கார்ப்பரேட் நலனுக்காக காவிரியில் தமிழகத்திற்
உரிய நீரின் அளவைக் குறைத்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டிப்போம்!
அன்பார்ந்த
உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!
கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி காவிரி
நடுவர்மன்ற இறுதி தீர்ப்பின் மேல்முறையீட்டு வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்த தனது
தீர்ப்பில் தமிழகத்திற்கான 14.75 டி.எம்.சி தண்ணீரைப் பறித்து பெங்களூர் குடிநீர் என்று
கூறி கர்நாடகத்திற்குக் கொடுத்து தமிழகத்தை வஞ்சித்துவிட்டது. கர்நாடக அரசாங்கமோ காவிரி
மேலாண்மை வாரியம் அமைக்கும் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை ஏற்க மறுத்து காவிரி முழுவதும்
தங்களுக்கே சொந்தம் என்று இனவெறியோடு செயல்படுகிறது. உச்சநீதிமன்றமோ, ஹெல்சிங்கி கோட்பாட்டின்
அடிப்படையில் காவிரிபாயும் மாநிலங்களுக்கு சமபங்கீடு, மேலாண்மை வாரியம் என்ற தீர்ப்பை
அளித்துவிட்டு, கேம்பியோன் விதிகள் மற்றும் பெர்லின் விதிகளைக் காட்டி காவிரி நான்கு
மாநிலங்களின் சொத்து என்பதற்குப் பதிலாக தேசிய சொத்து என்று அறிவித்து பன்னாட்டு, உள்நாட்டு
கார்ப்பரேட் நலன்களுக்கு காவிரி நீரை தாரை வார்த்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த
தீர்ப்பு தமிழகத்தை மட்டுமல்ல இந்தியா முழுவதையும் தண்ணீர் பிரச்சினையில் ஒரு கடும்
நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
தமிழகத்தை
வஞ்சிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு!
காவிரி நடுவர்மன்றம் ஹெல்சிங்கி
கோட்பாட்டின் அடிப்படையில் நிலத்தடி நீரை கணக்கில் கொள்ளவில்லை என்றும், காவிரி பாயும்
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீர் 20 டி.எம்.சி நீரையும் கணக்கில்
கொண்டு பெங்களூரு குடிதண்ணீரின் தேவைக்காக என்று கூறி தமிழகத்தின் 14.75 டி.எம்.சி
நீரை எடுத்து கர்நாடகாவுக்கு கொடுத்துள்ளது உச்சநீதிமன்றம்.
தமிழகத்தின் நிலத்தடி நீரைக்
கணக்கில் கொண்டு தீர்ப்பு எழுதியதாகக் கூறும் உச்சநீதிமன்றம் கர்நாடகத்தில் காவிரிப்
பாசனப் பகுதியில் உள்ள நிலத்தடி நீரை கணக்கில் கொள்ளவில்லை. எனவே உச்சநீதிமன்றத்தின்
இந்தத் தீர்ப்பு ஒருதலைபட்சமான பாரபட்சமான தீர்ப்பேயாகும்.
அடுத்து தமிழகத்தின் காவிரிப்
பாசன டெல்டா மாவட்டங்களில் நிலத்தடிநீர் 20 டி.எம்.சி இருக்கிறது என்ற உச்சநீதிமன்றத்தின்
முடிவும் உண்மைக்கு மாறான ஆதாரமற்ற முடிவாகும். உச்சநீதிமன்றம் இம்முடிவை 1974-ஆம்
ஆண்டு ஆய்வை அடிப்படையாகக் கொண்டுள்ளது. உண்மையில் அவ்வாண்டுக்குப் பிறகு கர்நாடகா
தமிழகத்திற்கு உரிய தண்ணீரை தரமறுத்ததால் அகண்ட காவிரி வறண்ட காவிரியாக மாறி நிலத்தடி
நீர் அற்றுவிட்டது.
