Friday, January 25, 2013

அமெரிக்காவின் புதியகாலனிய ஆதிக்கமும் “அரபு வசந்தமும்”


சமரன் வெளியீட்டகம் : தொடர்புக்கு: 9941611655

முன்னுரை
                அமெரிக்க ஏகாதிபத்தியம், வடக்கு ஆப்பிரிக்கா முதல் மத்தியக் கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகள் வரை தனது புதிய காலனிய ஆதிக்கத்தை திணிக்கவும், தனது உலக மேலாதிக்கத்தை நிறுவவும் அந்நாடுகளின் மீது அரசியல் பொருளாதார, இராணுவத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. பேரழிவு ஆயுதங்களை ஒழிப்பது, இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிப்பது என்றும்; சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜனநாயகத்தை மீட்பது, மனித உரிமைகளை காப்பது, ஊழல் ஆட்சியை ஒழிப்பது என்றும் நாமகரணங்களை சூட்டிக் கொண்டு ஆப்கானிஸ்தானில் துவங்கி, ஈராக், லிபியா இன்று சிரியா என்று ஒவ்வொரு நாடாக தனது பொம்மை ஆட்சிகளை உருவாக்கி வருகிறது. ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் உண்மையில் அந்தப் பிரதேசங்களில் கிடைக்கும் எண்ணெய், எரிவாயு மூலப்பொருட்களை கைப்பற்றுவதற்காக நடத்துவதுதான் இத்தகைய ஆட்சிக் கவிழ்ப்புகளும் ஆக்கிரமிப்புப் போர்களும்.
எண்ணெய்க்கானப் போட்டி
                வடக்கு ஆப்பிரிக்க நாடான லிபியாவில் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்புகள் 41.464 பில்லியன் பீப்பாய்கள் ஆகும். இது உலகின் மொத்த இருப்பில் 3.34 சதவீதம் ஆகும். அது அமெரிக்காவைவிட இருமடங்கு அதிகமாகும். சவுதி அரேபியாவில் உலகின் மொத்த எண்ணெய் இருப்பில் 25 சதவீதமும், ஈராக்கில் 11 சதவீதமும், ஈரானில் 10 சதவீதமும் உள்ளன. அத்துடன் நைஜீரியா, அல்ஜீரியா, சூடான், எகிப்து, ஏமன், கத்தார், இந்தோனேசியா, மலேசியா, புருனே உட்பட அனைத்து முஸ்லீம் நாடுகளில் உள்ளதையும் சேர்த்தால் உலகின் மொத்த எண்ணெய் வளத்தில் 66லிருந்து 76 சதவீதம் வரை இந்நாடுகளில் கொட்டிக்கிடக்கிறது. இந்த மொத்த எண்ணெய் வளத்தையும் அமெரிக்காவின் பகாசுர எண்ணெய் முதலாளிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குறிக்கோளாகும்.
                ஏகாதிபத்தியம் பற்றி லெனின் கூறும்போது மூலவளங்களைக் கைப்பற்றுவதற்கு காலனியாதிக்கம்தான் உகந்தது என்று பின்வருமாறு கூறுகிறார்:
                முதலாளித்துவத்தின் நவீனக்கட்டத்தினுடைய தலையாய அம்சம், மிகப்பெரிய தொழிலதிபர்களது ஏகபோகக் கூட்டுகளின் ஆதிக்கமாகும். மூலப்பொருட்களுக்கான ஆதாரங்கள் அனைத்தும் ஒரு கூட்டினால் கைப்பற்றப்பட்டுவிடும்போது இந்த ஏகபோகங்கள் உறுதியாக நிலைப்பெற்று விடுகின்றன. போட்டியிடுவதற்கான எல்லா வாய்ப்புகளையும் எதிராளிகளிடமிருந்து பறிப்பதற்காக, உதாரணமாக இரும்புக் கனிம பிரதேசங்கள், எண்ணெய் வளங்கள் முதலியவற்றை வாங்கிக்கொண்டுவிடுவதற்காக சர்வதேச முதலாளித்துவக் கூட்டுக்கள் எப்படி ஆவசேமாகப் போராடுகின்றன என்பதைப் பார்த்தோம்.
