Friday, December 12, 2014

மருத்துவ, சுகாதாரத் துறைகளை அரசாங்கம் கைவிட்டு, பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் கொள்ளையிடும் களமாக மாற்றுவதே மருத்துவ மனைகளில் தாய்-சேய் மரணத்திற்கு காரணம்!



மருத்துவ, சுகாதாரத் துறைகளை அரசாங்கம் கைவிட்டு, பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் கொள்ளையிடும் களமாக மாற்றுவதே மருத்துவ மனைகளில் தாய்-சேய் மரணத்திற்கு காரணம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

    தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவம்பர் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்களில் மட்டும் 13 பச்சிளங்குழந்தைகள் மருத்துவ வசதியின்றி மரணமடைந்தன. அதனைத் தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் 7 குழந்தைகள் மரணமடைந்தன. ஒரே வாரத்தில் 20க்கும் மேற்பட்ட பச்சிளங் குழந்தைகள் மரணமடைந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தருமபுரிக்கு இத்தகைய மரணங்கள் புதிதல்ல. இம்மாவட்டத்தில் மாதம் 60 குழந்தைகள் வீதம் தொடர்ந்து மரணமடைந்து வருகின்றன.

   பச்சிளங்குழந்தைகள் மட்டுமல்லாது அண்மையில் சத்தீஸ்கர் மாநில அரசாங்கத்தால் நடத்தப்பட்ட கருத்தடை அறுவை சிகிச்சையின்போது, போலி மருந்துகள் பயன்படுத்தபட்டதால் 12 தாய்மார்கள் உயிரிழந்தனர். இதில் மேலும் ஒரு அதிர்ச்சி என்னவெனில், கருத்தடை அறுவை சிகிச்சிசையின் போது தாய்மார்கள் உயிரிழப்பதில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது என்பதுதான்.

   ஊழல் குற்றவாளி “ஜெயா”வின் எடுபிடி முதலமைச்சரான பன்னீர்செல்வமோ, தருமபுரி அரசு மருத்துவமனை சிகிச்சையில் எந்தவிதமான குறைபாடும் இல்லை, எடைக் குறைவு போன்ற காரணங்களால் ஏற்பட்ட இயற்கையான மரணம்தான் என்று பச்சிளங்குழந்தைகளின் மரணத்தை நியாயப்படுத்தியுள்ளார். ஆனால் பெண்கள், குழந்தைகள் பராமரிப்பிலும், தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கைகளிலும் தமிழகம் 25 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்ற உண்மையை தமிழக அரசு வெளியிட்டுள்ள மாவட்ட ரீதியான குடும்பக் கணக்கெடுப்பு ஆய்வு அறிக்கையே கூறுகிறது. 2007-2008ஆம் ஆண்டுகளில் 81 சதவீதம் குழந்தைகளுக்குத் தடுப்பூசி மருந்துகள் கொடுக்கப்பட்டது. அது தற்போது 56 சதவீதமாக வீழ்ச்சியடைந்துவிட்டது. அம்மை நோய்த் தடுப்பு மருந்து 0.1 சதவீதத்திலிருந்து உயர்ந்து 2 சதவீத குழந்தைகளுக்கு கொடுக்கப்படவில்லை. பேறு காலத்திற்கு முந்தைய தாய்மார்களின் பராமரிப்பு 98 சதவீதத்திலிருந்து 90 சதவீதமாகக் குறைந்துவிட்டது என்று அந்த அறிக்கை கூறுகிறது. தருமபுரி குழந்தைகள் அரசுப் பொதுமருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் குழந்தைகள் நல மருத்துவரே இல்லை. 72 குழந்தைகளுக்கு 6 செவிலியர்களும், 3 இன்ங்குபேட்டர்களுமே இருந்தன. மருத்துவ மனைகளில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்துகள், இன்ங்குபேட்டர் போன்ற மருத்துவ உபகரணங்கள் இல்லாததும், தாய்மார்களுக்கு ஊட்டச் சத்தின்மையும்தான் தாய்-சேய் மரணங்களுக்குக் காரணம்.ஆனால் தமிழக முதல்வரும் அதிகாரிகளும் உம்மையை மூடிமறைக்கின்றனர்.

