Saturday, May 7, 2016

நாடாளுமன்றவாத மாயையில் மக்களை ஆழ்த்தும் தமிழக சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்! முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து மக்களை மீட்க மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

நாடாளுமன்றவாத மாயையில் மக்களை ஆழ்த்தும் தமிழக சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்!
முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து மக்களை மீட்க மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

உலகப் பொருளாதாரம் தொடர்ந்து மந்த நிலையில் நீடிப்பதோடு, அது இந்தியப் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்து வருகின்ற ஒரு சூழலில் தமிழகச் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலை எதிர்கொண்டுள்ளோம். பலமுனைப் போட்டிகள் நிலவும் இத்தேர்தலில் பல்வேறு கூட்டணிகள் வேலைவாய்ப்பைப் பெருக்குவோம், விலைவாசியைக் குறைப்போம், விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்போம் என வாக்குறுதிகளை வாரி வழங்குகின்றன. இவ்வாறு இக்கட்சிகள் வழங்கும் வாக்குறுதிகளை அவர்கள் ஆட்சி அமைத்தால் நிறைவேற்றுவார்களா? அல்லது அவர்கள் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அதிகாரம் தமிழகச் சட்டமன்றத்திற்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ உள்ளதா? என்பதை இன்றைய சர்வதேசிய, தேசிய அரசியல் பொருளாதார நிலைமைகளை ஆய்வு செய்வதன் மூலமாகத்தான் புரிந்துகொள்ள முடியும்.

எட்டு ஆண்டுகளாகத் தொடரும் முதலாளித்துவ நெருக்கடி

2008-ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெடித்துக் கிளம்பிய நிதி நெருக்கடி என்ற முதலாளித்துவ மிகு உற்பத்தி நெருக்கடியிலிருந்து மீள முடியாமல் உலகப் பொருளாதாரம் இருண்டு வருகிறது. இன்றைய உலகப் பொருளாதாரத்தின் தேக்கநிலை குறித்து, அண்மையில் (ஏப்ரல் 3) .எம்.எப். செயலாளர் கிறிஸ்டின் லாகர்டே கூறியதாவது: “உலகப் பொருளாதாரத்தின் இயக்கம் நின்றுவிட்டது, அரசாங்கங்கள் நடவடிக்கையில் உடனடியாக இறங்க வேண்டும்என்று எச்சரித்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, “2007-2009 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து உலகப் பொருளாதாரம் மீளவில்லை. மீட்சி என்பது மிகவும் மெதுவாகவும், மிகவும் பலவீனமாகவும் உள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகள் 2007-09 ஆம் ஆண்டுகளின் நிதி நெருக்கடியின் பின் விளைவுகளை இன்னமும் எதிர்கொள்கின்றன. அதிகரித்துக் கொண்டே செல்லும் அரசாங்கக் கடன்கள், முதலீடுகள் குறைந்துகொண்டேபோவது, வேலையின்மை பெருகிக்கொண்டே செல்வது எனும் வடிவில் எதிர்கொள்கின்றன. உலகப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் முந்தைய கணிப்புகளைவிட அதாவது 3.4 சதவீதத்தை விட வீழ்ச்சியடையும்என்று கூறுகிறார். அத்துடன் அரசாங்கங்கள் சீர்திருத்தக் கொள்கைகளைத் தொடர்வதுடன் கட்டமைப்புத் துறைகளில் அரசாங்கமே முதலீடு செய்வதுதான் வளர்ச்சிக்கு வழி என வலியுறுத்துகிறார்.

2008-ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி அமெரிக்காவை மட்டுமல்லாது, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் போன்ற ஏகாதிபத்திய நாடுகளையும் இந்தியா உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட நாடுகள் அனைத்தையும் கடுமையாகப் பாதித்தது. இத்தகைய நிதி நெருக்கடியிலிருந்து மீட்பது என்ற பேரில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளும் ஏகபோக நிதிமூலதனக் கும்பல்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஊக்கத் தொகை, நட்ட ஈடு என்று பல லட்சம் கோடி டாலர்களை வாரி வழங்கின. அமெரிக்க அரசாங்கம் கடந்த 5 ஆண்டுகளில் 4 டிரில்லியன் டாலர்களை வாரி வழங்கியது. இந்திய அரசாங்கமும் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் கோடி கார்ப்பரேட்களுக்கு மக்களின் வரி பணத்தைப் பல ஆண்டுகளாக வாரி வழங்கி வருகிறது. இது போன்றே உலகின் பல நாடுகளும் ஏகபோக நிதி மூலதனக் கும்பல்களுக்கும், கார்ப்பரேட்களுக்கும் மீட்பு நிதியைக் கொட்டிக் கொடுத்தன. இருப்பினும் கூட உலகப் பொருளாதாரம் மீட்சி அடையவில்லை.

