Friday, October 24, 2014

சொத்துக்குவிப்பு வழக்கில் நீதித்துறை ஜெயா கும்பலை தண்டித்துள்ளதை வரவேற்போம்!


சொத்துக்குவிப்பு வழக்கில் நீதித்துறை ஜெயா கும்பலை தண்டித்துள்ளதை வரவேற்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே ! ஜனநாயகவாதிகளே !

       வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக்குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்குத் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 கோடி அபராதமும் விதித்துள்ளது. இதனால் ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை இழந்ததுடன் பெங்களூரு பரப்பன அக்ராஹர சிறையிலும் அடைக்கப்பட்டார். அத்துடன் அவர் 10 ஆண்டுகள் வரை  தேர்தலில் போட்டியிடவும் முடியாது.

ஜெயா கும்பலின் மீதான குற்றங்கள் நிரூபணம் ஆனது பற்றி நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்கா தனது தீர்ப்பில் பின்வருமாறு கூறுகிறார்:

“66 கோடி ரூபாய் சொத்துக்குவிப்பு வழக்கில் ரூ.53 கோடி (ரு.53,60,49,954) வருமானம் முறைகேடான வழிகளில் சம்பாதிக்கப்பட்டுள்ளது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணம் ஆகியுள்ளது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளவர் (ஜெயலலிதா) பொது ஊழியர் பொறுப்பில் இருந்த காலத்தில் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடைய இந்தச் செயல் ஊழல் தடுப்புச் சட்டம் 13(i)(e)ன் படியும், மற்ற மூன்று குற்றவாளிகளுடன் சேர்ந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ள தால் இந்தியத் தண்டனைச் சட்டம் 120(B)யின் படியும் குற்றமிழைத்துள்ளார். மற்ற மூவரும் முதல் குற்றவாளிக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளதால் இந்தியத் தண்டனைச் சட்டம் 109ன் படி குற்றமாகிறது. எனவே நான்கு பேரும் குற்றவாளிகளே” என்று தீர்ப்பளித்துள்ளார்.

தண்டனை பற்றிக் கூறும் போது:

“அதிகாரமும், சொத்துக்குவிப்பும் சேர்ந்த கலவைதான் இந்த வழக்கின் அடிப்படை. ஜெயலலிதா சம்பந்தப்பட்ட 6 நிறுவனங்களின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 3 ஆயிரம் ஏக்கர் நிலம் மற்றும் இதர சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும். குறுகிய காலத்தில் ஜெயலலிதாவும், இதர குற்றவாளிகளும் செய்துள்ள சதிகள் சொத்துக்களைக் குவிப்பதற்கு ஆட்சி அதிகாரம் எப்படி பயன்படும் என்பதற்கு ஒரு தெளிவான உதாரணம். இவர்கள் செய்த குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனையில் பாதிக்கு மேல் வழங்கத்தக்கவை” என்று கூறி மேலே கூறிய தண்டனைகளை வழங்கியுள்ளார்”.

       ஜெயலலிதா மீது சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு காலங்கடந்த தீர்ப்பு என்ற போதிலும் இது வரவேற்கப்பட வேண்டிய ஒரு தீர்ப்பேயாகும். ஜெயலலிதா இந்த வழக்கை 18 ஆண்டுகள் இழுத்தடித்ததற்குப் பல்வேறு நீதிமன்றங்கள் வளைந்து கொடுத்துத் துணைபோனதால், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாடு மீறப்பட்டு, இறுதியில் தண்டனை கிடைத்துள்ளது. மேலும் உயர், உச்ச நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்து இந்தத் தீர்ப்பும் மாற்றப் படலாம். நீதி மன்றங்கள் மூலம் ஜெயா கும்பலைத் தண்டித்துவிட முடியும் என்பது எளிதல்ல. எப்படி இருப்பினும் தற்போது இந்தியா முழுவதும் மாபெரும் ஊழல்கள் தலைவிரித்தாடும் சூழலில் இத்தகைய தீர்ப்பு, உயர் பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு ஒரு பாடம் என்ற வகையில் நியாயபுத்தி உள்ளவர்கள் அனைவரும் வரவேற்கின்றனர்.

