நாட்டை அமெரிக்காவின் புதியகாலனிய களமாக மாற்றுவதை
எதிர்த்து அணிதிரள்வோம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!
நரேந்திரமோடி தலைமையில் பா.ஜ.க.வின்
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந் ததை பெரும் சாதனையாக அக்கட்சி
நாடு முழுவதும் கொண்டாடு கிறது. ஆனால் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு
கூட்டணி அரசாங்கம் கடைப்பிடித்த நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய அமெரிக்க
ஏகாதிபத்திய மேலாதிக்க ஆதரவு மற்றும் புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் புதிய தாராளக்
கொள்கைகளைத்தான் மூர்க்கத் தனமாக அமல்படுத்தி வருகிறது. அது மென்மேலும் நாட்டின் அரசியல்
பொருளாதார நெருக்கடிகளை தீவிரப் படுத்தியே வருகிறது. “நல்ல காலம் வருகிறது”, பொருளாதார
வளர்ச்சி, வேலை வாய்ப்பு, ஊழலற்ற ஆட்சி என்ற வாக்குறுதிகளெல்லாம் பகற் கனவாய் போய்விட்டன.
“டிஜிட்டல் இந்தியா”, “ஸ்கில் இந்தியா”, “மேக் இன் இந்தியா” என்ற பேரில் நாடு அந்நிய
மூலதனத்தின் பிடியில், குறிப்பாக அமெரிக்காவின் புதிய காலனிய களமாக மாற்றப்படுகிறது.
அந்நிய மூலதனத்தை ஈர்த்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பது என்ற கனவு
கலைந்துவிட்டது. நாட்டின் பொருளாதாரம் பேரழிவை நோக்கிப் பயணிக்கிறது. பங்குச் சந்தை
வேகமாக சரிந்துகொண்டு வருகிறது. ரூபாயின் மதிப்பும் அதலபாதாளத்தை நோக்கி வீழ்ச்சியடைகிறது.
மோடியை நம்பிய கார்ப்பரட்டுகளே “நல்ல காலம் வருமா” என்ற சந்தேகத்தை எழுப்புகின்றனர்.
மோடி ஆட்சி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்திற்குச் சேவை செய்வது, புதிய தாராளக்
கொள்கைகளை அமல்படுத்தி நாட்டை அமெரிக் காவின் புதிய காலனியாக மாற்றுவது, இந்துத்துவப்
பாசிசத்தைக் கட்டியமைத்து இந்திய அரசை பாசிச மயமாக்குவது ஆகிய மூன்று பேரபாயத்தில்
நாட்டை நிறுத்தியுள்ளது.
மோடிகும்பல், இந்திய குடியரசு
தினவிழாச் சிறப்பு விருந்தினராக அமெரிக்க ஏகாதிபத்திய யுத்தவெறியன் ஒபாமாவிற்கு சிவப்புக்
கம்பள வரவேற்பு அளித்து, குடைபிடித்ததன் மூலம், தாங்கள் அமெரிக்க ஏகாதிபத் தியத்தின்
தாசானுதாசர்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டது. ஒபாமாவின் இந்தியப் பயணத்தின்
போது, அமெரிக்கா தனது சரிவடைந்துவரும் உலக மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதற்கான ஏகாதிபத்திய
நடவடிக்கைகளுக்கும், ஆக்ரமிப்புப் போர்களுக்கும் சேவை செய்கின்ற ஒரு நாடாக இந்தியாவை
மாற்றுவதிலும்; தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வரும் உலகப்பொருளாதார நெருக்கடிகளிலிருந்து
அமெரிக்க முதலாளிகளை மீட்பதற்கு இந்தியாவைத் தனது புதிய காலனிய சுரண்டல் களமாக மாற்றுவதிலும்
அமெரிக்க ஏகாதிபத்தியம் வெற்றி பெற்றுள்ளது.
அமெரிக்காவின் உலகமேலாதிக்கத்திற்கு சேவை
செய்யும் மோடிகும்பல்
அமெரிக்க ஏகாதிபத்தியம், சரிந்துவரும்
தனது உலக மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதற்கு, தனக்குப் போட்டியாக எழுந்துவரும் சீனாவைக்
கட்டுப்படுத்தி ஆசியாவில் தனது மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதற்கான ஆசிய-பசிபிக் திட்டத்திற்கு
மோடிகும்பலைப் பணிய வைத்துள்ளது. "தென் சீனக் கடலில் கப்பல்போக்குவரத்திற்கும்,
விமானங்கள் பறப்பதற்கும் இரண்டு நாடுகளும் சேர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடும்"
என்று கூறும் ஒபாமா - மோடி டெல்லி கூட்டறிக்கை அதை உறுதிப்படுத்துகிறது. ஆசியாவில்
சீனாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் இந்தியாவையும் சேர்த்துக்கொண்டு
அமெரிக்காவின் தலைமையில் ஒரு இராணுவக் கூட்டணி அமைப்பதற்கு ஒபாமா இந்தியாவைப் பணியச்
செய்துள்ளார். இந்தக் கூட்டணியில் இந்தியாவைச் சேர்ப்பதை அமெரிக்கா மிகவும் முக்கியத்துவமாகக்
கருதுகிறது.அதுஒபாமா பயணத்தின் மூலம் நிறைவேறியுள்ளது.
அத்துடன் ஒபாமா தனது டெல்லி பயணத்தின்போது,
அமெரிக்க - இந்திய இராணுவ ஒப்பந்தத்தை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது என்ற உடன்படிக்கையையும்
நிறைவேற்றியுள்ளார். அதன்படி, இரண்டு இராணுவங்களுக் கிடையில் ஒத்துழைப்பு மற்றும் கடற்படைகளின்
கூட்டுப் பயிற்சிகள் மூலம், பயங்கரவாத ஒழிப்பு என்ற பேரில், அமெரிக்கா தனது உலக மேலாதிக்கத்திற்காக
நடத்திவரும் ஆக்ரமிப்புப் போர்களுக்குச் சேவை செய்கின்ற ஒரு எடுபிடி நாடாக இந்தியா
தொடர்ந்து செயல்படுவதற்கு உத்தரவாதப் படுத்தியுள்ளார். அத்துடன் இவ்வொப்பந்தத்தின்படி
அமெரிக்காவிடமிருந்து பல இலட்சம்கோடி ரூபாய்களுக்கு ஆயுதத் தளவாடங்களை இறக்குமதி செய்வதற்கும்,
இரண்டு நாடுகளும் சேர்ந்து கூட்டாகப் பாதுகாப்பு சாதன உற்பத்தியில் ஈடுபடுவதற்கும்
உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மோடி கும்பல் அமெரிக்காவின் இராணுவத் தளவாட உற்பத்தியில்
ஈடுபடும் முதலாளிகளுக்கு இந்தியாவின் பெரும்
சந்தையைத் திறந்துவிட்டுள்ளதோடு, நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கடந்த எட்டு ஆண்டுகளாக
முடங்கிக்கிடந்த அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை, அதில் நிலவிய முட்டுக்கட்டைகளை
நீக்கி செயல்பாட்டுக்குக் கொண்டுவந்துவிட்டதாக மோடி கும்பல் பெருமை அடித்துக் கொள்கிறது.
ஆனால் அமெரிக்கா வழங்கும் அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டை இந்தியாவே
ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டுவிட்டது. இந்திய
அணு உலை விபத்துச் சட்டத்துக்கு மாறாக, அமெரிக்கா அமைக்கும் ஒவ்வொரு அணு உலைக்கும்
ரூ.1500 கோடி நட்ட ஈட்டை இந்திய அரசாங்கமே ஏற்றுக்கொள்வது என்றும்; விபத்து நடந்தால்
அதற்கு அமெரிக்க முதலாளிகளைப் பொறுப்பாக்கி எந்த விதமான கிரிமினல் நடவடிக்கையும் எடுக்கமாட்டோம்
என்ற நிபந்தனை அடிப்படையில்தான் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தகைய ஒரு
துரோக ஒப்பந்தம் இந்திய மக்களின் உயிர்ப்பாதுகாப்புக்கு வேட்டு வைப்பதோடு, சோதிக்கப்படாத
அமெரிக்காவின் அணு உலைகளை இந்தியாவின் தலையில் கட்டுவதற்கும் வழிவகுத்துள்ளது. எல்லாவற்றுக்கும்
மேலாக அமெரிக்க - இந்திய அணுசக்தி ஒப்பந்தம் இந்திய நாட்டின் அணுசக்தித் துறையின் மீது
அமெரிக்காவின் கட்டுப்பாட்டை நிறுவுவது மட்டுமல்ல, இந்திய நாட்டின் “சுயேச்சையான” வெளியுறவுக்
கொள்கைகளைக் கைவிட்டு, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள
வேண்டும் என்ற அரசியல் ரீதியான நிபந்தனைகளையும்
உள்ளடக்கியதாகும்.
இவ்வாறு மோடிகும்பல் அமெரிக்காவின்
ஆணைகளுக்கு அடிபணிந்து அமெரிக்காவின் ஆசிய-பசிபிக் திட்டத்திற்கு இணங்கிப்போவது; அமெரிக்காவுடனான
இராணுவ, அணுசக்தி ஒப்பந்தங்களைத் தொடர்ந்து அமல்படுத்தி அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்குச்
சேவை செய்வது என்ற முடிவுகளை அமல்படுத்துகிறது. இதன் மூலம் இந்தியா இது நாள்வரை கடைப்பிடித்துவந்த
கூட்டுச் சேராக் கொள்கைகளை கைவிட்டுவிட்டது. தென் ஆசியாவிலும், ஆசியாவிலும் இந்தியாவின்
அண்டை நாடுகளோடு பகைமை களுக்கும், போர்களுக்கும் வழிவகுத்துள்ளது. ஆசியாவில் போர்மேகம்
சூழ்கின்ற வகையிலான அமெரிக்காவின் சதிக்குத் துணை போகிறது. மோடி கும்பல் அமெரிக்காவின்
நாடுபிடிக்கும் கெடுபிடிப் போர்களுக்கு இந்தியாவைப் பகடைக்காயாக மாற்றுகிறது. அது இந்திய
மக்களுக்கும், உலக மக்களுக்கும் செய்யும் ஒரு மாபெரும் துரோகமாகும்.