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும், அவர்களின் அடிவருடிகளும், உலக மக்களின் மீது திணித்து வந்த உலகமயம், தனியார்மயம், தாராளமயம் போன்ற கொள்கைகள் படுதோல்வி அடைந்துவிட்டன. உலக முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்ட ஏகாதிபத்திய உலகமயக் கொள்கைகள் ஊகவாணிபம், பணவீக்கம், வேலையின்மை, மக்களுக்கான மானியங்களை வெட்டுதல், நெருக்கடி, சமூகச் சீரழிவு மற்றும் கலாச்சாரச் சீர்கேடுகள் என்ற விஷச் சூழலில் உலகத்தை ஆழ்த்திவருகிறது. உலகப் பொருளாதாரத்தை ஆட்டிப்படைக்கின்ற நிதிமூலதனக் கும்பல்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும் அரசாங்கத்திடமிருந்து பொருளாதார மீட்சிக்காகப் பெற்ற நிதிகளை ஒரு சிறு பகுதியைக் கூட உற்பத்தியில் போடவில்லை. மாறாகப் பங்குச்சந்தையில் போட்டுப் பங்குச்சந்தை சூதாட்டங்கள் மூலம் தங்களது சொத்துகளைப் பன்மடங்கு பெருக்கிக்கொண்டன. அவ்வாறு பெருக்கிக்கொண்ட லாபத்திற்கு வரியையும் கட்டாமல் அரசாங்கங்களை ஏமாற்றிப் பல லட்சம்கோடி டாலர்களை வரிகளற்ற சொர்க்கபுரிகளான பனாமா, பெர்முடாஸ், சைப்ரஸ், கரீபியன் தீவுகளில் பதுக்கிக் கொண்டன. இதன் விளைவாக அரசாங்கக் கடன்கள் அதிகரித்துக்கொண்டே போவது, வேலையின்மை பெருகிக்கொண்டே செல்வது, முதலீடுகள் சுருங்கிக் கொண்டே செல்வது தீவிரப் படுகின்றன. இத்தகைய ஒரு சூழலில்தான் மோடி ஆட்சி அந்நிய மூலதனத்தைச் சார்ந்த வளர்ச்சி என்று பேசுகிறது.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள மோடியின்மேக் இன் இந்தியாதிட்டம் தீர்வல்ல

மேக் இன் இந்தியா”, “வளர்ச்சிஎன்று கூறி அந்நிய மூலதனம் எனும் மாயமானைத் தேடி உலகமெங்கும் ஓடினார் மோடி. அந்நிய முதலீடுகளைக் கவர்வதற்காக மோடி அரசாங்கம் தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தியது. தொழிற்சாலை பாதுகாப்பு சோதனைகளை ஒழித்தது. நிரந்தர வேலையை ஒழித்துக் காண்ட்ராக்ட் முறைகளைப் புகுத்தியதுடன் 12 மணி நேர வேலைநாளைத் திணித்தது, ஓய்வூதியத் திட்டத்தை ஒழித்தது போன்ற சட்டத் திருத்தங்களால் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக்கியது. சிக்கன நடவடிக்கை என்ற பேரில் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டங்களை ஒழித்தல், வட்டி விகிதம் அதிகரிப்பு, எரிவாயு உருளை - பெட்ரோல் - டீசல் மானியங்களை ஒழித்ததன் மூலம் நெருக்கடிகளின் சுமைகளைத் தொழிலாளர்கள் மீதும் மக்களின் மீதும் சுமத்தியது. அதே நேரத்தில் பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்களுக்கு வட்டி விகிதம் குறைப்பு, வரிச்சலுகைகள், வரி ஏய்ப்பில் ஈடுபட்ட நிறுவனங்களுக்கு (வோடாபோன், நோக்கியா) பாதுகாப்பு, நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தம், சுற்றுச் சூழல் சட்டங்களிலிருந்து கார்ப்பரேட்களுக்கு விலக்கு என ஏராளமான சலுகைகளை வாரி வழங்கியது. ஆனாலும் மேக் இன் இந்தியா திட்டம் தோல்வி அடைந்தது.

