Saturday, June 1, 2013

ஈழமும் தேசிய இனப் பிரச்சினையும்


முன்னுரை

சமரன் வெளியீட்டகத்தின் இந்நூல் - சமரன் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான முற்போக்கு இளைஞரணி, மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் போன்ற அமைப்புகள் - 1983ஆம் ஆண்டுகளிலிருந்து ஈழவிடுதலையை ஆதரித்து வெளியிட்ட அரசியல் பிரச்சார பிரசுரங்களின் தொகுப்பாகும். இவை அனைத்தும் ஈழத்தமிழ் தேசிய இனவிடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவையும் தேசிய இனப் பிரச்சினைப் பற்றிய பாட்டாளிவர்க்க இயக்கத்தின் கோட்பாடுகளையும், தீர்வுகளையும் உள்ளடக்கியதாகும்.

இலங்கையில் தமிழீழத்திற்கான அரசியல் போராட்ட வரலாறு

இலங்கை சிங்களம் (சிறீலங்கா), தமிழீழம் என்கிற இரு தேசங்களைக் கொண்ட ஒரு நாடாகும். இந்த இரு தேசங்களில் ஒன்றான தமிழீழம் அம்மக்களின் சுயவிருப்பை அறியாமல் பலாத்காரமாக பிரித்தானிய காலனியாதிக்கவாதிகளால் கட்டாயமாக இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட அரைக்காலனிய நாடே இலங்கை ஆகும். இதற்கு வித்திட்டது பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளின் கோல்பூர்க் கெமெரன் சீர்திருத்தமும் சோல்பரி அரசியல் யாப்புமாகும். இதற்குத் துணைபோனவர்கள் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் சமஷ்டிக் கட்சியின் அடிகோலாக விளங்கிய தரகுமுதலாளிய கும்பல்களாகும். இராமநாதனுக்கும், பொன்னம்பலத்துக்கும் முன்னால் உள்ள `சர்-SIRபட்டம் பட்டத்தரசி பிரித்தானிய எலிசபத் மகாராணி வழங்கியதாகும்.

இவ்வாறு உருவாக்கப்பட்ட இலங்கையில் ஏற்பட்ட முதல் இன வெறித்தாக்குதல் 1915இல் கொழும்பு வர்த்தகத்தில் மேலோங்கியிருந்த இஸ்லாமியத் தமிழர்களுக்கு எதிரானதாகும். இத்தாக்குதலை நியாயம்செய்து, சிங்கள ஆளும் வர்க்கத்தை நியாயப்படுத்தி பிரித்தானியா மகாராணியிடம் முறையீடு செய்துவிட்டு திரும்பிவரும் வேளையில்தான் சர்.பொன்இராமநாதனை சிங்களவர்களால் தேரில் இழுத்துவந்து கௌரவிக்கப்பட்டார்.

1947 போலிச்சுதந்திர அதிகாரக் கைமாற்றத்துக்குப் பின் சிங்கள ஆளும் கும்பல் தமது அதிகாரத்தை ஏகபோகமாக்கும் பொருட்டு சிங்களப் பெருந்தேசிய இனத்தை தம் பின்னால் திரட்டும் நோக்கில் சிங்களப் பேரினவாதத்தையும், பௌத்த மதவாதத்தையும் தமது கருத்தாயுதமாக ஏந்தினர்.

அடுத்தத் தாக்குதல் மலையகத் தமிழ் மக்களின் பாராளுமன்ற அங்கத்துவத்தின் மீது பாய்ந்தது. மலையகத் தமிழர்களின் வாக்குரிமை, குடியுரிமை பறிக்கப்பட்டு தேசமற்ற நவீன கூலி அடிமைகள் ஆக்கப்பட்டனர். பின்னர்தான் (மூன்றாவது இலக்காகத்தான்) இது தமிழ் மக்கள் மீது பாய்ந்தது.

அதிகாரவர்க்கத்தில் இருந்து (அரசுமுறையில் இருந்து) தமிழரை வெளியேற்ற கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச்சட்டம் 1958 `கலவரத்தில்` முடிந்தது. இதைத் தொடர்ந்து இந்தக் `கலவரம்` என்கிற ஆயுதம் 1983 வரை நிராயுத பாணியான தமிழீழ தேசத்தின் மீது 25 ஆண்டுகள் தொடர்ந்து பிரயோகிக்கப்பட்டது.

1961இல் சிறீ எதிர்ப்புக் `கலவரம்`, 1977 சர்வஜன வாக்கெடுப்புக்கு எதிரான `கலவரம்`, 1981இல் மாகாண சபைத் தீர்வை எதிர்த்த மக்களுக்கு எதிரான படுகொலை, 1983இல் இலங்கைத் தழுவிய இனப்படுகொலை. குழந்தைகளில் இருந்து தெய்வங்கள் உட்பட அனைத்துத் தமிழ் அடையாளம் மீதும் சிங்களப் பேரினவாதக் காட்டுமிராண்டி வெறியாட்டம் கட்டவிழ்க்கப்பட்டது.

இதனால் வெகுண்டெழுந்த வெகுஜன உணர்வின் தாக்கத்தால் சமரசவாதத் தலைவர்களான செல்வா தலைமையில் சமஷ்டிக் கட்சி, பின்னாளில் தமிழர் கூட்டணி, தனித் தமிழீழத் தீர்மானத்தை 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டில் நிறைவேற்றியது. 1980 தேர்தலில் ஈழத் தமிழர்கள் தனி ஈழத்திற்கு ஆதரவாக தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்ததால் அக்கட்சி 100 சதவீத இடங்களைக் கைப்பற்றியது. பின்னர் அக்கட்சி தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு துரோகமிழைத்தது. அத்தகைய ஒரு சூழலில்தான் அரசியல் வழியில் அமைதி வழியில் பெறமுடியாத போது தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் வெடித்துக் கிளம்பியது. போராளிக் குழுக்கள் தோன்றின.

83- இனக்கலவரமும் ஆயுதப் போராட்டமும்

1983 ஜூலை இனக்கலவரங்களுக்குப் பிறகு ஈழத் தமிழ் இனத்தைச் சார்ந்த பிளாட், .பி.ஆர்.எல்.எப், டெலோ, எல்.டி.டி. போன்ற பல்வேறு குழுக்கள் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கின. ஈழவிடுதலைப் போர் ஆயுதப் போராட்டப் பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டது. அத்தகைய ஒரு சூழலில் ... (மா.லெ) மக்கள்யுத்தக் கட்சியின், “தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தை ஆதரிப்போம்! இந்திய அரசின் இராணுவத் தலையீட்டை எதிர்ப்போம்!” என்ற அரசியல் தீர்மானத்தை சமரன் வெளியிட்டது. அதில் இலங்கையில் தனித் தமிழ் ஈழம்தான் ஈழ மக்களுக்கான அரசியல் தீர்வு என்பதை கோட்பாட்டு ரீதியில் முன்வைத்ததுடன், ஈழத் தமிழர்களின் விடுதலைப் போரை நசுக்க இந்தியா இராணுவத் தலையீடு செய்யும் என்பதை முன்கூட்டியே அறிவித்தது. எனவே ஈழவிடுதலையை ஆதரித்தும், இந்திய இராணுவத் தலையீட்டை எச்சரித்தும் ஒரு தெளிவான நிலைபாட்டை முன் வைத்தது.

தனித் தமிழ் ஈழம்தான் தீர்வுஎன்பதற்கானக் காரணத்தை அது பின்வருமாறு கூறுகிறது:

இலங்கையின் அரைக்காலனித்துவ - அரைநிலப்பிரபுத்துவ அரசு, சிறுபான்மை இனத்தவரை ஒடுக்குவதையே தனது வாழ்விற்கு ஆதாரமாகக் கொண்டுள்ளதால், இன்றுள்ள இலங்கை அமைப்பிற்குள் இனமோதல் தவிர்க்க முடியாததாகிறது. இரு தேசிய இனங்களுக்கும் இடையில் அமைதியும் சாத்தியமற்றதாகிறது. சிங்களப் பேரினவாத, அதிகாரவர்க்க முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ வர்க்கங்களும், அவர்களது அரசும் இரு தேசிய இன மக்களிடையே உண்டாக்கும் முடிவற்றப் பூசல்களும் மோதல்களும் தமிழ்பேசும் மக்களின் பொருளாதார வாழ்வின் சுதந்திரத்திற்குத் தடையாகவே இருக்கின்றன. இவையாவற்றிற்கும் மேலாக ஈழத்தமிழினத்தை ஒழித்துக் கட்டவும், குடியுரிமை அற்ற மலையக மக்களை நவீன அடிமைகளாக நடத்தவும், தாங்கள் விரும்பினால் அவர்களை நாட்டைவிட்டே விரட்டியடிப்பதற்காகவும் இலங்கை அரசு மேற்கொள்ளும் இன ஒடுக்குமுறைகள் தமிழீழ மக்கள் தனிநாடு கோரவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. மலையக மக்கள் குடியுரிமை உள்ளிட்டு அனைத்து ஜனநாயக உரிமைகளையும் கோருகிறார்கள். தமிழ் முஸ்லீம்கள், மத உரிமை உள்ளிட்டு அனைத்து ஜனநாயகக் கோரிக்கைகளையும் தேசிய அமைதியையும் கோருகிறார்கள். இலங்கை நாட்டிலுள்ள தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமையையும் தேசிய அமைதியையும் மக்கள் ஜனநாயகப் புரட்சி ஒன்றுதான் உத்திரவாதம் செய்ய முடியும். ஆனால் இந்த மக்கள் ஜனநாயகப் புரட்சியானது தமிழ் தேசிய இனம் சிங்கள தேசிய இனத்திடமிருந்து பிரிந்து போவதில் முடியுமா? அல்லது சிங்கள தேசிய இனத்துடன் சம அந்தஸ்து பெறுவதில் முடியுமா? என்பதுதான் இன்றுள்ள பிரச்சினை

