சாதி மறுப்பு, சுதந்திரக் காதல்
திருமணங்களை ஆதரிப்போம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயகவாதிகளே!
பிற்படுத்தப்பட்ட சாதியான முக்குலத்தோர் சாதியைச்
சார்ந்த சரண்யா என்கிற பெண்ணும், தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த
இராமகிருஷ்ணன் என்கிற இளைஞரும் ஒரே இடத்தில் வேலை செய்யும்போது ஒருவரை ஒருவர்
கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொள்ள விரும்பினர். பெற்றோரின்
அனுமதியோடு திருமணம் செய்துகொள்ள விரும்பி பெண்ணின் தந்தை திரு முனியாண்டி அவர்களை
அணுகினர். ஆளும் கட்சிப் பிரமுகரான அவர் இவர்களின் காதல் மணம், கலப்பு மணத்தை அங்கீகரிக்க மறுத்தார். தாழ்த்தப்பட்ட சாதி என்பதற்காகவே
இராமகிருஷ்ணனை காவல்நிலையத்தில் வைத்து மிரட்டி கையெழுத்து வாங்கிக்கொண்டு
விரட்டியடித்தார்.
பெற்ற மகள் சரண்யாவை வீட்டுக் காவலில் வைத்து
விருப்பமில்லாத வேறொருவரை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி சித்திரவதை செய்தனர்.
ஆனால் 5 மாதகால வீட்டுச் சிறையை உடைத்து வெளியேறிய சரண்யா, தான்விரும்பிய இராமகிருஷ்ணனை கரம்பிடிக்க எமது அமைப்பின் உதவியை நாடினார்.
எமது அமைப்பு அவர்களிருவருக்கும் 15.07.2013 அன்று பதிவுத் திருமணம்
செய்துவைத்தது. இதனை அறிந்த சரண்யாவின் தந்தை மணமக்களுக்கும், அவர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கிய எமது அமைப்பைச் சார்ந்த வழக்கறிஞர் சேல்
முருகனுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
சாதிமறுப்பு சுதந்திர (காதல்)
திருமணங்களை ஆதரிப்போம்
வயது வந்த ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர்
காதலிப்பதும், தக்களுக்கானத் துணையை தாங்களே
தேர்ந்தெடுத்துக்கொள்வதும் இயல்பானதாகும். அது அவர்களின் அடிப்படை ஜனநாயக
உரிமையாகும். அது சட்டம் வழங்கியுள்ள அடிப்படை ஜனநாயக உரிமையுமாகும்.
ஆனால் இன்று நாட்டில் நடைபெறும் ஆகப்
பெரும்பான்மையான திருமணங்கள், நிலப்பிரபுத்துவச் திருமண
முறையின் அடிப்படையில் அமைந்த திருமணங்களாகவே உள்ளன. அதாவது சாதிக்குள் மட்டுமே
திருமண உறவு கொள்வது என்பதன் அடிப்படையிலும் (அகமணம்), பெற்றோர்கள்
ஏற்பாடு செய்வதன் அடிப்படையில் அமைந்த திருமணங்களாகவும், பெண்ணின்
மீது ஆண் ஆதிக்கம் செய்வதன் அடிப்படையிலும் (மனைவி மீது கணவன் ஆதிக்கம்), குழந்தைகளின் நியாயமான உரிமைகளை மறுக்கக் கூடியதாகவும் உள்ள திருமண
முறையின் அடிப்படையில் அமைந்ததாகவே உள்ளன. இத்தகைய ஏற்பாட்டுத் திருமண முறைகள்
நிராகரிக்கப்பட வேண்டியவையே.
சுதந்திரமான தேர்வுதான் ஒவ்வொரு திருமணத்திற்கும்
கட்டாயமான அடிப்படைக் கோட்பாடாக இருக்கவேண்டும். திருமண ஏற்பாடு செய்வதில்
பிள்ளைகளின் விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்துவதற்கான பெற்றோரின் அதிகாரம்
உள்ளிட்ட ஒட்டுமொத்த நிலப்பிரபுத்துவ முறை ஒழிக்கப்பட வேண்டும். திருமண
ஒப்பந்தங்களில் நடைபெறும் அனைத்துப் பொருளாதார ரீதியான ஒடுக்குமுறை - வரதட்சனை
போன்ற பொருளாதார ஒடுக்குமுறைகள் ஒழிக்கப்பட வேண்டும். சாதிக்குள் மட்டும் திருமண
உறவு கொள்வதைக் கடந்து - அகமண முறையை மீறி வேறு சாதியினர் ஒருவரைத்
தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும்.
