Wednesday, April 23, 2014

புதியகாலனிய பொருளாதாரக் கொள்கைகளுக்கும் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கும் சேவை செய்யும் நாடாளுமன்றத்திற்கான தேர்தலைப் புறக்கணிப்போம்!

புதியகாலனிய பொருளாதாரக் கொள்கைகளுக்கும் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கும் சேவை செய்யும் நாடாளுமன்றத்திற்கான தேர்தலைப் புறக்கணிப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகம் விரும்பும் சான்றோரே!!

16வது நாடாளுமன்றத்திற்கான தேர்தலைச் சந்திக்கிறோம். இத்தேர்தல் எத்தகைய சூழலில் நடைபெறுகிறது?

உலக முதலாளித்துவ நெருக்கடி தீவிரமடைந்த ஒரு சூழலில்தான் இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இன்றைய சர்வதேச முதலாளித்துவ நெருக்கடி -குறிப்பாக அமெரிக் காவில் 2008ஆம் ஆண்டில் ஏற்பட்ட நெருக்கடி ஐரோப்பா, ஜப்பான் மற்றும் ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கும் பரவியது. இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் நெருக்கடியின் சுமைகளை ஒடுக்கப்பட்ட நாடுகள் மீதும், ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் சுமத்திவிடும் கொள்கைகளைப் பின்பற்றுகின்றனர்.

இந்திய அரசும் ஆளும் வர்க்கக் கட்சிகளும், அமெரிக்க ஏகாதிபத்தியம் நெருக்கடிக்குள்ளாகியுள்ள தனது உலக மேலாதிக்கத்தையும், புதியகாலனி யாதிக்கத்தையும் தக்கவைத்துக்கொள்வதற்காக மேற்கொள்ளும் எல்லாவிதமான நடவடிக்கைகளுக்கும் விசுவாசமாகச் சேவை செய்து வருகின்றன. அதன் விளைவாக இந்திய மக்கள் கடும் துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

90ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி (நரசிம்ம ராவ், மன்மோகன், சிதம்பரம் கும்பல்) புதிய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தத் துவங்கியது. நரசிம்மராவ் ஆட்சிக்குப் பிறகு, பி.ஜே.பி. கட்சியின் தலைமையின் கீழ் ஆறு ஆண்டுகள் ஆட்சி நடைபெற்றது. பி.ஜே.பி.யின் ஆட்சிக் காலத்தில், அது காங்கிரஸ் ஆட்சியைவிட மிக வேகமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதியதாராளக் கொள்கைகளை அமல்படுத்தியது. அது மட்டுமல்லாது பா.ஜ.க. ஆட்சி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக மேலாதிக்கத்திற்கு சேவை செய்யும் கொள்கைகளைச் செயல்படுத்தியது.
பி.ஜே.பி. ஆட்சி 2004ஆம் ஆண்டு வீழ்ச்சி அடைந்தது. 2004 முதல் காங்கிரஸ் கட்சி 10 ஆண்டுகளாக ஆட்சி செய்துவருகிறது. இந்த ஆட்சி கடந்த 10 ஆண்டுகளாக அமல்படுத்திவரும் அதே புதியகாலனிய அரசியல், பொருளாதார மற்றும் இராணுவக் கொள்கைகள் இந்திய நாட்டை நாசமாக்கியுள்ளது.

காங்கிரசின் 10 ஆண்டுகால ஆட்சியின் விளைவுகள்

இடதுசாரிகளின் ஆதரவு பெற்ற காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐ.மு. கூட்டணி (UPA) அரசாங்கம்-, பா.ஜ.க. ஆட்சியின் பிற்போக்குக் கொள்கைகளை மாற்றப் போவதாகச் சொன்னது. ஆனால் அது துவக்கத்திலிருந்தே தனது வாக்குறுதி களுக்கு எதிராகவே செயல்பட்டது. அது ஏகாதிபத்திய உலகமயமாக் கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் கொள்கைகளை மென்மேலும் வேகமாகவே செயல்படுத்தத் துவங்கியது. நாட்டின் எல்லாப் பொருளாதாரத் துறைகளையும் சர்வதேச நிதிமூலதன அமைப்புடன் இணைப்பதற்காகவே அவ்வாறு செயல்பட்டது. அனைத்துத் துறைகளிலும் அன்னிய மூலதனத்தின் ஆதிக்கம் நாட்டைக் கடும் நெருக்கடியில் தள்ளியுள்ளது.

இந்தியாவுடைய பொருளாதாரம் உலகப் பொருளாதார நெருக்கடியால் பாதிக்காது என்று கூறிவந்த இந்திய ஆட்சி யாளர்களால் கூட, இந்தியாவின் உற்பத்தித் துறை, தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் சரிவு ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுக்கமுடியவில்லை. உலகப் பொருளாதார நெருக்கடி இந்தியாவைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (GDP) கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. 2004-08ஆம் ஆண்டுகளில் 8.9 சதவீதமாக இருந்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் இவ்வாண்டு வெறும் 4.9 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி, ஏற்றுமதி வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, அன்னியக் கடன் அதிகரிப்பு, நடப்புக் கணக்கு பற்றாக்குறை என நாட்டின் பொருளாதாரம் மீளமுடியாத நெருக்கடியில் சிக்கியுள்ளது.

தொழில்துறை வீழ்ச்சி

தொழில் துறையில் அன்னிய முதலீடுகளுக்கான தடைகளை அகற்றியதால், அன்னிய மூலதன வருகை நாட்டின் தொழிற்துறையை வளர்க்கவில்லை, மாறாகத் தொழில்துறை வீழ்ச்சியையே சந்திக்கிறது. அன்னிய மூலதனம் உற்பத்தி துறைகளில் வரவில்லை. பங்குச்சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற ஊக வாணிபத் துறைகளில்தான் குவிகிறது. மேலும் அன்னிய மூலதனம் ஏராளமான மூலதனப் பொருட்களையும், ஏகாதிபத்திய நாடுகளில் முழுவதுமாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களையும் (Manufacturing Goods) இந்தியச் சந்தையில் கொட்டிக் குவித்தது. அதனால் உள்நாட்டு தொழிற்சாலைகள் நலிவடைந்துவிட்டன.

உலோகம், இயந்திர உற்பத்தி மற்றும் மின் உற்பத்தி போன்ற கட்டமைப்புத் தொழில்களில் அன்னிய முதலீடு வராததால் கட்டமைப்புத் துறை தொழில்கள் வீழ்ச்சியைச் சந்தித்தன. புதிய தாராளக் கொள்கைகள் செயல்படுத்துவதால், இந்திய அரசு கடைப்பிடித்து வந்த இறக்குமதிக்கு மாற்றான, வேலை வாய்ப்பை உள்ளடக்கிய அரைகுறையான சுயசார்புகொண்ட கீன்சியகொள்கைகள் ஒழிக்கப்பட்டுச் சந்தைச் சக்திகளின் அராஜகம் தொழில்துறையை நாசமாக்கிவிட்டன.
உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவாகவும் உள்நாட்டில் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து போனதாலும் மோட்டார் வாகனம் உள்ளிட்ட பெரும் தொழில் நிறுவனங்கள் தேக்க நிலைக்கு உள்ளாகி உள்ளன. பல தொழிற்சாலைகள் ஆட்குறைப்பு, லே ஆப் செய்து தொழிலாளர்கள் மீது நெருக்கடியின் சுமைகளைச் சுமத்தியுள்ளன. இதுவரையில் ஆட்டோ மொபைல் துறையில் 30 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.

ஏற்றுமதிக்கான தொழில்களுக்கு ஊக்கமளித்தல் என்ற பேரில் சேவைத்துறைகளான போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கு (IT) ஒரு தலைபட்சமாக அழுத்தம் கொடுத்ததன் விளைவாகப் பிற தொழில்கள் நலிவடைந்து நாட்டின் தற்சார்பு அழிக்கப் பட்டுவிட்டது. மேலும் உலகப் பொருளாதார நெருக்கடி தகவல் தொழில்நுட்பத் துறையிலும் பாதிப்புகளைக் கொண்டு வந்துள்ளது.

உலகப் பொருளாதார நெருக்கடியால் ஏற்றுமதி குறைந்து போனதன் காரணமாகவும்; வங்கிக்கடன் கிடைக்காதது, தொடர் மின்வெட்டு, மின்கட்டண உயர்வு, கச்சாப் பொருட்களின் விலை உயர்வு காரணமாகவும் நெசவுத் தொழில் உள்ளிட்ட சிறு, குறு தொழில்கள் அழிந்து பல கோடிப் பேர் வேலை இழந்துள்ளனர். இந்தியாவின் உற்பத்தித் துறையில் இத் தொழில்களில்தான் 80 சதவீதம் வேலைவாய்ப்பு கிடைத்து வந்தது.

முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியிலிருந்து முதலாளிகளைக் காப்பதற்கு இந்திய அரசாங்கம் ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறது. எனவேதான் நெருக்கடிக் காலத்திலும் பெரும் தொழில் நிறுவனங்கள் லாபமீட்டி வருகின்றன. ஆனால் முதலாளித்துவ நெருக்கடிகள் முழுவதும் தொழிலாளர்களின் தோள்மீதுதான் சுமத்தப்படுகின்றன. 2005-06இல் பெரிய தொழில் நிறுவனங்களின் இலாபம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 11 சதவீதமாக இருந்தது. அது 2007-08இல் 14.6 சதவீதமாக அதிகரித்தது. 2005-06ஐ ஒப்பிடும்போது 5 ஆண்டுகளில் பெரும் தொழில் நிறுவனங்கள் ரூ.4.8 லட்சம் கோடிகளை இலாபமாக ஈட்டியுள்ளன.

ஆனால் தொழிலாளர்களின் கூலியோ பன்மடங்கு குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் தொழிலாளர்களின் ஊதியத்தின் பங்கு (GDP) 30 சதவீதம் குறைந்துள்ளது. நிரந்தரத் தொழிலாளர்கள் முறை நீக்கப்பட்டுக் காண்டிராக்ட் முறை புகுத்தப்பட்டு வருகிறது. தொழிலாளர்களின் வேலை நேரம் எட்டு மணியிலிருந்து 12 மணி நேர வேலை நாளாக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் அரசியல் உரிமைகளும், தொழிற்சங்க உரிமைகளும் பறிக்கப்பட்டு வருகின்றன. தொழிலாளர்கள் கொத்தடிமை களாக்கப்பட்டு ஒட்டச் சுரண்டப்படுகிறார்கள்.

வேளாண்துறை நெருக்கடி

அன்னிய மூலதனத்திற்கு வேளாண்துறையைத் திறந்துவிடும் புதிய காலனிய வேளாண் கொள்கைகள் அத்துறையைக் கடும் நெருக்கடியில் தள்ளியுள்ளது.

வேளாண் துறையில் நிலச் சீர்திருத்தம் செய்யமறுப்பதோடு, இருக்கின்ற நில உச்சவரம்புச் சட்டங்களையும் மீறிக் குழும விவசாயம் என்ற பேரில், பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் கையில் நிலக் குவியலுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தோட்டத் தொழில், பண்ணை விவசாயம், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், புது நகரங்கள் அமைத்தல் என விவசாயிகளின் செழுமையான விளைநிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. விவசாயிகள் நிலத்தைவிட்டு விரட்டப்படுகின்றனர். வேளாண்மை குழுமமயம் என்ற பேரால் நிலம் பன்னாட்டு கம்பெனிகளின் கைகளில் குவிக்கப்படுகிறது.

வேளாண் விளைபொருள்களின் இறக்குமதிக்கான அளவு ரீதியான கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் அகற்றப்பட்டதன் மூலம் ஏகாதிபத்திய நாடுகளில் ஏராளமாக மானியங்கள் பெற்று அவர்களின் வேளாண் பொருட்கள் இந்தியச் சந்தையில் மலிவான விலைக்குக் கொட்டிக் குவிக்கப்படுகின்றன. மறுபுறம் இந்திய விவசாயிகளுக்கு அரசாங்கம் அளித்துவந்த மானியங்களை வெட்டியதால் வேளாண் விளைபொருள்களின் விலை உயர்ந்து போட்டிபோட முடியாமல் இந்திய விவசாயம் சீரழிந்துபோகிறது.

அறிவுசார் காப்புரிமை (IPR) மரபணு மாற்று விதைகள் சட்டத்தின் மூலம் விதைகள் ஆராய்ச்சி, உற்பத்தி என்று அமெரிக்கப் பன்னாட்டு கம்பெனிகள் இந்திய விவசாயத்தைத் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.

வேளாண் வர்த்தகத்தில் பன்னாட்டு கம்பெனிகளின் இலாப வேட்டைக்கு வழி செய்வதற்காக அரசாங்கம் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு ஆதார விலை கொடுத்துக் கொள்முதல் செய்வதைக் கைவிடுவது; பொது வினியோகத் திட்டத்தைக் கைவிடுவதன் மூலம் இந்திய விவசாயம் அழிக்கப்படுகிறது.

உணவு உற்பத்தியில் தற்சார்பை ஒழிக்கும் வகையிலும், ஏற்றுமதி சார்ந்த பணப் பயிர் உற்பத்தி, மோட்டார் வாகனங்களின் எரிபொருள்களுக்கான சோயா பீன்ஸ் உற்பத்தி செய்வதன் மூலம் நாட்டில் உணவு பாதுகாப்புக்கும் வேட்டுவைக்கப்படுகிறது.

இலவச மின்சாரத்தை ஒழிப்பது, அரசுக் கடன்களைக் குறைத்தல், நீர்ப்பாசனத் திட்டங்களைத் தனியாரிடம் ஒப்படைத்தல் மூலம் வேளாண் உற்பத்தியைச் சீரழித்தல்.

மேற்கண்டவாறு இந்திய அரசு செயல்படுத்திவரும் புதிய காலனிய வேளாண் கொள்கைகளின் விளைவாக விவசாயம் நலிவடைந்து, விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலைக்குத் தள்ளப்படுகின்றனர். கடந்த 15 ஆண்டுகளில் மூன்று இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டுபோயினர். விவசாயிகள் நிலத்தை விட்டுக் குடிபெயரும் அவலம் தொடர்கிறது.