2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொதுப்பணித்
துறை மற்றும் மத்திய நிலத்தடி நீர் வாரியமும் சேர்ந்து ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ள
‘இந்தியாவின் மாறுகின்ற நிலத்தடி நீர்வளங்கள்’ என்ற அறிக்கை காவிரி பாசன மாவட்டங்களில்
நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படுவதாக கூறுகிறது. நிலத்தடி நீரில் கரூர் மாவட்டத்தில்
97% -ம், நாகப்பட்டினத்தில் 101%-ம், தஞ்சாவூர் 102%-ம், திருவாருர் 70%-ம், திருச்சி
மாவட்டத்தில் 81%-ம் உறிஞ்சப்படுவதாகவும், இதன் காரணமாக 35 வட்டங்களில் நிலத்தடி நீர்
உப்புநீராக மாறிவிட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. வேதாரண்யம்
பகுதியில் விவசாயிகள் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி விவசாயம் செய்வதாகக்
கண்ணீர் வடிக்கின்றனர்.
அடுத்து, காவிரி நடுவர்மன்றத்தின்
முன்பு கர்நாடக அரசின் சார்பில் முதல் சாட்சியாக விசாரிக்கப்பட்ட நிலத்தடி நீர் வல்லுனர்
கே.ஆர்.கர்நாத் காவிரியில் “நிலத்தடி நீரைக் கணக்கில் கொள்ளக் கூடாது, காவிரிப் படுகையில்
உள்ள நிலத்தடி நீரை இரண்டாம் முறையாகக் கணக்கிடக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நர்மதா நதிநீர் பங்கீட்டு தீர்ப்பாணையமும், கிருஷ்ணா நதிநீர்ப் பங்கீட்டு தீர்ப்பாணையமும்
நிலத்தடி நீரை கணக்கில் கொள்ளவில்லை. காவிரியில் மட்டும் அதுவும் தமிழகத்தின் வடிகால்
பகுதியை மட்டும் உச்சநீதிமன்றம் கணக்கில் கொண்டதேன்?
கார்ப்பரேட்
நலனுக்காக தமிழகத்தின் தண்ணீர் பறிப்பு
உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த
பெங்களூருவின் குடிநீர்த் தேவை என்று கூறி தமிழகத்தின் விவசாயத்திற்கான தண்ணீரைப் பறித்ததை
உச்சநீதிமன்றம் நியாயப்படுத்துகிறது. குடிநீர் பிரச்சினையே முதன்மையானது என்று கூறி
விவசாயத்தை புறக்கணிக்கிறது.மேலும் பெங்களூருவின் குடிநீருக்காக உருகும் உச்ச நீதிமன்றம்
தமிழகத்தின் குடிநீர்த் தேவையை கணக்கில் எடுக்க மறுப்பது ஏன்? தமிழகம் ஒக்கனக்கல் குடிநீர்த்
திட்டம் முதல் சென்னை உள்ளிட்டு இராமநாதபுரம், பரமக்குடி வரை குடிநீருக்காக காவிரியைத்தான்
நம்பியுள்ளது என்ற உண்மையைக் காண மறுப்பது தமிழகத்துக்கு செய்துள்ள துரோகமே.
மத்திய மாநில அரசுகள் குறிப்பாக
மோடி அரசாங்கம் பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் நலன்களுக்காக “ஸ்மார்ட் சிட்டி” என்ற
பேரில் விவாசாயத்தையும் கிராமப்புறங்களையும் புறக்கணிக்கும் திட்டங்களுக்கு உச்ச நீதிமன்றமும்
துணைபோவதன் விளைவே இந்தத் தீர்ப்பு. ஆட்டோ மொபைல், மின்னணு தொழிற்சாலைகள் உள்ளிட்டு
பெருமளவிலான கார்ப்பரேட்டுக்கள் பெங்களூரில் தொழிற்சாலைகளை நிறுவி தண்ணீரை ஏராளமாக
உபயோகப் படுத்துகின்றன. பெங்களூரு நகரின் குடிநீர் வினியோகம் கூட சூயெஸ் என்ற பன்னாட்டுக்
கம்பெனிதான் நடத்தி கொள்ளை அடிக்கிறது. ஆனால், பெங்களூரு மொத்த கர்நாடகமும் பயன்படுத்திடும்
குடிநீரில் பாதிநீரை பயன்படுத்துகிறது. நாட்டிலேயே தனது இருப்புக்கு அதிகமாக அதீதமாக
நீரைப் பயன்படுத்தும் நகரம் பெங்களூரு. ஆனால் அதில் பாதி நீரை ஊதாரித்தனமாக வீணடிக்கிறது.