                போட்டியாளர்களுக்கு எதிரானப் போராட்டத்தில் எழக் கூடிய எல்லா சந்தர்ப்பங்களிலும், அரசு ஏகபோகம் ஒன்றை ஏற்படுத்தும் சட்டத்தின் மூலமாக எதிராளி தன்னை பாதுகாத்துக் கொள்ளவிரும்பும் சந்தர்ப்பம் அடங்கலாய் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஏகபோகத்துக்கு முழு உத்திரவாதம் அளிக்கக் கூடியது காலனிய உடைமைகள் மட்டுமேதான்.
                முதலாளித்துவ வளர்ச்சி எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகிறதோ, மூலப்பொருட்களின் பற்றாக்குறை எவ்வளவுக் கெவ்வளவு அதிகக் கடுமையாக உணரப்படுகிறதோ, உலகெங்கிலும் மூலப்பொருள் ஆதாரங்களுக்கான போட்டியும் வேட்டையும் எவ்வளவுக்கெவ்வளவு அதிக உக்கிரமடைகின்றனவோ காலனிகளை பெறுவதற்கான போராட்டமும் அவ்வளவுக்கவ்வளவு மூர்க்கத்தனமாகிவிடுகிறது.
                அன்று லெனின் கூறியது இன்றும் மிகப்பொருத்தமாக உள்ளது. இன்று உலகம் முழுவதும் மிக அத்யாவசியமாக தேவைப் படும், அரிதான மூலப்பொருளான எண்ணெய், எரிவாயுவை மலிவான விலையில் தன் வசப்படுத்தவும், போட்டியாளர்களை விரட்டியடிக்கவும், எண்ணெய் வளநாடுகளில் அதன் பெயரளவி லான இறையாண்மையையும் அழிக்கவும், அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது பொம்மை ஆட்சிகளை கொடிய ஆக்கிரமிப்புப் போர்கள் மூலம் நிறுவிவருகிறது.
புதிய காலனிய மறுபங்கீடு
                பொதுவாக, ஆப்பிரிக்க எல்லை வரைபடத்தை மாற்றி யமைப்பதுதான் அமெரிக்காவின் குறி இலக்கு ஆகும். 1884இல் பெர்லின் மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட எல்லை வரையறைகளை கிழித்தெறிந்துவிட்டு, அமெரிக்க ஏகாதிபத்தியம் பிரிட்டன் துணையோடு அமெரிக்க - நேட்டோ இராணுவ நடவடிக்கைகள் மூலம், “புதிய காலனிய மறுபங்கீட்டின்படி ஆப்பிரிக்காவைக் கைப்பற்றுவதேயாகும். 1884 மாநாட்டில் அமெரிக்கா ஒரு முனைப்பற்ற பங்கை வகித்தது. இந்தப் புதிய நூற்றாண்டில் எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் ஆதார கனிம வளங்களான கோபால்ட், யுரேனியம், குரோமியம், மாங்கனீசு மற்றும் பிளாட்டினம் ஆகியவற்றின் மீது ஆங்கிலோ - அமெரிக்க பெரு நிறுவனங்களின் ஆதிக்கத்தை பெருமளவில் நிறுவுவதற்காகத்தான் ஆப்பிரிக்கா மறுபங்கீடு செய்யப்படுகிறது.
                ஆப்பிரிக்காவை புதிய மறுபங்கீடுசெய்வது என்பது வடக்கு ஆப்பிரிக்காவில் முன்னாள் காலானித்துவ சக்திகளான பிரான்ஸ் மற்றும் இத்தாலியின் பாத்திரத்தை பலவீனப்படுத்துவது மட்டுமல்லாமல், ஆப்பிரிக்க கண்டத்தின் பெரும்பகுதியில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தை பலவீனப்படுத்தி தூக்கியெறிவதுதான், அமெரிக்காவின் பரந்த அளவிலான நடவடிக்கையின் ஒரு பகுதியாக உள்ளது.
                பொதுவாக வட ஆப்பிரிக்காவிலும், மத்தியக் கிழக்கிலும் சீனா முக்கிய பங்கு வகிக்கிறது. லிபியாவின் 11 சதவீத எண்ணெய் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்பிரதேசங்களில் சீனாவின் இருப்பை ஊடுறுவலாகவே  வாஷிங்டன் கருதுகிறது. புவிசார் அரசியலின் அடிப்படையில் இது சீனாவின் அத்துமீறலாகும். லிபியாவில் ஆட்சியைக் கவிழ்க்க நடந்த ஆக்கிரமிப்பு என்பது வட ஆப்பிரிக்காவிலிருந்து சீனாவை வெளியேற்றுவதற்கான உள்நோக்கம் கொண்டதேயாகும்.