ஒபாமாவின் இந்திய பயணம் ஆசிய
மேலாதிக்கத்திற்கான தனது இராணுவக் கூட்டணியில் இந்தியாவை இணைத்தது மட்டுமல்ல, இந்தியாவுடனான
அரசியல் பொருளாதார ஒப்பந்தங்களின் மூலம் இந்திய நாட்டை அமெரிக்காவின் பிடிக்குள் கொண்டு
வந்துள்ளது. இராணுவத்தளவாட உற்பத்தி, அணு சக்தித் துறைகள் மட்டுமல்லாது, புதிய பசுமை
மற்றும் பருவநிலை ஒப்பந்தங்கள், அறிவுசார் சொத்துரிமை தொடர்பான ஒப்பந்தங்கள், அமெரிக்க-இந்திய
முதலாளிகளின் கூட்டமைப்பின் அனைத்து பரிந்துரைகளையும் ஏற்றுக்கொண்டு அமல்படுத்துவதாக
மோடிகும்பல் அறிவித்துள்ளது. அத்துடன் மோடி தனது அமெரிக்க சூறாவளிச் சுற்றுப் பயணத்தின்போது
ஒபாமாவுடன் இணைந்து அமெரிக்காவைச் சார்ந்த போயிங், கே.கே.ஆர், பிளாக் ராக், ஐ.பி.எம்,
ஜெனரல் எலக்ட்ரிக், கோல்டுமேன் சாக்ஸ், கூகுள், பெப்சி, சிட்டிகுரூப், கார்கில், கேட்டர்
பில்லர் போன்ற நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் பேசினார். இந்தியாவில் முதலீடு செய்யும்படி
அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இவ்வாறு அழைப்பு விடுத்ததன் மூலம் மோடிகும்பல் இந்திய
நாட்டை அமெரிக்காவின் புதிய காலனிய களமாக மாற்றி வருகிறது.
உலகப் பொருளாதார நெருக்கடியும் ஊக வாணிபம்
பெருகுதலும்
அந்நிய
மூலதன வருகைதான் நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை என்று மோடிகும்பல் வாதிடுகிறது. கடந்தகால
அனுபவங்களில் இருந்து பாடம் கற்க மறுக்கிறது. இன்றையை உலகப் பொருளாதாரம் மந்த நிலையில்
தொடரும்போது, அந்நிய மூலதனம் குவிந்து நாடு வளர்ச்சிப் பாதையில் முன்னேறுவதாகவும்,
இந்தியா ஒரு ‘இனிப்புப் பிரதேசத்தில்’ பிரவேசிப்பதாகவும் மோடிகும்பல் கூறுகிறது. உண்மை
நிலை என்ன? இத்தகைய வளர்ச்சியால் பயனடைவது யார்?
2008-ஆம் ஆண்டு அமெரிக்காவில்
ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உலகம் முழுவதும் பரவி அது ஒரு மந்த நிலையில் தொடர்கிறது.
2015-16க்கான உலகளாவிய ஒட்டு மொத்த உற்பத்தி 3.5 சதவீதமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு
பொய்த்துவிட்டது. அதில் 0.3 சதவீதம் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று ஐ.எம்.எப் அறிக்கை
கூறுகிறது. வரலாறு காணாத அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு, இரும்பு எஃகு உள்ளிட்ட முதலாளித்துவ
பொருளுற்பத்திக்கு அவசியமான பொருட்களின் விலை கணிசமாகக் குறைந்தும் கூட பொருளாதாரம்
வளர்ச்சியடையவில்லை. மக்களின் வாங்கும் சக்திக் குறைவால் ஏற்பட்டுள்ள மிகை உற்பத்தி
நெருக்கடி மீள வழியின்றித் தொடர்கிறது.
பொருளாதாரத்தில் மந்த நிலை தொடர்வது,
உற்பத்தி வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைவதன் விளைவாக ஊக வாணிபமும் சொத்துக்களை ஊதிப்பெருக்கிக்
காட்டுவதும் வரலாறு காணாத அளவிற்கு உச்ச நிலையை எட்டியுள்ளது. ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை
முதலீடுகள் போன்ற ஊக வாணிபத்தின் மூலம் நிதி மூலதனக் கும்பல்களின் சொத்துக்கள் பன்மடங்கு
பெருகியுள்ளன. இத்துறைகளில் மொத்தச் சொத்துக்குவிப்பு என்பது 2013 மத்தியில் 20.1 டிரில்லியன்
டாலர்களாக இருந்தது 2015 நடுப்பகுதி வரையிலான ஒரே ஆண்டில் 263 டிரில்லியன் டாலர்களாக
பன்மடங்கு பெருகியுள்ளது. அது போலவே உற்பத்தியில் ஈடுபடும் பன்னாட்டுத் தொழில் கழகங்களின்
சொத்து மதிப்பும் பன்மடங்கு பெருகியுள்ளன. உலக அளவில் முதல் பெரும் 10 கம்பெனிகளின்
வருமானம் மற்றும் நிகரலாப மானது 2011-ல் 1.82 டிரில்லியன் டாலர்கள் மற்றும் 98.32 பில்லியன்
டாலர்களாக இருந்தது, 2014-ல் 2.2 டிரில்லியன் டாலர்கள் மற்றும் 141.04 பில்லியன் டாலர்களாக
உயர்ந்தது. உற்பத்தித் துறைகளைவிட ஊகவாணிபத் துறைகள்தான் பன்மடங்கு பெருகியுள்ளன. அத்துடன்
இன்று உலக அளவில் உயர்மட்டத்தில் உள்ள 1 சதவீதத்தினரிடம் ஒட்டு மொத்த செல்வத்தின்
50 சதவீதம் குவிந்துள்ளது.
உலகப் பொருளாதாரப் படி நிலையில்
மேல் நிலையில் உள்ளவர்களின் கைகளில் இவ்வாறு செல்வம் குவிவதற்கான காரணம், இவர்கள் ஒவ்வொரு
நாளும் புதுப்புது முறைகளில் ஊகவாணிபத்தின் மூலம், வெளிப்படையாகக் கொள்ளை யடிப்பதோடு
உழைக்கும் வர்க்கத்தினர் மற்றும் பரந்துபட்ட மக்களுக்கான சமூக நலத்திட்ட நிதிகள், ஓய்வூதிய
நிதிகள் வெட்டு, ஆட்குறைப்பு, ஆலை மூடல்கள், லே-ஆப், கட்டமைப்புத் துறைகளைக் புறக்கணிப்பது
போன்ற முறைகளில் கொடூர தாக்குதல்கள் நடத்திச் சூறையாடுவதன் மூலம் சொத்துக்களைக் குவிக்கின்றனர்.
பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், நட்ட ஈடு என்றும், ஊக்கத்தொகை என்றும் மக்களின் வரிப்பணத்தை
அரசிடமிருந்துப் பெற்றுக்கொண்டு, அந்த நிதிகளை பொருளாதார முன்னேற்றத்திற்குப் பயன்படுத்துவதற்கு
மாறாக பங்குச்சந்தைகளில் போட்டுச் சூதாட்டம் நடத்துகின்றன. பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட்,
பண வர்த்தகம் போன்ற ஊக வாணிபத்துடன் மாபெரும் ஊழல்களும் சேர்ந்து கொண்டு நிதி மூலதனக்
கும்பல்கள் தங்களது “ஆக்டோபஸ் கரங்களைப்” பரப்பி மக்களின் செல்வங்களை உறிஞ்சுகின்றன.
இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில்
புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதால் பங்குசந்தை, ரியல் எஸ்டேட் போன்ற
ஊகவாணிபத் துறைகள்தான் வளர்ச்சியடைந்துள்ளன. இதனால் வேலை வாய்ப்புப் பெருகவில்லை. இந்த
வளர்ச்சி நாட்டுக்கோ மக்களுக்கோ பயன்படவில்லை. அந்நிய மூலதனம் பில்லியன் டாலர் களாகவும்
டிரில்லியன் டாலர்களாகவும் குவிந்தாலும், அது தேசிய வருமானத்திலோ அல்லது வேலை வாய்ப்பிலோ
(1947க்குப்பிந்தைய வளர்ச்சியோடு ஒப்பிடுகையில்) வளர்ச்சியைக் கொண்டுவரவில்லை. இதுநாள்வரை
இந்தியாவில் அந்நிய முதலீடு ரூ.47.6 லட்சம் கோடிகளாக இருந்தபோதும், தேசிய வருமானத்தில்
கார்ப்பரேட்டுக்களின் பங்கு வெறும் 15 சதவீதமாகத்தான் உள்ளது.இந்த அளவுக்கு மூலதனம்
குவிந்த போதும் 20 ஆண்டுகளில் வெறும் 20 லட்சம் பேர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு அளித்துள்ளது.
ஆனால் இத்தகைய வளர்ச்சியால் பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகள்தான் பெருமளவில்
பயனடைந்தன. அவைகளின் சொத்து பன்மடங்கு பெருகியுள்ளன. பங்குச் சந்தையில் மட்டும் கடந்த
20 ஆண்டுகளில் 20 ஆயிரம் புள்ளிகள் உயர்ந்ததால் அவர்களின் சொத்துமதிப்பு ரூ.96 லட்சம்
கோடிகளாக உயர்ந்துள்ளன. மத்திய புள்ளியியல் அமைப்பின் ஆய்வின்படி 2004-2005 முதல்
2010-2011 வரையில் ரியல் எஸ்டேட் துறை மட்டும் 67 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
அந்நிய முலதனத்திற்குக் கதவைத்
திறந்துவிட்டதன் விளைவாக அந்நிய முதலீட்டாளர்கள் தங்களுக்கு எதிரான உள்நாட்டுப் போட்டியாளர்களை
அகற்றிவிட்டு இந்தியாவின் பெரும் தொழில் நிறுவனங்களைத் தங்களது பிடிக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இவ்வாறு இந்தியாவின் சொத்துக் களையும் நிறுவனங்களையும் கைப்பற்றுவது மேன்மேலும் தொடர்கின்றது.
இதன் நேரடியான விளைவாகத்தான்
நிதி மூலதனக் கும்பல்கள் மற்றும் கார்ப்பரேட்டுகளின் கைகளில் கருப்புப் பணம் குவிகின்றது.
உலக கோடீஸ்வர நிறுவனங்கள் வரி ஏய்ப்பின் மூலம் கருப்புப் பணத்தை பதுக்கிவைத்தல் என்பது
2005-ல் 11.5 டிரில்லியன் டாலர்களாக இருந்தது, 2013-ல் 32 டிரில்லியன் டாலர்களாக அதிகரித்துவிட்டது.
