Sunday, February 10, 2013

இராமதாஸ் கும்பலின், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான “அனைத்து சமுதாய மக்களின் பாதுகாப்பு முன்னணியை” முறியடிப்போம்!


இராமதாஸ் கும்பலின், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான
அனைத்து சமுதாய மக்களின் பாதுகாப்பு முன்னணியைமுறியடிப்போம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
      தருமபுரி மாவட்டத்திலுள்ள நத்தம்காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய ஊர்களில் வசித்துவந்த தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும், அவர்களின் உடைமைகள் மீதும் பா.ம.க.வைச் சார்ந்த வன்னிய சாதிவெறியர்கள், திட்டமிட்டு ஒரு சாதிவெறித் தாக்குதலை நடத்தி முடித்தனர். முன்னூறுக்கும் மேற்பட்ட வீடுகளைக் கொளுத்தினர். வன்னியச் சாதியைச் சார்ந்த ஒரு பெண், தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து கலப்புமணம் புரிந்துகொண்டதைக் காரணம் காட்டி இந்தக் கலவரம் நடத்தப்பட்டது.
      கடந்த நவம்பர் 7ல், தருமபுரியில் நடந்த அந்தக் கலவரம் அத்துடன் நிற்கவில்லை. தொடர்ந்து கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக சாதிக் கலவரத்தை வன்னியச் சாதிவெறியர்கள் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் மேலிருப்புக் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதோடு, அவர்களின் வீடுகளையும் தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்கின்றன. தர்மபுரி கலவரத்திற்கு பின்பு பா.ம.க நிறுவனர் இராமதாஸ் தாழ்த்தப்பட்டச் சாதி மக்களுக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட சாதிகளின் அமைப்பு ஒன்றை உருவாக்கி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக அனைத்து மாவட்டங்களிலும் கூட்டங்களை நடத்தி வருகிறார்.
அனைத்து சமுதாய மக்களின் பாதுகாப்பு முன்னணிஎதிர்ப்புரட்சிகர முன்னணியே
      இராமதாஸ் தலைமையில் கொங்கு வேளாளர் பேரவை மணிகண்டன், முக்குலத்தோர் சாதி அமைப்புகள் உள்ளிட்ட 51 சாதி அமைப்புகள் ஒன்றுகூடி தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான அனைத்துச் சமுதாய மக்கள் பாதுகாப்பு முன்னணிஎன்ற ஒரு சாதிவெறி முன்னணியை உருவாக்கியுள்ளனர். நாடகக்காதல் எதிர்ப்பு என்ற பேரில் காதல் மணம் கலப்பு மணத்தை தடுத்து நிறுத்துவதற்கு, பெற்றோரின் சம்மதத்துடன்தான் திருமணம் என்று திருமணச் சட்டத்தைத் திருத்தவேண்டும்; வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பிற சாதியினரை பழிவாங்கத் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது எனவே அச்சட்டத்தைத் திருத்தவேண்டும்; தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு, தனித் தொகுதிகளுக்கான இடஒதுக்கீடுகளை இரத்து செய்ய வேண்டும் என்று அந்த முன்னணி தீர்மானம் போட்டுள்ளது. அத்துடன் கொங்குவேளாளர் பேரவையின் தலைவர் மணிகண்டனோ தங்களின் சாதி கௌரவத்தைப் பாதுகாக்க பெண்கள் காதல் மணம் புரிவதில்லை என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதோடு, பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கக்கூடிய சட்டத்தை திருத்த வேண்டும் என்றும் கூறுகிறார்.
      இராமதாஸ் தலைமையிலான சாதிவெறி முன்னணி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் மேற்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றியதன் மூலம், அது ஒரு எதிர்ப்புரட்சிகரப் பிற்போக்கு முன்னணி என்பதை நிரூபித்துவிட்டது. இதுவரை தாழ்த்தப்பட்ட மக்களும், ஜனநாயக சக்திகளும் போராடிப் பெற்ற உரிமைகள், சலுகைகள், பெண்ணுரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பறிப்பதற்கு இந்தப் பிற்போக்கு எதிர்புரட்சிகர கும்பல் முயல்கிறது.