பன்னாட்டு கம்பெனிகளின் பிடியில் நிதித்துறை

மன்மோகன் கும்பல் சர்வதேச நிதி நெருக்கடியால் சர்வதேச, குறிப்பாக அமெரிக்காவின் திவாலாகிவிட்ட நிதி நிறுவனங்களுக்கு, இந்திய நாட்டின் பெரும் இலாபம் ஈட்டுகின்ற வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களைத் திறந்துவிட்டுள்ளது. அந்த நிறுவனங்கள் அவர்கள் நாட்டில் மக்களை மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ள சூழலில் இந்திய நாட்டின் நிதித்துறையைத் திறந்துவிடுவது மக்களின் முதலீடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது மேலும் வங்கிகள், காப்பீடு தனியாரிடம் ஒப்படைப்பதால் நாட்டு நலப் பணிகள், அரசின் திட்டங்கள் பாதிக்கப்படுவதோடு இத்துறையில் பணிபுரிகின்ற இலட்சக்கணக்கான ஊழியர்களின் வாழ்வுரிமை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

இயற்கை வளங்கள், கனிம வளங்கள் கொள்ளை போகிறது

மன்மோகன் கும்பல் இயற்கை வளங்கள், கனிம வளங்கள் மற்றும் மனித வளங்கள் அனைத்தையும் பன்னாட்டு கம்பெனிகள், உள்நாட்டு தரகு முதலாளித்துவக் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளைக்குத் திறந்துவிட்டுள்ளது. இதற்கு வழிவகை செய்து கொடுப்பதற்காகவே பொதுத்துறை - தனியார்  கூட்டு (Public Private Partnership) என்ற பெயரில் கட்டுமானத்துறை வளர்ச்சி என்ற பேரில் பல துரிதப் போக்குவரத்தை நிர்மாணித்தல், வர்த்தக முனையங்கள் என இன்ன பிறவும் திறந்துவிடப்பட்டன.

இத்தகைய எல்லாத் திட்டங்களினாலும் இலட்சக்கணக்கான குடும்பங்கள் தங்களின் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். எண்ணற்றவர் நகரக் குடிசைப் பகுதிகளுக்குச் செல்லும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

ஏற்றுமதியை ஊக்குவித்தல் மற்றும் தாராளமயமாக்கல் என்ற பெயரால் எல்லா இயற்கை வளங்களும் நீர், நிலம், சுரங்கங்கள், ஆறுகள், மலைகள் எனப் பன்னாட்டு கம்பெனிகளுக்கும் மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் தரகு முதலாளிகளுக்கும் திருப்பி விடப்படுகின்றன. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் கும்பல்கள் கொள்ளையடிப்பதற்காகவே உருவாக்கப்படுகின்றன.

மேற்கண்ட கொள்கைகளைத் திணிப்பதற்கு எதிராகவும், இலட்சக் கணக்கானோர் தங்களது சொந்த வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு எதிராகவும் நாடெங்கிலும் எண்ணற்ற தன்னியல்பான போராட்டங்கள் நடைபெறுகின்றன. அந்தப் போராட்டங்களை ஆட்சியாளர்கள் கடுமையாக ஒடுக்குகின்றனர்.

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு

காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசாங்கம் சிறுவணிகத்தை (retail sector) நேரடி அன்னிய முதலீட்டாளர் களுக்கும் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் திறந்து விட்டுள்ளது. இதனால் இத்துறையில் மிகப் பெரும் பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகள் (வால்மார்ட், டெஸ்கோ, கேரிபோர்) நுழைந்துவிட்டன. இதனால் இத்துறையில் ஈடுபட்டுள்ள 20 கோடி பேரின் வாழ்வாதாரம் நாசமாக்கப்பட்டுவருகிறது.

சமூக நலத்திட்டங்கள் சீரழிக்கப்படுதல்

மன்மோகன் தலைமையிலான மத்திய அரசாங்கம் நாட்டின் நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டிச் சமூக நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை வெட்டியுள்ளது. கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற துறைகளைத் தனியார்மயமாக்கி பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்குத் தாரைவார்த்து விட்டது. கல்வியை வணிகமயமாக்கி இன்று மாபெரும் வியாபார மாக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களுக்கு உயர்கல்வி எட்டாக் கனியாக மாறிவிட்டது. ஏழை மக்களின் உயிர்வாழும் உரிமையையும் பறித்துவிட்டது.

ஆனால் நிதிநெருக்கடி கடுமையாக இருப்பினும் பொருளாதார நெருக்கடியிலிருந்து பன்னாட்டு, உள்நாட்டு தரகுப் பெருமுதலாளிகளைக் காப்பதற்கு ஊக்கத்தொகை, நட்ட ஈடு என்ற பேரால் பல இலட்சம் கோடிகளை வாரி வழங்கியுள்ளது. உதாரணமாக 2005ஆம் ஆண்டு முதல் 2012--13ஆம் ஆண்டு வரை இந்திய நாட்டின் பெருமுதலாளிகளுக்கும், பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் கார்ப்பரேட் வரி, கலால் வரி, சுங்கவரிச் சலுகைகள் மூலம் அளித்த தொகை மட்டும் ரூ.31,11,169 கோடியாகும்.

புதிய தாராளக் கொள்கைகளைச் செயல்படுத்துவதோடு பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு ஏராளமாகச் சலுகைகளை வாரிவழங்கியுள்ள மன்மோகன் கும்பல், அத்தியாவசிய பொருட்களின் விலைகளை உயர்த்துவதன் மூலம் மக்களின் மீது சுமைகளைச் சுமத்தி வருகிறது.

பெட்ரோலியத் துறையைத் தனியாருக்குத் தாரைவார்த்தது மட்டுமல்லாது பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயிக்கும் அதிகாரத்தையும் அவர்களிடமே ஒப்படைத்தது. கடந்த எட்டு ஆண்டுகளில் 40 முறை பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தியது. அதன் விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்தது.

பொது வினியோக முறையை ஒழித்துக்கட்டுவது என்ற நோக்கத்தில் நியாய விலைக் கடைகளைச் சீரழித்து வருகிறது. வறுமைக் கோட்டின் அளவை மாற்றியமைப்பதன் மூலம் ஏழைகளையெல்லாம் பணக்காரர்களாகக் காட்டி ஏழ்மையை ஒழிப்பதற்குப் பதிலாக ஏழைகளையே ஒழித்துவிட்டது. மண்ணெண்ணெய் வழங்கலைக் கட்டுப்படுத்தல், மானிய விலையில் எரிவாயு உருளைகளின் எண்ணிக்கையைக் குறைத்தல் என ஏழைகள் மீது சுமைகளைச் சுமத்தியது. சாமானியமக்களின் ஆட்சி என்ற பேரால் சாமானிய மக்களின் வயிற்றில் அடித்து கார்ப்பரேட் சாம்ராஜ்ஜியங்களுக்குசேவை செய்கிறது காங்கிரஸ் கட்சி.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக இந்தியா!

அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் யுத்ததந்திர உறவுகளை நிறுவுதல் என்ற பெயரில் அமெரிக்காவுடன் பல இராணுவ ஒப்பந்தங்களை இந்திய அரசு செய்துகொண்டது. அதன் உச்ச நிலையாக இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்குப் பதிலாக IAEA-வில் ஈரானுக்கு எதிராக, அமெரிக்காவிற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.

அமெரிக்க--இந்திய இராணுவ ஒப்பந்தத்தின் படி ஆசியாவில் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்குச் சவாலாகத் திகழும் சீனாவை எதிர்க்க இந்தியாவைப் பயன்படுத்துவது, தமக்கு அடிபணியாத நாடுகள் மீது பயங்கரவாத எதிர்ப்பு, மனித உரிமை மீறல் என்ற பேரில் அமெரிக்கா இராணுவத் தலையீடுகள் செய்வதற்கு இந்தியா உதவுவது; பேரழிவு ஆயுதங்கள் பரவுவதைத் தடுப்பது என்ற பேரில் சர்வதேசக் கடல் எல்லையில் மூன்றாவது நாட்டுக் கப்பல்களை இரு நாடுகளும் சேர்ந்து சோதனையிடுவது; ஆசிய--பசிபிக் கடல் பகுதியில் அமெரிக்காவின் போர்க் கப்பல்களையும், வியாபாரக் கப்பல்களையும் இந்தியக் கப்பற்படை காவல் காப்பது; அத்துடன் இந்தியாவின் ஆயுதத் தளவாட உற்பத்தியில் அமெரிக்காவை ஈடுபடுத்துவதன் மூலம் நாட்டின் பாதுகாப்பை ஒழிப்பது போன்ற கேவலமான அம்சங்களை இந்தியா ஏற்றுக்கொண்டது. சுருங்கக் கூறினால் அமெரிக்க இந்திய இராணுவ ஒப்பந்தம், இந்திய இராணுவத்தை அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்குச் சேவை செய்யும் ஒரு அடியாள் படையாக மாற்றியுள்ளது.

இராணுவ ஒப்பந்தத்தை அடுத்து இந்திய அரசு அமெரிக்காவோடு செய்துகொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவின் அயலுறவுக் கொள்கைகளை அமெரிக்காவுக்குச் சாதகமாக மாற்றும் நிபந்தனைகளைக் கொண்டதாகும். அமெரிக்காவின் ஆணைகளுக்கு இணங்க, மிகவும் பயனுள்ள ஈரான்--பாகிஸ்தான்-இந்திய நாடுகளுக்கிடையிலான இயற்கை எரிவாயு குழாய் வழிப்பாதைக்கான ஒப்பந்தம் கைவிடப்பட்டது. இது அண்டை நாடுகளுக்கிடையிலான உறவுகளையும் பகையானதாக ஆக்குவதற்கு இட்டுச் சென்றது. நாட்டின் அயலுறவு கொள்கையில் ஆக்கப்பூர்வமான தன்மையை அழித்துவிட்டது.

புதிய தாராளக் கொள்கைகள் புகுத்தப்பட்டது மற்றும் இந்தியா ஏகாதிபத்தியவாதிகளின் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் இளைய பங்காளி (இரண்டாம் நிலை கூட்டாளி) என்ற பாத்திரத்திற்கு ஏற்றவாறு இந்தியாவின் அயலுறவுக் கொள்கை வேகமாக மாற்றி கொள்ளப்பட்டது.
இதன் விளைவாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப் புக்கும் ஆதிக்கத்துக்கும் உள்ளான அண்டை நாடுகளான இலங்கை, பூட்டான், மாலத் தீவுகள், வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் போன்ற நாடுகள் இந்தியாவைச் சந்தேகத்துடன் பார்க்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன.

உலகமயக் கொள்கைகளும் மாபெரும் ஊழல்களும்

சோனியா-மன்மோகன் கும்பலின் மத்திய ஆட்சி ஏகாதிபத்தி யங்களுக்கு ஆதரவான தேசத்துரோகக் கொள்கைகளை எந்த அளவுக்கு வெறித்தனமாக கடைபிடிக்கிறதோ அதே அளவிற்கு வரலாறு காணாத மாபெரும் ஊழல்களில் திளைத்துவருகிறது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடுகளில் ரூ.1,76,000 கோடி; நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளில் ரூ.2,00,000 கோடி; காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ரூ.76,000 கோடி; கிருஷ்ணா-கோதாவரி இயற்கை எரிவாயு ஊழல் பல இலட்சம் கோடி என மன்மோகன் கும்பல் ஒரு ஊழல் சாம்ராஜ்ஜியத்தையே நடத்திவருகிறது.

மன்மோகன் கும்பலின் ஆட்சியில் ஊழல் இப்படிப் பிரமாண்டமாக வளர்வதற்குக் காரணம் இந்திய அரசு அமல்படுத்தி வரும் உலகமய, தாராளமயத் தனியார்மயக் கொள்கைகளேயாகும். இன்றைய புதிய காலனியக் காலகட்டத்தில், ஏகாதிபத்திய நாடுகளைச் சார்ந்த பெரும் நிதிமூலதனக் கும்பல்கள் தங்கள் சொந்த நாட்டில் அரசாங்க அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் இலஞ்சம் கொடுப்பதன் மூலமும், பங்குச் சந்தைக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவுகளைக் கொண்டும் அரசாங்கத்தை எப்படி வசப்படுத்துகிறார்களோ அது போலவே - அந்நிய நாட்டில் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இலஞ்சம் கொடுப்பதன் மூலமும், பங்கு சந்தைக்கும் அரசாங்கத்திற்கும் உள்ள உறவுகளைப் பயன்படுத்தியும் அரசாங்கத்தை வசப்படுத்துகின்றனர்.

இவ்வாறு பன்னாட்டு முதலாளிகளும், உள்நாட்டு தரகுப் பெருமுதலாளிகளும் அரசு எந்திரத்தை வசப்படுத்துவதற்குக் கொடுத்த விலைதான் இம்மாபெரும் ஊழல்கள் ஆகும். புதிய காலனியத்திற்குச் சேவை செய்து இந்திய நாட்டின் வளங்களைக் கொள்ளையடிப்பதற்கான சேவைக்கு அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கொடுக்கும் சன்மானம்தான் இந்த ஊழல்கள் அனைத்தும். எனவே உலகமய, தனியார்மயக் கொள்கைகளை ஒழிக்காமல் இத்தகைய ஊழல்களை ஒழிக்க முடியாது.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான அடக்குமுறைகள்

கடந்த 10 ஆண்டுகாலக் காங்கிரஸ் ஆட்சியில் நாடு முழுவதும் சாதிவாத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துதல், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் மீதான ஒடுக்குமுறைகள், சாதிப் பஞ்சாயத்தின் ஆதிக்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள், சாதிக் கலவரங்கள் மற்றும் தீண்டாமைக் கொடுமைகளைத் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது திணிப்பது போன்ற கொடுமைகள் அதிகரித்து வந்துள்ளன. இந்த அடக்குமுறைகள் அனைத்திற்கும் காங்கிரஸ் ஆட்சி பாதுகாப்பு வழங்கியுள்ளது.

இந்தியாவின் ஒற்றை ஆட்சி முறை

இந்திய அரசியல் சட்டத்தின் முன்னுரையில் (Preamble) கூட்டாட்சி (Federal) என்ற வார்த்தை பதிக்கப்பட்டிருந்தாலும் (inscribed) இடைக்காலத்தில், கூட்டாட்சிக் கோட்பாடு பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

ஆளும் வர்க்கங்களின் அகண்ட இந்தியக் கொள்கைகளுக்கு வழிவகை செய்யும் பொருட்டு, இந்தியாவின் பரந்த பிரதேசங் களுக்குப் படைகள் அனுப்பப்படுவது உள்ளிட்டுப் பல்வேறு சட்டரீதியான மற்றும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் மூலமாகவும் மற்றும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (Armed Force Special Power Act), சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (Unlawful Activities Prevention Act) போன்ற கருப்புச் சட்டங்களைத் திணித்ததன் மூலமாகவும் நடைமுறையில் கூட்டாட்சிக் கொள்கைகளுக்குப் பதில் ஐக்கியப்பட்ட ஒன்றிய (Unitary Structure) கட்டமைப்பு என்ற கொள்கை முன்வைக்கப்பட்டது.

இன்று ஐ.மு. கூட்டணி அரசாங்கம் பல பிரதேசங்களுக்குப் படைகளை அனுப்புவதன் மூலமாக, AFSPA சட்டத்தை விரிவுபடுத்துதல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான தேசிய மையம் (National Counter Terrorism Centre) மூலமாக இந்த ஐக்கிய ஒன்றியத்தை நிறைவேற்றும் போக்கைத் தீவிரப்படுத்தியுள்ளது.

