Wednesday, August 7, 2013

சாதி மறுப்பு, சுதந்திரக் காதல் திருமணங்களை ஆதரிப்போம்!


சாதி மறுப்பு, சுதந்திரக் காதல் திருமணங்களை ஆதரிப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயகவாதிகளே!

பிற்படுத்தப்பட்ட சாதியான முக்குலத்தோர் சாதியைச் சார்ந்த சரண்யா என்கிற பெண்ணும், தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த இராமகிருஷ்ணன் என்கிற இளைஞரும் ஒரே இடத்தில் வேலை செய்யும்போது ஒருவரை ஒருவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொள்ள விரும்பினர். பெற்றோரின் அனுமதியோடு திருமணம் செய்துகொள்ள விரும்பி பெண்ணின் தந்தை திரு முனியாண்டி அவர்களை அணுகினர். ஆளும் கட்சிப் பிரமுகரான அவர் இவர்களின் காதல் மணம், கலப்பு மணத்தை அங்கீகரிக்க மறுத்தார். தாழ்த்தப்பட்ட சாதி என்பதற்காகவே இராமகிருஷ்ணனை காவல்நிலையத்தில் வைத்து மிரட்டி கையெழுத்து வாங்கிக்கொண்டு விரட்டியடித்தார்.

பெற்ற மகள் சரண்யாவை வீட்டுக் காவலில் வைத்து விருப்பமில்லாத வேறொருவரை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி சித்திரவதை செய்தனர். ஆனால் 5 மாதகால வீட்டுச் சிறையை உடைத்து வெளியேறிய சரண்யா, தான்விரும்பிய இராமகிருஷ்ணனை கரம்பிடிக்க எமது அமைப்பின் உதவியை நாடினார். எமது அமைப்பு அவர்களிருவருக்கும் 15.07.2013 அன்று பதிவுத் திருமணம் செய்துவைத்தது. இதனை அறிந்த சரண்யாவின் தந்தை மணமக்களுக்கும், அவர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கிய எமது அமைப்பைச் சார்ந்த வழக்கறிஞர் சேல் முருகனுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.