என்று கேள்வி எழுப்பி தமிழ் ஈழம் அமைவது ஒன்றுதான் அதற்குத் தீர்வு என்று கூறுகிறது.

இன்றைய சிங்களப் பேரினவாத, புத்தமதவாத அரசு இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களை ஒடுக்குவதையே தனது வாழ்விற்கு ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. இவ்வரசின் பேரினவாதக் கொள்கையால் சிங்கள இனத்திற்கும் ஈழத் தமிழ் இனத்திற்கும் மற்றும் பிற தமிழ்பேசும் மக்களுக்கிடையில் பூசல்களும் மோதல்களும் இருக்கிறது. இன்றுள்ள நிலைமைகளில் வர்க்கப் போராட்டம் தடையின்றி நடப்பதற்கான வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்படுகிறது. ஈழத் தமிழ் இனம் மற்றும் தமிழ் பேசும் மக்களின் பொருளாதார வாழ்வின் சுதந்திரம் மறுக்கப்படுகிறது. சிங்கள தேசிய இனத்தைச் சார்ந்த பாட்டாளி மக்கள் பேரினவாதத்திற்கு இறையாகி ஈழத் தமிழினம் மற்றும் பிற தமிழ்பேசும் மக்கள் மீதும் சிங்கள ஆளும் வர்க்கங்கள் நடத்தும் இன ஒடுக்குமுறைகளுக்கு துணைபோகின்றனர். இந்நிலையில் ஈழத் தனிநாட்டுக்கான போராட்டமும் மலையக மக்களின் ஜனநாயக உரிமைக் கோரிக்கைகளுக்கான போராட்டமும், தமிழ் பேசும் முஸ்லீம் மக்களின் ஜனநாயகப் போராட்டமும் நீதியானதும் உலகப் பாட்டாளிவர்க்க இயக்கம் ஆதரிக்கத் தகுந்ததுமாகும்.”

ஈழத் தமிழ்மக்களின் தனித் தமிழீழ நாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கும் தமிழ் இன உணர்வாளர்களும், திராவிடக் கட்சிகளும் தொப்புள்கொடி உறவு என்றும், தாய் தமிழகம் என்றும் கூறி ஈழ விடுதலையை ஆதரித்தனர். ‘உலகநாடுகளில் எல்லாம் தமிழர்கள் வாழுகின்றார்கள் ஆனால் தமிழர்கள் வாழ்வதற்கென்று ஒரு நாடு இல்லைஎன்ற நிலையில் இருந்து ஆதரிக்கின்றார்கள். ஆனால் பாட்டாளிவர்க்க இயக்கத்தின் ஆதரவு அத்தகைய தன்மையிலிருந்து அமையவில்லை. சமரன் அதேக் கட்டுரையில் இது பற்றிப் பின்வருமாறு கூறுகிறது.

இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களும் இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள மக்களும் ஒரே தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற பொருளில் அல்ல இம்முழக்கத்தை நாம் முன்வைப்பது. உலகெங்கிலும் உள்ள ஏழரை கோடி தமிழ்மொழி பேசுவோருக்கு ஒரு தனிநாடு வேண்டும் என்கிற காரணத்தினாலும் அல்ல. ஏனெனில் உலகெங்கிலும் உள்ள ஏழரை கோடி தமிழ் மக்களும் ஒரு மொழியைப் பேசினாலும் ஒரே தேசிய இனத்தைச் சார்ந்தவர்கள் ஆகமாட்டார்கள். பாட்டாளிவர்க்க சர்வதேசவாதிகள் என்கிற முறையிலும் இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களின் தேசியச் சுயநிர்ணய உரிமைக்கானப் போராட்டம் உலக சோசலிசப் புரட்சியின் ஒரு பகுதி என்கிற முறையிலும்தான் இப்போராட்டத்தை நாம் ஆதரிக்கின்றோம். தமிழகத்தை பின்புலமாக்குவோம் என்கிற முழக்கத்தை முன்வைக்கிறோம்”.

திராவிடக் கட்சிகளும், தமிழ் இன உணர்வாளர்களும் தொப்புள்கொடி உறவு பேசி தென்னாசிய மேலாதிக்க வெறிப்பிடித்த இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி தனிநாடு பெற்றுத்தரக் கோரினர். நாம் இந்திய அரசின் மேலாதிக்க வெறியை எடுத்துக்காட்டி ஆரம்பம் முதலே இந்திய இராணுவத் தலையீட்டை எதிர்த்தே வந்துள்ளோம். இந்திய அரசு ஒருபோதும் தமிழ் ஈழத்தை ஆதரிக்காது. அதை எதிர்த்துதான் தமிழீழம் காணவேண்டும் என்பதை எடுத்துரைத்தோம்.

இன்றும்கூட, இந்திய அரசின் ஆதரவோடுதான் தமிழீழம் அமைக்க முடியும் என்றும், தமிழீழத்திற்கு ஆதரவாக நிலை எடுக்கும்படி இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் திராவிடக் கட்சிகளும், தமிழ் இன உணர்வாளர்களும் கூறிவருகின்றனர். ஆனால் விரிவாதிக்க இந்திய அரசை எதிர்த்துப் போராடுவதன் மூலம்தான் தமிழ் ஈழத்தை அமைக்க முடியும் என்ற எமது நிலைபாடுதான் சரி என்று ஈழப் போராட்ட வரலாறு நிரூபித்துள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியமும் - தமிழீழ விடுதலைப் போரும்

ஈழத் தமிழ் தேசிய இனம் விடுதலை பெறுவதற்கு சிங்கள இனவெறி அரசு மட்டுமே எதிரி அல்ல - அமெரிக்க, இரசிய சமூக ஏகாதிபத்தியவாதிகளும் விரிவாதிக்க இந்திய அரசும் எதிரிகள் என்று ஆரம்பம் முதலே தொடர்ந்து சமரன் எச்சரித்து வந்துள்ளது.

திம்புப் பேச்சுவார்த்தையின்போது, சமரன் வெளியிட்டஇந்திய அரசே ஈழத் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி! ஈழத் தமிழ் விடுதலைப் போராளிகள் முதுகில் குத்தாதே!” என்ற பிரசுரம் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

இனப் பிரச்சினையை சிக்கலாக்குவதில் ஜெயவர்த்தனே அரசுமட்டுமல்ல, இரு ஏகாதிபத்திய வல்லரசுகளும் தங்களுடைய ஆதிக்க மண்டலத்திற்கான போட்டியில் இலங்கையை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கென மறைமுகமாக சண்டை இடுகின்றன. ஜெயவர்த்தனே அரசை நிலைநிறுத்துவதன் மூலம் அரைநிலப்பிரபுத்துவ, அரைக்காலனிய அமைப்பைப் பாதுகாக்கவும், இலங்கை மீதான தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் ஆதரவு நாடுகளும் இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் செய்துவருகின்றன. இதன் மூலம் ஜெயவர்த்தனே அரசின் இன ஒடுக்குமுறைக்கு உதவிவருகின்றன. ஜெயவர்த்தனே அரசு இன ஒடுக்குதலையே தமது வாழ்வுக்கு ஆதரமாகக் கொண்டுள்ளது. இதனை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு, ஜெயவர்த்தனேயின் அமெரிக்க சார்பு அரசை எதிர்ப்பதாகவும், ஈழத்தமிழின விடுதலைப் போரை ஆதரிப்பதாகவும் சதித்தனமாக இரசிய சமூக ஏகாதிபத்தியம் தனது ஆதிக்கத்திற்குள் இலங்கையைக் கொண்டுவர முயற்சிக்கிறது. இந்திய அரசு தனது சந்தை நலனுக்காக முழு இலங்கையின் சந்தையையும் பெறவேண்டி ஈழவிடுதலைப் போராளிகளை பேச்சுவார்த்தைக்கு நிர்ப்பந்தித்து, இந்தியாவில் மாநிலங்கள் பெற்றிருப்பதைப் போன்ற அதிகாரம் - இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை அல்ல - சுயாட்சி (autonomy) என்ற வழியை முன்வைத்தனர்”.

