயலாளர் கட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்
என்ற அதிமுகவின் 20(5) அமைப்புச் சட்டவிதிகளை மீறி சசிகலா அதிமுக-வின் பொதுச்செயலாளர்
பதவியை கைப்பற்றினார். அடுத்து அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக தன்னை தேர்ந்தெடுக்க
வைத்தார். தற்காலிக முதலமைச்சராக இருந்த பன்னீர் செல்வத்தை மிரட்டி ராஜினாமா கடிதத்தை
எழுதி வாங்கினார். உச்சநீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை நிச்சயம்
என்று தெரிந்த பிறகும் எப்படியும் முதலமைச்சராகி விடவேண்டும் என்ற வெறியில் கவர்னரை
நிர்ப்பந்தித்தார். உச்ச நீதிமன்றம் சசிகலாவின் ஆசைக்கு முற்றுபுள்ளி வைத்தவுடன், தனது
எடுபிடி எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக நியமனம் செய்து ஒரு பொம்மை ஆட்சியை தமிழக
மக்கள் மீது திணித்துள்ளார். அதிமுக - பன்னீர் அணி, சசி அணி என இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.
அதிமுக-வினரும், தமிழக மக்களும் சசிகலாவின் இந்த சதிகளுக்கு கடும் எதிர்ப்புகளைக் காட்டிவருகின்றனர்.
இது தமிழகத்தில் ஒரு கடுமையான அரசியல் பொருளாதார நெருக்கடியை கொண்டு வந்துள்ளது.
ஜெயலலிதா மரணமும் அரசியல்
நெருக்கடியும்
ஜெயலலிதா கடைப்பிடித்து
வந்த அரசியல் பொருளாதாரக் கொள்கைகளே இன்றைய அரசியல் நெருக்கடிக்கு காரணமாகும். எம்.ஜி.ஆர்.
மறைவுக்குப் பிறகு 91 ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வரானார். அன்று முதல் அவர் மறையும்
வரையிலான அவரது ஆட்சிக் காலம் முழுவதும் மத்தியில் ஆளும் கட்சிகளுடன் சமரசம் செய்துகொண்டார்.
ஆனால் தமிழக உரிமைக்காகப் போராடும் ‘வீரமங்கை’யாகத் தன்னை காட்டிக் கொண்டார். நரசிம்மராவ்
தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் ஆரம்பித்து வைத்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய
காலனிய, புதிய தாராளக் கொள்கைகளை ஊக்கமுடன் செயல்படுத்தினார். தமிழகத்தை இந்தியாவின்
நம்பர் ஒன் மாநிலமாக மாற்றுகிறேன் என்று சொல்லி தமிழகத்தை ஏகாதிபத்திய பன்னாட்டுக்
கம்பெனிகளின் வேட்டைக்காடாக மாற்றினார். இயற்கை வளங்கள், கனி வளங்களை அதாவது தாது மணல்,
ஆற்றுமணல், கிரானைட், நீர் வளம் அனைத்தும் கார்ப்பரேட்களின் கொள்ளைக்கு திறந்துவிடப்பட்டது.
ஜெயலலிதா தமிழகத்தின் வளங்களை பன்னாட்டு, உள்நாட்டுக் கம்பெனிகளுக்கு தாரைவார்த்ததுடன்
அதன் மூலமாக ஊழல் செய்து சொத்துகளைக் குவிப்பதில் குறியாக இருந்தார். தனது தலைமையில்
ஒரு ஊழல் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார். இன்று தமிழகம் சந்தித்துவரும் பொருளாதார நெருக்கடிகளுக்கும்
விவசாயிகளின் தற்கொலைகளுக்கும் ஜெயலலிதா அமல்படுத்திய மேற்கண்ட கொள்கைகளே காரணமாகும்.