                ஐரோப்பிய ஒன்றியம் லிபியாவின் எண்ணெய்யை பெரிதும் சார்ந்துள்ளது. 85 சதவீதம் எண்ணெய் ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. லிபியாவை அமெரிக்கா கைப்பற்றியதானது பெரும்பாலும் இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளை பெரிதும் பாதிக்கும். 30 சதவீதம் எண்ணெய் யையும், 10 சதவீதம் எரிவாயுவையும் இத்தாலி லிபியாவிடமிருந்து பெற்றுவந்தது.
                ஈராக், எகிப்து, லிபியா தற்போது சிரியா என வரிசையாக நாடுகளைக் கைப்பற்றி இறுதியாக ஈரானை சுற்றி வளைத்துத் தாக்குவதே அமெரிக்காவின் நோக்கமாகும். அது ஈரானைக் கைபற்றும்போது இப்பிராந்தியத்தில் இரசியா மற்றும் சீனாவின் செல்வாக்கை முற்றாக ஒழிப்பதுடன் அது ஒரு கடும் நெருக்கடியை உருவாக்கும். இவ்வாறு அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒடுக்கப்பட்ட நாடுகளின்மீது புதிய காலனியத்துவத்தை திணிப்பதுடன் உலகை மறுபங்கீடு செய்வதற்காக - தமது உலக மேலாதிக்கத்திற்காக உக்கிரமாக போராடி வருகிறது.
            அமெரிக்காவின் பாதுகாப்பு மறுக்கட்டமைப்புஎன்ற தலைப்பிட்ட, “புதிய அமெரிக்க நூற்றாண்டுக்கான திட்டத்தின்(Programme for New American Century - PNAC) 2010-ஆம் ஆண்டறிக்கை ஒரு நீண்ட யுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறது. அது நாடுகளை விழுங்குவதற்கான ஒரு யுத்தமாகும். அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கான இராணுவத்திட்டம் என்னவென்றால், “ஒரே நேரத்தில் பல பிரதேசங்களில் போரிடுவதுடன் தீர்மானகரமான பல வெற்றிகளை குவிப்பதுமாகும்.ஈராக், ஆப்கன், சிரியா, லிபியா என அமெரிக்காவின் பல அரங்கு போர்கள் தொடர்கின்றன. இவ்வாறு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதியகாலனிய மறுபங்கீட்டுக்கான போர் தொடர்கிறது.
அமெரிக்காவின் போரும் தொண்டு நிறுவனங்களின் சேவையும்
                அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது மேற்கண்ட குறிக்கோள் களை அடைவதற்கு நான்கு வகையான செயல்தந்திரங்களை கடைப்பிடிக்கிறது.
                ஒன்று, தமக்கு அடிபணிய மறுக்கும் நாடுகளை போக்கிரி அரசுகள் என்றும், பயங்கரவாத நாடுகள் என்றும் அறிவித்து அந்நாடுகள் மீது நேரடி இராணுவ நடவடிக்கைகளை எடுத்து, ஆகிரமிப்புப் போர்கள் நடத்தி, ஆட்சி மாற்றத்தின்மூலம் தனது பொம்மை ஆட்சியை உருவாக்கி வருகிறது. பேரழிவு ஆயுதங்களை ஒழிப்பது, பயங்கரவாதத்தை ஒழிப்பது என்ற பேரால் ஆப்கன், ஈராக்கிலும் பிறகு தற்போது ஈரான் மீதும் ஒரு போருக்கு அமெரிக்கா தயார் செய்து கொண்டிருக்கிறது.
                இரண்டு, தமது அடிவருடி அரசுகளான இஸ்ரேல், சவுதி அரேபியா, பஹ்ரைன் போன்ற நாடுகளைக் கொண்டு ஒரு பிற்போக்கு கூட்டணியை உருவாக்கிக்கொண்டு அப்பிராந்தியத்தில் உள்ள பல்வேறு நாடுகளை மிரட்டிப் பணியவைக்கிறது. மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய காலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் பிற்போக்கு பாசிச கும்பலின் கூட்டணியே இந்தக் கூட்டணியாகும். இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் தொடர்ந்து ஆக்ரமிப்பு செய்வதை அமெரிக்கா ஆதரிப்பதன் இரகசியமும் இதுதான்.
