மருத்துவ, சுகாதாரத் துறைகளை
அரசாங்கம் கைவிட்டு, பன்னாட்டு, உள்நாட்டு
முதலாளிகள் கொள்ளையிடும் களமாக மாற்றுவதே மருத்துவ மனைகளில் தாய்-சேய்
மரணத்திற்கு காரணம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்
நவம்பர் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்களில் மட்டும் 13 பச்சிளங்குழந்தைகள் மருத்துவ
வசதியின்றி மரணமடைந்தன. அதனைத் தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் 7 குழந்தைகள்
மரணமடைந்தன. ஒரே வாரத்தில் 20க்கும் மேற்பட்ட பச்சிளங் குழந்தைகள் மரணமடைந்தது நாடு
முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தருமபுரிக்கு இத்தகைய மரணங்கள் புதிதல்ல. இம்மாவட்டத்தில் மாதம் 60 குழந்தைகள் வீதம் தொடர்ந்து மரணமடைந்து வருகின்றன.
பச்சிளங்குழந்தைகள் மட்டுமல்லாது அண்மையில் சத்தீஸ்கர்
மாநில அரசாங்கத்தால் நடத்தப்பட்ட கருத்தடை அறுவை சிகிச்சையின்போது, போலி மருந்துகள்
பயன்படுத்தபட்டதால் 12 தாய்மார்கள் உயிரிழந்தனர். இதில் மேலும் ஒரு அதிர்ச்சி என்னவெனில்,
கருத்தடை அறுவை சிகிச்சிசையின் போது தாய்மார்கள் உயிரிழப்பதில் இந்தியாவிலேயே தமிழகம்தான்
முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது என்பதுதான்.