செப்டம்பர் 12, தியாகிகள் நினைவு நாள்!
தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!!
அமெரிக்க மேலாதிக்கத்திற்குச்
சேவை செய்யும்
இந்துத்துவப் பாசிச மோடி, ஜெயா
ஆட்சியில்
நாடு ஓட்டாண்டி ஆவதும்,
மத, சாதிவெறிக் கலவரங்கள்
தலைவிரித்தாடுவதுமான அவலங்கள்!
அவலங்களை எதிர்த்து காங்கிரஸ்
உள்ளிட்ட
தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ
நாடாளுமன்றவாத எதிர்க் கட்சிகள்
மாற்றுத் திட்டத்துடன்
ஒன்றுபட முடியாத கையாலாகாத்தனம்!
அவலநிலையைப் போக்க
அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்தும்,
மத, சாதிவாத பாசிசத்தை எதிர்த்தும்
அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து
மக்கள் ஜனநாயக அரசமைக்க அணிதிரள்வோம்!
அன்பார்ந்த
உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!
செப்டம்பர்
12, நக்சல்பாரிப் புரட்சித் தோழர் பாலன், அன்றைய பாசிச எம்.ஜி.ஆர். ஆட்சியில் படுகொலை
செய்யப்பட்ட நாள். அந்நாளை, தோழர்கள் சாரு மஜூம்தார், எல்.அப்பு போன்ற தலைவர்கள் உள்ளிட்டு
இந்தியாவின் புதிய ஜனநாயகப் புரட்சிக்காகப் போராடி உயிர் நீத்த அனைத்து புரட்சித் தியாகிகளின்
நினைவைப் போற்றும் நாளாகவும், அவர்களின் கனவை நனவாக்க உறுதி ஏற்கும் நாளாகவும் கடைப்பிடித்து
வருகிறோம்.
இந்துத்துவப் பாசிச பா.ஜ.க. மோடி தலைமையிலான மத்திய
ஆட்சியும், ஜெயலலிதா தலைமையிலான மாநில ஆட்சியும் அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்குச்
சேவை செய்யும் கொள்கைகளையும், நாட்டை அமெரிக்காவின் புதிய காலனிய சுரண்டல் களமாக மாற்றுகின்ற
உலகமய, தனியார்மயக் கொள்கைகளையும் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன. “வளர்ச்சி, முன்னேற்றம்” என்ற பேரால் அமல்படுத்தப்படும்
இத்தகைய தேசத்துரோகக் கொள்கைகள் உலக முதலாளித்துவ நெருக்கடிகளின் சுமைகளை மக்கள் மீது
சுமத்துகின்றன. புதியகாலனிய தாராளக் கொள்கைகளால் நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி வீழ்ச்சி,
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வேலையின்மை அதிகரிப்பு, விவசாயிகள் தற்கொலை, மதவெறி, சாதிவெறிக்
கலவரங்கள் என வரலாறு காணாத அவலங்கள் தலைவிரித்தாடுகின்றன. இவ்வாறு மோடி ஆட்சியில் மதவாத,
சாதிவாதப் பாசிசம் தலைவிரித்தாடுகிறது.
உலக முதலாளித்துவ
நெருக்கடி மக்கள் மீது திணிப்பு
2008ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட முதலாளித்துவப்
பொருளாதார மிகை உற்பத்தி நெருக்கடி உலகம் முழுவதும் பரவி ஆழப்பட்டு வருகிறது. அமெரிக்கப்
பொருளாதாரம் மீட்சியடையும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது; கிரீஸ் உள்ளிட்ட பல
நாடுகள் திவாலாகி ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பது; உலகப்
பொருளாதார மீட்சிக்கு உந்துசக்தி என்று கருதப்பட்ட சீனா, இந்தியா போன்ற நாடுகளின் உற்பத்தி
விகிதம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைவது போன்ற காரணங்களால் உலக முதலாளித்துவ நெருக்கடி
மீளமுடியாத புதைகுழியில் மூழ்கிவருகிறது.
அண்மையில் ஆகஸ்ட் 24ல் உலக பங்குச் சந்தை கடும்
வீழ்ச்சியை சந்தித்து மீண்டும் ஒரு கருப்புத் திங்களாக மாறியது. அதற்கு சீனாவைக் குற்றம்
சுமத்துகின்றனர். உண்மையில் சர்வதேச அளவில் அமெரிக்காவின் டாலர் மேலாதிக்கத்தை எதிர்த்த
சீனாவின் செயல்பாட்டை முடக்க தனது ஆசிய பசிபிக்
திட்டத்தின் அடிப்படையில் சீனப் பொருளாதாரத்தைச் சிதைப்பதற்காக ஷாங்காய் பங்குச் சந்தையிலிருந்து
அமெரிக்கா தனது மூலதனத்தை சந்தை மோசடிகள் மூலம் வெளியேற்றியது. அதற்குப் பதிலாக சீனா
தனது யுவான் நாணயத்தின் மதிப்பைக் குறைத்து பதிலடி கொடுத்தது. எனவே அமெரிக்காவிற்கும்
சீனாவிற்கும் இடையில் நடக்கும் வர்த்தகப் போரின் விளைவே இந்த நெருக்கடியாகும். யுவான்
நாணயத்தின் மதிப்புக் குறைப்பால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் பங்குச் சந்தையில்
ஒரே நாளில் 5 டிரில்லியன் டாலர்கள் நட்டம் ஏற்பட்டது. இந்தியாவில் மும்பை பங்குச் சந்தையில்
1654 புள்ளிகள் சரிவடைந்து ரூ. 7 லட்சம் கோடி நட்டத்தை சந்தித்தது.
