Thursday, June 4, 2015

ம.ஜ.இ.க. நடத்தும் சென்னை ஐ.ஐ.டி. முன் ஆர்ப்பாட்டம் - ஜூன் 8 – 2015, காலை 10 மணி


ஊழல் பெருச்சாளி ஜெயலலிதா மீண்டும் பதவி ஏற்றதை எதிர்ப்போம்!



ஊழல் பெருச்சாளி ஜெயலலிதா

மீண்டும் பதவி ஏற்றதை எதிர்ப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!

வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டு முதலமைச்சராகவும் பதவி ஏற்றுவிட்டார். 18 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்ட இவ்வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்கா, ஊழல் அரசியல்வாதிகள் அச்சப்படும் அளவுக்கு - ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வரையும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து, 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை வழங்கினார்.

ஆனால், இவ்வழக்கின் மேல் முறையீட்டில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமியோ, இதற்கு நேர் எதிராக ஜெயலலிதாவின் வருமானம் பற்றிய கூட்டல் கணக்கில் மோசடி செய்து ஊதிப்பெருக்கிக் காட்டி, அவருடைய வீடு உள்ளிட்ட அசையா சொத்துக்களின் மதிப்பைக் குறைத்துக் காட்டி, மொத்த வருமானத்தில் வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பின் மதிப்பு 8.12 சதவீதம்தான் என்று கூறி, ஊழலை நியாயப்படுத்தி ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் விடுதலை செய்துள்ளார். ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஊக்கம் அளிக்கும் கொடுந்தீர்ப்பை வழங்கி நீதிதேவதையையே சோரம்போகச் செய்துவிட்டார்.