மாநிலங்களுக்கிடையிலும், மாநிலத்திற்குள்ளேயும் பல்வேறு பிரதேசங்களுக்கிடையிலும் சமனற்ற வளர்ச்சியின் காரணமாகத் தெலுங்கானா, விதர்பா, கூர்க்காலாந்து போன்ற தனி மாநில கோரிக்கைகள் எழுந்துள்ளன. தெலுங்கானா தனி மாநிலத்தை காங்கிரஸ் கட்சி தனி மாநிலமாக அறிவித்துவிட்டது.

ஒரு மொழி பேசுபவர்களை உடைத்து மொழிவழி தேசிய இனங்களைப் பல மாநிலங்களாக உடைப்பதன் மூலம் தேசிய இனம் உருவாவதை தடுத்து நிறுத்துவது மட்டுமல்ல, அதன் மூலம் மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தை பிளவுபடுத்தி பன்னாட்டுக் கம்பெனிகளின் கொள்ளைக்கு வழிசெய்துவருகிறது. சிறுசிறு மாநிலங்கள் அமைப்பது இறுதியில் ஏகாதிபத்தியவாதிகளுக்கே பயனளிக்கும். இக்கொள்கையிலும் காங்கிரசும், பா.ஜ.க.வும் ஒரே கொள்கையையே கடைபிடிக்கின்றன.

இந்திய அரசு பல மொழி பேசும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கிறது. இந்தியா தேசிய இனங்களின் சிறைக்கூடமாக விளங்குகிறது. இந்திய அரசு இந்தியாவிலுள்ள அனைத்துத் தேசிய மொழிகளையும் ஆட்சிமொழியாக்க மறுக்கிறது. இந்திய அரசியல் சட்டம் இந்தியையும், ஆங்கிலத்தையும்தான் அதிகாரப்பூர்வமான ஆட்சி மொழிகளாக அங்கீகரித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 40 ஆண்டுகாலத் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் இரு மொழிக் கொள்கைகளின் விளைவாக ஆங்கிலம்தான் அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. தாய்மொழி, தமிழ்மொழி இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. இந்திய அரசாங்கத்தின் தேசிய இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கும் போதுதான் தமிழ்மொழி உள்ளிட்ட அனைத்துத் தேசிய மொழிகளும் ஆட்சிமொழிகளாகும்.

ஈழத் தமிழினத்தின் மீதான இன அழிப்புப் போர்க்குற்றம்

சோனியா-மன்மோகன் கும்பலின் தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசாங்கம் இலங்கை மீதான இந்தியாவின் மேலாதிக் கத்தைத் திணிப்பதற்காக, ராஜபக்சே கும்பல் ஈழத் தமிழினத்தின் மீது நடத்திய இன அழிப்பு இறுதிப் போருக்குத் துணைபோனது. அந்தப் போரில் இலங்கை அரசுக்கு அனைத்து வகையிலும் உதவி செய்தது. இறுதிப் போரில் ஒரு லட்சம் ஈழத் தமிழர்களைக் கொன்றொழிப்பதற்குத் துணைபோனது. ஈழத் தமிழர்களுக்குத் துரோகமிழைத்தது.

இலங்கையில் இறுதியில் நடந்த இறுதிப் போருக்கு இந்தியா, அமெரிக்கா இரண்டு நாடுகளுமே உதவி செய்தன. பிரிட்டனும் இலங்கைக்கு இராணுவ உதவி செய்தது. ஈழத்தில் நடந்த இன அழிப்புப் போர்க்குற்றங்களுக்கு இம்மூன்று நாடுகளுக்கும் பங்குண்டு. எனவே இவைகளும் போர்க்குற்றவாளிகளே.

ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் இலங்கை மீதான தனது மேலாதிக்கத்தைத் திணிப்பதற்காக, இராஜபக்சே கும்பலைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காகப் போர்க்குற்றங்களுக்கான விசாரணை தேவை என்று ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தீர்மானத்தை மூன்று ஆண்டுகளாகக் கொண்டுவருகிறது. இத்தீர் மானம் இலங்கையில் நடந்தது தமிழின அழிப்புப் போர் என்பதையே அங்கீகரிக்கவில்லை. மாறாக ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈழத் தமிழர்களுக்கு அற்பச் சலுகைகள் வழங்குவது என்றே பேசுகிறது. அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானம் தமிழர் பகுதிகளிலிருந்து சிங்கள இராணுவத்தை வெளியேறக் கோரவில்லை. தமிழர் பகுதிகளைச் சிங்கள மயமாக்கும் போக்கை எதிர்க்கவில்லை. இந்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது. ஆனால் இவ்வாண்டு அத்தீர்மானத்தை ஆதரிக்க மறுத்ததன் மூலம் இராஜபக்சே கும்பலுக்குத் தமது விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கை இராணுவத்துக்கும் இன்னும் இந்தியாவில் பயிற்சி கொடுத்துவருகிறது. அந்தளவுக்குச் சிங்கள இனவெறி அரசுக்கு உற்ற துணைவனாகக் காங்கிரஸ் ஆட்சி செயல்பட்டு ஈழத்தமிழ் மக்களுக்குத் துரோகமிழைத்து வருகிறது.

மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல தமது சொந்த நாட்டுத் தமிழக மீனவர்களுக்கும் துரோகமிழைக்கிறது. வங்கக் கடலில் தமிழக மீனவர்களின் மீன் பிடிப்பு உரிமையை இலங்கை அரசு தடைசெய்துவருகிறது. எல்லையை மீறினார்கள் என்று கூறி 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றுள்ளது. பல்லாயிரக்கணக்கானோரை அடித்து முடமாக்கியுள்ளது. அவர்களின் படகுகளை உடைத்துள்ளது. அதை இந்திய அரசு தடுத்து நிறுத்தவில்லை. தமிழகத்திற்குச் சொந்தமான கச்சத்தீவைத் திரும்பப் பெற மறுக்கிறது. அது இந்தியாவின் பகுதி அல்ல என்று நீதிமன்றத்தில் அடாவடி பேசுகிறது. இவ்வாறு தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையையும் காங்கிரஸ் கட்சி அழித்துவருகிறது.

ஒட்டுமொத்தமாகக் காங்கிரஸ் கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சி புதிய தாராளக் கொள்கைகளையும், அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்குச் சேவை செய்யும் கொள்கைகளையும் தீவிரமாகச் செயல்படுத்தியது. அது இந்திய மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும், ஈழத் தமிழ் மக்களுக்கும் மாபெரும் துரோக ஆட்சியாகவும் இலஞ்ச ஊழலில் திளைத்து ஒரு பாசிசக் கொடுங்கோல் ஆட்சியாகத் திகழ்கிறது.

10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியின் விளைவுகள் குறித்து பல்வேறு கட்சிகளின் நிலைப்பாடுகள்

காங்கிரசும் பாசிசக் கட்சியே

காங்கிரஸ் கட்சியினால் தலைமை தாங்கப்பட்ட UPA அரசாங்கம் புதிய தாராளவாதக் கொள்கைகள் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய காலனியாதிக்கக் கொள்கைகளைச் செயல்படுத்தியதன் விளைவாக நாடும் மக்களும் எல்லாத் துறைகளிலும் புதிய காலனிய அடிமைத்தனத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

1930ஆம் ஆண்டுகளின் பெரும் மந்தத்தைவிட (great depression) மிகக் கடுமையான ஒரு நெருக்கடியை உலகச் சந்தை அமைப்பு சந்தித்துக்கொண்டுள்ள நிலையில், காங்கிரஸ் ஆட்சி நாட்டைப் பன்னாட்டு கம்பெனிகள் மற்றும் கார்ப்பரேட் குழுமங்களின் பிடிக்குள் தள்ளியுள்ளது.

சங் பரிவாரத்தின் இந்து மதப் பாசிசத்திற்கு எதிராகப் போராடுவதாகக் காங்கிரஸ் கட்சி உரிமை கொண்டாடுவதும் கூடப் பொய்யானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. UPA ஆட்சியின் கீழ், காங்கிரஸ் கட்சியின் மதவாதத்துடன் சமாதானப்படுத்திக் கொள்ளும் கொள்கைகளைப் பயன்படுத்திக்கொண்டு, மதவாதச் சக்திகள் வலிமை பெற்றவையாகிவிட்டன. காங்கிரஸ் ஆட்சியின் கீழ், அரசு எந்திரம் மதவாதமயமாக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி பயங்கரவாதத்தையும் மதவாதமாக்கியது. இஸ்லாமியர்களை ஒட்டுமொத்தமாகப் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கான இலக்குகளாகக் கருதியது; அதே சமயம் RSS பரிவாரத்தின் அமைப்புகளான பஜ்ரங் தளம், வி.எச்.பி. ஆகிய வையும் பா.ஜ.க.வின் தலைவர்களும் பாபர் மசூதியைத் தரை மட்டமாக்குவது போன்ற மதவாதக் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் கூடத் தப்பித்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். குஜராத்தில் நடைபெற்ற மதக் கலவரத்தில் ஈடுபட்ட இந்து மதவாத ஆர்.எஸ்.எஸ். காடையர்கள் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொண்டார்கள்.

காங்கிரஸ் கட்சியும் மதச் சார்பற்ற கட்சியல்ல. மேலும் காங்கிரஸ் கட்சி மதவாதச் சக்திகளைத் தேர்தல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திய ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது.

இந்துத்துவமே மதச்சார்பின்மைக்கு மிகச் சிறந்த, சக்தி வாய்ந்த பாதுகாவலன்என்று காங்கிரஸ் கமிட்டி நிறைவேற்றிய தீர்மானம் கூறுகிறது.

பா.ஜ.க.வின் பெரும்பான்மை மதவாதத்தை, காங்கிரஸ் கட்சி தனக்கே சொந்தமான, வேறுவகைப்பட்ட ஒரு காரியவாத மதவாதத்தைக் கொண்டு எதிர்க்கும் தந்திரத்தை மேற்கொண்டுள்ளது என்பதுதான் அதன் காரியக் கமிட்டித் தீர்மானம் எடுத்துக் காட்டுகிறது.

1983-ல் நடைபெற்ற ஜம்மு தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, இந்து மதவாதச் சக்திகளுடன் கூடிக் குலாவியது. பின்னர் மதவெறியைக் காரணம் காட்டி அடக்குமுறைகளை ஏவிவிடுவதைத் தமது கொள்கையாக இந்திரா காந்தி கடைபிடித்தார்.

1980-ஆம் ஆண்டு, இந்திரா காந்தி, தாராளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையின் முதற்கட்டச் சீர்திருத்தத்தைத் தொடங்கிவைத்தார். தாராளமயமாக்கல் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதால் எழுந்த மக்களின் எதிர்ப்புகளைச் சந்திப்பதற்காக மதவாதச் சக்திகளிடம் தஞ்சம் புகுந்தார்.

1980-ஆம் ஆண்டில் நடைபெற்ற விஷ்வ இந்து பரிஷத் மாநாட்டில் பங்கு கொண்டதும், அகாலிகளுக்கு எதிராகப் பிந்தரன் வாலே தலைமையில் சீக்கிய மதவெறியைத் தூண்டியதும், பின்னர் அதே சீக்கிய மதவெறிக்கு இந்திராகாந்தி பலியானதும் நாடே அறியும்.

இந்திராகாந்தி கொலை செய்யப்பட்ட பிறகு, 1984இல் நடைபெற்ற தேர்தலில் இருந்து, இந்து மதவெறியைப் பயன் படுத்துவது என்பது இந்திரா காங்கிரசின் தேர்தல் செயல் தந்திரங்களின் அடிப்படையாக இருந்தது.

இராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது இந்து மதவெறியர் களின் ஆதரவைப் பெறுவதற்காக, 30 ஆண்டுகளாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்த பாபர் மசூதியை இந்துக்கள் வழிபடுவதற்குத் திறந்துவிட்டார்.

1991--96 ஆம் ஆண்டுகளில் நரசிம்மராவ் ஆட்சி தனது சிறுபான்மை அரசாங்கத்திற்குப் பா.ஜ.கவின் ஆதரவைப் பெறும் பொருட்டும், நாட்டை அடகுவைக்கும் துரோகத்திலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்கும், சங் பரிவார், பா.ஜ.க.வினர் பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்குவதற்குக் கள்ளத்தனமாக ஆதரவளித்தது.

இவ்வாறு காங்கிரஸ் கட்சி, மதவாத வாக்குவங்கியைப் பயன்படுத்தும் கொள்கையைக் கடைபிடித்து வந்தது, கடைபிடித்து வருகிறது.

காங்கிரஸ் கட்சியும் அரசு பயங்கரவாதத்தையும், பெருந் தேசிய வெறியையும், விரிவாதிக்க கொள்கைகளையும், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை மறுப்புக் கொள்கையையும் இன்றும் பல ஜனநாயக விரோதப் பாசிசக் கொள்கைகளைக் கடைபிடித்துவரும் கட்சிதான். 1976-இல் நெருக்கடிகால ஆட்சியை நடத்திய கட்சிதான்.

சுருங்கக் கூறின் பா.ஜ.க இந்தியப் பாசிசத்தின் ஒருபக்கம் என்றால், காங்கிரஸ் கட்சி அதன் மறுபக்கம்.

அடிப்படையான கொள்கைகளைப் பொறுத்தமட்டில், பா.ஜ.க காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே வேறு பாடில்லை. பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய இரண்டு ஆளும் வர்க்கக் கட்சிகளை மையமாகக் கொண்டு இரண்டு எதிர் எதிரான தேர்தல் கூட்டணிகளை உருவாக்குவதில் ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களுடைய இந்திய அடிவருடிகளும் பெருமளவிற்கு வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் தங்களின் நலன்களுக்குச் சேவை செய்யக் கூடிய பொருளாதாரத் திட்டங்களுக்குச் சேவை செய்யக் கூடிய பொருளாதாரத் திட்டங்களை நிரந்தரமாக அமல்படுத்தவும் நாடாளுமன்ற ஆட்சி முறையின் நெருக்கடியைப் பயன்படுத்தி இந்திய அரசைப் பாசிச மயமாக்கவும் முயல்கின்றனர். இன்று நாட்டிலுள்ள நாடாளுமன்ற ஆட்சி முறையை நீக்கிவிட்டு, ஒரு பாசிசச் சர்வாதிகார ஆட்சி முறையை உருவாக்க முயல்கின்றனர்.

