Saturday, April 4, 2015

பா.ஜ.க. அரசே! கார்ப்பரேட் நலன்களுக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைத் திரும்பப்பெறு!

பா.ஜ.க. அரசே! கார்ப்பரேட் நலன்களுக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைத் திரும்பப்பெறு!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!

    காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசாங்கமும் அதற்குப் பின்னர் வந்துள்ள தற்போதைய பா.ஜ.க. அரசாங்கமும் விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தி பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்குவதற்காகக் கொண்டுவந்துள்ள சட்டங்களை எதிர்த்து இன்று நாடெங்கும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இச்சட்டங்கள் அனைத்தும் பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்கள் நிலங்களை கையகப் படுத்துவதற்காகக் கொண்டுவந்த சட்டங்களின் தொடர்ச்சியேயாகும்.

    பிரிட்டிஷ் காலனி அரசு 1894ல், நிலத்தைக் கையகப் படுத்துவதற்கான ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தது. அந்தச் சட்டத்தின் படி, அரசுக்கோ, அரசின் ஆதரவு பெற்றவர்களுக்கோ நிலம் தேவைப்படுமானால், உடனே நிலம் கையகப்படுத்தப்படும். அரசுகொடுக்கும் இழப்பீடு போதவில்லை என்றால் மட்டும்தான் நீதிமன்றத்துக்குப் போகமுடியும். அங்கேயும் இழப்பீட்டை அதிகரித்துக் கேட்க முடியுமே தவிர நிலம் கையகப்படுத்தியதைத் தடுக்க முடியாது. இந்தச் சட்டம் காலனிய ஆட்சிக்குப் பிறகும் தொடர்ந்தது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களையே பொதுநலன் என சித்தரித்து, விவசாயிகள் மற்றும் பழங்குடிமக்களின் நிலங்களை 1894 சட்டத்தின் கீழ் கையகப்படுத்தி அதை பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கியது. பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காகவும், ரியல் எஸ்டேட்டுகளுக்காகவும் கையகப்படுத்தப்பட்டன. இவ்வாறு வழங்கப்பட்ட நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்களும், தரகுமுதலாளிகளும் முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளார்கள். வணிக நடவடிக்கைகள் மூலம் கொள்ளை லாபம் அடைந்துள்ளார்கள்.

    2006ஆம் ஆண்டிலிருந்து ஒப்புதல்கள் வழங்கப்பட்டு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 50 சதவீதத்திற்கும்மேல் பயன்படுத்தப்படாமல் வெறுமனே தரிசாகப் போடப்பட்டுள்ளன என்று இந்திய அரசின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி) அளித்த அறிக்கை தெரிவிக்கிறது.

    சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காகக் கையகப் படுத்தப்பட்ட 45,635.63 ஹெக்டேர் நிலத்தில் 28,488.49 ஹெக்டேர் நிலங்கள் மட்டுமே செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. 5402.22 ஹெக்டேர் நிலம் வணிக நோக்கத்திற்காக திருப்பிவிடப் பட்டுள்ளது. இந்த நிலங்கள் ‘பொதுநலன் என்ற வகையின (Classes) அடிப்படையில் கையகப்படுத்தப்பட்டவையாகும்.

     சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக நாடெங்கும் ஒதுக்கப்பட்ட பெரும்பகுதி நிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளுக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளன. மும்பை தொழில் வளர்ச்சிக் கழகத்திடம் மட்டும் 2.5 லட்சம் ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. ஆந்திரப் பிரதேசத்தில் கையகப்படுத்தப்பட்ட 50,000 ஹெக்டேர் நிலம் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. உ.பி.யில் 17,000 ஹெக்டேர் நிலமும் குஜராத்தில் 54,000 ஹெக்டேர் நிலமும் கையகப்படுத்தப்பட்ட பிறகு தரிசாகவே கிடக்கின்றன.

    சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக ஒதுக்கப்பட்ட 46,000 ஹெக்டேர் நிலத்தில், 29,000 ஹெக்டேருக்கும் குறைவான நிலத்தில்தான் செயல்பாடுகள் துவங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. மற்ற பகுதி நிலங்கள் ரியல் எஸ்டேட் சூதாட்டத்திற்காகக் காத்துக்கிடக்கின்றன.

   மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் டாடாவின் நானோ கார் தொழிற்சாலை அமைக்க முயற்சிக்கப்பட்டது. இதற்காக செழிப்பான நிலங்களை மேற்கு வங்க சி.பி.ஐ.எம். (CPIM) தலைமையிலான இடதுசாரி அரசாங்கம் வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்த எடுத்த முயற்சிகளை எதிர்த்து விவசாயிகள் கடுமையாகப் போராடினார்கள்.  இடது முன்னணி அரசாங்கம் நடத்தியதுப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர்.

   தமிழகத்தில் 1999ல் தி.மு.க. அரசு நிலங்களை கையகப்படுத்த கொண்டுவந்த சட்டம் அப்பட்டமாக விவசாயிகளுக்கு எதிரானது. விளை நிலங்களைக் குறைந்த விலையில் கைப்பற்றி தனியாருக்கு வாரி வழங்க உதவும் சட்டத்தின் கீழ் 2006-2011ல் கிட்டத்தட்ட 16 ஆயிரம் ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றி அதில் பெரும்பாலான நிலத்தை ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு வாரி வழங்கியது.

   மேலும் பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை அபகரித்துக் கொண்ட கார்ப்பரேட்டுகள், குறிப்பாக அம்பானி, அதானி, டாட்டா போன்ற தரகு பெருமுதலாளிகள் அவற்றை ரியல் எஸ்டேட்டுகளாக்கி விற்றிருப்பதும் அம்பலமாகியுள்ளது.

  புதிய காலனியாதிக்க தாசர்களான காங்கிரஸ் ஆட்சியாளர்கள் நாடெங்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்க, விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்களின் நிலங்களை மட்டுமே வளைத்துப் போடவில்லை. அங்கே தொழில் தொடங்குகிற அந்நிய நிறுவனங்களுக்கு பத்தாண்டுகள் வரிவிலக்கு, அந்த வளாகங்களில் தொழிற்சங்க உரிமை மறுப்பு, இந்தியத் தொழிலாளர் சட்டங்கள் அங்கே செல்லுபடியாகாது போன்ற ஏராளமான சலுகைகள் செய்து கொடுக்கப்பட்டன.

     இந்த மண்டலங்களில் தொடங்கப்பட்ட நிறுவனங்களுக்கு 2009 முதல் 2015 வரையில் ரூ.83,104 கோடிகள் வரிச் சலுகைகளாகத் தரப்பட்டன. நேரடி வரிகளிலும் மறைமுக வரிகளிலுமாக இவ்வளவு பெரும் தொகை தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அரசாங்கமே அளித்த இப்படிப்பட்ட சலுகைகள் ஒருபுறமிருக்க, இந்த மண்டலங்களில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 1150 கோடியாகும்.

    சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் செயல்பாடு பற்றி ஆராய்ந்த நாடாளுமன்ற நிலைக்குழு 2004-2010ஆம் ஆண்டுகளிடையே இந்த மண்டலங்களில் கடைப்பிடிக்கப்பட்ட வரிவிதிப்பு முறைகள் காரணமாக ரூ.1,74,487 கோடி வரையில் விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது என்று 2007ல் மதிப்பீடு செய்தது.

   இந்த மண்டலங்களால் வேலைவாய்ப்புப் பெருகும், முதலீடுகள் குவியும், பொருளாதாரம் வளரும் என்றெல்லாம் கூறப்பட்டது. இத்தனை ஆண்டுகளில் இந்த நோக்கங்கள் எதுவுமே நிறைவேறவில்லை. இதனை இந்திய அரசின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரே (சி.ஏ.ஜி.) அறிவித்திருக்கிறார்.