1247 பூங்காக்கள், 8 பெரிய கோல்ஃப் மைதானங்கள், ஷாப்பிங் மால்கள், குதிரைப்பந்தய மைதானங்கள்,
செயற்கைக் கடல்கள், ஆடம்பர ரிச்சார்ட்டுகள் என குடிநீர் வீணடிக்கப் படுகின்றன. தமிழக
விவசாயத்திற்கான தண்ணீரை எடுத்து இந்த கார்ப்பரேட்டுக்களுக்காகவே தாரைவார்க்கப் பட்டுள்ளது.
மறுபுறம் இத்தீர்ப்பின் மூலம்
காவிரியின் கடைமடைப் பகுதி வறண்டுபோகும் நிலையை உச்சநீதிமன்றம் உருவாக்கியுள்ளது.
14.75 டி.எம்.சி தண்ணீர் பறிக்கப்பட்டதால் காவிரியின் கடைமடைப் பகுதியில் 1 லட்சம்
ஏக்கர் நிலம் ஒரு போக விவசாயமும் இன்றி தரிசாக மாறும். சுமார் 50 லட்சம் வேலை நாட்கள்
இழப்பு ஏற்படும். பல லட்சம் விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நடுத்தெருவில்
நிறுத்தப்படுவர். எனவே உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு உண்மைக்கு மாறான பாரபட்சமான
தீர்ப்பாகும். இந்தத் தீர்ப்பு திருத்தப்பட வேண்டிய தீர்ப்பாகும். இத்தீர்ப்பை எதிர்த்து
நடுவர்மன்ற தீர்ப்பின் அடிப்படையில் 192 டி.எம்.சி நீரைப் பெறுவதற்காகப் போராடுவது
நியாயமானதும் அவசியமானதுமாகும். அதே நேரத்தில் மேல் முறையீடு செய்ய முடியாது என்ற உச்ச
நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஐந்து பேர் கொண்ட அரசியல் சட்ட அமர்வுக்குப் போராட வேண்டுமென
தமிழக அரசைக் கோரவேண்டும்.
கார்ப்பரேட்
நலன்களுக்கான பெர்லின் விதிகளை எதிர்ப்போம் சமபங்கீட்டிற்கான மேலாண்மை வாரியம் அமைக்கப்
போராடுவோம்!
காவிரி மேல்முறையீட்டின் வழக்கின்
தீர்ப்பில் ஹெல்சிங்கி, கேம்பியோன், பெர்லின் விதிகள் போன்ற சர்வதேச விதிகளின்படியும்,
இந்திய அரசாங்கத்தின் 2002 ஆம் ஆண்டின் தேசிய தண்ணீர்க் கொள்கையின் அடிப்படையிலும்
தீர்ப்பளித்துள்ளதாக உச்ச நீதிமன்றம் கூறுகிறது. காவிரியில் கர்நாடகம் பேசி வந்த ஆற்று
நீர் உரிமை முழுவதும் தலைமடைக்கே சொந்தம் என்ற ஹார்மனின் தேசிய இறையாண்மைக் கோட்பாட்டை
மறுத்து, காவிரி அது பாயும் நான்கு மாகாணங்களுக்கும் சமபங்கு என்ற ஹெல்சிங்கி கோட்பாட்டை
அமல்படுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டிய ஒரு தீர்ப்பாகும்.