உலகப் பொருளாதார நெருக்கடி இந்தியாவைக் கடுமையாக
பாதித்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறையுமென மார்கன் ஸ்டாலின் என்ற அமெரிக்க
நிறுவனம் கணித்திருக்கிறது. “வெளித் தேவைகள் குறைந்து வருவது (உலகசந்தை) மற்றும் அரசின்
மறு வினியோகக் கொள்கைகளால் கிராமப்புற நுகர்வு விகிதம் குறைந்துவருவது (கிராமப்புற
வறுமை அதிகரிப்பு)போன்ற காரணங்களால் வளர்ச்சி விகிதம் பின்னடைவைச் சந்திப்பதாக அந்தக்
கணிப்பு கூறுகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி வீழ்ச்சி, ஏற்றுமதியைவிட இறக்குமதி
அதிகரித்து வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்பது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 67 ரூபாயாக குறைந்து போவது போன்ற காரணங்களைக் காட்டி
மூடி (விஷீஷீபீஹ்) என்ற சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனம் இந்தியப் பொருளாதாரம் குறித்து
அபாய மணியை அடித்துவிட்டது. அதன் விளைவாக இந்தியாவிலிருந்து அந்நிய மூலதனம் நாட்டை
விட்டு வெளியேறுவது அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் 24 அன்று மட்டும் 700 மில்லியன் டாலர்கள்
வெளியேறியது. அற்ற குளத்து அறுநீர்ப் பறவை போல் அன்னிய மூலதனம் எனும் “ஹாட்” மணி நாட்டை விட்டு பறந்தோடுவதால்
நாடு கடும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்கிறது.
அன்னிய நிதிமூலதனக் கும்பல்கள் பங்குச் சந்தைச்
சூதாட்டத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை சிதைப்பதோடு நேரடி முதலீடுகள் மூலம் உள்நாட்டுத்
தொழில்களை அழித்து வேலைவாய்ப்பையும் பறித்துவருகின்றன. உலகப் பொருளாதார நெருக்கடியின்
தாக்கத்தால் இந்தியாவில் ஆலைகள் மூடல், கதவடைப்பு, உற்பத்தி முடக்கம் ஆகியவை பரவலாக
நடக்கின்றன. நாடுமுழுவதும் பதிவு செய்யப்பட்ட 13.7 லட்சம் கம்பெனிகளில் 19 சதவீத கம்பெனிகள்,
2014 டிசம்பர் மாதம் வரை மூடப்பட்டுவிட்டன. மாருதி, நோக்கியா, பாஸ்கான் போன்ற தொழிற்சாலைகளும்
மூடப்பட்டுவிட்டன. இதனால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
முதலாளித்துவ வாதிகளின் கருத்துப்படி புதிய தாராளக்
கொள்கைகளை அமல்படுத்தியதால் உற்பத்தி வளர்ச்சி விகிதம் சராசரியாக 8.5 சதவீதமாக உச்சத்தில்
இருந்த 2004-05லிருந்து 2009-10 வரையிலான காலக் கட்டத்திலேயே வேலை வாய்ப்பு வளர்ச்சி
விகிதம் 2.7 சதவீதத்திலிருந்து 0.7 சதவீதமாக சரிந்துவிட்டது. கடந்த 20 ஆண்டுகளில் மத்தியப்
பொதுத்துறை நிறுவனங்களில் 19,00,000 பேருக்கான வேலை வாய்ப்புகளும் மாநிலப் பொதுத்துறை
நிறுவனங்களில் 75,000 பேருக்கான வேலைவாய்ப்புகளும் வெட்டிச் சுருக்கப்பட்டுள்ளன. மறுபுறம்
ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடியே முப்பது லட்சம் பேர் வேலை வாய்ப்புச் சந்தையில் நுழைகின்றனர்.
வேலை வாய்ப்பு குதிரைக்கொம்பாக மாறிவிட்டது. பெரியளவில் வேலைவாய்ப்பு வழங்கிய ஐ.டி.
துறையிலும் வேலைவாய்ப்பு சுருங்கி வருகிறது.
ஆனால் மோடி கும்பலோ அன்னிய மூலதனமே நாட்டின் வளர்ச்சிக்கு
வழி என்று கூறி ஆளும் தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் நலன்களுக்காக
அன்னிய முதலீட்டாளர்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கி சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கிறது.
மூலப் பொருட்களையும், மனித உழைப்பையும் மலிவான விலைக்கு வழங்குவதோடு இந்தியாவின் பெரும்
சந்தையையும் திறந்துவிடுகிறது. இதன் மூலம் ஏகாதிபத்தியவாதிகளின் நெருக்கடிக்கு தோள்
கொடுப்பதோடு நெருக்கடிகளின் சுமைகளை தொழிலாளர்கள், விவசாயிகள் மீது திணிக்கிறது.
பொதுத்துறை
நிறுவனங்கள் தாரைவார்ப்பு
மோடி அரசாங்கம் திவாலாகிப் போன அமெரிக்காவின் நிதிநிறுவனங்களுக்கு
இரையாக இந்திய நாட்டின் இலாபமீட்டக் கூடிய வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் 76 சதவீதம்
திறந்துவிடுகிறது. நிதி பற்றாக்குறையைத் தீர்ப்பது என்ற பேரில் பொதுத்துறைப் பங்குகளை
ரூ. 42,000 கோடிக்கு மிகவும் மலிவாக விற்றுவிடத் திட்டமிட்டுள்ளது. ஓ.என்.ஜி.சி., நெய்வேலி
நிலக்கரி கழகம், கெயில் போன்ற நிறுவனங்களின் பங்குகளை பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத்
தாரைவார்க்கிறது. மேலும் இரயில்வே, துறைமுகங்கள் அனைத்தையும் அந்நியருக்குத் திறந்துவிடுகிறது.