இந்திய அரசு தமது இலங்கை மீதான விரிவாதிக்கத்தைத் திணிப்பதற்காக, தமிழ் ஈழ விடுதலைக் கோரிக்கையை கைவிடச் செய்து அரசியல் சட்டத்திருத்தம், அதிகாரப் பரவல் போன்ற சீர்திருத்தக் கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்தது. சீர்திருத்தங்களை ஏற்குமாறு விடுதலைப் போராளிகளை நிர்ப்பந்தம் செய்தது. அத்துடன் ராஜிவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் மூலம் ஈழத் தமிழருடைய விடுதலைப் போரை நசுக்கவும், இலங்கை இனவெறி அரசைப் பாதுகாக்கவும் இந்திய அமைதிப்படை எனும் பேரில் ஒரு ஆக்கிரமிப்புப் படையை இலங்கைக்கு அனுப்பி ஈழத் தமிழர்களை நரவேட்டையாடியது. இலங்கையை தமது மேலாண்மையின் கீழ் கொண்டு வருவதற்காக இரு ஏகாதிபத்திய நாடுகளும் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டே மறுபுறம் ஈழத்தமிழ்த் தேசிய இன விடுதலைப்போரை நசுக்குவதற்கு இலங்கை அரசுக்குத் துணைபோகின்றன. ஈழத் தமிழருக்கு எதிரான இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு அமெரிக்க, இரசிய ஏகாதிபத்தியவாதிகளின் ஆதரவு முழுமையாக இருந்தது.

புலிகள் அமைப்பைத் தவிர டெலோ, .பி.ஆர்.எல்.எப்., பிளாட் போன்ற போராளிக் குழுக்கள் இந்திய அரசின் சதிவலையில் வீழ்ந்து, இந்திய விரிவாதிக்கத்திற்கு சேவை செய்து ஈழ விடுதலைப் போருக்குத் துரோகம் இழைத்தன. துரோகக் குழுக்களாக மாறின. விடுதலைப் புலிகள் அமைப்பு இந்திய ஆக்கிரமிப்புப் படையை எதிர்த்துப் போராடி இந்திய இராணுவத்திற்கு ஒரு கசப்பான படிப்பினையை அளித்தது. இந்திய இராணுவத்தைத் திரும்பப் பெறுவது என்ற அடிப்படையில் அன்றைய பிரேமதாசா அரசாங்கத்துடன் விடுதலைப் புலிகள் ஒரு உடன்பாட்டிற்கு வந்தனர். இந்தியப் படையை இலங்கையைவிட்டு வெளியேற்றினர்.

இந்திய ஆக்கிரமிபுப் படையை எதிர்த்துப் போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பின் செயல்தந்திரத்தை நாம் முழுமையாக ஆதரித்ததுடன், விடுதலைப் போரை வெற்றிக்கு இட்டுச்செல்வதில் உள்ள புலிகள் அமைப்பின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கு தவறவில்லை.

பிரேமதேசா அரசு தொடுத்துள்ள தேசிய இன ஒடுக்குமுறை யுத்தத்தை எதிர்த்த விடுதலை யுத்தத்தை ஆதரிப்போம்!” என்றக் கட்டுரையில் பின்வருமாறு விமர்சிக்கப்பட்டது: “இந்திய மேலாதிக்கவாதிகளுடன், இந்திய ஆக்கிரமிப்புப் படையுடன் பிற ஈழப் போராளி அமைப்புகள் சமரசம் செய்து கொண்டது போல விடுதலைப் புலிகள் அமைப்பும் சமரசம் செய்துகொள்ளுமோ என்ற ஐயம் ஏற்பட்டது. ஆனால் அது அதற்குமுன் கட்டத்தில் இலங்கை அரசின் பாசிச தேசிய ஒடுக்குமுறை யுத்தத்தை எதிர்த்துப் போரிட்டதைப் போலவே இந்திய ஆக்கிரமிப்புப் படையை எதிர்த்தும் உறுதியுடன் போராடியது. விடுதலைப் புலிகள் பணிந்திருந்தால் ஈழத் தேசிய விடுதலை இயக்கம் முழுவதுமாக சீரழிந்து போயிருக்கும். இந்திய ஆக்கிரமிப்புப் படையை எதிர்த்து அது போரிட்டது மட்டுமல்லாமல், இந்திய மேலாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தமிழ் ஈழத் தேசிய இனச் சுயநிர்ணய உரிமைப் பிரச்சினையை உட்படுத்திப் பார்த்து இலங்கை அரசுடன் கருத்து உடன்பாடு கண்டு இந்திய ஆக்கிரமிப்புப் படையை இலங்கையை விட்டு வெளியேற்றுவதற்கு வழிவகுத்தது. அவ்வாறு செய்யாதிருந்தால் இந்திய அரசு இலங்கை மீது தனது மேலாதிக்கத்தைத் திணிப்பதில் வெற்றிப் பெற்றிருக்கக் கூடும். ஆகையால் விடுதலைப் புலிகள் அமைப்பு இந்திய அரசிற்கும், இலங்கை அரசிற்கும் இடையில் நிலவிய முரண்பாட்டை சரியாகவே கையாண்டது எனக் கூறலாம். இக்கட்டத்தில் அது இலங்கை அரசுடன் போர் ஓய்வு உடன்பாடு கண்டது ஒரு சரியான செயல்தந்திரமேயாகும்.”

...
அதேசமயம்விடுதலைப் புலிகளின் ஜனநாயக மறுப்பும் எதேச்சதிகார முறைகளும் தேசிய விடுதலைப் போராட்டத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. அது தேசிய இன ஒடுக்குமுறையை அல்லது இந்திய மேலாதிக்கத்தை எதிர்ப்பதற்கான மக்களின் பலத்தின் வளர்ச்சியை பாரதூரமாக தடைப்படுத்தி, இதன்விளைவாக அது தேசிய விடுதலைப் புரட்சிகர சக்திகளின் வெற்றிகளின் அளவைக் குறைத்து, விடுதலைப் போராளிகளுக்கு இழப்பை ஏற்படுத்துகின்றன, என்றாலும் இலங்கையிலும் உலகிலும் இன்றுள்ள ஒட்டுமொத்தமான நிலைமைகளும், பெரும் படைப்பலம் படைத்த ஒரு பெரும் நாடு ஒரு சிறிய நாட்டின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கிட முடியாது என்பதை அண்மைகால அனுபவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஆகையால் இந்திய ஆக்கிரமிப்புப் படையையோ அல்லது இலங்கை அரசையோ எதிர்த்து ஈழத் தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டம் முன்னேற்றமடைவது சாத்தியம்தான். முன்னேற்றத்தைத் தடைப்படுத்துவதாக உள்ள விடுதலைப் புலிகளின் ஜனநாயக மறுப்பும் எதேச்சதிகாரப் போக்கின் காரணமாக விடுதலைப் போராட்டத்தின் முன்னேற்றம் மெதுவாகவே இருக்கும்

ஆனால் விடுதலைப் புலிகள் ஒரு புரட்சிகர யுத்தத்தின் நடுவில் உள்ளனர். புரட்சிகர யுத்தம் என்பது நஞ்சைப் போக்கும் ஓர் எதிர் நஞ்சு. அது எதிரியின் நஞ்சைப்போக்குவது மாத்திரமல்ல. நமது சொந்த அழுக்கைக்கூட (விடுதலைப் போராளிகளின் அழுக்கைக்கூட) சுத்திகரிக்கிறது. அது பல பொருட்களை மாற்றக்கூடியது. அல்லது அவற்றின் மாற்றத்துக்கான பாதையைத் திறக்கக் கூடியது.”

