Wednesday, September 9, 2015

செப்டம்பர் 12, தியாகிகள் நினைவு நாள்! தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!!


செப்டம்பர் 12, தியாகிகள் நினைவு நாள்!
தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!!

அமெரிக்க மேலாதிக்கத்திற்குச் சேவை செய்யும்
இந்துத்துவப் பாசிச மோடி, ஜெயா ஆட்சியில்
நாடு ஓட்டாண்டி ஆவதும்,
மத, சாதிவெறிக் கலவரங்கள்
தலைவிரித்தாடுவதுமான அவலங்கள்!

அவலங்களை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட
தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ
நாடாளுமன்றவாத எதிர்க் கட்சிகள்
மாற்றுத் திட்டத்துடன்
ஒன்றுபட முடியாத கையாலாகாத்தனம்!

அவலநிலையைப் போக்க
அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்தும்,
மத, சாதிவாத பாசிசத்தை எதிர்த்தும்
அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து
மக்கள் ஜனநாயக அரசமைக்க அணிதிரள்வோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!

       செப்டம்பர் 12, நக்சல்பாரிப் புரட்சித் தோழர் பாலன், அன்றைய பாசிச எம்.ஜி.ஆர். ஆட்சியில் படுகொலை செய்யப்பட்ட நாள். அந்நாளை, தோழர்கள் சாரு மஜூம்தார், எல்.அப்பு போன்ற தலைவர்கள் உள்ளிட்டு இந்தியாவின் புதிய ஜனநாயகப் புரட்சிக்காகப் போராடி உயிர் நீத்த அனைத்து புரட்சித் தியாகிகளின் நினைவைப் போற்றும் நாளாகவும், அவர்களின் கனவை நனவாக்க உறுதி ஏற்கும் நாளாகவும் கடைப்பிடித்து வருகிறோம்.

இந்துத்துவப் பாசிச பா.ஜ.க. மோடி தலைமையிலான மத்திய ஆட்சியும், ஜெயலலிதா தலைமையிலான மாநில ஆட்சியும் அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்குச் சேவை செய்யும் கொள்கைகளையும், நாட்டை அமெரிக்காவின் புதிய காலனிய சுரண்டல் களமாக மாற்றுகின்ற உலகமய, தனியார்மயக் கொள்கைகளையும் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன. “வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பேரால் அமல்படுத்தப்படும் இத்தகைய தேசத்துரோகக் கொள்கைகள் உலக முதலாளித்துவ நெருக்கடிகளின் சுமைகளை மக்கள் மீது சுமத்துகின்றன. புதியகாலனிய தாராளக் கொள்கைகளால் நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வேலையின்மை அதிகரிப்பு, விவசாயிகள் தற்கொலை, மதவெறி, சாதிவெறிக் கலவரங்கள் என வரலாறு காணாத அவலங்கள் தலைவிரித்தாடுகின்றன. இவ்வாறு மோடி ஆட்சியில் மதவாத, சாதிவாதப் பாசிசம் தலைவிரித்தாடுகிறது.