      இதுநாள்வரை தமிழகத்தில் பார்ப்பனிய ஒடுக்கும் சாதியை எதிர்த்து, பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டச் சாதி மக்களுக்கான சமூகநீதி”, “பார்ப்பனிய எதிர்ப்பு”, “தீண்டாமை ஒழிப்புஎன்ற சாதிய சீர்திருத்தத்திற்கான இயக்கங்கள்தான் கட்டியமைக்கப்பட்டன. ஆனால் வரலாற்றிலேயே முதன்முறையாக தற்போதுதான் ஒடுக்கப்பட்டச் சாதியான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஒடுக்கும் சாதிகளின் முன்னணி உருவாக்கப் பட்டுள்ளது. சமூக நீதி பேசியவர்கள் இன்று சமூகச் சீரழிவாளர்களாக, எதிர்ப்புரட்சிகரச் சக்திகளாக உருவெடுத்துள்ளனர். குடிதாங்கி”, “அம்பேத்கார் சுடர்என தலித் அமைப்புகளால் பட்டம் சூட்டப்பட்ட இராமதாஸ் இன்று தாழ்த்தப்பட்ட மக்களின் குடிசைகளைக் கொளுத்தும் கொள்ளிக் கட்டையாக மாறியுள்ளார். இவ்வாறு இராமதாஸ் கும்பலின் தலைமையிலான இந்த எதிர்ப்புரட்சிகரச் சாதிவெறிக் கும்பல் தமிழ்ச் சமுதாயத்தை காட்டுமிராண்டிக் காலத்திற்கு பின்னோக்கி இழுத்துச் செல்ல முயல்கிறது.
சாதிக்கலவரங்களுக்கான காரணம் என்ன?
      பா.ம.க.வைச் சார்ந்த வன்னியச் சாதிவெறியர்கள் தற்போது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து சாதிக்கலவரங்கள் நடத்துவதற்கும், இராமதாஸ் தலைமையில் ஒரு சாதிவெறி முன்னணியை உருவாக்குவதற்கும் இரண்டுகாரணங்கள் உள்ளன. ஒன்று, பிற்படுத்தப்பட்டச் சாதி மக்களிடையே தாழ்த்தப்பட்ட சாதி மக்களுக்கு எதிரான சாதி வெறியைத் தூண்டி கலவரத்தில் ஈடுபடுவதன் மூலம் சாதிய வாக்குவங்கியை உருவாக்குவது. வரும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களுக்கான தயாரிப்புச் செய்வது. இரண்டு, சாதி, தீண்டாமை வன்கொடுமைகளைத் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது திணிப்பதன் மூலம் அவர்களை மீண்டும் பண்ணையடிமை முறைக்குள் அடக்கிவைப்பதற்கான முயற்சி. இத்தகைய இரட்டைத் தந்திரங்களைத்தான் சாதிவெறி முன்னணி செயல்படுத்துகின்றது.
சாதிவெறியர்களின் தேர்தல் செயல்தந்திரத்தை முறியடிப்போம்
      பா.ம.க நிறுவனர் இராமதாஸ் சமூகநீதி பேசி தலித் அமைப்புகளோடு உறவுகொண்டு கூட்டணி அமைத்தார். தி.மு.க, அ.தி.மு.க போன்ற திராவிடக் கட்சிகளுடன் கொள்கையற்ற முறையில் மாறி, மாறி கூட்டணி அமைத்து பதவி சுகம் காண்பது என்ற அவரின் சந்தர்ப்பவாத அரசியலை, வன்னிய சாதி மக்களே வெறுத்தனர். அதனால் பா.ம.க 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும், 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் மண்ணைக் கவ்வியது. பா.ம.க அரசியலில் செல்லாக் காசாகியது. சீண்டுவாரின்றித் தனிமைப்பட்டது. எனவேதான் இராமதாசு தி.மு.க, அ.தி.மு.க போன்ற திராவிடக் கட்சிகளுடன் இனி எந்நாளும் கூட்டணி கிடையாது. இனி சாதிவாதக் கட்சிகளுடன்தான் கூட்டணி என்று அறிவித்துள்ளார். வாக்குவங்கி அரசியலுக்காக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான அனைத்துச் சாதி முன்னணி என்ற ஒரு சாதிவெறிப் பாசிச முன்னணியை அமைத்துள்ளார்.
      தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகச் சாதிக் கலவரங்களை நடத்தி பிற்படுத்தப்பட்டச் சாதியினரின் வாக்குவங்கியை உருவாக்குவதன் மூலம், வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் கணிசமான இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்பதுதான் இந்தச் சாதிவெறி முன்னணியின் திட்டமாகும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அந்த அணியின் வலிமையைச் சோதிப்பது என்பதும், அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலில் 50 தொகுதிகளையாவது கைப்பற்றுவது என்பதும் அவர்களின் இலக்காகும். அதன் மூலம் தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான ஒரு துருப்புச் சீட்டாக மாறவேண்டும் என்பதே இராமதாசின் இலட்சியமாகும்.
