Monday, April 30, 2018

2018-மே நாளில் சூளுரைப்போம்!


மே நாளில் சூளுரைப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!

உலகப் பாட்டாளி வர்க்கமும், ஒடுக்கப்பட்ட நாடுகளும் மக்களும், ஏகாதிபத்திய நிதி மூலதனத் தாக்குதலி லிருந்து உடனடி நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடுவதோடு சோசலிசம், ஜனநாயகம், விடுதலைக்காக போராட சூளுரைக்கும் நாளே மே நாள்!! தற்போது ஏகாதிபத்தியப் பொருளாதார நெருக்கடிகளை உலக மக்கள் மீது சுமத்த பாசிசத்தை திணிப்பது; ஏகாதிபத்தியங்களுக்கிடையில் உலகை மறுபங்கீடு செய்வதற்கான பனிப்போர் தீவிரமடையும் சூழலில் இம்மேநாளை எதிர்கொண்டுள்ளோம்!

தீவிரமடைந்துவரும் ஏகாதிபத்தியப் பொருளாதார நெருக்கடி

2008ல் அமெரிக்காவில் வெடித்துக் கிளம்பிய உலக முதலாளித்துவப் பொது நெருக்கடியிலிருந்து உலகம் இன்னமும் மீளவில்லை. 2020ல் அமெரிக்காவும், உலகமும் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியில் வீழும் என்றும், அது 2008 ஐ விட கடுமையானதாக இருக்கும் என்றும் சர்வதேச செலாவணி நிதிய செயலாளர் எச்சரித்துள்ளார்.