நாடாளுமன்றவாத மாயையில் மக்களை ஆழ்த்தும்
தமிழக சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்!
முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து மக்களை மீட்க
மேநாளில் சூளுரைப்போம்!!
அன்பார்ந்த
உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!
உலகப் பொருளாதாரம் தொடர்ந்து மந்த நிலையில் நீடிப்பதோடு, அது இந்தியப் பொருளாதாரத்தைக் கடுமையாக
பாதித்து வருகின்ற ஒரு சூழலில்; தமிழக சட்டமன்றத்திற்கான பொதுத்
தேர்தலை எதிர்கொண்டுள்ள ஒரு சூழலில் இவ்வாண்டு மேநாளை எதிர்கொள்கிறோம். பலமுனைப் போட்டிகள் நிலவும் இத்தேர்தலில் பல்வேறு கூட்டணிகள் வேலைவாய்ப்பைப்
பெருக்குவோம், விலைவாசியைக் குறைப்போம், விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்போம் என வாக்குறுதிகளை வாரி வழங்குகின்றன.
இவ்வாறு இக்கட்சிகள் வழங்கும் வாக்குறுதிகளை அவர்கள் ஆட்சி அமைத்தால்
நிறைவேற்றுவார்களா? அல்லது அவர்கள் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும்
அதிகாரம் தமிழக சட்டமன்றத்திற்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ உள்ளதா? என்பதை இன்றைய சர்வதேசிய, தேசிய அரசியல் பொருளாதார நிலைமைகளை
ஆய்வு செய்வதன் மூலமாகத்தான் புரிந்துகொள்ள முடியும்.
எட்டு ஆண்டுகளாகத் தொடரும் முதலாளித்துவ நெருக்கடி
2008-ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெடித்துக்
கிளம்பிய நிதி நெருக்கடி என்ற முதலாளித்துவ மிகு உற்பத்தி நெருக்கடியிலிருந்து மீள
முடியாமல் உலகப் பொருளாதாரம் இருண்டு வருகிறது. இன்றைய உலகப்
பொருளாதாரத்தின் தேக்கநிலை குறித்து, அண்மையில் (ஏப்ரல் 3) ஐ.எம்.எப். செயலாளர் கிறிஸ்டின் லாகர்டே கூறியதாவது:
“உலகப் பொருளாதாரத்தின் இயக்கம் நின்றுவிட்டது, அரசாங்கங்கள் நடவடிக்கையில் உடனடியாக இறங்க வேண்டும்” என்று எச்சரித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, “2007-2009 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில்
ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து உலகப் பொருளாதாரம் மீளவில்லை. மீட்சி
என்பது மிகவும் மெதுவாகவும், மிகவும் பலவீனமாகவும் உள்ளது.
வளர்ச்சியடைந்த நாடுகள் 2007-09 ஆம் ஆண்டுகளின்
நிதி நெருக்கடியின் பின் விளைவுகளை இன்னமும் எதிர்கொள்கின்றன. அதிகரித்துக் கொண்டே செல்லும் அரசாங்கக் கடன்கள், முதலீடுகள்
குறைந்துக் கொண்டே போவது, வேலையின்மை பெருகிக்கொண்டே செல்வது
எனும் வடிவில் எதிர்கொள்கின்றன. உலகப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த
வளர்ச்சி விகிதம் முந்தைய கணிப்புகளைவிட அதாவது 3.4 சதவீதத்தை
விட வீழ்ச்சியடையும்” என்று கூறுகிறார். அத்துடன் அரசாங்கங்கள் சீர்திருத்தக் கொள்கைகளைத் தொடர்வதுடன் கட்டமைப்புத்
துறைகளில் அரசாங்கமே முதலீடு செய்வதுதான் வளர்ச்சிக்கு வழி என வலியுறுத்துகிறார்.
2008-ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட
நிதி நெருக்கடி அமெரிக்காவை மட்டுமல்லாது, ஐரோப்பிய யூனியன்,
ஜப்பான் போன்ற ஏகாதிபத்திய நாடுகளையும் இந்தியா உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட
நாடுகள் அனைத்தையும் கடுமையாகப் பாதித்தது. இத்தகைய நிதி நெருக்கடியிலிருந்து
மீட்பது என்ற பேரில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளும்
ஏகபோக நிதிமூலதனக் கும்பல்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும்
ஊக்கத் தொகை, நட்ட ஈடு என்று பல லட்சம் கோடி டாலர்களை வாரி வழங்கின.
அமெரிக்க அரசாங்கம் கடந்த 5 ஆண்டுகளில்
4 டிரில்லியன் டாலர்களை வாரி வழங்கியது. இந்திய
அரசாங்கமும் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் கோடியை கார்ப்பரேட்களுக்கு
மக்களின் வரிப் பணத்தை பல ஆண்டுகளாக வாரி வழங்கி வருகிறது. இது
போன்றே உலகின் பல நாடுகளும் ஏகபோக நிதி மூலதனக் கும்பல்களுக்கும், கார்ப்பரேட்களுக்கும் மீட்பு நிதியை கொட்டிக் கொடுத்தன. இருப்பினும் கூட உலகப் பொருளாதாரம் மீட்சி அடையவில்லை.
உலகமய, தனியார்மய, தாராளமயக் கொள்கைகளின் தோல்வி
அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும், அவர்களின் அடிவருடிகளும்,
சர்வதேச நிதி நிறுவனங்களான ஐ.எம்.எப். மற்றும் உலகவங்கி போன்ற நிதி நிறுவனங்களும் உலக
மக்களின் மீது திணித்து வந்த உலகமயம், தனியார்மயம், தாராளமயம் போன்ற கொள்கைகள் படுதோல்வி அடைந்துவிட்டன என்பதையே ஐ.எம்.எப். செயலாளரின் ஏப்ரல்-3
பேச்சு எடுத்துக்காட்டுகிறது. தனியார்மயமே வளர்ச்சிக்கான
தாரகமந்திரம், அரசாங்கம் உற்பத்தியில் ஈடுபடக் கூடாது என்று கூறிய
சர்வதேச நிதி நிறுவனங்களே, இன்று வளர்ச்சிக்கு அரசாங்கம் கட்டமைப்புத்
துறைகளில் முதலீடு செய்யவேண்டும் என்று கூறுவது அவர்களின் புதிய தாராளக் கொள்கைகளின்
தோல்வியையே காட்டுகிறது. உலக முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடிக்குத்
தீர்வாக முன்வைக்கப்பட்ட ஏகாதிபத்திய உலகமயக் கொள்கைகள் ஊகவாணிபம், பணவீக்கம், வேலையின்மை, மக்களுக்கான
மானியங்களை வெட்டுதல், நெருக்கடி, சமூக
சீரழிவு மற்றும் கலாச்சார சீர்கேடுகள் என்ற விஷச் சூழலில் உலகத்தை ஆழ்த்திவருகிறது.
