Thursday, March 23, 2017

மோடி கும்பலின் தேசவிரோத, மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையை எதிர்த்துப் போராடுவோம்!

மோடி கும்பலின் தேசவிரோத, மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையை எதிர்த்துப் போராடுவோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!

மத்தியில் ஆளும் இந்துத்துவப் பாசிச மோடி கும்பலின் நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்துள்ள இவ்வாண்டுக்கான (2017-18) நிதிநிலை அறிக்கை, அந்நிய மூலதனத்திற்கு இருந்துவந்த அரைகுறை தடைகள் முழுவதையும் அகற்றி, நாட்டை ஏகாதிபத்திய புதியகாலனியத்திற்கு முழுமையாகத் திறந்துவிட்டுள்ளது. மறுபுறம் ஐந்து மாகாணத் தேர்தலை மனதில் கொண்டு விவசாயத்திற்கும், கிராமப்புறங்களுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு என்ற வெற்று வார்த்தை ஜாலங்களைக் கொண்டு நெருக்கடியின் சுமைகள் முழுவதையும் மக்கள் மீது திணித்துள்ளது.

அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தைக் கலைப்பதன் மூலம் அந்நிய முலதனத்திற்கான அனைத்துத் தடைகளையும் அகற்றுவது, அரசு-தனியார் பங்கேற்புத் (PPP) திட்டத்தின் மூலம் இரயில்வே உள்ளிட்டு அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களையும் தனியார்மயமாக்குவதைத் தீவிரப்படுத்துவது; 500, 1000- உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் தொடர்ச்சியாக ரொக்கமற்ற பொருளாதாரம் என்ற பேரில் சில்லறை வர்த்தகத்தை அந்நிய முதலீட்டுக்குத் திறந்துவிடுவது; தொழிலாளர்களின் நலன் காக்கும் பல்வேறு சட்டங்களை ஒரே சட்டமாக்கித் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக்கி மனித உழைப்பை மலிவான விலைக்குத் தாரைவார்ப்பதன் மூலம் மோடி கும்பல் புதிய காலனிய, புதியதாரளக் கொள்கைகளை அமல்படுத்துவதில் ஒரு புதிய கட்டத்தைத் துவக்கியுள்ளது.

அந்நிய முதலீட்டுக்கான வாசலை அகலத் திறப்பது, இயற்கை மற்றும் கனிம வளங்களைப் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்களின் வேட்டைக்குக் காணிக்கையாக்குவது, மலிவான மனித உழைப்பைத் தாரைவார்ப்பது என்ற புதிய காலனியச் சேவையை மானவெட்கமின்றி மோடி கும்பல் நியாயப்படுத்துகிறது. அந்நிய மூலதனத்தைச் சார்ந்த, ஏற்றுமதியைச் சார்ந்த உலகமயக் கொள்கைகள்தான் நாட்டின் வளர்ச்சிக்கு ஒரே வழி என்று குதர்க்கம் பேசுகிறது. ஆனால் உண்மை நிலை என்ன? எத்தகைய சர்வதேச சூழலில் இத்தகைய வாதத்தை மோடி கும்பல் முன்வைக்கிறது?


“உலக அளவில் அரசியல், பொருளாதாரத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் காரணமாக, உலகப் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க அளவுக்கு நிலையற்று மந்தநிலையைச் சந்திக்கின்ற ஒரு சூழலில் இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையை முன்வைக்கிறேன்” என்று நிதி அமைச்சரே கூறுகிறார்.

அவர் மேலும் பின்வருமாறு கூறுகிறார்: “உலகப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி என்பது 3.4 சதவீதமாக இருக்கும் என சர்வதேச செலாவணி நிதியம் (IMF) கணித்துள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகளின் (அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான்) பொருளாதாரம் 1.6 சதவீதத்திலிருந்து 1.9 சதவீதமாகவும், வளர்ந்துவரும் நாடுகளின் பொருளாதாரம் (இந்தியா, பிரேசில், பாகிஸ்தான்) 4.1 சதவீதத்திலிருந்து 4.5 சதவீதமாகவும் வளர்ச்சியடையும் என்று கூறப்படுகிறது. எனினும் இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளின் பொருளாதாரம் மூன்று அச்சுறுத்தல்களைச் சந்திக்கின்றன” என்று மானவெட்கமின்றி கூறுகிறார்

ஒன்று, அமெரிக்காவின் மத்தியக் கூட்டமைப்பு வங்கி 2017ஆம் ஆண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வட்டிவிகிதத்தை உயர்த்தியதால், வளர்ந்துவரும் நாடுகளுக்கு அந்நிய முதலீடு (FDI) வரவு குறைந்து போவதுடன், அந்நிய முதலீடுகள் இந்நாடுகளைவிட்டு வேகமாக வெளியேறுகின்றன; இரண்டு, சர்வதேச சந்தையில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் குறிப்பாக கச்சா எண்ணெய் விலையின் நிலையற்ற தன்மை காரணமாக வளரும் நாடுகளின் நிதிநிலைமை சீர்குலைந்து வருகிறது; மூன்று, உலகின் பல நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் டிரம்ப் பதவியேற்றவுடன் உலகமயக் கொள்கைகளைக் கைவிட்டுக் காப்புக் கொள்கைகளை (Protection Policy) முன்வைப்பதால் ஏற்றுமதி வீழ்ந்து கடும் பாதிப்புகளைக் கொண்டுவரும். இவை அனைத்தும் இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்று நிதி அமைச்சர் கூறுகிறார்.

அதாவது உலகமயக் கொள்கைகள் உலகப் பொருளாதார நெருக்கடியைத் தீவிரமாக்கிவரும் சூழலில், அந்நிய முதலீடுகள் அற்ற குளத்து அருநீர் பறவைபோல மூன்றாம் உலகநாடுகளிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் ஒரு சூழலில், அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளே உலகமயக் கொள்கைகளைக் கைவிட்டுக் காப்புக் கொள்கைகளைக் கடைபிடிப்பதாகக் கூறும் இன்றைய சூழலில் மோடி கும்பல் உலகமயம், தனியார்மயம் என்ற புதிய தாராளக் கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்தி ஏகாதிபத்திய விசுவாசத்தைக் காட்டிவருகிறது.

மோடி கும்பல் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தைக் கலைப்பது (FIPB) என்ற முடிவை எடுத்துள்ளதன் மூலம் அந்நிய முதலீட்டுக்கு இதுவரை இருந்துவந்த அரைகுறைக் கட்டுப்பாடுகள் முழுவதும் அகற்றப்பட்டுவிட்டன. ஏற்கனவே மோடி கும்பல் “மேக் இன் இந்தியா” திட்டத்தை அறிவித்த போதும், பல்வேறு சலுகைகளை வழங்கிய போதும் அந்நிய முதலீட்டாளர்கள், “அரசுத் துறை அதிகாரிகளின் குறுக்கீடும், வரி அதிகாரிகளின் குறுக்கீடும் பன்னாட்டு முதலாளிகளுக்குத் தடைளாக உள்ளன” என்று புகார் கூறிவந்தனர்.

இந்தியாவில் அந்நிய முதலீடுகள் செய்வதற்குச் சில துறைகளில் நேரடியாக ஒப்புதல் பெற வழிகள் உள்ளன. இந்தத் துறைகளில் அந்நிய முதலீடுகள் செய்வதற்கு முன்கூட்டியே மத்திய அரசு அல்லது ரிசர்வ் வங்கியின் அனுமதி தேவை இல்லை. இவ்வாறு, 90 சதவீதத்திற்கும் அதிகமான அந்நிய முதலீடுகள் அரசின் அனுமதியின்றி நேரடியாக நாட்டிற்குள் வருகின்றன. எனினும் சில முக்கியத் துறைகள் இன்னமும் அரசுக் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன. அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் திட்டங்களைக் கையாளும்போது அரசின் ஒப்புதல் வேண்டும் என்று கூறுகிறது. குறிப்பாக வங்கிகள், காப்பீடு, பாதுகாப்புத்துறை, விமானப் போக்குவரத்து மற்றும் மருந்து உற்பத்தி போன்ற துறைகளுக்கான திட்டங்களுக்கு அரசின் ஒப்புதல் தேவை என்ற நிலை இருந்து வருகிறது.

ஆனால், நிதி அமைச்சர் அருண்ஜேட்லியோ, “அந்நிய முதலீட்டு வாரியத்தைக் கலைக்கின்ற கட்டத்தை நாம் அடைந்துவிட்டோம். எனவே அந்நிய முதலீட்டு வாரியத்தை இவ்வாண்டு முதல் கலைக்கின்றோம்” என்று அறிவித்துள்ளார். இதன் மூலம் அந்நிய மூலதனத்திற்கு இருந்துவந்த கொஞ்சநஞ்சக் கட்டுப்பாடுகளும் அகற்றப்பட்டுவிடும். அந்நிய மூலதனத்திற்கு நாட்டின் கதவுகளைத் திறந்துவிடுவது என்பது நரசிம்மராவ் ஆட்சியில் துவக்கிவைக்கப்பட்டு தற்போது மோடி ஆட்சியில் முழுமையாக தடைகள் நீக்கப்பட்டு நாடு புதியகாலனியத்தின் புதிய கட்டத்தில் நுழைகிறது.