ஜெயலலிதாவின்
தலைமையில், சசிகலா, தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ், பன்னீர், சேகர் ரெட்டி மற்றும்
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உயர் அதிகாரிகளைக் கொண்ட ஒரு சிறுகும்பல், மாஃபியா கும்பலைப்போல்
செயல்பட்டு தமிழகத்தைச் சூறையாடியது. ஜெயலலிதா கும்பலுக்கு அரசாங்கத்தின் ஒவ்வொரு துறை
மந்திரியும் வசூல் ராஜாக்களாக செயல்பட்டு பெருமளவில் பணத்தைக் கொள்ளையிட்டு கப்பம்
கட்டவேண்டிய கொடுமை நிலவியது. அது பற்றி அக்கட்சியின் எம்.எல்.ஏ-வான பழ.கருப்பையாவே
அம்பலப்படுத்தினார். வசூல் செய்து கொடுக்க மறுத்த முத்துகுமாரசாமி என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி
தற்கொலையால் மாண்டதையும் கண்டோம். ராம்மோகன் ராவ் மற்றும் சேகர் ரெட்டியின் கைதும்,
என்னுடைய தலைவர் ஜெயலலிதாதான் என்ற ராம்மோகன் ராவின் அறிவிப்பும் அதை உண்மை என நிரூபித்துள்ளது.
சொத்துக்குவிப்பு
வழக்கில் முதன்மைக் குற்றவாளி ஜெயலலிதாதான் என்று உச்ச நீதிமன்றம் பின்வருமாறு கூறுகிறது.
“ஜெயலலிதா
வீட்டில் சசிகலா, சுதாகரன், இளவரசி என எல்லோரும் கூட்டாகச் சேர்ந்திருந்தது ஏதோ தொண்டு
செய்யும் உந்துதலில் இல்லை. ஜெயலலிதா சம்பாதித்த சொத்துகளை என்ன செய்யலாம் என குற்றச்
சதியில் ஈடுபடவே இணைந்திருந்தார்கள். ஜெயலலிதா சம்பாதித்த பணத்தை வைத்து மற்ற மூன்று
பேரும் பெரிய அளவில் நிலங்களையும், சொத்துகளையும் வாங்கிக் குவித்தார்கள். ஜெயலலிதாவின்
கணக்கில் வராத ஊழல் பணத்தை வைத்து நிறுவனங்களைத் தொடங்கினார்கள். ஒரே நாளில் பத்து
நிறுவனங்களை தொடங்கிய விவரங்களும் உண்டு. இவர்கள் தொடங்கிய இந்த பல நிறுவனங்களுக்கு
சொத்துகளை வாங்குவதைத் தவிர வேறு எந்த பிசினசும் இல்லை” என்ற பெங்களூரு விசாரணை நீதிமன்ற
நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உறுதிபடுத்தி ஜெயலலிதாதான் முதன்மை குற்றவாளி என்று உச்ச
நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஜெயலலிதா தனது
இந்த மாஃபியா நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகளின் மீது பழிசுமத்துவதன் மூலமும், தனது எதிராளிகளின்
மீது அடக்குமுறைகளை ஏவி அவர்களின் குரல்வளையை நசுக்குவதன் மூலமும், இலவசத் திட்டங்களை
அறிவித்து மக்களை ஏமாற்றுவதன் மூலமும், மக்கள் மத்தியில் மத நம்பிக்கைகளையும் மூடப்
பழக்க வழக்கங்களையும் தூண்டி முட்டாள்களாக ஆக்குவதன் மூலமும் திசைதிருப்பி வந்தார்.
ஆனால் ஜெயலலிதா வசித்துவந்த, மர்மங்கள் நிறைந்த வேதா இல்லம் எனும் பாதாள உலகமே அவரின்
மரணத்திற்கும் காரணமானது.
சொத்துக் குவிப்பு
வழக்கிலிருந்து மீள்வதற்கு 17-ஆண்டுகள் இழுத்தடித்தும் ஜெயலலிதாவின் கனவு பலிக்கவில்லை.
பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவின் உன்னத தீர்ப்பு ஜெயலலிதாவை சிறையில்
தள்ளியது. பணபலமும் அதிகார பலமும் நீதியின் முன் செல்லாது என்ற இலக்கணம் வழுவாது அந்தத்
தீர்ப்பு அமைந்தது. அதுவே ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கு அந்திம தீர்ப்பாக அமைந்தது.
குமாரசாமி தீர்ப்பு காசு கொடுத்து வாங்கிய தீர்ப்பு என்பதை அந்தத் தீர்ப்பே அம்பலப்படுத்திக்
கொண்டது. உச்சநீதி மன்ற மேல் முறையீட்டில் தனக்கு பாதகமான தீர்ப்பு வரும் என்பதை ஜெயலலிதா
உணர்ந்தே இருந்தார். அது ஜெயா - சசிகலா கும்பல் மத்தியில் சொத்து மற்றும் அதிகாரச்
சண்டையை கூர்மையாக்கியது. ஆட்சியைக் கைப்பற்ற சசிகலா ஜெயலலிதாவை தாக்கியதால்தான் மரணமடைந்தார்
என்று கூறப்படுகிறது. ஜெயலலிதா மரணத்தில் சதி உள்ளது என்றும், அது பற்றி விசாரணை வேண்டுமென
அக்கட்சியின் தலைவர்களே கோரிக்கை வைக்கின்றனர்.
ஆனால், முதலமைச்சராக
வரவேண்டும் என்பதற்காக சசிகலாகும்பல் சதி செய்வது இது முதல் முறை அல்ல. இது நான்காவது
முறையாகும். முதலில் டான்சி பிரச்சினையில் வேண்டுமென்றே ஜெயலலிதாவை சிக்கவைத்து அதில்
தண்டனை கிடைத்துவிட்டால் முதல்வர் பதவியில் அமர்ந்து விடலாம் என்று நடராசன் மூலம் முயற்சி
செய்தார். இரண்டாவதாக, சுதாகரனை ஜெயலலிதாவிற்கு மகனாக தத்துக் கொடுத்து, சின்ன எம்.ஜி.ஆராக
மாற்றி முதல்வர் பதவியை பிடிக்க முயற்சித்தார். மூன்றாவதாக, தினகரனை கட்சி பொருளாளராக்கியதோடு
பாராளுமன்ற உறுப்பினராக்கி முதல்வர் பதவியைக் கைப்பற்ற சசிகலா சதித்திட்டங்கள் போட்டார்.
அனைத்திலும் சசிகலா தோற்றார். இறுதியாக தற்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சசிகலாவின்
பேராசைகளுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டது. ஆனால், தற்போது சசிகலா குதிரை பேரம்
நடத்தி, அரசியல் சதிராட்டத்தின் மூலம் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றி ஒரு பொம்மை
ஆட்சியை உருவாக்கியுள்ளார்.
சசிகலாவின் பொம்மை எடப்பாடியின்
சட்டவிரோத ஆட்சி
ஜெயலலிதா இறந்தவுடன்
கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றும் நோக்கத்தில்தான் பன்னீர்செல்வத்தை தற்காலிக முதல்வராக
நியமித்தார் சசிகலா. ஆனால் பன்னீர் தொடர்வது தனக்கு ஆபத்து என உணர்ந்த சசிகலா உடனடியாக
பன்னீரை மிரட்டி ராஜினாமா செய்யவைத்தார். பன்னீரோ, சசிகலா அனுப்பி வைத்த அமைச்சரவைக்கான
பட்டியலில் தனக்கு இரண்டாவது இடம் கிடைக்காதது மட்டுமல்ல, அமைச்சர்களுக்கான பட்டியலில்
தனது பெயர் இடம் பெறவில்லை என்றவுடன் சசிகலாவை எதிர்த்தார். ராஜினாமா கடிதத்தை திரும்பப்
பெறுவதாகவும் பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிப்பதாகவும் கவர்னரிடம் கடிதம் கொடுத்தார்.