2014-15 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் தனியார் துறையில் விற்பனை 4.7 சதவீதம் வீழ்ச்சியடைந்ததுடன் லாபச் சதவீதம் 12.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துவிட்டது.2010-11 லிருந்து தொழிற்துறை மந்தம் தொடர்கிறது. 2014-15ல் 2.8 சதவீதம் தொழிற்துறை வளர்ச்சியும் கூட அதற்கு முந்தைய ஆண்டு - 0.1 சதவீதமாக இருந்ததிலிருந்துதான் பார்க்கவேண்டும்.2015 ஏப்ரல்-நவம்பர் வரையிலான வளர்ச்சி 3.9 சதவீதம் கூட மிகவும் குறைவான வளர்ச்சிதான். முதலீடுகள் அதிகரிக்கவில்லை. தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலீடு 2014-15 ல் 27 சதவீதம் வீழ்ந்துவிட்டது. 2015 -16 ஆம் ஆண்டு நிலைமையோ மிக மோசமாகவே உள்ளது. அரசு மற்றும் தனியார் முதலீடுகள் கணிசமாகக் குறைந்து வருகிறது. 2015 டிசம்பர் வரையிலான திட்ட ஒதுக்கீடு 44 சதவீதமும், புதிய முதலீட்டிற்கான அறிவிப்பில் 74 சதவீதம் குறைந்துவிட்டது.

மோடியின்மேக் இன் இந்தியா திட்டம்வெற்றி பெறாது என்பதை அவருடைய நிதி மந்திரியான அருண்ஜேட்லியே கூறுவதைப் பாருங்கள்: ’மேட் இன் இந்தியாஎன்ற தலைப்பில் அண்மையில் அமெரிக்காவில் நடந்த கூட்டத்தில் ஆற்றிய உரையில் அருண்ஜேட்லி கூறுவதாவது: “உலகப் பொருளாதாரம் கவலையளிப்பதாக உள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி 16-வது மாதமாகச் சரிந்து வருகிறது. வளர்ச்சியடைந்த நாடுகள் அதிக அளவு எச்சரிக்கையாக இருப்பதால் வளர்ந்து வரும் நாடுகளின் ஏற்றுமதி குறைந்து வருகிறது. இந்தச் சர்வதேசப் பொருளாதாரச் சூழல் கவலை அளிப்பதாக இருக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. பல நாடுகள் இந்தச் சூழ்நிலையைக் கடினமாக்குகின்றனஎன்று கூறுகிறார். அந்நிய முதலீடுகளைச் சார்ந்து, ஏற்றுமதியை நோக்கமாகக் கொண்டமோடியின் திட்டம்வெற்றி பெறாது என்பதை அருண் ஜெட்லியின் பேச்சு எடுத்துக் காட்டுகிறது.

மேலும் ரிசர்வ் வங்கியின் தலைவர் ரகுராம் ராஜன்மேக் இன் இந்தியாதிட்டம் பற்றி கூறுகையில் மேக் இன் இந்தியா திட்டத்தை நிறைவேற்றுவதில் ஒரு அபாயம் அடங்கியுள்ளது. சீனாவைப் போல ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி அடிப்படையிலான வளர்ச்சி அபாயத்தைச் சந்திக்கிறது. இன்றைய உலகம் சீனாவைப் போல மற்றொரு ஏற்றுமதி சார்ந்து வளர்ச்சியடையும் நாட்டை ஏற்கத் தயாரில்லை. உலக அளவில்தேவைகளின்வளர்ச்சி நின்றுவிட்ட சூழலில் நாம் உள்நாட்டு சந்தைக்காக உற்பத்தி செய்ய வேண்டும் என எச்சரித்துள்ளார்.

ஆனால் மோடி கும்பலோ அந்நிய மூலதனத்திற்குச் சேவை செய்யும் மேக் இன் இந்தியா திட்டதைத் தீவிரமாக அமல்படுத்துகிறது. தொழிலாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள் என அனைத்துத் தரப்பு மக்களும் வாழ்வாதாரம் இழந்து மாண்டு வருகின்றனர். அரசாங்கத்திற்கு எதிராகப் போராடிவருகின்றனர். மோடி அரசாங்கம் ஓராண்டிற்குள்ளேயே மக்களிடமிருந்து தனிமை பட்டுவிட்டது.