ஆகையால் விடுதலைப் புலிகள் ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் ஊன்றிநிற்கும்வரை அவர்களை ஒடுக்குமுறை யுத்தத்தை நடத்துபவர்களுடன் சமப்படுத்திப் பார்க்காமல், தேசிய ஒடுக்குமுறையை எதிர்த்தப் போராட்டத்தில் அவர்களுடன் ஒற்றுமையும், அவர்களின் ஜனநாயக் உரிமை மறுப்பு மற்றும் எதேச்சதிகாரப் போக்குகளை எதிர்த்தப் போராட்டமும்தான் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் அணுகுமுறையாக இருக்கவேண்டும். விடுதலைப் புலிகள் தேசிய இன ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடும் வரையில் பாடாளிவர்க்க இயக்கம் அவர்களுடன் ஒற்றுமையும், போராட்டமும் என்ற உறவையே கொள்ளவேண்டும். தேசிய இன ஒடுக்குமுறையை எதிர்த்தப் போராட்டத்தில் அவர்களுடன் ஒரு குறிப்பானத் திட்டத்தின் அடிப்படையில் ஐக்கிய முன்னணியைக் கட்டுவதை பாட்டாளிவர்க்க இயக்கம் தனது செயல்தந்திரமாகக் கொள்ளவேண்டும்”.

இத்தகைய ஒரு அணுகுமுறையை சமரன் குழு விடுதலைப் புலிகளுடன் மேற்கொண்டது.

ஆனால் அத்தகையதொரு ஐக்கிய முன்னணியை அமைக்க முடியாமல் போனதற்கு விடுதலைப் புலிகளின் எதேச்சதிகாரப்போக்கு ஒரு காரணம் என்றால், விடுதலைப் புலிகள் தேசிய விடுதலைக்காகப் போராடுவதை அங்கீகரித்து, ஜனநாயகத்திற்காக அதனுடன் போராடுவது என்ற ஐக்கியம், போராட்டம் என்ற அணுகுமுறையை கடைபிடிக்காதது போன்ற புரட்சிகர ஜனநாயக சக்திகளின் ஆழ்ந்தத் தவறும் ஒரு காரணமாகும். அதற்காக ஈழவிடுதலைப் போர் கொடுத்துள்ள விலை மிகமிக அதிகமானது. வரலாற்றிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பும், பிற புரட்சிகர ஜனநாயக சக்திகளும், ஒரு சரியான பாடத்தைக் கற்க வேண்டும்.

விடுதலைப் புலிகளின் யாழ்பாண முற்றுகையும் அமெரிக்க-இந்திய அரசுகளின் தலையீடும்

இந்திய ஆக்கிரமிப்புப்படை வெளியேறியவுடன் பிரமதாசா அரசாங்கம் விடுதலைப் புலிகள் மீது மீண்டும் ஒரு யுத்தத்தைத் தொடுத்தது. இந்தியப் படையை வெளியேற்றுவதற்காக விடுதலைப் புலிகளோடு செய்துகொண்ட ஒப்பந்தங்களை செயல்படுத்த இலங்கை அரசு மறுத்தது. ஈழத்தமிழினத்தின் மீது மீண்டும் ஒரு யுத்தத்தைத் தொடுத்தது. இனி போர்நிறுத்தமில்லை, கிரிமினல் கும்பலை (புலிகளை) அழிக்கும்வரை ஓயமாட்டோம் என்று இராணுவ அமைச்சர் ரஞ்சன் விஜெயரத்தனே முழங்கினார்.

விடுதலைப் புலிகள் இயக்கம் பின்வாங்கி வன்னிக் காடுகளிலிருந்து கொரில்லா போர்முறைக்கு மாறியது. 1996ஆம் ஆண்டு ஜூலையில் சிங்களப் படைகளின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ்குடா நாட்டை மீட்பதற்காக புலிகள் அமைப்புஓயாத அலைகள்போரைத் தொடங்கியது. ஓயாத அலைகள் என்ற தொடர் போர்களின் மூலம் முல்லைத் தீவு, தெற்கு வவுனியா, ஆனையிறவு முகாம்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றினர். அதைத்தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் 40 ஆயிரம் சிங்கள இராணுவ வீரர்கள் புலிகளின் முற்றுகைக்கு ஆளானார்கள். அதை எதிர்த்து இந்தியாவின் உதவியை அன்றைய சந்திரிக்கா தலைமையிலான இலங்கை அரசு கோரியது.

இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிடமாட்டோம் என்று இன்று கூறுகின்ற இந்திய அரசு அன்று இலங்கையில் 40 ஆயிரம் வீரர்களை மீட்பதற்காக - மனிதநேய உதவி என்ற பேரால் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இராணுவத் தலையீடு பற்றிப் பேசியது. இலங்கை இராணுவ வீர்ர்களை காப்பாற்றவும், விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தவும் தயாரிப்பு செய்தது. திருவனந்தபுரத்தில் இந்திய விமானப்படை விமானங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டன.

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளோ தங்களது 5வது கடற்படை போர்க்கப்பலை இலங்கை அருகில் நிறுத்திக்கொண்டுதமிழ் ஈழம் தனிநாடாக உருவாவது என்பதை சர்வதேச சமுதாயம்தான் தீர்மானிக்கவேண்டும், மீறி புலிகள் தனிநாட்டை அறிவித்தால் அவர்கள் சுடுகாட்டைத்தான் ஆளமுடியும். குண்டுபோட்டு அனைத்தையும் பொசுக்கிவிடுவோம்என்று மிரட்டினார்கள். இத்தகைய ஒரு சூழலில்தான், அந்நியப்படை இன்னொருமுறை ஈழ மண்ணில் வருவது என்பது தமிழ் மக்கள் மீது கொடிய அடக்குமுறைக்கு வித்திடும் என்று கருதிதான் விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றுகையைக் கைவிட்டு பின்வாங்கியது. அதற்குப் பின்னர்தான் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் மேற்பார்வையில் நார்வே தலைமையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு நடந்தது.

1990ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு சோவியத் சமூக ஏகாதிபத்தியம் வீழ்ச்சியடைந்தப் பிறகு அமெரிக்காவோடு இந்தியா நெருங்கிவருகிறது. அமெரிக்காவின் ஆசிய மேலாதிக்கத்தை இந்தியா ஏற்றுக்கொண்டது. அதேசமயம் தென் ஆசியாவில் குறிப்பாக இலங்கையில் இந்தியாவின் நலன்களை அமெரிக்கா அங்கீகரித்தது. இந்திய அரசும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் இலங்கை இனச் சிக்கலைத் தீர்ப்பதற்கான அதாவது ஈழத் தமிழர்களின் விடுதலைப் போரை நசுக்கி இலங்கையில் நிலவும் புதிய காலனிய வடிவிலான அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ அரசைக் கட்டிக் காப்பது என்ற அடிப்படையில் ஒரு பொதுவானக் கொள்கையை வகுத்துக்கொண்டு செயல்படுகின்றன.

அமெரிக்க ஏகாதிபத்தியம் 9/11 இரட்டைக் கோபுரத் தகர்வுக்குப் பிறகு விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து அதன்மீது பல்வேறுத் தடைகளை விதித்தது. இந்திய அரசோ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை பிரித்து அகண்ட ஈழம் அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளது என்ற பொய்யானக் குற்றச்சாட்டின் கீழ் இன்றளவும் தடைவிதித்துள்ளது. 2005ஆம் ஆண்டு நார்வே தலைமையில் தொடங்கிய ஓஸ்லோ பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிர்ப்பந்தத்தால் ஐரோப்பாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் 30 நாடுகளில் தடைசெய்யப்பட்டது. அதனால் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கான நிதி உதவி பெருமளவில் தடைசெய்யப்பட்டது. அமெரிக்காவும் பிரிட்டனும் இலங்கைக்கு ஏராளமான கடன் வழங்கினர். அமெரிக்கா தமது நட்பு நாடான இசுரேல் மூலம் இலங்கைக்கு இராணுவ தளவாடங்களை வழங்கியது. மறுபுறம் இந்திய அரசாங்கம் கடல் வழியாக புலிகளுக்கு ஆயுதம் வருவதை தடுத்து நிறுத்தியதுடன் விடுதலைப் புலிகளின் கப்பற்படையை அழிப்பதற்கு முழுமையாக உதவியது. இரசியா, சீனா போன்ற நாடுகளோ அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்ப்பது என்றபேரில் இலங்கை அரசுக்கு நிதி உதவியையும் ஆயுதங்களையும் கொடுத்து உதவின. இவ்வாறு சர்வதேச நாடுகளின் பங்களிப்புடன் ஒரு கொடிய யுத்தத்தை நடத்திதான் இராஜபட்சே கும்பல் விடுதலைப் புலிகளை வென்றது. விடுதலைப் புலிகளின் தலைமையை நயவஞ்சகமாக அழித்தொழித்தது. ஈழ விடுதலைப் போரை நசுக்குவதில் அமெரிக்க-இந்திய நாடுகளின் பாத்திரம்தான் முதன்மையானது.