உடனடியாக சசிகலா
அதிமுக எம்.எல்.ஏ-க்களை கூவத்தூருக்கு கடத்தி, தனியார் விடுதியில் மிருகங்களைப்போல்
அடைத்துவைத்து மிரட்டினார். எம்.எல்.ஏ-க்களுக்கு தலா ரூ. 6 கோடி பணம், தங்கம், வைரம்
மற்றும் மந்திரி பதவி, வாரியத்தலைவர் பதவி என ஆசைகாட்டி பேரம் பேசினார். எனக்குத்தான்
பெரும்பான்மை உள்ளது என்று கூறி தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கவர்னரை நிர்ப்பந்தித்தார்.
இந்த அராஜகத்தை கவர்னரோ, மத்திய அரசோ தடுக்கவில்லை. சசிகலா கும்பலின் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு
எதிராக எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
உச்ச நீதிமன்றம்
சிறைத் தண்டனையை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்தவுடன் சசிகலா தனது எடுபிடி எடப்பாடியை
முதல்வராக நியமிப்பதற்கான முடிவை அறிவித்தார். அதே நேரத்தில் ஆட்சியையும் கட்சியையும்
தனது குடும்பத்தினர் கைப்பற்றுவது என்ற நோக்கத்தில் ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட
தினகரன் மற்றும் டாக்டர் வெங்கடேஷை கட்சிக்குள் கொண்டுவந்தார். கட்சிக்குள் சேர்த்த
12 மணி நேரத்திற்குள்ளேயே தினகரனை அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்துவிட்டு
சிறை சென்றுள்ளார். அதிமுக-வை தனது குடும்பச் சொத்தாக மாற்றியுள்ளார்.
சசிகலாவால்
புதிய முதல்வராக அடையாளம் காட்டப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி, சகல யுக்திகளையும் கையாண்டு
தனக்கு ஆதரவான எம்.எல்.ஏ-க்களைக் கொண்டு, எதிர்க்கட்சியினரை முன்கூட்டியே திட்டமிட்டு
சட்டசபையிலிருந்து கூண்டோடு வெளியேற்றிவிட்டு, இரகசிய வாக்கெடுப்பை மறுத்து பெரும்பான்மை
என அறிவித்து முதல்வராகியுள்ளார். கூவத்தூரில் தங்கவைக்கப்பட்டு ‘கவனிக்கப்பட்டபோதிலும்’
சில எம்.எல்.ஏ.க்கள் அங்கிருந்து தப்பி சென்று பன்னீர் அணியில் இணைந்தனர். எனவே அச்சமடைந்த
சசிகலா கும்பல் மீதமுள்ள சட்டமன்ற உறுப்பினர்களை 30 அமைச்சர்களின் கார்களில் கிடுக்கிப்பிடி
போட்டு அழைத்து வந்து வாக்களிக்க வைத்தது அராஜகமானதும், ஜனநாயக முறைகளுக்கு எதிரானதுமாகும்.
ஆட்சியை தக்கவைப்பதற்கே இந்த அராஜகம் என்றால் எதிர்கால ஆட்சி எப்படி இருக்கும்?
வானளாவிய அதிகாரம்
படைத்த சபாநாயகரின் ஆதரவுடன்தான் எடப்பாடி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.
“மொத்தமாக திமுக உறுப்பினர்களை வெளியேற்றியதும் செல்லாது. வெளியேற்றிய பின் கொண்டுவந்து
நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் செல்லாது” என முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா
கூறுகிறார். எனவே எடப்பாடி ஆட்சி சட்டவிரோதமாகவே நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.
எனவே சசிகலாவின் பொம்மை எடப்பாடி ஆட்சி சட்டவிரோத ஆட்சியேயாகும்.