(இந்தியாவில் நோக்கியா, வோடோபோன் ஆகிய நிறுவனங்கள் வரி ஏய்ப்பு மூலம் பல்லாயிரக் கணக்கான
கோடிகளைச் சுருட்டியதை உலகமே அறியும்.) இத்தகைய கருப்புப் பணங்களை பதுக்கி வைப்பதில்
கிளாரிடன் போன்ற ஸ்விஸ் வங்கிகள் மட்டும் ஈடுபடவில்லை. ஜே.பி. மார்கன், டட்சு பேங்க்,
யு.பி.எஸ், ஏ.பி.என், அம்ரா போன்ற புகழ்பெற்ற வங்கிகளும் வரி ஏய்ப்பின் மூலம் சுருட்டப்பட்ட
கருப்புப் பணங்களுக்குப் பாதுகாப்பு வழங்குகின்றன.
சர்வதேச நிதி மூலதனக் கும்பல்களும்,
கார்ப்பரேட்டு களும் பொருளாதார மந்த நிலையின் காரணமாக ரியல் எஸ்டேட் மற்றும் பங்குச்
சந்தைகளில் ஈடுபடுவதன் மூலம் ஊகவாணிபத்தில் ஈடுபடுவது அதிகரிக்கின்றது. இத்தகைய முறைகள்
அமெரிக்கா, ஐரோப்பிய, சீனா மற்றும் ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளின் மக்களின் வாழ்வாதாரத்தைக்
கடுமையாகப் பாதித்து வருகிறது. மேலும் மூன்றாம் உலக நாடுகளை இத்தகைய ஊகவாணிபத்தின்
மூலம் சுரண்டுவதோடு இந்நாடுகளின் செல்வங்களையும் மூலப்பொருட்களையும் சட்ட விரோதமாக
ஆதித்திரட்சி வடிவில் சுரண்டுவதும் அதிகரிக்கின்றன. தற்போது ஊக வாணிபத்தால் உருவான
நீர்க்குமிழிப் பொருளாதாரம் வெடித்துச் சிதறிவிடும் பேரபாயத்தை உலகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
பொருளாதாரத்தில் மந்தநிலை தொடர்வதும்,
ஊக வாணிபம் செழித்து வளர்வதுமான இன்றைய உலகச் சூழலில் வளர்ச்சி பற்றி ஏகாதிபத்திய நிதிநிறுவனங்களான
ஐ.எம்.எப்., உலக வங்கி போன்ற அமைப்புகளே நம்பிக்கை இழந்து விட்டன. ஏகாதிபத்திய நிதிமூலதனம்
மூன்றாம் உலக நாடுகளில் வளர்ச்சியைக் கொண்டுவரும் திறன் உடையது என்பதில் இவ்வமைப்புகள்
நம்பிக்கை தெரிவிக்கவில்லை.” அந்நிய நிதிநிலைமை மோசமாகிவரும் இன்றைய சூழலில், நிதி
முதலீடுகள் சுருங்கிப்போன சவால் நிறைந்த இன்றைய சூழலில், உள்நாட்டைச் சார்ந்துதான்
உற்பத்தியையும், போட்டியிடும் திறனையும் பெருக்கிக் கொள்ள வேண்டும்” என்று உலகவங்கியே
கருத்துத் தெரிவித்துள்ளது.
இத்தகைய ஒரு சூழலில்தான்
அதாவது ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடி தொடர்வது; பன்னாட்டு நிதி நிறுவனங்களும் கார்ப்பரேட்டுகளும்
ஊகவாணிபம் மற்றும் முதலாளித்துவத்துக்கு முந்தைய முறைகளில் நாடுகளை சூறையாடுவது தீவிரமடைந்துவரும்
சூழலில்தான் மோடி கும்பல் வளர்ச்சி என்றபேரில் அந்நிய மூலதனத்தின் வேட்டைக்கு இந்திய
நாட்டை முழுமையாக திறந்துவிடுகிறது. அந்நிய முதலீட்டாளர்களுக்கு ஏராளமான சலுகைகளை வாரி
வழங்குகிறது. அந்நிய மூலதனம் என்ற மாயமானைத் தேடிப் பயணம் போகிறது.
அமொக்காவின் புதியகாலனிய களமாக இந்தியா
மோடி
கும்பல் ஆட்சிக்கு வந்தவுடன், அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் முன்வைத்த புதியதாராளக்
கொள்கைகளை வெறித்தனமாக அமல்படுத்தி வருகிறது. நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு மன்மோகன்
தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசாங்கத்தின் “கொள்கை முடக்கமே” காரணம் என்று கூறி அந்நிய
மூலதனத்திற்கு இருந்து வந்த கொஞ்ச நஞ்சத் தடைகளையும் அகற்றி வருகிறது. வீழ்ச்சியடைந்துள்ள
உற்பத்தித் துறையை மீட்க வேண்டுமானால் கட்டமைப்புத் துறையில் ஆண்டிற்கு 1 டிரில்லியன்
டாலர் அந்நிய மூலதனத்தை ஈர்க்க வேண்டும் என்ற இலக்கை முன்வைத்துச் செயல்படுகிறது.
சீனாவுக்குப் போட்டியாக இந்தியாவை
உலகின் உற்பத்திக் கேந்திரமாக மாற்றுவது எனும் பேரில் இந்தியாவில் வர்த்தகம் செய்வதை
எளிமைப்படுத்துவது என்று கூறி, “இந்தியாவில் உற்பத்தி செய்க” (Make in India)
என்ற திட்டத்தைத் துவங்கியுள்ளது. அந்நிய மூலதனத்தைக் கவர்வது என்ற பேரில் மலிவான கூலி
உழைப்பு, மூலப் பொருட்கள் என ஏராளமான சலுகைகளை வாரிவழங்குகிறது.
மலிவான
கூலி உழைப்பு
அந்நிய மூலதனத்தைக் கவர்வது
என்ற பேரில் மோடி கும்பல் தொழிலாளர்களின் உழைப்பைப் பன்னாட்டு, உள்நாட்டுக் கம்பெனிகள்
மலிவான விலைக்குக் கொள்ளை யடிப்பதற்கு வசதியாகச் சட்டங்களைத் திருத்தியுள்ளது.
1948 தொழிற்சாலை சட்டங்கள், 1961 தொழில் பழகுநர் சட்டங்கள், பெண்களை இரவுப் பணியில்
அமர்த்துவதற்கான சட்டத் திருத்தங்கள், ஓவர்டைம் சட்டங்களைத் திருத்துவது மற்றும் கான்டிராக்ட்
சட்டத்தைத் திணிப்பதன் மூலம் தொழிலாளர் களின் உரிமைகளைப் பறிக்கிறது. மேலும் அரசாங்கத்தின்
அனுமதி இல்லாமலேயே தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பும் உரிமை 100 பேர் கொண்ட தொழிற்சாலைக்கு
மட்டுமே என்றிருந்ததை 300 தொழிலாளர்கள் கொண்ட தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும் என்று
சட்டத்தைத் திருத்தியுள்ளது. இத்தகைய சட்டத் திருத்தங்களின் மூலம் தொழிலாளர்களின் தொழிற்சங்க
உரிமைகளையும், பேரம் பேசும் உரிமைகளையும் பறிப்பது, நிரந்தர வேலையைப் பறித்து கான்டிராக்ட்
வேலை முறையை நிரந்தரமாக்குவதன் மூலம் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக மாற்றுகிறது. தொழிலாளர்களை
16ஆம் நூற்றான்டின் மத்திய காலச் சுரண்டலுக்கு உள்ளாக்குகிறது. இவ்வாறு இந்திய தொழிலாளர்களின்
உழைப்புச் சக்தியை மலிவான விலைக்கு பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் ஒட்டச் சுரண்டு
வதற்கும், தொழிலாளர்களை நடுத்தெருவில் நிறுத்தவும் மோடி கும்பல் சட்டம் போட்டு வெளிப்படையாகக்
கங்காணி வேலை செய்கிறது.
நிலம்
கையகப் படுத்தும் சட்டம்
பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்டுக்களைக்
கவர்ந்திழுப்பது என்று கூறி மூலப் பொருட்களையும், கனிம வளங்களையும், நிலங்களையும்,
மலிவான விலையில் கைப்பற்றுவதற்கு வசதியாக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தையும், சுற்றுச்சூழல்
சட்டங்களையும் திருத்தியுள்ளது மோடி கும்பல். மோடி கும்பல் கொண்டுவந்துள்ள நிலம் கையகப்படுத்தும்
சட்டம், ஆங்கிலேயர்களின் காலனிய காலத்தில் கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை
விட (1894) மிகவும் மோசமானதாகும். அது நிலத்தின் மீது விவசாயிகளுக்கு உள்ள உரிமையைப்
பறிப்பதாக உள்ளது.
வளர்ச்சி என்ற பேரில் மோடி கும்பல்
கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டம், பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகள்
விவசாயிகளின் விளை நிலங்களை மலிவான விலைக்கு அபகரித்து ரியல் எஸ்டேட் தொழில் நடத்தவும்,
நவீன நகரங்கள் உருவாக்குவதற்கும் பல இலட்சம் கோடிகளைக் கொள்ளையடிக்கவும் பயன்படும்.
இச்சட்டத்தால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களும், டெல்டா மாவட்டங்களும் கடுமையாகப் பாதிக்கும்.
பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகள் நிலப் பசியுடன் அலைகின்றன. அவர்களுக்கு நிலத்தை
பிடுங்கிக் கொடுக்கும் புரோக்கர் வேலையை மத்திய மோடிகும்பலின் ஆட்சி செய்கிறது. இதன்
விளைவாகப் பல இலட்சம் விவசாயிகள் தங்களது சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்படுவர்.
தீவிரப்
படுத்தப்படும் தனியார்மயம்
வங்கிகள், காப்பீடு, பாதுகாப்புத்துறை
போன்ற துறைகளில் 49 சதவீதம் அந்நிய முதலீட்டிற்குத் திறந்து விட்டுள்ளதோடு பாதுகாப்புத்
துறையையும் தனியார் மயமாக்கி வருகிறது. சுரங்கம் மற்றும் கனிம வளங்களை மலிவான விலைக்கு
ஏலமிட்டு பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்த்துள்ளது. 64 ஆண்டுகளாக
செயல்பட்டு வந்த திட்டக்கமிஷனைக் கலைத்து திட்ட மிடுதலையே தனியார்வசம் ஒப்படைத்துள்ளது.