       ஆனால், ஜெயலலிதா நிரபராதி என்றும், கருணாநிதி மற்றும் சுப்பிரமணிய சாமியால் அரசியல் ரீதியில் பழிவாங்கும் நோக்கில் போடப்பட்டதே இந்த வழக்கு என்றும், சிறப்பு நீதிமன்ற நீதிபதி இவர்களின் சதிக்கு உடந்தையாகச் செயல்பட்டு ஜெயலலிதாவைத் தண்டித்துவிட்டார் என்றும் கூறி நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க.வினர் தமிழகத்தில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். ஊழல் வழக்கில் தண்டனை அடைந்ததைத் திசை திருப்ப காவிரிப் பிரச்சினையில் கர்நாடகம் பழிவாங்குகிறது என்று கூறி இரு இனங்களுக்கும் இடையில் மோதலை உருவாக்கு கின்றனர். “ஜெயலலிதா ஊழல் செய்யவில்லை” என்ற அ.தி.மு.க. வினரின் கூற்று உண்மை இல்லை என்பதை நாடே அறியும்!

       1991ல் முதன் முதலாக ஆட்சி பொறுப்பை ஏற்ற ஜெயலலிதா, மன்னார்குடி சசிகலா கும்பலைச் சேர்த்துக்கொண்டு தமிழகத்தில் ஒரு மாபியா கும்பலின் ஆட்சியையே நடத்தினார். தமிழக அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தைத் தன் பெயருக்கு மாற்றிக்கொண்டார். ஸ்பிக் நிறுவனத்தின் தமிழக அரசின் பங்குகளை மலிவான விலைக்கு செட்டியார்களுக்கே விற்றுவிட ஜெயலலிதா முயன்றார். அதை எதிர்த்ததற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீது திராவகம் வீசப்பட்டது. தமிழகத்தின் பல பகுதிகளில் பலரை மிரட்டிச் சொத்துக்களை வாங்கிக் குவித்தார். நில அபகரிப்பின் தாயாகவே ஜெயலலிதா செயல்பட்டு நிலங்களைக் குவித்தார். நரசிம்மராவ், மன்மோகன் கும்பலின் நாட்டை அடிமைப்படுத்தும் புதியதாராளக் கொள்கைகளை எதிர்த்தும், ஈழ விடுதலைக்கு ஆதரவாகவும், தமிழ்த் தேசிய உரிமைகளுக்காகப் போராடியவர்கள் மீதும் எதிர்க்கட்சிகள் மீதும் தடா சட்டத்தைக் கொண்டு அரச பயங்கரவாதத்தை ஏவினார். ஒரு கொடுங்கோல் ஆட்சியை நடத்தியதால் மக்கள் அடுத்த 1996 தேர்தலில் ஜெயலலிதாவை தோற்கடித்தனர்.

       மீண்டும் ஜெயலலிதா 2001-2006 ஆட்சியின் போது கருணாநிதி ஆட்சியால் நியமனம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள் பல லட்சம் பேரை பழிவாங்கினார். அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டத்தின் போது 5 லட்சம் பேரை ஒரே நாளில் பணி நீக்கம் செய்து உழைப்பாளி மக்கள் மீது தாக்குதல் தொடுத்தார். மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவந்து சிறுபான்மை மதத்தினர் மீது தாக்குதல் தொடுத்தார். தற்போது இலவசத் திட்டங்களை அறிவித்து தனது கடந்தகாலக் கொடுமைகளையும் ஊழல்களையும் மறைத்துக் கொள்கிறார். இந்த இலவசங்களைக் கூட டாஸ்மாக் சாராய விற்பனை மூலம் ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சித்தான் வழங்குகிறார். இவ்வாறு ஏழ்மையையும், வறுமையையும் பயன்படுத்திக்கொண்டு தன் ஊழல்களை மூடிமறைக்க முயற்சிக்கிறார். ஜெயலலிதாவின் இத்தகைய மாய்மாலங்களை தமிழக மக்கள் ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள்.