ஏகாதிபத்திய நாடுகளிலும், பிற ஒடுக்கப்பட்ட நாடுகளிலும் வேலைவாய்ப்பை
உருவாக்கக் கூடிய உற்பத்தித் துறையில் புதிய முதலீடுகள் வரவில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்ற ஏகாதிபத்திய நாடுகளில் வேலையின்மை
பெருகி, மக்களின் வாங்கும் சக்தி குறைந்து போவதால் உலகச் சந்தை
சுருங்கி வருகிறது. இது இந்தியா போன்ற ஒடுக்கப்பட்ட நாடுகளின்
ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தைக் கடுமையாக பாதிக்கின்றன. உலகமய,
தனியார்மயக் கொள்கைகள் உலகம் முழுவதும் வேலையின்மையையும், வறுமையையும், ஏற்றத்தாழ்வுகளையும் பெருக்கி உலகப் பொருளாதாரத்தை
மென்மேலும் நெருக்கடியில் ஆழ்த்துகின்றன.
அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் பொருளாதார நெருக்கடியிலிருந்து
மீள்வதற்கும், உலக மேலாதிக்கத்திற்காகவும்
ஆக்கிரமிப்புப் போர்களில் ஈடுபடுவதோடு பாசிச ஆட்சி முறைகளைக் கட்டியமைக்கின்றனர்.
பயங்கரவாதத்தை எதிர்த்த போர் என்ற பேரில் அரபு நாடுகளில் கிடைக்கும்
எண்ணெய் வளத்தைக் கைப்பற்ற ஆப்கன், ஈராக் போன்ற நாடுகளில் இராணுவ
ஆக்கிரமிப்பு செய்து பொம்மை ஆட்சிகளை உருவாக்கியது. தற்போது தனது
மேலாதிக்கத்திற்கு சவாலாக உள்ள ரஷ்ய, சீன ஏகாதிபத்தியவாதிகளுக்கு
எதிரான போருக்குத் தயார் செய்கின்றனர். அமெரிக்கா, ரஷ்யாவை எதிர்த்து ஐரோப்பாவில் பெரும் படையை குவிக்கிறது. ஆசியாவில் ஆசிய-பசிபிக் திட்டத்தின் அடிப்படையில் சீனாவுக்கு
எதிராகப் படைகளைக் குவிக்கிறது. ஆசியாவில் போர் மேகங்கள் சூழ்ந்து
வருகிறது. மேலும் உலக முதலாளித்துவ நெருக்கடிகளின் சுமைகளை சொந்த
நாட்டு உழைக்கும் மக்கள் மீதும் திணிக்கிறது. போருக்கு எதிராகவும்,
புதிய தாராளக் கொள்கைகளுக்கு எதிராகவும் போராடும் சொந்த நாட்டு மக்கள்
மீதும், ஒடுக்கப்பட்ட நாட்டு மக்கள் மீதும் பாசிசத்தைக் கட்டவிழ்த்து
விடுகிறது.
இத்தகைய உலக முதலாளித்துவ நெருக்கடி மந்த நிலையில்
நீடிக்கும் ஒரு சூழலில்தான், அதாவது வளர்ச்சியடைந்த நாடுகளில் அரசாங்கக் கடன்கள் அதிகரிப்பது; முதலீடுகள் குறைந்து போவது; வேலையின்மை அதிகரித்து அந்நாடுகளின்
மக்களின் வாங்கும் சக்தி குறைந்து உலகச் சந்தை சுருங்கிவிட்ட ஒரு சூழலில்தான் மோடி
அரசாங்கம் அந்நிய மூலதனத்தைச் சார்ந்த வளர்ச்சி என்று கூறி “மேக்
இன் இந்தியா” திட்டத்தை தீவிரமாகச் செயல் படுத்திவருகிறது.
ஆனால் மோடியின் “மேக் இன் இந்தியா” திட்டம் தோல்வியை தழுவுகிறது.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள
மோடியின் “மேக் இன் இந்தியா” திட்டம் தீர்வல்ல
மோடியின் “மேக் இன் இந்தியா” திட்டத்தின்படி அந்நிய
முதலீடுகளை வரவேற்று இந்தியாவில் முதலீடு செய்து, இந்தியாவில்
உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வது என்பதாகும். (அதற்காக அந்நிய
முதலீட்டிற்கான அனைத்துத் தடைகளையும் அகற்றுவது, நிலம் மற்றும்
கனிம வளங்களைக் கைப்பற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது, தொழிலாளர்களின்
உரிமைகளைப் பறித்து குறைந்த கூலிக்கு உத்தரவாதமளித்தல் என்பதேயாகும்).
அந்நிய முதலீடுகளைக் கவர்வதற்காக மோடி அரசாங்கம்
தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தியது. தொழிற்சாலைப் பாதுகாப்புச் சோதனைகளை ஒழித்தது. நிரந்தர வேலையை ஒழித்து காண்ட்ராக்ட் முறைகளைப் புகுத்தியதுடன் 12 மணி நேர வேலைநாளை திணித்தது, ஓய்வூதியத் திட்டத்தை ஒழித்தது
போன்ற சட்டத் திருத்தங்களால் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக்கியது. மலிவான கூலி உழைப்புக்கு ஏற்பாடு செய்தது. சிக்கன நடவடிக்கை
என்ற பேரில் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டங்களை ஒழித்தல், வட்டி விகிதம் அதிகரிப்பு, எரிவாயு உருளை - பெட்ரோல் - டீசல் மானியங்களை ஒழித்ததன் மூலம் நெருக்கடிகளின்
சுமைகளை தொழிலாளர்கள் மீதும் மக்களின் மீதும் சுமத்தியது. அதே
நேரத்தில் பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்களுக்கு வட்டி விகிதம்
குறைப்பு, வரிச்சலுகைகள், வரி ஏய்ப்பில்
ஈடுபட்ட நிறுவனங்களுக்குப் (வோடாபோன், நோக்கியா)
பாதுகாப்பு, நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தம்,சுற்றுச் சூழல் சட்டங்களிலிருந்து கார்ப்பரேட்களுக்கு விலக்கு என ஏராளமான சலுகைகளை
வாரி வழங்கியது. அந்நிய மூலதனம் எனும் மாயமானைத் தேடி உலகமெங்கும்
ஓடினார் மோடி. ஆனாலும் அந்நிய முதலீடு குவியவும் இல்லை,
ஏற்றுமதி பெருகவுமில்லை. “மேக் இன் இந்தியா”
திட்டம் தோல்வி அடைந்தது.