மாஃபியா கும்பலின் கைகளில்
தமிழகம்
கருணாநிதியின்
குடும்ப ஆட்சியை ஒழிப்பேன் என்று மார்தட்டினார் ஜெயலலிதா. ஆனால், அவரின் மரணம் தமிழகத்தில்
மாஃபியா சசிகலா குடும்பத்தின் ஆட்சியை கொண்டுவந்துவிட்டது. குடும்ப ஆட்சிதான் நடத்துவோம்
என சசிகலாவின் கணவர் நடராஜன் கொக்கரிக்கிறார். அவர் மீது சொகுசுக் கார் வாங்கியதில்
அந்நிய செலாவணி மோசடி வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக-வின் துணைப் பொதுச்செயலாளராக
நியமிக்கப்பட்டுள்ள டி.டி.வி. தினகரன் மீதோ ஏராளமான கிரிமினல் வழக்குகள் உள்ளன. அயல்நாட்டுப்
பண பரிவர்த்தனை மோசடியில் காஃபி போசா வழக்கு, அந்த வழக்கில் ரூ.28 கோடி அபராதம் கட்டாததால்
திவால் வழக்கு, பரணி பீச் ரிசார்ட்ஸ் வழக்கு, காப்ஸ் கிராப்ட் வழக்கு, ஜெ.ஜெ.டி.வி
வழக்கு என பல வழக்குகள் அணிவகுத்து நிற்கின்றன. இத்தகைய ஒரு நபர்தான் அதிமுகவை வழி
நடத்தப்போகும் ஆபத்பாண்டவனாம்!
கர்நாடகா சிறையிலிருந்து
தமிழக சிறைக்கு மாறி சிறைச்சாலையையே கொடநாடு பங்களாபோல் மாற்றிக் கொண்டு ஆட்சி நடத்துவது
என்பது சசிகலாவின் திட்டமாகும். அதற்காகத்தான் அரசு அதிகாரிகளை நடராஜன் கைகளிலும்,
மந்திரிகள் எம்.எல்.ஏ-க்களை தினகரனின் பொறுப்பிலும், கட்சி நிர்வாகத்தை திவாகரனின்
கவனிப்பிலும், தொண்டர்களின் தொடர்பை டாக்டர் வெங்கடேஷ் கண்காணிப்பிலும் வைத்து தமிழகத்தை
ஆள நினைக்கிறார் சசிகலா!
சசிகலாவின்
எடுபிடி எடப்பாடியோ சசிகலாவுக்கு சற்றும் சளைத்தவரல்ல. பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோதே
வசூல் ஊழல் மூலம் வசூல் செய்து ஜெயலலிதாவுக்கு கப்பம் கட்டுவதில் “சீஃப் கலெக்ஷன் ஏஜெண்ட்”
என பெயரெடுத்தவர் எடப்பாடி. இவரின் குடும்பமே சாதிவெறிபிடித்த குடும்பமாகும். இவர்களிடம்
மாட்டி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒரு சப் இன்ஸ்பெக்டர் பட்ட கொடுமையை அண்மையில்
பத்திரிக்கையில் படித்தோம். அது மட்டுமல்ல தங்களது பங்காளிகளுடனான சொத்துத் தகராறில்
எடப்பாடி, அவரது அண்ணன் கோவிந்தராஜ் மற்றும் இவர்களின் கூட்டாளிகளோடு சேர்ந்துகொண்டு
மூன்று பேரை ஈட்டியால் குத்தி கொலை செய்தார். பின்னர் சமரசம் செய்துகொண்டு தப்பித்தனர்.
இவர்களின் குடும்பமே எடப்பாடி எட்டுப்பட்டி கவுண்டர்களால் இவர்களுக்கு யாரும் பெண்
கொடுக்கக் கூடாது என ஒதுக்கிவைக்கப்பட்ட குடும்பமாகும்.