                அடுத்து ஷியா, சன்னி மதப் பிரிவினர்களுக்கிடையில் மத மோதல்களை உருவாக்குவதன் மூலம் மக்களை மத ரீதியாக மோதவிடுகிறது. ஈராக், குவைத், குர்திஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இத்தகைய மதக்கலவரங்களால் மக்கள் அன்றாடம் கொல்லப்பட்டுவருகின்றனர். வடக்கு ஆப்பிரிக்காவில் இனக் குழுக்களிடையே பிரதேச ரீதியான மோதல்களைத் தூண்டி பிளவுப்படுத்துகிறது. தெற்கு சூடானுக்கும் வடக்கு சூடானுக்குமான மோதலில் இலட்சக் கணக்கானோர் கொன்றொழிக்கப் பட்டுள்ளனர். இவ்வாறு அமெரிக்க ஏகாதிபத்தியம் மத மற்றும் பிரதேச மோதல்களை தூண்டிவிடுவதன் மூலம் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்த்தப் போராட்டங்களை திசைதிருப்புகிறது. மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை கையாள்கிறது.
                மூன்றாவதாக, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இடையிலான சிறப்பு உறவைத் தொடர்ந்து கொண்டே - நேட்டோ அமைப்புடன் கூட்டணி அமைத்துக்கொண்டு தமது புதியகாலனிய மற்றும் மேலாதிக்கத்திற்கான போரை அமெரிக்கா நடத்திவருகிறது. ஐ.நா தீர்மானத்திற்கு எதிராக, பெயரளவிலான சுதந்திர அரசுகளின் இறையாண்மையைப் பறித்து ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. இதன் மூலம் பன்னாட்டுப் படை எனும் பேரில் தாம் நடத்திவரும் சட்டவிரோத நடவடிக்கைகளை நியாயப்படுத்தி வருகிறது. எனினும் இத்தகைய நடவடிக்கைகளால் பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய ஏகாதிபத்திய வல்லரசுகளும் கடும் பாதிப்புகளை சந்திப்பதால் முரண்பாடுகள் முற்றிவருகின்றன.
                நான்காவதாக, அமெரிக்க ஏகாதிபத்தியம் எதிரி நாடுகள் மீது மட்டுமல்ல, தமது விசுவாசிகளால் ஆளப்பட்டு வருகிற நாடுகளிலும் உள்நாட்டுக் கலகங்களை தூண்டி ஆட்சிக்கவிழ்ப்பு நடத்திவருகிறது. அதற்கு அரசுசாரா அமைப்புகள் முழுமையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அண்மையில் மத்திய கிழக்கில் துனிசியா, எகிப்து, லெபனான், லிபியா போன்ற நாடுகளில் நடந்த அரபு வசந்தம்என்று அழைக்கப்பட்ட கலகங்கள் அனைத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நடத்தப்பட்டதுதான்.
                ஈரானுக்கு எதிராக போராடுவதற்கும், டாலர் வர்த்தகத்தை தொடர்ந்து நடத்துவதற்கும் மறுத்தக் காரணத்தால்தான் லிபியாவின் கடாபி ஆட்சியும், எகிப்தின் முபாரக் ஆட்சியும் தூக்கியெறியப்பட்டது. இந்தக் கிளர்ச்சிகள் அனைத்தும் அரசுசாரா அமைப்புகளால் அமெரிக்க உதவியுடன்தான் நடத்தி முடிக்கப்பட்டது.