மோடியின் “மேக் இன் இந்தியா” திட்டம் ஒன்றும் புதிய
திட்டமல்ல. அது சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் (ஷிணிஞீ) மறு பதிப்பேயாகும். சிறப்புப்
பொருளாதார மண்டலங்கள் திட்டம் 2000-ல் வாஜ்பாய் தலைமையிலான தேசிய
ஜனநாயகக் கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்டது. 2000-ல் காங்கிரஸ்
தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அச்சட்டம் திருத்தப்பட்டு அமல்படுத்தப்பட்டது.
ஏற்றுமதி சார்ந்த வரிகளற்ற, கட்டுப்பாடுகளற்ற,
நாட்டுக்குள்ளேயே அந்நிய நாட்டுப் பிரதேசமாக “சுதந்திர
மண்டலங்களாக” அறிவிக்கப்பட்டதுதான் சிறப்புப் பொருளாதார மண்டலத்
திட்டம். எனினும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தோல்வியடைந்தன.
2014-ஆம் ஆண்டின் இந்திய அரசின் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை
சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் தோல்வியை அம்பலப்படுத்தியது. அந்த அறிக்கை கூறுவதாவது: “நிர்ணயிக்கப்பட்ட அளவை விட
முதலீடுகள் 59-சதவீதம் குறைந்து போனது. ஏற்றுமதி 75-80 சதவீதம் குறைந்தது. வேலை வாய்ப்பு வழங்குவதிலும் 93 சதவீதம் நிறைவேற்றப்படவில்லை.
சிறப்புப் பொருளாதார மண்டலங்களால் நாட்டின் ஏற்றுமதியும் பெருகவில்லை.
மாறாக 1999-2000ஆம் ஆண்டில் 91.5 பில்லியன் டாலர்களாக இருந்த வர்த்தகப் பற்றாக் குறை சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்
இயங்கிய 2007-08 ஆம் ஆண்டில் 147.6 பில்லியன்
டாலர்களாக அதிகரித்து நாட்டின் அந்நியக் கடன் பெருகிவிட்டது. 2004-10 வரையிலான ஆறு ஆண்டுகளில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக அளித்த வரிச்
சலுகைகளால் இந்திய அரசாங்கத்திற்கு ரூ. 1,75,000 கோடிக்கும் மேல்
நட்டம் ஏற்பட்டது. இவ்வாறு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் எந்த
நோக்கத்திற்காகத் துவங்கப்பட்டது என்று சொல்லப்பட்டதோ அதற்கு நேர் எதிராக மாறி படுதோல்வி
அடைந்துவிட்டன. அத்துடன் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்காக
“பொதுத்தேவை” என்ற பேரில் விவசாயிகளின் விளை நிலங்கள்
மலிவான விலைக்கு கைப்பற்றப்பட்டது. அதனை கார்ப்பரேட் நிறுவனங்கள்
ரியல் எஸ்டேட் போட்டு கொள்ளை லாபம் அடைந்தன.
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போலவே, மோடியின் “மேக் இன் இந்தியா” திட்டமும் தோல்வியடைந்து வருகிறது.
அதனை மோடியின் நிதி அமைச்சர் அருண்ஜேட்லியே கூறுகிறார். ’மேட் இன் இந்தியா’ என்ற தலைப்பில் அண்மையில் அமெரிக்காவில்
நடந்த கூட்டத்தில் ஆற்றிய உரையில் அருண்ஜேட்லி சாட்சியம் அளிக்கிறார். அவர் கூறுவதாவது: “உலகப் பொருளாதாரம் கவலையளிப்பதாக உள்ளது.
இந்தியாவின் ஏற்றுமதி 16-வது மாதமாக சரிந்து வருகிறது.
வளர்ச்சியடைந்த நாடுகள் அதிக அளவு எச்சரிக்கையாக இருப்பதால் வளர்ந்து
வரும் நாடுகளின் ஏற்றுமதி குறைந்து வருகிறது. இந்த சர்வதேசப்
பொருளாதார சூழல் கவலை அளிப்பதாக இருக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு
என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. பல நாடுகள் இந்தச்
சூழ்நிலையை கடினமாக்குகின்றன” என்று கூறுகிறார். அந்நிய முதலீடுகளைச் சார்ந்து, ஏற்றுமதியை நோக்கமாகக்
கொண்ட “மோடியின் திட்டம்” வெற்றி பெறாது
என்பதை அருன் ஜெட்லியின் பேச்சு எடுத்துக் காட்டுகிறது.
மேலும் மோடியின் “மேக் இன் இந்தியா” திட்டம் வெற்றி பெறாது
என்று ரிசர்வ் வங்கியின் தலைவர் ரகுராம் ராஜன் மோடியின் கனவில் மண்ணள்ளிப் போட்டுவிட்டார்.
அந்நிய முதலீட்டைச் சார்ந்து நாடு வளர்ச்சியடையாது, உள்நாட்டுச் சந்தையைச் சார்ந்துதான் வளர்ச்சியடைய முடியும் என்று புதிய தாராளக்
கொள்கைகளின் ஆதரவாளரான, ரகுராம் ராஜனே கூறுகிறார்.
ரகுராம் ராஜன் கூறுவதாவது : “உலகப் பொருளாதாரத்தில் தற்போது
நாம் காணும் வீழ்ச்சி தற்காலிகமானதல்ல. மாறாக நீடித்த தன்மை கொண்டதாகும்.