       1996ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மீது ஊழல் மற்றும் சொத்துக் குவிப்புக் குற்றங்களுக் காக 14 வழக்குகள் போடப்பட்டன. டான்சி வழக்கில் ஜெயலலிதா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். அடுத்த தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. வென்றவுடன் (2001) ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார். உச்சநீதிமன்றத் தலையீட்டிற்குப் பின் பதவி நீக்கம் செய்யப்பட்டார். டான்சி வழக்கில் சொத்துக்களைத் திருப்பிக் கொடுத்து நீதிமன்றத்திடம் மன்னிப்புக் கேட்டு அவ்வழக்கிலிருந்து விடுபட்டு முதலமைச்சர் பதவியை மீண்டும் ஏற்றார். தன் மீதான அனைத்து வழக்குகளிலிருந்தும் அதிகார பலத்தைக் கொண்டு சாட்சிகளைக் கலைத்து ஒவ்வொன்றாகத் தப்பித்தார். அத்தகையச் சூழலில்தான் தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். உச்சநீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கை பெங்களூருக்கு மாற்றியது.

       சொத்துக்குவிப்பு வழக்கில் தான் தண்டிக்கப் படுவோம் என்பதைத் தெரிந்துகொண்டு தான் 18 ஆண்டுகள் இவ்வழக்கை இழுத்தடித்தார். தற்போது இந்த வழக்கில் தண்டனை அறிவிக்கப் பட்டதும் தனது கட்சியினர் மூலம் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டும், போராட்டங்களைத் தூண்டி விட்டும் நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப் படுத்துவதை தடுக்கப் பார்க்கிறார். நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க.வினர் நடத்திவரும் ஊழலுக்கு ஆதரவான பிற்போக்குத் தன்மை வாய்ந்த இப்போராட்டங்களுக்கு தமிழகக் காவல்துறை உயர் அதிகாரிகள் துணைபோகின்றனர். நீதிமன்றத்தின் நியாயமான தீர்ப்பை வரவேற்று சுவரொட்டி ஒட்டிய ம.ஜ.இ.க.வினரை காவல்துறையும், அ.தி.மு.க. ரவுடிகளும் மிரட்டுகின்றனர். தற்போது ஆட்சியிலுள்ள ஜெயலலிதாவின் எடுபிடி “ஒப்பாரி” பன்னீர் செல்வத்தின் ஆட்சியும் ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவை விடுதலை செய்யச் சொல்லிப் போராட பல்வேறு பிரிவினரைத் தூண்டிவிடுகிறது. அ.தி.மு.க.வினரின் இத்தகைய போராட்டங்கள் ஊழலுக்கு ஆதரவானதும் பிற்போக் கானதும் ஆகும். “எபுலா வைரஸ்” போன்று பரவிவரும் இத்தகைய போராட்டங்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். இத்தகைய போராட்டங்களைத் தடுத்து நிறுத்தவில்லை என்றால் இந்த எடுபிடி ஆட்சியை எதிர்த்துத் தமிழ்மக்கள் போராடுவது தவிர்க்க முடியாது என எச்சரிக்கிறோம்.