      வட மாநிலங்களைப் போல இந்த சாதிவெறிக் கும்பல் சாதிக் கூட்டணி மூலம் தனித்து ஆட்சி அமைக்க விரும்புகிறது. அந்தக் கனவு பலிக்கப் போவதில்லை. ஒருவேளை இந்தக் கும்பல் ஆட்சிக்கு வந்தாலும், அல்லது தமிழக அரசியலைக் கட்டுப்படுத்தும் அளவிற்கு பலம் பெற்றாலும் அது தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் பெரும் கேட்டையே விளைவிக்கும். சாதிவாத அமைப்புகள் அனைத்தும் மத்தியில் ஆளும் மன்மோகன் கும்பல் நாட்டை அமெரிக்காவின் புதியகாலனியாக மாற்றிவருவதையும், உலகமய தாராளமயக் கொள்கைகளை செயல்படுத்தி முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடிகளை மக்கள் மீது சுமத்துகின்ற துரோகத்திற்கும் துணைபோகின்ற அமைப்புகளாகவே உள்ளன. அண்மையில் சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை அனுமதிப்பதை எதிர்த்துப் பேசிய பிற்படுத்தப்பட்டச் சாதியின் தலைவர் முலாயம்சிங் யாதவும், தாழ்த்தப்பட்டச் சாதியைச் சார்ந்த மாயாவதியும் மன்மோகன் கும்பலின் துரோக ஆட்சியைக் காப்பாற்றி நாட்டுமக்களுக்குத் துரோகம் இழைத்தனர். எனவே அரசியலில் இந்த சாதிவெறிச் சக்திகள் எழுச்சி பெறுவது புதியகாலனிய ஆதிக்கத்திற்குச் சேவை செய்து மக்களை சாதிரீதியாகப் பிரித்தாள்வதற்குத் துணைபோகவே பயன்படும். சாதிக் கலவரங்களால் நாட்டில் இரத்த ஆறு ஓடும். அனைத்துச் சாதி உழைக்கும் மக்களின் வாழ்க்கை நாசமாக்கப்படும். இராமதாஸ் தலைமையிலான சாதிவெறி முன்னணியை தேர்தலில் தோற்கடிப்பதுதான் தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் அனைத்துச் சாதி உழைக்கும் மக்களுக்கும் பாதுகாப்பாகும். சாதிவெறியின் மூலம் பதவியை பிடிக்கத் துடிக்கும் இராமதாஸ் கும்பலின் கனவு கலையவேண்டும். அதற்கு அனைத்துச் சாதி உழைக்கும் மக்களும் ஜனநாயகச் சக்திகளும் சாதிவெறியைத் தூண்டும் வாக்குவங்கி தேர்தல் செயல்தந்திரங்களைத் தோற்கடிக்க ஓரணியில் திரளவேண்டும்.
சாதி, தீண்டாமை வன்கொடுமையை எதிர்ப்போம்
      அடுத்து இராமதாஸ் கும்பலின் தலைமையிலான சாதிவெறி முன்னணியினர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக மிகவும் பிற்படுத்தப்பட்டச் சாதியினர் மத்தியில் சாதிவெறியைத் தூண்டிச் சாதிக் கலவரங்களை நடத்துவதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது பண்ணையடிமை ஆதிக்கத்தைத் திணிக்க முயற்சிக்கின்றனர்.