நிலக்கரிச் சுரங்கங்கள், இரும்புச் சுரங்கங்கள் போன்ற இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும்
பன்னாட்டுக் கம்பெனிகள் கைப்பற்றுவதற்கான சுற்றுச் சூழல் தடைகளை அகற்ற அச்சட்டத்தைத்
திருத்தியுள்ளது. அண்மையில் 69 எண்ணெய் எரிவாயு வயல்களை ஏலம் விடுவதின் மூலம் பன்னாட்டு,
உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்ப்பதென முடிவு எடுத்துள்ளது. இவ்வாறு
இந்திய நாட்டின் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்களை எல்லாம் ஏகாதிபத்திய வாதிகளின் இலாப
வேட்டைக்கு திறந்துவிட்டுள்ளது.
உழைப்புச்
சுரண்டல்
மோடி ஆட்சி “இந்தியாவில் தயாரிப்பது” (Make in India) என்ற
திட்டத்தின் மூலம் அந்நிய மூலதனத்தைக் கவர்வது, “இலகுவாகத் தொழில் செய்வதற்கு” (Ease of doing business)
ஏற்ற நாடு என்ற தரச்சான்றைப் பெறுவது என்றபேரால் தொழிலாளர் சட்டங்களைத் திருத்தி தொழிலாளர்களைக்
கொத்தடிமைகளாக மாற்றத் துடிக்கிறது.
தொழிற்சங்கச் சட்டம், தொழிற்சாலை நிலையாணைச் சட்டம்,
தொழில் தகராறு சட்டம், அப்பரண்டிஸ் நியமனம், ஓய்வூதியம், வைப்பு நிதி, காப்பீடு தொடர்பான
சட்டங்கள் ஆகியவை அந்நிய முதலீடுகள் வருவதற்கு தடை என்று கூறி அவற்றை திருத்த முயற்சிக்கிறது.
இத்தகைய சட்டத் திருத்தங்கள் மூலம் “அமர்த்து - துரத்து” (Hire and Fire)
என்பதை சட்டபூர்வமாக மாற்றுகிறது.
40 தொழிலாளர்கள் வரை வேலை செய்யும் நிறுவனங்களுக்கு
இ.எஸ்.ஐ., பி.எப். உள்ளிட்ட சட்டங்கள் பொருந்தாது; 300 தொழிலாளர்கள் வரை வேலை செய்யும்
நிறுவனத்தில் கதவடைப்பு செய்ய, தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்ப அரசாங்கத்தின் அனுமதி
பெறத் தேவையில்லை; ஒரு தொழிற்சாலையில் மொத்த தொழிலாளர்களில் 30 சதவீதத்தினரின் ஆதரவு
இருந்தால்தான் தொழிற்சங்கம் தொடங்கமுடியும்; 14 வயதுக்குட்பட்ட சிறார்களை பெற்றோர்களின்
தொழிலில் ஈடுபடுத்தலாம் என்று சட்டங்களைத் திருத்துகிறது. அதாவது நிரந்தர வேலையை ஒழிப்பது,
காண்டிராக்ட் முறையைப் புகுத்துவது, எட்டு மணி நேர வேலைநாளை 12 மணி நேர வேலை நாளாக
உயர்த்துவது, தொழிற்சங்க உரிமையைப் பறிப்பது என தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை
எல்லாம் பறித்து அவர்களைக் கொத்தடிமைகளாக மாற்றுகிறது. பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகள்
மலிவு விலையில் கூலி உழைப்பைச் சூறையாடி கொள்ளை லாபமடைய உத்திரவாதமளிக்கிறது.
நில அபகரிப்புச்
சட்டம்
கார்ப்பரேட் நலன்களையே பொது நலனாகச் சித்தரித்து
விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்தும் சட்டத்தை 1894 காலனிய சட்டத்தின் தொடர்ச்சியாக
ஒரு சட்டத்தை காங்கிரஸ் கட்சி 2013ல் கொண்டு வந்தது. அந்தச் சட்டம் விவசாயிகளுக்கு
சில சலுகைகளை வழங்கியிருந்தது. ஆனால் மோடியின் பா.ஜ.க. கொண்டுவந்த சட்டமோ நிலங்களைக்
கையகப்படுத்துவதற்கு விவசாயிகளின் ஒப்புதல் பெறத் தேவையில்லை என்றும் விவசாயிகள் நட்ட
ஈடு கேட்டு நீதிமன்றத்தைக் கூட அணுகமுடியாத அளவிற்கு 1894 காலனியச் சட்டத்தை விட ஒரு
கொடிய சட்டத்தைக் கொண்டுவந்தது. காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகளின் கூட்டணி நாடாளுமன்றத்தில்
இச்சட்டத் திருத்தத்தை எதிர்த்ததாலும், மாநிலங்களவையில் பா.ஜ.க.வுக்கு போதிய பலம் இல்லாததாலும்
அதை அவசரச் சட்டமாக மூன்றுமுறை பிறபித்தது. ஆனால் தற்போது அச்சட்டத் திருத்தத்தைக்
கைவிடுவதாகவும், இனி நாடாளுமன்றத்தில் நிலம் சம்பந்தமான சட்டத் திருத்தத்தை கொண்டுவரப்
போவதில்லை எனவும் திடீரென மோடி அறிவித்துள்ளார்.