சாதிக்குள் மட்டுமே திருமண உறவு கொள்வதைக் கடந்து, அகமண முறையை மீறி, தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்துடன்
ஒருதார முறை; ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில்
(கணவனுக்கும் மனைவிக்கும் இடையில்) சமத்துவம்; பெண்கள்
வரதட்சனைக் கொடுமையிலிருந்து விடுதலை பெறுவது; பெண்கள்
மற்றும் குழந்தைகளின் நியாயமான உரிமைகளுக்குப் பாதுகாப்பு, மணவிலக்கு
உரிமை, பெண்களுக்கு குறிப்பாக விதவைகளுக்கு மறுமணம் செய்து
கொள்ளும் உரிமை, குடும்பச் சொத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும்
சம உரிமை; பெண்கள் கல்வி கற்கும் உரிமை; பெண்கள் தாங்கள் விரும்பும் தொழில் செய்யும் உரிமை; கற்பு
என்பது ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவாக இருத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த
திருமண முறையே ஒரு புதிய ஜனநாயகத் திருமண முறையாகும். இத்தகையத் திருமண முறைகள்
சுதந்திரக் காதல் திருமணங்களிலேதான் சாத்தியம். இதனை ஆதரிக்கவேண்டியது புரட்சிகர
ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.
தமிழகத்திலும் இந்தியாவிலும் இத்தகைய புதிய
ஜனநாயகத் திருமணமுறை - சுதந்திரமானத் திருமண முறை, பொதுவான திருமண முறையாக பரவி வளர்வதற்கு நிலப்பிரபுத்துவமும் சாதியமும்
முதன்மையான தடைகளாக உள்ளன. அதாவது அகமணமுறையும், ஏற்பாட்டுத்
திருமண முறையும், பெண்ணடிமைத் தனமும் தடைகளாக உள்ளன.
புரட்சிகரமான முறையில் தரகுப் பெருமுதலாளிகள்
மற்றும் பெரும் நிலப்பிரபுக்களின் அரசை ஒழித்து, ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசை நிறுவுவதன் மூலமே ஏகாதிபத்திய ஆதிக்கத்தை
ஒழிக்க முடியும். நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை மற்றும் முதலாளித்துவத்திற்கு
முந்தைய உற்பத்தி உறவுகளை ஒழிப்பதன் மூலமே சாதிமுறை மற்றும் தீண்டாமைக்கு ஆதாரமாக
இருக்கும் பரம்பரைத் தொழில் பிரிவினையை ஒழிக்க முடியும். மக்கள் ஜனநாயக குடியரசும்
புரட்சிகர மக்களும் தொடர்ச்சியாக ஒன்றன்பின் ஒன்றாகக் கலாச்சாரப் புரட்சிகளை
நடத்தி, சாதியும் தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு
உத்தரவாதம் செய்கிற பிற அம்சங்களான அகமண முறை, பிறப்பால்
உயர்வு தாழ்வு கற்பித்தல், படிநிலைமுறை, பரம்பரைச் சடங்குகள், தீண்டாமை, தீண்டத் தகாதார்க்கு பொது உரிமை மறுப்பு, மனித உரிமை
மறுப்பு, மத உரிமை மறுப்பு ஆகியவற்றின் அடித்தளத்தைத்
தகர்த்துவிட்டு, ஒரு புதிய ஜனநாயகப் பண்பாட்டை
உருவாக்கமுடியும், அப்போதுதான் சுதந்திரக் காதலும் புதிய
ஜனநாயகத் திருமன முறைகளும் ஒரு பொதுவான திருமண முறையாக மாற்றம் பெறும்.
புரட்சியின் மூலம் மக்கள் ஜனநாயகக் குடியரசை
நிறுவுவது சாதியம் தீண்டாமையை ஒழிப்பதற்கு முன்நிபந்தனை என்பதால் அப்புரட்சிக்கு
முன்னர் சாதியத்தையும் தீண்டாமையையும் எதிர்த்த ஜனநாயக உரிமைகள் மற்றும் உண்மையான
ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்காகப் போராடுவது அவசியம் இல்லை எனக் கருதக் கூடாது.