விடுதலைப் புலிகள் இயக்கம், எதிரி பெரும்படைத் திரட்டி சுற்றிவளைத்து தாக்கி அழிப்பது என்றத் திட்டத்தை செயல்படுத்தும் போது அதிலிருந்து புரட்சி இயக்கத்தையும், மக்களையும் பாதுகாப்பதற்கு முறையாக பின்வாங்குவது என்ற செயல்தந்திரத்தை கடைபிடிக்கத் தவறிவிட்டது. அமெரிக்கா மீதிருந்த மாயையும், இந்திய அரசின் மீதான குருட்டு நம்பிக்கையும் கஸ்பர் சாமியார் போன்ற துரோகிகளை நம்பியதும்தான் தோல்விக்கும் தலைமையின் அழிவிற்கும் காரணமாகி விட்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பு இத்தகைய பலவீனங்கள் உடையது என்பதை சமரன் முன்கூட்டியே உணர்ந்திருந்தது. விடுதலைப் போரில் ஒரு விடுதலை இயக்கம் உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் நேர்முக சேமிப்பு சக்தி மற்றும் மறைமுக சேமிப்பு சக்திகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது திம்புப் பேச்சுவார்த்தையின் போதே பின்வருமாறு ஆலோசனைகளை வழங்கியது.

தமிழீழ விடுதலைப்போரில் வெற்றிபெற ஈழத்தமிழ் போராளிகள், சொந்த தேசிய இன தொழிலாளர், உழவர், அறிவாளிப் பிரிவினைரையும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களையும் வர்க்கங்களையும் சார்ந்து நிற்கவேண்டும். தமிழ் தேசியம் பேசி மக்களைத் திரட்டிக் கொண்டு ஆளும் வர்க்கங்களோடு சமரசம் செய்து கொள்வதன்மூலம் விடுதலைப் போரை சீர்குலைக்க விரும்பும் தமிழீழ தரகு முதலாளிகளின் அரசியல் பிரதி நிதிகளை அமிர்தலிங்கம் போன்ற சமரச சக்திகளை தனிமைப்படுத்தி, அவர் பின் உள்ள மக்களை வென்றெடுத்து எதிரிக்கு எதிராக நிறுத்தவேண்டும். ஜெயவர்த்தனேவின் பாசிச ஆட்சி முறையினால் ஒடுக்குமுறைக்குள்ளான சிங்கள இனத்திலுள்ள பாட்டாளிகளையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் வென்றெடுத்து அணி சேர்த்துக்கொள்ள வேண்டும். அமெரிக்க, ரசிய சமூக ஏகாதிபத்தியங்களுக்கிடையிலுள்ள முரண்பாட்டினாலும், இலங்கை இந்திய ஆளும் வர்க்கங்களுக்கிடையிலான முரண்பாட்டினாலும் அவர்களிடம் இருந்து கிடைக்கும் உதவி தற்காலிகமானது நிலையானதல்ல. சார்ந்து நிற்கக் கூடியதுமல்ல என்பதை உணர்ந்துகொண்டு சொந்த நாட்டு மக்களை சார்ந்து நின்று போரிட்டால் வெற்றிபெறுவது நிச்சயமான ஒன்று. இது மட்டுமே ஈழவிடுதலைப் போருக்கு சரியான பாதையாக விளங்க முடியும்.”  என்று சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் தொடர்ச்சியான பல கட்டுரைகளில் அயல் நாடுகளில் உள்ள தேச விடுதலைப் போராட்ட சக்திகளுடனும், ஒடுக்கப்பட்ட தேசங்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினருடன் இணைந்து போராட வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டு வந்தது.

ஆனால், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் குட்டி முதலாளித்துவ அரசியல் நிலைபாடு ஏகாதிபத்தியம் பற்றிய மாயைகளுக்கு அடித்தளமாக இருந்தது. அதுவே விடுதலைப் போரின் தோல்விக்கும், அமைப்பின் தலைமை அழிக்கப்படுவதற்கும் காரணம் ஆகிவிட்டது.

தேசிய இனச் சுயநிர்ணய உரிமை - கோட்பாட்டுப் பிரச்சினைகள்

இந்நூலில் வரும்தேசிய இனப்பிரச்சினையும் முதலாளித்துவ தேசியவாதமும்என்றக்கட்டுரை தேசிய இனப்பிரச்சினையில் ஏற்பட்டுள்ள இருவகை திரிபுகளை எதிர்த்து ஒரு சரியான பாட்டாளி வர்க்க வழியை நிறுவியுள்ளது. இடது, வலது போலிக் கம்யூனிஸ்டுகள் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை ஏற்க மறுப்பது குருசேவ் திருத்தல்வாதத்தின் தொடர்ச்சியே, ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவானதே என்பது தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அடுத்து சுயநிர்ணய உரிமையை பேசிக்கொண்டே ஈழம் உள்ளிட்ட எந்த ஒரு தேசிய இனத்தின் பிரிவினையையும் மறுக்கும் போக்கு ஒன்று. சுயநிர்ணய உரிமையே இன்றைய வரலாற்றுக் கட்டத்துக்கு பொருந்தாது. எனவே எல்லா தேசிய இனங்களும் பிரிந்துச்சென்று தனிநாடு அமைத்துக் கொள்ளவேண்டும் என்பது மற்றொன்று. அதாவது இலங்கையிலும் தனிநாடு, இந்தியாவிலும் தனிநாடு என்று கோருவது. இவை இரண்டுமே முதலாளித்துவ தேசியவாதமே.

தேசிய இனப்பிரச்சினை வரலாற்று ரீதியில் மூவகையாக தீர்க்கப்பட்டுள்ளது

முதலில் மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவம் உதித்தக் காலத்தில், அதாவது நிலப்பிரபுத்துவ மன்னராட்சியை எதிர்த்து முதலாளித்துவத்தின் தலைமையில் நடந்த பழைய வகைப்பட்ட ஜனநாயகப் புரட்சியின் மூலம் தீர்க்கப்பட்டது. இந்நிகழ்ச்சிப் போக்கில் தனித்தனித் தேசிய அரசுகள் அமைந்தன.

இரண்டாவதாக தாமதமாக முதலாளித்துவம் வளரத் தொடங்கிய கிழக்கு ஐரோப்பாவில் அதாவது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நிறைவு பெறாதிருந்த நாடுகளில் பல தேசிய அரசுகள் நிலவிய நாடுகளில் அந்த ஜனநாயகமற்ற அரசமைப்பு முறைகளுக்கும் முதலாளித்துவம் வளர்ந்து வந்த தேசிய இனப்புரட்சிக்கும் இடையே முரண்பாடு கூர்மையடைந்தது. இம்முரண்பாடுகள் அனைத்து இனங்களின் சமத்துவத்தை, முரண்பாடற்ற ஜனநாயகத்தை நோக்கமாகக் கொண்டது. எந்த அரசின் கீழ் இருப்பது என்பது மக்களின் விருப்பங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதாகவும், விரும்பினால் பிரிந்து போகவும் இருக்கக்கூடிய நிலையில் தேசிய ஒடுக்குமுறைக்குத் தீர்வு காண்பது.

மூன்றாவதாக இன்று இது ஏகாதிபத்திய சகாப்தமாக இருப்பதால், பழைய வகைப்பட்ட உலக முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி காலம் ஏற்கெனவே முடிந்துவிட்டு உலகப் பாட்டாளிவர்க்க புரட்சிக்காலம் தொடங்கிவிட்ட படியால் தேசிய இனப்பிரச்சினை உலகப் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் நடைபெறும் புரட்சிகளின் பகுதியாக ஆகிவிட்டது.

லெனின் ஏகாதிபத்தியத்தின் விதிகளைப் பற்றி ஆய்வுகளை முடிக்கும் முன்பாக போல்சுவிக்குகள் தேசிய இனப்பிரச்சினையை பாட்டாளி வர்க்க புரட்சியின் பகுதியாக பாராமல் பழைய பூர்சுவா - ஜனநாயக புரட்சியின் பகுதியாகப் பார்த்தனர் என்றும், ஏகாதிபத்திய யுத்தமும் ருசியாவில் அக்டோபர் புரட்சியும் தேசிய இனப் பிரச்சினை பழைய பூர்சுவா ஜனநாயகப் புரட்சியின் பகுதியாக இருந்த நிலையை மாற்றி பாட்டாளிவர்க்க சோசலிச புரட்சியின் பகுதியாக ஆக்கிவிட்டன என்றும் ஸ்டாலின்மீண்டும் தேசிய இனப்பிரச்சினை குறித்துஎன்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார். அக்டோபர் புரட்சியானதுதேசிய இனப் பிரச்சினையின் எல்லையை விரிவுபடுத்திற்று. ஐரோப்பாவில் தேசிய ஒடுக்குமுறையை எதிர்த்தல் என்ற குறிப்பான பிரச்சினையாக இருந்ததை மாற்றி ஒடுக்கப்பட்ட மக்கள், காலனிகள், அரைக்காலனிகளை ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுவிக்கும் பொதுவான பிரச்சினையாக ஆகிவிட்டது என ஸ்டாலின் கூறுகிறார்.

