Tuesday, May 8, 2018

புதியகாலனிய உயர்கல்விக் கொள்கைக்கு சேவை செய்யும் “நீட்” தேர்வை எதிர்ப்போம்!!



புதியகாலனிய உயர்கல்விக் கொள்கைக்கு சேவை செய்யும் “நீட்” தேர்வை எதிர்ப்போம்!!

ê கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்யும், சமூக நீதியை ஒழிக்கும், மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் நீட் தேர்வைத் திரும்பப் பெறு!
ê  புதிய காலனிய உயர்கல்விக் கொள்கையை எதிர்ப்போம்!
ê  இந்திய அரசே! உலக வர்த்தகக் கழகத்தை (WTO) விட்டு வெளியேறு!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

அக்டோபர், 2017, முதல் பதிப்பு
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
தொடர்புக்கு: தோழர் டேவிட் செல்லப்பா,
3/20, அண்ணா தெரு, மேட்டுக் குப்பம், வானகரம், சென்னை-98
செல்: 8098538384
விலை: ரூ. 20/-

புதிய காலனிய உயர்கல்விக் கொள்கைக்குச் சேவை செய்யும் ‘நீட்’ தேர்வை எதிர்ப்போம்!

புதிய காலனிய உயர்கல்விக் கொள்கைக்குச் சேவை செய்யும் ‘நீட்’ தேர்வை எதிர்ப்போம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!
இந்துத்துவப் பாசிச பாஜக-வின் மோடி தலைமையிலான அரசு இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத்தில் 10 D என்ற பிரிவைச் சேர்த்து மருத்துவக் கல்வியில் சேருவதற்கான ‘நீட்’ (NEET) நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கி அமல்படுத்தியுள்ளது.
ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகள் இந்தியாவின் உயர்கல்வியைக் கொள்ளையடிப்பதற்காக மிகவும் மோசடியாக நடத்தப்பட்ட இந்த ‘நீட்’ தேர்வு முறைதான் அனிதா போன்ற ஏழைஎளிய ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவை கானல் நீராக்கியது. படுகொலை செய்தது. இந்த நீட் தேர்வுமுறை எதற்காக கொண்டுவரப்பட்டது? யார் தீர்மானித்தது? இதற்கு பின்னுள்ள அரசியல் பொருளியல் காரணிகள் என்ன?.
புதியதாராளக் கொள்கை மற்றும் உலகமயமாக்களால் 2008ஆம் ஆண்டில் அமெரிக்காவில் கடும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டது. இதன் விளைவாக அந்நாடுகளில் உயர்கல்வி கடும் நெருக்கடியைச் சந்தித்தது. உயர்கல்விக்கு அரசாங்கம் வழங்கி வந்த உதவிகள் குறைக்கப்பட்டன. கல்விக்கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆசிரியர்கள், ஊழியர்களின் சம்பளக்குறைப்பு, லே-ஆப், ஆட்குறைப்பு என கடுமையான நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. நெருக்கடிக்குள்ளான உயர்கல்வி நிறுவனங்களை மீட்பதற்கு, இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் கல்விச் சந்தையைக் கைப்பற்றவேண்டும். இதன் காரணமாகவே, உலகளவில் அமெரிக்க மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கல்விச் சந்தையாகத் திகழும் இந்தியாவின் சந்தையைக் கைப்பற்ற அமெரிக்க ஏகாதிபத்தியம் துடிக்கிறது. இந்நெருக்கடியானது இந்தியக் கல்விச்சந்தையைக் கைப்பற்ற வேகப்படுத்தினாலும், இது 2005ஆம் ஆண்டு WTO-GATS ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் உயர்கல்விச் சந்தையில் அமெரிக்க ஏகாதிபத்திய ஆதிக்கத்தை நிறுவுவதற்கான தொடர் நிகழ்வுபோக்கின் வெளிப்பாடாகும். இந்தியாவின் கல்விச் சந்தை 2016இன் கணக்குப்படி 140 பில்லியன் டாலர்களாகும். இந்தச் சந்தையின் மீது அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிறுவச்செய்வதுதான் WTO-GATS ஒப்பந்தமும் ‘நீட்’ தேர்வும்.