கண்கூடாக தொழில் வளர்ச்சியடைந்த அனைத்து நாடுகளிலும் பொருளாதாரம் முழுவதும்
இருளில் மூழ்கிவிட்டது. எனவே வளர்ச்சி குறித்த நம்பிக்கை கண்ணுக்கு
எட்டிய தூரம் வரை தெரியவில்லை. வளர்ச்சியடைந்த நாடுகளின் சந்தையை
நம்பியுள்ள இந்தியா போன்ற வளர்ந்து வரும் சந்தைகளின் ஏற்றுமதி வளர்ச்சி மிகவும் கடினமானது”
என்று கூறுகிறார். மேலும் “மேக் இன் இந்தியா” திட்டம் பற்றிக் கூறுகையில் மேக் இன்
இந்தியா திட்டத்தை நிறைவேற்றுவதில் ஒரு அபாயம் அடங்கியுள்ளது. சீனாவைப் போல ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி அடிப்படையிலான வளர்ச்சி அபாயத்தைச்
சந்திக்கிறது. இன்றைய உலகம் சீனாவைப் போல மற்றொரு ஏற்றுமதி சார்ந்து
வளர்ச்சியடையும் நாட்டை ஏற்கத் தயாரில்லை. உலக அளவில்
”தேவைகளின்” வளர்ச்சி நின்றுவிட்ட சூழலில் நாம்
உள்நாட்டுச் சந்தைக்காக உற்பத்தி செய்ய வேண்டும் என எச்சரித்துள்ளார். ஆனால் மோடி கும்பலோ அந்நிய மூலதனத்திற்குச் சேவை செய்யும் “மேக் இன் இந்தியா” திட்டதைத் தீவிரமாக அமல்படுத்துகிறது.
இந்துத்துவப் பாசிச பா.ஜ.க.
மோடி ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்ததிலிருந்தே அமெரிக்காவின் புதிய காலனியாக
இந்தியாவை மாற்றும் புதிய தாராளக் கொள்கைகளைத் தீவிரப்படுத்தியது. “மேக் இன் இந்தியா”, “ஸ்டார்ட் அப் இந்தியா”,
“டிஜிட்டல் இந்தியா” என்ற பேரில் அந்நிய முதலீட்டாளர்களுக்கு
நிதித்துறை, இயற்கை மற்றும் கனிம வளங்களைத் திறந்துவிடுதல்,
பொதுத்துறைகளைத் தனியாருக்குத் தாரை வார்த்தல், வேளாண்மைத் துறையைத் தாரை வார்த்தல், மக்கள் மீது நெருக்கடிகளின்
சுமைகளைச் சுமத்துதல் போன்ற தேச விரோத மக்கள் விரோதத் திட்டங்களைத் தீவிரமாக அமல்படுத்தியது.
வேலையின்மை பெருகுவது, விலைவாசி உயர்வு,
விவசாயம் அழிவு, விவசாயிகள் தற்கொலை என நாட்டு
மக்கள் வாட்டி வதைக்கப்பட்டு வருகின்றனர். மோடி ஆட்சிக்கு எதிராக
நாடு முழுவதும் கிளர்ச்சிகள் வெடிக்கின்றன. ஆட்சிக்கு வந்த ஒரு
ஆண்டிற்குள்ளேயே மோடி கும்பலின் செல்வாக்கு சரிந்துவிட்டது.
மோடி கும்பல் அமல்படுத்திவரும் புதியதாரளக் கொள்கைகளின்
தோல்விகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவும்; மோடி கும்பலின் தேசவிரோத,
மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும் உலகமய, தனியார்மயக் கொள்கைகளுக்கு எதிராகவும் போராடும் மக்களை ஒடுக்கவும்,
மக்களின் போராட்டத்தை பிளவுபடுத்தவும் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி இந்துத்துவப் பாசிச
ஆட்சியைக் கட்டியமைத்து வருகிறது. சிறுபான்மை மத மற்றும் ஒடுக்கப்பட்ட
சாதி மக்களின் மீது மத, சாதிவாதப் பாசிசத் தாக்குதல்களை நடத்தி
பெரும்பான்மை மத, சாதிவாத வெறியூட்டுவதன் மூலம் ஓட்டு வங்கிகளை
உருவாக்கி தனது ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கிறது. இவ்வாறு, இன்று நாடு அமெரிக்காவின் புதிய காலனியாக மாறுவது
மற்றும் இந்துத்துவப் பாசிசமயமாவது என்ற இருபெரும் அபாயத்தைச் சந்திக்கிறது.
உலகப் பொருளாதாரம் மந்த நிலையில் நீடிக்கின்ற ஒரு
சூழலில், வளர்ச்சியடைந்த நாடுகளில் அரசாங்கக்
கடன் அதிகரிப்பு, முதலீடுகள் குறைந்து போவது, வேலையின்மை பெருகிவருகின்ற சூழலில்; இந்தியாவிலும் மோடி
ஆட்சியின் புதிய தாராளக் கொள்கைகள் தோல்வி அடைந்து தொழில்துறை வீழ்ச்சி, விவசாயம் அழிவு, விவசாயிகள் தற்கொலைகள் அதிகரிப்பது,
வரலாறு காணாத அளவில் வேலையின்மை பெருகிவருகின்றது. இத்தகைய ஒரு சூழலில்தான் தமிழக சட்டமன்றத் தேர்தலை நாம் எதிர்கொண்டுள்ளோம்.
தமிழக சட்ட மன்ற தேர்தலும்
ஆளும் வர்க்கக் கட்சிகளின் மோசடிகளும்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் எந்த ஒரு
கட்சியோ அல்லது கூட்டணியோ இன்றைய உலக முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடிகள் பற்றியோ, அதன் பாதிப்புகள் பற்றியோ மக்கள்
முன்வைக்கத் தயாரில்லை. நாட்டை ஓட்டாண்டியாக்கி ஒட்டுமொத்த மக்களையும்
பாதிக்கின்ற உலகமய, தாராளமய, தனியார்மயக்
கொள்கைகளை எதிர்க்கவும் தயாரில்லை. மாறாக “மது ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு” போன்ற
முழக்கங்களை முன்னிறுத்தி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை திசை திருப்புகின்றன.
