பா.ஜ.க. அரசே! கார்ப்பரேட் நலன்களுக்கான நிலங்களைக் கையகப்படுத்தும் சட்டத்தைத் திரும்பப்பெறு!
அன்பார்ந்த
உழைக்கும் மக்களே, ஜனநாயகவாதிகளே!
இந்துத்துவப்
பாசிச மோடி அரசாங்கம், கடந்த ஐ.மு. கூட்டணி அரசாங்கம் கொண்டுவந்த கார்ப்பரேட் நலன்களுக்கான
“நிலம் கையகப்படுத்தும் சட்டம்-2013” சட்டத்தைத் திருத்தி, அதைவிட ஒரு கொடிய சட்டத்தை
நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றி யுள்ளது. ஆனால் அச்சட்டத்திற்கு மாநிலங்களவையில்
பெரும்பான்மை பெற முடியாத நிலையில் கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பியுள்ளது. எப்படியாவது
அச்சட்டத்தை நிறைவேற்றிவிட வேண்டும் என மோடி கும்பல் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறது.
மன்மோகன்
தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசாங்கம் கொண்டுவந்த சட்டமானாலும் அல்லது தற்போது மோடி தலைமையிலான
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் கொண்டுவந்துள்ள சட்டமானாலும் இச்சட்டங்கள் அனைத்தும்
பிரிட்டிஷ் காலனியாட்சியாளர்கள் “பொதுநலன்” என்ற பேரில் இந்திய நாட்டின் வளங்களைக் கொள்ளையடிப்பதற்காகக்
கொண்டு வந்த “1894-நிலம் கையகப்படுத்தும் சட்டம்” என்ற காட்டு மிராண்டிச் சட்டத்தின் தொடர்ச்சியே
யாகும். அச்சட்டத்தின்படி அரசுக்கோ, அரசின் ஆதரவு பெற்றவர்களுக்கோ நிலம் தேவைப்படுமானால்
உடனே நிலம் கையகப்படுத்தப்படும். அரசு கொடுக்கும் இழப்பீடு போதவில்லை என்றால் மட்டும்தான் நீதிமன்றத்திற்குப் போகமுடியும். அங்கேயும்
இழப்பீட்டை அதிகரித்துக் கேட்க முடியுமே ஒழிய, நிலம் கையகப்படுத்தியதைத் தடுக்க முடியாது.
இச்சட்டம் காலனிய ஆட்சிக்குப் பிறகும் தொடர்ந்தது.
சிறப்புப்
பொருளாதார மண்டலங்களும் அவைகளின் தோல்வியும்
மன்மோகன்
சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் அந்நிய மூலதனத்திற்கு ஆதரவாக, இரண்டாம்
கட்டச் சீர்திருத்தம் என்ற பேரால் ஏகாதிபத்திய உலகமய, தனியார்மயக் கொள்கைகளைத் தீவிரமாக
அமல்படுத்தியது. கார்ப்பரேட் நலன்களையே “பொதுநலன்” எனச் சித்தரித்து 1894 சட்டத்தைத் திருத்தி
விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தி அதை பன்னாட்டு, உள்நாட்டுக்
கார்ப்பரேட்டுகளுக்கு “சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்” என்ற பேரில் தாரைவார்த்துக் கொடுத்தது.
இவ்வாறு
தொழில் வளர்ச்சி என்ற பேரால் வழங்கப்பட்ட நிலங்களைப் பன்னாட்டுக் கம்பெனிகளும், உள்நாட்டுத்
தரகுப் பெரும் முதலாளிகளும் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். வணிக நடவடிக்கைகள் மூலம்
கொள்ளை லாபம் அடைந்துள்ளனர். சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காகக் கையகப்படுத்தப்பட்ட
45,635.63 ஹெக்டேர் நிலத்தில் 28,488.49 ஹெக்டேர் நிலங்கள் மட்டுமே, அதாவது 50 சதவீத
நிலங்கள் மட்டுமே செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. மீதி 50 சதவீத நிலங்கள் தரிசாகவே
கிடக்கின்றன. செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலங்களிலும் பெரும்பகுதி நிலங்கள்
ரியல் எஸ்டேட்டுகளுக்காகத் திருப்பி விடப்பட்டுள்ளன.