  தாய்-சேய் மரணங்கள் தமிழகத்தில் மட்டுமல்ல, இது ஒரு நாடுதழுவிய பிரச்சினையாகும். பச்சிளங் குழந்தைகளின் மரணம் நாடு முழுவதும் சராசரியாக 1000 குழந்தைகளுக்கு 42 ஆகவும், மத்திய பிரதேசத்தில் 56 ஆகவும், கேரளத்தில் 10 ஆகவும், தமிழகத்தில் 21 ஆகவும் மரணமடைகின்றன. குழந்தைகள் மரணமடைவதில் உலகிலேயே இந்தியாதான் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் ஒரு ஆண்டில் 5 வயதுகுட்பட்ட 16 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன. இதில் குறைப்பிரசவத்தில் பிறந்த பச்சிளங்குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 7,79,000 ஆகும். நாடு முழுவதும் அதிகரித்து வரும் இத்தகைய அவல நிலைக்கு காரணம் என்ன?

   அரசு மருத்துவ மனைகளில் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களின் அலட்சிய போக்கு கள்தான் தாய்-சேய் மரணங்களுக்கு காரணம் என்பது உண்மை அல்ல. மாறாக, மத்திய,மாநில அரசுகள் மருத்துவம், சுகாதாரம் போன்ற துறைகளில் அமல்படுத்திவரும் தனியார்மய, வணிகமய, தாராளமயக் கொள்கைகள்தான் அதிகரித்துவரும் தாய்-சேய் மரணங்களுக்கு உண்மையான காரணங்களாகும்.

   ஏகாதிபத்திய பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள், மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை எடுப்பதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விலக்கிவைத்து விட்டு, ஏழை நாடுகளில் செயல்படுத்தப்படும் பொது சுகாதாரத் திட்டங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும் என நிர்ப்பந்திக்கின்றன. பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்கள் பொதுத்துறை–தனியார் பங்கேற்புத் திட்டத்தை (Public Private Partnership) முன்வைக்கின்றன. ஏழை நாடுகளின் அரசு நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைப் பயன்படுத்திக்கொண்டு புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்கான மருந்துப்பொருட்கள் அபிவிருத்தித் திட்டங்களையும், ஏழை நாடுகளைச் சார்ந்த மக்களை சோதனைச் சாலை எலிகளாகவும், இந்தியாவை மருந்துகளைப் பரிசோதனை செய்யும் களமாகவும் மாற்றுகின்றன. இந்திய அரசு இத்தகைய நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து மருத்துவம் சுகாதாரம் போன்ற துறைகளை தனியார்மயம், வணிகமயத்திற்குத் திறந்துவிடுகிறது. மருத்துவத் துறையில் தனியார்மயம், வணிகமயம் ஆகியவை மருத்துவக் கட்டமைப்பை தகர்த்துவருகின்றன. 

தனியார்மயமும், வணிகமயமும் - மருத்துவக் கட்டமைப்புத் தகர்வும்

   மத்திய, மாநில அரசுகள் நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி மருத்துவத் துறையில் தனியார்மயம், வணிகமயத்தை ஊக்குவிப்பதால் மருத்துவக் கட்டமைப்புத் தகர்கின்றன. மருத்துவமனைப் பணிகளுக்குப் போதுமான பணியாளர்கள் இல்லை. மருத்துவமனை பணிகளுக்கு ஒப்பந்த முறைகள், அயல்பணி ஒப்படைப்பு மூலம் தகுதியில்லாத செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். தமிழகத்தில் “ஏக்கம்” (EKAM) என்ற தொண்டுநிறுவனம் அயல்பணி ஒப்படைப்பு முறைகள் ஆகியவற்றின் மூலம் பணிகளைச் செய்து வருகிறது. 

    இன்று இந்தியா முழுவதும் அரசு மருத்துவமனைகளில் - 76 சதவீதம் மருத்துவர்கள், 53 சதவீதம் செவிலியர்கள் (நர்சுகள்), 88 சதவீதம் சிறப்பு மருத்துவர்கள், 85 சதவீதம் தொழில்நுட்ப பணியாளர்கள், பரிசோதனைப் பிரிவில் 80 சதவீதம் ஊழியர்கள் - பற்றாக்குறை நிலவுகிறது என திட்டக்கமிஷன் அறிக்கையே கூறுகிறது. மேலும் அரசு மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துகள் கொள்முதல் செய்யப்படுவதுமில்லை. போதுமான மருத்துவ உபகரணங்களும் இல்லை. அத்துடன் காப்பீட்டுத் திட்டம், கட்டணப் பிரிவுகள் தொடங்குவதன் மூலம் அரசுப் பொதுமருத்துவமனைகள் படிப்படியாக தனியார் மயமாக்கப்படுகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் “முத்துலட்சுமி பேறு காலத் திட்டமும்” சீரழிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு தனியார்மய, வணிகமயக் கொள்கைகளால் மருத்துவர்களற்று, மருந்துகளற்று சீரழியும் அரசு மருத்துவமனைகள் பச்சிளங்குழந்தைகளின் மரணக்கிடங்குகளாக மாறிவருகின்றன. 