            இந்தக் கிளர்ச்சிகளில் பங்குகொண்ட ஏப்ரல் இயக்கம், முசுலீம் சகோதரத்துவம், மனித உரிமைகளுக்கான பஹ்ரைன் மையம் மற்றும் ஏமன் நாட்டைச் சார்ந்த இளைஞர் அமைப்பின் தலைவரும், மனித உரிமை கண்காணிப்பாளருமான எண்ட்சர் காடி உள்ளிட்ட பெரும் எண்ணிகையிலான ஆர்வலர்களும்குழுக்களும், அமெரிக்காவிடமிருந்து நிதி உதவி, இராணுவ பயிற்சி மற்றும் ஆயுத உதவி பெற்றே செயல்பட்டனர். வாஷிங்டனைச் சார்ந்த சர்வதேச குடியரசு நிறுவனம் (IRI), (NED) தேசிய ஜனநாயக நிறுவனம் (NDI) மற்றும் மனித உரிமை அமைப்பான சுதந்திர சபைபோன்ற ஏகாதிபத்திய அமைப்புகள், முன்னர் கூறிய அமைப்புகளை நேரடியாக வழிநடத்தின. அதற்கு அமெரிக்காவின் உள்துறை அமைச்சகம் தலைமை தாங்கியது.
            அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகள், அமைதிப் பிரதேசங்களில் விரிவடைந்து செல்வதற்காக (சிவில் சமூகம் என்றழைக்கப்படுகின்ற) அமைப்பு நிர்வாகிகள்என்ற படையை கட்டியமைக்கின்றனர். அதே நேரத்தில் போர்ப் பிரதேசங்களில் அமெரிக்காவின் சர்வதேச இராணுவத்தை நிறுத்துவது என்ற திட்டத்தை செயல்படுத்துகின்றனர் என்பதை தாமஸ் பெர்னன்ட் விவரிக்கிறார். அமெரிக்க நிதி அதிபரான ஜார்ஜ் சோரோசின் ரெவின்யூ வாட்ச்”, ஜனநாயகத்துக்கான தேசிய அறக்கட்டளையுடன் இணைந்து அரசுசாரா அமைப்புகளின், (NGOs) படையை உருவாக்கியுள்ளது. எப்படிப் போர்வீரர்கள் கூரறிவுத் திறன் இன்றி ஏகாதிபத்தியத்தை பலப்படுத்துகிறார்களோ அதேபோல இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் (NGOs) தாங்கள்தான் உண்மையில் மனித உரிமைக்கு குரல் கொடுப்பதாகக் கூறிக்கொண்டு வால்ஸ்டிரீட் மற்றும் இலண்டனைச் சார்ந்த உலகளாவிய நிதி மூலதனத் திமிங்கலங்களின் இலாப வெறிக்காக சேவை செய்கின்றனர்.
                ஒரு பிரிவு தனக்கென்று இலக்கிடப்பட்ட நாடுகளின் முக்கிய இடங்களை வான்வழித் தாக்குதல், திட்டமிட்ட சிறப்பு நடவடிக்கைகள், ஆக்கிரமிப்புப் போர்கள் ஆகியவற்றை செயல்படுத்தும். இதற்கு இராணுவத்தின் சிறப்பு சாதனங்களான கவச வண்டிகள், போர் விமானங்கள், குண்டுவீசும் கொடிய ரக விமானங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும்.
            மற்றொரு பிரிவான அமைப்பு நிர்வாகிகள்”, (NGOs) போர்களினால் அழிவுக்குள்ளான சாம்பல்களிலிருந்து அல்லது அன்னியர்களால் ஆதரிக்கப்பட்டு தூண்டிவிடப்படும் சீர்குலைவு மற்றும் குழப்ப நிலையிலிருந்து தங்கள் வேலையைக் கட்டியமைக்கத் தொடங்குவர். இந்த அமைப்பு நிர்வாகிகள்’, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சர்வதேசிய அமைப்புகள், ஒப்பந்தக்காரர்கள், மற்றும் மக்கள் தொடர்ப்பு அதிகாரிகள் எல்லோரையும் உள்ளடக்கிய ஒரு அமைப்பாகும். தேவைப்பட்டால் இவர்களுக்கு உதவியாக கடற்படையினரும் இணைந்து கொள்வார்கள்.