       தேர்ந்தெடுக்கப்பட்டுப் பொறுப்புகளை ஏற்கின்ற தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தாலோ அல்லது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டாலோ அவர்கள் பதவிவிலகுவது என்பது சாதாரன ஜனநாயக மரபு ஆகும். ஆனால் குற்றம் நிரூபிக்கப்பட்டுத் தண்டனை அளிக்கப்பட்ட பிறகும் கூட போராட்டம் நடத்திப் பல உயிர்களை பலிவாங்குகின்ற ஒரு மோசமான முன்னுதாரணத்தை ஜெயலலிதா படைத்துக் கொண்டிருக்கிறார். எதிர்க் கட்சியினர் சட்டமன்றத்தில் பேசுவதற்கு அனுமதி மறுப்பது, மீறி அவர்கள் வெளியில் பேசினால் அவதூறு வழக்கில் சிக்கவைப்பது. ஆனால் தான் மட்டும் தண்டனை பெற்றாலும் சிறைக்குச் செல்லமாட்டேன் என்று அடம்பிடிப்பதும் கலவரம் நடத்துவதும் எந்த விதத்தில் நியாயம்? கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஜெயலலிதா குண்டர் சட்டத்தை திருத்தினார். ஒருவர் ஒரு முறை குற்றம் செய்திருந்தாலே அல்லது ஒருவர் குற்றமிழைப்பார் என காவல் துறையினர் சந்தேகப்பட்டாலே அவரை ஒரு ஆண்டு ஜாமீனில் விடாமல் சிறைவைக்கலாம் என்று அந்தச் சட்டத்திருத்தம் கூறுகிறது. நிரபராதிகளை விசாரணையின்றி ஓராண்டு சிறையில் வைக்க சட்டம்போட்ட ஜெயலலிதா, தற்போதுசிறைத் தண்டனையை ஏற்க மறுப்பதேன்? பல குற்றங்களில் ஈடுபட்ட ஜெயலலிதாவுக்கு அவரின் குண்டர் சட்டம் பொருந்தாதா? சட்டத்தின் முன் அனைவரும் சமம்தானே? ஊழல் வழக்கில் ஜெயலலிதா மீதான தண்டனைக்கு எதிரான போராட்டங்கள் ஊழல் எதிர்ப்பு மக்கள் இயக்கத்திற்கு எதிரானதாகும்.

துக்ளக், தினமணி போன்ற பத்திரிக்கைகள் எடுத்துள்ள ஜெயலலிதாவின் ஊழலுக்கு ஆதரவான நிலைபாடுகளும், தி.மு.க. போன்ற எதிர்க் கட்சிகளின் காரியவாத மௌனமும் தமிழகத்தில் ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களுக்கும், ஜனநாயகத்திற்கான போராட்டங்களுக்கும் ஒரு பின்னடைவையே உருவாக்கியுள்ளது. நாடு முழுவதும் மாபெரும் ஊழல்கள் வெடித்துக்கிளம்பியுள்ள இன்றைய சூழலில் அ.தி.மு.க.வினரின் ஊழலுக்கு ஆதரவான இத்தகைய போராட்டங்கள் ஊழல் எதிர்ப்பு இயக்கங்களைக் கடுமையாகப் பாதிக்கும்.

அனைத்து ஆளும் வர்க்கக் கட்சிகளும், அதிகார வர்க்கத்தினரும் ஊழல்வாதிகளே!

       இன்று நாட்டில் ஜெயலலிதா மட்டுமே ஊழல்புரிந்துள்ளார் என்றோ அல்லது ஒரு ஜெயலலிதாவைத் தண்டித்துவிட்டால் நாட்டில் ஊழல் முற்றாக ஒழிந்துவிடும் என்றோ நாம் கூறவில்லை. மாறாக ஜெயலலிதா புரிந்துள்ள ஊழலைவிட பன்மடங்கு அதிகமான மாபெரும் ஊழல்கள் நடந்துள்ளன. 2ஜி அலைக்கற்றை ரூ.1,76,000 கோடி, நிலக்கரி பேர ஊழலில் ரூ. 2,00,000 கோடி, காமன்வெல்த் போட்டியில் ரூ.70,000 கோடி, கர்நாடகா மற்றும் கோவா மாநிலங்களில் நடந்துள்ள இரும்புக் கனிம ஊழல்கள் பல்லாயிரம் கோடி, மேற்கு வங்காளத்தில் சாரதாஸ் சிட் பண்டு ஊழல், பீகாரில் மாட்டுத் தீவன ஊழல் என இன்று நாடே ஊழலால் கடும்பாதிப்புகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிது. ஊழல் என்ற புற்றுநோய் நாட்டின் அரசியல், பொருளாதாரத்தைச் சீரழித்து வருகின்றன. காங்கிரஸ், பா.ஜ.க., தி.மு.க. போன்ற அனைத்து ஆளும் வர்க்கக் கட்சிகளும் இந்த மாபெரும் ஊழல்களில் பங்கேற்றுள்ளன. இவ்வாறு நாட்டில் பெருகிவரும் மாபெரும் ஊழல்களுக்கான காரணம் என்ன?