இவ்வாண்டு நிதிநிலை அறிக்கை இரயில்வே, விமானநிலையங்கள் ஆகியவற்றை தனியார்மயமாக்கியதுடன்
நாட்டின் 11 துறைமுகங்களைக் கார்ப்பரேட் மயமாக்கியுள்ளது. அவைகளை பன்னாட்டு, உள்நாட்டுக்
கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்க்கிறது.
பாதுகாப்புத்துறையில் அமெரிக்காவில்
திவாலாகி வருகின்ற இராணுவத்தளவாட உற்பத்தி செய்யும் நிறுவனங் களை அனுமதிப்பதுடன் காலாவதியாகிப்போன
அமெரிக்க அணு உலைகளை இந்தியாவின் தலையில் கட்டுவதற்கான ஒப்பந்தங்களையும் ஒபாமா வாருகையின்
போது மோடி அரசு செய்துள்ளது. இதன்மூலம் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்க
கம்பெனிகளுக்கு பெரும் சந்தையை உருவக்கிக் கொடுத்துள்ளது.
ஒபாமா வருகையின்போது ரூ.20,000
கோடிக்கு ஏவுகணைகள், இராணுவத் ஹெலிக்காப்டர்கள் வாங்குவதற்கு கையெழுத்தானது. அத்துடன்
இன்று உலகிலேயே இந்தியா அதிகமாக இராணுதளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடாகத் திகழ்கிறது.
2015-16 ஆண்டிற்கான பட்ஜெட்டில் ரூ.3.1 லட்சம் கோடியை மோடி ஆட்சி ஒதுக்கியுள்ளது. இதில்
ரூ.94,588 கோடி முதலீட்டுச் செலவினங்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது.
2020-ல் இது ரூ.1,25,000 கோடியை
எட்டுமென எதிர் பார்க்கப்படுகிறது.அமெரிக்காவச் சேர்ந்த மெக்கன்சி, கே.பி.எம்.ஜி, பூஸ்டன்
கன்சல்டேஷன், பிரைஸ் வெஸ்டிங் ஹவுஸ் கூப்பர், போன்ற நிறுவனங்களுடன் இந்தியாவைச் சேர்ந்த
டாட்டா, எல்&டி, ரிலையன்ஸ், மஹிந்த்ரா, பாரத் போர்ஜ் போன்ற உள்நாட்டுத் தரகு முதலாளித்துவக்
கார்ப்பரேட்டுகளும் இணைந்து இராணுவத் தளவாட உற்பத்தியில் மிகுந்த ஈடுபாட்டுடன் இறங்குகின்றன.
அமெரிக்காவைச் சேர்ந்த வெஸ்டிங்
ஹவுஸ், ஜி.இ போன்ற அணு மின் உற்பத்தி நிறுவனங்கள் குஜராத்தில் மிதிவிர்தியிலும், ஆந்திராவில்
கோவ்வாவிலும் மொத்தம் 6 உலைகளை அமைக்கவுள்ளன. இத்திட்டங்களின் மதிப்பு மட்டும் 3 லட்சம்
கோடியகும்.இவ்வாறு மோடிகும்பல் அமெரிக்காவின் வேட்டைக் காடாக இந்தியாவை மாற்றி வருகிறது.
இன்சூரன்ஸ் துறையை பன்னாட்டுக்
கம்பெனிகளிடம் ஒப்படைத்துச் சீரழிக்கும் மசோதா, நிலம் கையகப்படுத்தும் மசோதா, சுரங்கங்களைமலிவான
விலைக்குக் கார்ப்ரேட்டு களுக்கு தாரைவார்க்கும் மசோதாப் போன்றவற்றை அவசரச் சட்டத்தின்
மூலம் ஏதேச்சதிகாரமாக அமல்படுத்தியது. தற்போது சாம, பேத, தான, தண்டம் போன்ற நடவடிக்கைகள்
மூலம் காப்பீடு, சுரங்கச் சட்டங்களை நிறவேற்றிவிட்டது. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை
எப்படியாவது நாடாளு மன்றத்தில் நிறைவேற்றிடத் துடிக்கிறது.
சாலை போக்குவரத்திலும் அந்நிய ஆதிக்கம்
மோடி அரசாங்கம் சாலை விபத்துக்களைக்
குறைப்பது என்ற பேரில் புதிய மோட்டார்வாகனச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.பொதுப்போக்குவரத்தை
முற்றிலும் தனியார்மயமாக்கி பன்னாட்டு முதலாளிகளிடம் ஒப்படைக்கும் திட்டத்தோடும், அனைத்துத்
தரப்பு மக்களையும் பாதிக்கும் வகையிலும் இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
போக்குவரத்து சம்பந்தமான சட்டங்களை
இயற்றுவது, பேருந்துகளுக்கு பெர்மிட்டுகள் வழங்குவது, வரிவசூல் செய்யும் உரிமை போன்ற
உரிமைகளை மாநில அரசிடமிருந்து பறித்து மத்திய அரசால் உருவாக்கப்படும் தேசிய ஆணையத்
ஒப்படைக்கப்படும். அரசுப் போக்குவரத்தே இருக்கக் கூடாது, அனைத்தும் தனியாருக்கு கொடுக்கப்பட
வேண்டும், தற்போது தேசியமயமாகியுள்ள பேருந்துப் பெர்மிட்டுகள் அனைத்தும் தேசிய ஆணையத்தின்
கைகளுக்குப் போய்விடும். அவர்கள் பெர்மிட்டுகளைச் சர்வதேச அளவில் டெண்டர் விடுவார்கள்.
இதன்மூலம் பன்னாட்டு முதலாளிகள் போக்குவரத்துத் துறையை விழுங்குவதற்கு வழிவகுத்துள்ளது.
மோடி கொண்டுவரும் இச்சட்டத்தின்படி
ஏற்கனவே ஓட்டுநர் உரிமங்களைப் பெற்றவர்கள் (இருசக்கர வாகனம் உள்ளிட்டு) மறுபடியும்
உரிமம் பெறவேண்டும்;எல்.எல்.ஆர் பெற்றபின் 9 மாதங்கள் கழித்துத்தான் உரிமம்கோரி விண்ணப்பிக்க
முடியும்; ஓட்டுநர் உரிமம் பெற இரண்டு முறை தேர்வு எழுதவேண்டும்; இந்தத்தேர்வுகளை தனியார்
நிறுவனங்களே நடத்தும்;அவர்கள்தான் உரிமங்களையும் வழங்குவார்கள்.இவ்வாறு மோட்டார் வாகன
துறை முழுவதும் தனியார்மயமாக்கப்பட்டுவிடும்.
மோட்டார் வாகனம் உள்ளிட்ட எந்தவாகனமாக
இருந்தாலும் அதில் சிறிய, சாதாரணமான பழுது ஏற்பட்டாலும் கூட குறிப்பிட்ட நிறுவனத்திடம்தான்
சர்வீசுக்கு விட வேண்டும். குறிப்பிட்ட அந்தக் கம்பெனியின் உதிரி பாகங்களையே பயன்படுத்தவேண்டும்.
மீறுவோருக்கு சிறைத்தண்டனை வழங்கப்படும். விபத்து ஏற்பட்டால் ஓட்டுநருக்கு ரூ.1 லட்சம்
அபராதமும் ஆறு மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். நமது வாகனம் ஓட்டுவதற்கு தகுதியானதுதானா
என்பதை அதை உருவாக்கிய கம்பெனிதான் தீர்மானிக்கும். இனி மோட்டர்வாகனம் தயாரிக்கும்
கம்பெனிகள் வைத்ததுதான் சட்டம். இனி மாநில போக்குவரத்துக் கழகங்கள் பள்ளி, கல்லூரி
மாணவர்களுக்கு வழங்கிவந்த இலவச மற்றும் சலுகைக் கட்டண வசதிகளும், முதியோர் நோயாளிகள்
மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அளித்துவந்த சலுகைகளெல்லாம் பறிபோய்விடும். இவ்வாறு
பன்னாட்டுக் கம்பெனிகளுக்குச் சாதகமாகவும் உள்நாட்டு மக்களுக்கு எதிராகவும் மோடிகும்பல்
செயல்படுகிறது.
அறிவுசார் சொத்துரிமை
அமெரிக்க ஏகாதிபத்தியம், இந்தியாவின்
அறிவுசார் சொத்துரிமை குறித்த சட்டங்களை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் சட்டங்களுக்கு
இணையாக மாற்ற வேண்டும் எனத் தொடர்ந்து நிர்ப்பந்தம் செய்து வருகிறது. ஒபாமாவின் இந்திய
பயணத்தின் போது “அறிவுசார் சொத்துரிமை குறித்து முடிவெடுப்பதற்கு ஒரு உயர் மட்டக் குழு அமைப்பது என்று இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக”
ஒபாமா-மோடி டெல்லி கூட்டறிக்கை அறிவித்துள்ளது. இரு நாட்டு முதலாளிகளின் நலன்களை கணக்கிலெடுத்துக்
கொண்டு தீர்வு காணப்படும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதிகாரப்பூர்வமல்லாத அதிகாரிகளின்
கருத்துப்படி இந்தியா உடனடியாக இந்த ஒப்பந்தத்தை ஏற்காவிட்டாலும், நிர்வாக ரீதியான
நடவடிக்கைகள் மூலம் இதற்குத் தீர்வு காணப்படும் என்று தெரிகிறது. இதுபற்றி விரைந்து
முடிவெடுக்க மோடி அரசாங்கம் தொழிற்துறை மற்றும் கொள்கைகள் வகுக்கும் துறையில் தனிக்குழு
அமைக்க ஆணையிட்டுள்ளது.
மோடி கும்பல் அறிவுசார் சொத்துரிமைச்
சட்டத்தைத் திருத்துவதன் மூலம் அமெரிக்க மருந்துக் கம்பெனிகளின் வேட்டைக்காடாக இந்தியாவை
மாற்றுவதற்கு முயற்சிக்கிறது. ஆண்டுக்கு ரூ.90,000 கோடி மதிப்புள்ள இந்தியச் மருந்துச்
சந்தையைக் கைப்பற்ற அமெரிக்கக் கார்ப்பரேட் வல்லூறுகள் காத்திருக்கின்றன. அறிவுசார்
காப்புரிமைச் சட்டத்தைத் திருத்துவதால் உயிர்காக்கும் மருந்துகளின் விலை 300 சதவீதம்
உயரும். இதன் விளைவாக ஏழைஎளிய மக்களுக்கு உயிர்காக்கும் மருந்துகள் எட்டாக்கனியாக மாறும்.