      நாடகக் காதலை எதிர்ப்பது எனும்பேரில் காதல் திருமணத்தையும், கலப்புத் திருமணத்தையும் தடுப்பதற்காகத் திருமண வயதை பெண்ணுக்கு 21, ஆணுக்கு 23 என்று வரையறை செய்யவேண்டும்,  பெற்றோரின் அனுமதியுடன் நடக்கும் திருமணங்களை மட்டுமே அங்கீகரிக்க வேண்டும் என திருமணச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்றும், தமிழகத்தில் தீண்டாமை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது எனவே வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பிற உயர்சாதியினருக்கு எதிராக தவறாகப் பயன் படுத்துவதைத் தடுக்க அச்சட்டத்தைத் திருத்தவேண்டும் என்றும்; தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் பொருளாதார அடிப்படையில் மிகவும் முன்னேறி விட்டார்கள் எனவே அவர்களுக்கான கல்வி வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டை இரத்து செய்யவேண்டும் என்றும்; குறிப்பாகச் சட்டமன்ற நாடாளுமன்றத் தனித் தொகுதிகளை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து மாவட்டங்களிலும் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
      பெற்றோருடைய அனுமதியுடன்தான் திருமணம் என்று திருமணச் சட்டத்தத்தைத் திருத்தவேண்டும் என்று கூறுவதன் மூலம் வயது வந்த ஆணும் பெண்ணும் காதலித்து தங்களுக்கான துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமையை மறுக்கின்றனர். சுதந்திரத் திருமணங்களை ஒழித்து - கட்டாயத் திருமணங்களை நடத்துவதன் மூலம் ஒரே சாதிக்குள்ளேயே திருமணம் என்றும் அகமண முறையிலான நிலப் பிரபுத்துவப் பிற்போக்குச் சாதிமுறையைப் பாதுகாக்க விரும்புகின்றனர். தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் பணம் பறிக்கும் நோக்கத்துடன் உயர்சாதிப் பணக்காரப் பெண்களை திருமணம் செய்துகொண்டு பின்னர் அவர்களின் வாழ்க்கையை நாசமாக்குகின்றனர் என்று கூறி பிற்படுத்தப்பட்டச் சாதி இளைஞர்களுக்குச் சாதிவெறியைத் தூண்டுகின்றனர். உண்மையில் பணம் பறிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் திருமணங்கள் பெற்றோர்களால் ஏற்பாடு செய்து நடத்தப்படும் கட்டாயத் திருமணங்கள்தான் என்பதையும், வரதட்சணைக் கொடுமையால் பிற்படுத்தப்பட்டச் சாதியைச் சார்ந்த பெண்கள் தற்கொலை புரிந்து மாண்டுபோவதையும் மூடிமறைக்கின்றனர். இவர்கள் சுதந்திரத் திருமணங்களை மறுப்பதுடன் பெண்ணுக்குச் சொத்துரிமையை மறுத்து பெண்ணடிமைத் தனத்தைத் திணிக்கின்றனர். அத்துடன் காதல் மணத்தை எதிர்ப்பது என்பது பிற்படுத்தப்பட்டச் சாதிக்குள்ளேயே ஏழை பணக்காரர்களுக்கிடையே ஏற்படும் காதலையும் மறுத்து ஆளும்வர்க்க நலன்களைப் பாதுகாக்கின்றனர். பிற்படுத்தப்பட்டச் சாதியில் அதிகரித்துவரும் வர்க்க முரண்பாடுகளை இதன் மூலம் மூடிமறைக்கின்றனர்.
      தமிழகத்தில் சாதித் தீண்டாமை ஒழிந்து விட்டதாம். தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்க்கையில் முன்னேறிவிட்டார்களாம். வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உயர்சாதியினரை பழிவாங்கவே பயன்படுத்தப் படுகிறதாம். இப்படியெல்லாம் கூறி பிற்படுத்தப்பட்டச் சாதியினர் மத்தியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானச் சாதிவெறியைத் தூண்டுகின்றனர்.
