பா.ஜ.க. அரசே!
கார்ப்பரேட் நலன்களுக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைத் திரும்பப்பெறு!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
ஜனநாயகவாதிகளே!
காங்கிரஸ் தலைமையிலான
ஐ.மு. கூட்டணி அரசாங்கமும் அதற்குப் பின்னர் வந்துள்ள தற்போதைய பா.ஜ.க. அரசாங்கமும்
விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தி பன்னாட்டு, உள்நாட்டுக்
கார்ப்பரேட்டுகளுக்கு வழங்குவதற்காகக் கொண்டுவந்துள்ள சட்டங்களை எதிர்த்து இன்று நாடெங்கும்
மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இச்சட்டங்கள் அனைத்தும் பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்கள்
நிலங்களை கையகப் படுத்துவதற்காகக் கொண்டுவந்த சட்டங்களின் தொடர்ச்சியேயாகும்.
பிரிட்டிஷ் காலனி
அரசு 1894ல், நிலத்தைக் கையகப் படுத்துவதற்கான ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தது. அந்தச்
சட்டத்தின் படி, அரசுக்கோ, அரசின் ஆதரவு பெற்றவர்களுக்கோ நிலம் தேவைப்படுமானால், உடனே
நிலம் கையகப்படுத்தப்படும். அரசுகொடுக்கும் இழப்பீடு போதவில்லை என்றால் மட்டும்தான்
நீதிமன்றத்துக்குப் போகமுடியும். அங்கேயும் இழப்பீட்டை அதிகரித்துக் கேட்க முடியுமே
தவிர நிலம் கையகப்படுத்தியதைத் தடுக்க முடியாது. இந்தச் சட்டம் காலனிய ஆட்சிக்குப்
பிறகும் தொடர்ந்தது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களையே
பொதுநலன் என சித்தரித்து, விவசாயிகள் மற்றும் பழங்குடிமக்களின் நிலங்களை 1894 சட்டத்தின்
கீழ் கையகப்படுத்தி அதை பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கியது. பல்லாயிரக்
கணக்கான ஏக்கர் நிலங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காகவும், ரியல் எஸ்டேட்டுகளுக்காகவும்
கையகப்படுத்தப்பட்டன. இவ்வாறு வழங்கப்பட்ட நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்களும், தரகுமுதலாளிகளும்
முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளார்கள். வணிக நடவடிக்கைகள் மூலம் கொள்ளை லாபம் அடைந்துள்ளார்கள்.