இதன் விளைவாக வங்கிகள், இராணுவத் தளவாட உற்பத்தி உட்பட பாதுகாப்புத்துறையிலும், மருந்து உற்பத்தியிலும் பன்னாட்டு கார்ப்பரேட்கள் இந்திய அரசின் அனுமதியின்றி நுழையலாம். நாட்டின் பாதுகாப்புக்கு எதிராகச் செயல்படலாம். யாரும் கேள்வி கேட்க முடியாது. குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அண்மையில் அனில் அம்பானியின் “ரிலையன்ஸ் பாதுகாப்பு மற்றும் பொறியியல் நிறுவனம்”அமெரிக்காவின் கப்பற்படையுடன் அந்நாட்டின் ஏழாவது கப்பற்படைக் கப்பல்களைப் பழுதுபார்த்து மாற்றியமைக்கும் காண்ட்ராக்ட்டைப் பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கக் கப்பற்படை தனது 100 கப்பல்களை இந்தியப் பெருங் கடலில் இயக்க இருக்கிறது. ரூ.10,000 கோடி வருமானம் ஈட்டக் கூடிய இந்த ஒப்பந்தம் வெறுமனே வர்த்தகம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. மாறாக இந்திய நாட்டின் பாதுகாப்புக்கும், அண்டை நாடுகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய ஒரு ஒப்பந்தமாகும். இவ்வாறு அந்நிய மூலதனத்திற்கான கட்டுப்பாட்டை நீக்குவது என்பது நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் உலைவைப்பதாக மாறிவிடும்.

மேலும் மருந்து உற்பத்தி, போக்குவரத்து மற்றும் ஆராய்ச்சி துறைகளைக் கைப்பற்ற அமெரிக்கக் கம்பெனிகள் துடித்துக் கொண்டிருக்கின்றன. இனி இந்திய நாட்டின் மருந்து உற்பத்தியில் அமெரிக்கக் கம்பெனிகளின் ஆதிக்கம் தானாகவே பெருகும். ரூ.90,000 கோடி மதிப்புள்ள இந்திய மருந்துச் சந்தையை அமெரிக்கப் பன்னாட்டு கம்பெனிகள் சூறையாடும். உயிர் காக்கும் மருந்துகளின் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும். அது இந்திய நாட்டு மக்களை மட்டுமல்ல பிற ஏழை நாட்டு மக்களையும் நோய் தீர்க்கும் மருந்துகளை வாங்கமுடியாமல் சவக்குழிக்கு அனுப்பும்.

வரலாறு காணாத தனியார்மயமாக்கல்

அந்நிய முதலீட்டிற்கான தடைகள் முழுவதையும் நீக்கியதோடு, இவ்வாண்டு நிதி நிலை அறிக்கை இரயில்வே பட்ஜெட்டை, பொதுப் பட்ஜெட்டோடு சேர்த்துத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது     இரயில்வேத் துறையின் முக்கியத்துவத்தை ஒழிப்பது மட்டுமல்ல இரயில்வே உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் விரைவாக பன்னாட்டு உள்நாட்டுக் கம்பெனிகளுக்குத் தாரைவார்க்கும் திட்டத்தின் ஒரு பகுதியேயாகும். மோடி கும்பல் இவ்வாண்டு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் தாரைவார்ப்பதை வெறித்தனமாகச் செயல்படுத்துகிறது. வரலாறு காணாத அளவுக்கு ரூ.72,000 கோடிக்கு பொதுத்துறையை விற்பது என்று மோடி அரசாங்கம் பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை விற்றுவிடுவது, பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் திரும்பப்பெறுவது மற்றும் இரயில்வே, ஜெனரல் இன்சூரன்ஸ் போன்ற நிறுவனங்களை தனியாருக்குத் திறந்துவிடுவது என்ற முடிவை அறிவித்துள்ளது.

இதற்கு முன்பே “பரிமாற்ற வர்த்தக நிதி” (Exchange Trade Fund) என்ற அமைப்பின் மூலம், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை குறைத்து மதிப்பீடு செய்து அடிமாட்டு விலைக்கு விற்கும் நடவடிக்கைகளை மோடி கும்பல் துவங்கிவிட்டது. ஊடகங்களில் வெளியான ஒரு செய்தியின்படி ரூ.,13,726 கோடி மதிப்புள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை ரூ.6,000 கோடிக்கு விற்றுவிட இலக்கு தீர்மானித்துள்ளது.

தற்போது பொதுத்துறை பங்குகளை விற்பதற்கான இந்தப் பரிமாற்ற வர்த்தக நிதி (ETF) மூலம் 10 மெகாரத்னா/நவரத்னாக்களின் பங்குகளை விற்றுவிடத் திட்ட -மிட்டுள்ளது. ஒ.என்.ஜி.சி, கெயில், ஆர்.இ.சி, ஆயில் இந்தியா, ஐ.ஒ.சி, பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன், கண்டெய்னர் கார்ப்பரேஷன், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் எஞ்சினியர் இந்தியா போன்ற நிறுவனங்களின் பங்குகளை விற்றுவிட ஏற்கனவே நடவடிக்கைகளைத் துவங்கிவிட்டது.

மோடி அரசாங்கம் நியமித்துள்ள பொதுத்துறை நிறுவனங்களை ஒழித்துக் கட்டுவதற்கான அமைப்பு, ஒரு திட்டத்தை மோடி அரசாங்கத்திடம் வழங்கியுள்ளது. 17-நவரத்தினாக்களையும், 73-மினிரத்னாக்களையும் பிற சிறு பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான ஆலோசனையை அது வழங்கியுள்ளது. அதன்படி, இனி விண்வெளி ஆராய்ச்சி, இந்துஸ்தான் ஏரோநாட்டிக், இஸ்ரோ போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களும் கூட அமெரிக்கக் கம்பெனிகளிடம் தாரைவார்க்கப்படும். இவைகள் மீது அமெரிக்கா ஆரம்பம் முதல் ஒரு கண்ணாகவே உள்ளது. இது நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளை உருவாக்கும்.

அண்மையில் இஸ்ரோ நிறுவனம் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் 104 செயற்கை கோள்களைப் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தி உலக சாதனை புரிந்தது. ஆனால் மோடி கும்பலோ இஸ்ரோ உள்ளிட்ட கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பல பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயம் என்ற சுற்றுவட்டத்தில் கொண்டு நிலைநிறுத்துவதற்கான உலகமகா துரோகத்தைத் துவங்கிவிட்டது.

“அரசாங்கத்தின் தொழில், தொழிலில் ஈடுபடுவது அல்ல” என்ற புதிய தாராளக் கொள்கைகளின் தாரக மந்திரத்தை இலக்காகக் கொண்டு மோடி கும்பல் செயல்படுகிறது. மக்களின் வியர்வையில் கட்டியமைக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்களுக்கு மலிவான விலைக்குத் தாரைவார்க்கிறது. இதன்மூலம் இந்திய அரசுக்கு காமதேனுவாக நிதியை வாரி வழங்கிவரும் பொதுத்துறை நிறுவனங்களைக் கொன்று, சவப்பெட்டியில் அடைத்துச் சுத்தியல் கொண்டு கடைசி ஆணியை அடிக்கும் வேலையை மோடி கும்பல் மூர்க்கத்தனமாகச் செய்கிறது.

தொழிலாளர்களின் மலிவான கூலி உழைப்பு

மோடி கும்பல், பொதுத்துறைகளை கார்ப்பரேட்களுக்குத் தாரைவார்ப்பதோடு அவைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வை பறிக்கின்ற துரோகத்தையும் செய்கிறது. நிரந்தரத் தொழிலாளர்களின் வேலையைப் பறித்து அனைத்தையும் காண்டிராக்ட்மயமாக்கி வருகிறது. தொழிற்சங்க உரிமை பறிக்கப்படுகிறது. ஓய்வூதிய நிதி, வருங்கால வைப்பு நிதி போன்றவைகளை பங்குச் சந்தை சூதாட்டத்தில் ஈடுபடுத்தி தொழிலாளர்களை வயதான காலத்திலும் நடுத்தெருவில் நிர்க்கதியாய் நிறுத்திவருகிறது. ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் காண்ட்ராக்ட் முறையைப் புகுத்தி எட்டு மணி நேர வேலை நாளை ஒழிப்பது, நிரந்தர வேலையை ஒழிப்பது, தொழிற்சங்க உரிமைகளைப் பறிப்பது, குறைந்தபட்சக் கூலியைக் கூட வழங்க மறுப்பது என தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக மாற்றுவதைத் தீவிரப்படுத்தி வருகிறது.

இவ்வாண்டு நிதி நிலை அறிக்கையில், இந்தியாவில் தொழில் செய்வதை எளிமைப் படுத்துவது என்ற பேரில் பல்வேறு தொழிலாளர் சட்டங்களை ஒழித்துக்கட்டி ஒரே சட்டமாக மாற்றப் போவதாக மோடி கும்பல் அறிவித்துள்ளது. இவ்வாறு மனித உழைப்பை மலிவானதாக்கி பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்களுக்கு காணிக்கையாக்குகிறது. தொழிலாளி வர்க்கத்துக்குத் துரோகமிழைக்கிறது.