      தமிழகத்திலோ அல்லது இந்திய அளவிலோ இன்னமும் சாதி, தீண்டாமை ஒழியவில்லை. இன்னமும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் தேநீர்க்கடைகளில் தனிக்குவளைமுறை நடைமுறையில் உள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலில் நுழையத்தடை, பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்கத்தடை, உயர்சாதியினர் தெருவில் செருப்புப் போட்டு நடக்கத்தடை, சுடுகாட்டுப் பாதை மறுப்பு என தீண்டாமை வன்கொடுமைகள் தொடர்கின்றன. தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல், பொருளாதார ரீதியாக முன்னேறிவிட்டனர் என்பதும் பொய்யேயாகும். உண்மையில் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டுச் சலுகைகள் மூலம் தாழ்த்தப்பட்டச் சாதியைச் சார்ந்த மேல்தட்டுப் பிரிவினர் 10 சதவீதம் பேர்தான் பலனடைந்துள்ளனர். 90 சதவீதம் தாழ்த்தப்பட்டச் சாதி மக்கள் வறுமைக் கோட்டிற்கும் கீழ் தத்தளித்துக்கொண்டுதான் உள்ளனர். நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி அமைப்புகளில் அவர்களின் ஒதுக்கீடும் கூட மிகக் குறைவானதே. அத்துடன் பல உள்ளாட்சிகளில் தாழ்த்தப்பட்ட சாதியினரைச் சரிசமமாக நடத்தவும் மேல் சாதிவெறியர்கள் மறுக்கின்றனர். தாழ்த்தப்பட்டச் சாதியைச் சார்ந்த ஒரு சிறு பிரிவினரின் முன்னேற்றத்தைக் கூட இந்தச் சாதி வெறியர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கல்வி, வேலைவாய்ப்பு, தனித் தொகுதிகளில் தாழ்த்தப் பட்டவர்களுக்கு இடஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும் என்று கோருவது அவர்களின் பங்கைத் தட்டிப் பறித்துக் கொள்ளும் தந்திரமேயாகும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் திருத்தக் கோருவதன் மூலம் சாதி, தீண்டாமைக் கொடுமைகளைச் செயல்படுத்தவும், சேரிகளைக் கொளுத்தவும், சாதிகடந்து கலப்புத் திருமணங்கள் செய்வோரைக் கௌரவக் கொலைகள் புரிவதற்கும் இந்தச் சாதிவெறிச் சண்டாளர்கள் உரிமம் கோருகின்றனர். தாழ்த்தப்பட்ட மக்களும், ஜனநாயகச் சக்திகளும் போராடிப் பெற்ற அறைகுறை ஜனநாயக உரிமைகளையும் பறித்து கலப்புத் திருமண மறுப்பு, பெண்ணுக்குச் சொத்துரிமை மறுப்பு, தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு மறுப்பு, வன்கொடுமைக்கு ஆதரவு எனத் தமிழச் சமுதாயத்தைக் காட்டுமிராண்டிக் காலத்திற்குப் பின்னோக்கி இழுக்கின்றனர் இந்தச் சாதிவெறியர்கள்.
சாதிவெறி முன்னணிக்கு எதிரான மக்கள் முன்னணி
      இராமதாஸ் கும்பலின் தலைமையிலான சாதிவெறி முன்னணியினரின் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக சாதிவெறியைத் தூண்டி வாக்குவங்கி உருவாக்குவதற்கான தேர்தல் செயல்தந்திரங்களையும், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதித் தீண்டாமையைத் திணித்துப் பண்ணையடிமை ஆதிக்கத்தை நிலைநிறுத்தச் சாதிக் கலவரங்களை நடத்துவதற்கானச் செயல்தந்திரங்களை எதிர்த்தும் அனைத்துச் சாதி உழைக்கும் மக்களும் ஜனநாயகச் சக்திகளும் ஒன்றிணைந்து ஒரு மக்கள் முன்னணியை உருவாக்கவேண்டும். இராமதாசு தலைமையிலான சாதிவெறி முன்னணியானது மேற்கண்ட ஜனநாயக விரோதக் கொள்கைகளைச் செயல்படுத்தவே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான சாதிவெறிக் கலகங்களைத் திட்டமிட்டு நடத்துகிறது. ஒரு எதிர்ப்புரட்சிகரத் தாக்குதலை நடத்துகிறது. இத்தகைய சாதிவெறி எதிர்ப்புரட்சிகர வன்முறையை எதிர்த்து அனைத்துச் சாதி உழைக்கும் மக்களும் ஜனநாயகச் சக்திகளும் ஒரு புரட்சிகர வன்முறையால் பதிலடி கொடுக்கவேண்டும். சாதிக்கலவரங்களைத் தடுத்து நிறுத்துவதற்காக - எதிர்ப்புரட்சிகர வன்முறையைப் புரட்சிகர வன்முறையால் எதிர்கொள்ளும் விதமாக ஒவ்வொரு கிராமத்திலும் தற்காப்புக் குழுக்களை அமைத்துச் செயல்பட வேண்டும். சாதிவெறியர்களை எதிர்த்த நடவடிக்கையோடு மட்டும் அத்தகைய மக்கள் முன்னணி குறுக்கிக் கொள்ளக்கூடாது. அத்தகைய முன்னணி சாதிவெறியர்களின் செயல் தந்திரங்களுக்கு நேர்படித்தான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடவேண்டும். தாழ்த்தப்பட்டச் சாதி மக்கள் மீதான சாதி, தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்தும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்தவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பொது உரிமை, மத உரிமை உள்ளிட்ட அனைத்து ஜனநாயக உரிமைகளையும் வென்றெடுக்கவும் நிலப்பிரபுத்துவச் சாதிமுறையிலான ஏற்பாட்டுத் திருமணங்களை எதிர்த்துச் சுதந்திரத் திருமணங்களை ஆதரித்தும், ஆணுக்கு நிகராக பெண்ணுக்குச் சொத்துரிமை உள்ளிட்ட சமத்துவ உரிமைகளுக்காகவும், தாழ்த்தப்பட்டோருக்குத் தனித்தொகுதி உள்ளிட்ட இடஒதுக்கீட்டை ஆதரித்தும், அனைத்துச் சாதி உழைக்கும் மக்களையும் ஜனநாயகச் சக்திகளையும் உள்ளடக்கிய ஒரு ஜனநாயக இயக்கத்தை உருவாக்கவேண்டும்.