மன்மோகன்சிங் அரசு 2013-ல் கொண்டுவந்த புதிய சட்டம்

    நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத்தன்மை, நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, மறு வாழ்வு மற்றும் மறு குடியமர்த்தல் சட்டம் என்ற பெயரில் 2013-ல் புதிய சட்டத்தைக் கொண்டு வந்தது மன்மோகன்சிங் அரசு. இந்தச் சட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சேவை செய்வதற்காகவே கொண்டுவரப்பட்டது. எனினும் இந்தச் சட்டம் விவசாயிகளுக்குச் சில சலுகைகளை வழங்கியது.

   கிராமப்புறங்களில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு அரசு வழிகாட்டு மதிப்பைப்போல் நான்கு மடங்கும், நகர்ப்புற நிலங்களுக்கு அரசு வழிகாட்டு மதிப்பைவிட இரண்டு மடங்கும் இழப்பீடு தரப்படவேண்டும்.

    தனியார் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்த அப்பகுதியில் உள்ள 80 சதவீதம் நில உடமையாளர்களின் ஒப்புதல் தேவை. அரசு-தனியார்-பங்கேற்பு (PPP) திட்டங்களாக இருந்தால் அப்பகுதியிலுள்ள 70 சதவிகிதம் பேரின் சம்மதம் வேண்டும்.

    நீர்ப்பாசனம் மிகுந்த பயிர் சாகுபடி செய்யும் நிலத்தைக் கையகப்படுத்தக் கூடாது. அதாவது ஒரு போகத்துக்கு மேல் விளையும் நிலத்தைக் கையகப்படுத்தக் கூடாது.

    குறிப்பிட்ட பகுதியில் விளை நிலங்களை கையகப்படுத்துவதானால், அப்பகுதியில், விவசாயப் பொருளாதாரத்தைச் சார்ந்து வாழும் நிலமற்ற விவசாயிகள், கைவினைஞர்கள், உதிரித் தொழிலாளர்கள், சிறுவணிகர்கள் உள்ளிட்டோருக்கு ஏற்படும் வாழ்வாதாரப் பாதிப்பு (social impact assessment)  மதிப்பிடப்பட்டு அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும்.

   அப்பகுதியில் சுற்றுச் சூழல் எவ்வளவு பாதிக்கப்படும் (environmental impact assessment) என்பதும், விவசாயத்தின் மூலம் கிடைத்து வந்த வேலைவாய்ப்பு எவ்வளவு என்பதும் மதிப்பிடவேண்டும்.

    5-ஆண்டுகளுக்குள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படவில்லை என்றால், உடமையாளர்களிடமே (விவசாயிகளிடமே) நிலத்தைத் திருப்பித்தரவேண்டும்.

   இந்த விதிமுறைகளைப் பின்பற்றாமல் ஏமாற்றும் அதிகாரிகளுக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் வழக்குத் தொடரலாம்.

   நெடுஞ்சாலை, ரயில்பாதை, அணுசக்தி, இராணுவம் உள்ளிட்ட 13 துறைகளில் அரசின் திட்டங்களுக்கு மேற்கூறிய நிபந்தனைகள் பொருந்தாது என்றும் இச்சட்டம் விதிவிலக்கு அளிக்கிறது.

பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டம்

    இப்போது பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள சட்டம், காங்கிரஸ் கொண்டுவந்த சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து புதிய சட்டமாக நிறைவேற்ற முயற்சிக்கிறது. அப்படிச் செய்யப்பட்டிருக்கும் திருத்தங்கள் அனைத்தும் அப்பட்டமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாகவே இருக்கின்றன என்பதுதான் இப்போதைய பிரச்சினைக்குக் காரணமாகும்.

   பிரிட்டிஷ் அரசு கொண்டுவந்த 1894 சட்டத்தில் கூட நியாயம் கேட்க நீதிமன்றத்தை அணுகமுடியும். ஆனால் பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டத்தில் அதற்கு வழியேயில்லை. காங்கிரஸ் அரசின் சட்டம் கார்ப்பரேட் நலன்களை ‘பொதுநலன் என்று கருதுவதைப் போலவே, பா.ஜ.க. அரசு கொண்டுவந்த இந்தச் சட்டமும் கார்ப்பரேட் நலன்களை ‘பொது நலன் என்று கருதினாலும், காங்கிரஸ் அரசு கொண்டுவந்த சட்டத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள சில சலுகைகள் கூட இச்சட்டத்தில் கைவிடப்படுகிறன.