பணமதிப்பு நீக்கமும் புதியகாலனிய சேவையும்

500, 1000 ரூபாய் உயர் மதிப்பு நோட்டுகளை மதிப்பு நீக்கம் செய்ததின் மூலம் ஒரே நாளில், 86 சதவீத பணப்புழக்கத்தைத் தடை செய்து மக்கள் மீது ஒரு பொருளாதார நெருக்கடியைத் திணித்தது மோடி கும்பல். கறுப்புப் பணத்தை ஒழிப்பது, கள்ளப்பணத்தை அழிப்பது என்று மார்தட்டிய மோடி கும்பல் தாக்கல் செய்த இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில் எவ்வளவு கறுப்புப் பணத்தைக் கைப்பற்றினோம், எவ்வளவு கள்ளப்பணத்தைக் கண்டுபிடித்தோம் என்ற ஆய்வை முன்வைக்கவில்லை. கறுப்புப் பண ஒழிப்பில் மோடி கும்பல் படுதோல்வி அடைந்துவிட்டது. அந்நிய நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள பல லட்சம் கோடி கறுப்புப் பணத்தின் மீது கைவைக்கவே இல்லை மோடி கும்பல். எனினும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையைத் திரும்பப் பெறவுமில்லை. மாறாகக் கறுப்புப் பணத் திமிங்கிலங்களான அம்பானி, அதானி போன்ற முதலாளிகளுக்கு சேவை செய்கிறது. மக்களின் சேமிப்புகளை வங்கிகளில் குவித்து அதனைத் திரும்ப எடுப்பதற்குக் கட்டுப்பாடுகள் விதித்து மக்களை வதைக்கிறது.

பணமதிப்பு நீக்கத்தின் உண்மையான நோக்கம் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கானது அல்ல என்பதையும், ரொக்கமற்ற பொருளாதாரத்திற்கு மாறுவதுதான் என்பதையும் மோடி கும்பல் அறிவிப்பு வெளியிட்ட ஒரு வாரத்திற்குள்ளாகவே தெளிவுபடுத்திவிட்டது. அதன் பொருள் என்ன?

ஒன்று, ரொக்கமற்ற பொருளாதாரம் என்ற பேரில் வால்மார்ட், ரிலையன்ஸ், டாட்டா போன்ற பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்களைச் சில்லறை வர்த்தகத்தில் திறந்துவிடுவது. இரண்டு, 86 சதவீத பணப்புழக்கத்தைத் தடைசெய்து மக்கள் பணம் ரூ.14 லட்சம் கோடியை வங்கிகளில் குவிப்பதன் மூலம் திவாலாகி வரும் இந்தியப் பொதுத்துறை வங்கிகளின் நம்பகத் தன்மையைக் காப்பது; மக்களின் சேமிப்புகளை வங்கிகளில் குவித்து அதனை அந்நிய நிதிமூலதன கும்பல்களிடம் ஒப்படைப்பது; அதன் மூலம் நிதி மூலதனக் கும்பல்களின் ஆதிக்கத்தில் அனைத்துத் துறைகளையும் கொண்டு வருவது என்ற துரோகத்தைச் செய்கிறது.

மோடி கும்பல் முன்வைக்கும் ரொக்கமற்ற பொருளாதாரம் (Cashless Economy) என்பது யாருடைய திட்டம்? அதன் பலன் யாருக்கு? ரொக்கமற்ற பொருளாதாரத்தின் பின்னால் யாருடைய நலன்கள் ஒளிந்துள்ளன?

2016-அக்டோபர் மாதத்தில் “கேட்டலிஸ்ட்” (Catalyst) எனும் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு அமெரிக்காவின் USAID (United States Agency for International Development) மற்றும் இந்திய நிதி அமைச்சகத்தின் கூட்டு நிறுவனமாகும். இந்த அமைப்பின் துவக்கவிழாவில் பேசிய அமெரிக்கத் தூதர் ஜோனாதன் அடல்டன் பின் வருமாறு கூறினார்:

“தினசரி வணிகத்தை ரொக்கமற்ற நிகழ்வாக மாற்றும் சவாலைச் சந்திப்பதில் “கேட்டலிஸ்ட்” தனது கவனத்தை முழுமையாகச் செலுத்தும்.”

இந்த அமைப்பின் முதன்மை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர், ஸ்னாப் டீல் (Snap Deal) எனும் இணைய வர்த்தக நிறுவனத்தின் உதவித் தலைவராகப் பணியாற்றிய பாதல் மாலிக் ஆவார். இந்த அமைப்பின் திட்ட அமலாக்க இயக்குநராக நியமிக்கப்பட்ட அல்லோ குப்தா, அமெரிக்காவின் USAID பணியாற்றிவர் என்பது மட்டுமல்ல; ஆதார் அட்டைத் திட்டத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்.

இந்த “கேட்டலிஸ்ட்” அமைப்பிற்கு நிதி உதவி செய்வது யார்? அமெரிக்காவின் USAID அமைப்புதான்! எவ்வளவு நிதி உதவி என்பது பரமரகசியம்!

“கேட்டலிஸ்ட்” அமைப்பின் இலட்சியம் என்ன? “(சிறு) வர்த்தகர்கள் மற்றும் குறைந்த வருவாய் உள்ள நுகர்வோர்களிடையே ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஆழமாகப் பரவலாக்குவதில் உள்ள தடைகளை அகற்றுவதுதான் இதன் இலட்சியம்” என்று பாதல்மாலிக் சொல்கிறார். ரொக்கமற்ற பொருளாதாரத்தை நோக்கி இந்தியாவைத் தள்ளிவிட அமெரிக்கா, நமது நிதி அமைச்சகத்தை “மூளைச் சலவை” செய்ததும், அதற்கு நிதி அமைச்சகமும் மோடி அரசாங்கமும் தாள் பணிந்ததும் இதன் மூலம் அம்பலமாகிறது.
ரொக்கமற்ற பொருளாதாரம் குறித்து பல மாதங்களாகவே அமெரிக்காவும் மோடி அரசாங்கமும் “கூட்டுக் களவாணி திட்டம்” தீட்டியுள்ளனர். 2016ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அமெரிக்காவின் USAID ஒரு அறிக்கையைத் தயாரித்து மோடி அரசாங்கத்திடம் தந்துள்ளது. இந்த அறிக்கையின் தலைப்பு “ரொக்கத்திற்கு அப்பால்” என்பதாகும்.

இந்த அறிக்கை சில ஆலோசனைகளைப் பட்டியலிடுகிறது:

  Ø அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் வங்கி மூலமாகவே ஊதியத்தை அளிக்க வேண்டும்.
  Ø அனைத்து நலத்திட்டங்களும் நேரடியாக வங்கியில் செலுத்தப்பட வேண்டும்.
  Ø சுய உதவிக் குழுக்களின் நடவடிக்கைகளையும் ரொக்கமற்ற பரிவர்த்தனைக்கு மாற்ற வேண்டும்.
  Ø ‘அடல் பென்ஷன் யோஜனா’ போன்ற திட்டங்களையும் ரொக்கமற்ற பரிவர்த்தனைக்கு மாற்ற வேண்டும்.
 Ø சிறிய அளவிலான ரொக்கம் பயன்படுத்தும் சேவைகளான பேருந்துப் போக்குவரத்துகளிலும் ரொக்கமற்ற பரிவர்த்தனை அமல்படுத்தப்பட வேண்டும். ஹாங்காங் அனுபவத்தை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்.
 Ø ரொக்கமற்ற பரிவர்த்தனையைப் பயன்படுத்துவோருக்கு பரிசுத் திட்டம் அறிமுகப்படுத்த வேண்டும்.
 Ø ரொக்கமற்ற பரிவர்த்தனையைப் பயன்படுத்துவோருக்கு வரிச் சலுகை உட்பட பல சலுகைகளை அளிக்கலாம்.

இந்த அறிக்கையை சமர்ப்பித்த பிறகு அமெரிக்காவின் USAID அமைப்பு ஒரு முக்கியமான விவரத்தை வெளியிட்டது. 35 முக்கியமான அமெரிக்க, இந்திய மற்றும் சர்வதேச அமைப்புகள் USAID மற்றும் நிதி அமைச்சகத்துடன் கைகோர்த்துள்ளன என்பதுதான் அந்த விவரம். எதற்காக? ரொக்கப் பணத்தின் மீது மிகப்பெரிய தாக்குதலைத் தொடுக்கவே இந்தக் “கூட்டணி” அமைக்கப்பட்டது. எவரெல்லாம் இக்கூட்டணியின் அங்கத்தினர்கள்?
பில்கேட்ஸ் மிலிண்டா குழுமம், சிட்டி குழுமம் (CITI BANK), கிளிண்டன் குழுமம், ஐரோப்பிய வங்கி, அமெரிக்க வளர்ச்சி வங்கி, பாகிஸ்தான் அரசாங்கம், ஜோர்டான் அரசாங்கம், மாஸ்டர் கார்ட், விசா கார்ட் (கடன் அட்டை நிறுவனங்கள்), கோக்கோ கோலா, கிராமீன் வங்கி போன்றவை இக்கூட்டணியில் இணைந்துள்ளன.