மோடியின் இந்த அறிவிப்பு பின்வாங்கலாக பார்க்க முடியாது.
மாறாக பதுங்குவதாகத்தான் பார்க்க முடியும். ஆனால் தேர்தல் நோக்கத்துக்காக மோடி அரசு
நிலம் கையகப் படுத்தலை ஆறப் போடுவதைப் பெரும் கார்ப்பரேட்டுகள் கடுமையாக எதிர்க்கின்றன.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் நிதி அமைச்சர் அருண்ஜேட்லி பதிலளிக்கும்போது “2013 சட்டம்
அமலில் உள்ளது. நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தத்திற்கு அரசியல் முட்டுக்கட்டை
என்ற நிலைமை மாறவில்லை. இச்சூழலில் மாநில அரசுகள் இச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து
செயல் படுத்தலாம். நிலம் கையகப்படுத்துதல் என்ற பிரச்சினை மத்திய மாநில அரசுகளின் பொது
அதிகாரப் பட்டியலில் வருகிறது. மத்தியச் சட்டத்துடன் முரண்பட்டால் மாநில அரசு சட்டப்பேரவையில்
அந்தச் சட்டத்துக்கு திருத்தம் செய்து தன்னுடைய மாநிலத்தில் செயல் படுத்தலாம். அதற்கு
குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்றால் போதும்” என்று கூறுகிறார். முதலில் தாங்கள் ஆளும்
மாநிலங்களில் இத்தகைய சட்டத்தைக் கொண்டுவந்து பின்னர் மாநிலங்களுக்கிடையில் போட்டியை
உருவாக்குவதன் மூலம் கார்ப்பரேட்டுகளின் நிலக் கொள்ளைக்குச் சேவை செய்கிறது. ஏற்கனவே
இச்சட்டத்தைப் பல மாநில அரசுகள் நடைமுறைப் படுத்துவதற்கான வேலைகளைத் துவங்கிவிட்டது.
அத்துடன் காங்கிரஸ் கட்சியை விடவும் கூடுதல் சலுகைகளை அறிவித்து பீஹார் உள்ளிட்டு மே.வங்கம்,
அசாம், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் போன்ற மாநிலத் தேர்தல்களில் வெற்றி பெற்று
மாநிலங்களவையில் தமது பலத்தைக் கூட்டிக்கொள்ள மோடி கும்பல் திட்டம்போட்டுள்ளது. அப்படிப்
பெரும்பான்மை பெற்றுவிட்டால் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மட்டுமல்ல வேறு எந்த ஒரு
சட்டத்தையும் அது அமல்படுத்தமுடியும். எனவே மோடி கும்பல் 100 “ஸ்மார்ட் சிட்டி” உருவாக்குவது என்ற திட்டத்தின்படி
பன்னாட்டுக் கம்பெனிகளும் அம்பானி, அடானி, டாட்டா போன்ற உள்நாட்டு கார்ப்பரேட்டுகளும்
நிலங்களைக் கொள்ளையடிப்பதற்குச் சாதகமாக கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறது.
தலைவிரித்தாடும்
விவசாயிகளின் தற்கொலைகள்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதும், பிரச்சாரத்தின்
போதும் “விவசாயிகளுக்கு நல்ல காலம்” காத்திருக்கிறது என மோடி உறுதிமொழி அளித்தார்.
வேளாண்மைத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு, விவசாயிகளின் உற்பத்திச் செலவில் பாதி லாபம்
கிடைப்பதற்கு உத்திரவாதம், மகாத்மாகாந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு
அதிக நிதி ஒதுக்கீடு செய்வதன் மூலம் விவசாயிகளின் தற்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்
என்று மோடி வாக்குறுதி அளித்தார்.
ஆனால் மோடி ஆட்சிக்கு வந்தவுடன் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன்
சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நீட்டித்து வேளாண்மையில் கார்ப்பரேட்மயத்தை தீவிரமாக
அமல் படுத்துகிறது. அத்துடன் விவசாயத்துக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்தல், விவசாயிகளுக்கான
மானியத்தை வெட்டுதல், உணவுக் கொள்முதல் மற்றும் பாதுகாப்புத் திட்டங்களை கைவிடுதல்,
குறைந்தபட்ச ஆதரவு விலைகளைக் கைவிடுதல் ஆகியவற்றின் மூலம் விவசாயத்துறையைச் சீரழிக்கிறது.
மோடியின் ஓராண்டு ஆட்சியில் வேளாண்துறை வளர்ச்சி 3.7 சதவீதத்திலிருந்து வெறுமனே
0.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்து விட்டது.
சுதந்திர வர்த்தகம் என்ற பேரால் வேளாண் விளைப் பொருட்களும்
சர்வதேச சந்தையோடு இணைக்கப்பட்டதால், போட்டிபோட முடியாமல் ரப்பர், பருத்தி, சணல், பட்டு,
டீ போன்ற பணப்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் பெரும் நட்டத்தைச் சந்திக்கின்றனர்.