மோடி கும்பல் அமல்படுத்திவரும் புதியதாரளக் கொள்கைகளின் தோல்விகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பவும்; மோடி கும்பலின் தேசவிரோதக் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும் உலகமய, தனியார்மயக் கொள்கைகளுக்கு எதிராகவும் போராடும் மக்களை ஒடுக்கவும், மக்களின் போராட்டத்தைப் பிளவுபடுத்தவும் மோடி தலைமையிலான பா... ஆட்சி இந்துத்துவப் பாசிச ஆட்சியைக் கட்டியமைத்து வருகிறது. சிறுபான்மை மத மற்றும் ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் மீது மத, சாதிவாதப் பாசிசத் தாக்குதல்களை நடத்திப் பெரும்பான்மை மத, சாதிவாத வெறியூட்டுவதன் மூலம் ஓட்டு வங்கிகளை உருவாக்கித் தனது ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கிறது. இன்று நாடு அமெரிக்காவின் புதிய காலனியாக மாறுவது மற்றும் இந்துத்துவப் பாசிசம் என்ற இரு பெரும் அபாயத்தைச் சந்திக்கிறது.

இவ்வாறு உலகப் பொருளாதாரம் மந்த நிலையில் நீடிக்கின்ற ஒரு சூழலில், வளர்ச்சியடைந்த நாடுகளில் அரசாங்கக் கடன்கள் அதிகரிப்பு, முதலீடுகள் குறைந்து போவது, வேலையின்மை பெருகிவருகின்ற சூழலில்; மோடி ஆட்சியின் புதிய தாராளக் கொள்கைகள் தோல்வி அடைந்து தொழிற்துறை வீழ்ச்சி, விவசாயம் அழிவு, விவசாயிகள் தற்கொலைகள் அதிகரிப்பது, வரலாறு காணாத அளவில் வேலையின்மை பெருகிவருகின்ற ஒரு சூழலில்தான் தமிழகச் சட்டமன்றத் தேர்தலை நாம் எதிர்கொண்டுள்ளோம்.

தமிழகச் சட்ட மன்றத் தேர்தலும் ஆளும் வர்க்கக் கட்சிகளின் மோசடிகளும்

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் எந்த ஒரு கட்சியோ அல்லது கூட்டணியோ இன்றைய உலக முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடிகள் பற்றியோ, அதன் பாதிப்புகள் பற்றியோ மக்கள் முன்வைக்கத் தயாரில்லை. நாட்டை ஒட்டாண்டியாக்கி ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கின்ற உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை எதிர்க்கவும் தயாரில்லை. மாறாக மது ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு போன்ற முழக்கங்களை முன்னிறுத்தி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் திசை திருப்புகின்றன. உலகம் முழுவதும் தோற்றுப்போன உலகமய, தனியார்மய, தாராளமய கொள்கைகளையே மக்கள் மீது சுமத்துகின்றன. ஏகாதிபத்தியதுக்கு சேவைசெய்வதில் இக்கட்சிகள் போட்டிப்போடுகின்றன. அந்நிய மூலதனத்தைச் சார்ந்து நின்று தொழில்வளர்ச்சியைக் கொண்டுவர முடியும், விவசாயத் துறை நெருக்கடிகளைத் தீர்க்க முடியும், வேலைவாய்ப்பை உருவாக்க முடியும், கல்வி - மருத்துவம் - சுகாதாரம் போன்றவைகளை இலவசமாக வழங்கமுடியும் என்ற மோசடிகளில் ஈடுபடுகின்றன. அத்துடன் மேற்கண்ட மக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றச், சட்டமன்றங்களின் மூலமே தீர்க்க முடியும் என்ற மாயைகளை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு இக்கட்சிகள் தமிழக மக்களுக்குத் துரோகமிழைக்கின்றன.

மக்கள் ஜனநாயகப் புரட்சியே மாற்று

உண்மையில் நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும், வளர்ச்சியைக் கொண்டுவருவதற்கும் இந்திய அரசு கடைப்பிடித்துவரும் ஏகாதிபத்திய உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்ட வேண்டும். நிலவுகின்ற அரசமைப்பிற்குள்ளோ அல்லது நிலவுகின்ற நாடாளுமன்ற, சட்டமன்றங்களின் மூலமாகவோ அதனை சாதிக்க முடியாது. பாராளுமன்ற மாயைகளிலிருந்து மீண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நாட்டின் விடுதலையையும், அரைநிலைவுடமைக்கு முடிவுகட்டி ஜனநாயகத்தையும் வென்றெடுப்பதற்கு பாட்டாளிவர்க்க தலைமையிலான மக்கள் ஜனநாயகப் புரட்சி ஒன்றுதான் இன்று நாடு சந்தித்தித்துக்கொண்டிருக்கும் புதிய காலனிய ஆதிகத்திற்கும் இந்துத்துவப் பாசிசத்திற்கும் முடிவுகட்டும். அத்தகைய மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு தயாராகும் அதேவேளையில், உடனடியாக பின்வரும் கோரிக்கைகளுக்காகப் போராடுவது அவசியமாகும்.