இந்திய மக்கள் மட்டுமல்ல ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தின் அமெரிக்க நாடுகளிலும். ஐரோப்பாவிலும்
வாழுகின்ற கேடானு கோடி மக்கள் இந்தியக் கம்பெனிகள் குறைந்த விலையில் வழங்கும் மருந்துகளை
நம்பித்தான் வாழ்கின்றனர். இனி அவர்களும் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவர்.
வேளாண்மைத் துறையில் தொடரும் துயரம்
2015-16க்கான நிதிநிலை அறிக்கையில்
மோடி அரசாங்கம் இராணுவத்திற்கு வரலாறு காணாத அளவிற்கு 10 சதவீதமாக அதிகரித்து ரூ.2,46,727
கோடி நிதியை ஒதுக்கி யுள்ளது. ஆனால் விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீட்டைக் கணிசமாகக்
குறைத்துவிட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்திற்குச் சேவை செய்வதற் காகவும்,
தென்னாசிய மேலாதிக்கத்திற்காகவும், ஈழத்தமிழ் இனத்தை அழித்தொழிக்கும் சிங்கள இனவெறி
அரசுக்கு இராணுவ உதவி செய்வதற்கும் இராணுவத்துக்கு அதிக நிதியை ஒதுக்கிவிட்டு விவசாயத்திற்
கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்துவிட்டது.
மோடி கும்பல் ஆட்சிக்கு வந்தவுடன்
விவசாயிகளுக் கான மானியத்தை நேரடியாக வழங்குவது எனும் பேரில் யூரியா மற்றும் உரங்கள்,
பூச்சி மருந்துகளுக்கான மானியத்தை வெட்டியது. அதனால் இடுபொருட்களின் விலை உயர்ந்து
விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீடு 2013ஆம் ஆண்டில் ரூ.17,778
கோடியாக இருந்த ஒதுக்கீடு இவ்வாண்டு ரூ.11,657 கோடியகக் குறைக்கப் பட்டுள்ளது. நீர்ப்பாசனத்
திட்டத்திற்கு கடந்த ஆண்டு ரூ.1,797 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இவ்வாண்டு வெறும் ரூ.772
கோடியாகக் குறைக்கப் பட்டுள்ளது. கங்கையைச் சுத்தப்படுத்தும் இந்துத்துவாத் திட்டத்திற்கு
ரூ. 1 லட்சம் கோடியை ஒதுக்கிய மோடி கும்பல் நீர்ப்பாசனத் திட்டத்திற்கு நிதியைக் குறைத்து
விவசாயிகளுக்கு துரோகமிழைத்துள்ளது.
ஏற்கனவே இந்திய அரசாங்கம் அமல்படுத்திவரும்
புதிய காலனிய வேளாண்மைக் கொள்கைகளால் விவசாயத்துறை அழிக்கப்பட்டு வருகிறது. நிலச்சீர்திருத்தச்
சட்டத்தை மீறி வேளாண்மைக் குழுமமயம் என்ற பேரால் பன்னாட்டுக் கம்பெனிகளி கைகளில் நிலங்கள்
குவிக்கப்பட்டு 25 கோடி விவசாயிகள் நிலமற்ற கூலி விவசாயிகளாக வறுமையில் உழல்கின்றனர்.
தாராளமயக் கொள்கைகளின் விளைவாக ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து மலிவான விலையில் வேளாண்
விளை பொருட்கள் இந்தியச் சந்தையில் கொட்டிக் குவிக்கப் படுகிறது. மறுபுறம் இந்திய அரசாங்கம்
விவசாயிகளுக்கு வழங்கும் மானியங்களை வெட்டுவதால் இடுபொருட்களின் விலை உயர்ந்து விளைபொருட்களுக்கு
விலை குறைந்து சந்தையில் போட்டிபோட முடியாமல் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறுகின்றனர்.
விவசாயிகள் கடன் தொல்லையால் 1997 ஆம் ஆண்டிலிருந்து மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை
செய்துகொண்டு மாண்டுள்ளனர். அத்துடன் நிலம் கையகப்படுத்தலும் சேர்ந்துகொண்டு விவசாயிகள்
நிலங்களை இழந்து நாடோடிகளாக மாற்றப்படு கின்றனர். தற்கொலைகளும், பட்டினிச் சாவுகளும்
அதிகரித்துக் கொண்டே போகிறது. மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து விவசாயிகளின் தற்கொலை
26 சதவீதம் அதிகரித்துள்ளது.
அன்று சாஸ்திரி ஆட்சியில் பாகிஸ்தானுடனான
போரின் போது “சிப்பாய்கள் வாழ்க! விவசாயிகள் வாழ்க!” (ஜெய் ஜவான்! ஜெய் கிசான்!) என்று
முழங்கினர். ஆனால் இன்று மோடியின் ஆட்சியில் அமெரிக்க மேலாதிக்கப் போருக்கான சேவைக்கும்,தென்
ஆசிய விரிவாதிக்க நலன்களுக்காகவும் இராணுவத்திற்குக் கூடுதல் நிதி ஒதுக்கி, விவசாயத்திற்கு
நிதியைக் குறைத்து சிப்பாய்கள் வாழ்க! விவசாயிகள் ஒழிக! என்று முழங்குகின்றனர்.
சமூக நலத்திட்டங்களுக்கு மூடு விழா
மோடி கும்பல் நாட்டின் நிதிப்
பற்றாக்குறையை 3 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று கூறிக்கொண்டே பன்னாட்டு, உள்நாட்டுக்
கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை களை வாரி வழங்கிவிட்டு, மக்கள் நலத் திட்டங்களுக்கும்
சமூக நலத்திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கிறது. இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில்
கார்ப்பரேட்டுகள் மீதான கார்ப்பரேட் வரியை 30லிருந்து 25 சதவீதமாகக் குறைத்ததன் மூலம்
ரூ.8,315 கோடியை வரிச்சலுகையாக வழங்கியுள்ளது. அத்துடன் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவது
என்ற பேரில் கார்ப்பரேட்டுகளுக்கு வருமான வரி, உற்பத்தி வரி, சுங்க வரி போன்ற வரிச்சலுகைகளும்,
ஊக்கத் தொகையும் 2005-06 முதல் 2011 வரை காங்கிரஸ் ஆட்சி வழங்கியது மொத்தம் ரூ.21,25,023
கோடியாகும். அது போலவே பாஜக ஆட்சியும் 2013-14ல் ரூ.5,49,784 கோடியையும், 2014-15ல்
ரூ.5,89,285 கோடியையும் வாரிவழங்கியுள்ளது. கார்ப்பரேட்டுகளுக்கான சலுகைகள் தொடர்கின்றன.
ஆனால் மோடி கும்பல் இவ்வாண்டு
நிதிநிலை அறிக்கையில் மறைமுக வரிகளை உயர்த்தியதன் மூலம் மக்கள் மீது ரூ.23,000 கோடியைச்
சுமத்தியுள்ளது. அத்துடன் சிக்கன நடவடிக்கை என்ற பேரில் மக்களுக்கு வழங்கும் மானியங்களை
20 சதவீதம் வெட்டிவிட்டது.
மகாத்மா காந்தி கிராமப்புற வேலை
வாய்ப்பத் திட்டத்திற்கும், உணவு மானியத்திற்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை. பணவீக்கத்தையும்,
பாக்கித் தொகை யையும் சேர்த்தால் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ரூ.42,000
கோடி ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் ஒதுக்கியதோ ரூ.34,000 கோடி மட்டுமே. நிதிக்குறைப்பு
மூலம் இத் திட்டத்தை முடக்க நினைக்கிறது மோடி கும்பல்.
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வி
நிறுவனங்களைக் கூடுதலாக துவங்கப் போவதாக கூறியுள்ள அருண் ஜேட்லி மொத்தக் கல்விக்கான
நிதி ஒதுக்கீட்டை 2 சதவீதம் வெட்டியதன் மூலம் ஏழை மக்களுக்கான கல்வி உரிமையிலும் கைவைத்து
விட்டது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்திட்டத்திற்கு
மொத்த ஒதுக்கீட்டில் ரூ.6,000 கோடி குறைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக சுகாதாரம் சீரழிந்து
பன்றிக் காய்ச்சல், டெங்கு சுரம் போன்ற தொற்றுநோய்களுக்கு ஆட்பட்டு மக்கள் மடிந்து
போவார்கள். இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஒதுக்கீடு
50 சதவீதம் குறைக்கப் பட்டுள்ளதால் தாய், சேய் நலன்கள் பாதிக்கப்படுவதோடு தாய், சேய்
மரணங்கள் அதிகரிக்கும்.
பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட
மக்களுக்கான நிதி ஒதுக்கீடு மொத்தம் ரூ.17,000 கோடி குறைக்கப்பட்டு விட்டது. இதன் மூலம்
தனது மனுதர்ம நீதியை மோடி கும்பல் நிறைவேற்றியுள்ளது. ஏற்கனவே இதற்கான நிதி ஒதுக்கீடுகள்
முறையாகப் பயன்படுத்தப்படாத நிலையில், இந்த நிதி ஒதுக்கீட்டுக் குறைப்பு என்பது அம்மக்களின்
வாழ்வுரிமையைக் கடுமையாகப் பாதிக்கும்.
ஆதார் அட்டையின் மூலம் அரசாங்கம்
மக்களுக்கு வழங்கும் பல்வேறு மானியங்களையும், உதவிகளையும் நேரடியாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
நியாய விலைக் கடைகள் மூலம் உணவுப் பண்டங்கள் வழங்குவதையும் இனி பணமாகக் கொடுத்துவிடுவது
என்று முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் நியாய விலைக் கடைகளையும், இந்திய உணவுக் கழகத்தையும்
கலைத்துவிடுவது என்று முடிவெடுத்து விட்டது. அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பு சட்டம்
கொண்டுவர மறுப்பது மட்டுமல்ல இருக்கும் கட்டமைப்பையும் தகர்ப்பது என்று மோடி கும்பல்
செயல்படுகிறது. மேலும் ஆதார் அட்டை மூலம் வழங்கப்படும் மானியங்களைக் கூட நீண்ட நாளைக்கு
வழங்க முடியாது என்றும் அதை படிப்படியாக நிறுத்திவிடுவோம் எனவும் நிதி அமைச்சர் அருண்
ஜேட்லி வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார்.