இத்தகைய போராட்டங்களின்றி சாதியாதிக்க சக்திகளின் தாக்குதல்களை முறியடித்து மக்கள்
உரிமைகளை வெல்ல முடியாது.
புதிய இடதுகள், பின்நவீனத்துவ் வாதிகள் மற்றும் தலித்திய வாதிகள் வைக்கின்ற முன்வைக்கின்ற
ஜனநாயகப் புரட்சி இல்லாமலே சாதி சீர்திருத்தங்கள் மூலமாக, சாதிப்
போராட்டங்கள் மூலமாக சாதி, தீண்டாமையை ஒழிக்க முடியும்
என்பதே; பெண்ணி வாதிகள், பெண்விடுதலை
எனும் பேரில் வரைமுறையற்ற பாலுறவுக் கொள்கைகள் மற்றும் ஆணும் ஆணும் திருமணம்
செய்து கொள்வது, பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்வது
என்ற சீரழிவுக் கலாச்சார அடையாள அரசியல் மூலமோ சாதி, தீண்டாமைக்கும்
பெண் விடுதலைக்கும் என்றுமே தீர்வுகாண முடியாது. மாறாக இத்தகைய அரசியல், ஏகாதிபத்தியத்திய, நிலப்பிரபுத்துவ பிற்போக்கை
பாதுகாக்கவுமே பயன்படும். எனவே அடையாள அரசியலை எதிர்த்த புரட்சிகர வர்க்கப்
போராட்ட அரசியலே குடும்ப உறவுகளில் ஜனநாயகத்தை கொண்டுவரும். சாதி, தீண்டாமைக்கு முடிவுகட்டும்.
சாதிவெறியையும் கௌரவக் கொலைகளையும்
எதிர்ப்போம்
மத்திய மாநில அரசுகள் செயல்படுத்திவரும் உலகமய, தாராளமய, தனியார்மய புதிய காலனிய அரசியல்
பொருளாதாரக் கொள்கைகள் நாட்டின் சமூக அரசியல் பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்களை
உருவாகிவருகின்றன. ஒருபுறம் விவசாயம், சுதேசியத் தொழில்கள்
அழிந்து நாட்டில் ஓட்டாண்டித்தனம் பெருகிவருகிறது. மறுபுறம் ஏகாதிபத்திய பன்னாட்டு,
உள்நாட்டுத் தரகுமுதலாளித்துவ நிலப்பிரபுத்துவ நலன்களுக்கான
ஏகாதிபத்தியச் சார்பு விதேசியத் தொழில்கள் வளர்கின்றன. அதன் விளைவாக நகர்மயமாதல்
விரிவடைந்து வருகின்றன. கல்வி நிறுவனங்கள், ஐ.டி. போன்ற
தொழில் நிறுவனங்களில் படித்த ஏராளமான பெண்களும், ஆண்களும்
சேர்ந்து பழகுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கியுள்ளன.
இத்தகைய ஒரு சூழலில் வயதுவந்த ஆணும், பெண்ணும் சாதி வித்தியாசம் பாராமல் காதலிக்கவும், திருமணம்
செய்துகொள்ளவும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. தங்களுக்கான துணையைத் தாங்களே
தேர்ந்தெடுத்துக்கொள்ளும் காதல் மணம், கலப்புமணம் என்ற
போக்கு அண்மைக் காலங்களில் அதிகரித்துவருகின்றன.
ஆனால் இத்தகைய காதல் மற்றும் கலப்புமணத்திற்கு
எதிராக நாடுதழுவிய அளவில் சாதி, மதவாதப் பிற்போக்குச் சக்திகள்
தாக்குதல் தொடுத்துவருகின்றன. காதல் செய்பவர்களை இத்தகைய பிற்போக்குச் சக்திகள் “கௌரவக் கொலை” என்ற பேரில் கொன்றொழிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் இராமதாசு தலைமையில் 51 சாதிச் சங்கங்கள் ஒன்றிணைந்து காதல்
திருமணங்களை எதிர்த்தும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு
எதிராகவும் கலவரங்களைத் தூண்டுகின்றனர். தருமபுரியில் இளவரசன் திவ்யா காதல்
திருமணத்தை எதிர்த்து 3 தாழ்த்தப்பட்ட மக்களின் கிராமங்களை கொளுத்திச்
சூறையாடியதுடன், திவ்யாவின் தந்தையின் மரணத்துக்கும்
இளவரசனின் கொலைக்கும் காரணமாக இருக்கின்றனர். மேலும் தருமபுரியில் மற்றொரு
கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த சுதாவும், வன்னிய
இளைஞரும் காதலித்து திருமணம் செய்துகொண்டு கைக்குழந்தையோடு வாழ்ந்து வந்தனர்.