பல்லாயிரக்கணக்கான
ஏக்கர் நிலங்களை அபகரித்துக் கொண்ட கார்ப்பரேட்டுகள் குறிப்பாக அம்பானி, அதானி, டாட்டா
போன்ற தரகுப் பெரும் முதலாளிகள் அவற்றை ரியல் எஸ்டேட்டுகளாக்கி விற்றிருப்பது அம்பலமாகி
உள்ளது. நவி மும்பையில் அம்பானி கையகப்படுத்திய 1250 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படவே
இல்லை. மும்பை தொழில்வளர்ச்சிக் கழகத்திடம் 2.5 லட்சம் ஏக்கர், ஆந்திராவில் 50,000
ஏக்கர், உ.பி.யில் 17,000 ஏக்கர், குஜராத்தில் 54,000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுப்
பயன்படுத்தப்படாமல் தரிசாகவே கிடக்கின்றன.
புதியகாலனிய
தாசர்களான காங்கிரஸ் ஆட்சியாளர்கள் நாடெங்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்க
மலிவுவிலையில் விவசாயிகளின் நிலங்களை வழங்கியுள்ளதோடு அங்கே தொழில் தொடங்குகின்ற அந்நியக்
கம்பெனிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு வரிவிலக்கு அளித்ததோடு, அந்த வளாகங்களில் தொழிற்சங்கச்
சட்டங்கள், தொழிற்சங்க உரிமைகள் செல்லாது என்று கூறி மலிவான கூலி உழைப்பைக் கொள்ளையிடவும்
வழிவகுத்துக் கொடுத்தனர்.
இவ்வளவு
சலுகைகள் வழங்கப்பட்ட பிறகும் நாட்டில் தொழில்வளர்ச்சி பெருகவில்லை. சிறப்புப் பொருளாதார
மண்டலங்கள் தோல்வியைத் தழுவின. அந்நிய முதலீடு குவியும், வேலை வாய்ப்புப் பெருகும்,
பொருளாதாரம் செழிக்கும் என்பதெல்லாம் பகற்கனவாக முடிந்தது. மாறாக சிறப்புப் பொருளாதார
மண்டலங்களில் தொடங்கப்பட்ட தொழிற்சாலை முதலாளிகள் அரசாங்கத்தின் சலுகைகளை பெற்றுக்
கொண்டதுடன், அரசுக்கு செலுத்த வேண்டிய பல்லாயிரம் கோடி ரூபாய் வரிகளையும் ஏமாற்றிவிட்டனர்.
இவ்வாறு 2004-2010 ஆண்டுகளில் அரசுக்கு வர வேண்டிய 1,74,487 கோடி ரூபாய் வரி விட்டுக்
கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நோக்கியா, பாஸ்கான் போன்ற பல தொழிற்சாலைகள் பல்லாயிரம்
கோடி வரியை ஏமாற்றியதோடு தொழிற்சாலைகளுக்கும் மூடுவிழா நடத்திவிட்டு வெளியேறிவிட்டன.
தொழிலாளர்கள் வீதியில் தூக்கியெறியப் பட்டனர். சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் நோக்கம்
நிறைவேறாமல் அவை தோல்வியைத் தழுவின. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தோல்வியடைந்துவிட்டன
என்பதை இந்திய அரசின் கணக்குத் தணிக்கை அதிகாரியே (சி.ஏ.ஜி) அறிவித்துள்ளார்.
நாட்டின்
பொதுவான பொருளாதார வீழ்ச்சிக்கும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் தோல்விக்கும்
காரணங்கள் என்ன?