எனவே, பணமற்ற பரிவர்த்தனைக்கு மாறுவதற்கு மக்களை நிர்ப்பந்திக்கும் நடவடிக்கை பன்னாட்டு மூலதனமும், கார்ப்பரேட்களும் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வசதி செய்து கொடுப்பதேயாகும். ஒவ்வொரு டிஜிட்டல் பரிவர்த்தனையும், நுகர்வோரிடமிருந்து அதற்கான கட்டணம் ஒன்றை வசூலித்துக் கார்ப்பரேட்களின் லாபத்திற்கு வழிசெய்து கொடுப்பதேயாகும். அத்துடன் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுவது என்பது ஆன்லைன் வர்த்தகத்திற்குச் சேவை செய்து சில்லறை வணிகத்தை ஒழிப்பதுமாகும். இந்தியாவில் அடுத்த நான்கு ஆண்டுகளில் 50 சதவீதம் ஆன்லைன் வர்த்தகம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 5 கோடி பேர்கள் ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் பொருட்களை வாங்கி வருகின்றனர். 2020ல் இது 32 கோடி பேராக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 2025ல் ஆன்லைன் வர்த்தகம் 18,800 கோடி அமெரிக்க டாலராக அதிகரிக்கும். அதாவது இந்திய ரூபாயின் மதிப்பு 12,97,200 கோடி ரூபாய்க்கு வளரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மளிகைப் பொருட்கள், மரச் சாமான்கள் முதல் பொங்கல், தீபாவளி பூஜைப் பொருட்கள் வரை ஆன்லைன் வர்த்தகம் என்ற சுனாமியில் உள்நாட்டு சில்லறை வர்த்தகம் சிக்கி கோடிக்கணக்கான வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கப்போகிறது.

இது நாள்வரை வணிகர்களுக்கான கட்சி பாஜக என்ற நிலையிலிருந்து அக்கட்சியை மாற்றி, மோடி கும்பல் பாஜகவை பன்னாட்டு முதலாளிகளின் நலன் காக்கும் கட்சியாக மாற்றிவருகிறது. இவ்வாறு உலகமெங்கும் தங்களது ஆக்டோபஸ் கரங்களைப் படரவிட்டு, பகாசுர சக்தியாக வளர்ந்து இந்திய வர்த்தகத்தை ஏகபோகமாக்கத் துடிக்கும் கார்ப்பரேட்களின் ஏவல் நாய்களாக மோடி கும்பல் செயல்படுகிறது.

கார்ப்பரேட்களின் கைகளில் குவியும் மக்கள் பணம்

இந்திய நாட்டின் பொதுத்துறை வங்கிகள் வாராக்கடன் காரணமாக திவாலாகும் நிலையை எட்டுவதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கைச் செய்துள்ளனர். 2007ஆம் ஆண்டு அமெரிக்காவில் வங்கிகள் திவாலாகிப் போனது போல இந்திய வங்கிகளும் திவால் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அபாயசங்கை ஊதிவிட்டனர். இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்காகவே மக்களின் பணத்தை வங்கிகளில் கட்டாயப்படுத்தி மோடி கும்பல் முடக்கி வைத்துள்ளது.

அமெரிக்கப் பொருளாதாரத்தில் 2007-09 ஆம் ஆண்டுகளில் பெரும் மந்தம் ஏற்பட்டு வங்கிகள் பெரும் எண்ணிக்கையில் திவாலாகின. பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் வேலை இழந்தனர். வீடுகளின் விலைகள் சரிந்தன. உலக அளவில் அதன் தாக்கம் இருந்தது. அதை “சப்பிரைம் மார்ட்கேஜ் நெருக்கடி” என்று அழைத்தனர். அதே போன்ற நெருக்கடி இந்தியாவில் உருவாகி இருக்கிறது என்று கூறுவது மிகையாகத் தோன்றலாம். ஆனால் அதே போன்ற நிலைமை உருவாகி இருக்கிறது என்பதே உண்மை. இன்னும் வெடிக்கவில்லை அவ்வளவுதான்!

2011ஆம் ஆண்டு முதல் பொதுத்துறை வங்கிகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன்களை ஆராய்ந்தால், ஆரோக்கியமான நிதிநிலையை வைத்திருக்காத நிறுவனங்களுக்குக் கடன்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. வட்டி கட்ட முடியாத நிறுவனங்களுக்குக் கூட கடன்கள் தரப்பட்டுள்ளன. 2012 முதல் இது அதிகரித்துள்ளது.

மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கம் சலுகை சார் முதலாளித்துவம் எனும் புல்லுருவி முதலாளித்துவத்தை (Crony Capitalism) மென்மேலும் கொழுக்க வைக்கிறது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் வாராக் கடன்கள் இரட்டிப்பாகி வருவதுடன், 2015-16ஆம் ஆண்டில் மும்மடங்காக உயர்ந்துவிட்டன. காங்கிரஸ் ஆட்சி மட்டுமல்ல, மோடி கும்பலின் ஆட்சியும் இத்தகைய வங்கிக் கடன்கள் வழங்குவதற்கு ஆதரவாகவே செயல்படுகிறது.

2016 மார்ச் மாதத்தில் இந்திய ரிசர்வ் வங்கி அமைத்த சொத்து தர ஆய்வு நிறுவனம், வங்கிகளின் வாராக் கடன்களின் மதிப்பு ரூ.8.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என்றும், இதில் பெரும்பகுதி பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுடையது என்றும் கூறுகிறது. அதாவது அம்பானி, அதானி, மல்லையா போன்ற 10 கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்கள் மட்டும் ரூ.7 லட்சம் கோடி எனக் கூறுகிறது. எனவேதான் இந்தியப் பொதுத்துறை வங்கிகள் திவால் நிலையைச் சந்திக்கின்றன.

நாட்டு மக்களில் கோடிக்கணக்கானோர் தங்கள் வாழ்நாள் சேமிப்புகளை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்ததன் மூலம் வங்கிகளின் நம்பகத்தன்மையைக் காப்பாற்றியது மட்டுமல்ல, அத்தகைய மக்களின் பணம்தான் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடனாகவும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு மக்களின் பணத்தை கார்ப்பரேட்கள் கடன்களாக வாங்கிக்கொண்டு வாராக் கடனாக்கி ஏப்பம் விட்டுள்ளனர். இதை முகேஷ் அம்பானியே திருவாய் மலர்ந்து பின்வருமாறு கூறுகிறார்: “மக்களிடம் இவ்வளவு காலமும் பயன்படாமல் இருந்த பணம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது” என்று அவர் கூறுவதிலிருந்து அந்த உண்மையை உணரமுடியும்.

மோடி அரசாங்கம் கார்ப்பரேட் முதலாளிகளின் இத்தகைய வாராக் கடனை வசூலிப்பதற்கு மாறாக, சிலவற்றைத் தள்ளுபடி செய்திருக்கிறது. மேலும் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கியை நிர்ப்பந்தம் செய்கிறது.

இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்ட தொகை 2014-15ல் மட்டும் சுமார் 1 லட்சத்து 12 ஆயிரத்து 78 கோடியாகும். மக்களின் சேமிப்பை வங்கியிலிருந்து எடுப்பதற்கு கட்டுப்பாட்டு விதிக்கும் மோடி கும்பல், வாராக் கடன்களுக்கு வக்காலத்து வாங்கி நாட்டிற்கும் மக்களுக்கும் துரோகமிழைக்கிறது. மக்களின் சேமிப்புகளைத் திரும்ப எடுப்பதற்கு கட்டுப்பாடு விதித்து ஏடிஎம் படுகொலைகள் புரிந்த மோடி கும்பல், மக்களின் சேமிப்புகளைக் கொண்டு கார்ப்பரேட்களுக்குக் கடன் வழங்கிக் கார்ப்பரேட்களின் மனங்குளிரவைக்கிறது. அந்நிய நிதி மூலதனக் கும்பல்களின் கைகளில் நிதி ஆதிக்கம் ஒப்படைக்கப்படுகிறது. மேற்கண்ட புதியகாலனிய தாராளக் கொள்கைகள் வளர்ச்சியை அல்ல மாறாக நாட்டில் கடும் பொருளதார நெருக்கடியைத்தான் உருவாக்கியுள்ளன.

நெருக்கடியில் மூழ்கும் இந்தியப் பொருளாதாரம்

மோடி அரசாங்கம் அமல்படுத்திவரும் புதியகாலனிய புதிய தாராளக் கொள்கைகளும், ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற நடவடிக்கைகளும் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல பொருளாதார நெருக்கடியை வரலாறு காணாத அளவிற்குத் தீவிரப்படுத்தி வருகிறது. நாட்டு மக்கள் கடும் துன்பங்களைச் சந்தித்து வருகின்றனர். நிதி அமைச்சர் அருண்ஜேட்லியோ தனது நிதிநிலை அறிக்கையில் உலகப் பொருளாதாரம் மந்தநிலையைச் சந்தித்த போதிலும், இந்தியப் பொருளாதாரத்திற்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லை என முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார். ஆனால் நிதிநிலை அறிக்கைக்கு முன் அருண்ஜேட்லி தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையோ நாட்டில் நிலவும் பொருளாதார வளர்ச்சியை, தெளிவாகத் தெரிவிக்கிறது. நாட்டின் பொருளாதாரம் பணமதிப்பு நீக்கத்தால் 1 சதவீதம் வீழ்ச்சியடைந்துவிட்டது என்பதைச் சர்வதேச செலாவணி நிதியம் அறிவித்துள்ளது. பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவைகள் குறைந்து சந்தை சுருங்கிக் கொண்டே போவது; சிறு, குறு தொழில்கள் நலிவடைதலால் ஏற்பட்ட பெருமளவிலான வேலை இழப்புகள்; விவசாயத்துறை வருமான வீழ்ச்சி, விவசாயிகளின் தற்கொலை அதிகரிப்பு; தோல் பொருட்கள், நெசவு, கைவினைத் தொழில்கள் மற்றும் மீன் பிடித் தொழில்கள் அனைத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு முடங்கிவிட்டன.