தற்போது தர்மபுரி கலவரங்களுக்குப் பிறகு மேல்சாதி ஆதிக்க சக்திகள் பஞ்சாயத்து
கூட்டி அச்சுறுத்தி சுரேஷ்-சுதா தம்பதியினரை ஊரைவிட்டே விரட்டியடித்துள்ளனர். இது
போன்றக் கொடுமைகள் நாடெங்கும் தொடர்கிறது. தமிழ்நாடு கொங்கு வேளாளக் கவுண்டர்
பேரவையை சார்ந்த ஈஸ்வரனோ காதல் திருமணங்களை எதிர்த்து இயக்கம் நடத்திவருகிறார்.
இன்று தமிழ்நாட்டில் மட்டும் காதல் மணம், கலப்பு மணம்
புரிந்து கொண்டதற்காக 38 கொலைகள் நடந்துள்ளன. மேலும் சாதிவெறிச் சக்திகள் கலப்பு
மணங்கள், காதல் மணங்களுக்கு எதிராக கொலைவெறியோடு அலைகின்றன.
“மனநோயாளி” இராமதாசு கும்பல்
நாடகக் காதலை எதிர்ப்பதாக நாடகமாடுகிறது. தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் ஜீன்ஸ்
பேண்ட்டும், கூலிங்கிளாசும் போட்டுக்கொண்டு உயர்சாதிப்
பணக்காரப் பெண்களை பணம் பறிப்பதற்காகத் திட்டம் போட்டுக் காதலித்து அவர்களின்
வாழ்க்கையை சீரழிக்கிறார்கள் என்று குற்றம் சுமத்துகிறார். ஆனால் இது உண்மையல்ல.
அண்மையில் மனித உரிமை அமைப்பு தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழக அரசிடம்
இருந்து பெறப்பட்டத் தகவலின்படி காதலித்துக் கலப்புமணம் புரிந்து கொண்டவர்களில்
உயர்சாதியைச் சார்ந்த இளைஞர்கள்தான் தாழ்த்தப்பட்ட பெண்களைக் கைவிட்டு
நடுத்தெருவில் நிறுத்தியுள்ளார்கள் என்பது நிரூபனமாகியிருக்கிறது. உண்மையில்
தாழ்த்தப்பட்ட இளைஞர்களைக் குறிவைத்து இப்படித் தாக்குவது என்பது தாழ்த்தப்பட்ட
சாதிக்கு எதிரான கலவரங்களை தூண்டுவதற்கு காதல் சிறந்த கருவி என்பதற்காகத்தான் அதை
கையில் எடுத்துக்கொண்டார். மேலும் நாடகக் காதலை எதிர்ப்பது என்பது சாதிமாறி
நடக்கின்ற காதலை எதிர்ப்பதாக மட்டும் பொருள்கொள்ள முடியாது. தமது சொந்தச்
சாதிக்குள்ளேயே கூட ஏழை பணக்காரர்களுக்கிடையிலான காதலை அழிப்பதையும் நோக்கமாகக்
கொண்டே செயல்படுகின்றனர். அதை பிற்படுத்தப்பட்ட சாதியை சார்ந்த மக்கள்
புரிந்துகொள்ள வேண்டும்.
இராமதாசு கும்பல் இழந்துவிட்ட தமது அரசியல்
செல்வாக்கை மீட்டெடுக்கவும், பிற்பட்ட சாதியைச் சார்ந்த
ஆளும்வர்க்கத்தினர் தமிழக அளவிலும், உள்ளூர் அளவிலும்
தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ளவும், பிற்படுத்தப்பட்ட
சாதி வெறியைத் தூண்டி வாக்கு வங்கிகளை உருவாக்கவே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான
கலவரங்களைத் திட்டமிட்டு நடத்துகின்றனர். கலப்புத் திருமணங்களை எதிர்த்து கலகங்களை
செய்வது, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பண்னையடிமை முறையைத்
திணிப்பதற்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை திருத்தச் சொல்வது; பெண்களுக்கான சொத்துரிமையை ரத்துசெய்யக் கோருவதன் மூலம் பெண்ணடிமைத்
தனத்தை தக்கவைப்பது; தாழ்த்தப்பட்ட மக்களுக்கான
இடஒதுக்கீட்டுச் சலுகைகளை இரத்துச் செய்யச் சொல்வதன் மூலம் தாழ்த்தப்பட்ட
மக்களுக்கு எதிரான “குடி கெடுக்கும்” வேலையை
இராமதாசு மேற்கொண்டுள்ளார்.