முதலாவது
காரணம்: இந்திய அரசு கடைப்பிடித்துவரும் அந்நிய மூலதனச்சார்பு, ஏற்றுமதி சார்ந்த ஏகாதிபத்திய
உலகமய புதியதாராளக் கொள்கைகளுமாகும். ஏகாதிபத்திய நெருக்கடிக்கு உலகமய, தனியார்மயக்
கொள்கைகள் தீர்வளிக்கவில்லை. 2008-ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட முதலாளித்துவ மிகு
உற்பத்தி நெருக்கடி உலகம் முழுவதும் பரவி பொருளாதார மந்த நிலை தொடர்கிறது. கிரீஸ் உள்ளிட்ட
ஐரோப்பாவின் பல நாடுகள் திவாலாகி மக்களின் வாங்கும் சக்தி வீழ்ந்துவிட்டது. அது இந்தியாவையும்
பாதித்துள்ளது. இத்தகைய சூழலில் தங்களது இலாபவிகிதங்களைத் தக்க வைத்துக்கொள்ள, பெரும்
கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆட்சியாளர்களைப் பயன்படுத்திக்கொண்டு உழைக்கும் வர்க்கங்களின்
மீது தாக்குதல் நடத்துவதோடு, ரியல் எஸ்டேட் மற்றும் பங்குச் சந்தைகள் போன்ற ஊகவாணிபத்தில்
முதலீடு செய்து சொத்துக்களைக் குவிப்பது பன்மடங்கு பெருகிவருகிறது. இன்று உலகின் மொத்த
செல்வத்தில் 50-சதவீதத்தை மேல்மட்டத்தில் உள்ள ஒரு சதவீதத்தினர் குவித்துவைத்துள்ளனர்.
உலகில் 300 கோடிப் பேர் ஒரு நாளைக்கு நூறு ரூபாய் கூட வருமானமின்றி வாழ்கின்றனர். அது
வாங்கும் சக்தியைக் குறைத்து சந்தையை ஒழித்துவிட்டது. எனவேதான் முதலீடு உற்பத்தியில்
ஈடுபடாமல் ஊகவாணிபமே பெருகிவருகிறது. மேலும் ஏகாதிபத்தியப் பன்னாட்டுக் கம்பெனிகள்
இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் மணல், கிரானைட், மரக் கடத்தல்கள் மூலம் முதலாளித்துவத்திற்கு
முந்தைய முறைகள் மூலம் சூறையாடுவது பன்மடங்கு அதிகரித்து வருகிறது.
பன்னாட்டு,
உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகள் ஊகவாணிபத்தில் ஈடுபடுவது, அப்பட்டமாக இயற்கை வளங்களைச்
சூறையாடுவது ஆகியவற்றின் மூலம் மட்டுமே சொத்துக்களைக் குவிக்கவில்லை. அரசாங்கம் சமூகநலத்
திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் நிதிகளை மடைமாற்றிக் கொள்வது, வைப்புநிதிகளைச் சூறையாடுவது,
தொழிற் சாலைகளை மூடுவது, லே-ஆப் செய்வது, கூலியைக் குறைப்பது, கட்டமைப்புத் துறைகளுக்கான
நிதி ஒதுக்கீடுகளை குறைப்பதுப் போன்றவைகள் மூலமும் பல டிரில்லியன் டாலர்களை நட்ட ஈடு,
ஊக்கத் தொகை என்ற பேரிலும் பொது நிதியைப் பறித்துக்கொள்கின்றன. இவ்வாறு, கார்ப்பரேட்டுகள்
தங்கள் கைகளில் குவியும் பணத்தை உற்பத்தியில் ஈடுபடுத்திப் பொருளாதாரத்தை வளர்ப்பதற்குப்
பதிலாக பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் போன்ற ஊகவாணிபத்திலேயே போடுகின்றனர். எனவே உலகச்
சந்தை சுருங்கி நாட்டின் ஏற்றுமதி வீழ்ச்சியடைவதும் உற்பத்தித் துறையில் போதிய முதலீடுகளின்றி
பொருளாதாரம் வீழ்ச்சியையும் சந்திக்கிறது.
இரண்டாவது
காரணம்: விவசாயத் துறையில் அரைநிலவுடைமை உற்பத்தி உறவுகளைத் தக்கவைத்துக் கொண்டே அந்நிய
முதலீட்டை அனுமதித்து கார்ப்பரேட் மயமாக்கும் புதிய காலனிய வேளாண் கொள்கைகள் விவசாயத்தைச்
சீரழித்து உள்நாட்டுச் சந்தையை ஒழித்துவருவதாகும்.