பணமதிப்பு நீக்கத்தால், சிறு, குறு தொழில்கள் மட்டுமல்ல அடிப்படையான தொழில்களும் பாதிக்கப்பட்டன. மோட்டார் வாகனம், சிமெண்ட், இரும்பு எஃகு, பேப்பர், அலுமினியம் மற்றும் உரத்தொழிற்சாலைகள் உள்ளிட்டுக் கடுமையாகப் பாதித்துள்ளன. இவ்வாறு வேலையின்மை, விவசாயிகள் தற்கொலை, வறட்சி என நாட்டு மக்கள் கடும் துயரங்களைச் சந்திக்கின்ற சூழலில்தான் மோடி அரசு இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட 30 கோடிக்கும் மேல். அத்தனை பேரும் தினசரி சம்பளத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்துபவர்கள். தற்போது அவர்கள் மொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்கிறார்கள். அவர்களுடைய இழப்புகளுக்கு ஈடாக, அவர்களின் இயல்பு நிலையை மீண்டும் கொண்டு வருவதற்கான திட்டங்களோ, அறிவிப்புகளோ இந்தப் பட்ஜெட்டில் இடம் பெறாதது முற்றிலும் ஏமாற்றம் அளிக்கிறது. அதேபோல் வேலைவாய்ப்பை ஏற்படுத்தவோ, விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அவலங்களைப் போக்கவோ எந்தவொரு முக்கியமான திட்டமும் இந்தப் பட்ஜெட்டில் இல்லை.

நெருக்கடியின் சுமைகளை மக்கள் மீது சுமத்தும் நிதிநிலை அறிக்கை

இவ்வாண்டு நிதிநிலை அறிக்கை திட்டச் செலவினங்கள், திட்டம் சாரா செலவினங்களைத் தனித்தனியாக இல்லாமல் ஒன்றாக்கியதை பெரும் சாதனையாக அறிவித்துக் கொள்கிறது. நாட்டின் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்பாட்டிற்குள் வைப்பது என்ற பேரால் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பது; மறுபுறம் கார்ப்பரேட்களுக்கு வரிச்சலுகை வழங்கிவிட்டு மக்கள் மீது மறைமுக வரிகளைச் சுமத்துகிறது. அதே சமயம் விவசாயத்திற்கு ரூ.1 லட்சம் கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு, கிராமப்புற வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி கூடுதலாக ஒதுக்கீடு என்று வெற்று வாக்குறுதிகள் அளித்துள்ளது.

விவசாயம், கிராமப்புற வளர்ச்சித் திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு என்பது மோடி அரசின் மாபெரும் மோசடியாகும். உண்மையில் சென்ற ஆண்டை விட இவ்வாண்டு மொத்த நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ள செலவினங்களுக்கான ஒதுக்கீட்டு நிதி குறைவேயாகும். சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையில் செலவினங்களுக்கான ஒதுக்கீடு, ஒட்டுமொத்த வளர்ச்சியில் 13.9 சதவீதமாகவும். ஆனால் இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில் அது 12.7 சதவீதமாக குறைந்துள்ளது. சதவீத அடிப்படையில் இது குறைவானதாகும்.

சென்ற ஆண்டு மொத்தச் செலவு ரூ.19.78 லட்சம் கோடியிலிருந்து இவ்வாண்டு ரூ.21.47 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளோம் என்று கூறுவது பணவீக்கத்தைக் கணக்கிலெடுத்துக் கொண்டால் அதுவும் குறைவுதான். வரி வருவாயைப் பொறுத்தவரை 2016-17ஆம் ஆண்டின் திருந்திய மதிப்பின்படி 9.4 சதவீதமாக இருந்தது. ஆனால் அது இவ்வாண்டு 9 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

தொழில்கள் முடக்கத்திற்குத் தீர்வில்லை

நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கு மோடி அரசாங்கம் வீடு கட்டும் திட்டம் எனும் நீர்க்குமிழிப் பொருளாதாரத்தைதான் சார்ந்திருக்கிறது. உதாரணமாக ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தருவதற்காக சென்ற ஆண்டு ரூ..15,000 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், எந்த ஒரு மாநிலத்திலும் நிர்ணயித்த இலக்குகள் எட்டப்படவில்லை. இந்தச் சூழலில், இதே திட்டத்திற்கு இப்போதைய பட்ஜெட்டில் ஒரு கோடி வீடுகட்ட ரூ..23,000 கோடி ஒதுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 23,000 ரூபாயில் ஒரு வீடு கட்டுவதாகக் கூறுகிறது. உண்மையில் இதை வைத்துக்கொண்டு ஒரு கழிவறைகூடக் கட்டமுடியாது. இது ஊக வாணிபத்துக்கும், ஊழலுக்கும், சுரண்டலுக்கும் மட்டுமே வழிவகுக்கும்.

இவ்வாண்டு நிதி நிலை அறிக்கை ரியல் எஸ்டேட்டுகளுக்குச் சாதகமான நிலையை எடுத்துள்ளது. கட்டமைப்புத் துறையுடன் சிறு வீடுகள் கட்டுவதை இணைப்பதன் மூலம், நில ஆக்கிரமிப்பிற்கான சட்டங்களை அகற்றுவதன் மூலம் - வரிச் சலுகை வழங்குவதன் மூலம் ரியல் எஸ்டேட் துறைக்கு முன்னுரிமை வழங்கியுள்ளது. இது ரியல் எஸ்டேட் முதலாளிகள் ஊகவாணிபத்தில் ஈடுபடுவதற்கு ஊக்கமளிப்பதாகவே உள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வரிக் குறைப்பை முன்வைக்கிறார் நிதி அமைச்சர். ஆனால் அப்படி ஏதும் நடக்கப்போவதில்லை. ரூ.,2.5 லட்சத்திலிருந்து ரூ..5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதில் ரூ..2.5 லட்சம் முதல் ரூ..5 லட்சம் வரை வருமானம் பார்ப்பவர்கள் 1.98 கோடி பேர். ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை இதைவிடக் குறைவு. இந்த 5 சதவீத வரிக் குறைப்பால் ஒருவருக்கு ரூ.5,000 மிச்சமாகும். இந்த ரூ.5000 சேமிப்பு மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்து பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுவரும் என்பது பெரும் ஏமாற்றாகும். மேலும் இந்த வரிச் சலுகையால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட மறைமுக வரி ரூ.75,000 கோடியை மக்கள் மீது திணிக்கிறது. மக்களுக்கு அளித்துள்ள வரிச் சலுகையைக் காட்டிலும் மக்களிடம் இருந்து மறைமுகமாக வரி வசூலிப்பதே அதிகம்.

மேலும், 50 கோடி வரை வருமானம் ஈட்டுவதை சிறு, நடுத்தரத் தொழிலுக்கு 5 சதவீத வரிக் குறைப்பு என்பது கூட சிறு, குறு தொழிலுக்குப் பயன்படுவதைவிட கார்ப்பரேட்களுக்கே பயன்படும். இந்தியக் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களைப் பிரித்துச் சிறு, குறு நிறுவனங்களாக நிறுவி அரசாங்கத்தின் சலுகைகளை அனுபவிப்பதைக் கணக்கிலெடுத்துக் கொண்டால் இந்த வரிச்சலுகைகள் கூட, பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பாதிக்கப் பட்டுள்ள சிறு குறு தொழில்களுக்குப் பயன்படாது. மாறாக, கார்ப்பரேட்களுக்கே பயனளிக்கும். எனவே இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில் முடங்கிப்போயுள்ள தொழில்களுக்கோ வேலையிழந்து வாடும் தொழிலாளிகளுக்கோ எந்த விதத் தீர்வுமில்லை.

வேளாண்மை துறை நெருக்கடிக்கும், விவசாயிகள் தற்கொலைகளுக்கும் தீர்வுகாணாத பட்ஜெட்

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி விவசாயிகளுடைய வருமானத்தை இரண்டு மடங்காக பெருக்கப் போவதாக திரும்பத்திரும்பக் கூறுகிறார். விவசாயத்துறைக்கான கடனை ரூ.1 லட்சம் கோடி அதிகரித்து ரூ.10 லட்சம் கோடி என்ற கடன் இலக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால் உண்மையில் இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்துவிட்டார். 2016-17ல் 1.98 சதவீதமாக இருந்த இத்துறைகளுக்கான ஒதுக்கீட்டை இவ்வாண்டு 1.95 சதவீதமாக வீழ்ச்சியடைந்துவிட்டது. தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் (ஸிரிக்ஷிசீ) போன்ற பெரும் திட்டத்திற்கு 2016-17ல் ரூ. 5400 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது 12 சதவீதம் குறைக்கப்பட்டு ரூ.4750 கோடியாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நபார்டு வங்கிக்கு ரூ.34,900 கோடி கடன் வழங்கி, விவசாயத்தை வங்கியைச் சார்ந்த கடன் திட்டத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விவசாயத்துக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விவசாயத்துறைக்குக் கடன் அதிகரிப்பு, நீர்ப்பாசனத் திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்குவது, பயிர் பாதுகாப்புத் திட்டத்திற்குக் கூடுதல் ஒதுக்கீடு மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கிக்கு நிதி வழங்குவது, இணையமயமாக்குவது என்ற அறிவிப்பெல்லாம் உரம், பூச்சிமருந்து விற்கும் கார்ப்பரேட்கள் மற்றும் கணினித் தொழிற்சாலைகளுக்கே பயன்படும். விவசாயிகளுக்குப் பயன்படாது.