மோடி கும்பலின் ஆட்சி ”வளர்ச்சி
என்ற பேரில்” நாட்டின் இயற்கை வளங்கள் மற்றும் கனிம வளங்களை பன்னாட்டு, உள்நாட்டுக்
கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்ப்பது; ஆண்டுக்குப் பல லட்சம் கோடிகள் வரிச் சலுகைகளை
அவர்களுக்கு வாரிவழங்குவது; தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து மலிவான கூலி உழைப்பைக்
கொள்ளையடிப்பதற்கு ஏதுவாகச் சட்டங்களைத் திருத்துவது; வேளாண்மைத் துறையைப் பன்னாட்டுக்
கம்பெனிகளின் வேட்டைக்காடாக மாற்றுவது ஆகியவை மூலமும் இந்திய நாட்டை அமெரிக்காவின்
புதிய காலனிய களமாக மாற்றுகிறது.
மறுபுறம் நாட்டின் “நிதிப் பற்றாக்குறையைக்
குறைப்பது என்ற பேரில்” மக்கள் நலத் திட்டங்களுக்கும், சமூக நலத்திட்டங்களுக்கும் நிதி
ஒதுக்கீடுகளைக் குறைத்து அவற்றுக்குப் படிப்படியாக மூடுவிழா நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.
இரயில் கட்டண உயர்வு, எரிவாயு உருளை விலை உயர்வு, வரிச்சுமைகளைச் சுமத்துவது ஆகியவற்றின்
மூலம் மக்களின் மீது பொருளாதார நெருக்கடிகளின் சுமைகளைச் சுமத்துகிறது. அரசாங்கம் மக்களுக்கு
இலவசமாக வழங்க வேண்டிய கல்வி, மருத்துவம், சுகாதாரம் ஆகிய அனைத்தையும் தனியார்மயம்,
வணிகமயமாக்குவதைத் தீவிரப்படுத்துகிறது. மொத்தத்தில் “சமூக நல அரசு” என்ற கோட்பாட்டை
ஒழித்து விட்டு அதனிடத்தில் “சந்தை நலஅரசு” என்ற கோட்பாட்டைச் செயல்படுத்துகிறது.
வரிச்சலுகைகள், கட்டமைப்பு வசதிகள்,
பொதுத் துறைகளைத் தாரைவார்த்தல், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்தல் ஆகியவற்றின் மூலம்
மோடி கும்பல் இந்திய நாட்டை பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளின் “இனிப்புப்
பிரதேசமாக” மாற்றுகிறது. தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பரந்துபட்ட மக்களின் வாழ்வாதாரங்
களையும், உரிமைகளையும், சலுகைகளையும் பறித்து இந்திய நாட்டை பெரும்பான்மை மக்களின்
“சுடுகாடாக” மாற்றுகிறது.
மோடி கும்பலின் இத்தகைய நடவடிக்கைகளால்
அவர் மீது ஊடகங்கள் உருவாக்கிய பிம்பம் குறுகிய காலத்திலேயே உடைந்து நொறுங்கிவிட்டது.
மோடி கும்பலின் தேச விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய அளவில்
தொழிலாளர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்களின் போராட்டங்கள் பரவி வருகிறது. டெல்லி சட்ட
சபைத் தேர்தலில் மோடி கும்பலை மக்கள் படுதோல்வி அடையச் செய்தது அதன் ஒரு பகுதிதான்.
மோடி கும்பல் மக்களின் இத்தகைய எதிர்ப்புகளை நசுக்குவதற்கும் மக்களை மத ரீதியில் பிளவுபடுத்தவும்
இந்துத்துவப் பாசிசத்தை திட்ட மிட்டுக் கட்டியமைக்கிறது. இந்திய அரசைப் பாசிச மயமாக்கி
வருகிறது.
இந்துத்துவப்
பாசிசம்
மோடி கும்பல் ஆட்சியில் அமர்ந்த
நாள் முதலே ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் ஆட்சிஅதிகாரத்தில் அமர்ந்து கொண்டு தங்களது இந்துத்துவாத்
திட்டங்களை அமல்படுத்தத் துவங்கிவிட்டன. அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டவர்களே
சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக விஷத்தைக் கக்கி வருகின்றனர்.
- இந்துப் பெண்கள் ஒவ்வொருவரும் ஐந்து பிள்ளைகளை
பெற்றெடுத்துக் கொள்ள வேண்டும்.
- நாட்டில் உள்ள எல்லோரையும் இந்து மதத்திற்கு மாற்ற
வேண்டும்.
- இராமனை ஏற்காதவர்கள் அனைவரும் முறைதவறிப் பிறந்தவர்கள்.
- நாட்டில்
உள்ள பள்ளிவாசல்கள் அனைத்திலும் இராமர், விஷ்ணு சிலைகளை வைப்போம்.
- கோட்சேவுக்கு சிலை வைப்பதில் தவறில்லை.
- பகவத் கீதையை தேசிய, புனித நூலாக அறிவிக்க வேண்டும்.
- இந்தியும் சமஸ்கிருதமுமே மேன்மையான மொழிகள் என்று
கூறி பிறமொழி பேசுபவர்கள் மீது திணிப்பது.
- “லவ் ஜிகாத்”என்ற பெயரில் இந்துப் பெண்கள் மதம்
மாற்றப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டுவது.
- மராட்டிய மாநிலத்தில் பசுவதைத் தடுப்புச் சட்டத்தைக்
கொண்டுவந்து, மாட்டுக்கறி உண்ணுவதைத் தடை செய்ததுடன் மீறினால் 10 ஆண்டு சிறைத் தண்டனை
விதித்துள்ளது. அதைத் தற்போது நாடு முழுவதற்கும் விரிவுபடுத்துவதற்கான மோடி அரசின்
முயற்சி. இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் இராஜஸ்தான் அரசின் முயற்சி.
மேற்கண்டவாறு சிறுபான்மை மதத்தினருக்கு
எதிராக ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள் மற்றும் பா.ஜ.க.வினர் தாக்குதல் தொடுத்து மதக் கலவரங்களைத்
திட்டமிட்டு நடத்தி வருகின்றனர். கடந்த ஒன்பது மாதங்களில் நாடெங்கிலும் 600 மதக் கலவரங்களை
நடத்தி முடித்துள்ளனர். இதில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில்
இலட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டுள்ளனர். அண்மையில் பா.ஜ.க.வின்
மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி, மசூதிகள் என்பவை மதவழிபாட்டுத் தலங்கள் இல்லை
அவை வெறும் கட்டிடங்கள்தான், எனவே எந்த நேரத்திலும் அவற்றை இடித்துத் தள்ளலாம் என்று
மதக்கலவரத்திற்கான நெருப்பை விசிறி விட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ்-ன் தலைவர் மோகன் பகவத்தோ
இந்தியா இந்துக்களின் நாடுதான்; அதை ஏற்காதவர்கள் நாட்டை விட்டு ஓடிவிட வேண்டும் என
மிரட்டல் விடுத்துள்ளார். கிறிஸ்துவர்கள், இசுலாமியர்கள், கம்யூனிஸ்டுகள் அனைவரையும்
விரட்டியடித்து தங்களது இந்துராஜ்ஜியக் கனவை நிறைவேற்றிடத் துடிக்கிறார்.
இந்து
ராஜ்ஜியம் என்பது என்ன?
இந்து என்பவர் “சிந்து நதியிலிருந்து கடல்வரை நீண்டிருக்கும்
பிரதேசமாகிய பாரதவர்ஷத்தைத் தன் தந்தையர் நாடாகவும், புனித பூமியாகவும் அதாவது தன்
மதத்தின் தொட்டிலாகவும் கருதுகின்ற நபர் என்று இந்துத்துவாத் தலைவர்களில் ஒருவரான வி.தா.சாவர்கர்
1923 -ல் வரையறை செய்தார். நவீன இந்துத்துவா உண்மையில் இங்குதான் உருவாகிறது.
“பிறந்த நாட்டைப் புண்ணிய பூமியாகக் கருதுவது நாட்டுப்பற்றில்
வழக்கமானதுதான். இந்தவரையறை மற்ற சமயத்தினரைக் கறாராக ஒதுக்கிவிடுகிறது. இந்திய முசுலீம்
களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் புனித பூமி அரோபியாவிலும், பாலஸ்தீனத்திலும் இருப்பதால்
அவர்கள் பித்ரு பூமியை புண்ணிய பூமியாகக் கருதவியலாது. ஆகவே அவர்களுடைய தேசபக்தி தரத்தில்
குறைந்தது, சந்தேகத்திற்குரியது. இந்த வாதத்தை நீட்டிக்கொண்டே போகலாம். இந்துத்துவா
சித்தாந்திகளில் ஒருவரான கோல்வால்கரின் “சிந்தனைக் கொத்து” என்ற புத்தகத்தில் கம்யூனிஸ்டுகளையும்
சேர்த்திருப்பது எதிர்பார்க்கக் கூடியதே. மதச்சார்பின்மை, அறிவியல், ஜனநாயகம் ஆகியவற்றை
ஆதரிப்பவர்களையும் கூட நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என்று கூறலாம். ஏனென்றால் இக்கருத்துக்கள்
மேற்கு நாடுகளில் தோன்றி வளர்ச்சியடைந் தவை. எனினும் இந்துத்துவத்தின் உட்பிரிவுகளைப்
பொறுத்த மட்டில் பரந்தமனப்பான்மை நிலவுகிறது.” இவ்வாறு ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின்
இந்து ராஜ்ஜியம் என்பது இஸ்லாமியர்கள், கிருத்தவர்கள், கம்யூனிஸ்டுகள் அல்லாதவர் களைக்
கொண்டதாகும். இவர்கள் இந்த நாட்டில் வசிக்கத் தகுதியற்றவர்கள் என்று கூறுகின்றனர்.
அல்லது இரண்டாம் தர குடிமக்களாக பணிந்து வாழவேண்டும் என்று கூறுகின்றனர்.
இந்து, இந்து ராஜ்ஜியம், சுதேசியம் பேசுகின்ற கோல்வால்கர்
“நாம் அல்லது நமது தேசியத்தை வரையறுத்தல்” என்னும் நூலில் ‘கலாச்சார தேசியத்தை’ வெளிப்படையாக
இட்லரின் பாணியில் விளக்குகிறார்.
“இன்று எல்லோரும் ஜெர்மன் தேசியக் கலாச்சாரத்தைப் பற்றிப்
பேசுகிறார்கள். தன் தேசிய இனம் மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையைத் தக்கவைத்துக்கொள்ள
ஜெர்மனி செமிட்டிக் இனங்களை, யூதர்களை அழித்து உலகத்துக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.