                இன்று அமெரிக்காவால் பயிற்றுவிக்கப்பட்ட 5000க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவை மியான்மர், தாய்லாந்து, மலேசியா மற்றும் ரசியா போன்ற எழுபது நாடுகளில் ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
                தற்போது அமெரிக்க ஏகாதிபத்திய வல்லரசிற்கு ஆதரவாக செயல்பட்டுவரும் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் பிரிட்டனின் பேரரசுகால தொண்டு நிறுவனங்களின் செயல்பட்டதோடு ஒத்துபோகிறது. தற்போது அமெரிக்க ஐக்கிய குடியரசின் தென்பகுதியில் உள்ள ஜார்ஜியா அன்று காலனியாக்கப்பட்டது. உண்மையில் இன்றைய அரசுசாரா அமைப்புகளின் முன்மாதிரியான ஒரு அமைப்பினால்தான்! சிறைக்கூடங்களை சீரமைப்பது என்ற பேரில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. அது உண்மையில் செய்தது என்னவென்றால் முடியாட்சியின் தேவைகளை நிறைவு செய்வதற்கான தகுதியான குற்றவாளிகளை சிறைகளிலிருந்து தெரிவு செய்ததுதான். அவர்கள் ஜார்ஜியாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டு அந்நாட்டை அடிமைப்படுத்தினர். Dr.பிரேயின் தலைமையிலான ஜார்ஜிய அறங்காவலர்என்ற பெயரில் அந்நாட்டு மக்களை துன்புறுத்தி அந்நாட்டு செல்வங்களை பிரிட்டனின் மேட்டுக் குடியினரின் நலன்களுக்கு அனுப்பி வைத்தனர். இதுபோன்ற கிரிமினல்கள் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியின்போதும், அதற்குப் பின்பும் இந்தியாவிற்குள்ளும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர்.
                மேலும் பிரிட்டனின் புரோட்டஸ்டண்ட் மதம் நவீன அரசுசாரா அமைப்புகளின் முன்னோடியாகும். 15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் மதப் பிரிவுகள் நேரடியாக அரசியல் வழிகளின் அடிப்படையில் பிளவுண்டன. எனவே கப்பல் கப்பலாக பிராட்டஸ்டண்ட் மதப் பிரிவினர் ஜார்ஜியாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டபோது அவர்களைத் தொடர்ந்து அவர்களின் அரசியல் தொடர்புகளும் பின் தொடர்ந்தன.
                இந்த அரசியல் செயல்பாட்டாளர்களின் விசுவாசிகளான பலருக்கு உயரிய நோக்கங்கள்தான்அன்றும் இன்றும் முன்னிலையில் இருக்கின்றன. ஆனால் எல்லா பேரரசுவாதிகளின் தேவாலாயங்களதும் இறுதி நோக்கம், கீழ்தட்டு மக்களின் வலைப்பின்னலால் ஆன அமைப்பை உருவாக்குவதுதான். இந்த மக்கள் தாங்கள் புனிதமானஉயரிய நோக்கங்களை நிறைவேற்றி வருவதாக நம்புகின்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் பேரரசு நாடுகளைச் சார்ந்த மேல்தட்டு சீமான்களுக்காகத்தான் சேவை செய்துவருகின்றனர்.
                இன்றைய அரசுசாரா அமைப்புகளைப் போலவே, புரோட் டஸ்டண்ட் நிறுவனங்களும் அந்தந்தப் பகுதியில் செயல்படும் தொன்மையான அமைப்பு நிர்வாகிகளுடன் ஒன்றுபட்டு செயல்பட்டும், உதவி செய்தும் காரியமாற்றின. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் புரட்சிகர இயக்கங்களில் செயல்பட்ட முன்னோடிகளையும் கூட விலைக்கு வாங்கி இன்று தொண்டு நிறுவனங்களின் முன்னணி அமைப்பாளர்களாக மாற்றியுள்ளனர். இவ்வாறு அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் புதிய காலனியாதிக்கத்திற்கும், உலக மேலாதிக்கத் திற்கும் தொண்டு நிறுவனங்கள் சேவை புரிகின்றன.
ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான போட்டி கூர்மையடைகிறது
                அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி தீர்வு காண முடியாமல் நீடிக்கிறது. மூலப்பொருட்களுக்கானத் தேவை, பொருளாதார நெருக்கடி தொடர்வது போன்ற தேவைகளிலிருந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நாடுபிடிக்கும் போட்டி கடுமையாகத் தீவிரமடைகிறது. அது இன்றைய உலகின் அடிப்படை முரண்பாடுகள் அனைத்தையும் தீவிரப்படுத்துகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விரிவாதிக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இரசிய ஏகாதிபத்தியமோ, சீனாவோ அமெரிக்காவின் இத்தகைய மூர்க்கத்தனத்திற்கு பதிலடி கொடுக்கத் தயாரில்லை.
                அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இவ்விரு நாடுகளும் ஐ.நா பாதுகாப்புச் சபையில் தங்களது எதிர்ப்புகளைக் காட்டுகின்றன. ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை எதிர்க்கின்றன. ஆனால் லிபியா தாக்கப்பட்டபோதும், சிரியா இன்று தாக்குதலால் தத்தளித்துக் கொண்டிருக்கும்போதும் இந்நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராகக் கண்டன அறிக்கை விடுவதுடன் நிறுத்திக் கொள்கின்றன. பிரிக்நாடுகளின் கூட்டமைப்போ அல்லது ஷாங்காய் கூட்டமைப்போ அமெரிக்காவின் போர் வெறிக்கு எதிராக எந்தவித எதிர்ப்பு நடவடிக் கைக்கும் தயாராக இல்லை.
                ஐரோப்பாவைச் சார்ந்த பிரான்சும், ஜெர்மனியும் தங்களுக் குள் போட்டி போடுகின்றனவே ஒழிய அமெரிக்காவை எதிர்த்து ஒரு வலிமையான கூட்டணியை கட்டுவதற்கு தயாராக இல்லை. ஜப்பான் கூட அமெரிக்காவின் முகாமில் முடங்கிக் கிடக்கிறது. ஏகாதிபத்திய நாடுகளின் போர் எதிர்ப்பு இயக்கங்கள் கூட முனை முழுங்கிய நிலையில் உள்ளன. இத்தகைய ஒரு சூழலில் மூன்றாம் உலக ஒடுக்கப்பட்ட நாடுகளைச் சார்ந்த மக்கள் பிரிவினர் - அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தை எதிர்த்தும் - புதிய காலனிய உலக மறுபங்கீட்டிற்கு எதிராகவும் எதிர்த்துப் போராடுவதுதான் ஒரே தீர்வாக உள்ளது.
புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் மன்மோகன் கும்பலும் - தொண்டு நிறுவனங்களும்
                மத்தியில் ஆளும் மன்மோகன் சோனியா கும்பலின் அரசு, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு விசுவாசமாக செயல்படும் ஒரு அரசாகவே உள்ளது. ஆளும் தரகுமுதலாளித்துவ, நிலப் பிரபுத்துவ வர்க்கங்களின் நலன்களிலிருந்து அமெரிக்காவுடன் அரசியல், பொருளாதார, இராணுவ ஒப்பந்தங்களைப் போட்டு இந்தியாவை அமெரிக்காவின் புதியகாலனியாக மாற்றிவருகிறது. அமெரிக்காவுடனான இராணுவ ஒப்பந்தம் இந்திய இராணுவத்தை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக மேலாதிக்கத்திற்கான போரில் ஒரு எடுபிடிப் படையாக பயன்படுத்தவும், ஆசியாவில் சீனாவை எதிர்த்து இந்தியாவைப் பயன்படுத்தவும் சேவை செய்கிறது. அணுசக்தி ஒப்பந்தமோ இந்தியாவின் சுயேட்சையான அணுதிட்டத்தை ஒழிப்பதோடு, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்றவாறு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை அமைத்துக் கொள்ளவேண்டும் என்ற ஹைடுசட்டத்தின் நிபந்தனைக்கு உட்படுத்துகிறது.
                இந்தியா அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிர்ப்பந்தங்களுக்கு பணிந்து லிபியா, சிரியா மற்றும் ஈரான் பிரச்சினையில் அமெரிக்கா வுக்கு சாதகமாக  ஐ.நா சபையில் செயல்படுகிறது, ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதியையும் குறைத்துக் கொண்டது. இவ்வாறு இந்திய அரசு அமெரிக்காவின் புதியகாலனியாதிக்கத்திற்கு சேவை செய்கிறது. எனவேதான் அமெரிக்க ஆதரவு தொண்டு நிறுவனங்களை எதிர்த்து கடும் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. அவைகளுக்கு ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து வரும் நிதியை தடை செய்யவும், அந்த அமைப்புகளைத் தடை செய்யவும் மறுக்கிறது.