மனுநீதியை எதிர்த்து, சமூகநீதி என்ற பேரால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் கூட்டணி
பற்றிப் பேசி அதிகாரத்தை சுவைத்த இராமதாசு கும்பல், தற்போது
அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான சாதிவெறி
அரசியலை கையிலெடுத்துள்ளது. இதுநாள் வரை தமிழகத்தில் பெரியாரிய, அம்பேத்காரிய இயக்கங்கள் நடத்திவந்த பார்ப்பனிய எதிர்ப்பு, சமூக நீதி என்ற சீர்திருத்தங்களுக்கெல்லாம் எதிராக பார்ப்பனிய
வர்ணாசிரமத்தின் பாதுகாவலனாக உருவெடுத்து வருகிறது. இதுகாரும் ஒடுக்கும் சாதிகளை
எதிர்த்து ஒடுக்கப்பட்ட சாதிகள் நடத்திய
போராட்டங்களுக்கு மாறாக, தற்போது ஒடுக்கும் சாதிகளை
ஒன்றிணைத்து ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு எதிரான அடக்குமுறைகளை
கட்டவிழ்த்துவிடுகிறது. இவ்வாறு இராமதாசு கும்பல் ஒரு எதிர்ப்புரட்சிகர
பிற்போக்குக் கும்பலாக உருவெடுத்து வருகிறது. தமிழ்ச் சமுதாயத்தை காட்டுமிராண்டிக்
காலத்திற்கு பின்னோக்கி இழுக்கிறது. இந்த சாதிவெறிக் கும்பலை ஒழிக்காமல் உழைக்கும்
மக்கள் ஒற்றுமையோ சமூக அமைதியோ சாத்தியமில்லை.
தமிழகத்தை ஆளும் ஜெயலலிதா அரசாங்கம் சாதிவெறி
இராமதாசு கும்பலுக்கு எதிராக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை செயல்படுத்த
மறுக்கிறது. காதல் மற்றும் கலப்புத் திருமணங்களை எதிர்த்து ‘கௌரவக் கொலையில்’ ஈடுபடுபவர்களை கைது செய்து
சிறையிலடைக்கவில்லை. 144 தடை உத்தரவும் கட்டுப்பாடுகளும் தாழ்த்தப்பட்ட மக்களின்
எதிர்ப்பை நசுக்குவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. காதல் திருமணம், சாதிமறுப்புத் திருமணம் புரிபவர்களுக்கு எதிராக காவல்நிலையங்களே
கட்டப்பஞ்சாயத்து செய்கின்றன. நீதிமன்றங்களோ கண்டனம் தெரிவித்துவிட்டு
மௌனசாட்சியாக நிற்கின்றன.
இத்தகைய ஒரு நிலைமையில் சாதிமறுப்பு சுதந்திர
(காதல்) திருமணம் புரிவதற்கான அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு ஆதரவாகவும், அத்தகைய தம்பதிகளை பாதுகாக்கவும், சாதி, தீண்டாமையை உயர்த்திப் பிடித்து சாதிக் கலவரங்களில் ஈடுபடும்
சாதிவெறியர்களுக்கு எதிராகவும், சாதி, தீண்டாமையை
ஒழித்து சமத்துவச் சமுதாயத்தைப் படைத்திடவும் அனைத்து சாதி உழைக்கும் மக்களும்,
ஜனநாயகவாதிகளும் ஓரணியில் திரள்வோம் என அறைகூவி அழைக்கிறோம்.
காதல்மண, கலப்பு மணத் தம்பதிகளாக சரண்யா-இராமகிருஷ்ணன்
வரவேற்பு நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்போம்.
No comments:
Post a Comment
விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.