நீர்ப்பாசனத் திட்டத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் 5 லட்சம் குட்டைகள் அமைக்கப்போவதாக அருண்ஜேட்லி பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். ஆனால் அதற்காக 5-ரூபாய் கூட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. வெற்று அறிவிப்புதான். எனவே இந்த நிதிநிலை அறிக்கை விவசாயத்துறை சந்திக்கும் நெருக்கடிகளுக்கோ, விவசாயிகள் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்துவதற்கோ எள்முனை அளவுகூட உதவப் போவதில்லை.
“உழவன் சேற்றில் கால்வைத்தால்தான் நாம் சோற்றில் கைவைக்க முடியும்” என்பது காலங்காலமாக தமிழ்நாட்டில் நிலவிவரும் வழக்கு மொழி.

“உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது
 எழுவாரை எல்லாம் பொறுத்து”

என்பது வள்ளுவர் வாக்கு. அதாவது பிற தொழில்கள் புரிவோர் அனைவரையும் தாங்குவதால் உழவுத்தொழில் செய்வோர் உலகத்தாருக்கு அச்சாணி போன்றவர்கள் என்கிறார் திருவள்ளுவர்.

அப்படிப்பட்ட பெருமைப்படைத்த விவசாயிகள் கடந்த 20 ஆண்டுகளில் நாடு முழுவதும் 4 லட்சம் பேர் தற்கொலை செய்துகொண்ட துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சமீபத்தில் நிலவும் கடும் வறட்சியினால் தாங்கள் வளர்த்தப் பயிர், தங்கள் கண்ணெதிரேயே கருகிக் கொண்டிருப்பதைக் காணமுடியாமலும், கடன் தொல்லையாலும் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் இவ்வாறு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமையைக் கண்டு உச்சநீதிமன்றம் அதிர்ச்சியைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஒரு வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு “விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் என்ன கொள்கையை வைத்திருக்கிறீர்கள்” என்று கேட்கிறார்கள்.

“விவசாயிகளின் தற்கொலைக்கு முக்கியக் காரணம், பயிர்கள் கருகிப் போவதும், கடன் தொல்லையும் என்று தெளிவாகத் தெரிகிறது. இத்தகைய தற்கொலைகள் மனித உரிமை விவகாரம். நாட்டுக்கே உணவளிக்கும் விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுப்பதற்கு அரசாங்கம் இன்னமும் ஏன் ஒரு தேசியக் கொள்கையை வகுக்கவில்லை? இயற்கைப் பேரிடர் நேரங்களில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஒரு கொள்கை வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. ஆனால் உச்சநீதிமன்றமும் கூட பயிர்கள் கருகிப் போவதற்கும், விவசாயிகளின் கடன் தொல்லைகளுக்கும் காரணம் என்ன என்று கேட்கத் தவறிவிட்டது. இந்திய அரசும் ஆளும் வர்க்கங்களும் கடைப்பிடித்து வரும் புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் கார்ப்பரேட் வேளாண் கொள்கைகளே இவை அனைத்திற்கும் காரணமாகும். உண்மையில் மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடிக்கும் புதியகாலனிய கார்ப்பரேட் விவசாயக் கொள்கைகளை ஒழிக்காமல் விவசாய நெருக்கடியும் தீராது, தற்கொலைகளும் ஒழியாது.

 Ø வேளாண்மைத் துறைக்கு அரசாங்க முதலீடு குறைந்து வருவது, விவசாயிகளுக்கு வங்கிக்கடன் குறைந்து கந்துவட்டிக் கடனில் மூழ்குவது;
 Ø வேளாண்மைத் துறைக்கு அரசாங்கம் அளித்துவந்த மானியங்களை வெட்டியதால் வேளாண் இடுபொருட்களின் விலைகள் (உரம், பூச்சிமருந்து, விதைகள்) உயர்ந்து கொண்டே போவது;
 Ø வேளாண் விளைபொருட்களின் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்கி, சுங்க வரிகளைக் குறைத்து ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து வேளாண் பொருட்களை இந்தியச் சந்தையில் கொட்டிக்குவிப்பதால் விவசாயிகளின் விளைபொருளுக்கு விலை குறைந்துபோவது;
 Ø ஆதார விலையின் அடிப்படையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதைச் சீரழித்து - உற்பத்தியாளர்களையும் நுகர்வோரையும் சந்தை சக்திகளின் வர்த்தகச் சூதாட்டத்தில் தள்ளுவது;
 Ø விவசாயிகள் பணப் பயிர் உற்பத்திக்கு மாறுவதால் விவசாயிகளின் குடும்பத்திற்கான உணவுப் பாதுகாப்பு அழிவதுடன், பல பகுதிகளில் நிலத்தடி நீர் வற்றிச் சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுவது;
Ø விவசாயிகளின் வருமானத்தைவிட செலவு அதிகரித்து சொத்துகளை விற்பது, கடன்படுவது, அடகு வைப்பது, விவசாயிகள் நிலத்தைவிட்டு வெளியேறுவது அதிகரித்து வருவது; கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டு மாள்வது தொடர்கதையாகத் தொடர்கிறது.

எனவே புதிய காலனிய கார்ப்பரேட் வேளாண்மைக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்திக் கொண்டே விவசாயிகளுக்கு சலுகை என்று ஏமாற்றும் இந்தப் பட்ஜெட்டால் விவசாய நெருக்கடியும் தீராது. விவசாயிகளின் தற்கொலைகளும் ஒழியாது.

உண்மையில் இந்த பட்ஜெட்டால் பயனடையப் போவது யார்? பாதிக்கப்படப் போவது யார்?

குறைந்த விலையிலான குடியிருப்புகள் கட்டித் தருவதால் ரியல் எஸ்டேட் துறைக்குக் கிடைத்துள்ள அந்தஸ்து மூலம் குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கும். 2022ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற அரசின் இலக்கு, ரியல் எஸ்டேட்காரர்களுக்கான திட்டமே. இதன் மூலம் குறைந்த விலைக் குடியிருப்புகளை உருவாக்கும் மகேந்திரா லைவ்ஸ்பேஸ், ஆஷியானா ஹவுசிங், டாடா ஹவுசிங், வேல்யூ மற்றும் பட்ஜெட் ஹவுசிங் கார்ப்பரேஷன் போன்ற நிறுவனங்களுக்கு இது சாதகமானதாகும். நீண்டகால மூலதன ஆதார வரிவிதிப்பானது சொத்து வாங்கிய இரண்டாம் ஆண்டிலிருந்து கணக்கிடப்படும். இது முன்னர் மூன்று ஆண்டாக இருந்தது. இது வீடு விற்பனையை ஊக்குவிக்கும். டி.எல்.எப்., ஓபராய் ரியால்டி, கோத்ராஜ் பிராப்பர்ட்டீஸ், பிரிஸ்டீஜ் எஸ்டேட் போன்ற நிறுவனங்களுக்கு இது சாதகமான அம்சமாகும்.

கட்டமைப்புத் துறைக்கு (Infrastructure) ஜேட்லி தனது பட்ஜெட்டில் ரூ.64,000 கோடியை ஒதுக்கியுள்ளார். தேசிய மற்றும் மாநில சாலைகளுக்கு இது ஒதுக்கப்பட்டுள்ளது. இது கட்டுமான நிறுவனங்களை ஊக்குவிப்பதாக இருக்கும். அத்துடன் சுற்றுலா மற்றும் ரியல் எஸ்டேட் துறைகள் போன்ற ஊகவாணிபத்தையே ஊக்குவிக்கும்.

தனிநபர் வருமான வரியில் 5 லட்சம் வரையிலான வருவாய்க்கு 10 சதவீதம் வரிச்சலுகை அளிப்பதால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். இது ஐ.டி.சி., இந்துஸ்தான் லீவர், கோத்ராஜ் இண்டஸ்டிரீஸ், மாரிகோ லிமிட்டெட், டாபர் இந்தியா போன்ற நிறுவனங்களுக்கு ஆதாயமாக அமையும்.

திரவ எரிவாயு (எல்.என்.ஜி.) இறக்குமதிக்கான சுங்கவரி 2.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் உர ஆலைகள், பெட்ரோநெட், கெயில் இந்தியா போன்ற நிறுவனங்கள் ஆதாயமடையும்.

பாதிக்கப்படும் நிறுவனங்கள்

மோட்டார் வாகனத் தொழிற்சாலைகள் கடுமையாகப் பாதிக்கும். பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு எவ்வித சலுகையும் இல்லை. ரூ.3,00,000 வரையிலான ரொக்கப் பரிவர்த்தனை வரம்பு, கார் விற்பனையை பெரிதும் பாதிக்கும். ஆட்டோ மொபைல் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிக்கான வரிச் சலுகை கிடைக்கும் என இந்தத் துறை எதிர்பார்த்தது. ஜேட்லியின் பட்ஜெட் டாட்டா மோட்டார்ஸ், மாருதி சுசிகி, மஹேந்திரா அண்ட் மஹேந்திரா மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களான தரகு முதலாளிகளையும் கூட கடுமையாகப் பாதிக்கும். ஏற்கெனவே டாட்டா மோட்டார்சின் 2016-17 ஆண்டில் லாபம் 96 சதவீதம் வீழ்ச்சியடைந்துவிட்டது. எனவே இத்துறை கடுமையாகப் பாதிக்கப்படும். அதனால் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வும் பாதிக்கப்படும்.