கரும்பு ஆலைகள் விவசாயிகளுக்கு ரூ. 21,000 கோடி நிலுவை வைத்திருக்கும்போது மோடி அரசாங்கம்
ஆலை முதலாளிகளுக்கு ரூ.10,400 கோடி வட்டியில்லாக் கடன் வழங்குகிறது. அத்துடன் அவர்களுக்குச்
சர்க்கரை ஏற்றுமதிக்கு டன் ஒன்றுக்கு ரூ. 3,000 மானியத்தையும் வழங்குகிறது. நெல் சாகுபடி
விவசாயிகளின் துயரமோ சொல்லி மாளாது. இவ்வாறு விவசாயிகள் நட்டமடைந்து கந்துவட்டிக் கடனுக்குள்ளாகி
தற்கொலை செய்துகொள்வது மோடி ஆட்சியில் அதிகரித்து வருகிறது.
பா.ஜ.க. ஆளும் மாநிலமான மகாராஷ்டிராவில் விவசாயிகளின்
தற்கொலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. அரியானா, பஞ்சாப், குஜராத், மே.வங்கம், கர்நாடகா,
தெலுங்கானா, ஆந்திரா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின்
பெரும்பகுதிகளின் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்துவருகிறது. மோடி ஆட்சியோ விவசாயிகளையும்,
விவசாயத் தொழிலாளர்களையும் பிரித்துக்காட்டுவதன் மூலம் தற்கொலை எண்ணிக்கையை குறைத்துக்
காட்டுகிறது. காதல் தோல்வியும், குழந்தையின்மையும் தான் விவசாயிகளின் தற்கொலைக்குக்
காரணம் என்று கொச்சைப்படுத்தி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறது. மோடி கும்பலின்
“ஆண்மையற்ற புதிய காலனிய வேளாண் கொள்கைகள்” விவசாயிகளைச் சுடுகாட்டுக்கு அனுப்புகிறது.
இவ்வாறு மோடியின் காலம் விவசாயிகளுக்கு இருண்ட காலமாக மாறியுள்ளது.
இந்து
மதவாத, சாதிவாதப் பாசிசம் தலைவிரித்தாடுகிறது
மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமல்படுத்தி வரும்
தேசத்துரோக, மக்கள் விரோதக் கொள்கைகளால் இந்த ஆட்சி மக்கள் மத்தியில் மிகவிரைவாக அம்பலப்பட்டுப்
வருகிறது. மோடியின் செல்வாக்கு பெருமளவில் சரிந்துவிட்டது. ஊழலை ஒழிப்பதாக கூறி ஆட்சிக்கு
வந்த மோடி - வியாபம் ஊழல், லலித் மோடி ஊழல், குஜராத்தில் மீன்பிடிப்பு ஏல ஊழல் என பா.ஜ.க.
வினரின் மாபெரும் ஊழல்கள் குறித்து - தற்போது
மௌனகுருவாக மாறிவிட்டார். மோடிகும்பல் நாட்டை அமெரிக்காவின் புதியகாலனியாக மாற்றும்
தேசத் துரோகத்தை மூடிமறைக்கவும், ஆட்சிக்கு எதிரான மக்களின் போராட்டங்களை திசைதிருப்பவும்
மக்களைப் பிளவுபடுத்தவும் இந்து தேசியம் பேசி இந்து மதவெறியைக் கட்டவிழ்த்து விடுகிறது.
மோடி கும்பல் ஆட்சி அமைத்ததிலிருந்தே ஆர்.எஸ்.எஸ்.
பரிவாரங்கள் இந்துத்துவப் பாசிசக் கலவரங்களைத் திட்டமிட்டு நடத்திவருகின்றன. பகவத்
கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், நாட்டில் உள்ள எல்லோரும் இந்து மதத்திற்கு மாறவேண்டும்,
இராமனை ஏற்காதவர்கள் முறைதவறிப் பிறந்தவர்கள், மாட்டுக் கறிக்கு தடை மீறினால் ஆயுள்தண்டனை
வழங்கும் சட்டம் என சிறுபான்மை மதத்தினர் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதியினர் மீது தாக்குதலைத்
தொடுக்கிறது. மோடியின் 300 நாள் ஆட்சியில் 600 மதக் கலவரங்கள் நடந்துள்ளன. பீகாரில்
தாழ்த்தப்பட்ட மக்கள் 148 பேரைப் படுகொலை செய்தத்தில் பா.ஜ.க.வுக்கு தொடர்புண்டு என்பது
அம்பலப்பட்டுள்ளது. மேலும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் கடவுள் மறுப்புச் சிந்தனையாளர்களையும்
சமூக-சமயச் சீர்திருத்த ஆய்வாளர்களையும் படுகொலை செய்கிறது. அண்மையில் கன்னட அறிஞர்
கல்புர்க்கி கொலை செய்யப்பட்டார். ஏற்கனவே கோவிந் பன்சாரே, நரேந்திர தபோல்கர் போன்றவர்களை
படுகொலை செய்தனர். அடுத்து கே.எஸ்.பகவானை கொலைசெய்யப்போவதாக மிரட்டியுள்ளனர். தமிழகத்தில்
பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் இந்து மதவாத, சாதிவாதப் பாசிச சக்திகளால் மிரட்டப்பட்டு
விரட்டப்பட்டுள்ளார்.
ஒருபுறம் சுதந்திர தின உரையில் மோடி, “மத வெறிக்கும்,
சாதிவெறிக்கும் இடம் கிடையாது”
என கதைக்கிறார். மறுபுறம் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் இஸ்லாமிய, கிறிஸ்துவ சிறுபான்மை
மதத்தினருக்கு எதிராக நடத்தும் தாக்குதல்களுக்கு மௌன சாட்சியாகத் திகழ்கிறார். அத்துடன்
இன்றைய வேலைவாய்ப்பில்லாத சூழ்நிலையில் வேலை வாய்ப்புக்கான போட்டி கடுமையாக மாறியுள்ளது.