                அன்னா அசாரே தலைமையிலான ஊழல் எதிர்ப்பு இந்தியாஅமைப்பும், கேசரிவாலின் ஆம் ஆத்மிகட்சியும், சுப.உதயகுமார் தலைமையிலான அணுசக்திக்கு எதிரான மக்கள் அமைப்பும், இன்னும் ஏராளமான மனித உரிமை அமைப்புகள், பல்வேறு அமைப்புகளும் அமெரிக்காவின் நிதி உதவியுடன் இயங்குகின்றன. இத்தகைய அமைப்புகள் அனைத்தும் அமெரிக்காவின் நலன்களிலிருந்து இந்திய அரசை நிர்ப்பந்திக்கவும், ஆட்சியாளர்கள் அடிபணிய மறுத்தால் ஆட்சி மாற்றத்திற்கும் திட்டமிட்டே செயல்படுகின்றன.
                பிரிக்நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா பங்கேற் றிருப்பது, அமெரிக்காவின் டாலருக்கு மாற்றாக வேறு நாணயத்தை பயன்படுத்துவோம் என்று பேசுவது ஆகியவற்றுக்கு எதிராகவும், அணு உலைகள் அமைப்பதில் அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராக செயல்படுவதை தடுப்பது, இந்தியாவின் அனைத்துத் துறைகளையும் அமெரிக்காவின் முதலாளிகளுக்கு திறந்துவிட நிர்ப்பந்திப்பது போன்ற காரணங்களுக்காகவும்தான் அமெரிக்க ஆதரவு அரசுசாரா அமைப்புகள் அரசை எதிர்த்துப் போராடுகின்றன. அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுக்கின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு தொண்டூழியம் புரிகின்றன.
                இத்தகைய சூழலில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக மேலாதிக்கத்திற்கு எதிராகவும், இந்தியாவை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றும் அணுசக்தி, இராணுவ ஒப்பந்தகளை எதிர்த்தும்; புதிய காலனியதாசன் மன்மோகன் கும்பலின் ஆட்சியை எதிர்த்தும் அனைத்து புரட்சிகர தேசபக்த ஜனநாயக சக்திகளும் ஓரணியில் அணிதிரள்வது அவசியமாகும். அத்தகைய ஒரு போராட்டத்தில் அரசுசாரா அமைப்புகளை குறிப்பாக அமெரிக்காவிடம் இருந்து நிதி உதவி பெற்று செயல்படும்  அரசுசாரா அமைப்புகளை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தும் செயல்தந்திரங்களையே புரட்சிகர பாட்டாளிவர்க்க இயக்கம் மேற்கொள்ள வேண்டும். தொண்டு நிறுவனங்களை தனிமைப்படுத்துவதா, எதிர்த்து மோதுவதா என்றப் பிரச்சினையை வர்க்கப்போராட்ட வளர்ச்சிப் போக்குதான் தீர்மானிக்கிறது. எனவே இன்றைய சூழலில் அரசுசாரா அமப்புகளை, ஏகாதிபத்திய சேவகர்களை தனிமைப்படுத்தும் நிலையையே செயல்படுத்த வேண்டியுள்ளது.
                இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்க போர் பற்றியும், அதன் புதியகாலனிய அரசியல் பொருளாதாரம் பற்றியும் - அரசுசாரா அமைப்புகளைப் பற்றிய இன்றைய உண்மை நிலவரங்களோடு, அதன் வரலாறு பற்றியும், தெளிவாக விளக்குகின்றன. இதை படித்து அறிந்துக்கொண்டு அனைத்து மக்களிடமும் தொண்டு நிறுவனங்கள்ஜாக்கிரதை என்ற எச்சரிக்கை உணர்வை கொண்டு செல்வோம்!!

உள்ளடக்கம்
  1. முன்னுரை
  2. அமெரிக்கா திட்டமிட்டு உருவாக்கிய அரபு வசந்தம்
  3. எகிப்தில் போலி சகோதரத்துவத்தைஅரியணை ஏற்றும் அமெரிக்காவின் முயற்சி!
  4. ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியும் இராணுவத் தலையீடும் (லிபியாவில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு அமெரிக்க-நேட்டோவின் முயற்சியா?)
  5. லிபியப் போரும்எண்ணெய்க்கான யுத்தமும்
  6. பேரரசின் இருபக்க கூர்வாள் (உலகு தழுவிய இராணுவம் - அரசு சாரா நிறுவனங்கள் (NGO))
  7. நிறப் புரட்சிகள்: அடுத்தது அர்ஜென்டினாவா?

No comments:

Post a Comment

விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.