மின்னணுத் துறைகளுக்கு குறிப்பாக பிரிண்டட் சர்கியூட் போர்டுகளுக்கு கூடுதலாக 2 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தியில் 50 சதவீதம் சர்க்யூட் போர்டில்தான் உள்ளது. எனவே இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் மொபைல் ஃபோன்களின் விலை உயரும். உள் நாட்டுத் தொழில்கள் முடங்கும். வேலையின்மை பெருகும்.

சீரழிக்கப்படும் சமூகநலத்துறைகள்

இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்திற்கும், கல்வி, மருத்துவம் சுகாதாரத்திற்கும் அதிக நிதி ஒதுக்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் இத்துறைக்கான ஒதுக்கீடுகள் குறைந்து, அனைத்தும் தனியார்மயம், வணிகமயமாக்கப்படுவது தீவிரப்படுத்தப்படுகிறது.

மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு இவ்வாண்டு பட்ஜெட்டில் ரூ.48,000 கோடி ஒதுக்கிவிட்டதாக மோடி கும்பல் தம்பட்டம் அடிக்கிறது. ஆனால் சென்ற ஆண்டைவிட வெறும் ரூ.500 கோடி மட்டுமே கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்ற ஆண்டு ஊதியம் வழங்காமல் நின்று போன நிலுவைத்தொகையே ரூ.3,000 கோடி பாக்கி உள்ளது. எனவே அதைக் கழித்துவிட்டால் சென்ற ஆண்டை விட இவ்வாண்டு ஒதுக்கீடு ரூ.2500 கோடி குறைவுதான். அதே சமயத்தில் ஊதியத்தில் ஏற்படும் உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வுகள் காரணமாக வேலை நாட்கள் குறைந்து போகும். மேலும் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் அரசாங்கம் வைத்துள்ள பாக்கித் தொகையைத் தீர்க்கவும், இத்திட்டத்தை முறையாகச் செயல்படுத்தவும் இத்திட்டத்திற்கு ரூ.80,000 கோடி தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதில் பாதி நிதிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. பணமதிப்பு செல்லாது என்ற அறிவிப்பால் கிராமப்புறங்களில் வேலையின்மை பெருகிவரும் சூழலில் இந்த நிதி ஒதுக்கீடு கிராமப்புற வேலையின்மைக்குத் தீர்வாகாது. ஆண்டுக்குப் பத்து லட்சம் வேலை வாய்ப்பு என்ற மோடியின் வாக்குறுதி காற்றோடு போய்விட்டது. வேலையின்மை பெருகிக் கொண்டே போகிறது.

இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில் சமூக நலத்திட்டங்களுக்கான - அதாவது கல்வி, மருத்துவம், சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடுகளும் - பணவீக்கத்தைக் கணக்கிலெடுத்துக்கொண்டு பார்க்கும்போது குறைந்து போய்விட்டது. சுகாதாரத்துறைக்கு சற்றுக் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் பள்ளிக்கல்விக்கான நிதி ஒதுக்கீடு 2016-17ல் 2.2 சதவீதமாகக் இருந்தது. 2017-18ல் 2.16 சதவீதமாக குறைந்துவிட்டது.

சுகாதாரத்துறைக்கு 22 சதவீதமாக அதிகரித்து ரூ.50,281 கோடியாக நிதி ஒதுக்கினாலும், 2015 ஆம் ஆண்டு இந்திய அரசு அறிவித்த “சுகாதாரக் கொள்கைத் திட்டத்தை” நிறைவேற்ற இந்த நிதி போதாது. அதற்கு ஒட்டுமொத்த உற்பத்தியில் (GDP) 4.5 சதவீதம் தேவைப்படுகிறது. ஆனால் 2016-17இல் 0.26 சதவீதமாக இருந்ததை இவ்வாண்டு 0.3 சதவீதமாக உயர்த்தியுள்ளனர் அவ்வளவுதான். இது உண்மையான தேவையில் 10 மடங்கு குறைவாகும். போதுமான மருத்துவர்கள், மருந்துகள் மற்றும் ஊழியர்கள் பற்றாக் குறையால் சுகாதாரத்துறை மிகவும் சீரழிந்து வருகிறது. தாய் சேய் மரணத்தில் இந்தியா உலகில் மிகவும் முன்னணியில் இருக்கிறது. கார்ப்பரேட்களின் சொத்துக்கள் குவிப்பதில் உலகின் நம்பர் ஒன் நாடுகளில் ஒன்றாகத் திகழும் இந்தியா, மனிதவள மேம்பாட்டில் உலகின் 188 நாடுகளில் 131வது இடத்தில் உள்ளது. இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தானையும் விட இந்தியா பின் தங்கி உள்ளது.

அனைவருக்கும் கல்வித்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு இவ்வாண்டு பட்ஜெட்டில் வெறும் ரூ.1000 கோடிதான் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ரூ.55,000 கோடி ஒதுக்க வேண்டும் என்று கோரியது. ஆனால் அதில் பாதி ரூ.25,500 கோடிதான் பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது.

2014ஆம் ஆண்டு மோடி அரசாங்கம் பதவியேற்ற பின்பு பள்ளிக்கல்வியிலிருந்து - உயர்கல்விக்கும், திறன் மேம்பாட்டிற்கும் தனது முன்னுரிமையை மாற்றிக் கொண்டது. ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்விக்கு நிதியைத் தாராளமாக ஒதுக்கிவிட்டு, அடிப்படைக் கல்வியைப் புறக்கணிக்கிறது. ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தனியார்மயமாக்கி - வணிகமயமாக்குவதை தீவிரப்படுத்துகிறது. ஏழைகளுக்கு கல்வி எட்டாக்கனியாக மாறிவருகிறது.

நியாய விலைக் கடைகளுக்கு மூடுவிழா

மத்திய அரசாங்கம் உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்ற பேரில் அனைவருக்கும் நியாய விலைக் கடைகள் மூலம் உணவு வழங்குதல் என்பதற்கு மாறாக ஏழைகளுக்கு மட்டுமே என்று கூறி 60 சதவீதம் பேரை உணவுப்பாதுகாப்பிலிருந்து வெளியே தள்ளுகிறது. குடும்ப அட்டையில் உள்ள நபர் ஒருவர் வருமான வரி செலுத்தினாலோ, தொழில்வரி செலுத்துபவராக இருந்தாலோ, கிராமங்களில் 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளவர்கள், மத்திய, மாநில நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சிகளில் பணிபுரிபவர்கள், 4 சக்கர வாகனங்கள் வணிக நோக்கத்தில் வைத்திருப்பவர்கள், குளிர்சாதனக் கருவி உள்ளவர்கள், 3 அல்லது 4 அறைகளைக் கொண்ட கான்கிரீட் வீடு உள்ளவர்கள், குடும்ப வருமானம் 1 லட்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு இனிமேல் ரேஷன் பொருட்கள் கிடைக்காது. மேலும் மோடி அரசாங்கம் ஆதார் அட்டையையும் உணவு வழங்குதலையும் இணைத்து - உணவுப் பொருட்களை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்குவதைக் கைவிட்டு நேரடியாக வங்கிகள் மூலம் பணம் செலுத்தும் திட்டத்தைத் துவக்கிவிட்டது. உடனடியாக யூனியன் பிரதேசங்களில் அதைத் துவக்கப்போவதாக இந்தப் பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இவ்வாறு நியாய விலைக் கடைகளுக்கு மூடுவிழாவை மோடி கும்பல் துவக்கிவிட்டது.

இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட தமிழகம் புறக்கணிப்பு

இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில் தேசியப் பேரிடர் மீட்பு நிதிக்கு மிகக் குறைவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு சுமார் 18 சதவீதம் அதாவது ரூ.1,550 கோடி மட்டுமே கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகம் மட்டுமே தனது புயல் நிவாரணத் தொகையாக ரூ.22,000 கோடி கோரியுள்ளது. அதேபோல் இத்தகைய பேரழிவுகளுக்கு மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு 2016-17ஐ விட இவ்வாண்டு குறைக்கப்பட்டுவிட்டது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 4 மாநிலங்களாவது வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்படுகிறன. ஆனால் நாடு முழுவதற்கும் மத்திய அரசு ஒதுக்கியுள்ள ரூ.1,550 கோடி மிகமிகக் குறைவாகும்.

2015ஆம் ஆண்டின் சென்னை பெருவெள்ளத்திற்குப் பின்பு தமிழகம் மத்திய அரசிடம் ரூ.20,000 கோடி கோரியது. ஆனால் தேசியப் பேரிடர் நிதியத்திற்கு மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட மொத்த நிதியோ வெறும் ரூ..10,890 கோடிதான். எனவே வறட்சி நிவாரணமோ, வெள்ள நிவாரணமோ தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு போதுமான நிதியை வழங்கப்போவதில்லை. வறட்சி, வெள்ள நிவாரணங்களை எதிர்பார்த்து நிற்கின்ற பல கோடி மக்களுக்கு மோடி கும்பல் பட்டைநாமம் போட்டுவிட்டது.