மேற்கூறிய லெனினதும் ஸ்டாலினதும் ஆய்வுகளின் அடிப்படையில் மாவோ சீனாவில் தேசிய இனப் பிரச்சினைப் பற்றி ஒரு திட்டவட்டமான கொள்கையை உருவாக்கினார். சீனாவில் புதிய ஜனநாயகப் புரட்சி ஏகாதிபத்தியத்திடமிருந்து சீனாவை விடுவித்தல் என்ற தேசிய வடிவத்தை எடுப்பதை அவர் பார்த்தார். அத்துடன் சீன நாட்டினுள் சிறுபான்மை தேசிய இனங்கள் சிறு அளவிலே இருப்பினும் அவற்றின் பிரச்சினையையும் அவர் கணக்கிலெடுத்துக் கொள்ளத் தவறவில்லை. சீனாவின் தேசியத்திற்கு இரு அம்சங்கள் உண்டு என அவர் கூறுகிறார்: “ஒன்று சீன தேச விடுதலை, இரண்டாவது சீனாவிலுள்ள தேசிய இனங்கள் அனைத்தின் சமத்துவம். சீனாவிலுள்ள அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையும் அங்கீகரிக்கப்படுகிறது”.

இதிலிருந்து ஒடுக்கப்பட்ட நாடுகளின் தேசியப் பிரச்சினை இரண்டு அம்சங்களைக் கொண்டது என்பதை புரிந்துகொள்ளமுடியும். ஒன்று நாடு முழுவதும் ஏகாதிபத்தியத்திடம் இருந்து விடுதலைப் பெறுவது, இரண்டு அந்த நாட்டில் உள்ள அனைத்து தேசிய இனங்களும் சுயநிர்ணயம் பெறுவது இரண்டுமே சுயநிர்ணய உரிமைப் பிரச்சினையாகும்.

இதனடிப்படையில் - ஒடுக்கப்பட்ட பல்தேசிய அரசுகளில் அனைத்து தேசிய இனங்களின் சமத்துவத்திற்காகப் போராடுவதுதான் பாட்டாளிவர்க்க இயக்கத்தின் நிலைபாடாகும். ஒரு குறிப்பிட்ட தேசிய இனம் பிரிந்து போகும் கோரிக்கையை தனித்தனி வழக்காக பரிசீலித்து, வர்க்கப்போராட்ட நலன்கள், பொருளாதார வளர்ச்சி, சமூக அமைதி என்ற நிபந்தனைகளின் கீழ் தனிநாடு கோரிக்கையை அங்கீகரிப்பது என்ற நிலைப்பாட்டை நிறுவியது. இது ஒரு மிக முக்கிய கோட்பாட்டுப் பிரச்சினையாக இன்றளவும் தமிழகத்திலும், சர்வதேச அளவிலும் திகழ்கிறது. மேற்கண்ட கட்டுரையில் இப்பிரச்சினைத் தெளிவாக மா.லெ.மாவோ வழியில் தீர்க்கப்பட்டுள்ளது. இலங்கையிலும் தனிநாடு இந்தியாவிலும் தனிநாடு என்ற முதலாளித்துவ தேசியவாதம் மறுதலிக்கப்பட்டது.

போருக்குப் பிந்தைய நிலைமைகளும் ஈழப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வும்

ஈழவிடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்டு 4 ஆண்டுகள் கடந்த பிறகும் சிங்கள இனவெறி இராஜபட்சே கும்பல் ஈழத்தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணத் தயாரில்லை. வடக்கையும், கிழக்கையும் இணைத்து தமிழர் தாயகம் ஏற்படுத்துவது என்ற கோரிக்கையையும் மறுத்துவிட்டது. தொடர்ந்து தமிழர் பகுதியை இராணுவ மயமாக்கி வருகிறது. தமிழர் பகுதிகளில் இராணுவத்தின் உதவியுடன் சிங்களர்களை குடியேற்றி தமிழர் பகுதிகள் சிங்கள மயமாக்கப்படுவது தீவிரப்படுத்தப் படுகிறது. சுருங்கச் சொன்னால் ஈழத்தமிழின அழிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன. போர் முடிவுற்றப் போதிலும் போர் தொடங்கியதற்கான காரணங்கள் தீர்வுகாணப்படாமல் தொடர்கின்றன.

இலங்கையில் நடந்த இறுதியுத்தத்தில் சர்வதேச சட்டங்களை மீறி போர்க்குற்றங்களில் இராஜபட்சே கும்பல் ஈடுபட்டுள்ளது என்பதை .நா மன்றத்தின் மூன்று பேர்க் கொண்ட கமிட்டி கூறியுள்ளது. 2010 ஆம் ஆண்டு டப்ளினில் கூடிய சர்வதேச மக்கள் தீர்ப்பாயம் இலங்கையில் நடந்தது போர்க்குற்றம் மட்டுமல்ல அது ஒரு இனப்படுகொலைதான் என்பதும், இனப்படுகொலை நடந்த ஒரு நாட்டில் சேர்ந்து வாழமுடியாது; எனவே சர்வதேச விதிகளின்படி ஈழமக்கள் மத்தியில் பொதுவாக்கெடுப்பு நடத்தி தமிழ் ஈழம் காண்பதே அரசியல் தீர்வு என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. லண்டனைச் சார்ந்த சேனல்-4 தொலைக்காட்சி இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு ஆதாரங்களை ஆவணப்பூர்வமாக வெளியிட்டது. இவையெல்லாம் உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை உருவாக்கியது. போர்க்குற்றவாளியைத் தண்டிக்க வேண்டும். பொதுவாக்கெடுப்பின் மூலம் தமிழ் ஈழம் காணவேண்டும் என்றும் .நா. மன்றத்திடம் கோரிக்கை வைத்துப் பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அமெரிக்க ஏகாதிபத்தியம் இலங்கையின் மனித உரிமை மீறலை எதிர்த்து .நா மன்றத்தில் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கை இராஜபட்சேவை இன அழிப்புப் போர்ர்க்குற்றவாளி என்றோ, அங்கு நடந்தது இனப்படுகொலை என்பதையோ ஏற்கவில்லை. மாறாக இறுதி யுத்தத்தின்போது மனித உரிமை மீறல் மட்டுமே நடந்துள்ளன. அதை விசாரிக்க சர்வதேச விசாரணை மட்டுமே வேண்டும் என்று கோரியிருந்தது. இறுதியில் அமெரிக்க -இந்திய கூட்டுச்சதிகளின் மூலம் அந்தத் தீர்மானமும் திருத்தப்பட்டு சர்வதேச விசாரணையும் கைவிடப்பட்டு இராஜபட்சே கும்பலின் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. ஈழத்தமிழர்களுக்குத் துரோகம் இழைக்கப்பட்டது.

இனப்படுகொலை என்று கூறினால், சர்வதேச விதிகளின்படி தனிநாடுதான் தீர்வு என்பதை ஏற்க வேண்டும் என்பதால்தான் அமெரிக்க ஏகாதிபத்தியமோ, விரிவாதிக்க இந்திய அரசோ அதை ஏற்க மறுக்கின்றன. மேலும் இவ்விரண்டு அரசுகளும் இறுதி யுத்தத்தில் இராஜபட்சே கும்பலுடன் இன அழிப்புப் போரில் மறைமுகமாக ஈடுபட்டன. எனவே இவ்விரு நாடுகளும் போர்க் குற்றம் புரிந்த நாடுகளே ஆகும்.

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மனித உரிமை என்ற பேரால் எப்படி மத்திய கிழக்கில் எகிப்து, லெபனான், லிபியா போன்ற நாடுகளில் தலையிட்டு உள்நாட்டு கலகத்தின் மூலம் அந்த ஆட்சிகளை கவிழ்த்து, தமது பொம்மை ஆட்சியை நிறுவிக் கொண்டனரோ அதே போல இலங்கையிலும் மனித உரிமை பேரால் தலையிட்டு அந்நாட்டில் தமது மேலாதிக்கத்தை நிறுவுவதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றனர். மனித உரிமை மீறல் என்று கூறி இராஜபட்சேவை மிரட்டி இலங்கை மீது தமது மேலாதிக்கத்தை நிறுவுவது, இலங்கையில் சீனாவின் செல்வாக்கை தடுத்து நிறுத்துவது, திரிகோணமலை துறைமுகத்தைக் கைப்பற்றி இந்தியப் பெருங்கடலில் தமது ஆதிக்கத்தை நிறுவுவது என்பதே அமெரிக்காவின் ஒரே குறிக்கோளாகும். ஆசியாவை ஆதிக்கம் செலுத்துவதற்கான ஆசிய-பசிபிக் நூற்றாண்டு திட்டத்தின் ஒரு பகுதியே இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் .நா தீர்மானமாகும். அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை இந்தியா ஏற்றுக்கொள்கிறது. இதியாவின் இலங்கை மீதான நலன்களை அமெரிக்கா அங்கீகரிக்கிறது. இரு நாடுகளும் இலங்கை மீதான மேலாதிக்கத்திற்காக ஈழத்தமிழினத்தை பலிகொடுக்கின்றன. அவர்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்து இலங்கை இன வெறி அரசுக்குத் துணைபோகின்றன. இரசியா, சீனா போன்ற ஏகாதிபத்திய முகாமும் அமெரிக்காவோடு போட்டி போட்டுக்கொண்டு இலங்கை இனவெறி அரசுக்குத் துணைபோகின்றன.