இதை பயன்படுத்திக் கொண்டு உயர்சாதி மற்றும்
பிற்படுத்தப்பட்ட சாதிய இயக்கங்கள் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு எதிரான கலவரங்களை நடத்திவருகின்றன.
ஹர்திக் தலைமையிலான பட்டேல் ஜாதிக் கட்சி, ஜாட் சாதி கட்சி போன்ற உயர்சாதி கட்சிகள்
நடத்தும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான எதிர்ப் புரட்சிகர பிற்போக்கான போராட்டத்திற்கு
ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் ஆதரவளிக்கின்றன. தமிழகத்தில் இராமதாசு தலைமையிலான “அனைத்து
சமுதாய மக்கள் பாதுகாப்பு பேரவை”
போன்ற பிற்படுத்தப்பட்ட சாதிவெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தும் சாதிவெறித்
தாக்குதல்களுக்கு இந்துமதவாத அமைப்புகள் துணைபோகின்றன. மோடி கும்பல் இத்தகைய மதக் கலவரங்களையும்,
சாதிக் கலவரங்களையும் மக்களின் போராட்டங்களைத் திசை திருப்பவும், பிளவுபடுத்தவும் பயன்படுத்துகிறது.
இவ்வாறு மோடி ஆட்சியில் மதவாத, சாதிவாத பாசிச அவலங்கள் தலைவிரித்தாடுகிறன.
ஜெயலலிதா
ஆட்சியில் பெருகிவரும் அவலங்கள்
தமிழகத்தை ஆளும் ஜெயலலிதாவோ உலகமய, தனியார்மய கொள்கைகளை
அமல்படுத்துவதில் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறார். அன்னிய மூலதனத்தை கவர்வதற்கு உலகைச்
சுற்றிவர உடல்நிலை ஒத்துழைக்காததால் ரூ. 100 கோடி செலவு செய்து முதலீட்டாளர்கள் மாநாட்டை
சென்னையில் நடத்தி ஒரு லட்சம் கோடி முதலீட்டைக் கவரப் போவதாக கூறுகிறார். ஸ்டாலினோ
இம்மாநாட்டை நடத்துவதற்குத் தாமதமானதற்காக வேதனைப்படுகிறார். இந்த ஒரு லட்சம் கோடி
முதலீட்டிற்காக எங்கெங்கே யார்யார் நிலத்தைப் பறிக்கப் போகிறார்களோ! விவசாயிகளின் கதி
அதோகதிதான்.
ஜெயலலிதா ஆட்சி மதவாதப் பாசிசத்திற்கும், சாதிவெறிப்
பாசிசத்திற்கும் துணைபோகிறது. சாதியக் கலவரங்கள் குறித்த தேசியக் குற்றச் செயல் பதிவு
நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி சாதியக் கலவரத்தில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக
தமிழகம் இரண்டாவது இடத்திலும், மதக் கலவரத்தில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. மக்களை
இலவச போதையிலும், சாராய போதையிலும் ஆழ்த்தினால் மட்டும் தமது ஆட்சியின் அவலங்களிலிருந்து
அவர்களைத் திசை திருப்பமுடியாது என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்துள்ளர் ஜெயலலிதா.
ஊழல் வழக்கில் சிறை செல்லாமல் மகுடம் சூட்டிக் கொள்வதற்காக மட்டும் இந்துத்துவப் பாசிச
சக்திகளுக்கு துணை போகவில்லை. மாறாக அவரே இந்துத்துவச் சித்தாந்தங்களில் ஆழ்ந்த நம்பிக்கை
உடையவர்தான். எனவேதான் இந்துத்துவப் பாசிச சக்திகளுக்கும், சாதிவாதச் சக்திகளுக்கும்
தமிழகத்தை இரையாக்குகிறார்.
சமூக நீதி பேசிய திராவிடக் கட்சிகள் ஒருபுறம் மதவாதத்திற்கு
சாமரம் வீசுவதிலும் மறுபுறம் சாதிவெறிக்கு உரம் போடுவதிலும் போட்டிபோடுகின்றன. மதவெறி,
சாதிவெறிக் கலவரங்களில் தமிழகம் குஜராத்தாக மாற்றப்படும் அபாயமும் அவலமும் அதிகரித்துவருகிறது.
இந்தி,
ஆங்கில ஆதிக்கம்
இந்துத்துவ பா.ஜ.க., ஆட்சி மத்தியில் அமைந்தபிறகு
சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழியைத் திணிப்பதற்கான முயற்சியை தீவிரமாக்கியுள்ளது. தற்போது
வெளியுறவு அமைச்சர் ஐ.நா. சபையின் அலுவல் மொழியாக இந்தியை அறிவிப்பதற்காக உலக நாடுகளின்
ஆதரவைத் திரட்டப் போவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் பா.ஜ.க. அரசு அரசியல் சட்டத்தின்
எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்துத் தேசிய மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்க
மறுத்து இந்தி மொழியைத் திணிக்கிறது. இந்தி மொழியை ஏற்கும் வரை ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம்
என்ற நேருவின் வாக்குறுதி, பிறமொழிப் பேசுவோர் மீது இந்தி, ஆங்கில மொழிகளைத் திணிக்கப்
பயன்படுகிறது. பிறமொழிப் பேசும் மக்களை இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றுகிறது.
