Wednesday, August 12, 2015

ஜெயலலிதா ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான சாதிவெறி தாக்குதல்களும், கலவரங்களும் தொடர்கின்றன!


ஜெயலலிதா ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான சாதிவெறி தாக்குதல்களும், கலவரங்களும் தொடர்கின்றன!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!

மேல்சாதிப் பெண்ணை காதலித்ததற்காக தருமபுரி இளவரசனை அடுத்து சேலம் மாணவர் கோகுல்ராஜ் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர், பறையர் சாதியைச் சேர்ந்த கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டம் வேளாள கவுண்ட சாதிப்பெண்ணை காதலித்ததற்காக தலைத்துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டு இரயில் தண்டவாளத்தில் வீசப்பட்டுள்ளார். கோகுல்ராஜ் கொலையை தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை என்ற சாதிய அமைப்பின் தலைவர் யுவராஜ் கும்பல்தான் செய்துள்ளது. இவர் ‘காதலை பிரிப்போர்’ சங்கம் அமைத்து காதலர்களை பிரிப்பதையும் அவர்களைத் தாக்குவதையும் ஒரு வேலையாகக் கொண்டு செயல்படுவதாக அவரின் கூட்டாளிகள் 6 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அடுத்து, கோகுல்ராஜ் கொலை ஏற்படுத்திய அதிர்ச்சி விலகும் முன்பே சேலம் வாழப்பாடி அருகில் உள்ள சோமம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் வன்னிய சாதியைச் சேர்ந்த பெண்ணை சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்டதால், சோமம்பட்டி தலித் மக்களின் வீடுகளுக்கு வன்னிய சாதிவெறியர்கள் தீவைத்து கொளுத்தி சாதிக் கலவரத்தை நடத்தி முடித்தனர். மேலும் விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இளைஞர் செந்தில் காதலித்தார் என்பதற்காக ஒரு கை, ஒரு கால் வெட்டப்பட்டு இரயில் தண்டவாளத்தில் போடப்பட்டபிறகு தப்பியுள்ளார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தொடரும் வன்கொடுமைகள்

இவ்வாறு காதலித்து சாதிமறுப்புத் திருமணம் செய்ததற்காக ‘கௌரவக் கொலை’ என்ற பேரில் மேல்சாதிப் பெண்களையும், தலித் சாதி இளைஞர்களையும் “சாதி ஆணவக் கொலைகள்” புரிவது, சாதிக் கலவரங்களை நடத்துவது என்பது ஒன்றும் புதிதல்ல. மாறாக, இது நாடு முழுவதும் மேல்சாதி ஆதிக்கச் சக்திகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்திவரும் பல்வேறு வன்கொடுமைகளின் தொடர்ச்சியேயாகும்.

ஜனநாயக உரிமை மறுப்பு, பொது உரிமை மறுப்பு, மனித உரிமை மறுப்பு என தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான சாதி தீண்டாமை வன்கொடுமைகளும், கலவரங்களும் நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வட இந்தியாவில் பல மாநிலங்களில் “காப் பஞ்சாயத்து” என்ற பெயரில் நிலப்பிரபுத்துவ சாதி ஆதிக்கம் காப்பாற்றப்படுகிறது. இத்தகைய சாதிப் பஞ்சாயத்துக்கள் மத, சாதி கௌரவத்தை பாதுகாப்பது என்ற பேரில் காதல் திருமணங்களுக்கு எதிராக “சாதி ஆணவக் கொலைகளை” நிறைவேற்றி வருகின்றன. மேல்சாதிப் பெண்கள் பிற கீழ்ச் சாதியினரைக் காதலிப்பதை கௌரவக் குறைவாகக் கருதுகின்ற இந்த சாதிவெறிக் காடையர்கள், தலித் பெண்களை கற்பழித்து கொலை செய்வதை புனிதமாகக் கருதுகின்றனர். உ.பி.யில் இரண்டு தலித் சிறுமிகளை கற்பழித்து கொலை செய்து மரத்தில் தொங்கவிட்டதை நாடே கண்டது.

