Saturday, July 11, 2015

இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சி நாட்டை அமெரிக்காவின் புதியகாலனிய களமாக மாற்றுவதை எதிர்த்து அணிதிரள்வோம்!



இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சி
நாட்டை அமெரிக்காவின் புதியகாலனிய களமாக மாற்றுவதை எதிர்த்து அணிதிரள்வோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!

நரேந்திரமோடி தலைமையில் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந் ததை பெரும் சாதனையாக அக்கட்சி நாடு முழுவதும் கொண்டாடு கிறது. ஆனால் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் கடைப்பிடித்த நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்க ஆதரவு மற்றும் புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் புதிய தாராளக் கொள்கைகளைத்தான் மூர்க்கத் தனமாக அமல்படுத்தி வருகிறது. அது மென்மேலும் நாட்டின் அரசியல் பொருளாதார நெருக்கடிகளை தீவிரப் படுத்தியே வருகிறது. “நல்ல காலம் வருகிறது”, பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு, ஊழலற்ற ஆட்சி என்ற வாக்குறுதிகளெல்லாம் பகற் கனவாய் போய்விட்டன. “டிஜிட்டல் இந்தியா”, “ஸ்கில் இந்தியா”, “மேக் இன் இந்தியா” என்ற பேரில் நாடு அந்நிய மூலதனத்தின் பிடியில், குறிப்பாக அமெரிக்காவின் புதிய காலனிய களமாக மாற்றப்படுகிறது. அந்நிய மூலதனத்தை ஈர்த்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பது என்ற கனவு கலைந்துவிட்டது. நாட்டின் பொருளாதாரம் பேரழிவை நோக்கிப் பயணிக்கிறது. பங்குச் சந்தை வேகமாக சரிந்துகொண்டு வருகிறது. ரூபாயின் மதிப்பும் அதலபாதாளத்தை நோக்கி வீழ்ச்சியடைகிறது. மோடியை நம்பிய கார்ப்பரட்டுகளே “நல்ல காலம் வருமா” என்ற சந்தேகத்தை எழுப்புகின்றனர். மோடி ஆட்சி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்திற்குச் சேவை செய்வது, புதிய தாராளக் கொள்கைகளை அமல்படுத்தி நாட்டை அமெரிக் காவின் புதிய காலனியாக மாற்றுவது, இந்துத்துவப் பாசிசத்தைக் கட்டியமைத்து இந்திய அரசை பாசிச மயமாக்குவது ஆகிய மூன்று பேரபாயத்தில் நாட்டை நிறுத்தியுள்ளது.