Friday, January 25, 2013

அமெரிக்காவின் புதியகாலனிய ஆதிக்கமும் “அரபு வசந்தமும்”


சமரன் வெளியீட்டகம் : தொடர்புக்கு: 9941611655

முன்னுரை
                அமெரிக்க ஏகாதிபத்தியம், வடக்கு ஆப்பிரிக்கா முதல் மத்தியக் கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகள் வரை தனது புதிய காலனிய ஆதிக்கத்தை திணிக்கவும், தனது உலக மேலாதிக்கத்தை நிறுவவும் அந்நாடுகளின் மீது அரசியல் பொருளாதார, இராணுவத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. பேரழிவு ஆயுதங்களை ஒழிப்பது, இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிப்பது என்றும்; சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜனநாயகத்தை மீட்பது, மனித உரிமைகளை காப்பது, ஊழல் ஆட்சியை ஒழிப்பது என்றும் நாமகரணங்களை சூட்டிக் கொண்டு ஆப்கானிஸ்தானில் துவங்கி, ஈராக், லிபியா இன்று சிரியா என்று ஒவ்வொரு நாடாக தனது பொம்மை ஆட்சிகளை உருவாக்கி வருகிறது. ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் உண்மையில் அந்தப் பிரதேசங்களில் கிடைக்கும் எண்ணெய், எரிவாயு மூலப்பொருட்களை கைப்பற்றுவதற்காக நடத்துவதுதான் இத்தகைய ஆட்சிக் கவிழ்ப்புகளும் ஆக்கிரமிப்புப் போர்களும்.