- நிலச் சீர்த்திருத்தம் செய்ய மறுத்து விட்டு, பன்னாட்டு,
உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளின் கைகளில் நிலக்குவியலுக்கு வழிவகுக்கும் குழுமமய விவசாயம்,
23 சதவீத நிலமற்ற கூலி விவசாயிகளை வறுமைக்கும் பட்டினிச் சாவுக்கும் தள்ளியுள்ளது;
- வேளாண் துறையில் தனியார்மயத்தைப் புகுத்துவதாலும்,
அரசாங்க நிதி ஒதுக்கீடுகள் குறைவதாலும் நீர்ப்பாசனம் உள்ளிட்ட வேளாண் துறைக் கட்டமைப்புகள்
சீரழிந்து வேளாண் உற்பத்தித் திறனை வீழ்ச்சியடையச் செய்துவிட்டது;
- அளவு
ரீதியான கட்டுப்பாடுகள், தடைகள் அகற்றப்பட்டு ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து வேளாண் விளை
பொருட்களை மலிவான விலையில் இந்தியச் சந்தையில் கொட்டிக் குவிக்கப் படுகிறது. மறுபுறம்
விவசாயிகளுக்கான மானியங்கள் வெட்டப் பட்டதால் இடுபொருள் விலை உயர்ந்து சந்தையில் போட்டி
போடமுடியாமல் விவசாயிகள் நிலத்தை விட்டு வெளியேறுவதும், கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு
மாண்டுபோவதும் அதிகரித்து வருகிறது;
- அறிவுசார்
சொத்துரிமை மூலம் வேளாண் ஆராய்ச்சி, உற்பத்தி மற்றும் வணிகத்தில் பன்னாட்டுக் கம்பெனிகளின்
ஆதிக்கம்;
இந்திய
அரசாங்கம் அமல்படுத்தி வரும் புதியகாலனிய அரசியல், பொருளாதாரக் கொள்கைகளால் ரியல் எஸ்டேட்,
பங்குச்சந்தை போன்ற ஊகவாணிபம் அதிகரித்து ஏற்றுமதி வீழ்ச்சியடைந்து வருவதாலும், கிராமப்புறங்களில்
மக்களின் வறுமையைப் பெருக்கி உள்நாட்டுச் சந்தையை ஒழித்துக் கட்டுவதாலும் நாட்டின்
பொருளாதாரம் சீரழிவதோடு, சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் தோல்வி அடைகின்றன.
ஆனால்
தொழில்வளர்ச்சி என்ற பெயரில் அந்நிய மூலதனத்திற்குச் சேவை செய்கின்ற சிறப்புப் பொருளாதார
மண்டலங்கள் அமைப்பதை காங்கிரஸ் கட்சி மட்டுமே அமல் படுத்தவில்லை. சி.பி.எம். தலைமையிலான
மே.வங்க அரசும் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் போட்டிபோட்டுக்கொண்டு
அமல்படுத்தின. வலுக்கட்டாயமாக விவசாயிகளின் நிலங்களைக் கைப்பற்றுவதை எதிர்த்து சிங்கூர்,
நந்திகிராம் முதல் ஒரிசாவின் கலிங்கா நகர், உ.பி. யின் நொய்டா, மகாராஷ்டிராவின் ஜெய்தாபூர்,
குஜராத்தின் நர்மதா, ம.பி.-யின் சுட்கா மற்றும் தமிழகம் வரை நாடெங்கிலும் விவசாயிகளின்
போராட்டங்கள் வெடித்துக் கிளம்பின. இப்போராட்டங்களைக் கண்டு அஞ்சிய காங்கிரஸ் கட்சி,
2013-ல் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டுவந்து சில சலுகைகளை வழங்கியது.