இவ்வாறு சசிகலாவின்
மாஃபியா கும்பல் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதன் குறிக்கோள் என்ன? சசிகலா கும்பலும்
அவரின் குடும்பமும் கொள்ளையடித்த சொத்துகளைப் பாதுகாப்பது மட்டுமல்ல, அரசு அதிகாரத்தைக்
கொண்டு தமிழ்நாட்டை ஒட்டு மொத்தமாக சூறையாடுவது என்பதுதான். இப்போதே மணல் கொள்ளை யார்
கட்டுப்பாட்டில் என சசிகலா குடும்பத்தில் வெட்டுக்குத்து தொடங்கிவிட்டது. மேலும் இத்தகைய
கொலைகார, கொள்ளைகாரக் கும்பல் ஆட்சியில் அமர்வது என்பது மென்மேலும் மத்திய ஆட்சிக்கு
பணிந்து போவதில் முடியும். மக்கள் மீது சுமைகள் சுமத்தப்படும். ஜெயலலிதா மரணத்திற்குப்
பின் பன்னீரின் தற்காலிக ஆட்சியும் அல்லது எடப்பாடி ஆட்சியும் உதய் திட்டம், உணவுப்பாதுகாப்பு
திட்டம் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டதுடன் சேவை வரிச் சட்டத்தை அமல்படுத்தியும், பெட்ரோல்
மீதான வரியை உயர்த்தியும் மக்கள் மீது சுமைகளை சுமத்த துவங்கிவிட்டது. அதை எதிர்த்துப்
போராடுவோர் மீது அடக்குமுறைகள் ஏவப்படுகின்றன. ஏற்கனவே மெரினாவில் சசிகலா கும்பல் மாணவர்கள்
மீது நடத்திய தாக்குதல், தற்போது நெடுவாசல் மக்களை மிரட்டுவது என பாசிச காட்டாட்சிக்கான
முன்னோட்டத்தை கண்டுகொண்டிருக்கிறோம்.
எடப்பாடிக்கு
ஆதரவான எம்.எல்.ஏ-க்கள் அவர்களை ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த மக்களின் விருப்பத்திற்கு
மாறாகத்தான் ஓட்டளித்துள்ளனர். அடுத்த நான்காண்டுகளில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுருட்டவேண்டும்
என்ற முடிவுடன்தான் மக்களின் முடிவுகளுக்கு எதிராக மாஃபியா கும்பலுக்கு வாக்களித்துள்ளனர்.
இத்தகைய சந்தர்ப்பவாதத்தையும்,
மக்களுக்கு எதிராக செயல்படுபவர்களை தண்டிக்கும் வகையிலும் திருப்பி அழைக்கும் அதிகாரம்
மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு விரோதமாக செயல்படுபவர்களையும்,
ஊழல் பெருச்சாளிகளையும் மக்கள் தண்டிக்க முடியும். தேர்ந்தெடுக்கவும் திருப்பி அழைக்கவும்
மக்களுக்கு உரிமை என்பது இந்த நாடாளுமன்ற ஆட்சிமுறையின் மூலம் கிடைக்காது. அதற்கு தொழிலாளர்கள்
விவசாயிகள் உள்ளிட்டு புரட்சிகர ஜனநாயக சக்திகள் புரட்சியின் மூலம் மக்கள் ஜனநாயக அரசமைப்பதன்
மூலமே சாதிக்க முடியும். எனினும் உடனடியாக மக்களின் கருத்துகளுக்கு எதிராக சசிகலா கும்பலை
ஆதரித்த எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோருவது மக்களின் உரிமையாகும்.
ஒன்றரை கோடி
உறுப்பினர்களைக் கொண்ட கட்சியான அதிமுக போன்ற ஒரு கட்சி இத்தகைய கொலைகார மாஃபியா கும்பலை
கட்சிக்கும் ஆட்சிக்கும் தலைமை தாங்க அனுமதிக்கலாமா? அவ்வாறு அனுமதிப்பது தமிழ் நாட்டுக்கும்
மக்களுக்கும் பெரும் கேட்டையே உருவாக்கும்.
