நாடாளுமன்றவாத மாயையில் மக்களை ஆழ்த்தும் தமிழக
சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்!
முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து மக்களை மீட்க
மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!
உலகப் பொருளாதாரம் தொடர்ந்து மந்த நிலையில் நீடிப்பதோடு, அது இந்தியப் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்து
வருகின்ற ஒரு சூழலில் தமிழகச் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலை எதிர்கொண்டுள்ளோம்.
பலமுனைப் போட்டிகள் நிலவும் இத்தேர்தலில் பல்வேறு கூட்டணிகள் வேலைவாய்ப்பைப்
பெருக்குவோம், விலைவாசியைக் குறைப்போம், விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்போம் என வாக்குறுதிகளை வாரி வழங்குகின்றன.
இவ்வாறு இக்கட்சிகள் வழங்கும் வாக்குறுதிகளை அவர்கள் ஆட்சி அமைத்தால்
நிறைவேற்றுவார்களா? அல்லது அவர்கள் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும்
அதிகாரம் தமிழகச் சட்டமன்றத்திற்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ உள்ளதா? என்பதை இன்றைய சர்வதேசிய, தேசிய அரசியல் பொருளாதார நிலைமைகளை
ஆய்வு செய்வதன் மூலமாகத்தான் புரிந்துகொள்ள முடியும்.