இந்தி எதிர்ப்புப் பேசும் திராவிடக் கட்சிகளோ இந்திக்குப்
பதிலாக தமிழை முன்நிறுத்தவில்லை. மாறாக ஆங்கிலத்தையே முன்னிறுத்துகின்றன. ஜெயலலிதா
அரசாங்கம் 2012-13ல் கல்வி ஆண்டிலிருந்து அரசுப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம்
வகுப்பு வரை ஆங்கிலத்தை பயிற்றுமொழியாகக் கொண்ட பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும் என்று
முடிவெடுத்துச் செயல்படுத்துகிறது. அண்மையில் தமிழ்நாடு அரசு “தமிழ்நாட்டில் இன்னமும்
பல அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பிலும் மற்ற வகுப்புகளிலும் ஆங்கில வழிக் கல்வியை
தொடங்கவில்லை, ஒரு பள்ளி கூட விடாமல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உடனடியாக ஆங்கிலவழிக்
கல்வியை தொடங்கவேண்டும்”
என்று கல்வி அதிகாரிகளுக்குக் கடுமையான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அரசுப் பள்ளிகளில்
ஆங்கிலம் என்பது ஏழை மக்களுக்கு ஒரு வாய்ப்பு என்று ஆங்கிலத் திணிப்பை நியாயப்படுத்துகிறது.
ஆங்கிலம் படித்தால்தான் வேலை என்பதும் ஒரு மாபெரும் மோசடியாகும். எனவே அ.தி.மு.க. அரசாங்கம்
ஆங்கிலத்துக்கு ”கட் அவுட்டும்”,
தமிழுக்கு ”கெட் அவுட்டும்”
சொல்லி அரசுப் பள்ளிகளில் தமிழுக்குச் சமாதிகட்டுகிறது. தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கைகளை
எதிர்த்துப் போராடுவது உடனடி அவசியமாகும்.
ஈழத் தமிழருக்கு
எதிரான அமெரிக்காவின் துரோகம்
ஈழத் தமிழின அழிப்புப் போரின் இறுதி யுத்தத்தில்
இராஜபட்சே கும்பலுக்கு அமெரிக்காவும், இந்தியாவும் துணைபோயின. ஆனால் போர் முடிந்த பிறகு
இன அழிப்புப் போர்க் குற்றவாளி இராஜபட்சேவை தனது மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவர ஐ.நா.
மனித உரிமை ஆணையத்தில் போர் குற்றத்திற்கான சர்வதேச விசாரணையை அமெரிக்கா கோரியது. ஆரம்பத்தில்
இக்கோரிக்கையை ஏற்க மறுத்த இந்தியா பின்னர் அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு சர்வதேச
விசாரணை கோரியது.
தற்போது இராஜபட்சே ஆட்சி வீழ்ந்த பிறகு, இலங்கையில்
அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு ஆதரவாக சிங்கள இன வெறிக் கட்சிகளின் கூட்டணி ஆட்சி
அமைந்த பிறகு, அமெரிக்க ஏகாதிபத்தியம், இராஜபட்சே மீதான போர்க்குற்றத்திற்கு சர்வதேச
விசாரணை தேவையில்லை என்றும் இலங்கை அரசே அந்த விசாரணையை நடத்திக் கொள்ளலாம் எனவும்
போர்க்குற்றவாளி இராஜபட்சே கும்பலுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. மேலும் இலங்கையில்
ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்ததாலோ, தமிழர் கூட்டணித் தலைவர்
சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி ஏற்றதாலோ சிங்கள இனவெறி அரசின் இன அழிப்பு
நடவடிக்கைகள் தடுக்கப்படவில்லை. இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன. எனவே, அமெரிக்க
இந்திய அரசுகளின் துரோகத்தை எதிர்த்து போர்க்குற்றவாளி இராஜபட்சே மீது சர்வதேச விசாரணை
கோரியும், கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பின் மூலம் ஈழத் தமிழின அழிப்புக்கு நிரந்தரத்
தீர்வுகாண வேண்டியும் தமிழ் மக்கள் குரல் எழுப்ப வேண்டும்.
பாராளுமன்ற
முடக்கமும் எதிர்க் கட்சிகளின் கையாலாகாத்தனமும்
மோடி கும்பலின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்திருத்த
மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் தலைமையில் ‘இடது’சாரிகள் மற்றும் தி.மு.க. போன்ற கட்சிகள் இணைந்து
மாநிலங்களவையில் அதைத் தாக்கல் செய்யவிடாமல் தடுத்தன. பின்னர் பா.ஜ.க.வின் புகழ்மிக்க
வியாபம் ஊழல் மற்றும் லலித்மோடி ஊழலுக்கு காரணமான பா.ஜ.க.வின் முதல்வர்களும் வெளியுறவு
அமைச்சரும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கடந்த மழைக்கால கூட்டத்தொடர் முழுவதையும்
நடத்தவிடாமல் காங்கிரஸ் கட்சி பாராளுமன்றத்தை முடக்கியது. இதே போன்று சென்ற ஆட்சியில்
பா.ஜ.க. முடக்கியதை எடுத்துக்காட்டி காங்கிரஸ் கட்சி நியாயப்படுத்துகிறது. இவ்வாறு
இவ்விரண்டு கட்சிகளும் நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கின்ற எந்த ஒரு சட்டத்திருத்தத்தையும்,
புதிய காலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலேயே
நிறைவேற்றுவதை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளன. அவ்வாறு விவாதிப்பது நாட்டு மக்கள் மத்தியில்
விழிப்புணர்வையும் எதிர்ப்பையும் உருவாக்கும் என தெரிந்தேதான் இப்படிச் செயல்படுகின்றன.