இவ்வாறு மோடி கும்பல் இவ்வாண்டு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையானது நாட்டை மென்மேலும் அமெரிக்காவின் புதியகாலனியாக மாற்றுவதுடன், அரசியல் பொருளாதார நெருக்கடிகளை மக்கள் மீது திணிக்கிறது. இத்தகைய சூழலில் மோடி கும்பலின் தேசவிரோத, மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்துப் போராடும் மக்கள் மீது இந்துத்துவப் பாசிச ஆட்சியைக் கட்டவிழ்த்து விடுகிறது. மக்களை மதரீதியாக, சாதி ரீதியாகப் பிளவுபடுத்துகிறது.

வளர்ந்துவரும் இந்துத்துவப் பாசிசம்

மோடி கும்பல் அமல் படுத்திவரும் புதியகாலனிய புதிய தாராளக்கொள்கைகள்; அந்நிய மூலதன மேம்பாட்டு வாரியத்தைக் கலைத்து அனைத்துத் தடைகளையும் அகற்றல்; பொதுத் துறைகள் அனைத்தையும் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்களுக்குத் தாரைவார்த்தல்; அரைகுறையான கூட்டாட்சி கோட்பாடுகளையும் ஒழித்து மாநிலங்களின் உரிமைகளைப் பறித்தல்; மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சமூக நலத்திட்டங்களைச் சீரழித்தல்; தொழிலாளர் சட்டங்களைத் திருத்துதல் போன்ற தேசவிரோத, மக்கள் விரோதத் திட்டங்கள் அனைத்தும் நாட்டில் நிலவும் அனைத்து முரண்பாடுகளையும் தீவிரப்படுத்தி வருகின்றன. ஆளும் தரகுமுதலாளித்துவ வர்க்கங்களுக்கிடையிலேயே முரண்பாடுகள் தீவிரமடைகின்றன.

மோடி கும்பல் நாட்டின் அரசியல் நிர்ணயச் சட்டத்திற்கு எதிராகவே அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குச் சேவை செய்யும் புதியகாலனியக் கொள்கைகளை அமல்படுத்தி வருகிறது. நரசிம்மராவ் ஆட்சி முதல், நரேந்திர மோடி ஆட்சி வரை அனைத்து ஆட்சிகளும் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராகவே மேற்கண்ட தேசவிரோத, மக்கள் விரோதக் கொள்கைகளை அமல்படுத்தி வருகின்றன. இந்திய அரசியல் சட்டம் கீன்சிய முதலாளித்துவச் சீர்திருத்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் சமூக நல அரசு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். அந்நிய மூலதனத்தை முழுவதுமாகத் திறந்துவிடுவது, பொதுத்துறைகளைக் கலைப்பது, கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற மக்கள் நல சமூகநலத் திட்டங்களைத் தனியார் மயமாக்கி வணிகமயமாக்குவது, மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து மத்தியில் குவிப்பது என்பவை அரசியல் சட்டத்திற்கு விரோதமானதும் பெயரளவிலான மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பது பெயரளவிலான கூட்டாட்சி முறைகளுக்கு எதிரானதுமாகும். ஆனால் நீதிமன்றங்களும் கூட அரசியல் சட்டத்தின் அடிப்படைகளைத் தகர்த்து புதியகாலனியத்திற்கு சேவை செய்வதற்கு ஒத்துழைப்பு தருகின்றன. இவ்வாறு மோடி கும்பல் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக, எதேச்சதிகாரமான முறையில் புதிய காலனிய, புதிய தாராளக் கொள்கைகளை அமல்படுத்துகிறது.

மோடி கும்பல் நாடாளுமன்ற முறைகளையும், அதன் நிறுவனங்களையும் மதிக்காமல் எதேச்சதிகாரமாகவே தேசவிரோத மக்கள் விரோதக் கொள்கைகளைச் சட்டமாக்குகிறது. பாஜக-வின் தலைமையிலான மத்திய அரசாங்கத்திற்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் அதன் தேசவிரோத மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றவும், தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளவும் “நிதி சட்டமுன்வடிவு” (Finance Bill) என்ற தந்திரத்தை மேற்கொள்கிறது. ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக குடும்ப அட்டைமுதல் ஓய்வூதியம் பெறுவதுவரை ஆதாரை கட்டாயமாக்கும் சட்டத்தை மக்களவை சபாநாயகரே நிதிச் சட்ட முன்வடிவு மூலம் சட்டமாக்கிக் கொண்டார். நிதிச் சட்ட முடிவு என்பது மாநிலங்களவையால் திருத்த முடியாததாகும். எனவே இந்த வழியில் அனைத்து சட்டங்களையும் நிறைவேற்றிக் கொள்வது என மோடி கும்பல் தீர்மானித்து விட்டது.

மேலும், அந்நிய நாட்டுத் தொண்டு நிறுவனங்களிடமிருந்து நன்கொடை வாங்குவது குறித்த சட்டம்; இந்தப் பட்ஜெட்டில் இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், வருமானவரி சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் போன்றவைகளை நிதிச் சட்ட முன்வடிவு மூலம் கொண்டு வர இருக்கிறது. இத்திருத்தங்கள் தேர்தல் பத்திரங்கள் வெளியிடுவதற்கு வகைசெய்கின்றன. இது எந்தவிதத்திலும் நாட்டின் வரிகளுடனோ, தொகுப்பு நிதியுடனோ சம்பந்தப்பட்டதல்ல. அத்துடன் இந்தப் பட்ஜெட் கூட்டத் தொடரில் பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்த (GST) மூன்று சட்டங்கள் குறித்து மாநிலங்களவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. ஆனால், மோடி கும்பல் இதனையும் நிதிச் சட்ட முன்வடிவாக நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு மோடி கும்பல் நாடாளுமன்ற முறைகளைப் புறக்கணித்து எதேச்சதிகாரமாகவே செயல்படுகிறது.

மோடி கும்பலின் தேச விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து நாடு முழுவதும் மக்கள் கிளர்ச்சி வெடித்துக் கிளம்புகின்றன. பாஜகவைச் சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அமைப்புகள் ஆட்சிக்கு எதிராகப் போராடுகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் மத்தியிலும் மோதல்கள் உருவாகி உள்ளன. இத்தகைய சூழலில் மோடி கும்பல் ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள் மூலம் இந்து மதவெறியைத் தூண்டி மக்களை மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் மோதவிடுவதன் மூலம் தனது ஆட்சிக்கு எதிரான போராட்டங்களைத் திசைதிருப்பியும், மக்களைப் பிளவுபடுத்தியும் துரோகமிழைத்து வருகிறது.

நாட்டில் வறுமை, வேலையின்மை, வறட்சி, விவசாயிகளின் தற்கொலைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தீர்வுகாணப்படாமல் தலைவிரித்தாடுகின்றன. வறுமையை ஒழிப்பது, வேலைவாய்ப்பைப் பெருக்குவது, விவசாயிகளின் தற்கொலைகளுக்கு முடிவுகட்டுவதை அரசு செய்யவேண்டும். ஆனால், பாஜகவின் மோடி ஆட்சியோ இராமர் கோவில் கட்டுவது, மாட்டுக்கறிக்குத் தடை, லவ் ஜிகாத்தை எதிர்ப்பது, முத்தலாக்கை எதிர்த்து பொது சிவில் சட்டம் என சிறுபான்மை மக்கள் மீது மதக் கலவரங்களைத் திணிக்கிறது. மோடி கும்பல் புதிய காலனியத்திற்குச் சேவை செய்வதற்காக நாட்டில் இந்துத்துவப் பாசிசத்தைக் கட்டியமைக்கக் கடும் முயற்சிகளைச் செய்கிறது. இந்து மதவாதப் பாசிசம் எனும் சம்மட்டி கொண்டு மக்கள் மீது கடும் தாக்குதலைத் தொடுத்துள்ளது.

எனவே, தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் உள்ளிட்ட தேசபக்த ஜனநாயகச் சக்திகள் அனைவரும் மோடி கும்பலின் புதிய தாராளக் கொள்கைகளை எதிர்த்தும், தேச விரோத, மக்கள் விரோத நிதி நிலை அறிக்கையை எதிர்த்தும், இந்துத்துவப் பாசிசத்தை எதிர்த்தும் கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரளுமாறு அறை கூவி அழைக்கிறோம். அணிதிரளுமாறு அறைகூவி அழைக்கிறோம்.

é மோடி கும்பலின் தேச விரோத, மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையை எதிர்த்துப் போராடுவோம்!
é 2017-2018 நிதிநிலை அறிக்கை, அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தைக் கலைப்பதால், அந்நிய மூலதனத்திற்கும் புதிய காலனியத்திற்கும் தடைகள் அகற்றப்பட்டு, நாடு புதிய கட்டத்திற்குள் நுழைகிறது!
é பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்களின் நலன்களுக்கு சேவை செய்வதே நிதிநிலை அறிக்கை!
é மக்கள் மீது சுமைகளை சுமத்துகிறது! விவசாயிகள் தற்கொலை, சில்லறை வணிகம் சிறுதொழில் அழிவுக்குத் தீர்வு இல்லை!
é பணமதிப்பு நீக்கத்தால் தொழில்கள் முடக்கம்! வேலையின்மை பெருக்கம்!
é தீவிர வலதுசாரி பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்து மதவாத பாசிச சம்மட்டியால் மக்களைத் தாக்கும் மோடி ஆட்சியை எதிர்த்து அணிதிரள்வோம்!

          மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் – தமிழ்நாடு    
பிப்ரவரி, 2017

No comments:

Post a Comment

விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.