  ê  அமெரிக்காவின் புதிய காலனியாக இந்தியாவை மாற்றும் உலகமய தனியார்மயத் தாராளமயக் கொள்கைகளைத் திரும்பப் பெறவும்;

 ê அந்நிய மூலதனத்தைப் பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்குவது. அந்நிய மூலதனத்தைச் சார்ந்து திட்டமிடுவதற்குப் பதிலாக அரசாங்கத்தை ஏமாற்றி கார்ப்பரேட் நிறுவனங்களும், அரசியல்வாதிகளும் வெளிநாடுகளில் பதுக்கிவைத்துள்ள கருப்புப் பணத்தைக் கைப்பற்றி முதலீடுகளாக மாற்றவேண்டும்;

  ê  வங்கிகள், இன்சூரன்ஸ், சுரங்கங்கள், இரயில்வே, விமானப் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து, தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், மின்சாரம் போன்ற அனைத்துத் துறைகளிலும் தனியார்மயத்தை ஒழித்து அரசே ஏற்று நடத்த வேண்டும்;

  ê  தொழிலாளர் விரோத - சட்டத்திருத்தம், ஒப்பந்தக் கூலிமுறை, அயல்பணி ஒப்படைப்பு, 12 மணி நேர வேலைத் திணிப்பு, தொழிற்சங்க உரிமைப் பறிப்பை எதிர்த்து முறியடிக்கவும்;

  ê  வேளாண்மைத் துறையில் அந்நிய மூலதனத்தை தடைசெய்வது. வேளாண்மைத் துறை கார்ப்பரேட் மயமாக்கப்படுவதை ஒழித்து நிலங்களை தேசிய மயமாக்குவது. வேளாண்மைப் பொருட்களின் இறக்குமதிக்கு முடிவு கட்டுவது; வேளாண் வணிகத்திலிருந்து மான்சாண்டோ, கார்கில் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளை வெளியேற்றுவது; நிலச் சீர்திருத்தம் ஆகியவற்றின் மூலம் அரைநிலவுடைமை முறைகளுக்கு முடிவுகட்டுவது. விவசாயிகளுக்கான இடுபொருட்களின் விலைகளைக் குறைப்பது, விளைபொருளுக்கு உரிய விலையை தீர்மானிக்க வேண்டும்;

  ê  சில்லரை வணிகத்தில் பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளை அனுமதிப்பதற்கு இருந்த தடைகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டதால், சில்லரை வணிகத்தில் பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கம் பெருகிவருகிறது. இதன் விளைவாக 4 கோடி வணிகக் குடும்பங்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுவது மட்டுமல்ல கோடிக்கணக்கான விவசாயிகள், சிறு தொழில் புரிவோரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் எனவே சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை முற்றாக ஒழித்துக்கட்டவும்;

  ê  கல்வி, மருத்துவம், சுகாதாரம் அனைத்தையும் அரசுடைமையாக்குவது. ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தாய் மொழியில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்;

  ê  இந்தி, சமஸ்கிருத திணிப்பை முறியடிப்போம்; ஆங்கில ஆதிக்கத்திற்கு முடிவுகட்டி, தமிழ்மொழி உள்ளிட்ட அனைத்து தேசிய மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்க வேண்டும்;

  ê  நிலப்பிரபுத்துவ நலனுக்கு அரணாக விளங்கும் வர்ணாசிரம முறைகள், சாதி ஆதிக்க முறைகளை ஒழிப்பது; தீண்டாமைக்கு முடிவு கட்டுவது;

  ê  இந்துத்துவப் பாசிசத்தை எதிர்த்து மதச் சார்பின்மைக்குப் போராடுவது, அரசிலிருந்தும், கல்வியிலிருந்தும் மதத்தை பிரிப்பதற்காகப் போராடுவது;

  ê  புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் நாடாளுமன்ற ஆட்சி முறைக்கு மாறாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படவும், திரும்பப் பெறவும் அதிகாரமுள்ள சோவியத் ஆட்சி முறையை நிறுவ மக்கள் ஜனநாயக அரசமைக்க போராடுதல்;

மேற்கண்ட கோரிக்கைகளுக்காக போராடு நடக்கயிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணித்து அனைத்து மக்களும் ஓரணியில் திரளுமாறு அறைகூவி அழைக்கிறோம்.
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
மே 2016
பேசி: 9382815231
தோழர் டேவிட் செல்லப்பா, 3/20, அண்ணா தெரு, மேட்டுக் குப்பம், வானகரம், சென்னை-98


No comments:

Post a Comment

விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.