தாராளமயக் கொள்கைகளும் - மருத்துவத்துறையில்
பன்னாட்டுக் கம்பெனிகளின் கொள்ளையும்

   இந்திய அரசாங்கம் பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மருத்துவத் திட்டங்கள் மற்றும் மருந்து உற்பத்தி போன்றத் திட்டங்களை திறந்துவிடுகிறது. எயிட்ஸ் ஒழிப்பு, காச நோய்த் தடுப்பு, குடும்பக் கட்டுப்பாடு, தாய்-சேய் நலத்திட்டம் போன்ற திட்டங்கள் அமெரிக்காவின் பில்கேட்ஸ் அறக்கட்டளையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில் மருந்து தயாரிப்புத் தொழிலில் அன்னிய நேரடி முதலீடு 100 சதவீதமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக இந்திய மருந்து நிறுவனங்கள் மீது பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கம் பெருகிவருகிறது. மருந்துகளின் காப்புரிமைச் சட்டத்தை திருத்துவதன் மூலமும் மருந்துகளின் விலைக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் (NPPA) அதிகாரத்தை வெட்டுவதன் மூலமும் பன்னாட்டுக் கம்பெனிகளின் வேட்டைக்காடாக இந்தியாவின் மருந்துச் சந்தை மாற்றப்பட்டுவருகிறது. இந்தியாவின் மருந்துச் சந்தையின் விற்றுமுதலோ ஆண்டிற்கு ரூ.92,000 கோடியாகும். 

இந்தியாவில் தங்களது மருந்துகளுக்குக் காப்புரிமைப் பெற்றுள்ள ஜப்பானைச் சார்ந்த ஒட்டுஸ்கா (Otuska), அமெரிக்காவின் பிரிஸ்டல் மையர்ஸ் ஸ்கியூப் (BMS) மற்றும் ஸ்விஸ் நாட்டின் நோவார்ட்டிஸ் (Novartis) போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் தங்களது மருந்துகளை சந்தைக்கு கொண்டுவராமல் பல ஆண்டுகளாக இழுத்தடித்து வருகின்றன. இதனால் புற்றுநோய், எச்.ஐ.வி, மஞ்சள் காமாலை, காச நோய் போன்றவற்றுக்கான மருந்துகளின் விலையை பன்மடங்கு உயர்த்துகின்றன. உதாரணமாக எய்ட்ஸ் நோய்க்கான மருந்தின் விலை ஒரே வருடத்தில் 2000 டாலர்கள் அளவுக்கு உயர்த்தியுள்ளன. இவ்வாறு தாராளமயக் கொள்கைகளால் உயிர்காக்கும் மருந்துகள் ஏழை எளிய மக்களுக்கு எட்டாக்கனிகளாக மாறிவிட்டது.

பன்னாட்டுக் கம்பெனிகள் இந்திய மக்களைப் புதிய மருந்துகளைப் பரிசோதனை செய்யும் எலிகளாகப் பயன்படுத்துகின்றன. நோயாளிகளுக்குத் தெரியாமலே அவர்களுக்குச் சோதனை மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. மேலும் மேற்கத்திய நாடுகளில் கடும் பக்க விளைவுகளை உண்டாக்குவதால் விற்பனையாகாமல் கிடக்கும் மருந்துகளைப் பெயர்மாற்றம் செய்து கொண்டுவந்து இந்தியச் சந்தையில் விற்கின்றன. இவ்வாறு இந்தியாவில் புற்று நோய்க்கான மருந்தை சோதனை செய்ததில் மட்டும் 6000 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளின் சோதனைகளால் ஆயிரக்கணக்கான இந்திய மக்கள் மாண்டுவருகின்றனர். மருத்துவத் துறையில் பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கம் பல இலட்சம் ஏழைஎளிய தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் மரணத்தையே பரிசாக வழங்கிவருகிறது. 