ஆனால், ஹெல்சிங்கி கோட்பாட்டின்படி
காவிரியில் ஓடிவரும் ஆற்றுநீரில் மரபுரிமை அடிப்படையிலான நீர் உரிமை நாடுகளின் எல்லைதாண்டி
உள்ளது. இந்த உரிமையை காவிரிபாயும் நான்கு மாநிலங்களிலிருந்து பறிக்கின்ற வகையில்
“காவிரி யாருக்கும் சொந்தமில்லை” அது “தேசியச் சொத்து” என்கிறது தீர்ப்பு. இதன் பொருள்
காவிரி இந்திய அரசின் சொத்து என்பதாகும். அதாவது மாநிலங்களின் அதிகாரப் பட்டியலிலிருந்த
காவிரியை இந்திய அரசின் பட்டியலில் உச்சநீதி மன்றம் சேர்க்கிறது. இந்திய அரசாங்கமோ
90 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு ஏகாதிபத்திய உலகமய, தனியார்மயக் கொள்கைகளை அமல்படுத்தி
தண்ணீர்த் துறை உள்ளிட்ட பொதுத் துறைகளை (சேவைத் துறைகளை) பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுக்களிடம்
ஒப்படைத்து வருகிறது. தேசியம் முழுதாக விதேசியமாக மாற்றப்பட்டு வருகிறது. தண்ணீர் வணிகமயமாக்கப்
படுவதோடு ஆறுகள் குளங்கள் கார்ப்பரேட்டுக்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. அத்தகைய தண்ணீர்
தனியார்மயக் கொள்கை அடிப்படையில் தான் ஹெல்சிங்கி கோட்பாடு திருத்தப்பட்டு கேம்பியோன்
மற்றும் பெர்லின் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதற்கு சேவை செய்வதற்காகவே உச்ச நீதிமன்ற
தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
1966-ஆம்
ஆண்டின் ஹெல்சிங்கி கோட்பாடு என்பது ஏகாதிபத்தியவாதிகள் கீன்சிய சமுகநல கோட்பாட்டை
அமல்படுத்தும்போது அதற்கேற்றாற் போல் உருவாக்கப்பட்ட நதிநீர்க் கொள்கையாகும். மக்களுக்கு
நீர் வழங்குவது அரசின் கடமையாக முன்வைக்கப்பட்டது. அதனடிப்படையில்தான் ஹெல்சிங்கியின்
முதல் விதி சர்வதேச அளவில் பாயும் ஆற்றுப்படுகையில் இருக்கும் நாடுகள் தண்ணீரை சமமாகப்
பயன்படுத்துவது (Use) என்று கூறுகிறது. எந்த ஒரு ஆறும் அது பாயும் நாடுகளின் சொத்து என்ற அடிப்படையிலேயே
இந்த விதி உருவாக்கப்பட்டது.
ஆனால் 2000-ஆம் ஆண்டுகளில் உலக
அளவில் தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே போவதும், தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது
என்று கூறி இன்று ஹெல்சிங்கி விதி போதுமானது அல்ல என்று அதன் விதிகள் திருத்தி எழுதப்பட்டன.
தண்ணீரை குறைவாக பயன்படுத்தி அழியாமல் பாதுகாப்பது, சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கு
தண்ணீருக்கு விலை வைக்க வேண்டும் தனியார் பங்கேற்பை ஊக்குவிக்க வேண்டும் என்ற கோட்பாடு
முன்வைக்கப்பட்டது. 2004 பெர்லினில் கூடிய ஐ.நா.வின் ஐ.எல்.ஏ அமைப்பு கூடி புதியச்
சட்டங்களை வகுத்தது. அதுவே பெர்லின் விதி என அழைக்கப்படுகிறது.
பெர்லின்
விதியின் முதலாவது பிரிவு சர்வதேச அளவில் பாயும் ஆற்றுப் படுகையில் உள்ள நீரை நிர்வகிப்பதில்
(Management) சமபங்கு என்று கூறுகிறது. நிர்வகிப்பது என்பது பற்றி விளக்கும்போது வளர்ச்சி,
பயன்பாடு, பாதுகாப்பு, பங்கீடு, ஒழுங்குமுறைப் படுத்துதல், கட்டுப்பாடு செலுத்துதல்
என்று கூறுகிறது. மேலும் பெர்லின் விதி 18.1 மேற்கண்ட பணிகளை மேற்கொள்வதற்கான தண்ணீர்
நிர்வாகத்தில் பொதுமக்கள் (Public) பங்கேற்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பொதுமக்கள் என்ற பேரில்
பெரும் பன்னாட்டு கார்ப்பரேட்டுக்களிடம் ஒப்படைப்பதே அதன் திட்டமாகும். குடிநீர், விவசாயம்
இறுதியாக தொழிற் துறை என்பது மாறி தற்போது தொழிற்துறைக்கு முன்னுரிமை வழங்கப் பட்டுள்ளது.