தேசிய அளவில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை அதிகளவில் நடக்கும் 5 மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்டோர் 213 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 192 கொடும் தாக்குதல்கள், 118 கற்பழிப்பு சம்பவங்கள், 43 தீவைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மேல் சாதிப் பெண்களை காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்ததைவிட மேல் சாதியினர் தாழ்த்தப்பட்ட பெண்களை கற்பழித்து சீரழித்ததுதான் அதிகமாகும். ஆனால் இவர்கள் யாரும் தண்டிக்கப்படவே இல்லை.

மேலும் தமிழகத்தில் 7,000க்கும் மேற்பட்ட கிராமங்களில் தேநீர் கடைகளில் தனிக்குவளை வைத்து தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. ஒரு தலித், பஞ்சாயத்து தலைவரானதை எதிர்த்து 7 பேர் மேலவளவில் படுகொலை செய்யப்பட்டது, திண்ணியத்தில் மலம் திண்ண வைத்தது, பொதுக்கிணற்றில் நீர் எடுக்கத்தடை, சுடுகாட்டுக்குப் பாதை மறுப்பு என தீண்டாமை வன்கொடுமைகள் தொடர்கின்றன. அண்மையில் இராஜஸ்தானில் தலித் மாப்பிள்ளை குதிரையில் ஏறி திருமண ஊர்வலம் நடத்தியதற்காக தாக்கப்பட்டார். உ.பி.யில் ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் இரண்டு தலித் சகோதரர்கள் வெற்றி பெற்றதை பொறுக்காமல் மேல்சாதியினர் கல்லால் அடித்தது என குடிநீர் முதல் சுடுகாடு வரை மேல்சாதி ஆதிக்கம் தொடர்கிறது.

பிற்படுத்தப்பட்ட சாதி ஆதிக்கச் சக்திகளின் எதிர்ப்புரட்சிகர தாக்குதல்கள்

திவ்யா-இளவரசன் பிரச்சினைக்குப் பிறகு தமிழ்நாட்டில் வன்னிய சாதி வெறியர் இராமதாசால் முன்னெடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான பிரச்சாரங்களும், சாதி சங்கங்களின் ஒருங்கிணைப்பும் இன்று தலித் சாதியினருக்கு எதிரான ஒரு அணிசேர்க்கையை உருவாக்கியுள்ளது. தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள் அரசியல் பொருளாதார ரீதியாக முன்னேறிவிட்டார்கள். எனவே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டை இரத்து செய்யவேண்டும். பொதுத் தொகுதிகளை ஒடுக்கக்கூடாது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை திருத்த வேண்டும். நாடகக் காதலை தடுக்க திருமணச் சட்டத்தை திருத்த வேண்டும் என்று பிற்படுத்தப்பட்ட சாதிமக்களை தலித் மக்களுக்கு எதிராக சாதிவெறி ஊட்டி திரட்டுகின்றனர். அதன் மூலம் தேர்தலுக்கான வாக்கு வங்கியை உருவாக்குவதுடன், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பண்ணையடிமைத்தனத்தை திணிக்கின்றனர். இதற்கு தமிழ்நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சாதி வெறியர்களின் பின்னால் அணிதிரட்டப்படுகின்றனர்.

தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் அரசியல் பொருளாதார ரீதியாக முன்னேறிவிட்டார்கள் என்றவாதம் எவ்வளவு பெரிய மோசடி என்பதை அண்மையில் இந்திய அரசு வெளியிட்டுள்ள சமூகப் பொருளாதார சாதிக் கணக்கெடுப்பு – 2011” அறிக்கை வெட்டவெளிச்சமாக்கிவிட்டது. அத்துடன் இந்திய அரசு கடந்த கால்நூற்றாண்டாக அமல்படுத்திவரும் ஏகாதிபத்திய ஆதரவு புதிய தாராளக் கொள்கைகள் கிராமப்புற விவசாய மகக்ளின் வாழ்க்கயை எவ்வாறு சீரழித்துள்ளன என்பதையும் அது அம்பலப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கிராமப்புறங்களில் வசிக்கும் மகக்ளில் 40 சதவீதம் பேர் வறுமையில் வாடுவதாக அந்த அறிக்கை கூறுகிறது. அத்துடன் “கிராமப் புறத்தில் மொத்தமுள்ள 17.9 கோடி குடும்பங்களில் 10.8 கோடி (56%) குடும்பங்களுக்கு ஒரு பிடிமண் கூட இல்லை. 13.4 கோடி (74.5%) குடும்பங்கள் ரூ. 5,000க்கும் குறைவாகவே வருமானம் ஈட்டுகின்றன. 9.16 கோடி குடும்பங்கள் உடலுழைப்பை மட்டுமே நம்பியுள்ளன. 4.08 லட்சம் குடும்பங்கள் குப்பை பொறுக்கியும், 6.6 லட்சம் குடும்பங்கள் பிச்சையை நம்பியும் வாழுகின்றன” என்று அந்த அறிக்கை கூறுகிறது. மேலும் போதிய படிப்பு வசதி இல்லாததால் தாழ்த்தப்பட்ட மக்கள் நகர்புறத்திற்கு, குடிபெயரமுடியவில்லை. எனவே அவர்களின் மக்கள் தொகை கிராமப் புறத்தில் 21 சதவீதத்திலிருந்து 25.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிராமப்புற வறுமையின் தாக்குதல் தாழ்த்தப்பட்ட மக்களை கடுமையாக பாதித்துள்ளது.

1947ஆம் ஆண்டு அரசு அதிகார மாற்றத்திற்குப்பின் நிலப்பிரபுக்களின் கைகளிலிருந்து நிலம் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் உள்ள மேல்தட்டுப் பிரிவினருக்கு வழங்கப்பட்டது. நிலச்சீர்திருத்தச் சட்டங்களால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலம் கிடைக்கவில்லை. “பாரம்பரியமான நிலவுடமை கூட்டம் வெகுநாளைக்கு முன்பே நகரத்திற்கு குடிபெயர்ந்துவிட்டன. பெரும்பகுதி நிலம் இடைநிலைச் சாதிகளை சார்ந்தவர்களின் கைகளுக்கு மாற்றப்பட்டுவிட்டது. தலித் சாதியைச் சார்ந்த பெரும்பகுதியினர் நிலமற்ற கூலி விவசாயிகளே. அவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கு இந்த இடைநிலை சாதிகளைத்தான் நம்பியுள்ளனர்.” என விடுதலை சிறுத்தகைகள் தலைவர்களின் ஒருவரான ரவிக்குமார் கூறுகிறார். இத்தகைய மேல்தட்டுப்பிரிவினர் கந்துவட்டி, அரசாங்கக் காண்டிராக்ட்டுகள் பெறுதல், ரியல் எஸ்டேட், மணல் குவாரிகள் அமைத்தல் மூலம் கிராமப்புற ஆதிக்க சக்திகளாக பலமாக வளர்ந்துள்ளனர். அவர்கள் மத்திய மாநில ஆளும் வர்க்கங்களோடு சமரசம் செய்துகொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சலுகைகளை பறிப்பதில் போட்டிப் போடுகின்றனர். சாதி தீண்டாமை வன்கொடுமைகள் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களை அடிமைப்படுத்த துடிக்கின்றனர்.

கடந்த காலங்களில் இவர்கள் பார்ப்பனிய எதிர்ப்பு, சமூக நீதி, தீண்டாமை ஒழிப்பு என்று பேசி ஒடுக்கும் பார்ப்பன சாதிக்கு எதிராக ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதிகளை ஒன்றிணைத்து சாதி சீர்திருத்தம் பேசினர். ஆனால் தற்போது பிற்படுத்தப்பட்ட சாதிய இயக்கங்கள் அரசு அதிகாரத்தை சுவைப்பதற்காக இந்துத்துவப் பார்ப்பனிய ஒடுக்கும் சாதிகளோடு இணைந்துகொண்டு ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு எதிராக ஒரு எதிர்ப்புரட்சிகர தாக்குதல்களை நடத்திவருகின்றன. அன்று சமூக நீதி பேசியவர்கள் இன்று சாதிவெறியர்களாக மாறியுள்ளனர்.  “வரலாற்று ரீதியாக தமிழகத்தின் அரசியல் என்பது பார்ப்பனர் மற்றும் பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினைகளை ஒட்டியே இருந்தது. ஆனால் இன்று தலித் மற்றும் தலித் அல்லாதவர்களுக்கான போராட்டமாக மாறியுள்ளது. சாதிவாத கட்சிகளின் வலிமையான பிரச்சாரம் பல்வேறு சாதிகளை தலித்துகளுக்கு எதிராக திருப்பியுள்ளது” என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் சம்பத் கூறுவதும் இதைத்தான் நிரூபிக்கிறது. 