பாராளுமன்றத்தை முடக்குகின்ற காங்கிரஸ் கட்சியிடமோ,
அல்லது பிற ‘இடது’சாரிகள்
உள்ளிட்ட மாநில அளவிலான தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ கட்சிகளிடமோ, மோடி ஆட்சி
அமல்படுத்திவரும் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளுக்கு மாற்றான ஒரு திட்டம் இல்லை. அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் புதியகாலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து அண்மைக் காலங்களில்
உலகின் பல நாடுகளில் கீன்சியப் பொருளாதார சமூகநல அரசு என்ற சீர்திருத்தக் கொள்கைகள்
மாற்றாக முன்வைக்கப்படுகிறன. அத்தகைய ஏகாதிபத்திய ஆதரவு சீர்திருத்தக் கொள்கைகளைக்
கூட இக்கட்சிகள் முன்வைக்கத் தயாரில்லை. பா.ஜ.க.வின் இந்துத்துவக் கொள்கைகளுக்கு மாற்றாகவோ,
சாதிவாதத்திற்கு மாற்றாகவோ காங்கிரஸ் கட்சியிடம் எந்த ஒரு மாற்றுத் திட்டமும் இல்லை.
மாறாக காங்கிரஸ் கட்சியும் அதே கொள்கைகளை அமல்படுத்திய கட்சிதான். எனவேதான் இக்கட்சிகளால்
ஒரு மாற்றுத் திட்டத்தை முன்வைத்து ஒரு அரசியல் கூட்டணியை உருவாக்கவும் முடியவில்லை.
அண்மையில் பீகாரில் பா.ஜ.கவுக்கு எதிரான “மெகா” கூட்டணியிலிருந்து முலயாம் வெளியேறியதே அதற்கு
உதாரணமாகும். “கமண்டலத்துக்கு”
எதிரான “மண்டல்” கட்சிகளின்
ஒற்றுமை கானல் நீராகவே உள்ளது. இடது, வலது போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகளோ காங்கிரசின்
வாலாக மாறுவதைத் தவிர வேறு எந்த ஒரு திட்டத்தினையும் பெற்றிருக்கவில்லை.
பா.ஜ.க.வைப் பொறுத்தவரை மாநிலங்களவையில் பெரும்பான்மை
இல்லாததால் நாடாளுமன்றம் முடக்கப்பட்டு எந்த ஒரு சட்டத்தையும் நிறைவேற்ற முடியாத ஒரு
அரசியல் நெருக்கடியைச் சந்திக்கிறது. மாநிலக் கட்சிகளோடு உடன்பாடு காண்பதின் மூலமாகவோ
அல்லது நடக்க இருக்கின்ற சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்று மாநிலங்களவையில் தனது
பலத்தைப் பெருக்கிக்கொள்வதன் மூலமாகவோ இந்த நெருக்கடியிலிருந்து மீள முயற்சிக்கிறது.
மேலும், இது எதுவொன்றும் நிறைவேறவில்லை என்றால் இலங்கையில் சுதந்திராக் கட்சியும்,
ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது போல, பா.ஜ.க.வும், காங்கிரசும்
தேசிய அரசு என்ற திட்டத்தின் கீழ் கூட்டணி ஆட்சி அமைப்பதுவும் நடக்கலாம். எனவே பாசிச
அபாயம் நாட்டை சூழ்ந்துவருகிறது.
புதிய
ஜனநாயகப் புரட்சியே உண்மையான மாற்று
அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கும், புதியகாலனிய
ஆதிக்கத்திற்கும் சேவை செய்யும் மோடி ஆட்சியின் கொள்கைகளை எதிர்த்தும், ஏகாதிபத்தியப்
பொருளாதார நெருக்கடிகளை மக்கள் மீது சுமத்துவதை எதிர்த்தும், வேலையின்மை, விவசாயிகளின்
தற்கொலை மற்றும் சாதி, மதவெறிக் கலவரங்களை எதிர்த்தும் தொழிலாளி வர்க்கத் தலைமையில்
விவசாயிகளும், அனைத்துச் சாதி உழைக்கும் மக்களும் - சிறுபான்மை மதத்தினரும் விடுதலையையும்,
ஜனநாயகத்தையும் வென்றெடுக்கும் மக்கள் ஜனநாயக அரசமைப்பதற்கு ஓரணியில் திரள்வதே உண்மையான
மாற்றாகும். புரட்சியின் மூலம் அமையும் அத்தகைய ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசுதான் நாட்டின்
இன்றைய அவலங்களுக்கு முடிவுகட்டும். எனவே அத்தகைய நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு
உடனடியாக மோடி அரசாங்கத்தின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் மற்றும் தொழிலாளர்கள் சட்டங்களைத்
திருத்துவதை எதிர்த்தும்; மதவெறி, சாதிவெறிக் கலவரங்களைத் தடுத்து நிறுத்துவதற்காகவும்; அமெரிக்க ஏகாதிபத்தியமும், இந்திய அரசும் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கும் துரோகத்தை எதிர்த்தும்
ஒத்த கருத்துடைய பல்வேறு புரட்சிகர, ஜனநாயக இயக்கங்களும், அனைத்துச் சாதி உழைக்கும்
மக்களும், சிறுபான்மை மதத்தினரும் ஓரணியில் திரண்டுபோராட தியாகிகள் நினைவு நாளில் உறுதி
ஏற்குமாறு அறைகூவி அழைக்கிறோம்.
மக்கள்
ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
செப்டம்பர் 2015
No comments:
Post a Comment
விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.