ஜெயலலிதா ஆட்சியில் தாழ்த்தப்பட்ட
மக்கள் மீதான சாதிவெறி தாக்குதல்களும், கலவரங்களும் தொடர்கின்றன!
அன்பார்ந்த
உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!
மேல்சாதிப்
பெண்ணை காதலித்ததற்காக தருமபுரி இளவரசனை அடுத்து சேலம் மாணவர் கோகுல்ராஜ் கொடூரமாகக்
கொலை செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர், பறையர் சாதியைச் சேர்ந்த கோகுல்ராஜ்,
நாமக்கல் மாவட்டம் வேளாள கவுண்ட சாதிப்பெண்ணை காதலித்ததற்காக தலைத்துண்டிக்கப்பட்டு
கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டு இரயில் தண்டவாளத்தில் வீசப்பட்டுள்ளார். கோகுல்ராஜ் கொலையை
தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை என்ற சாதிய அமைப்பின் தலைவர் யுவராஜ் கும்பல்தான் செய்துள்ளது.
இவர் ‘காதலை பிரிப்போர்’ சங்கம் அமைத்து காதலர்களை பிரிப்பதையும் அவர்களைத் தாக்குவதையும்
ஒரு வேலையாகக் கொண்டு செயல்படுவதாக அவரின் கூட்டாளிகள் 6 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அடுத்து,
கோகுல்ராஜ் கொலை ஏற்படுத்திய அதிர்ச்சி விலகும் முன்பே சேலம் வாழப்பாடி அருகில் உள்ள
சோமம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் வன்னிய சாதியைச் சேர்ந்த பெண்ணை சாதிமறுப்பு
திருமணம் செய்துகொண்டதால், சோமம்பட்டி தலித் மக்களின் வீடுகளுக்கு வன்னிய சாதிவெறியர்கள்
தீவைத்து கொளுத்தி சாதிக் கலவரத்தை நடத்தி முடித்தனர். மேலும் விழுப்புரம் மாம்பழப்பட்டு
சாலையைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இளைஞர் செந்தில் காதலித்தார் என்பதற்காக ஒரு கை, ஒரு
கால் வெட்டப்பட்டு இரயில் தண்டவாளத்தில் போடப்பட்டபிறகு தப்பியுள்ளார்.