ஆம்பூரில் இசுலாமியர் மீதான தாக்குதல்

ஆம்பூரில் ஷமீல் அகமது என்ற இசுலாமிய இளைஞர் ஒருவரை, அவரின் கள்ளக் காதலி காணாமல் போனது சம்பந்தமாக விசாரணைக்கு அழைத்துச் சென்று காவல் துறையினர் தாக்கியதால் மரணமடைந்தார். இளைஞர் மரணத்திற்குக் காரணமான காவல் அதிகாரிகளை பணி நீக்கம் செய்யுமாறு இஸ்லாமிய மக்கள் கடும்கோபத்தை வெளிப்படுத்தி தாக்குதல் நடத்தினர். காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் முறையான விசாரணை செய்திருந்தால் காணாமல் போனதாகக் கூறப்பட்ட பவித்ரா என்ற பெண்ணை கண்டுபிடித்திருக்க முடியும். ஆனால் இசுலாமியர்கள் என்றாலே சமூக விரோதிகள், பயங்கரவாதிகள் என்று கருதி செயல்படும் அரசு அதிகாரிகளின் தவறான அணுகுமுறைதான் இந்தக் கலவரங்களுக்குக் காரணமாகும். ஆனால் தற்போது 144 தடை போட்டு இஸ்லாமிய இளைஞர்களை தொடர்ந்து காவல்துறை கைதுசெய்து வருகிறது. அர்ஜூன் சம்பத் போன்ற இந்துமத அமைப்பினரும், பா.ஜ.க.வினரும் இச்சம்பவத்தை மதமோதலாக மாற்ற முயற்சிக்கின்றனர். தவறு செய்த காவல்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்யக் கோருவது, 144 தடையை நீக்கக் கோருவது, கைது செய்த இசுலாமியரை விடுதலை செய்யக் கோருவது ஜனநாயக சக்திகளின் கடமையாகும். அத்துடன் இந்து மத பாசிச சக்திகளை எதிர்த்து சிறுபான்மை மதத்தினரும் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபடவேண்டும். 

மேலும் இன்று தமிழகத்தில் இந்துமத வெறி பாசிசமும், சாதிவாத பாசிசமும் நேரடியாகவும், மறைமுகமாகவும் கூட்டு சேர்ந்து செயல்படுகின்றன. மத்திய மாநில அரசுகள் புதிய தாராளக் கொள்கைகளை அமல் படுத்துவதால் எழும் மக்களின் போராட்டங்களை திசை திருப்பவும், மக்களை பிளவுப்படுத்தவும் சாதி, மதக் கலவரங்களை பயன்படுத்திக் கொள்கின்றன. அத்தகைய பிற்போக்கு சக்திகள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கின்றன. மோடி தலிமையிலான மத்திய அரசு தனது இந்துத்துவ பாசிச நடவடிக்கைகளை நாடுமுழுவதும் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அண்மையில் தமிழகம் வந்த பா.ஜ.க.வின் தலைவர் அமீத் ஷா பிற்படுத்தப்பட்ட சாதி தலைவர்களை கொண்டு தாழ்த்தப் பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்துப் பேசியதன் மூலம் சாதி, மதவாத பாசிச சக்திகள் திட்டம் போட்டு செயல்படுவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

