தர்மபுரியில் போலீஸ் இராஜ்ஜியம்!
ஜெயா அரசே! 144 தடையை உடனே நீக்கு!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!
ஜெயலலிதா
அரசாங்கம் தர்மபுரி மாவட்டத்தில், கடந்த ஓராண்டுக் காலமாக 144 தடை விதித்து மக்கள் மீது போலீஸ் ஆட்சியைக்
கட்டவிழ்த்துவிட்டுள்ளது. சாதிக் கலவரங்களை தடுப்பது என்ற பேரால் 144 தடை நியாயப்
படுத்தப்படுகிறது. ஆனால் இந்தத் தடையின் கீழ் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகக்
கலவரங்களைத் தூண்டியவர்கள் மீதோ, கலவரத்தை நடத்தியவர்கள்
மீதோ வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவே இல்லை.
உண்மையானக் குற்றவாளிகள் கைது செய்யப்படவுமில்லை. மாறாக இத்தடையை தாழ்த்தப்பட்ட
மக்களையும், அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் புரட்சிகர
ஜனநாயக இயக்கங்களையும், எதிர்க் கட்சியினரையும் அடக்குவதற்கே
பயன்படுத்துகின்றனர். இளவரசனின் இறுதி ஊர்வலத்தை நடத்தவும், அதில்
தலைவர்கள் பங்கேற்பதையும் கூட தடை செய்தனர்.
சாதி
ரீதியாக ஒடுக்குவோருக்கும் ஒடுக்கப்படுவோருக்கும் வித்தியாசம் இன்றி 144
தடைவிதிப்பது என்று கூறுவதும், சாதி வெறியர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப்
பாதுகாப்பது என்பதற்கு மாறாக - சாதித் தீண்டாமைக்கு எதிரான ஜனநாயக இயக்கங்களுக்கு
தடைவிதிப்பதும், ஒடுக்குபவர்களுக்கு துணைபோவது தவிர
வேறொன்றுமில்லை. 144 தடை மூலம் இன்று தர்மபுரி மாவட்டம் “ம்”
என்றால் சிறைவாசம், “ஏன்” என்றால் வனவாசம் என மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு ஒரு
போலீஸ் ராஜ்ஜியமாக மாற்றப்பட்டுவருகிறது.