      சாதி, தீண்டாமை மற்றும் சாதிக் கலவரங்களை எதிர்த்த ஒரு ஜனநாயக இயக்கத்தால் மட்டுமே சாதி, தீண்டாமையை முற்றாக ஒழித்துவிட முடியாது. சாதி, தீண்டாமையை ஒழிக்க சமூக மற்றும் அரசியல் ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடுவதால் மட்டுமே முடியாது. சமூக, அரசியல் விடுதலையின் கூடவே பொருளியல் விடுதலைக்கான போராட்டத்தையும் இணைத்து நடத்துவதன் மூலமே சாதி, தீண்டாமையை முற்றாக ஒழிக்க முடியும். அதாவது சாதியத்திற்கு அடித்தளமாக நிலவுகின்ற நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த நிலச்சீர்த்திருத்தத்திற்காக போராடவேண்டும். இந்த மூன்று ஒடுக்கு முறைகளையும் எதிர்த்து ஜனநாயகத்தை அடைய வேண்டுமானால் தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துச் சாதி உழைக்கும் மக்களுக்கு அரசியல் அதிகாரம் வேண்டும். அரசியல் அதிகாரம் என்பது நிலவுகின்ற அரசு அமைப்பில் பங்கேற்பது அல்ல. இந்திய அரசானது நிலப்பிரபுத்துவத்தையும், அதன் சாதி முறைகளையும் பாதுகாக்கின்ற தரகுமுதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்தியங்களின் கூட்டுச் சர்வாதிகார அரசாகும். எனவே இந்தப் பிற்போக்கு வர்க்கங்களின் நலன்காக்கும் இந்திய அரசை புரட்சிகரமான போராட்டத்தின் மூலம் தூக்கியெறிந்து ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசை நிறுவும்போது மட்டுமே பரந்துபட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்கும். அத்தகைய ஒரு அரசுதான் சாதித் தீண்டாமைக்கு முடிவுகட்டி, அனைத்து ஜனநாயகக் கடமைகளையும் நிறைவேற்றும். எனவேதான் இராமதாசு கும்பலின் சாதிவெறிக் கலவரங்களை எதிர்த்தும், சாதித் தீண்டாமைக் கொடுமைகளை ஒழிக்கவும், பெண்ணினத்தின் சமத்துவத்தை நிலைநாட்டவும், மக்கள் ஜனநாயக அரசமைக்க கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரளுமாறு அனைத்துச் சாதி உழைக்கும் மக்களையும், ஜனநாயகச் சக்திகளையும் அறைகூவி அழைக்கிறோம்.
  • இராமதாஸ் கும்பலின் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான                     அனைத்து சமுதாய மக்கள் பாதுகாப்பு முன்னணியைமுறியடிப்போம்!
  • கலப்புத்திருமண மறுப்பு, பெண்ணுக்குச் சொத்துரிமை மறுப்புதாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு மறுப்பு, வன்கொடுமைக்கு ஆதரவு என தமிழ்ச் சமுதாயத்தை பின்னோக்கி இழுக்கும் எதிர்ப்புரட்சியை முறியடிப்போம்!
  • சாதி, தீண்டாமை, ஆணாதிக்கத்திற்கு முடிவுகட்ட                  ஜனநாயக இயக்கங்களைக் கட்டியமைப்போம்!
  • சாதியாதிக்க எதிர்ப்புரட்சி வன்முறையை,                         மக்களின் புரட்சிகர வன்முறையால் வெல்வோம்!
  • ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக மக்கள்ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
பிப்ரவரி 2013

No comments:

Post a Comment

விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.