சாதிவெறி சக்திகளுக்கு துணைபோகும் ஜெயலலிதா அரசாங்கம்

தமிழகத்தை ஆளும் ஜெயலலிதா அரசாங்கம் சாதிவெறி சக்திகளுக்கு சாமரம் வீசுகிறது. “சாதி ஆணவக் கொலையில்” ஈடுபடுபவர்கள் மீதோ, சாதிக்கலவரம் நடத்துபவர்கள் மீதோ “வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கவோ, உரிய தண்டனை வாங்கிக்கொடுக்கவோ எள்முனை அளவுகூட முயற்சிக்கவில்லை. வன்கொடுமை புகாரின் பேரில் உடனடியாக வழக்குப் பதியாமல், நீதிமன்ற தலையீட்டுக்கு பின்பே பதிவுசெய்யப்படுகிறது. அவ்வாறு பதியப்பட்ட வழக்குகளில் 70 சதவீதம் வழக்குகள் ஆதாரம் இல்லை என முடிக்கப்பட்டுள்ளன” என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கூறியுள்ளார். தமிழக பட்ஜெட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கிய 18% நிதியில் 2% கூட அவர்களுக்காக பயன்படுத்தவில்லை என்றால், ஜெயலலிதா அரசாங்கம் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கொண்டுள்ள அக்கறை என்னவென்று தெரியவில்லையா? மேலும் பா.ம.க. உள்ளிட்ட சாதிவெறிக் கட்சிகள் மாநாடுகள் நடத்தவும், பொதுக்கூட்டங்கள் நடத்தவும் அனுமதிக்கின்ற தமிழக அரசு, தாழ்த்தப்பட்ட சாதி மக்களும், புரட்சிகர இயக்கங்களும் சாதிவெறிக்கு எதிராக ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்துவதை தடைசெய்கிறது. சுவரொட்டி ஒட்டுபவர்களைக்கூட கைது செய்கிறது. தருமபுரியில் இளவரசன் நினைவுநாளை ஒட்டி 144 தடை உத்தரவு போட்டு தொடர்ந்து ஒடுக்கப்பட்ட சாதிமக்களின் குரல்வளையை நெறிக்கிறது. இமானுவேல் சேகரன் நினைவுநாளை தடைசெய்து துப்பாக்கி சூடு நடத்தி 7 பேரை கொன்ற ஜெயலலிதா, முத்துராமலிங்க தேவர் நினைவு நாளை குரு பூஜையாக அறிவித்து 2 ½ கிலோ தங்கக்கவசம் அணிவிக்கிறார். கிராமப்புறங்களில் உள்ள பெரும்பான்மை மக்களின் வாக்கு வங்கிக்காக பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்த ஆதிக்கச் சக்திகளின் சாதிவெறிக்கு துணைபோகிறது ஜெயலலிதா ஆட்சி. 

ஜெயலலிதா இயல்பாகவே இந்துமதவாத கருத்துகளில் ஊறியவர். தற்போது ஊழல் வழக்கில் தண்டனையிலிருந்து தப்பிக்க பா.ஜ.க.வோடு உடன்பாடு செய்துகொண்டு இந்துத்துவ பாசிச அமைப்புகள் தமிழகத்தில் காலூன்ற இடமளிக்கிறார். தமிழகத்தை குஜராத்தாக மாற்ற இந்துத்துவ சக்திகள் வெறியோடு செயல்படுகின்றன. 

கருணாநிதி ஆட்சியிலும் இதே நிலைதான். தி.மு.க., அ.தி.மு.க. போன்ற திராவிட கட்சிகள் அனைத்தும் சாதிவாதக் கட்சிகளை ஆதரிப்பதிலும் இந்துத்துவ பா.ஜ.க.வை ஆதரிப்பதிலும் போட்டிபோடுகின்ற கட்சிகளாகவே இருக்கின்றன. திராவிட கட்சிகள் பேசிய சமூக நீதி என்பது பிற்படுத்தப்பட்ட சாதி நலன்களை கொண்டதே ஒழிய தாழ்த்தப்பட்ட சாதி நலன்களிலிருந்து பேசவில்லை. தர்மபுரி சாதி கலவரத்திலும் இளவரசன் மற்றும் கோகுல்ராஜ் கொலையிலும் இக்கட்சிகளின் பங்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இல்லை.