ஊழலின் ஊற்றுக்கண் உலகமய, தனியார்மயக் கொள்கைகளே

       இன்று நாட்டில் நடந்து வரும் மாபெரும் ஊழல்களுக்கு ஊற்றுக்கண்ணாக இருப்பது, இந்திய அரசு கடந்த 20 ஆண்டுகளாக அமல்படுத்திவரும் உலகமய, தனியார்மயக் கொள்கைகளேயாகும். இந்தியா போன்ற ஒடுக்கப்பட்ட நாடுகளில் ஏகாதிபத்திய வாதிகளும், பன்னாட்டுக் கம்பெனிகளும், உள்நாட்டுத் தரகுப் பெருமுதலாளிகளும், பணத்திமிங்கிலங்களும் அரசின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காகவும் அதிகாரத்தில் உள்ளவர்களைத் தங்களின் கைப்பாவைகளாக மாற்றிக் கொள்ளவும், தொழில் மற்றும் வர்த்தகத் துறைகளில் தங்களின் ஏகபோகங்களை உருவாக்கிக் கொள்ளவும் கொள்ளை லாபம் அடிப்பதற்காகவும் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் லஞ்சம் தருவதன் மூலம் சாதிப்பதை ஒரு வழிமுறையாகக் கொண்டுள்ளனர். உலகமய, தனியார்மயமாக்கல் சூழலில் நாட்டின் மீது புதியகாலனிய ஆதிக்கத்தை நிறுவுவதற்கு இலஞ்சம் தருவது ஒரு முக்கியக் கருவியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இன்று நாட்டில் நிலவும் மாபெரும் ஊழல்களுக்கு முடிவுகட்ட வேண்டுமானால் உலகமய, தனியார்மயக் கொள்கைகளை ஒழித்துக்கட்டுவதோடு இலஞ்சம் கொடுக்கின்ற பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் பெரும் முதலாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இலஞ்சம் வாங்குகின்ற அமைச்சர்கள், அதிகாரிகளைத் தண்டித்தால் மட்டும்போதாது. இலஞ்சம் கொடுக்கின்ற டாட்டா, பிர்லா, அம்பானி, வேதாந்தா போன்ற முதலாளிகள் மீதும்; யூனினார், ஸ்வான், போஸ்கோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். சட்டப்படி இலஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றமாகும். எனவே லஞ்சம் கொடுக்கும் முதலாளிகளைத் தண்டிக்காமல், இலஞ்சம் வாங்குபவர்களை மட்டுமே தண்டிப்பதால் ஊழலை ஒழித்துவிடமுடியாது.

மேலும், முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையே ஊழலுக்கு அடிப்படை என்பதை லெனின் பின்வருமாறு கூறுகிறார்:

“ஜனநாயகக் குடியரசு” என்பது முறைப்படி தர்க்கவியல் ரீதியாக முதலாளித்துவத்துக்கு முரண்பட்டது. ஏனெனில் அது அதிகாரப் பூர்வமாகப் பணக்காரர்களையும், ஏழைகளையும் சரிசமமான நிலையில் வைக்கிறது. பொருளாதார அமைப்பிற்கும் அதன் மீது எழுப்பப்பட்டுள்ள அரசியலைமப்பிற்கும் இடையிலுள்ள ஒரு முரண்பாடு. அப்படியானால் முதலாளித்துவம் எவ்வாறு ஜனநாயகத்தை, ஜனநாயகம் இருப்பதை அனுமதித்துக்கொண்டு நிற்க முடிகின்றது. முதலாளித்துவத்தின் சர்வ வல்லமையை மறைமுகமாகச் செயல்படுத்துவதினால் அது நிற்கின்றது. அதற்கு இரு பொருளாதார வழிமுறைகள் இருக்கின்றன. ஒன்று நேரடியாக அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இலஞ்சம் கொடுப்பது. இரண்டு அரசாங்கத்திற்கும் பங்குப் பரிவர்த்தனை நிறுவனங் களுக்கும் உள்ள கூட்டுகளின் மூலமும் மறைமுகமாக அரசாங்கத்தை செல்வம் கட்டுப்படுத்துகிறது.

