மோடி கும்பலின் தேசவிரோத, மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையை
எதிர்த்துப் போராடுவோம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!
மத்தியில் ஆளும் இந்துத்துவப்
பாசிச மோடி கும்பலின் நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்துள்ள இவ்வாண்டுக்கான
(2017-18) நிதிநிலை அறிக்கை, அந்நிய மூலதனத்திற்கு இருந்துவந்த அரைகுறை தடைகள் முழுவதையும்
அகற்றி, நாட்டை ஏகாதிபத்திய புதியகாலனியத்திற்கு முழுமையாகத் திறந்துவிட்டுள்ளது. மறுபுறம்
ஐந்து மாகாணத் தேர்தலை மனதில் கொண்டு விவசாயத்திற்கும், கிராமப்புறங்களுக்கும் அதிக
நிதி ஒதுக்கீடு என்ற வெற்று வார்த்தை ஜாலங்களைக் கொண்டு நெருக்கடியின் சுமைகள் முழுவதையும்
மக்கள் மீது திணித்துள்ளது.
அந்நிய முதலீட்டு மேம்பாட்டு
வாரியத்தைக் கலைப்பதன் மூலம் அந்நிய முலதனத்திற்கான அனைத்துத் தடைகளையும் அகற்றுவது,
அரசு-தனியார் பங்கேற்புத் (PPP) திட்டத்தின் மூலம் இரயில்வே உள்ளிட்டு அனைத்துப் பொதுத்
துறை நிறுவனங்களையும் தனியார்மயமாக்குவதைத் தீவிரப்படுத்துவது; 500, 1000- உயர்மதிப்பு
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் தொடர்ச்சியாக ரொக்கமற்ற பொருளாதாரம் என்ற
பேரில் சில்லறை வர்த்தகத்தை அந்நிய முதலீட்டுக்குத் திறந்துவிடுவது; தொழிலாளர்களின்
நலன் காக்கும் பல்வேறு சட்டங்களை ஒரே சட்டமாக்கித் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக்கி மனித
உழைப்பை மலிவான விலைக்குத் தாரைவார்ப்பதன் மூலம் மோடி கும்பல் புதிய காலனிய, புதியதாரளக்
கொள்கைகளை அமல்படுத்துவதில் ஒரு புதிய கட்டத்தைத் துவக்கியுள்ளது.
அந்நிய முதலீட்டுக்கான
வாசலை அகலத் திறப்பது, இயற்கை மற்றும் கனிம வளங்களைப் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்களின்
வேட்டைக்குக் காணிக்கையாக்குவது, மலிவான மனித உழைப்பைத் தாரைவார்ப்பது என்ற புதிய காலனியச்
சேவையை மானவெட்கமின்றி மோடி கும்பல் நியாயப்படுத்துகிறது. அந்நிய மூலதனத்தைச் சார்ந்த,
ஏற்றுமதியைச் சார்ந்த உலகமயக் கொள்கைகள்தான் நாட்டின் வளர்ச்சிக்கு ஒரே வழி என்று குதர்க்கம்
பேசுகிறது. ஆனால் உண்மை நிலை என்ன? எத்தகைய சர்வதேச சூழலில் இத்தகைய வாதத்தை மோடி கும்பல்
முன்வைக்கிறது?