பாரதிய ஜனதா கட்சி

பா.ஜ.க என்பது சுதந்திரமாக இயங்கும் ஒரு அரசியல் கட்சி அல்ல. ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவாரம் என்ற காவிச்சட்டை அமைப்புகளின் சித்தாந்தமான இந்துத்துவத்திற்கும் அவற்றின் இந்து ராஷ்டிரம்என்ற அரசியலுக்கும் வடிவம் தரும் கட்சியே பாரதிய ஜனதா கட்சியாகும். பா.ஜ.க தனது அரசியல் குறிக்கோளும், திட்டமுமான இந்து ராஷ்டிரத்தைக்கைவிடாது. பா.ஜ.க ஒரு அரசியல் கட்சி என்ற முறையில், தனது செயல் தந்திரங்களைச் சூழ்நிலைக்கேற்ப மாற்றி கொள்ளலாம். அதன் செயல்தந்திரங்களில் ஏற்படும் மாற்றத்தைக்கொண்டு, அது இந்து மதப் பாசிசக் கொள்கைகளைக் கைவிட்டுவிட்டது என்றோ, மாற்றிக்கொண்டது என்றோ நம்புவது அப்பாவித்தனம். (உதாரணமாக இன்றைய நாடாளுமன்றத் தேர்தலில் வளர்ச்சிஎன்ற தேர்தல் முழக்கத்தை முதன்மை படுத்துவதால் அது பாசிசத்தைக் கைவிட்டதாகக் கருத முடியாது.) இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்ற வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் திட்டத்தின் கீழ் பா.ஜ.க செயல்பட்டு வருகிறது. அதாவது ஏகாதிபத்தியத்தின் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய தாராளவாதக் கொள்கைகளை நடைமுறை படுத்தக்கூடிய ஒரு இந்து ராஷ்டிரமாக மாற்றிவிடச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கார்ப்பரேட் குழுமங்களினால் தலைமை தாங்கப்படும் ஆளும் வர்க்கத்தினருக்கும், ஏகாதிபத்தியம் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் தொண்டூழியம் செய்வதற்கு மதவாதம்தான் பா.ஜ.க.வினுடைய மிக முக்கியமான கருவியாகும்.

பா.ஜ.க.வினால் தலைமைதாங்கப்படும் NDA வுக்கு, ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தின் ஒரு சக்திவாய்ந்த கருவியாக இந்து இராஷ்டிரம் செயல்படுகிறது. நடைமுறையில் பிற்போக்கு ஆளும் அமைப்புக்குச் சேவை செய்வதில் காங்கிரஸ் தலைமை தாங்கப்படும் UPAவும் பா.ஜ.கவினால் தலைமை தாங்கப்படும் NDAவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும்.

ஆகையால், சங் பரிவாரத்தின் மோடியை அம்பலப்படுத்தும் போது, முற்போக்கு சக்திகள் காங்கிரசால் தலைமைதாங்கப்படும் பிற்போக்கு ஆட்சிக்குச் சாதகமாகவிடும் அபாயத்தைக் குறித்து எச்சரிக்கையுடன் பேசவேண்டும்.

பா.ஜ.க.வின் வளர்ச்சிமுழக்கம் ஒரு பித்தலாட்டமே!

பாரத் நிர்மான்என்ற காங்கிரசின் முழக்கத்திற்கு எதிராக குஜராத் மாதிரிஎன்ற பா.ஜ.க.வின் முழக்கத்தை ஆய்வு செய்தால் வளர்ச்சி பற்றிய சர்ச்சையில் பா.ஜ.க.வின் வாதத்தில் சாரம் எதுவும் இல்லை என்பதையும் அதன் தத்துவத்தின் வறுமையையும் காணலாம்.

இந்த இரண்டு கட்சிகளும் 16 ஆண்டுகள் இந்த நாட்டை ஆட்சி செய்த கூட்டணிகளுக்குத் தலைமை தாங்கின. இந்த இரண்டு கட்சிகளின் கொள்கைகள், குறிப்பாகப் பொருளாதாரக் கொள்கைகள் ஒத்தவையாகவே இருந்தன. இந்த இரண்டு கட்சிகளும் புதிய தாராளவாதக் கொள்கைகளையே பின்பற்றின. அதாவது புதிய காலனியாதிக்கத்துக்குச் சேவை செய்யும் கொள்கைகளையும், விவசாயிகளுக்கு விரோதமான கொள்கைகளையும், ஏழை எளிய மக்களுக்கு எதிரான கொள்கைகளையும், சிறு வணிகர்களுக்கும், தேசிய முதலாளிகளுக்கு எதிரான கொள்கைகளையும், தொழிலாளி வர்க்கத்துக்கு எதிரான கொள்கைகளையும், சிறுபான்மை மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் எதிரான கொள்கைகளையே பின்பற்றின.

இந்த இரண்டு கட்சிகளின் குறிப்பான வளர்ச்சித் திட்டங்களுக்கிடையில் வேறுபட்ட சாயல்களுக்கு (Shades) அழுத்தம் தரப்பட்டிருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இந்த இரண்டு கட்சிகளின் வளர்ச்சித் திட்டங்கள் ஒத்த தன்மை வாய்ந்தவைதான். இந்த இரண்டு கட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள், தொழில் துறையிலும் வேளாண்மைத் துறையிலும் பெரும் கார்ப்ரேட்டுகள், பன்னாட்டு கம்பெனிகளின் வளர்ச்சிக்கு வழிவகை செய்து தருவது, நேரடி அன்னிய மூலதனத்தை ஊக்குவிப்பது, பொது வினியோகத் துறை போன்ற மக்களின் நலன்களுக்கும் பயன்படக் கூடிய திட்டங்களை நீர்த்துப் போகச் செய்வது போன்றவையே இவ்விருக் கட்சிகளின் திட்டங்களுக்கு அடிப்படையாக இருக்கிறது.

இருப்பினும், இந்தியாவிலேயே முதல் மாநிலம் குஜராத் என்றும், குஜராத் மாதிரியான வளர்ச்சி என்றும் பா.ஜ.க பிரச்சாரம் செய்கிறது. இந்தப் பா.ஜ.க முழக்கம் எந்த ஆதாரமும் இல்லாத ஒரு மோசடி என்பதைப் பின்வரும் தகவல்கள் தெளிவுபடுத்தும்.

குஜராத் மாதிரி வளர்ச்சிஎன்பதன் பல்வேறு அளவுகோல்களைக் கொண்டு பார்க்கும்போது அது மிகப்பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. அன்னிய முதலீடு மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுதல் முதல் பொதுநலன் மற்றும் கல்வி அறிவு கொடுத்தல் வரையிலான அளவுகோல்களில் மற்ற மாநிலங்களைவிட குஜராத் பின்தங்கியே உள்ளது. 2011-12ஆம் ஆண்டு தொழில் வளர்ச்சி பற்றிய ஆய்வறிக்கையில் குஜராத்திற்கு 4வது இடமே கிடைத்துள்ளது. குஜராத்தில் தனிநபர் வருமானம் இந்தியாவின் 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையில் குஜராத் இந்தியாவிலேயே 17-வது இடத்தில் உள்ளது. அன்னிய முதலீடுகளைக் குஜராத் மிக அதிகமாக ஈர்த்துள்ளது என்பதும்கூட உண்மை அல்ல. குஜராத் அதிலும் முதன்மை இடத்தில் இல்லை. தேசிய மாதிரி ஆய்வுக் கழகத்தின் (NSSO) ஆய்வின்படி சத்துணவு, கல்வி, வேலைவாய்ப்பு, ஊதியம், நுகர்பொருள்களின் விலைக் குறியீடு, கிராமப்புற வளர்ச்சித் திட்டங்கள், சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஒட்டு மொத்தச் சமூகத்தின் ஆரோக்கியம் இவை அனைத்திலும் இந்தியாவில் குஜராத் மிகவும் பின்தங்கியே உள்ளது. ஆனால் மோடி கும்பலோ மிகப்பெரும் பித்தலாட்டத்தின்மூலம் குஜராத் மாநிலம் முதன்மை மாநிலம் என்று வாய்ச்சவடால் அடிக்கிறது. கார்ப்பரேட் ஊடகங்களின் மாபெரும் மோசடியே குஜராத் வளர்ச்சிஎன்ற நாடகம்.

இந்துத்துவத்திலிருந்து வளர்ச்சி என்ற முழக்கம்

1980 ஆண்டுகளில், சங் பரிவாரம் இந்துத்துவம் என்ற முழக்கத்தின் மீது குவிப்பதன் மூலமாகவும், ஒரு அகண்ட பாரதம் அரசியல் அடையாளத்தை உருவாக்குவதின் மூலமாகவும், பா.ஜ.க.வுக்கு இந்து மதவாத ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு பிரதேசத்தை உருவாகும் முயற்சியை மேற்கொண்டது.

அயோத்தி இராமர் கோயிலுக்கான கிளர்ச்சி என்ற ஒரு அரசியல் இயக்கம் நடத்தப்பட்டது. இந்த இயக்கம் 1992ல் பாபர் மசூதியைத் தரைமட்ட மாக்குவதற்கு இட்டுச் சென்றது. ஆனால் சங் பரிவாரத்தால் மசூதியை அழித்த பிறகு வந்த தேர்தல்களில் அது எதிர்பார்த்த அரசியல் இலாபத்தை அடைய முடியவில்லை. இதுவரை நடந்த பொதுத்தேர்தல்களின் அனுபவத்தைச் சங் பரிவாரம் ஆய்வு செய்தது.

1977 மற்றும் 1984 தேர்தல்கள் நீங்கலாக, அதாவது 1975--77 ஆம் ஆண்டுகளில் அவசரகால நிலை பிரகடனம் செய்தபோது அரசு நிறுவனங்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் அட்டூழியங்கள் நிகழ்ந்ததும், இந்திராகாந்தி கொலை செய்யப்பட்டபோதும், முறையே பிரதானப் பிரச்சனைகளாக இருந்தன.

1952ல் இருந்து நடைப்பெற்ற ஒவ்வொரு பொதுத் தேர்தல்களிலும் ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் வளர்ச்சி”, “வறுமையை ஒழிப்போம்போன்ற பொருளாதார முழக்கங்கள் இருந்தன. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வின் மையமான முழக்கமாக இருந்த இந்துத்துவா என்ற முழக்கத்தால் பெரும்பான்மையான இந்து மதவாதிகளைக் கூடக் கவர்ந்திழுப்பதற்குப் போதுமானதாக இல்லை என்பதை இந்துத்துவ வெறிகொண்ட அமைப்புகள் உணர்ந்தன.

மத்திய ஆட்சியைக் கைப்பற்றுவதற்கும், சாதி, மதவாதம், வகுப்புவாதம் மற்றும் பிரதேசவாத அரசியலைப் பின்பற்றும் சுயநல அரசியல் சக்திகளுடன் கூட்டணி அமைத்தல் என்பதின் மூலம் மத்திய ஆட்சியை கைப்பற்றுவது சாத்தியம் எனக் கருதின. சங் பரிவாரம் மற்றும் பா.ஜ.கவின் அரசியல் செயல் தந்திரம் பற்றிய இத்தகைய நிலைப்பாடுதான், “வளர்ச்சியுடன் சேர்ந்த இந்துத்துவம்” “Development Plus Hindutvaஎன்ற அரசியல் கொள்கைக்கும், வளர்ச்சித் திட்டத்திற்கு முதன்மை தருவது என்ற கொள்கைக்கு இட்டுச்சென்றது.

ஏகாதிபத்தியச் சேவையில் அரசுசாரா அமைப்புகள்

அன்னா அசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் போன்ற காந்தியவாத அமைப்புகள் முதல் கேஜரிவாலின் ஆம் ஆத்மி வரை மற்றும் கூடங்குள அணு உலை எதிர்ப்பு உதயகுமார் கும்பலும் உள்ளிட்டு அனைத்தும் அரசுசாரா அமைப்புகளேயாகும். அரசுசாரா அமைப்புகள் கூறிக்கொள்வதைப் போல அவை அரசுசாரா அமைப்புகள் அல்ல. அரசுசார்பு அமைப்புகளேயாகும்.

ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து இவை நிதி உதவி பெறுகின்றன. உள்நாட்டு அரசுகளிடமிருந்தும் தனிப்பட்ட துணைக் காண்டிரக்டர்கள் என்ற முறையில் இவை நிதி உதவி பெறுகின்றன. தத்தம் நாட்டு அரசுகளுடன் நெருக்கமான உறவுகள் கொண்டுள்ள பன்னாட்டு நிறுவனங்களின் மானியத்தால் நடக்கும் தனிப்பட்ட அறக்கட்டளைகளிடமிருந்தும் நிதி உதவி பெறுகின்றன. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள பல்வேறு அரசு ஏஜென்சிகளுடன் அடிக்கடி வெளிப்படையாக ஒத்துழைத்து வேலை செய்கின்றன. இந்த அரசுசாரா அமைப்புகள் தமது திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவை அல்ல. நிதி உதவி அளிக்கும் வெளிநாட்டு எஜமானர்களுக்கு மட்டும்தான் இவை பதில் சொல்ல வேண்டும். நிதி உதவி அளிப்பவர்கள்தான் இவற்றின் வேலைகளைப் பரிசீலிக்கின்றனர். மேற்பார்வையிடுகின்றனர். நிதி அளிப்பவர்களின் நிபந்தனைகளுக்கும், நலன்களுக்கும் ஏற்பவே இவை செயல்பட முடியும்.

அரசுசாரா அமைப்புகளுக்கு ஏகாதிபத்தியவாதிகள் நிதி உதவி அளிப்பதென்பது உள்நாட்டு பிற்போக்குக் கும்பல்கள் ஏகாதிபத்திய நலன்களைக் காப்பீடு செய்துகொள்வது போன்றதுதான். உள்நாட்டு கொடுங்கோல் ஆட்சியாளர்கள் பரந்துபட்ட மக்கள்திரள் இயக்கங்களால் தூக்கியெறியப்படும் நிலை ஏற்படும்போது, இந்த அரசுசாரா அமைப்புகள் உள்நாட்டு ஆளும் வர்க்கங்களாலும் ஏகாதிபத்தியவாதிகளாலும் அரசியல் வெற்றிடத்தை இட்டு நிரப்புவோராக முன்நிறுத்தப்படுகின்றனர்.

1960ஆம் ஆண்டுகளில் என்றுமே காணாத அளவிற்கு உலகளவில் அரசியல் கொந்தளிப்புகளும், பூசல்களும் பெருமளவில் வெடித்துக் கிளம்பின. ஏகாதிபத்தியவாதிகளுக்கும் அவர்களுடைய அடிவருடிகளான உள்நாட்டு ஆட்சியாளர்களுக்கும் எதிராக ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் கிளர்ந்தெழுந்து உறுதியான தேசவிடுதலை போராட்டங்களை நடத்தினர். அரசியல் ரீதியில் பெரும்பாதிப்புகளை அவை உருவாக்கின. அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களின் கூட்டாளி நாடுகளும் இத்தகைய சூழலை மூன்று வழிகளில் எதிர்கொண்டனர். நேரடி தலையீடு, பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் திசை திருப்பும் நடவடிக்கைகள் மூலம் இத்தகைய எதிர்ப்புகளைச் சந்தித்தனர்.