அங்கே உயர்ந்த அளவில் தேசிய ஆர்வம் காணப்படுகிறது. அடிப்படையில் வேறுபாடுகளைக் கொண்ட
இனங்களும் கலாச்சாரங்களும் ஒற்றுமையுள்ள ஒரே அமைப்பாக ஒருங்கிணைவது அனேகமாக முடியாது
என்பதை ஜெர்மனி எடுத்துக்காட்டுகிறது. இந்துஸ்தானில் இருக்கும் நமக்குக் கற்கவும்,
லாபமடையவும் அது ஒரு நல்ல பாடம்” என்று கூறுகிறார்.
இந்து,
இந்து தேசம் என்றும் ‘சுதேசியம்’ என்றும் பேசும் இந்துத்துவ ஆர்.எஸ.எஸ். பரிவாரங்கள்
ஜெர்மனியின் வாரிசுகளாக இட்லரின் “ஆரிய இனமே ஆளப்பிறந்த இனம்” என்ற தத்துவத்தின் அடிப்படையில்தான்
செயல்படுகிறார்கள். மேலும் ஆர்.எஸ்.எஸ். கூறுகின்ற இந்து ராஜ்ஜியம் என்பது சிறுபான்மை
மதத்தினருக்கு எதிரானது மட்டுமல்ல, தனது மதத்திற்குள்ளேயே வர்ணாசிரம மனுதர்மத்தைக்
கடைப் பிடிப்பதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எதிரானதேயாகும்.
எனவே இந்துத்துவம் என்பது இரண்டுபக்கமும் பட்டை தீட்டிய கத்தியாகும். அது பிறமதத்தினரையும்
தன் மதத்திற்குள்ளே உள்ளவர்களையும் தாக்குகின்ற ஒரு பிற்போக்குப் பாசிச தத்துவமேயாகும்.
இன்று மோடி கும்பலின் ஆட்சியும்,
ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களும் இந்து தேசியம் பேசி மதக்கலவரங்களைக் கட்டவிழ்த்து விடுவதற்குக்
காரணம், மோடி ஆட்சி அமல்படுத்தி வரும் நாட்டை அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் புதிய காலனிய
களமாக மாற்றும் தேசவிரோத மக்கள் விரோதக் கொள்கை களை மூடி மறைப்பதற்கானதேயாகும். அத்துடன்
அத்தகைய புதியகாலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துப் போராடும் மக்களை ‘கலாச்சாரத்
தேசியம்’ பேசி திசைத்திருப்புவதோடு, சிறுபான்மை மதத்தினர் மீதான தாக்குதல்கள் மூலம்
மக்களை மோதவிட்டுப் பிரித்தாளும் சூழ்ச்சிக்கானதுமாகும். அதற்காகத்தான் நாடுமுழுவதும்
மதக் கலவரங்களையும் சாதிய ஒடுக்கு முறைகளையும் ஆர்.எஸ.எஸ். பரிவாரங்கள் திட்டமிட்டு
நடத்திவருகின்றன. சாதிவெறி அமைப்புகளுடன் கூட்டணி அமைத்துள்ளன. எனவே மோடி கும்பலின்
ஆட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் இந்துத்துவப்பாசிசத்தை எதிர்த்த போராட்டம்
என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்தியாவின் மீதான புதிய காலனியாதிக்கத்தை எதிர்த்த
போராட்டமாகும். மேலும், மோடியின் பாசிசம் என்பது வெறும் பார்ப்பன பாசிசமாக குறுக்கிவிட
முடியாது. இந்துத்துவப் பாசிசத்தை எதிர்த்த போராட்டமும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த
போராட்டமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாததாகும்.
ஆனால்
அண்மையில் அமெரிக்க அதிபர் ஒபாமா தனது இந்திய பயணத்தின் போது, இந்து அமைப்புகளின் மதவெறித்
தாக்குதல்களைக் கண்டித்துப் பேசியதின் மூலம்தான் இந்துத்துவப் பாசிச சக்திகளுக்கு எதிரானவர்
என்பது போல் காட்டிக் கொண்டார். “ஒவ்வொருவருக்கும் மதஉரிமை உள்ளது. அவர்கள் மதநம்பிக்கையைப்
பின்பற்றுவதற்கு எந்த இடையூறும், பயமும், ஏமாற்றமும் இருக்கக் கூடாது. மத, இன, நிற
வேறுபாடுகள் பிளவை ஏற்பத்திவிடாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். இந்திய அரசியலமைப்புச்
சட்டத்தின் 25-வது பிரிவு மதச்சுதந்திரம் பற்றிக் கூறுகிறது. அதன்படி தமக்கு விருப்பமான
மதத்தை இந்தியர்கள் பின்பற்றலாம். எனவே தனிநபர் சுதந்தரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்.
இந்த மதச்சார்பற்ற கொள்கையிலிருந்து விலகாதவரை இந்தியாவின் வெற்றி தொடரும்.” என்று
ஒபாமா பேசினார். இது குறித்து மோடியின் மௌனத்தைக் கண்டித்து “நியூயார்க் டைம்ஸ்” பத்திரிக்கை
தலையங்கமே எழுதியது.
அதற்குப் பிறகுதான் மோடி தனது
நீண்ட மௌனத்தைக் கலைத்து “இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகவே இருக்கும். மதம் தனிநபர்
சுதந்தரம் சார்ந்தது. வெறுப்பைப் பரப்ப எவருக்கும் அனுமதி இல்லை. முழுச் சுதந்தரத்தை
எனது அரசு உறுதி செய்யும். அனைத்து மக்களையும் மதித்து நடப்பது என்பது நமது ரத்தத்தில்
ஓட வேண்டும். பரஸ்பர மரியாதை, சகிப்புத்தன்மையுடன் பிறமதத்தை மதிப்பது நமது பண்டைய
பாரதத்தின் ஆத்மநெறி. 2008-ல் ஹேக் நகரில் சர்வதேச மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி
நடுவண் அரசு செயல்படும்” என்று அறிக்கை விட்டார். மேலும் தனது மதம் ”இந்தியா” என்றும்
தனது புனிதநூல் ”இந்திய அரசியல் சட்டம்”தான் என்றும் அறிக்கைவிட்டார்.
ஆனால் ஒபாமா, மோடி கும்பலை நன்றாகக்
குட்டினார் என்றும், ஒபாமாவின் பேச்சு பெரும் ஆறுதலை அளிக்கிறது என்றும், ஒபாமாவின்
இத்தகையப் பேச்சை எதிர்பாராத பா.ஜ.க. தலைமையிலான நடுவண் அரசு பதறிப்போனது என்றும் சிலர்
எழுதுகின்றனர். மோடி பணிந்துவிட்டார் என்றும் சிலர் எழுதுகின்றனர். ஆனால் மோடி அறிக்கை
விட்டதற்குப் பின்னர்தான் மாட்டுக்கறி உண்ணுவதைத் தடைசெய்யும் சட்டமும் வருகிறது, மசூதிகளை
இடிக்கலாம் என்ற சுப்ரமணியன் சாமி பேசுவதும் நடக்கிறது என்பதைப் பார்க்கும்போது மோடி
கும்பல் பணிந்துவிட்டது என்ற கூற்றில் உண்மை இல்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஒபாமாவும்
இந்துத்துவப் பாசிச மதவெறிக் கலவரங்களைக் கண்டிப்பது ஒரு கபட நாடகமேயாகும். உண்மையில்
இத்தகைய பிரச்சினைகளைப் பயன்படுத்திக்கொண்டு இந்திய அரசாங்கத்தை மேன்மேலும் தமது கட்டுப்பாட்டிற்குள்
கொண்டு வருவதே ஒபாமாவின் தந்திரமாகும்.
அமெரிக்க ஏகாதிபத்தியம், ஆர்.எஸ்.எஸ்.
மற்றும் இந்துமதவெறி அமைப்புகள் அமெரிக்காவில் சுதந்திரமாகச் செயல்படுவதை அனுமதிக்கிறது.
இந்துத்துவ அமைப்புகளுக்கு ஏராளமாக நிதி உதவி வழங்குகிறது. ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள்
அமெரிக்காவில் நிதிவசூல் செய்வதற்கு வரிச் சலுகைகளை வழங்குகிறது. அதில் பஜ்ரங்தள் அமைப்பிற்கு
மட்டும்தான் - மதக்கலவரங்களில் ஈடுபடுவதாகக் கூறி - அது வசூல் செய்யும் நிதிக்கான வரிச்சலுகைக்குத்
தடைவிதித்துள்ளது. மேலும் குஜராத் கலவரத்திற்குக் காரணமான மோடியின் மீது அமெரிக்கா
விசா தடை விதித்திருந்தது. ஆனால் மோடி பிரதமரானவுடன் அந்தத்தடையைத் தானாகவே நீக்கிக்
கொண்டது. எனவே அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்துத்துவ, மதவாத சக்திகளை எதிர்க்கிறது என்பது
ஒரு மாயையேயாகும். உண்மையில் ஒபாமாவின் கண்டனம் கூட கிறிஸ்துவ மதத்தின் மீதான தாக்குதலை
எதிர்த்துத்தான் அமைந்திருந்தது. ஆனால் இஸ்லாமிய மதத்தையே பயங்கரவாத மதமாகச் சித்தரித்து
அதற்கு எதிரான நடவடிக்கைகள் எடுப்பதில் அமெரிக்காவும் இந்தியாவும் கைகோர்த்துச் செயல்படுகின்றன
என்பதுதான் நிதர்சமானகும்.
அமெரிக்க
ஏகாதிபத்தியம் தனது புதியகாலனியாதிக் கத்தைத் தொடர, அரபு நாடுகளின் மீது தனது மேலாதிக்கத்திற்
கான ஆக்ரமிப்புப் போர்களை நியாயப்படுத்த மதவாதத்தையும், இனவாதத்தையும் கடைப்பிடிக்கிறது.