அந்நிய மூலதனத்தைச் சார்ந்து நின்று தொழில்வளர்ச்சியைக் கொண்டுவர முடியும்,
விவசாயத் துறை நெருக்கடிகளை தீர்க்க முடியும், வேலைவாய்ப்பை உருவாக்க முடியும், கல்வி - மருத்துவம் - சுகாதாரம் போன்றவைகளை இலவசமாக வழங்கமுடியும்
என்று மோசடிகளில் ஈடுபடுகின்றன. அத்துடன் மேற்கண்ட மக்களின் பிரச்சினைகளை
நாடாளுமன்ற, சட்டமன்றங்களின் மூலமே தீர்க்க முடியும் என்ற மாயைகளை
ஏற்படுத்துகின்றன.
அ.தி.மு.க.-தி.மு.க. போன்ற தமிழகத்தின் இரண்டு பிரதானக் கூட்டணிகளும் அந்நிய முதலீடுகள் மூலம் வளர்ச்சியைக்
கொண்டுவரப் போவதாகச் சொல்லி போட்டி போடுகின்றன. ஜெயாவின் அ.தி.மு.க.வோ
கடந்த ஐந்து ஆண்டுகளில் புதியதாராளக் கொள்கைகளை அமல்படுத்தி தொழில்துறை வீழ்ச்சிக்கும்,
விவசாயம் அழிவதற்கும், விவசாயிகளின் தற்கொலைகளுக்கும்,
வேலையின்மைக்கும் வழிவகுத்தது. ஆட்சிக்கு வந்தவுடன்
பேருந்துக் கட்டணம், மின்கட்டண உயர்வோடு பால் விலையையும் உயர்த்தி
மக்களின் மீது பொருளாதார நெருக்கடிகளின் சுமைகளைச் சுமத்தியது. இலவசத் திட்டங்களைக் காட்டி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா
“டாஸ்மாக்” மூலம் ஏழை எளிய மக்களை ஆண்டுக்கு ரூ.30,000
கோடியைக் கொள்ளையடித்து கஜானாவை நிரப்பியது. தற்போது
இலவசத் திட்டங்களைக் காட்டியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அலைகிறது. தேர்தல் பிரச்சாரம் என்ற பேரில் ஜெயலலிதா மமதையுடன் குளிர்சாதன மேடையில் அமர்ந்து
கொண்டு, உச்சி வெயிலில் கூட்டம் நடத்தி “மக்களால் நான், மக்களுக்காக நான்” என்று பேசி அப்பாவி மக்களின் உயிர்களை மயிராகக் கருதி பலியிடுகிறார்.
புதிய தாராளக் கொள்கைகளை அமல் படுத்துவதிலும் இந்துத்துவப் பாசிசத்திற்குச்
சேவை செய்வதிலும் அ.தி.மு.க. அணி முன்னோடும் அணியேயாகும். இலவசங்களைக் காட்டி மக்களை ஏமாற்றும் ஆணவம் பிடித்த ஜெயா ஆட்சி வீழ்ச்சியடைவது
நிச்சயம்.
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியோ
அந்நிய மூலதனத்தைச் சார்ந்து வேலை வாய்ப்பைப் பெருக்குவோம் என்று கூறுகிறது.
அந்நிய மூலதனத்தைச் சார்ந்து வேலை வாய்ப்பைப் பெருக்குவோம் என்பது ஒரு
மாபெரும் மோசடியேயாகும்.
அதே சமயம் சிறு, குறு விவசாயிகளின் கடன்கள் ரத்து, மாணவர்களின்
கல்விக் கடன் இரத்து - விவசாயப் பிரச்சினைகளைத் தீர்க்க தனி அமைச்சகம்
என்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது. நிதித்துறைகளும்,
வங்கிகளும் தனியார்மயமாக்கப்பட்டு வருகையில் கடனை இரத்துச் செய்யும்
அதிகாரம் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது.
சிறு, குறு விவசாயிகள் வங்கிக் கடனை விட தனியார் கந்துவட்டிக் கொடுமைகளால்தான்
தற்கொலைக்குத் தள்ளப்படுகின்றனர். கந்துவட்டியை ஒழிக்க வழியின்றி
கடன் இரத்து விவசாயிகளுக்குப் பயன்படாது. உண்மையில் வேளாண் துறையைப்
பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் திறந்துவிட்டு வேளாண்மைத் துறை கார்ப்பரேட் மயமாக்கலை
எதிர்க்காமல் விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்போம் என்பது மோசடியேயாகும்.
தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி
முந்தைய ஐ.மு. கூட்டணி ஆட்சியில்
10 ஆண்டுகள் அந்நிய மூலதனத்திற்கு நாட்டை அடிமைப்படுத்தியதோடு,
2 ஜி ஊழல், நிலக்கரி ஊழல் போன்ற மாபெரும் ஊழல்களில்
ஈடுபட்டு நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்ததையும்; ஈழத்தமிழர்களின்
மீதான இன அழிப்புக்குத் துணைபோய் ஒரு லட்சம் தமிழர்களை கொன்றொழித்ததையும் தமிழ்மக்கள்
மறந்துவிடுவார்கள் எனக் கருணாநிதி நினைக்கிறார். ஆட்சி அதிகாரத்தைக்
கைப்பற்ற எண்ணற்ற வாக்குறுதிகளை வாரி வழங்குகிறார். ஆனால் கருணாநிதியின்
துரோகத்தை மக்கள் மறக்கப் போவதுமில்லை, கருணாநிதி அணி இத்தேர்தலில்
வெல்லப் போவதுமில்லை.
திராவிடக் கட்சிகளுக்கு மாற்று நாங்கள் தான் என
மார்தட்டிக்கொண்டிருந்த வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணியோ விஜயகாந்த் கூட்டணியாக
சீரழிந்தது. வைகோவோ மாற்று
அணிக்காக தமது தனிஈழத் தனி நாட்டுக் கோரிக்கையை கைகழுவி விட்டார். சீட்டுக்கும், பெட்டிக்கும் பா.ஜ.க., தி.மு.க., ஆகியவற்றிடம் பேரம் பேசி,
படியாததால் இறுதியாக மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் இணைந்தார்.
கொள்கைக் கோட்பாடற்ற கோமாளிக் கிறுக்கன் விஜயகாந்த் தலைமையில் காங்கிரஸ்,
பா.ஜ.க.வுக்கு மாற்று அணி என்று பேசுவது வேடிக்கை வினோதமாகும். வைகோ, விஜயகாந்த் இருவரும் எந்த நேரத்திலும் பா.ஜ.க.வுடன் இணைந்துவிடுகிற சந்தர்ப்பவாதிகள்தான்.
திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியோ மந்திரி பதவி கொடுத்தால்
தி.மு.க. அல்லது அ.தி.மு.க. இரண்டில் எந்தக் கூட்டணியிலும் சேர்வதற்கு தயாரான கட்சிதான். த.மா.க.வோ
இறுதிவரை ஒற்றை இலக்க சீட்டுகளுக்காக அ.தி.மு.க.விடம் கெஞ்சி கூத்தாடிவிட்டு
சீ.. சீ.. இந்த பழம் புளிக்குமென்று ம.ந.கூட்டணியில் சேர்ந்து மாற்று அணி பற்றி கதைக்கிறது.
இடது, வலது போலிக் கம்யூனிஸ்டுகளோ மே.வங்கத்தில் காங்கிரசுடன் தொகுதி உடன்பாடு செய்துள்ளனர். மதவாதப் பாசிசத்தை எதிர்ப்பது என்ற பேரில் காங்கிரசுடன் கூட்டணி என்பதுதான்
அவர்களின் தந்திரமாகும். புதிய தாராளக் கொள்கைகளை உற்பத்தித்
துறையில் வரவேற்பது என்பதுதான் இடது, வலது போலிக் கம்யூனிஸ்டுகளின்
நிலைபாடாகும். தமிழகத்தில்
அ.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் மாற்று அணி அவசியமே. ஆனால் அத்தகைய மாற்று அணியை
புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் நிலவுகின்ற நாடாளுமன்ற, சட்டமன்ற
முறைகள் மூலமே உருவாக்க முடியாது. எனவே, காங்கிரஸ், பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்று நாங்கள்தான்
என்ற மக்கள் நலக் கூட்டணியின் முழக்கம் ஒரு ஏமாற்றாகும்.
புதிய ஜனநாயகம் பத்திரிகை தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் சமப்படுத்தக் கூடாது
என்று பேசுகிறது. அவ்வாறு சமப்படுத்துவதன் பின்னே, திராவிட இயக்க அரசியல் மற்றும் கொள்கைகளின் சுவடுகூடத் தமிழகத்தில் இல்லாமல்
ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற பார்ப்பன கும்பலின் சதி மறைந்திருக்கிறது. இதனை நிறைவேற்ற துக்ளக் சோ தொடங்கி போலி கம்யூனிஸ்டு வரை வெவ்வேறான அரசியல்
சக்திகள் வெவ்வேறான பாத்திரத்தை ஆற்றுகின்றன.
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மோடியின் இயற்கை கூட்டாளியான
ஜெயாவையும்; பதவி, அதிகாரம் என்ற பிழைப்புவாத
நோக்கில் பா.ஜ.க.வோடு
தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்ட தி.மு.க.வையும் ஒன்று என சாதிப்பதும், ஊழலை சாக்காக வைத்துகொண்டு
அவ்விரண்டு கட்சிகளுக்கு இடையே வேறுபாடே கிடையாது என வாதிடுவதும் நரித்தனமானது என்று
புதிய ஜனநாயகம் குற்றம் சுமத்துகிறது. “தி.மு.க.வும் இலஞ்சம், ஊழல், அதிகாரமுறைகேடுகளில் ஊறிப்போன கட்சிதான்.
ஆற்றுமணல், கிரானைட், கொள்ளைகள்
தி.மு.க. ஆட்சியிலும்
தடையின்றி நடந்திருப்பதையும், அதற்குரியப் பங்கை தி.மு.க. பெற்றிருப்பதையும் மறுக்க
முடியாததுதான். தினகரன் பத்திரிகை அலுவலகம் மீதானத் தாக்குதல்,
திருமங்கலம் ஃபார்முலா என தி.மு.க.விற்கு இருண்ட பக்கங்கள் இருப்பதும் உண்மைதான்.
இவை போல இன்னும் பல குற்றச் சாட்டுக்களையும் தி.மு.க. மீது சுமத்த முடியுமென்றாலும்,
பார்ப்பன பாசிசத்தைத் தனது கொள்கையாகவே கொண்டிருக்கும் அ.தி.மு.க.வும்,
பார்ப்பன எதிர்ப்பு, பகுத்தறிவு, சுயமரியாதை, தமிழ், தமிழ் இனம்
என்ற திராவிடக் கொள்கைகளின் வாசம் வீசுகின்ற அது காலிப் பெருங்காய டப்பாவாக இருந்த
போதும் தி.மு.க.வையும்
ஒரே விதமாக மதிப்பிடுவது அறியாமை அல்ல, கபடத்தனம்” என்று பு.ஜ. குற்றம் சுமத்துகிறது.
எனவே, “தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் சமம் என பார்ப்பன கும்பல்
முன்வைக்கும் வாதம், அதற்கு வால்பிடிக்கும் மக்கள் நலக் கூட்டணி,
பா.ம.க., நாம் தமிழர் கட்சிகளின் அரசியல் போக்கு தமிழகத்தைப் பார்ப்பன பாசிசத்திற்கு
முற்றும் முழுதாக அடிமைப்படுத்தும் தீய உள்நோக்கம் கொண்டது” என்று
பு.ஜ.கூறுகிறது.
இவ்வாறு பு.ஜ. கூறுவதன் பொருள் தமிழகத்தை பார்ப்பன பாசிசத்திற்கு
முற்றும் முழுதாக அடிமைப்படுத்தும் தீய உள் நோக்கத்தை எதிர்ப்பது என்ற பேரால்,
பார்ப்பன ஜெயலலிதாவின் அ.தி.மு.க.வை.எதிர்த்து
தி.மு.க.விற்கு ஆதரவு
தரவேண்டும் என்பதையே பு.ஜ. முன்வைக்கிறது.
பார்ப்பன பாசிசத்தை எதிர்ப்பது என்ற பேரால் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு பரிந்து
பேசும் பு.ஜ.வின் நிலைபாடு புதிய காலனிய
ஆதிக்கத்தை எதிர்த்த போராட்டத்தையும், புதிய தாராளக் கொள்கைகளை
எதிர்த்த மக்களின் போராட்டங்களையும் திசைத் திருப்புவது ஆகும். அது மறைமுகமாக காலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் கயமைத்தனமேயாகும்.
பா.ம.க. அடிப்படையில் வன்னிய
சாதிவாதக் கட்சியாகும். “மது ஒழிப்பு, ஊழல்
ஒழிப்புப்” பற்றிப் பேசுகிறது. ஆனால் அக்கட்சியின்
தளபதி காடுவெட்டி குருதான் தமிழக கள்ளச்சாராய வியாபாரத்திற்கும் தளபதியாவர்.