       ஆகையால் ஊழலை உண்மையாகவே ஒழிக்க வேண்டுமானால் நாம் இந்த முதலாளித்துவ அமைப்பு முறையையே எதிர்த்துப் போராட வேண்டும். மாற்றாக சோவியத் ஆட்சி முறையையே அமைத்திடவேண்டும். அவ்வாறு மாற்றியமைப்பதற்குத் தொடக்கமாக இன்று மாபெரும் ஊழல்கள் நிலவுவதற்குக் காரணமாக உள்ள உலகமய, தனியார்மயக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவது உடனடிப் பணியாக உள்ளது.

மோடி கும்பலின் ஆட்சியும் ஊழலுக்கான ஆட்சியே!

       இந்துத்துவப் பாசிச மோடி கும்பல், காங்கிரஸ் ஆட்சியின் ஊழலை எதிர்த்து “ஊழலற்ற நல்லாட்சி” என்ற முழக்கத்தை முன்வைத்தும், “வளர்ச்சி” என்றும் கூறி ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி கடைப்பிடித்த மாபெரும் ஊழல்களுக்கு காரணமான உலகமய, தனியார்மயக் கொள்கைகளை மூர்க்கத்தனமாக அமல்படுத்துகிறது. ஆயுள் காப்பீடு, வங்கிகள், பாதுகாப்புத்துறை, இரயில்வே போன்ற முக்கிய துறைகளைத் தனியார் மயமாக்கி வருகிறது. “இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்” என்று கூறி பன்னாட்டு முதலாளிகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிப்பதன் மூலம் மாபெரும் ஊழல்களுக்குப் பாதை அமைக்கிறது. மோடியின் “குஜராத் மாடல்” வளர்ச்சி என்பது பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்குச் சலுகை மழை பொழிவதும், ஊழலில் திளைப்பதுமேயாகும். மோடிக்கும் அதானிக்கும் உள்ள உறவே மோடி கும்பலின் ஊழலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

       எனவே, இன்று நாட்டில் புற்றுநோய் போல் பரவிவரும் ஊழல்களை ஒழித்துக்கட்ட ஜெயா கும்பல் மீதான நீதிமன்ற தண்டனையை வரவேற்பதோடு, ஊழலில் ஈடுபட்டுள்ள அனைத்து அரசியல்வாதிகள் அதிகாரிகள் மட்டுமல்லாது லஞ்சம் கொடுக்கின்ற பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளையும் தண்டிக்கக் கோரிப் போராட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக மோடி கும்பல் அமல்படுத்திவருகிற மாபெரும் ஊழல்களுக்கு வழிவகுக்கிற உலகமய, தனியார்மயக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவது ஊழல் ஒழிப்பின் உடனடிக் கடமையாகும். ஆகவே, அனைத்து ஜனநாயக சக்திகளும், உழைக்கும் மக்களும் பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் ஊழலுக்கு எதிராக அணிதிரள அறைகூவி அழைக்கிறோம்.
  • சொத்துக் குவிப்பு வழக்கில் 18 ஆண்டுகள் வளைந்து கொடுத்த நீதித்துறை, இறுதியாக ஜெயா கும்பலைத் தண்டித்துள்ளதை வரவேற்போம்!
  • ஜெயா கும்பல் மட்டுமே ஊழல்வாதிகள் அல்ல! அனைத்து ஆளும் வர்க்கக் கட்சிகளும், அதிகார வர்க்கமும், அந்நிய மூலதனத்திற்குச் சேவை செய்யும் ஊழல்வாதிகளே!
  • ஊழலின் ஊற்றுக்கண், புதிய காலனிய தாரளமயக் கொள்கைகளே!
  • ஊழலை ஒழிக்க, மோடி ஆட்சியின் புதிய காலனிய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துப் போராட அணிதிரள்வோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
அக்டோபர் 2014 / தொடர்புக்கு : செல்: 9382815231

No comments:

Post a Comment

விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.