எனவேதான் கிரிமினல்
மாஃபியா சசிகலாவின் எடுபிடி எடப்பாடி ஆட்சிக்கு ஆதரவளித்த சட்டமன்ற உறுப்பினர்களை பதவியை
ராஜினாமா செய்யக்கோரி முற்றுகை இட வேண்டும் என்று கோருகிறோம். மேலும் பொருளாதார நெருக்கடியிலிருந்து
மீளவும், விவசாயிகளின் தற்கொலைகளுக்கு தீர்வுகாணவும், அதிகார வர்க்கம் மற்றும் அரசியல்வாதிகளின்
கார்ப்பரேட் ஊழலை ஒழிக்கவும் தேர்ந்தெடுக்கவும் திருப்பி அழைக்கவும் உரிமை மக்களுக்கு
வேண்டும் எனக் கோருகிறோம்.
மாஃபியா கும்பலுக்கு மாற்று
முதலாளித்துவ கட்சிகளல்ல
சசிகலா குடும்பத்திடமிருந்து
கட்சியையும் ஆட்சியையும் மீட்கும்வரை எங்களது தர்மயுத்தம் தொடரும் என்கிறார் முன்னாள்
முதல்வர் பன்னீர் செல்வம். ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் முதன்மைக் குற்றவாளி என
உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டுவருவோம் என நாகூசாமல்
கூறுகிறார். ஜெயலலிதாவின் ரத்தசொந்தம் என்று ஜெயாவின் குளோனிங்காக வலம்வரும் பேபி தீபா
தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கப்போவதாக கூறிக் கொள்கிறார். ஆனால் இவர்கள் அனைவருமே
முதன்மைக் குற்றவாளியான ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வரப்போவதாகக் கூறுகின்றனர்.
ஜெயலலிதா இன்று
உயிருடன் இருந்திருந்தால் அவர் தனது முதல்வர் பதவியை இழந்திருப்பார். சிறையும் சென்றிருப்பார்.
மரணம் இந்த இரண்டிலிருந்தும் அவரை விடுவித்துவிட்டது. ஆனால் வரலாறு அத்தனை சுலபத்தில்
விடுவிக்கப் போவதில்லை. விடுவிக்க நாம் அனுமதிக்கவும் கூடாது. காரணம் இது ஏதோ ஜெயலலிதா
என்பதற்காக நாம் பேசவில்லை. இது ஒரு தலைவர் சம்பந்தப்பட்ட விவகாரமல்ல. நாட்டின் வளங்களை
கார்ப்பரேட்களுக்கு தாரை வார்ப்பதும்; அரசியல்வாதிகள், அமைச்சர்கள், அதிகாரிகள் கூட்டு
சேர்ந்து மாபெரும் கார்ப்பரேட் ஊழலில் ஈடுபடுவதும், மக்கள் மீது இந்துத்துவப் பாசிசத்தை
கட்டவிழ்த்துவிடுவதும் ஒரு நாடுதழுவிய போக்காக உருப்பெற்று வருகிறது. ஊழல் அரசியல்வாதிகளை
ஒழிப்பதற்கு சசிகலா கும்பலின் ஆட்டத்தை அறவே தடுத்து நிறுத்த வேண்டும்.
இனிவரும் காலங்களில்
ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் இது எச்சரிக்கையாக அமைய வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
வெளிவந்த பிறகு சசிகலாவை மட்டும் வில்லியாக்கி, ஜெயலலிதாவை வணங்கப்பட வேண்டிய புனிதவதியாகக்
காட்டுவதை நாம் ஏற்கக் கூடாது. பன்னீர் அணியோ, அல்லது சசி அணியோ ஜெயலலிதாவை முன்னிறுத்துவது
ஊழலுக்கும், பாசிசத்துக்கும் ஆதரவு கோருவதேயாகும். எனவேதான் இவர்களுக்கு ஆதரவு தரக்கூடாது
என்கிறோம்.