1965ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஃபோர்டு பவுண்டேஷன், ராக்பெல்லர் பவுண்டேஷன் போன்ற அறக்கட்டளைகள் அமெரிக்க அரசோடு சேர்ந்து கொண்டு இந்தோனேஷியாவில் கம்யூனிஸ்டு ஆட்சியைக் கவிழ்த்து 5 லட்சம் கம்யூனிஸ்டுகளை வேட்டையாடின. 1970களில் தென் ஆப்பிரிக்காவில் கம்யூனிஸ்டுக் கட்சியைக் கலைப்பதற்கும், நெல்சன் மண்டேலா தலைமையிலான தேசிய விடுதலை இயக்கத்தைப் புரட்சிப் பாதையிலிருந்து திசைதிருப்புவதற்கும் இத்தகைய அரசுசாரா அமைப்புகளை அமெரிக்க ஏகாதிபத்தியம் பயன்படுத்திக் கொண்டது.

1970ஆம் ஆண்டுகளில் நடந்த இந்தியப் பாகிஸ்தான் போரின் போது இந்தியா ரசியச் சமூக ஏகாதிபத்திய ஆதரவோடு அந்தப் போரை நடத்தியது. அதற்கு எதிராகப் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா படையை அனுப்பியது. அப்போரைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க இந்திராகாந்தி நெருக்கடி நிலையை அறிவித்தார்.

அவசரகால நிலையின் அடக்குமுறைகளை எதிர்த்துக் காந்தியவாதி ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டுப் போராடின. அத்தகைய போராட்டங்களுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும் அதன் ஆதரவுடன் இந்தியாவில் செயல்பட்ட அரசுசாராத் தொண்டு நிறுவனங்களும் ஆதரவளித்தன. ஏராளமாக நிதி உதவி அளித்தன. சிவில் உரிமைகளுக்கான மக்கள் இயக்கம் (PUCL), ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பு (PUDR), காந்திய அமைதிக்கான நிதி போன்ற அமைப்புகளுக்கு அமெரிக்கா ஆதரவையும் நிதி உதவியையும் வழங்கியது.

1980களில் ரீகன் உருவாக்கிய ஜனநாயகத்திற்கான திட்டம்நேரடி இராணுவத் தலையீடு, தாராளப் பொருளாதாரக் கொள்கைகளைச் செயல்படுத்துவது, ஒடுக்கப்பட்ட நாட்டு மக்களின் தேசிய விடுதலைப் போராட்டங்களைத் திசை திருப்பும் நோக்கம் கொண்டதுதான். இத்திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்த அரசுசாரா அமைப்புகளை ஒரு கருவியாக அமெரிக்கா பயன்படுத்துகின்றது.

1980களில் போலந்தின் வாலேசா தலைமையிலான சாலி டாரிட்டிஅமைப்பிற்கு வாட்டிகனின் போப்பும், அரசுசாரா அமைப்புகளும் ஆதரவளித்து அந்நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தின.

1990களில் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தைப் பிளவு படுத்தவும், அதற்குப் பின் அதிலிருந்து பிரிந்த நாடுகளில் (Commonwealth of Independent States) உள்நாட்டு கலகத்தின் மூலம் அமைதி வழியில் பல வண்ணப் புரட்சிகள் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவும் அரசுசாரா அமைப்புகள் பெரும் பங்காற்றின.

தற்போது பயங்கரவாத எதிர்ப்பு, பேரழிவு ஆயுதங்களை ஒழிப்பது எனும் பேரில் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆப்கனிலும், ஈராக்கிலும் இராணுவத் தலையீட்டின் மூலம் பல லட்சம் மக்களைக் கொன்றொழித்து அந்த நாடுகளில் ஆட்சி மாற்றம் செய்ததற்கு இந்த அரசுசாரா அமைப்புகள் உதவிகள் புரிந்தன.

அமெரிக்க ஏகாதிபத்தியம் சிரியாவில் மக்களைத் தூண்டி உள்நாட்டு கலவரம் நடத்துவதையும், ஈரானை மிரட்டுவதையும் இந்த அமைப்புகள் ஆதரிக்கின்றன.

அரபு வசந்தம் என்றழைக்கப்படும் எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் நடந்துவரும் அந்த நாடுகளின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான மக்களின் கலகங்களை, அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கும் அந்த நாடுகளில் அமெரிக்காவின் பொம்மை ஆட்சிகளை உருவாக்குவதற்கும் அரசுசாரா அமைப்புகள் மாபெரும் பங்காற்றுகின்றன.

இவ்வாறு மனித உரிமை, ஜனநாயகம் பேசிக்கொண்டு ஒரு கையில் குண்டு, மற்றொரு கையில் ரொட்டித் துண்டு என்று அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் நேரடி இராணுவத் தலையீட்டின் மூலம் மூன்றாம் உலகநாடுகளை ஒடுக்குவதற்கு அரசுசாரா அமைப்புகள் தொண்டூழியம் புரிகின்றன.

அமெரிக்க ஏகாதிபத்தியம் 90ஆம் ஆண்டுகளில் உலகம் முழுவதும் திணித்த புதியகாலனியாதிக்கத்திற்கு சேவைசெய்யும் உலகமயம், தாராளமயம், தனியார்மயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் இந்த அரசுசாரா அமைப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஐ.எம்.எப், உலகவங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வர்த்தகக் கழகம் போன்ற நிதி நிறுவனங்கள் மூலம் மூன்றாம் உலக நாடுகளுக்குக் கடன் வழங்கும்போது அந்த நிதியில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கி அரசுசாரா அமைப்புகள் மூலம் திட்டப் பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கின்றன. இந்த அமைப்புகள் பங்கேற்பு மூலம் வளர்ச்சி” “மனித நேயத்துடனானஉலகமயம் என்று ஒரு மனிதநேய முகமூடியை அணிந்துகொண்டு அக்கொள்கைகளுக்குச் சேவை செய்கின்றன.

இன்று இந்தியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசுசாரா அமைப்புகள் செயல்படுகின்றன. அவை ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து ஆண்டுக்குச் சுமார் ரூ.12,000 கோடி நிதி உதவி பெற்றுச் செயல்படுகின்றன. அதில் டில்லியில் மட்டும் 1482 அமைப்புகள் ரூ.2,285 கோடி வெளிநாட்டு நன்கொடை பெற்றுள்ளன. உ.பி.யில் 5,48,194; கேரளாவில் 1,07,797; ம.பிரதேசத்தில் 1,14,000; குஜராத்தில் 75,729 அரசுசாரா அமைப்புகள் செயல்படுகின்றன. ஆந்திராவில் 2,527 அமைப்புகள் ரூ.1,258 கோடியும்; மகாராஷ்டிராவில் 2,056 அமைப்புகள் ரூ.1,107 கோடியும்; தமிழ்நாட்டில் 3,341 அமைப்புகள் ரூ.1,704 கோடியும் நிதி உதவிபெற்றுச் செயல்படுகின்றன. நாட்டின் காவல்துறையினரின் எண்ணிக்கையைவிட அரசுசாரா அமைப்புகளின் (NGOs) எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது. இந்தியாவில் ஏகாதிபத்திய ஆதரவு தொண்டு நிறுவனங்களின் செல்வாக்கை இதிலிருந்து புரிந்துகொள்ளமுடியும்.

ஆம் ஆத்மிகட்சியும் அமெரிக்க எடுபிடி கட்சியே

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அரசு செயல்படுத்திவரும் புதிய தாராளக் கொள்கைகள் மற்றும் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்குச் சேவைசெய்யும் கொள்கைகளுக்கு எதிராக இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகள் உருவாகிவருகிறது. நெருக்கடிகளின் சுமைகள் மக்கள் மீது சுமத்துவதை எதிர்த்தும், மாபெரும் ஊழல்களை எதிர்த்தும் மக்கள் வெறுப்படைந்தனர். இத்தகைய ஒரு சூழலில்தான் அன்னா அசாரே தலைமையில் அரசுசாரா அமைப்புகள் மத்தியக் காங்கிரசிஸ் அரசின் ஊழலை எதிர்த்துப் போராட்டங்களை நடத்தின. அதற்கு மக்கள் மத்தியில் இருந்து பெருமளவில் ஆதரவு பெருகியது. அதில் பங்குபெற்ற கேசரிவால் தலைமையில் பல்வேறு சமூக ஆர்வலர்கள் இணைந்து ஆம் ஆத்மிகட்சியை உருவாக்கியுள்ளனர்.

ஆம் ஆத்மி என்ற கட்சியின் வடிவத்தில் இந்திய அரசியல் களத்தில் ஒரு புதிய சக்தி நுழைவது, இன்று நாட்டிலுள்ள மோசமான சூழ்நிலைகளை மாற்றியமைக்க உதவும் என்று பலரும் வாதிடுகின்றனர். அதையே ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கேஜரிவாலும் ஒரு பேட்டியில் தற்போதைய ஊழல் அரசியலின் மீதான மக்களின் வெளிப்பாடுதான் ஆம் ஆத்மி கட்சி, அது ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும்என்று கூறுகிறார்.

ஆனால் ஆம் ஆத்மி கட்சி காங்கிரசுக்கும் மாற்று அல்ல அல்லது பா.ஜ.க.வுக்கும் மாற்று அல்ல. அதுவும் ஏகாதிபத்திய வாதிகளுக்குக் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்குச் சேவை செய்யும் ஒரு மூன்றாவது கட்சிதான் என்பதை அதன் தேர்தல் அறிக்கைகளும், கொள்கை அறிக்கைகளும் அம்பலமாக்கியுள்ளன.

அன்னிய முதலீட்டை முற்றிலும் எதிர்க்க வேண்டியதில்லை. ஆனால் அனுமதிக்கும் துறைகளைப் பொறுத்தே (சில்லறை வணிகம்) எதிர்ப்பதாகஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. இவ்வாறு அக்கட்சி அன்னிய மூலதனத்திற்கு நாட்டை காட்டிக்கொடுக்கும் ஏகாதிபத்திய உலகமயமாக்கல் கொள்கையை ஆதரிக்கிறது.

ஆம் ஆத்மி கட்சி எந்த வர்க்கத்திற்கான கட்சி என்பதை அதன் தலைவரே பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தி உள்ளார். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குச் செல்வங்களை உற்பத்தி செய்வது அவசியம் எனவே அவர்களின் கட்சி முதலாளிகளின் நண்பனாக(industry friendly) இருக்கும் என்று கூறுகிறார். அதே சமயம் புல்லுருவி மூலதனத்திற்கு மட்டுமேதான் எதிரி என்றும் கூறுகிறார். இவ்வாறு ஆம் ஆத்மி கட்சி பெரும் தரகு முதலாளித்துவ வர்க்கங்களின் கட்சிதான் என்பதை அதன் தலைவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான யோகேந்திர சர்மா, நாங்கள் வலதுசாரிக்கும் இடதுசாரிக்கும் நடுநிலையான கொள்கைகளை உடையவர்கள் அல்ல. வலது, இடது என்ற இருமை எதிர்வைக் கடந்தவர்கள். இருபதாம் நூற்றாண்டின் புரட்சிகரச் சித்தாந்தங்கள் மீது (கம்யூனிசம்) ஆழ்ந்த ஐயம் கொண்டவர்கள். எங்களது விழுமியம் என்பது கடைசி மனிதன் மீதான அக்கறைதான். அதை விட்டுக்கொடுக்க முடியாது. அதாவது தனிமனித உரிமைகளைப் பாதுகாப்பது என்பது தங்களின் கொள்கை என அறிவிக்கிறார்.

ஆனால் தொழில்துறையில் அரசாங்கத்திற்கு வேலை இல்லை என்றும் கார்ப்பரேட் துறை நாட்டின் தொழில் துறையில் பெரும் பங்கு வகிக்க வேண்டும் என அக்கட்சியின் கொள்கை கூறுகிறது. மேலும் ஊழல் பிரச்சினையில் கூடப் பெரும்பாலான முதலாளிகள் ஊழலுக்குப் பலியாகிவிட்டனர் என்று கூறுகின்றனர். இதன் மூலம் ஊழலின் ஊற்றுக்கண்களான பெரும் தரகு முதலாளித்துவ வர்க்கங்களை இலக்காக வைக்க மறுக்கிறார்கள். இவ்வாறு பெரும் கார்ப்பரேட் முதலாளித்துவத்தை ஆதரிப்பதன் மூலம் எந்த வர்க்கத்தின் தத்துவத்தை ஆதரிக்கிறார்கள் என்பதையும் அறிவித்துவிட்டனர்.

ஆம் ஆத்மி கட்சி ஆரம்பித்து ஒரு ஆண்டிற்குள்ளேயே நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் 290 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும், 100 தொகுதிகளில் அது வெற்றிபெறும் என்றும் கூறுகின்ற அளவுக்கு ஒரு அகில இந்தியக் கட்சியாக எவ்வாறு மாற முடிந்தது. அதற்கான நிதி எங்கிருந்து வருகிறது. அகில இந்தியக் கட்சியாகத் தங்களைக் காட்டிக் கொள்வதற்கான நோக்கம் என்ன?

அதற்கும் கேஜரிவாலே பதில் கூறுகிறார். மேதாபட்கர், அருணா ராய் போன்ற பொது வாழ்வில் உள்ள சிந்தனையாளர்கள் அனைவரையும் ஒரு கூட்டணியாக அமைத்து ஆம் ஆத்மி கட்சி உருவானது என்கிறார். அதாவது நாடு முழுவதும் ஏகாதிபத்திய நிதி உதவியில் செயல்பட்டுவரும் அரசுசாரா அமைப்புகளின் வலைப்பின்னலில் இருந்து உருவாக்கப்பட்டதுதான் ஆம் ஆத்மி கட்சி என்பதை அதன் தலைவர் ஒப்புக்கொள்கிறார். அவ்வாறுதான் கூடங்குளம் உதயகுமார் உள்ளிட்டவர்களும் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளனர்.

கேஜரிவால் உள்ளிட்ட இந்த அரசுசாரா அமைப்புகள் எதுவும் கடந்த 10 ஆண்டுகளாகக் காங்கிரஸ் கட்சி அமல்படுத்தி வந்த புதிய தாராளக் கொள்கைகளையோ, அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்குச் சேவை செய்யும் கொள்கைகளையோ எதிர்க்க வில்லை மாறாக அத்தகைய தேசத் துரோகக் கொள்கைகளை ஆதரித்தன.