காங்கிரஸ் கொண்டுவந்தச் சட்டம்
2013-ல்
மன்மோகன் சிங் அரசாங்கம் கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தும் சட்டம், கார்ப்பரேட் நலன்களுக்குச்
சேவை செய்வதற்காகவே கொண்டுவரப்பட்டது. எனினும் இச்சட்டம் விவசாயிகளுக்குச் சில சலுகைகளை
வழங்கியது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
கிராமப்புறங்களில்
கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு அரசின் வழிகாட்டு மதிப்பைப் போல் நான்கு மடங்கும்,
நகர்ப்புறங்களில் இரு மடங்கும் இழப்பீடு; ஒரு போகத்துக்கு மேல் பயிர்செய்யும் நிலங்களை
கையகப்படுத்தக் கூடாது; தனியார் திட்டங்களுக்கு 80 சதவீதம், அரசு-தனியார் பங்கேற்புத்
திட்டங்களுக்கு 70 சதவீதம் என நில உடைமையாளர்களின் ஒப்புதல் பெறவேண்டும்; நில உடைமையாளர்கள்
மட்டுமின்றி நிலங்களை நம்பிவாழும் கூலி விவசாயிகள், கைவினைஞர் களுக்கும் நட்ட ஈடு வழங்கவேண்டும்;
5ஆண்டுகளுக்கு நிலம் பயன்படுத்தப்படாமல் இருந்தால் அதை நில உரிமையாளர்களிடமே திருப்பித்தந்துவிட
வேண்டும்; இந்த விதிமுறைகளை ஏற்காத அதிகாரிகள் மீது வழக்குத் தொடுக்கும் உரிமை; நெடுஞ்சாலை,
இரயில்வே, அணுசக்தி, இராணுவம் உள்ளிட்ட 13 துறைகளுக்கான அரசின் திட்டங்களுக்கு இந்த
நிபந்தனைகள் பொருந்தாது என்ற விதிவிலக்கும் கொடுக்கப்பட்டது.
பா.ஜ.க. அரசு தற்போது கொண்டுவந்துள்ள சட்டம்
மோடி தலைமையிலான
பா.ஜ.க. அரசாங்கம் கொண்டுவந்துள்ள புதிய சட்டமோ விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்கியிருந்த
சலுகைகளைப் பறித்துவிட்டது.
பா.ஜ.க.
கொண்டுவந்துள்ள சட்டத்தின் படி முப்போகம் விளையும் நிலங்களையும் கையகப்படுத்தலாம்;
இச்சட்டத்தின்படி அரசு துறைகளுக்கு மட்டுமின்றி எந்த ஒரு தனியார் முதலாளிக்களுக்காகவும்
நிலத்தை கையகப்படுத்துவதாக இருந்தாலும் விவசாயிகளின் ஒப்புதல் பெறத் தேவையில்லை; சுற்றுச்சூழல்
பாதிப்புகளைக் கணக்கில் கொள்ள தேவையில்லை, நிலத்தைச் சார்ந்து வாழுகின்ற நிலமற்ற மக்களுக்கான
நட்ட ஈடு தரப்படமாட்டாது; கையகப்படுத்திய நிலங்களை 20 ஆண்டுகளுக்கு மேலும் பயன்படுத்தாமல்
போனாலும் திருப்பித்தரத் தேவையில்லை; தனியார் சுயநிதிக் கல்வி நிறுவனங்கள், தனியார்
மருத்துவ மனைகள் ஆகியவற்றையும் பொதுச்சேவை என்று வரையறை செய்துள்ளது. எல்லாவற்றுக்கும்
மேலாக, நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக அரசாங்கத்தையோ, அதிகாரிகளையோ எதிர்த்து நீதிமன்றங்
களுக்குப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் போக முடியாது போன்ற அம்சங்களை உள்ளடக்கிய பா.ஜ.க.
வின் சட்டம் அப்பட்டமாக கார்ப்பரேட் நலன்களுக்கானதே.
மோடியோ,
காங்கிரஸ் கட்சி கொண்டு வந்தச் சட்டத்தில் 13 துறைகளுக்கு விலக்கு அளித்திருந்ததை
5 துறைகளுக்கு விலக்கு எனக் குறைத்து விட்டதாக கூறுகிறார். ஆனால் அவர் குறிப்பிடும்
5 துறைகள் வார்த்தை அளவுக்குத்தான். உதாரணமாக, பாதுகாப்புத் துறையின் கீழ் தேசியப்
பாதுகாப்புக்காக, படைகளுக்காக, இராணுவப் பயிற்சிக்காக, தனிப்படை ஆயுத தொழிற்சாலைகளுக்காக என அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆனால் தனியார் துறை அப்படிப்பட்டதா? இன்று மோடி அரசாங்கம் கூறுகின்ற வளர்ச்சித் திட்டங்கள்
அனைத்தும் கார்ப்பரேட்டுகளின் ரியல் எஸ்டேட் போன்ற ஊகவாணிப நோக்கங்களுக்கானதேயாகும்.