·         தற்போது பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தில் முப்போகம் விளையும் நிலங்களைக் கூட கையகப்படுத்தலாம்.

    ·   தற்போது பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ளச் சட்டம், 13 துறைகளுக்கு காங்கிரஸ் அரசு அளித்திருந்த விதிவிலக்குகளைக் கைவிட்டுள்ள அதே நேரத்தில், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு துறைகளை விதிவிலக்கு பட்டியலில் கொண்டு வந்துள்ளது.

  · பா.ஜ.க. அரசின் சட்டப்படி, அரசுத் துறைகளுக்கு மட்டுமின்றி, எந்த ஒரு தனியார் முதலாளிகளுக்காக நிலத்தைக் கையகப்படுத்துவதாக இருந்தாலும் விவசாயிகளின் ஒப்புதலை அரசு கேட்கத் தேவையில்லை.

      ·  அப்பகுதியைச் சேர்ந்த நிலமற்ற கூலி விவசாயிகள், கைவினைஞர்கள் போன்றோருக்கு நிவாரணம் தரத் தேவையில்லை.

   ·  சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்துப் பரிசீலிக்கத் தேவையில்லை.

    ·  கையகப்படுத்திய நிலம் 20 ஆண்டுகளுக்குப் பயன்படுத்தாமல் இருந்தாலும் அதைத் திருப்பித்தர வேண்டியதில்லை.

      ·   ‘தனியார் என்பதை ஒரு தொழில் நிறுவனம் என்று காங்கிரஸ் கட்சியின் 2013ஆம் ஆண்டு சட்டம் வரையறுத்திருந்தது. ஆனால் பா.ஜ.க. அரசின் சட்டப்படி ‘தனியார் என்பது நபராகவோ தன்னார்வ நிறுவனமாகவோக் கூட இருக்கலாம்.

  · அதுமட்டுமல்ல, தனியார் சுயநிதிக் கல்வி நிறுவனங்கள், தனியார் மருத்துவ மனைகள் ஆகியவற்றையும் ‘பொதுச்சேவை என்று வரையறுத்துள்ளது. அவற்றிற்கு விளை நிலத்தைக் கையகப்படுத்தித் தரும் பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்கிறது.

    ·  நிலத்தின் சந்தை விலையைத் தீர்மானிப்பது உள்ளிட்டு, இந்தச் சட்டத்தை அமலாக்கும் அரசதிகாரம் பெற்ற மத்திய, மாநில அரசு அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டாலும் அவர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்டோர் வழக்குத் தொடுக்க முடியாது. அரசின் அனுமதி பெறாதபட்சத்தில் அதை நீதிமன்றமும் விசாரிக்கக் கூடாது.

இவைதான் பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள நிலத்தைக் கையகப்படுத்தும் சட்டத்தின் மிக முக்கியமான அம்சங்களாகும்.

  காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க. கட்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிலங்களைக் கையகப்படுத்திக் கொடுப்பதில் ஒரே கொள்கையுடை யனவாக இருந்தாலும், விவசாயிகளுக்கு அளிக்கப்படவேண்டிய சலுகைகளை வழங்குவதில் வேறுபட்ட நிலையைக் கொண்டுள்ளன.

காங்கிரஸ், பா.ஜ.க. தலைமையிலான இரண்டு அணிகளும் கார்ப்பரேட் நலன்களுக்கான அணிகளே!

   பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி 8 சதவீதத்திலிருந்து 5 சதவீதத்திற்கும் கீழ் வீழ்ச்சியடைந்ததற்குக் காரணம், காங்கிரஸ் ஆட்சி பின்பற்றிவந்த உலகமயமாக்கல் கொள்கைகளால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி என்பதை ஏற்க மறுத்தது. மாறாக காங்கிரஸ் ஆட்சியின் “கொள்கை முடக்கமே காரணம் என்று கூறி அதே கொள்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. மீண்டும் உற்பத்தித் துறையில் எழுச்சியைக் கொண்டு வருவதற்கு அந்நிய மூலதனத்தைச் சார்ந்திருப்பது ஒன்றுதான் தீர்வு என்று கூறுகிறது. இதனடிப்படையில்தான் இன்று, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீள முடியாத நெருக்கடிகளுக்குத் தோள்கொடுக்கும் விதமாகவே “இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற முழக்கத்தை முன்னிறுத்துகிறது. தொழிலாளர் சட்டங்களைத் திருத்துவது, நிலம் கையகப்படுத்தும் சட்டங்களைத் திருத்துவது, சுரங்கம் தொடர்பான சட்டங்களைத் திருத்துவது, காப்பீட்டுச் சட்டங்களைத் திருத்துவது ஆகியவற்றின் மூலம் தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை காங்கிரசை விட தீவிரமாக செயல்படுத்துகிறது.

   விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதில் பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்குச் சாதகமாகவே, காங்கிரஸ் கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் காங்கிரசைவிடவும் மோசமான திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. தற்போது மோடி அரசாங்கம் கொண்டுவந்துள்ள சட்டத்தின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் பா.ஜ.க. அணி, காங்கிரஸ் அணிகளுக்கிடையில் போராட்டம் தீவிரப்பட்டுள்ளது. பா.ஜ.க. அரசு கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரிய ஜனதாதளம், மதச் சார்பற்ற ஜனதாதளம், தி.மு.க. உள்ளிட்ட 10 கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.

    தமிழக ஆளும் கட்சியான அ.தி.மு.க. மசோதாவுக்கு ஆதரவளித்துள்ளது. தனியார் சுயநிதிக் கல்லூரிகள், மருத்துவ மனைகளுக்காக நிலம் கையகப்படுத்தப்படக் கூடாது மற்றும் நிலம் கையகப்படுத்தும் அதிகாரம் மாநில அரசாங்கத்திடம் இருக்கவேண்டும் என்ற தங்களின் திருத்தத்தை ஏற்றுக்கொண்டதால் இந்தச்சட்டத்தை ஆதரித்தோம் என அக்கட்சியின் தலைவி ஜெயலலிதா கூறுகிறார். ஆனால் ஊழல் வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள ஒட்டுமொத்த விவசாயிகளையும் பலிகடாவாக்கியுள்ளார் என்ற முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்.

   பா.ஜ.க.வின் கூட்டணியைச் சேர்ந்த கட்சிகளான சிவசேனா, அகாலிதளம், லோக் ஜனசக்தி (LJP) மற்றும் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி (RSLP) ஆகியவை பா.ஜ.க.வின் மசோதாவுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஸ்வபிமானா பக்ஷா கொண்டுவந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. சிவசேனாக் கட்சி மசோதாவுக்கு எதிராகவே உள்ளது.

   இவ்வாறு நாடாளுமன்றவாதக் கட்சிகள் பா.ஜ.க. அணி, காங்கிரஸ் அணி என பிரிந்து கடுமையாகப் போராடுகின்றன. ஆனால் இவ்விரண்டு அணிகளுக்கிடையில் நடைபெறும் போராட்டத்தின் உண்மையான வேறுபாடு என்ன?

 காங்கிரஸ் அணி கொண்டுவந்த 2013 சட்டத்தின் பொது நலன்களுக்காக நிலம் கையகப்படுத்துவதில் 80 சதவீத விவசாயிகளின் ஒப்புதலும் பொதுத்துறை-தனியார் பங்கேற்பு திட்டங்களுக்கு 70 சதவீத விவசாயிகளின் ஒப்புதலும் தேவை என்பதை பா.ஜ.க. கொண்டுவந்த சட்டம் நிராகரிக்கிறது.