தாய்மார்களின் ஊட்டச்சத்தின்மையும் குழந்தைகள் மரணமும்

  கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய தாய்மார்களின் ஊட்டச்சத்தின்மை குறைப்பிரசவங்களுக்கும் குழந்தைகள் மரணத்திற்கும் மற்றொரு காரணமாகும். இந்திய அரசாங்கம் செயல்படுத்திவரும் புதியகாலனிய வேளாண்மைக் கொள்கைகள் வேளாண்மைத் துறையை கடும் நெருக்கடியில் தள்ளியுள்ளது. விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டு மாளவும் பட்டினியால் சாகும் நிலைக்கும் தள்ளியுள்ளது. விவசாயிகளின் தற்கொலைக்கும், பட்டினிச் சாவுகளுக்கும் எந்தக் கொள்கைகள் காரணமோ அதே கொள்கைகள்தான் ஏழைத் தாய்மார்களின் ஊட்டச்சத்தின்மைக்கும், குறைப்பிரசவங்களுக்கும் குழந்தைகள் மரணத்திற்கும் காரணமாக உள்ளன. கிராமப்புறங்களில் அரசியல் பொருளாதார ஒடுக்குமுறைகளுடன் சமூக ரீதியான சாதிய ஒடுக்குமுறைகளும் தொடர்கின்றன. இந்த சாதிய பாகுபாடுகள் ஒடுக்கப்பட்ட சாதினரை மருத்துவ சுகாதார துறைகளில் கடுமையாக பாதிக்கிறது. 

     மறுபுறம் சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக ஏகாதிபத்தியவாதிகள் உலக அளவில் உணவு, தண்ணீர், எரிபொருட்களின் விலைகளைக் கடுமையாக உயர்த்துகின்றனர். அதன் விளைவாக அத்யாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்து ஏழை எளிய தாய்மார்கள் சத்துள்ள உணவு பெறமுடியாத அளவிற்கு தள்ளப்பட்டு, ஊட்டச்சத்தின்மைக்கு ஆளாகிவருகின்றனர். அண்மையில் தமிழக அரசு பால்விலையை ரூ.10 உயர்த்தியுள்ளதும் தாய்-சேய் நலன்களுக்கு எதிரானதே. சந்தைப் பொருளாதாரக் கொள்கைகள் ஏழை எளிய மக்கள் மீது ஒரு பொருளாதாரத் தாக்குதலைத் தொடுத்து ஏழைகளையே ஒழித்து வருகிறது. இவ்வாறு சந்தைப் பொருளாதாரம் தாய்-சேய் மரணங்களை அதிகரித்துவருகிறது. 

தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை எதிர்ப்போம்!

    மத்தியில் ஆட்சியைப் பிடித்துள்ள மோடி கும்பல், புதிய தாராளமயக் கொள்கைகளை செயல்படுத்தி அன்னிய மூலதனத்திற்குச் சேவை செய்வதிலும் மக்களின் மீது பொருளாதார நெருக்கடிகளின் சுமைகளைச் சுமத்துவதிலும் காங்கிரஸ் கட்சியையும் விஞ்சி செயல்பட்டுவருகிறது. ஆண்டுக்கு 5 லட்சம் கோடி ரூபாயை பன்னாட்டு உள்நாட்டுப் பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு மானியங்களாகவும் சலுகைகளாகவும் வாரிவழங்கிவிட்டு மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை குறைக்கின்ற கொள்கைகளை மோடி ஆட்சி தொடர்கிறது. இவ்வாண்டு பட்ஜெட்டில் நிர்ணயித்த இலக்கை வரிவசூலில் எட்டமுடியாத நிலையில் மக்கள் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதியை மீண்டும் வெட்டுகிறது. கல்விக்கான ஒதுக்கீட்டில் ரூ.11,000 கோடியும், பஞ்சாயத்துராஜ், கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டங்களுக்கு ஒதுக்கியதில் 25 சதவீதத்தையும், சுகாதாரத் துறைக்கு ஒதுக்கியதில் ரூ.7,000 கோடியையும் வெட்டியுள்ளது. மோடி ஆட்சியின் இத்தகைய கொள்கைகள் தாய்-சேய் மரணத்தை அதிகரிக்கவே உதவும். சந்தைச் சக்திகளின் நலன்களுக்காக ஏழை எளிய மக்களைப் பலிகொடுக்கும் துரோகத்தை மோடி கும்பல் செய்துவருகிறது.