இதனடிப்படையில்தான் இந்திய அரசின் 2002-ஆம் ஆண்டின் தேசிய நீர்க்கொள்கை உருவாக்கப்பட்டு
இந்திய நாட்டின் வற்றாத ஜீவநதிகள் கார்ப்பரேட்டுக்களின் கொள்ளை லாபத்துக்காக தாரை வார்க்கப்பட்டுள்ளது.
தண்ணீரை தனியார்மயமாக்கி வணிகமயமாக்கி கார்ப்பரேட்டுக்கள் கொள்ளையடிப்பதற்கு சாதகமாகவே
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. அரசு, நீதி, நிர்வாக அமைப்புகள் அனைத்தும்
புதிய காலனிய புதிய தாராளக் கொள்கைகளை அமல்படுத்தும் ஏஜென்சிகளாக மாறிவிட்டன என்பதை
இது காட்டுகிறது.
எனவே தண்ணீரை தனியார்மயமாக்கும்
புதியகாலனிய புதியதாராளக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதோடு தேசிய இனங்களின் சுயநிர்ணய
உரிமை பெறும்போதுதான் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் நதிநீர்ப் பிரச்சினைகளை சுயேச்சையாக
தீர்க்க முடியும். அதனை புரட்சியின் மூலம் அமையும் புதியஜனநாயக அரசு ஒன்றுதான் சாதிக்கும்.
அதற்கான போராட்டத்தை முன்னெடுக்கும் அதே நேரத்தில் உடனடியாக பெர்லின் விதிகள் மற்றும்
இந்திய அரசின் தேசிய நீர்க் கொள்கைகளுக்கு எதிராகப் போராடுவதும் 1966-ஹெல்சிங்கி கோட்பாட்டின்
அடிப்படையில் நடுவர்மன்ற தீர்ப்பின் 192-டி.எம்.சி நீரைப் பெறவும், காவிரி மேலாண்மை
வாரியத்தை உடனே அமைத்திடவும் போராடுவது உடனடி கடமையாகும்.
காவிரி
மேலாண்மை வாரியம் அமைப்பதை எதிர்க்கும் கர்நாடக அரசின் தேசிய இனவெறியை முறியடிப்போம்!
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா
தமிழகத்தின் நீரை பறித்து கர்நாடகாவிடம் ஒப்படைக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக
வரவேற்றுப் பேசினார். ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை
எதிர்ப்பதாகக் கூறுகிறார். முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவருமான தேவகௌடாவோ
மேலாண்மை வாரியம் அமைப்பது கர்நாடகாவின் நலன்களுக்கு எதிரானது என்று கூறுவதோடு அதற்கு
எதிராக கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழைப்புவிடுக்கிறார். கர்நாடகத்தில்
உள்ள நாடாளுமன்றவாத தேசிய ஒருமைப்பாடு என்று ஊளையிடும் அரசியல் கட்சிகளும் காவிரியில்
தமிழகத்தின் உரிமையை மறுக்கின்றன.
கர்நாடக அரசு தொடர்ந்து நடுவர்மன்றம்,
உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை உதாசினப்படுத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும்
இடையிலான நதிநீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் காணப்பட்டுள்ளன. ஆனால் காவிரிப் பிரச்சினைக்குத்
தீர்வுகாண கர்நாடக அரசியல் கட்சிகள் மறுக்கின்றன. மேகதாதுவில் புதிதாக அணைக்கட்டி காவிரியை
முழுதாக எடுத்துக்கொள்ளவும், ஏற்கனவே கூடுதலாக பயன்படுத்தும் நீருக்கு ஆபத்து வரும்
என்பதாலும் நடுவர்மன்றத் தீர்ப்பை ஏற்க மறுக்கின்றன. கன்னட தேசிய இனவெறியைக் கிளப்பி
தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் எதிரான கலகங்களை நடத்துகின்றன. காவிரியைத் தடுத்து
நிறுத்தி தமிழகத்தைப் பாலைவனமாக்க துடிக்கின்றன. சர்வதேச சட்டங்களுக்கும், கூட்டாட்சி
முறைக்கும், ஜனநாயகத்துக்கு எதிராகவும் கன்னட இனவெறியைத் தூண்டுகின்றன. எனவே கன்னட
தேசிய இனவெறியை முறியடித்து காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவதற்கான போராட்டத்தை
முன்னெடுப்பது அவசியமாகும்.