    2013 சட்டத்தின்படி, நிலம் கையகப்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் உபயோகப்படுத்தாமல் இருந்தால் அந்த நிலங்களை உரியவர்களிடம் திருப்பி ஒப்படைத்துவிட வேண்டும் என்பதை பா.ஜ.க. கொண்டுவந்துள்ள சட்டம் ஏற்கவில்லை.

   2013- சட்டத்தின்படி, ஒரு போகத்துக்கு மேல் விவசாயம் செய்யும் விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று இருந்ததை ஏற்காமல் மூன்று போகம் விவசாயம் செய்யும் நிலங்களையும் கையகப்படுத்தலாம் என்று திருத்தப்பட்டுவிட்டது. இதனடிப்படையில் பார்த்தால் பா.ஜ.க கொண்டுவந்துள்ள இந்தச் சட்டத்திருத்தங்கள் அனைத்தும் கார்ப்பரேட் நலன்களுக்குச் சாதகமானது என்பது உண்மையே.

    ஆனால், பாஜக அணி சார்பாக இதனை மறுத்து மோடி பேசும்போது ... “விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு காங்கிரஸ் ஆட்சியாளர்கள் 120 ஆண்டுகள் பழமையான சட்டத்தை (1894-ல் பிரிட்டிசார் கொண்டுவந்த சட்டத்தை) பயன்படுத்தினர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் கடந்த 60 முதல் 65 ஆண்டுகளாக அதே சட்டத்தைப் பின்பற்றிய அவர்கள், 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் இருக்கும் குறைகளை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எனது அரசு மீது குற்றம் சாட்டுகின்றனர் என்று கூறுகிறார்.

     ஆனால் 1894 - சட்டத்தின்படி, கார்ப்பரேட் நலன்களையே பொது நலன்களாகச் சித்தரித்து, விவசாயிகள் நிலங்கள் கைப்பற்றப்பட்ட அதே கோட்பாட்டைத்தான் மோடி கொண்டுவந்துள்ள சட்டமும் கடைப்பிடிக்கிறது என்பதை அவரே ஒப்புக் கொள்கிறார். ஆகவே காங்கிரஸ்காரர்களைப் போலவே பா.ஜ.கவினரும் காலனியாதிக்கத் தாசர்களாகவே செயல்படுகின்றனர். புதிய மசோதாவில் வளர்ச்சிப் பணிகளுக்கு கையகப்படுத்தும் நிலங்களில் 20 சதவீதத்தை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும், அவரது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று சேர்க்கப்பட்டுள்ளது. இந்தத் திருத்தம் கார்ப்பரேட்டுகளுக்கு நிலம் கையகப்படுத்துவதை உத்திரவாதப் படுத்துவதாகவும், விவசாயிகளுக்கு சில்லரைச் சலுகைகள் கொடுத்து நிலம் கையகப்படுத்துவதை நியாயப்படுத்துவதாகவே உள்ளது. எனவே இது ஏற்கத் தகுந்தது அல்ல.

  காங்கிரஸ் கொண்டு வந்த சட்டத்தில் இல்லாத, அரசு திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு 4 மடங்கு விலை கொடுக்கப்படும் என்று பாஜகவின் மோடி கூறுவதன் பொருள் என்ன? அரசு திட்டங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களை, அரசு-தனியார் கூட்டு என்ற பேரில் நிலங்களை கையகப்படுத்தி பன்னாட்டுக் கம்பெனிகளிடமும், உள்நாட்டு அம்பானி, அதானி, டாட்டாக்களிடமும் ஒப்படைப்பதுதான். பன்னாட்டுக் கம்பெனிகள், உள்நாட்டு தரகுப் பெருமுதலாளிகளின் நலன்கள்தான் அவர் கூறும் தேசநலன் என்பது. நாட்டு நலன்களோ, விவசாயிகளின் நலன்களோ அல்ல.