மேலும், சாமானிய மக்களின் நலன்களைத் தனியார்மயக் கொள்கைகளின் கீழ் பெறமுடியும் என்று கேஜரிவால் தனியார்மயக் கொள்கைகளை ஆதரிக்கிறார். எத்தகைய தனியார்மயக் கொள்கை கள் பல மாநிலங்களிலும் தண்ணீர் கட்டணம், மின்சாரக் கட்டணம் உயர்வுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் ஒழிக்கப்படுவதற்கு வழிவகுத்ததோ அந்தத் தனியார்மயக் கொள்கைகளை அக்கட்சி ஆதரிக்கிறது. புதிய காலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை ஆதரிக்கிறது.

உண்மையில் அன்னா அசாரே உள்ளிட்ட இந்த அரசுசாரா அமைப்புகள் நடத்திய ஊழல் எதிர்ப்பு போராட்டங்களோ அல்லது பிற போராட்டங்களோ அவைகள் அனைத்தும், மன்மோகன் கும்பல் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் போது அமெரிக்காவிற்குப் பணிந்து போகுமாறு நிர்ப்பந்தம் செய்வதற்காக நடத்தப்பட்டதுதான். ஊழலை ஒழிப்பது என்பது அவர்களின் உண்மையான நோக்கமும் அல்ல.

ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் உருவான ஆம் ஆத்மி கட்சி இத்தேர்தலில் மதவாதப் பா.ஜ.க.வைத் தோற்கடிப்பதுதான் தனது தேர்தல் செயல் தந்திரம் என அறிவித்துள்ளது. ஊழலா, மதவாதமா என்று கேட்டால் ஊழலைவிட மதவாதத்தை எதிர்ப்பதுதான் உடனடியான பணி என அக்கட்சி கூறுகிறது. இந்துத்துவப் பாசிசப் பா.ஜ.க.வைத் தோற்கடிக்கப்போவதாக அக்கட்சி கூறுகிறது.

ஆனால் இக்கட்சி பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் பா.ஜ.க. வெற்றியடைய மறைமுகமாகச் சேவை செய்கிறது. மதவாதத்திற்கு எதிரான மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்கே ஆம் ஆத்மி கட்சியின் செயல்தந்திரங்கள் பயன் படுகிறது. அக்கட்சியின் இத்தகைய செயல் தந்திரம் இந்துமதப் பாசிசப் பா.ஜ.க.வை வெற்றியடையவே பயன்படும்.

எனவே ஊழல் எதிர்ப்பு, மதவாத எதிர்ப்பு என்று பேசும் ஆம் ஆத்மி கட்சி காங்கிரசுக்கோ, பா.ஜ.க.வுக்கோ மாற்றான கட்சியல்ல. மாறாகப் புதிய பொருளாதாரக் கொள்கைகளும், அமெரிக்காவுக்குச் சேவை செய்யும் ஒரு மூன்றாவது கட்சியே யாகும். அக்கட்சி தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க் கங்களின் நலன்களுக்குச் சேவை செய்யும் கட்சியேயாகும். ஆம் ஆத்மி கட்சி ஏகாதிபத்தியவாதிகளின் கைப்பாவையாகச் செயல் பட்டு நாட்டு மக்களுக்குத் துரோகம் செய்யும் பிற்போக்குக் கட்சியாகும். அக்கட்சியைத் தனிமைப்படுத்துவதே புரட்சிகர ஜனநாயகச் சக்திகளின் பணியாகும்.

மற்ற முதலாளித்துவக் கட்சிகளும் பிரதேசக் கட்சிகளும்

பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட இந்தியாவில், அகில இந்திய அரசும், ஆளும்வர்க்கக் கட்சிகளும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதாலும், எதேச்சதிகார ஆட்சியை நடத்துவதாலும், ஆளும் வர்க்கங்களுக்கிடையில் பல்வேறு வடிவங்களில் முரண்பாடுகள் கூர்மை அடைவதும்; இந்துமத, சாதி ஒடுக்குமுறை தீவிரமடைவதால் பல்வேறு பகுதிகளில் பல்வேறுபட்ட அரசியல் கட்சிகள் தோன்றுவதற்கு இட்டுச்சென்றது.

1991ல் ஏகாதிபத்திய உலக மயமாக்கல் மற்றும் புதிய தாராளவாத அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப் பட்டதன் விளைவாக நாட்டின் அரைகுறை இறையாண்மை பறிபோவதாலும் பாசிசப் போக்குகள் வளர்வதாலும், மாநிலங் களுக்கு இடையிலும் மாநிலங்களுக்குள்ளும் ஏற்றத்தாழ்வு வளர்வ தாலும் பல்வேறு மாநிலக் கட்சிகளும், சாதிவாதக் கட்சிகளும் தோன்றுகின்றன.

ஆனால் அவை, எதேச்சதிகாரத்தை எதிர்த்த ஜனநாயகத்திற் கான போராட்டத்தையும், நாட்டின் விடுதலைக்கான கோரிக்கை களையும், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையையும், சாதி மற்றும் தீண்டாமை ஒழிப்பிற்கான கோரிக்கையையும், அடைவதற்கான போராட்டத்தில் ஊன்றி நிற்கவில்லை. அவை எங்கெல்லாம் ஆட்சியில் பங்கேற்கிறதோ அங்கெல்லாம் அவை எல்லா ஆளும் வர்க்கக் கொள்ளைகளை மட்டுமல்லாமல் ஏகாதிபத்திய உலகமயமாக்கலையும் அமல்படுத் துவதற்கு அரசாங்கங்களுக்குத் துணைபோகின்றன.

இவை மதவாத (இந்து மதவாத) பாசிசச் சக்திகளையும் சாதிவாத சக்திகளையும் எதிர்த்துப் போராடுவதில்லை.

ஆளும் வர்க்கக் கொள்கைகளுக்குப் பரிந்து பேசுதல் அல்லது அவற்றை அமல்படுத்துவதன் மூலமாக அவை பிற்போக்கு தரகு முதலாளித்துவக் கட்சிகள் கொள்கைகளை அமல்படுத்துவதற்குப் பிற கட்சிகளுடன் போட்டியிடுகின்றன.

தேர்தலின்போது அல்லது தேர்தலுக்குப்பிறகும் இந்தக் கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடனோ அல்லது பா.ஜ.க.வுடனோ அல்லது வேறு எந்த ஆளும் வர்க்கக் கூட்டணியுடனோ கூட்டணி வைத்துக்கொள்ள முயல்கின்றன.

இந்தக் கட்சிகள் அடிப்படையில் ஆளும் வர்க்கக் கட்சிகளின் கொள்கைகளை ஆதரிப்பதால், ஆளும் வர்க்கத்தின் அரசியல் கூட்டணிகளுக்கு எதிராக, ஏகாதிபத்தியம், தரகுமுதலாளித்துவம் மற்றும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக இன்றைய சூழலில் தேசிய, ஜனநாயக (பாசிசத்தை எதிர்த்த மதச்சார்பற்ற) தேசிய இனச் சுயநிர்ணய உரிமை, மற்றும் எந்த விதமான மக்கள் நலன்களுக்கான ஒரு அரசியல் கூட்டணியை அமைத்துக் கொள்வது சாத்தியமும் இல்லை. அவற்றால் காங்கிரஸ் அல்லாத பா.ஜ.க அல்லாத ஒரு கூட்டணியை அமைத்துக்கொள்வது சாத்தியமில்லை.

இடது, வலது போலிக்கம்யூனிஸ்டுக் கட்சிகள்

சி.பி.ஐ., சி.பி.எம் ஆகிய இரண்டு கட்சிகளுமே மார்க்சிய -லெனினிய பாட்டாளிவர்க்கப் புரட்சிப் பாதையை கைவிட்டு விட்டன. குருசேவின் திருத்தல்வாத பாராளுமன்ற பாதையை, அமைதிவழி மாற்றம் என்ற பாதையை மேற்கொண்டுவிட்டன.

மார்க்சிய -லெனினியப் புரட்சிப்பாதை பின்வருமாறு கூறுகிறது:

அரசு என்பது ஒரு வர்க்கத்தை இன்னொரு வர்க்கம் அடக்குமுறை செய்வதற்கான ஒரு இயந்திரமாகும். மிகவும் ஜனநாயக அரசும் கூட ஒரு வர்க்கத்தை இன்னொரு வர்க்கம் அடக்குமுறை செய்வதற்கான ஒரு இயந்திரம்தான். முதலாளித்துவக் குடியரசு, முதலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தையும் பெரும் திரளான உழைக்கும் மக்களையும் ஒடுக்கும் இயந்திரமாகும். ஆக சுதந்திரமான முதலாளித்துவ குடியரசில் கூட அரசு முதலாளித்துவ வர்க்க சர்வாதிகாரமாகவே இருக்கிறது. மேலும் தற்கால ஏகாதிபத்திய முதலாளித்துவ அரசுகளில் இராணுவ வகைப்பட்ட சர்வாதிகாரமே நிறுவப் பட்டிருப்பதைக் காணலாம்.

அரசு இயந்திரத்தின் முக்கிய அங்கம் இராணுவமும் போலீசும்தான். எல்லா ஆளும் வர்க்கங்களும் தமது ஆட்சியை பாதுகாத்துக்கொள்ள பலாத்காரத்தைதான் சார்ந்திருக்கிறன. முதலா ளித்துவத்தினால் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் அரசு இயந்திரத்தை தொழிலாளி வர்க்கம் அப்படியே எடுத்துக்கொண்டு அதைத் தனது குறிக்கோளுக்குப் பயன்படுத்தமுடியாது. அதைத் தகர்த்தெறிய வேண்டும் என்று மார்க்சும் எங்கெல்சும் கூறினார்கள். லெனின் இது புரட்சிப் பற்றிய அடிப்படையான விதி என்றார். பாட்டாளி வர்க்கப் புரட்சியின் உயிர்நாடியான பிரச்சினை அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் முதலாளித்துவ அரசு அதிகார நிறுவனங்களை பலாத்காரத்தின் மூலம் ஒழித்துக்கட்டி பாட்டாளி வர்க்க அரசு அதிகாரத்தை நிறுவுவதும், முதலாளித்துவ அரசை அகற்றி அவ்விடத்தில் பாட்டாளி வர்க்க அரசை நிறுவுவதே யாகும். இதுதான் மார்க்சிய லெனினிய புரட்சிப் பாதையாகும். இப்பாதையை திருத்தல்வாத சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகள் நிராகரித்துவிட்டு குருசேவின் திருத்தல்வாத பாதையை பாராளு மன்ற பாதையை மேற்கொண்டுள்ளனர்.

குருசேவின் திருத்தல்வாத பாராளுமன்றப்பாதை புரட்சி வழியை நிராகரித்துவிட்டு அமைதி வழி மாற்றம் என்ற முழக்கத்தை முன்வைக்கிறது. முதலாளித்துவ சர்வாதிகாரத்தின் கீழ் முதலாளித்துவ தேர்தல் விதிகளுக்குட்பட்டு பாட்டாளிவர்க்கம் பாராளுமன்றத்தில் நிலையான பெரும்பான்மை பெறமுடியும் என்று கூறுகிறது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பாட்டாளிவர்க்கம் பெறமுடிந்தால், அதுவே அரசு அதிகாரத்தை கைப்பற்றியது ஆகும் என்று குருசேவ் கும்பல் கூறுகிறது. முதலாளித்துவ அரசு இயந்திரத்தை கைப்பற்றியதையே பாட்டாளி வர்க்கம் அரசு இயந்திரத்தைக் கைப்பற்றியது ஆகும் என்று குருசேவ் திருத்தல்வாதம் கூறுகிறது.
தொழிலாளி வர்க்கம் நாட்டில் ஒரு வலிமை மிக்க புரட்சி இயக்கத்தை உருவாக்குவதன் மூலம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பிடித்து அதனை ஒரு மக்கள் அதிகாரத்தின் கருவியாக மாற்றுவது என்பதன் பொருள், முதலாளித்துவ வர்க்கத்தின் இராணுவ அதிகாரவர்க்க அரசு இயந்திரத்தை அழித்து அவ்விடத்தில் பாராளுமன்ற வடிவிலான ஒரு புதிய பாட்டாளிவர்க்க மக்கள் அரசை நிறுவுவது என்பதாகும்என்கிறார் குருசேவ்.

பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தில் ஒரு நிலையான பெரும்பான்மையை பெரும்பட்சத்தில் அதுவே சமுதாயத்தை சோஷலிச சமுதாயமாக மாற்ற வகைசெய்யும் என்று கூறுகிறார்கள் திருத்தல்வாதிகள். இவ்வாறு இரண்டு திருத்தல்வாதக் கட்சிகளும் புரட்சிப்பாதைக்கு துரோகம் இழைத்துவிட்டு (அமைதிவழி பாதை) பாராளுமன்றப் பாதையை ஏற்றுக் கொண்டுள்ளன.

நாடாளுமன்றம் குறித்த பாட்டாளிவர்க்கக் கட்சியின் செயல்தந்திரங்கள்

திருத்தல்வாதிகள் சமாதானப் பாதைக்கும் பாராளுமன்ற சந்தர்ப்பவாதப் போக்குக்கும் ஏற்பவே செயல்தந்திரங்களை வகுத்துக் கொள்ளுகின்றனர்.

முதலாளித்துவமும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறையும் வரலாற்று வழியில் காலாவதியாகிவிட்டது. அதாவது முதலாளித்துவ நாடாளுமன்ற முறையின் சகாப்தம் முடிவடைந்து விட்டது. பாட்டாளி வர்க்க சகாப்தம் துவங்கிவிட்டது. எனினும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறை வரலாற்று வழியில் காலாவதியாகிவிட்டது என்பதன் அடிப்படையில் பாட்டாளி வர்க்கக் கட்சிகள் தங்களது செயல்தந்திரங்களை வகுத்துக் கொள்ளக் கூடாது. முதலாளித்துவ நாடாளுமன்றம் அரசியல் வழியில் (நடைமுறையில்) காலாவதியாகிவிட்டதா இல்லையா என்பதை பொறுத்தே தமது செயல்தந்திரங்களை வகுத்துக்கொள்ள வேண்டும் என்று லெனின் கூறினார்.

லெனின் முன்வைத்தை இரண்டு வரையறைகள்

1. முதலாளித்துவமும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறையும் வரலாற்று வழியில் காலாவதியாகிவிட்டது. அதாவது முதலாளித்துவ நாடாளுமன்ற முறையின் சகாப்தம் முடிந்துவிட்டது. பாட்டாளிவர்க்க சர்வாதிகார சகாப்தம் துவங்கிவிட்டது.

2. முதலாளித்துவ நாடாளுமன்ற முறை அரசியல் வழியில் காலாவதியாகிவிட்டதா இல்லையா என்பதைப் பொறுத்தே பாட்டாளிவர்க்க கட்சிகள் இப்பிரச்சினை குறித்து தமது செயல் தந்திரத்தை வகுத்துக்கொள்ள வேண்டும்.