   ஜெயலலிதாவின் எடுபிடி பன்னீரின் தமிழக ஆட்சி, மக்கள் நலத்திட்டங்களைப் புறக்கணித்து வருவதே மருத்துவமனையில் குழந்தைகள் மரணமடைவதற்குக் காரணமாகும். தாய்மார்களுக்குப் பேறுகாலத்திற்கு முந்தைய, பிந்தைய பராமரிப்புப் பணிகள் சீரழிந்துவருவதன் காரணமாகவே ஊட்டச்சத்தின்மையும், குறைப்பிரசவமும் நிகழ்கின்றன. தமிழகத்தில் மாறிமாறி வருகின்ற எந்த ஒரு ஆட்சியும் “சூப்பர் ஸ்பெஷாலிட்டி” மருத்துவமனைகள் அமைப்பதில் கவனம் செலுத்தி, ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளைப் புறக்கணித்து வருகின்றன. தமிழகத்தில் இயங்கிவரும் 500 அங்கன்வாடி மையங்கள் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளின்றி சீரழிவைச் சந்திக்கின்றன. அத்துடன் குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்டத்திற்கு முட்டை வாங்குவதிலும் மாபெரும் ஊழல் என பத்திரிக்கைகள் கூறுகின்றன. சாராய விற்பனையின் மூலம் நாட்டுமக்களை ஒட்டச் சுரண்டி, அரசாங்கத்தை நடத்திவருகிற அ.தி.மு.க. அரசு இலவசத் திட்டங்களைக் காட்டித் தனது மக்கள் விரோத நடவடிக்கைகளை மறைத்துக்கொள்கிறது. மருத்துவம், சுகாதாரம் போன்ற அடிப்படை மக்கள் நலத்திட்டங்களை புறக்கணித்துத் தாய்-சேய் மரணங்களுக்கு சாட்சியாகத் திகழ்கிறது. ‘அம்மா’வின் இலவசத் திட்டங்கள் ஏழைஎளியவர்களின் குழந்தைகளை சுடுகாட்டுக்கு அனுப்பும் திட்டமாக மாறிவிட்டது.

   எனவே நாட்டில் பெருகிவரும் தாய்-சேய் மரணங்களைத் தடுத்து நிறுத்த, மருத்துவம், சுகாதாரம் மக்களுக்கு முழுமையாகக் கிடைத்திடத் தனியார்மய, தாராளமய, வணிகமயக் கொள்கைகளை எதிர்த்துப் போராடவும் குழைந்தைகளைப் பறிகொடுத்துப் பாதிக்கப்பட்டுள்ளக் குடும்பங்களுக்கு இழப்பீடு கோரியும் கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள அறைகூவி அழைக்கிறோம்.

  • சமூக, பொருளாதார நிலைமைகளில் கீழ்நிலையில் உள்ள ஏழை கர்ப்பிணிப் பெண்களின் குழந்தைகளே மரணமடைகின்றன!
  • தனியார்மய, வணிகமயமாக்கலால்...
                  ·       மருத்துவக் கட்டமைப்புத் தகர்வு !
                  ·      ஒப்பந்த, அயல் பணி ஒப்படைப்பு முறையில் மருத்துவர்,           
                       செவிலியர் நியமனம்!
                  ·      மருத்துவரற்ற, மருந்துகளற்ற மருத்துவ மனைகள்!
  • தாராளமயக் கொள்கைகளால்
                 ·       மருந்து உற்பத்தியில் பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கம்!
                 ·       உயிர்காக்கும் மருந்துகள் கூட மக்களுக்கு எட்டாக்கனி!
  • மக்கள் நல்வாழ்வுக்கு அரசு நிதி ஒதுக்க மறுப்பதே சுகாதாரக் கேட்டிற்கும் மருத்துவ மனை அவங்களுக்கும் காரணம்!
  • குழந்தைகளை இழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கு!
  • மக்களுக்கு மருத்துவம் அளிக்கும் கடமையை அரசு கைவிடுவதை எதிர்ப்போம்!
  • மக்களை மாய்க்கும் தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை எதிர்ப்போம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
தமிழ்நாடு
டிசம்பர், 2014

No comments:

Post a Comment

விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.