பாமக ஆட்சி அமைத்தால் அது கள்ளச் சாராய ஆட்சியாகத்தான் இருக்கும்.
அக்கட்சி அந்நிய மூலதனத்தை எதிர்த்துப் பேசவில்லை. ஆனால் போக்குவரத்துத் துறை, சுகாதாரத் துறை, விவசாயம் என எல்லாத் துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்தப் போவதாக அன்புமணி ராமதாஸ்
கூறுகிறார். அத்துடன் கல்வி, மருத்துவம்,
சுகாதாரம் போன்ற மக்கள் நலத்துறைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்,
அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கவேண்டும் என்ற அக்கட்சியின் வாக்குறுதி
அனைத்து தரப்பு மக்களாலும் வரவேற்கப்படுகிறது. ஆனால் உலகமய,
தனியார்மயக் கொள்கைகளை எதிர்க்காமல் வளர்ச்சி பற்றிப் பேசுவதும்,
இத்துறைகளை அரசு மயமாக்குவோம் என்பதும் மாபெரும் மோசடியேயாகும்.
ஜெர்மனியிலுள்ள பசுமை இயக்கம் என்ற ஏகாதிபத்திய
நிதி நிறுவனத்தின் உதவி பெற்றுச் செயல்படும் பசுமைத்தாயக அன்புமணியும் பா.ம.க.வும் ஒருக்காலும் புதிய தாராளக் கொள்கைகளை எதிர்க்கமாட்டார்கள். மேலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக, பிற்படுத்தப்பட்ட
சாதி மக்களை சாதி வெறியைத் தூண்டி சாதி வெறிக் கலகம் நடத்தும் பா.ம.க., தமிழ் மொழி பற்றியும்,
தமிழர் நலன் பற்றியும் பேசுவது நாடகமாகும். மக்களை
சாதி ரீதியாகப் பிளவுபடுத்தி மோதவிடுவது புதியகாலனி ஆதிக்கத்துக்கும், இந்துத்துவப் பாசிசத்திற்கும்தான் சேவை செய்யும்.
இந்து மதவெறி பிடித்த பாசிச பா.ஜ.க.வோ இத்தேர்தலில் தனித்து நிற்கிறது. பூரண மதுவிலக்கு,
மதமாற்றத் தடைச் சட்டம், பசுவதைத் தடுப்புச் சட்டம்,
விவசாயத்திற்கு தனி பட்ஜெட் என்று தனது மதவாத பாசிசத் திட்டத்துடன் இத்தேர்தலில்
நிற்கிறது. சாதிவாதக் கட்சிகளைச் சார்ந்தும், தி.மு.க. அ.தி.மு.க.வின் வீழ்ச்சியிலும் எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற இந்துத்துவப் பாசிச பா.ஜ.க. பகற்கனவு காண்கிறது.
சீமானின் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியம்
பேசுகின்ற கட்சிகள், தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்காக உறுதியாகப் போராடுவதில்லை.
இவர்களின் அரசியல் செயல்பாடுகள் ஆளும் வர்க்கங்களின் ஏதாவது ஒரு பிரிவினருக்கு
சாதகமாகவே உள்ளது. இத்தகையக் கட்சிகளால் தமிழ் மக்களின் எந்த
ஒரு பிரச்சினைக்கும் தீர்வுகாண முடியாது.
மக்கள் ஜனநாயகப் புரட்சியே மாற்று
ஒட்டுமொத்தமாக தொகுத்துப் பார்க்கும் போது தமிழகத்
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் எந்த ஒரு கூட்டணியிடமும் நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்குத்
தீர்வுகாணும் திட்டமோ, வளர்ச்சிக்கான திட்டமோ இல்லை. இந்துத்துவப் பாசிசத்தை
எதிர்ப்பதற்கான திட்டமும் இல்லை. உண்மையில் நாட்டின் பொருளாதார
நெருக்கடியைத் தீர்ப்பதற்கும், வளர்ச்சியை கொண்டுவருவதற்கும்
இந்திய அரசு கடைப்பிடித்துவரும் ஏகாதிபத்திய உலகமய, தாராளமய,
தனியார்மயக் கொள்கைகளை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்ட வேண்டும்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த இந்திய நாட்டின் விடுதலைக்கான மக்கள்
ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்றுவது ஒன்றுதான் வளர்ச்சிக்கான மாற்றுத் தீர்வாகும்.
மக்கள் ஜனநாயக புரட்சிக்குத் தயாராகும் அதே வேளையில் உடனடியாக பின்வரும்
முழக்கங்களின் அடிப்படையில் அனிதிரள்வது இன்றைய உடனடித் தேவையாகும்.