பிரதான எதிர்க்கட்சியான
திமுகவும் அதன் செயல் தலைவர் ஸ்டாலினும் சசிகலா கும்பலை கடுமையாக எதிர்த்துப் போராடினாலும்
ஒரு ஊழலற்ற மக்களுக்கான ஆட்சியை அவர்களால் தரமுடியாது. ஏனெனில் ஜெயலலிதா செயல்படுத்தி
வந்த தேச விரோத மக்கள் விரோத புதியகாலனிய தாராளக் கொள்கைகளைச் செயல்படுத்துவதில் அக்கட்சி
போட்டிபோடும் ஒருகட்சியேயாகும். ஊழல் பிரச்சினையிலும் கூட திமுகவின் தலைவர்களின் குடும்பத்தினரின்
தலைக்கு மேல் 2G என்ற கத்தி தொங்கிக்கொண்டுதான் உள்ளது. சசிகலாவுக்கு மாற்று ஸ்டாலின்
என்பது மாயமான் கதைதான்.
பாஜக, காங்கிரஸ்
போன்ற அகில இந்திய தரகுமுதலாளித்துவக் கட்சிகள் மாபெரும் ஊழல் கட்சிகளாகவே உள்ளன. அக்கட்சிகள்
அமல்படுத்தும் புதிய தாராளக் கொள்கைகளும் மாபெரும் கார்ப்பரேட் ஊழலும் பிரிக்க முடியாததாகும்.
ஆனால், அவை மாநிலக் கட்சிகளின் ஊழல்களை அக்கட்சிகளைப் பணியவைப்பதற்கான ஒரு கருவியாகப்
பயன்படுத்திக் கொள்கின்றன. தற்போது, அதிமுகவில் நடக்கும் கோஷ்டிகளைப் பயன்படுத்தி தமிழகத்தில்
காலூன்ற பாஜக எடுக்கும் முயற்சிகளை தமிழ் மக்கள் முறியடிப்பார்கள்.
இடது, வலது
திருத்தல்வாதக் கட்சிகள் அதிமுக மற்றும் திமுக போன்ற கட்சிகள் அதிகாரத்துக்காக லாபி
செய்கின்றன என்று கூறுவது சரியெனினும் கிரிமினல் மாஃபியா சசிகலா கும்பலை எதிர்த்து
முறியடிப்பதன் அவசியத்தை மறுக்கிறது. அது அக்கட்சிகளின் சந்தர்ப்பவாதத்தையே காட்டுகிறது.
எனவேதான் கிரிமினல்
மாஃபியா கும்பலின் ஆட்சிக்கு எதிராக கீழ்க்கண்ட முழக்கத்தின் அடிப்படையில் அணிதிரளுமாறு
அறைகூவி அழைக்கிறோம்.
é “கிரிமினல் மாஃபியா” சசிகலா கும்பலின் பொம்மை-எடப்பாடி ஆட்சியை
தூக்கி எறிவோம்!
é சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்களை பதவி விலகக்கோரி முற்றுகையிடுவோம்!
é “A1 அம்மா” பெயரால் ஆட்சியமைக்க உரிமை கோரும்
ஓ.பி.எஸ். கும்பலை ஆதரிக்காதீர்!
é ‘A1, A2’ கிரிமினல் கும்பல்களுடன் சமரசம் செய்துகொள்ளும் திருத்தல்வாத,
முதலாளித்துவ கட்சிகளை புறக்கணியுங்கள்!
é தமிழக ஆளும் கும்பல்களுக்கு இடையிலான மோதலில் ஆதாயம் தேடும்
இந்துத்துவ பா.ஜ.க.வின் சதிகளை முறியடிப்போம்!
é தேர்ந்தெடுக்கவும் திருப்பியழைக்கவும் உரிமையுள்ள மக்கள் ஜனநாயக
அரசமைக்க அணிதிரள்வோம்!
é ஊழல் மாஃபியா ஆட்சியை ஒழிக்க மக்கள் ஜனநாயக முன்னணி அமைப்போம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
மார்ச், 2017.
No comments:
Post a Comment
விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.