இத்தகைய ஒரு சூழலில் அமெரிக்காவின் தீர்மானத்தை செயல்படுத்தக் கோருவதாலோ, அதற்காக இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமோ, .நா. அவைக்கு கோரிக்கை வைப்பதாலோ ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமையை அடைவதற்கு வழியில்லை. போர்க்குற்றவாளி இராஜபட்சே கும்பலைத் தண்டிக்கவோ, பொது வாக்கெடுப்பு நடத்தி தனி ஈழம் காண்பதோ சாத்தியமும் இல்லை. அவ்வாறு முடியும் என நம்பவைப்பது ஈழ மக்களுக்கு செய்யும் துரோகமேயாகும். அவ்வாறு .நா. தீர்மானம் வேண்டி இந்திய அரசை நிர்ப்பந்திப்பது என்பது அனைத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இலங்கை மேலாதிக்கத்திற்கு சேவை செய்வதாகவே அமையும். தமிழீழத்தை ஏற்றுக்கொண்டு ஆனால் செயலுத்தி என்ற பேரால் .நா.தீர்மானத்திற்கு ஆதரவாக இந்திய அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுப்பது என்பது அமெரிக்காவின் இலங்கை மீதான ஆதிக்கத்துக்கு சேவை செய்வதேயாகும். எனவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், விரிவாதிக்க இந்திய அரசையும் எதிர்த்துப் போராடுவதன் மூலம் மட்டுமே, அதற்கான மக்கள் இயக்கத்தை கட்டியமைப்பதன் மூலம் மட்டுமே, உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் ஒடுக்கப்பட்ட தேசங்களின் போராட்டத்தோடு ஒன்றிணைந்து போராடுவதன் மூலம் மட்டுமே போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்கவும் ஈழத்தமிழினம் அரசியல் விடுதலையையும் அடைய முடியும்.

தனி ஈழம் ஒன்றே தீர்வு

ஆனால் ஏகாதிபத்திய எடுபிடிகளும் இந்திய அரசின் விசுவாசிகளும் இனிமேல் தனி ஈழம் சாத்தியமே இல்லை என்று கூறுகின்றனர். இலங்கை அரசமைப்பில் சட்டத்தைத் திருத்துவது, அதிகாரப் பரவல் அளிப்பதன் மூலம் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்று கூறி ஈழ விடுதலைக்கானப் போராட்டத்தை கருவறுக்க நினைக்கின்றனர். தமிழீழத்திற்கு மாற்றாக சில்லறை சீர்த்திருத்தங்களை முன்வைக்கின்றனர். விடுதலைப் போர் தோல்வி என்பதாலேயே இலட்சியத்தைக் கைவிடவேண்டும் என்று சதித்தனமாக வாதிடுகின்றனர்.

ஆனால்ஆளும் வர்க்கத்தின் அதிகார அடிப்படையைச் சிதைக்காமல் எதுவிட்டுவைக்கிறதோ அது சீர்திருத்த மாறுதல்; அந்த அதிகாரத்தைச் சிறிதும் குறைக்காமல் வைத்திருக்கும் வெறும் விட்டுக்கொடுத்தல் அது. புரட்சிகர மாறுதல் என்பது அதிகாரத்தின் அடிப்படையையே பறித்து விடுகிறது. சீர்திருத்தவாத தேசிய இனத் திட்டம் ஆளும் தேசிய இனத்தின் விஷேச உரிமைகள் அனைத்தையும் அகற்றுவதில்லை; அது பூரண சமத்துவத்தை ஏற்படுத்துவதில்லை; தேசிய இன ஒடுக்குமுறையை அதன் எல்லா வடிவங்களிலும் அது ஒழிப்பதில்லை.”
(லெனின் சுயநிர்ணயம் பற்றிய விவாதத் தொகுப்பு - பக்கம் 241)

ஈழத் தமிழர்களை பொறுத்தமட்டில் பிரித்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்பது பேரம் பேசக்கூடிய ஒன்றல்ல. ஏனெனில், சுயாட்சியோ அல்லது வேறு எந்தவிதமான அதிகாரத்தைக் கீழ்மட்டங்களுக்குப் பகிர்ந்தளிக்கும் முறையோ, அந்நாட்டை ஆளுகின்ற வர்க்கங்களின் அதிகாரத்தின் அஸ்திவாரங்களை சிதைக்காமல் அப்படியே வைத்துக்கொள்வதும்; அது பழுதுபடாமல் ஒடுக்கப்பட்ட இனங்களுக்கு சில்லரை சலுகைகள் வழங்கும் முறையேயாகும். இது ஒரு சீர்திருத்த முறையேயாகும். ஒடுக்கும் இனமும், ஒடுக்கப்பட்ட இனமும் சம உரிமை பெறவேண்டுமானால், இரு இனங்களுக்கிடையில் அமைதி நிலவ வேண்டுமானால் ஒடுக்கப்பட்ட தேசிய இனம் பிரிந்து செல்லும் உரிமை உள்ளிட்ட சுயநிர்ணய உரிமை பெறுவதேயாகும். இம்முறையால்தான் இன ஒடுக்குமுறைக்கு முடிவுகட்ட முடியும். எனவேதான் ஈழத் தமிழருடைய பிரிந்துப் போகும் உரிமையுடன் கூடிய உரிமை என்பது பேரம் பேசக்கூடிய ஒன்றல்ல என்கிறோம்.

மேலும் ஈழத்தமிழர்களுக்காகப் போராடி வந்த விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட ஒரு சூழலில் இலங்கையில் இனவெறி இராஜபட்சே கும்பல் எந்தவிதமான அரசியல் அதிகாரப் பரவலுக்கும் தயாராக இல்லாத நிலையில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தனித் தமிழ் ஈழம் காண்பதில் மட்டுமே அடங்கியிருக்கிறது. ஈழப்போராட்டம் முடிந்துவிடவில்லை. ஈழம் ஆசியாவின் ஒரு ஐரீஷ் ஆகவே திகழ்கிறது. மரம் ஓய்வை நாடினாலும் காற்று விடுவதில்லை. எனவே ஈழத்திற்கானப் போராட்டம் மீண்டும் எழுவது தவிர்க்க முடியாதது. அதற்கு இந்நூல் பெரும்பங்காற்றும்.

இந்த நூலிலுள்ள பிரசுரங்கள் ஒவ்வொன்றும் ஒரு தனிக்குறிப்பான அரசியல் சூழ்நிலையின் தேவைகளை ஈடுசெய்யும்பொருட்டு பிரசுரிக்கப்பட்டவையாகும். எனினும் இக்காலப்பகுதி முழுமைக்கும் பொதுவாக ஒரு அம்சம் இருந்தது. அது ஈழத்தமிழர்களுக்காக போரிடுவதற்கு விடுதலைப் புலிகளின் தலைமையும், படையும் இருந்ததாகும். இன்று அந்த நிலைமை இல்லை.

வேறு விதமாகச் சொன்னால் ஸ்தாபன ரீதியாக மட்டுமல்ல, ஒரு சித்தாந்த அரசியல் போக்கு என்கிறவகையில் குட்டிமுதலாளித்துவ தேசியவாதம் தோல்விகண்டுள்ளது.

மேலும் சர்வதேச சூழ்நிலை மாறிவிட்டது,

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் ஆன உறவுநிலை மாறிவிட்டது.

பிராந்தியச் சூழ்நிலை மாறிவிட்டது.

இலங்கை அரசின் உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகள் மாறிவிட்டன.              

இக்குறிப்பானச் சூழ்நிலமையின் பருண்மையான ஆய்விலிருந்தே ஒரு புரட்சிகர இயக்கம் தனது கடமைகளை வகுத்து அடுத்தக் காலடியை எடுத்து வைக்க முடியும்.