முதலாளித்துவ நாடாளுமன்றம் அரசியல் ரீதியில் காலாவதியாகாத போது அதில் பங்கேற்கும் செயல்தந்திரம் கடைப்பிடிப்பதும் கூட நிரந்தரமானது அல்ல. பாராளுமன்றத்தில் நிரந்தரமாக பங்கேற்பதாலோ அல்லது நிரந்தரமாக புறக்கணிப் பதாலோ இரண்டு செயல்தந்திரங்களும் தவறானது என்று லெனின் கூறினார்.

மேற்கூறப்பட்டதில் முதல் வரையறை போர்த்தந்திர அனுகு முறையையும், இரண்டாவது வரையறை செயல்தந்திரத்தை வகுத்துக்கொள்வதற்கான அடிப்படையையும் வழங்குகிறது.

திருத்தல்வாதிகள் முதலாளித்துவ நாடாளுமன்றம் குறித்த மார்க்சிய லெனினிய போர்த்தந்திரத்தை மட்டுமல்ல செயல்தந்தி ரத்தையும் புறக்கணித்து விட்டார்கள். நாடாளுமன்ற பாதையை ஏற்றுக்கொண்டு தங்களது எல்லா நடவடிக்கைகளையும் நாடாளு மன்றவாத நடவடிக்கைகளாக குறைத்துக் கொண்டுவிட்டார்கள். இரண்டு திருத்தல்வாதக் கட்சிகளும் மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான போராட்டத்தை கைவிட்டுவிட்டார்கள்.

1967 பொதுத் தேர்தலில், சி.பி.ஐ.எம். கட்சியின் தலைமை யின் கீழ் இடதுசாரி முன்னணி அமைக்கப்பட்டது. அது மே.வங்கத்திலும் கேரளாவிலும் ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்ததும் சி.பி.எம்., சி.பி.ஐ. தலைமைகள் ஆளும் அமைப்பிற்கு எதிராக அரசியல் போராட்டத்தை ஆழப்படுத்துவதற்கான வாய்ப்பை பயன்படுத்த மறுத்துவிட்டன. இந்த இரண்டு திருத்தல்வாதக் கட்சிகளும் உழுபவனுக்கு நிலம்சொந்தம் என்ற அடிப்படையில் நிலப்பிரபுத்துவ நிலங்களை பறிமுதல் செய்து நிலச் சீர்திருத்தங்களை அமல்படுத்த அஞ்சின.

1977 பொதுத் தேர்தலில் சி.பி.எம். கட்சியின் தலைமை தாங்கப்பட்ட இடதுசாரி முன்னணி மே.வங்கத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சிக்குவந்தது. 34 ஆண்டுகள் ஆட்சி செய்தது. இடதுசாரி முன்னணி மத்திய அரசாங்கத்தின் கொள்கைகளை அமல்படுத்தும் அளவுக்கு தரம் தாழ்ந்துவிட்டது.

1991ல் காங்கிரஸ் அரசாங்கம், புதிய தாராளக் கொள்கைகளை அமல்படுத்தியபோது, மாநில ஆட்சிகளின் மீது அதை திணித்த போது, மேற்கு வங்கம், கேரளம் மற்றும் திரிபுரா அரசாங்கங்கள் அந்தக் கொள்கைகளை மற்ற மாநில அரசாங்கங்களுடன் போட்டி போட்டுக்கொண்டு அமல்படுத்தியது.

புதிய தாராளக் கொள்கைகளை மேற்கு வங்க அரசாங்கம் அமல்படுத்தியபோது சிங்கூர் மற்றும் நந்திகிராம் மக்கள் தங்கள் பிரதேசங்களை விட்டு வெளியேற்றப்படுவதை எதிர்த்தனர். அம்மக் களின் போராட்டங்களை இடதுசாரி அரசாங்கம் கொடுமையான முறையில் அடக்கி ஒடுக்கியது. அந்த ஒடுக்குமுறை மற்ற மாநில அரசுகளின் ஒடுக்குமுறையை விஞ்சிவிட்டது.

புதிய தாராளக் கொள்கைகளை அமல்படுத்தியதால் இடதுசாரி அரசாங்கங்கள் மக்களிடமிருந்து தனிமைப்பட்டது. 2011ல் நடந்த தேர்தல்களில் சி.பி.எம். தலைமையிலான இடதுசாரி முன்னணி மே.வங்கத்திலும் கேரளாவிலும் தோல்வி அடைந்தன. நாடு முழுவதிலும் சி.பி.எம். தலைமையிலான இடதுசாரி முன்னணி மக்களின் ஆதரவை இழந்தது.

2004இல் இடதுசாரிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் தலை மையிலான ஐ.மு. கூட்டணி சிறுபான்மை அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்தபோது, நாடாளுமன்றத்தில் தங்களுக்கு இருந்த பலத் தைப் பயன்படுத்தி, காங்கிரஸ் அரசாங்கத்தின் தேசவிரோத, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக போராடவில்லை. மாறாக, பா.ஜ.க.வை அரசாங்கத்திற்கு வெளியே நிறுத்துவது, மதவாதச் சக்திகளை பலவீனப்படுத்துவது என்ற பேரால் மன்மோகன் கும்பலுக்கு ஆதரவளித்து வந்தனர். இதைப் பயன்படுத்திக்கொண்டு சிறுபான்மை காங்கிரஸ் அரசாங்கம் தனது தேசவிரோத கொள்கைகளையும் மக்கள் விரோதக் கொள்கை களையும் செயல்படுத்தி வந்தது. அது மதவாத சக்திகளை பலவீனப்படுத்துவதற்கு பதிலாக பலப்படுத்தவே செய்தது.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசை நிராகரியுங்கள், பா.ஜ.க.வை தோற்கடியுங்கள், சி.பி.எம்.முக்கு வாக்களியுங்கள் என்ற முழக்கத்தை வைக்கிறார்கள். மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக மாற்று உருவாக்குவதற்கான வழிமுறையைப் பற்றி எந்தத் தெளிவான செயல்தந்திரமும் இக்கட்சிகளிடம் இல்லை.

தமிழ்நாட்டில் 16வது நாடாளுமன்றத் தேர்தல்

தமிழகத்தில், 16வது நாடாளுமன்றத் தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சியும், அ.தி.மு.க.வும் தனித்துப் போட்டியிடுகின்றன. தி.மு.க. தலைமையில் சிறிய கட்சிகள் பங்குபெற்றுள்ள ஒரு கூட்டணியும்; பா.ஜ.க. தலைமையில் மதவாதச் சாதிவாத, கட்சிகளும், தமிழினவாத ம.தி.மு.க.வும், பதவி- தொகுதி- நிதி மட்டுமே இலட்சியங்களாகக் கொண்ட தே.மு.தி.க.வையும் கொண்ட கூட்டணியும்; இடது, வலது போலிக் கம்யூனிஸ்டு கட்சிகள் தனி அணியாகவும் போட்டி போடுகின்றன.

காங்கிரஸ் கட்சி

காங்கிரஸ் கட்சி கடந்த 10 ஆண்டுகளாகச் செயல் படுத்தி வந்த புதிய தாராளக் கொள்கைகள், அமெரிக்க மேலாதிக்கத்திற்குச் சேவை செய்யும் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாகவும்; ஈழத் தமிழின அழிப்புக்கு ராஜபக்சே கும்பலுக்குத் துணைப் போனதாலும்; தமிழ் மொழி, தமிழ்த் தேசியம் மற்றும் தமிழக மீனவர்களுக்கு இழைத்த மாபெரும் துரோகத்தின் காரணமாகவும் அக்கட்சி முற்றாகத் தனிமைப்பட்டுத் தனித்து நிற்கிறது. அக்கட்சி முற்றாக ஒழிக்கப்படவேண்டிய ஒரு பாசிசக் கட்சியேயாகும்.

அ.தி.மு.க. தனி அணி

ஜெயலலிதா அம்மையார் 10 ஆண்டு கால மக்கள் விரோதக் காங்கிரஸ் ஆட்சியைத் தூக்கியெறிய வேண்டும் என்று முழங்குகிறார். விலைவாசியை உயர்த்தி மக்களின் வயிற்றில் அடித்ததை எதிர்த்தும், மாபெரும் ஊழல்கள் செய்த காங்கிரசுக்குப் பாடம்புகட்ட அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும் என்று கோருகிறார். ஆனால் ஜெயலலிதா அரசாங்கம் விலைவாசி உயர்வுக்கும் மாபெரும் ஊழல்களுக்கும் காரணமான உலகமயத் தனியார்மயக் கொள்கைகளை எதிர்க்கவில்லை. மாறாக அந்தக் கொள்கைகளைச் செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என்று மோடியோடு போட்டி போடுகிறார்.

ஜெயலலிதா அரசாங்கம் பொறுப்புக்கு வந்தவுடன் பேருந்துக் கட்டணம், மின்கட்டணம், பால் விலை உட்பட அனைத்தையும் பன்மடங்கு உயர்த்தி மக்களின் மீது சுமைகளைச் சுமத்தியது. மத்திய அரசுடன் சேர்ந்துகொண்டு நெருக்கடியின் சுமைகளை மக்கள் மீது சுமத்தினார் ஜெயலலிதா. அதை மூடி மறைக்கவே இலவசத் திட்டங்களை வாரி வழங்குகிறார் ஜெயலலிதா. ஆனால் மத்திய அரசு விலைகளை உயர்த்தியதை எதிர்ப்பதாகக் கூறுகிறார். மாபெரும் ஊழலுக்குக் காரணமான தனியார்மயத் தாராளமயக் கொள்கைகளை எதிர்க்காமல் ஊழல் ஒழிப்பு பேசுவது வெறும் நாடகமே. மேலும் ஜெயலலிதாவே ஊழல் வழக்கில் சிக்கி கர்நாடக நீதிமன்றத்தில் வாய்தா வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார் என்பதை மக்கள் மறந்துவிடப் போவதில்லை.

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை போர்க் குற்றவாளி இராஜபக்சே மீது சர்வதேச விசாரணை, ஈழம் அமைந்திட ஈழத்தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு என்று ஈழ ஆதரவு நிலையை காட்டி  வாக்குகளை அறுவடை செய்ய நினைக்கிறார். ஆனால் இவரின் ஈழ ஆதரவு நிலை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதல்ல.

2008--09 இறுதி யுத்தத்தின்போது ஈழத் தமிழர்கள் கொல்லப்படுகிறார்களேஎன்ற கேள்விக்கு, அங்கு ஈழம் இன்னமும் அமையவில்லை. எனவே இலங்கைத் தமிழர்கள் என்றுதான் குறிப்பிட வேண்டும்  என்று கூறி ஜெயலலிதா அவர்கள் அன்று ஈழத்தை எதிர்த்தார். இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது இயல்புதான் இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல என்று ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்தினார்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கருணாநிதி கபட நாடகம் நடத்தியபோது, ஜெயலலிதா இலங்கையில் நடக்கும் உள்நாட்டு போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசுக்கு இல்லை என்பது ஐந்து முறை முதலமைச்சராக உள்ள கருணாநிதிக்குத் தெரியாதாஎன்று கேள்வி எழுப்பினார். போரை நிறுத்தவேண்டும் என்பதன் மூலம் கருணாநிதி விடுதலைப்புலிகளைக் காப்பாற்றுவதற்கு முயற்சிக்கிறார் என்றார். அத்துடன் விடுதலைப்புலிகளைத் தடை செய்வதற்கு நானே காரணம்என்று பெருமைப்பட்டவர். பிரபாகரனைக் கைது செய்ய இராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று விடுதலைப்புலிகளுக்கு எதிராக விஷத்தைக் கக்கியவர். இன்று ஜெயலலிதா ஈழத் தாய் வேடம் போடுவதற்குத் தேர்தல் தான் காரணம். தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சியை வாக்குகளாக மாற்றும் தந்திரம்தான் இது. தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதா அம்மையார் ஈழ ஆதரவைத் தொடருவார் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.  

தி.மு.க. அணி

தி.மு.க.- தனது தேர்தல் அறிக்கையில் கூட்டாட்சி; மதச்சார்பின்மை; ஈழத்தமிழர் பிரச்சினையில் பொதுவாக்கெடுப்பு, சமூக நீதி (இட ஒதுக்கீடு) எனப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது. ஆனால் ஈழப் பிரச்சினையில் கருணாநிதி தனி ஈழக் கோரிக்கையை வெகுகாலத்திற்கு முன்பே கைவிட்டுவிட்டார்.

தி.மு.க. கடந்த 10 ஆண்டுகளாகக் காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்றுப் புதிய தாராளக் கொள்கைகளைச் செயல்படுத்தியது. மற்றும் அமெரிக்க மேலாதிக்கத்திற்குச் சேவை செய்யும் மக்கள் விரோதத் தேச விரோத, கொள்கைகளுக்குத் துணைபோனது. மத்திய ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து அன்னிய மூலதனத்திற்குச் சேவை செய்து மாபெரும் ஊழலில் ஈடுபட்டது. அத்துடன் ஈழத் தமிழின அழிப்புப் போருக்கும் துணைபோனது. மாபெரும் ஊழல் மற்றும் ஈழத் துரோகத்தின் காரணமாக அக்கட்சி தமிழக மக்களிடமிருந்து தனிமைப்பட்டது. ஊழல் பிரச்சினையில் காங்கிரஸ் தனது மகள் கனிமொழியைக் காப்பாற்றவில்லை என்பதற்காக மத்திய ஆட்சியிலிருந்து விலகியது. ஆனால் ஈழப்பிரச்சினைக்காகத்தான் ஆட்சியிலிருந்து விலகியதாக நாடகமாடி டெசோவைத்தொடங்கியது.

கருணாநிதி தேர்தல் கூட்டணிக்காகக் கதவைத் திறந்து வைத்துக் காத்திருந்த போதும் எந்த ஒரு பெரிய கட்சியும் அக்கட்சியுடன் கூட்டுசேரத் தயங்கின. கருணாநிதியின் பலமான கூட்டணி என்ற கனவு நிறைவேறவில்லை. விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி போன்ற சிறு கட்சிகளுடன் சேர்ந்து தி.மு.க. கூட்டணி அமைத்து இத்தேர்தலைச் சந்திக்கிறது.

ஈழப் போர் முடிந்தபிறகு தமிழ் ஈழக் கோரிக்கை சாத்தியமில்லை என்றார் கருணாநிதி, போர்க்குற்றம் பற்றி பேசினால் தமிழர்களுக்குத் துன்பம் அதிகரிக்கும் என்று பேசினார். தன் மகள் கனிமொழியை இலங்கைக்கு அனுப்பி ராஜபக்சேயுடன் விருந்துண்டு பரிசுகளை வாங்கிவரச் செய்தார். இன்று தமிழ் மக்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சியை வாக்குகளாக மாற்றுவதற்கு ஈழவிடுதலை ஆதரவு எனக் கபட நாடகம் ஆடுகிறார்.