- அந்நிய மூலதனத்தைப் பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்குவது. அந்நிய மூலதனத்தைச் சார்ந்து திட்டமிடுவதற்குப் பதிலாக அரசாங்கத்தை ஏமாற்றி
கார்ப்பரேட் நிறுவனங்களும், அரசியல்வாதிகளும் வெளிநாடுகளில் பதுக்கிவைத்துள்ள
கருப்புப் பணத்தைக் கைப்பற்றி முதலீடுகளாக மாற்றுவதற்காகவும்;
- வங்கிகள், இன்சூரன்ஸ், சுரங்கங்கள்,
இரயில்வே, விமானப் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து, தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், மின்சாரம் போன்ற அனைத்துத் துறைகளிலும்
தனியார்மயத்தை ஒழித்து அரசே ஏற்று நடத்தவும்;
- தொழிலாளர் விரோத - சட்டத்திருத்தம், ஒப்பந்தக் கூலிமுறை, அயல்பணி ஒப்படைப்பு, 12 மணி நேர வேலைத் திணிப்பு, தொழிற்சங்க உரிமைப் பறிப்பை
எதிர்த்து முறியடிக்கவும்;
- வேளாண்மைத் துறையில் அந்நிய மூலதனத்தை தடைசெய்வது. வேளாண்மைத்
துறை கார்ப்பரேட் மயமாக்கப்படுவதை ஒழித்து நிலங்களை தேசிய மயமாக்குவது. வேளாண்மைப் பொருட்களின் இறக்குமதிக்கு முடிவு கட்டுவது; வேளாண் வணிகத்திலிருந்து மான்சாண்டோ, கார்கில் போன்ற
பன்னாட்டுக் கம்பெனிகளை வெளியேற்றுவது; நிலச் சீர்திருத்தம் ஆகியவற்றின்
மூலம் அரைநிலவுடைமை முறைகளுக்கு முடிவுகட்டுவது. விவசாயிகளுக்கான
இடுபொருட்களின் விலைகளைக் குறைப்பது, விளைபொருளுக்கு உரிய விலையை
தீர்மானிக்கப் போராடுவது;
- சில்லரை வணிகத்தில் பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளை அனுமதிப்பதற்கு இருந்த தடைகள்
அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டதால், சில்லரை வணிகத்தில் பன்னாட்டுக்
கம்பெனிகளின் ஆதிக்கம் பெருகிவருகிறது. இதன் விளைவாக
4 கோடி வணிகக் குடும்பங்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுவது மட்டுமல்ல கோடிக்கணக்கான
விவசாயிகள், சிறு தொழில் புரிவோரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்
எனவே சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை முற்றாக ஒழித்துக்கட்டவும்;
- கல்வி, மருத்துவம், சுகாதாரம் அனைத்தையும்
அரசுடைமையாக்குவது. ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை
ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வழங்குதல்;
- இந்தி, சமஸ்கிருத திணிப்பை முறியடிப்போம்; ஆங்கில ஆதிக்கத்திற்கு
முடிவுகட்டி, தமிழ்மொழி உள்ளிட்ட அனைத்து தேசிய மொழிகளையும் ஆட்சி
மொழியாக்கப் போராடுவது, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகப்
போராடுவது;
- நிலப்பிரபுத்துவ நலனுக்கு அரணாக விளங்கும் வர்ணாசிரம முறைகள், சாதி ஆதிக்க முறைகளை ஒழிப்பது; தீண்டாமைக்கு முடிவு கட்டுவது;
- இந்துத்துவப் பாசிசத்தை எதிர்த்து மதச் சார்பின்மைக்குப் போராடுவது,
அரசிலிருந்தும், கல்வியிலிருந்தும் மதத்தை பிரிப்பதற்காகப்
போராடுவது;
- புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் நாடாளுமன்ற ஆட்சி முறைக்கு மாறாக மக்களால்
தேர்ந்தெடுக்கப்படவும், திரும்பப் பெறவும் அதிகாரமுள்ள சோவியத்
ஆட்சி முறையை நிறுவ மக்கள் ஜனநாயக அரசமைக்க போராடுதல்;
மேற்கண்டக் கொள்கைகளை முன்வைத்துப் போராடுவது ஒன்றுதான்
இன்று நாடு எதிர்கொண்டுள்ள புதிய காலனிய ஆதிக்கத்திற்கும், இந்துத்துவப் பாசிசத்திற்கும் உண்மையான
மாற்றாகும். மேற்கண்ட கொள்கைகள் அனைத்தையும் நிலவுகின்ற நாடாளுமன்ற
ஆட்சிமுறைகள் மூலமாக செயல்படுத்த முடியாது. ஒரு சமூகப் புரட்சி
மூலம் மட்டுமே தீர்வுகாண முடியும்.
இந்துத்துவப் பாசிசம் என்பது வெறுமனே பார்ப்பனியப்
பாசிசம் மட்டுமன்று. மாறாக அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய காலனியத்திற்கு சேவை செய்கின்ற
கார்ப்பரேட் பாசிசமாகும். அதாவது இந்தியப் பாசிசம் என்பது தரகுமுதலாளித்துவ,
நிலப்பிரபுத்துவப் பாசிசமாகும். எனவே இந்துத்துவப்
பாசிசத்தை எதிர்த்த போராட்டம் வெறுமனே பார்ப்பனியத்தை எதிர்த்த போராட்டம் மட்டுமல்ல.
அவ்வாறு குறுக்குவது அடிப்படைப் பிரச்சினைகளிலிருந்து மக்களை திசை திருப்பி
ஏகாதிபத்தியத்திற்குச் சேவை செய்வதேயாகும். எனவே அமெரிக்காவின்
புதியகாலனிய புதிய தாராளக் கொள்கைகளையும் இந்துத்துவப் பாசிசத்தையும் எதிர்த்துப் போராடத்
தமிழக சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணித்துப் பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரளுமாறு
மேநாளில் அறைகூவி அழைக்கிறோம்.
ê நாடு எதிர்கொண்டிருக்கும் வேலையின்மை, தொழிற்துறை வீழ்ச்சி, வேளாண்மை நெருக்கடி, விவசாயிகளின் தற்கொலைகளுக்குக் காரணம்
உலக முதலாளித்துவ நெருக்கடியும், ஆளும் வர்க்கங்கள் கடைப்பிடிக்கும்
உலகமய, தனியார்மயக் கொள்கைகளே!
ê உலக முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு
அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் கடைப்பிடிப்பது, ஆக்கிரமிப்புப் போர்களும்,
பாசிசமுமே!
ê பொருளாதார மீட்சிக்கும் வேலை வாய்ப்பைப் பெருக்கவும்
வேளாண்மை நெருக்கடியிலிருந்து மீளவும், அந்நிய மூலதனத்தை சார்ந்த மோடி அரசின் “மேக்
இன் இந்தியா” திட்டம் தீர்வல்ல!
ê ஏகாதிபத்தியத்துக்குச் சேவை செய்யும் இந்துத்துவப்
பாசிசக் கொள்கைகளை முறியடிக்க புதிய காலனிய ஆதிக்கத்தை எதிர்ப்போம், ஜனநாயகத்துக்காகப் போராடுவோம்!
ê ஆளும் வர்க்கக் கட்சிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் மூலமே நெருக்கடிக்குத் தீர்வு காணமுடியும் என்று உருவாக்கும்
மாயைகளை முறியடிப்போம்!
ê அடிப்படைப் பிரச்சினைகளை மூடி மறைத்துவிட்டு “ஊழல் ஒழிப்பு, மது ஒழிப்பு” முழக்கங்களை முன் நிறுத்துவது மோசடியே!
ê தமிழக சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்! மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!
ê உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுவோம்!
ê மார்க்சிய - லெனினிய - மாவோ சிந்தனை வெல்க!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
No comments:
Post a Comment
விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.