காட்டுமிராண்டி இஸ்லாமியர்களை எதிர்த்து நாகரிகமடைந்த கிறிஸ்துவர்கள் நடத்தும் போர்
என அதைச் சித்தரிக்கிறது. எனவே இந்து மதவாதத்திற்கு எதிராக அமெரிக்கா குரல் கொடுக்கிறது
என்று கூறுவது இந்திய மக்களின், உலக மக்களின் முதன்மையான பொது எதிரியாகத் திகழும் அமெரிக்க
ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்துகொள்ளும் நயவஞ்சகமேயாகும். எனவே இந்துத்துவப் பாசிசத்தை
எதிர்த்த போராட்டம் என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டத்திலிருந்து
பிரிக்க முடியாதது. அவ்வாறு பிரிப்பது இந்திய மக்களின் முதல் எதிரியான அமெரிக்கவுக்கு
ஆதரவானது மட்டுமல்ல, இந்துத்துவப் பாசிச சக்திகளைப் பலப்படுத்துவதாகவே இருக்கும்.
இந்துத்துவப்
பாசிசம்குறித்த நாடாளுமன்றவாதக் கட்சிகளின் நிலைபாடுகள்
பா.ஜ.க.வின் இந்துமதவாதத்தை எதிர்ப்பதாகக்
காங்கிரஸ் கட்சி கூறுவது ஒரு கபட நாடகமேயாகும். நாட்டை அடகு வைக்கும் புதிய தாராளக்கொள்கைகளை
அமல் படுத்துதல்; அமெரிக்க மேலாதிக்கத்திற்கு சேவை செய்வதோடு இந்திய நாட்டை அமெரிக்காவின்
புதிய காலனிய களமாக மாற்றுதல்; இந்தியாவில் ஒரு பாசிச ஆட்சிமுறையை உருவாக்குவதற்கு
வெளிப்படையான பயங்கரவாத ஆட்சி முறையைக் கட்டியமைத்தல், தேசிய இனங்களை ஒடுக்குதல், பெருந்தேசிய
வெறியைக் கடைப்பிடித்தல், மதவெறியைத் தூண்டுதல் ஆகியவற்றில் இந்த இரு கட்சிகளிடையே
உடன்பாடு இருக்கிறது. எனினும் காங்கிரஸ்கட்சி ஒரு போலி மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்கிறது.
“இந்துத்துவமே மதச்சார்பின்மைக்கு
மிகச்சிறந்த சக்திவாய்ந்த பாதுகாவலன்” என்று காங்கிரஸ்கட்சியின் காரியக்கமிட்டித் தீர்மானம்
கூறுகிறது. பா.ஜ.க.வின் பெரும்பான்மை மதவாதத்தை காங்கிரஸ் கட்சி தனக்கே சொந்தமான வேறுவகைப்பட்ட
ஒரு காரியவாத மதவாதத்தைக் கொண்டு எதிர்க்கும் தந்திரத்தை மேற்கொண்டுள்ளது என்பதைத்தான்
அக்கட்சியின் இந்தத் தீர்மானம் எடுத்துக் காட்டுகிறது.
1980களில் விஷ்வஹிந்து பரிஷத்
மாநாட்டில் இந்திராகாந்தி கலந்து கொண்டதுடன், 1983 ஜம்மு தேர்தலில் வாக்குகளுக்காக
இந்துமதவெறிச் சக்திகளுடன் கூடிக் குலாவியது; அகாலிகளுக்கு எதிராக பிந்தரன்வாலே தலைமையில்
சீக்கிய மதவெறியைத் தூண்டியதையும், பின்னர் அதே மதவெறிக்கு இந்திராகாந்தி பலியானதையும்
நாடே அறியும். 1985 ல் ராஜீவ் காந்தி ஆட்சி, ஷாபானு வழக்கில் முஸ்லீம் பெண்களின் உரிமையைப்
பறித்து சிறுபான்மை மதவாதிகளுக்கு ஆதரவாகச் செயல் பட்டதும், இதை எதிர்த்த இந்து மதவாதிகளின்
ஆதரவைப் பெற, முப்பது ஆண்டுகளாகப் பூட்டப்பட்டிருந்த பாபர் மசூதியை இந்துக்களுக்குத்
திறந்துவிட்டது; 1992 ல் நரசிம்மராவ் கும்பல் புதிய தாராளக் கொள்கைகளை அமல்படுத்திய
தனது தேசத் துரோகத்தை மூடிமறைக்க பாபர் மசூதியை இந்துத்துவ சக்திகள் இடிப்பதற்கும்,
பின்பு நாடுமுழுவதும் தாண்டவமாடிய கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கம் தீவைப்பு சம்பவங்களுக்கும்
துணைபோனது.
மன்மோகன்,சோனியா கும்பலின் தலைமையிலான
ஐ.மு.கூட்டணி அரசாங்கத்தின் கீழ் அரசு இயந்திரமே மதவாத மயமாக்கப்பட்டது. காங்கிரஸ்
கட்சி பயங்கரவாதத்தையும் மதவாதமாக்கியது. இஸ்லாமியர்களை ஒட்டு மொத்தமாக பயங்கரவாத நடவடிக்கைகளை
ஒடுக்குவதற்கான இலக்குகளாகக் கருதியது. அதே சமயம் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களான பஜ்ரங்தள்,
வி.எச்.பி. ஆகியவையும் பாபர் மசூதியை இடித்துத் தரை மட்டமாக்கிய குற்ற நடவடிக்கைகளில்
ஈடுபட்டவர்கள் அனைவரும் தப்பித்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். குஜராத் மதக் கலவரத்தில்
ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ். காடையர்கள் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் அனுமதிக்கப்
பட்டனர்.
இவ்வாறு இந்திராகாந்தி, நரசிம்மராவ்
காலம் முதல் சோனியா மன்மோகன் காலம்வரை காங்கிரஸ் ஆட்சியாளர்கள் இந்துமதவாத சக்திகளுடன்
கூடிக்குலாவி வந்ததும், இந்துமதவாத சக்திகளின் துரோகத்திற்குத் துணை போனதும்தான் காங்கிரசின்
வரலறாக உள்ளது. எனவே காவிச்சட்டையும், கதர்ச் சட்டையும் இந்திய பாசிசத்தின் இரு சீருடைகளே
யாகும். நாட்டை அமெரிக்காவின் புதிய காலனிய களமாக மாற்றுவதிலும், இந்திய அரசைப் பாசிச
மயமாக்குவதிலும் இரண்டு கட்சிகளும் போட்டி போடும் கட்சிகளாகும். பா.ஜ.க.வும், காங்கிரசும்
இந்திய பாசிசத்தின் இரு முகங்களாகும். இவ்விரு கட்சிகளையும் எதிர்ப்பதுதான் இந்தியப்
பாசிச எதிர்ப்பின் பணியாக உள்ளது.
இடது, வலது போலிக் கம்யூனிஸ்டுக்
கட்சிகள் இந்து மதவாதத்தை எதிர்ப்பது எனும் பேரில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்தன.
காங்கிரஸ் கட்சி புதியகாலனியப் பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்துவதற்குத் துணைபோயின.
இக்கட்சிகள் ஏகாதிபத்திய உலகமயக் கொள்கைகளை ஆதரிக்கின்றன. அவர்கள் ஆண்ட மாநிலங்களில்
புதிய தாரளக் கொள்கைகளை அமல்படுத்தி மக்கள் மத்தியில் தனிமைப் பட்டுப்போயின. தற்போது,
ஒபமா இந்துமதவாத நடவடிக்கை களைக் கண்டித்து பேசினார் என்று வரவேற்கிறது. இதன் மூலம்
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கபட நாடகத்துக்குத் துணை போகிறது. மோடி கும்பல் நாட்டை
அமெரிக்காவின் புதிய காலனிய களமாக மாற்றுவதை எதிர்த்தும், இந்துத்துவப் பாசிசத்தை எதிர்த்தும்
போராடுவதில் இக்கட்சிகள் ஒரு சமரச நிலைப்பாட்டையே கடைப் பிடிக்கின்றன.
தலித்தியம் பேசுகின்ற மாயாவதி
கட்சி முதல் பல்வேறு தலித் கட்சிகளும், சமூகநீதி பேசுகின்ற முலயாம் கட்சிமுதல் தெலுங்கு
தேசம் வரையிலான மாநிலக்கட்சிகள் அனைத்தும் புதிய தாராளக் கொள்கைகளைச் செயல்படுத்துவதையும்,
நாட்டை அமெரிக்காவின் புதிய காலனிய களமாக மாற்று வதையும் ஆதரிக்கின்ற கட்சிகள்தான்.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், முலயாமின் சமாஜ்வாடிக் கட்சியும் அண்மையில் காப்பீட்டு
மசோதாவையும், சுரங்க மசோதாவையும் நிறைவேற்ற பா.ஜ.க. ஆட்சிக்கு ஆதரவு அளித்தன. இக் கட்சிகள்
அனைத்தும் பார்ப்பனிய எதிர்ப்பு பேசிக் கொண்டே இந்து மதவாத பா.ஜ.க.வுடன் மாறிமாறி கூட்டணி
அமைக்கின்ற கட்சிகள்தான்.
தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க.,
தே.மு.தி.க. போன்ற திராவிடக் கட்சிகளும் இராமதாசு மற்றும் திருமாவளவன் தலைமையிலான சாதிவாதக்
கட்சிகளும் புதிய தராளக் கொள்கைகளை செயல்படுத்துவது, நாட்டை அமெரிக்காவின் புதிய காலனிய
களமாக மாற்றுவதையும் ஆதரிக்கின்ற கட்சிகள்தான். இந்துமதவாதத்தை எதிர்ப்பதாகப் பேசிக்
கொண்டே இந்துத்துவப் பாசிச பா.ஜ.க.விற்கு மாறிமாறி ஆதரவளிக்கின்ற கட்சிகள்தான்.
எனவே நாடாளுமன்றவாத முதலாளித்துவ
கட்சிகளின் மோசடிகளை புறந்தள்ளுவோம். மோடி
கும்பலின் ஆட்சி இந்தியநாட்டை அமெரிக்காவின் புதியகாலனிய களமாக மாற்றுவதை எதிர்த்தும்;
சிறுபான்மை மதத்தினருக்கும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் எதிரான மதக்கலவரங்களையும்
சாதிக்கலவரங்களையும் நடத்துவதை எதிர்த்தும் அனைத்து உழைக்கும் மக்களும் தேசபக்த, ஜனநாயக
சக்திகளும் பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் ஓரணியில் அணிதிரள அறைகூவி அழைக்கிறோம்.!
* மோடி கும்பலின் ஆட்சி இந்திய நாட்டை அமெரிக்காவின்
புதிய காலனிய களமாக மாற்றுவதை எதிர்த்துப் போராடுவோம்!
* இந்துத்துவப் பாசிசத்திற்கு எதிராக புரட்சிகர,
ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டுப் போராடுவோம்!
No comments:
Post a Comment
விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.