பெரும் வேளாண் பண்ணைகள், வணிக வளாகங்கள், சூதாட்ட மாளிகைகள், தொழில் முனையங்கள், நவீன
நகரங்கள், விரைவுச் சாலைகள், புல்லட் ரயில் பாதைகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்
ஆகியவற்றை அமைப்பதற்கு ஏராளமான நிலங்களைக் கையகப்படுத்தத் துடிக்கிறது. இச்சட்டம் நிறைவேற்றப்
பட்டால், மேற்கண்ட திட்டங்களுக்காகக் குறுகிய காலத்திலேயே மிகப்பெரும் நிலப்பறிப்பை
நிகழ்த்திய அரசாக பா.ஜ.க. அரசு மாறும். இந்திய விவசாயத்தின் இதயத்தில் ஆழமாக குத்தப்படும்
கத்தியாகவே பா.ஜ.க. அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் அமையும்.
மோடியின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்ப்போம்
இவ்வாறு
பா.ஜ.க., காங்கிரஸ் ஆட்சி அளித்த அரைக்குறைச் சலுகைகளையும் பறித்துக்கொண்டு விவசாயிகள்
முதுகில் குத்தியுள்ளது. காங்கிரசும், பா.ஜ.க.வும் கார்ப்பரேட்டுகளுக்கு நிலங்களைக்
கையகப்படுத்திக் கொடுப்பதில் ஒரே கொள்கையுடையனவாக இருப்பினும் விவசாயிகளுக்கு சலுகை
அளிப்பதில் வேறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.
மோடி கொண்டுவந்துள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டம் கார்ப்பரேட் நலன்களுக்குச்
சேவை செய்யும் சட்டமே. அச்சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டிய சட்டமே.
தற்போது
மோடி அரசாங்கம், தான் கொண்டு வந்துள்ள சட்டத்தில் காங்கிரஸ் கொண்டு வந்த சட்டத்தில்
உள்ள நிலம் கையகப்படுத்தலின் போது விவசாயிகளின் ஒப்புதல்பெறுவது, நில உரிமையாளர்களுக்கு
மட்டுமல்லாது பாதிக்கப்படும் அனைவருக்கும் நிவாரணம் என்ற சமூகத்தாக்க மதிப்பீடு செய்தல்,
கையகப்படுத்தப்பட்டு ஐந்தாண்டுகளாகியும் பயன்படுத்தப்படாமல் உள்ள நிலங்களை நில உரிமையாளர்களிடமே
திருப்பி ஒப்படைப்பது போன்ற மூன்று அம்சங்களை ஏற்றுக் கொள்வதாகவும், எதிர்க்கட்சிகள்
இச்சட்டத்தை நிறைவேற்ற ஆதரவு தரவேண்டும் என்றும் கோருகிறது.
ஆனால்
மோடி கொண்டுவந்துள்ள சட்டத்தைத் திரும்பப் பெறுவதாலோ அல்லது எதிர்கட்சிகளின் திருத்தங்களை
ஏற்று புதிய சட்டம் கொண்டு வருவதாலோ நாட்டின்
நலன்களையும், விவசாயிகளின் நலன்களையும் பாதுகாத்துவிட முடியாது. நாட்டின் நலனும், விவசாயிகளின்
நலனும் பாதுகாக்கப்பட வேண்டுமானால், பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் நலன்களையே பொதுநலனாகச்
சித்தரித்து விவசாயிகள் பழங்குடி மக்களின் நிலங்களை கையகப்படுத்தும் புதிய காலனியச்
சட்டங்கள் அனைத்தும் முறியடிக்கப்பட வேண்டும்.
ஆனால்
இன்று பாஜக, காங்கிரஸ் அணிகளுக்கிடையில் நடக்கும் போராட்டத்தில் பா.ஜ.க. கொண்டுவந்த
சட்டத்தை நிராகரிப்பதா அல்லது காங்கிரஸ் சட்டத்தை ஏற்பதா என்பதே மையப் பொருளாக உள்ளது.
காங்கிரசும், பா.ஜ.க.-வும் கொண்டுவந்துள்ள இரண்டு சட்டங்களுமே கார்ப்பரேட் நலன்களுக்கானதே
ஒழிய மக்கள் நலன்களுக்கானது அல்ல.
