Sunday, August 16, 2015

பா.ஜ.க. அரசே! கார்ப்பரேட் நலன்களுக்கான நிலங்களைக் கையகப்படுத்தும் சட்டத்தைத் திரும்பப்பெறு!


பா.ஜ.க. அரசே! கார்ப்பரேட் நலன்களுக்கான நிலங்களைக் கையகப்படுத்தும் சட்டத்தைத் திரும்பப்பெறு!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயகவாதிகளே!

இந்துத்துவப் பாசிச மோடி அரசாங்கம், கடந்த ஐ.மு. கூட்டணி அரசாங்கம் கொண்டுவந்த கார்ப்பரேட் நலன்களுக்கான “நிலம் கையகப்படுத்தும் சட்டம்-2013” சட்டத்தைத் திருத்தி, அதைவிட ஒரு கொடிய சட்டத்தை நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றி யுள்ளது. ஆனால் அச்சட்டத்திற்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை பெற முடியாத நிலையில் கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பியுள்ளது. எப்படியாவது அச்சட்டத்தை நிறைவேற்றிவிட வேண்டும் என மோடி கும்பல் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறது.

மன்மோகன் தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசாங்கம் கொண்டுவந்த சட்டமானாலும் அல்லது தற்போது மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் கொண்டுவந்துள்ள சட்டமானாலும் இச்சட்டங்கள் அனைத்தும் பிரிட்டிஷ் காலனியாட்சியாளர்கள் “பொதுநலன் என்ற பேரில் இந்திய நாட்டின் வளங்களைக் கொள்ளையடிப்பதற்காகக் கொண்டு வந்த “1894-நிலம் கையகப்படுத்தும் சட்டம் என்ற காட்டு மிராண்டிச் சட்டத்தின் தொடர்ச்சியே யாகும். அச்சட்டத்தின்படி அரசுக்கோ, அரசின் ஆதரவு பெற்றவர்களுக்கோ நிலம் தேவைப்படுமானால் உடனே நிலம் கையகப்படுத்தப்படும். அரசு கொடுக்கும் இழப்பீடு போதவில்லை என்றால்  மட்டும்தான் நீதிமன்றத்திற்குப் போகமுடியும். அங்கேயும் இழப்பீட்டை அதிகரித்துக் கேட்க முடியுமே ஒழிய, நிலம் கையகப்படுத்தியதைத் தடுக்க முடியாது. இச்சட்டம் காலனிய ஆட்சிக்குப் பிறகும் தொடர்ந்தது.