மோடி
அரசின் சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து காவிரி உரிமையை மீட்போம்!
உச்ச நீதிமன்றம் ஆறுவாரக் காலத்திற்குள்
மேலாண்மை வாரியம் அமைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும் என தீர்ப்பளித்த பிறகு
மோடி அரசு அமைதிகாத்தது. மோடி அரசின் நீர்வளத்துறை அமைச்சர் நித்தின் கட்கரியோ மேலாண்மை
வாரியம் அமைப்பது கடினமான பணி என்றும், ஆறுவார காலத்திற்குள் மேலாணமை வாரியம் அமைப்போம்
என்ற வாக்குறுதியை கொடுக்க முடியாது என உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகப் பேசுகிறார்.
மோடியோ தமிழகத்தின் அனைத்துக் கட்சி கூட்ட முடிவின்படி அவரை சந்திக்கவும் மறுத்து நீர்வளத்
துறை மந்திரியை பார்க்க சொல்கிறார். பாராளுமன்றத்தில் தமிழக கட்சிகள் குரல்கொடுத்தப்பின்
மோடி அரசு சற்று அசைகிறது. ஆனால், ஆட்சிக்கு வந்ததிலிருந்தே மோடி அரசாங்கம் காவிரி
பிரச்சினையில் கர்நாடகாவிற்கு சாதகமாகவே செயல்பட்டு வருகிறது. கர்நாடகமும் தமிழகமும்
இரண்டு கண்கள் என்று பேசிக்கொண்டே ஒரு கண்ணில் வெண்ணெயும் மறு கண்ணில் சுண்ணாம்பையும்
வைக்கும் துரோகத்தை செய்கிறது. கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்க கன்னட தேசிய வெறிக்கு
துணைபோகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்றவாத
கட்சிகளும் போராடுவதற்கு அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டியுள்ளன. இக்கட்சிகள் இறுதிவரை
தமிழக நலன்களுக்காக போராடுமா என்பது சந்தேகம்தான். அரசியலில் தோன்றியுள்ள வெற்றிடத்தை
நிரப்ப வந்திருக்கும் வயதான நடிகர்களில், எம்ஜிஆர் ஆட்சி என்று பேசும் ரஜினியோ இப்பிரச்சினை
(செலக்டிவ் அம்னீஷியா) பற்றிப் பேசவே மறுக்கிறார். கமலஹாசனோ பேச்சுவார்த்தை நடத்தி
ரத்தத்தை வாங்கிவருவேன் என்று தப்புத்தாளம் போடுகிறார். நாடாளுமன்றவாத கட்சிகளை நம்ப
முடியாது. நடிகர்களின் கட்சிகளோ ஏமாற்றுத்தனமானது. எனவே மோடி அரசின் அரசியல் சந்தர்ப்பவாதத்தை
எதிர்த்து காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில்
ஓரணியில் திரண்டு போராட அறைகூவி அழைக்கிறோம்.
« கார்ப்பரேட் நலனுக்காககாவிரியில் தமிழகத்திற்குரிய நீரை குறைத்த
உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டிப்போம்!
« நடுவர்மன்ற தீர்ப்பின்படி தண்ணீர் பெறப் போராடுவோம்!
« மத்திய அரசே! காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே
அமை!
« மேலாண்மை வாரியம் அமைப்பதை எதிர்க்கும் கருநாடக
அரசின் தேசிய இனவெறியை எதிர்த்துப்போராடுவோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் – தமிழ்நாடு
மார்ச் 2018
No comments:
Post a Comment
விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.