2017-மே நாள் வாழ்க!
கருத்தாலும்
கரத்தாலும் உழைக்கின்ற உழைப்பாளி மக்களே...!!
ஒவ்வொரு ஆண்டும் மே முதல் நாள் மேதின தியாகிகளை நினைவுகூரும்
நாளாக கடைப்பிடித்து வருகிறோம். இவ்வாண்டு மே-நாளில், அமெரிக்காவில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள
டிரம்ப் கும்பல் முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடிகளின் சுமைகளை மக்கள் மீது சுமத்தவும்,
நிதிமூலதன கார்பரேட் கும்பலை மீட்கவும் இனவெறி பாசிசத்தைக் கட்டியமைப்பதுடன் உலக மக்கள்
மீது ஒரு மூன்றாம் உலகயுத்தத்தை திணித்து வருவதை எதிர்த்தும்; மோடி அரசாங்கம் கடைப்பிடித்துவரும்
அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவு புதியகாலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளையும், நெருக்கடிகளின்
சுமைகளை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மீது சுமத்துவதையும் எதிர்த்து, இந்துமதவெறி
பாசிசத்தை எதிர்த்தும் போராட சூளுரை ஏற்பதே சர்வதேச, தேசியக் கடமையாகும்.
உலகப்
பொருளாதார மந்தநிலை தொடர்கிறது
இன்றைய உலகம் பொருளாதார மற்றும் நிதிநெருக்கடியில் மூழ்கிக்
கிடக்கிறது. 2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் பொருளாதார மந்தத்திற்குப் பிறகு, 2016 ஆம்
ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2.2 சதவீதமாக மிகவும் வீழ்ச்சியடைந்துவிட்டது.
2017-இல் அது 2.7 சதவீதமாக வளரும் என்ற எதிர்பார்ப்பும்கூட அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த
நாடுகளால் அல்ல; இந்தியா போன்ற வளர்ந்துவரும் சந்தைகளை நம்பித்தான் கூறப்படுகிறது.
ஆனால் பொருளாதார மந்தத்திலிருந்து மீள்வதற்கான கொள்கைகளை வகுப்பதில் ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையில்
நிலவும் குழப்பம், அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் உலகமயக் கொள்கைகளைக் கைவிட்டு
காப்புக் கொள்கைகளுக்கு மாறுவது, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியது போன்ற
காரணங்களால் உலகப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்திக்கும் என ஐ.நா.வின் ஆய்வு
எச்சரிக்கிறது.