இதை ஈழத்தில் நிறைவேற்றத் தயாராகி, தலை தூக்கியிருக்கும் புதிய ஈழப்புரட்சியாளர்கள், ஈழமக்கள் ஜனநாயகப் புரட்சியின் இரண்டாம் காலக்கட்டத்தின் குட்டி முதலாளித்துவ தேசியவாதம் அரசோச்சிய காலத்தின் மதிப்பார்ந்த அனுபவங்களை உரிய முக்கியத் துவமளித்து படிப்பினை பெற்றுக்கொள்வார்கள். தமிழ் ஈழத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பார்கள். அதற்கு இத்தொகுப்பு ஒரு ஒளி விளக்காய்த் திகழும்.

முடிவாக

தமிழீழ விடுதலைக்கு சமரன் அளித்த தத்துவார்த்த தலைமையை பின்வருமாறு வரையறை செய்யலாம்:

முதலாவதாக; தன்னியல்பான தமிழீழ மக்களின் 1983 எழுச்சியை அரசியல் போர்த்தந்திர வழியில் நிறுத்தியது

இரண்டாவதாக: தேசிய இனப்பிரச்சினையை பாட்டாளிவர்க்கக் கண்ணோட்டத்தில் முன்வைத்து, இலங்கையின் ஸ்தூலமான ஆய்விலிருந்து, தேசிய இனங்களின் பிரிந்து செல்லும் உரிமை ஈழத்தமிழர்களுக்கு பிரிவினைக் கோரிக்கையாக அமைந்திருப்பதை அறிந்துணர்ந்து, தமிழீழத் தனி நாட்டுக் கோரிக்கையை ஆதரித்தது.

மூன்றாவதாக; தமிழீழ தேசிய விடுதலைக்கு தலைமை அளிக்க புரட்சிகரச் சித்தாந்தம், புரட்சிகரத் திட்டம், இதன் மீது அமைந்த புரட்சிகரக் கட்சி அவசிய நிபந்தனை என்பதை அறிவுறுத்தியது.

நான்காவதாக; புரட்சியின் மிக ஆதாரமான பிரச்சினைகளான உள்நாட்டிலும், பிராந்திய அளவிலும், சர்வதேசம் தழுவியும்

)          விடுதலைப் புரட்சியின் நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? இடை நிற்கும் சமரச சக்திகள் யார்?

)         நண்பர்கள் மற்றும் சமரச சக்திகள் இடையிலான முரண்பாடுகளைக் கையாள்வது எப்படி?

)          எதிரிகளுக்கிடையான முரண்பாடுகளைக் கையாள்வது எப்படி என்கிற பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு அதை நடைமுறையில் உணர்த்தியது.

ஐந்தாவதாக; விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள சிறு முதலாளித்துவ தேசியவாத சக்திகளோடு, முரணற்ற ஜனநாயகத்தின், தேசிய விடுதலைப் புரட்சியின் உழைக்கும் மக்களின் முன்னணிப்படை ஐக்கிய முன்னணி அமைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஐக்கிய முன்னணிக் கோட்பாட்டை முன்னிறுத்தியது.

பாட்டாளிவர்க்க சர்வதேசியவாதத்தின் பேரால் இம் மாபெரும் புரட்சிகரக் கடமையை எமக்கு நிறைவேற்றித் தந்தது சமரன் ஆகும். தத்துவம் மக்களுக்குள் இருந்து வருவதில்லை, அது வெளியில் இருந்து மக்களுக்குள் செல்லவேண்டும். நமக்கு அது சமரனிடமிருந்து கிடைத்தது. அதற்கு நாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

இந்த நன்றியின் பேரால் சமரன் வழியில் தமிழீழ விடுதலைப் புரட்சியை மீண்டும் கட்டியமைக்க உறுதி பூணுவோம்.

எதிர் வரும் காலத்து எமது பணிகளுக்கு இந்நூல் என்றும் உறுதுணையாக இருக்கும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

ஈழத்தமிழர்களின் தேவை தமிழீழ
மக்கள் ஜனநாயகக் குடியரசு!
உலகத் தொழிலாளர்களே
ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்!
சுபா

புதிய ஈழப் புரட்சியாளர்கள்


முன்னுரை
iii
1.
அமெரிக்காவின் .நா. தீர்மானம் ஈழத் தமிழருக்கு மாபெரும் துரோகம்
1
2.
இன அழிப்புப் போர்க்குற்றவாளி இராஜபட்சவைக் கூண்டிலேற்றவும், தமிழ் ஈழத்திற்கான வாக்கெடுப்புக் கோரியும் ...
19
3.
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்போம் இந்திய அரசின் இராணுவத் தலையீட்டை  எதிர்ப்போம்
33

இரு வகைப் புரட்டல்கள்
62
4.
தேசிய இன சுயநிர்ணய உரிமைப் பிரச்சினையும் முதலாளித்துவ தேசியவாதமும்
67
5.
தேசியச் சுயநிர்ணய உரிமைப் போராட்டங்கள் வெல்க
109
6.
இராஜீவ் - ஜெயவர்த்தனே துரோக ஒப்பந்தத்தை முறியடிப்போம்!
121
7.
... இலங்கையிலிருந்து இந்திய இராணுவத்தை உடனே திரும்பப் பெறு
137
8.
இந்திய அரசின் இலங்கை மீதான அரசியல், இராணுவத் தலையீட்டை முறியடிப்போம் தமிழீழ விடுதலைப் போரை ஆதரிப்போம்
147
9.
பிரேமதாசா அரசு தொடுத்துள்ள தேசிய இன ஒடுக்குமுறை யுத்தத்தை எதிர்த்த ஈழத் தமிழினத்தின் விடுதலை யுத்தத்தை ஆதரிப்போம்
153
10.
அனுதாப அலையைக்கண்டு மயங்காதீர்கள்...
181
11.
இலங்கை அரசே! இனவெறி யுத்தத்தை உடனே நிறுத்து
187
12.
விடுதலைப் புலிகள், மக்கள் யுத்தக் குழுவின் மீதானத் தடை இந்திய அரசின் பாசிசப் பயணத்தின் ஒரு வெள¢ளோட்டமே
193
13.
அரசியல் சட்டவாதமும் தேசிய இனச் சுயநிர்ணய உரிமையும்
255
14.
...  பிரபாகரன் குற்றவாளி அல்ல ஒரு விடுதலைப் போராளியே
267
15.
ஈழப்படுகொலையை எதிர்ப்போம்
281
16.
இனவெறிச் சந்திரிக்கா அரசே!
ஈழத்தமிழர்களின் மீதான இனவெறிப் பாசிச யுத்தத்தை உடனே நிறுத்து
291
17.
விடுதலைப் புலிகள் மீதானத் தடை நீட்டிப்பைத் திரும்பப் பெறு
297
18.
ஈழப்பிரச்சனைக்குத் தீர்வு பேச்சுவார்த்தை அல்ல ஈழத்தமிழரிடையே கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பே
305
19.
இந்திய அரசே! போர்க்குற்றவாளி இராசபட்சேவை கூண்டிலேற்று ...
317
20.
... பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரின் தூக்குத் தண்டனையை இரத்துச் செய்யப் போராடுவோம்
337
21.
ஈழத் தமிழர்களின் விடுதலைப்போர் வரலாறு
343

விலை: ரூ. 250/-
.
முதற்பதிப்பு : மே, 2013

28/141, மாதவரம் நெடுஞ்சாலை, பெரம்பூர், சென்னை – 600011

தொடர்பு பேசி : 9941611655
samaranpublisher@gmail.com
samaranvelietagam@yahoo.com

நூல் விற்பனை:

சென்னை            : 8098538384         
தருமபுரி              : 9787145335
கடலூர்          : 8098698747
வேலூர்                : 9345012494
சேலம்                  : 9344560906
தஞ்சை                : 9445324682



1 comment:

  1. சேல் முருகன் :

    மிக மிக அருமையான நூல். காலத்தின் தேவையைக் கருதி கொண்டுவரப்பட்ட நூல். இது ஒரு சகாப்தம். எதிர்கால வழிக்காட்டியாக இந்நூலை படிக்கவேண்டியது அவசியம். தேசிய இனத்தின் தத்துவ புரிதலை இந்நூல் முழுமையாக புரியவைக்கிறது. வரலாற்று திருப்பங்களை முன்னுணர்ந்து அதை தெளிவாக்கி அன்றைய காலக்கட்டத்தில் ஒரு சரியான நடையை எடுத்து வைத்தது சமரன் என்பது தெளிவாகிறது. நிகழ்ச்சிகளின் பின்னே செல்வது என்பதே வாடிக்கையாகிப் போன தத்துவத்திற்கும் கட்சிக்கும் மத்தியில், சமரன் அதை முன்னுணர்ந்து வழிகாட்டியது சிற்பிலும் சிறப்பு. தத்துவத்தின் வழிக்காட்டி என்பதை அறிந்துக்கொள்ள முடிகிறது. அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டிய நூல்.

    ReplyDelete

விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.