     எனவே மோடி கொண்டுவந்துள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டம் கார்ப்பரேட் நலன்களுக்குச் சேவை செய்யும் சட்டமே. அச்சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டிய சட்டமே. ஆனால் மோடி கொண்டுவந்துள்ள சட்டத்தை திரும்பப்பெறுவது மூலம் மட்டுமே நாட்டின் நலன்களையும், மக்களின் நலன்களையும் பாதுகாத்துவிட முடியாது. நாட்டின் நலனும், விவசாயிகளின் நலனும் பாதுகாக்கப்பட வேண்டுமானால், பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட் நலன்களையே பொது நலனாகச் சித்தரித்து விவசாயிகள், பழங்குடி மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தும் புதிய காலனியச் சட்டங்கள் அனைத்தும் முறியடிக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பயன்படுத்தப்படாத நிலங்களாய்ப் பாழாய்க் கிடப்பதையும், ரியல் எஸ்ட்டேட்டிற்காகத் திருப்பி விடுவதையும், மீண்டும் சுரண்டும் வர்க்கங்களின் கைகளுக்கு அந்த நிலங்கள் போகாமல் தடுத்து நிறுத்துவதற்காகவும், அந்நிலங்களை ஏழை, எளிய, நடுத்தர விவசாயிகள், தாழ்த்தப்பட்ட மக்களை உள்ளடக்கிய கூட்டுப் பண்ணைகள் உருவாக்கிட வேண்டும். அதுவே இன்றைய உடனடித் தேவையாகும். அதுவே ஏகாதிபத்தியத்தை எதிர்த்த, நிலப் பிரபுத்துவத்தை எதிர்த்த விவசாயிகளின் தவிர்க்க முடியாத கோரிக்கையாகும்.

       ஆனால் இன்று மோடி அரசாங்கம் கொண்டு வந்துள்ள சட்டத்திற்கு எதிராக நடைபெறும் பாராளுமன்றப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இரண்டு அணிகளுமே, கார்ப்பரேட் நலன்களையே பொது நலன்களாக சித்தரித்து விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்ப்பவையல்ல. தொண்டு நிறுவன ஆர்வலர் அன்னா அசாரே நடத்தும் போராட்டமும் கார்ப்பரேட்டுகளுக்காக நிலம் கையகப்படுத்துவதை எதிர்க்கவில்லை.சலுகைகளைத்தான் கோருகின்றனர். எனவே இந்த அணிகள் அனைத்தும் கார்ப்பரேட் நலன்களுக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு ஆதரவான அணிகள்தான்.

   இன்று பாஜக, காங்கிரஸ் அணிகளுக்கிடையில் நடக்கும் போராட்டத்தில், பாஜக கொண்டுவந்தச் சட்டத்தை நிராகரிப்பதா அல்லது காங்கிரஸ் சட்டத்தை ஏற்பதா என்பதே மையப் பொருளாக உள்ளது. இரண்டு சட்டங்களும் கார்ப்பரேட் நலன்களுக்கானதே ஒழிய மக்கள் நலன்களுக்கானது அல்ல. எனவேதான் பாட்டாளி வர்க்க இயக்கம் இரண்டு அணிகளையும் நிராகரித்துவிட்டு பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் புரட்சிகர ஜனநாயக சக்திகள் ஓரணியில் அணிதிரள அறைகூவி அழைக்கிறோம்.

  ê  பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் நலன்களையே ‘பொது நலனாக’ சித்தரித்து விவசாயிகள், பழங்குடி மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தும் புதிய காலனிய சட்டங்களை முறியடிப்போம்!

 ê சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக கையகப்படுத்திய வேளாண் நிலங்களை அரசுடமையாக்கு!

  ê  பயன்படுத்தப்படாத நிலங்களை கைப்பற்றி ஏழை, எளிய, நடுத்தர விவசாயிகள், தாழ்த்தப்பட்ட மக்களை உள்ளடக்கிய கூட்டுப் பண்ணைகளை உருவாக்கு!

  ê  கார்ப்பரேட் நலன்களையே ‘பொது நலன்களகாக’ கருதும் பா.ஜ.க, காங்கிரஸ் அணிகளை எதிரித்து புரட்சிகர ஜனநாயக சக்திகள் ஒன்றுபடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
 ஏப்ரல், 2015


No comments:

Post a Comment

விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.