அகில இந்திய ஆளும் வர்க்கக் கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ் கட்சி போன்றவை மதவாதத்தையும் சாதிவாதத்தையும் பயன்படுத்தி இந்திய அரசை பாசிச மயமாக்குவதிலும் மக்களை பிரித்தாளுவதிலும் போட்டிப் போடும் கட்சிகளேயாகும். 

சாதி, மத பாசிசத்திற்கு எதிராக அணிதிரள்வோம்

திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி, கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் மற்றும் பல்வேறு தாழ்த்தப்பட்ட சாதி அமைப்புகள் “சாதி ஆணவக் கொலைகளுக்கு” எதிராகவும், சாதிகலவரங்களுக்கு எதிராகவும் கண்டனக் குரல் எழுப்புகின்றன. இருக்கும் வன்கொடுமை சட்டங்களை கறாராக அமல்படுத்தவும், “சாதி ஆணவக் கொலைகளை” தடுத்து நிறுத்தவும் புதிய சட்டங்கள் இயற்ற வேண்டும் என மத்திய மாநில அரசுகளை கோருகின்றன. நீதிமன்றங்களும், அதிகாரவர்க்கமும் சாதிவெறியில் மூழ்கிக்கிடக்கும் போது இத்தகையச் சட்டங்களால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுத்து நிறுத்திவிட முடியாது. மாறாக தலித் அமைப்புகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும். அத்துடன் புரட்சிகர ஜனநாயக இயக்கங்களோடு கூட்டணி அமைத்து சாதி வெறி சக்திகளுக்கு நேர்படித்தான முழக்கங்களை முன்வைத்து போராட முன்வரவேண்டும். சாதித் தீண்டாமையை ஒழிக்க, சாதிவெறிக் கலவரங்களைத் தடுத்து நிறுத்த அமைப்பு ரீதியாக அணிதிரள்வது உடனடி தேவையாகும். மாறாக கூட்டணி மந்திரி சபை என்ற திருமாவளவனின் முழக்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்த விடிவையும் தாரது. 

எனவே;
  • இந்திய அரசாங்கம் அமல்படுத்திவரும் புதியகாலனிய வேளாண்மைக் கொள்கை, குழுமமயத்தின் மூலம் பன்னாட்டு கம்பெனிகளின் கைகளில் நிலங்களை குவிப்பதை எதிர்த்து தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்டு அனைவருக்கும் நிலம் கிடைத்திட நிலச் சீர்த்திருத்தத்திற்காகப் போரடுதல்;
  • கிராமப்புறங்களில் தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட பெரும்பகுதி மக்களை ஓட்டாண்டியாக்கி வரும் புதிய தாராளமயக் கொள்கைகளை எதிர்த்தல்;
  • கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை புறக்கணித்து மேல்சாதி ஆதிக்கம் நிறுவப்படுவதை ஒழித்தல்;
  • தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் உடனடியாக குடிமனைப் பட்டா வழங்குதல்; கோவில், குளம், சுடுகாடு போன்றவற்றில் தீண்டாமையை ஒழித்தல்;
  • சாதியின் பெயரால் சலுகைப் பெற்றவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சலுகைகளை ஒழிக்க வன்முறையில் ஈடுபடும்போது அவர்களின் இட ஒதுக்கீடு சலுகைகளை பறித்தல்;
  • காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்பவர்களுக்கு பாதுகாப்பும், சலுகைகளும் கோருதல்;
  • மதமாற்றத் தடைச் சட்டம், மாட்டுக்கறி தடைச் சட்டத்தை எதிர்ப்பது;
  • நீதிதுறையும்,  அதிகாரவர்க்கமும் சாதிவாத மதவாத கருத்துக்களில் மூழ்கியுள்ள இன்றைய சூழலில் சாதி, மத பாசிசத்தை ஒழிக்க மக்கள் அதிகாரத்திற்காக போராடுதல்;
என்ற நேர்ப்படித்தான திட்டத்தின் அடிப்படையில் அமைப்பு ரீதியில் ஓரணியாக திரண்டு போராட தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட அனைத்து சாதி உழைக்கும் மக்களையும், சிறுபான்மை மதத்தினரையும் அறைகூவி அழைக்கிறோம்.

No comments:

Post a Comment

விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.