பன்னாட்டுக்
கம்பெனிகளின் கைகளில் நிலம் குவிவதற்கு மாற்றாக நிலமற்ற விவசாயிகளுக்கு இந்த நிலங்கள்
வழங்கப்பட வேண்டும். சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக கையகப்படுத்தப் பட்ட நிலங்கள்
அனைத்தும் அரசாங்க உடைமை ஆக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, கையகப்படுத்தப்பட்ட நிலங்கள்,
பயன்படுத்தப்படாத நிலங்கள் பாழாய் கிடப்பதைத் தடுப்பதற்காகவும், ரியல் எஸ்ட்டேட்டிற்காகத்
திருப்பி விடுவதை தடுப்பதற்காகவும் மீண்டும் சுரண்டும் வர்க்கங்களின் கைகளுக்கு அந்த
நிலங்கள் போகாமல் தடுத்து நிறுத்துவதற்காகவும், அந்நிலங்களை ஏழை, எளிய, நடுத்தர விவசாயிகள்
மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை உள்ளடக்கிய கூட்டுப் பண்ணைகள் உருவாக்கிட வேண்டும். அதுவே
தொழில் வளர்ச்சிக்கு உகந்த சுயசார்புப் பாதையாகும். அதுவே இன்றைய உடனடித் தேவையுமாகும்.
அதுவே ஏகாதிபத்தியத்தை எதிர்த்த, நிலப் பிரபுத்துவத்தை எதிர்த்த விவசாயிகளின் தவிர்க்க
முடியாத கோரிக்கையாகும்.
தமிழகத்தை
ஆளும் ஜெயலலிதா, தன்மீதான ஊழல் குற்றத் தண்டனையிலிருந்து விடுபடுவதற்கான பேரப் பொருளாகவே
இச்சட்டத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார். அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட திராவிடக்
கட்சிகள், பன்னாட்டுக் கம்பெனிகளின் நலனுக்கான நிலம்கையகப்படுத்தும் சட்டங்களை எதிர்க்கவில்லை.
சலுகைகளைத்தான் கோருகின்றன. பிற்டுத்தப்பட்ட சாதிக்கட்சிகள் அனைத்தும் ஒருபுறம் நிலம்
கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்ப்பது போல் பேசிக்கொண்டே மறுபுறம் பா.ஜ.க.-வுடன் கூட்டணி
சேர்ந்து விவசாயிகளுக்குத் துரோகம் இழைக்கின்றன. தலித் சாதிக் கட்சிகளோ நிலம் கையகப்படுத்தல்
சட்டங்களால் தழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று கூறி இச்சட்டங்களை மறைமுகமாக
ஆதரிக்கின்றன.
எனவேதான் நிலம் கையகப்படுத்தும் சட்டம் பற்றிய பிரச்சினையில்
காங்கிரஸ், பா.ஜ.க. தலைமையிலான இரண்டு அணிகளையும்
நிராகரித்துவிட்டு பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் புரட்சிகர, ஜனநாயக சக்திகள்
ஓரணியில் அணிதிரள அறைகூவி அழைக்கிறோம்.
* பன்னாட்டு,உள்நாட்டுப்
கார்ப்பரேட் நலன்களையே பொதுநலனாகச் சித்தரித்து விவசாயிகள், பழங்குடி மக்களின் நிலங்களைக்
கையகப்படுத்தும் புதிய காலனியச் சட்டங்களை முறியடிப்போம்!
*சிறப்புப்
பொருளாதார மண்டலங்களுக்காகக் கையகப்படுத்திய வேளாண் நிலங்களை அரசுடைமையாக்கு!
*பயன்படுத்தப்படாத
நிலங்களைக் கைப்பற்றி ஏழை, எளிய, நடுத்தர விவசாயிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை
உள்ளடக்கிய கூட்டுப் பண்ணைகளை உருவாக்கு!
* கார்ப்பரேட்
நலன்களையே ‘பொதுநலன்களாகக்’ கருதும் பா.ஜ.க., காங்கிரஸ் அணிகளை எதிர்த்து
புரட்சிகர, ஜனநாயகச் சக்திகள் ஒன்றுபடுவோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
ஆகஸ்ட், 2015
No comments:
Post a Comment
விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.