தமிழை மத்திய ஆட்சி மொழியாக்க அரசியல் சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டுவர வேண்டுமென தி.மு.க. தேர்தல் அறிக்கை கூறுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் முக்கிய இடம் பிடித்திருந்த தி.மு.க. அதை பயன்படுத்தித் தமிழை ஆட்சி மொழியாக்க எள் முனை அளவு கூட முயற்சி செய்யவில்லை. அத்தகைய வாய்ப்பு தி.மு.க.விற்கு மீண்டும் ஏற்படுவதற்கு வாய்ப்பும் இல்லை. அத்தகைய வாய்ப்பை விட்டுவிட்டுத் தற்போது தமிழை ஆட்சி மொழியாக்குவோம் என்று பேசுவது ஒரு மாபெரும் மோசடியேயாகும்.

தி.மு.க.-வின் தேர்தல் அறிக்கை சமூகநீதி பற்றி பேசுகிறது. மண்டல் கமிஷன் அறிக்கையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று அந்த அறிக்கை கூறுகிறது. பிற்படுத்தப்பட்ட சாதிகளில் உள்ள ஆளும் வர்க்கப் பிரிவினருக்கும் சேர்த்து இடஒதுக்கீடு என்பது உண்மையான சமூக நீதி ஆகாது. பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த ஜனநாயக வர்க்கங்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீட்டு சலுகை என்பதே உண்மையான சமூக நீதியாகும்.  எனினும் இன்று புதிய தாராளக் கொள்கைகளை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்துவதால் அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டுச் சந்தை நியதி செயல்படுத்தப்படுகின்றன. சந்தை நியதியின்படி இயங்கும் தனியார் நிறுவனங்கள் இடஒதுக்கீட்டு சலுகைகளை வழங்காது. தி.மு.க.-வோ தனியார்மயக் கொள்கைகளை ஆதரித்துக்கொண்டே சமூக நீதி பேசுவது சமூகநீதிக்குச் சவக்குழி வெட்டுவதேயாகும்.

மதச்சார்பற்ற ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிக்கப் போவதாகத் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மதச்சார்பின்மை என்ற பேரால் தேர்தலுக்குப்பிறகு காங்கிரசோடு கூட்டணி அமைப்பது என்ற திட்டத்தைக் கருணாநிதி மேடையிலேயே அறிவித்துள்ளார். அத்துடன் ஏதோ அக்கட்சி மதச்சார்பற்ற கட்சி என்றோ அது பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்காது என்றோ பொருள் இல்லை. ஒரு வேளை பா.ஜ.க ஆட்சி அமைக்கத் தி.மு.க. உதவ வேண்டிய நிலை வந்தால் அதற்கும் கருணாநிதி தயங்கமாட்டார். அதற்காகத்தான் மோடி எனது நண்பர் என்று கூறுகிறார் கருணாநிதி. மேலும் அக்கட்சி 6 ஆண்டு காலம் பா.ஜ.க வின் ஆட்சியில் பங்கேற்ற கட்சிதான் என்பதைத் தமிழ் மக்கள் மறக்க முடியாது. எனவே கருணாநிதியின் மதச்சார்பின்மை ஓடும் நீரில் எழுதுவது போன்றதுதான்.

எனவே தி.மு.க., தமிழ் இனத்திற்கும் தமிழ்மொழிக்கும் சமூக நீதிக்கும், மதச்சார்பின்மைக்கும் விசுவாசமாகச் செயல்படும் கட்சி அல்ல. அது தமிழ் மக்களின் நலன்களைத் தமிழ்த் தேசிய உரிமைகளைக் காட்டிக் கொடுக்கும் கட்சியேயாகும்.

தமிழ் மொழி ஆட்சி மொழி ஆவதற்கான தடை எது?

அ.தி.மு.க, தி.மு.க, போன்ற திராவிடக் கட்சிகள் தமிழ் மொழியை ஆட்சிமொழியாக்குவது என்று பேசினாலும், அக்கட்சிகள் 40 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆண்டபோதிலும் தமிழ் மொழி ஆட்சி மொழியாகவோ, நீதிமன்ற மொழியாகவோ, பயிற்று மொழியாகவோ ஆகவில்லையே ஏன்?

இந்திய அரசியல் சட்டத்தின் படி இந்தியும், ஆங்கிலமும் ஆட்சி மொழிகளாக ஆக்கப்பட்டிருக்கின்றன. எனவே பிற தேசிய மொழிகள் இரண்டாம்தர மொழிகளாக ஆக்கப்பட்டுள்ளன. அத்துடன் திராவிடக் கட்சிகள் கடைப்பிடிக்கும் இரு மொழிக் கொள்கை தமிழ் மொழி ஆட்சிமொழியாகவும், பயிற்று மொழியாகவும் ஆவதற்குத் தடையாக இருக்கிறது.

1965ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போதே, அண்ணாவின் காலத்திலேயே தி.மு.க. - இந்தி அரக்கியை எதிர்த்தாலும் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று கோரவில்லை. மாறாக இந்தி ஒரு போதும் வேண்டாம்”, “ஆங்கிலம் எப்போதும் வேண்டும்” (பிவீஸீபீவீ ஸீமீஸ்மீக்ஷீ, ணிஸீரீறீவீsலீ மீஸ்மீக்ஷீ) என்று ஆங்கிலத்தைத்தான் முன்னிறுத்தியது.

1967ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் கூட மத்திய ஆட்சி மொழியாக ஆங்கிலமே நீடிக்கவேண்டும் என்றுதான் கோரியது. தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டுமென்று அண்ணாவின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி கோரவில்லை. தி.மு.க., அ.தி.மு.க. போன்ற திராவிடக் கட்சிகளின் ஆட்சி கடந்த 40 ஆண்டுகளாக இந்தி நுழைந்துவிடும் என்று கூறித் தாய்மொழி, தமிழ் மொழியை ஆட்சி மொழி, பயிற்றுமொழியாக்குவதற்குப் பதிலாக அனைத்துத் துறைகளிலும் ஆங்கில ஆதிக்கத்தைப் பாதுகாத்து வருகின்றன.

1990ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு இக்கட்சிகள் புதியகாலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை ஏற்று அமெரிக்காவின் புதியகாலனியத்திற்கு சேவை செய்வதோடு ஆங்கிலத்தை வளர்ப்பதில் மூர்க்கத்தனமாகச் செயல்படுகின்றன.

புதியகாலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டு வரும் சூழலில், அமெரிக்காவின் புதிய காலனியாக இந்தியா மாற்றப்பட்டுவரும் சூழலில் பன்னாட்டு மூலதனம் நம் நாட்டின் தொழில்துறை, வேளாண்துறை, சேவைத் துறைகள் என அனைத்துத் துறைகளிலும் மென்மேலும் ஆதிக்கம் பெற்றுவருகின்றன. இத்தகைய தேசத்துரோகக் கொள்கைகள் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும், அவற்றின் தேசிய வேட்கைகள் மற்றும் மொழிகளை நசுக்கி ஆங்கில மொழி ஆதிக்கத்தைத் தீவிரப்படுத்தும்படி இந்திய அரசை நிர்ப்பந்திக்கின்றன.

IT உள்ளிட்ட பல துறைகளில் பன்னாட்டு மூலதனங்களைக் கவர்ந்திழுப்பதற்கு ஆங்கிலம் அறிந்த கூட்டம் தேவைப்படுகிறது. மெக்காலே முறையிலான ஆங்கிலவழிக் கல்வியைக் கற்றவர்கள்தான் அன்றும், இன்றும், என்றும் ஏகாதிபத்தியவாதிகளின் தேவைகளுக்கு ஏற்றவர்களாக உள்ளனர். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு அதிக முதலீடு செய்வதற்குக் காரணம் ஆங்கிலம் கற்றவர்கள் இங்கு அதிகமாக இருப்பது ஒரு காரணம் என்று அவர்களே கூறுகின்றனர்.

இதைத்தான் முரசொலி மாறன் அன்று குறிப்பிடும்போது இந்திக்கு இனி இடம் இருக்காது. இனி ஆங்கிலமும் லோக்கல்மொழியும்தான் இருக்கும் என்றார். உண்மையில் திராவிடக் கட்சிகளுக்கு லோக்கல்மொழி ஆங்கிலம்தான். இதையேதான் கருணாநிதி வாழ்வுக்குத் தமிழ், வசதிக்கு ஆங்கிலம்என்று கூறித் தமிழை அடுப்படியில் அடக்கிவைக்கிறார்.

எனவே புதிய தாராளக் கொள்கைகளையும், அமெரிக்காவின் மேலாதிக்கக் கொள்கைகளையும் எதிர்த்துப் போராடித் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கும் போதுதான், திராவிடக் கட்சிகளின் சந்தர்ப்பவாத இரு மொழிக் கொள்கையை நிராகரித்துத் தாய் மொழிக் கொள்கையை - ஒரு மொழிக் கொள்கையைச் செயல்படுத்துவதன் மூலமாக மட்டும்தான் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க முடியும். அனைத்துத் துறைகளிலும் அன்னை தமிழை அரியணை ஏற்ற முடியும்.

இந்துத்துவப் பா.ஜ.க. அணி

இந்து மதவாதப் பாசிசக் கட்சியான பா.ஜ.க.வின் தலைமையில் பதவி வெறிபிடித்த தே.மு.தி.க., சாதிவெறிக் கட்சியான பா.ம.க., தமிழினவாத சந்தர்ப்பவாதக் கட்சியான ம.தி.மு.க. போன்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு அணியாகப் போட்டி போடுகின்றன.

 தமிழின விரோதக் காங்கிரசை விரட்டியடிப்பது, மோடியைப் பிரதமராக்குவது, குஜராத் மாதிரி வளர்ச்சி, ஊழலற்ற ஆட்சி, வெளிநாட்டில் பதுக்கிவைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்பது, இலங்கைத் தமிழர்களின் இன்னலைத் தீர்ப்பது, தமிழக மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது, நதிநீர் இணைப்பு  என்று அந்த அணி அமைப்பதற்கான காரணங்களை அடுக்கினர். கேட்பாரற்றுக் கிடந்த பா.ஜ.க. தன் தலைமையில் ஒரு அணியைக் கட்ட இத்தகைய முழக்கங்களை முன்வைத்தது.

2016ல் தமிழக ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்ற பதவி வெறியில் விஜயகாந்தின் தே.மு.தி.க. பா.ஜ.க. அணியில் அதிக இடம் கேட்டு அடம்பிடித்தது. மறுபுறம் சாதி வெறிக் கட்சியான பா.ம.க. ஏற்கனவே 10 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திவிட்டு மேலும் சாதிவெறிக் கட்சிகளுக்கு அதிக இடம் கேட்டுப் பா.ஜ.க.வை நெருக்கியது. இவ்விரு கட்சிகளும் கொள்கை கோட்பாடற்ற முறையில் பதவிக்காகவும், சீட்டுக்காகவும் நாய்ச் சண்டை போட்டன. அதன் காரணமாக அக்கூட்டணிக்கான அறிவிப்பே காலதாமதமானது.கடைசி நேரத்தில் பேரம் படிந்து கூட்டணி அறிவிக்கப்பட்டது. பதவி பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டதுதான் அந்த அணி என்பது அம்பலமானது.

பதவி வெறி பிடித்த தே.மு.தி.க.

தே.மு.தி.க.விற்கென்று எந்த ஒரு கொள்கையும் கிடையாது. தி.மு.க., அ.தி.மு.க. போன்ற திராவிடக் கட்சிகளின் மீது அதிருப்தி கொண்ட மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள அந்தக் கட்சி பணம், பதவி, தொகுதி என்று விஜயகாந்த் குடும்பத்தின் பேராசைகளை நிறைவேற்றுகின்ற ஒரு கட்சியாகவே செயல்படுகிறது. அக்கட்சிக்குத் தமிழர் நலனோ, தமிழ்த் தேசிய நலனோ, ஒட்டுமொத்த இந்திய நாட்டின் நலன்களோ முக்கியமல்ல. ஒரு பொருட்டுமல்ல. எப்படியாவது வரும் 2016 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் மூலம் தமிழக முதலமைச்சராக வேண்டும் என்பதே விஜயகாந்தின் நோக்கமாகும். அதற்காகத்தான் விஜயகாந்த் இத்தேர்தலில் ஒரு புறம் தி.மு.க.வோடு பேரம் பேசிக்கொண்டே பா.ஜ.க.வை அச்சுறுத்தியே அந்த அணியில் அதிக இடங்களைப் பெற்றார். அத்துடன் ஒரு பெரிய தொகையையும் பெற்றுக்கொண்டார். தே.மு.தி.க.வின் இத்தகைய சுயநலப் பதவி வெறி தமிழக மக்கள் மத்தியில்  அக்கட்சியின் மீது கடுமையான வெறுப்புகளை உருவாக்கியுள்ளது.

சாதி வெறிபிடித்த பா.ம.க.

பா.ம.க. சென்ற சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த பிறகு தேசியக் கட்சிகளுடனோ, திராவிடக் கட்சிகளுடனோ இனிக் கூட்டணி சேரப் போவதில்லை என்று சவடால் அடித்தது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான சாதிக் கலவரங்களை நடத்திப் பிற்படுத்தப்பட்ட சாதி மக்களின் சாதிய வாக்கு வங்கியை உருவாக்குவதன் மூலம் 2016இல் தமிழக ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று இராமதாசு கணக்குப்போட்டார்.

2016 நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டுதான் இராமதாசு சாதிக் கலவரங்களைத் திட்டமிட்டு அரங்கேற்றினார்.நாடகக் காதலை எதிர்ப்போம் என்று கூறி இளவரசன் திவ்யா காதலை எதிர்த்து 2012 நவம்பரில் தர்மபுரியில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்த மூன்று கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. குடிசைகள் கொளுத்தப்பட்டன. 2013 சித்ரா பவுர்ணமி அன்றும் மரக்காணத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதலை தொடர்ந்தது. 

நாடகக் காதலை எதிர்ப்பது என்ற பேரால் கலப்பு மணங்களை, காதல் திருமணங்களை எதிர்ப்பது; தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தனித் தொகுதி முறைகளை மாற்றுவது; தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டு சலுகைகளை ஒழிப்பது; வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் திருத்துவது எனத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக வன்னியச் சாதிவெறியைத் தூண்டியது. இதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பண்ணையடிமை முறைகளைத் திணிப்பது மட்டுமல்லாது மத்திய, மாநில ஆட்சியில் பங்கு பெறுவதற்கு வன்னிய வாக்குவங்கியை உருவாக்குவதும் இராமதாசின் திட்டமாகும். இந்தக் கலவரங்களுக்குப் பின்னால் கொங்கு வேளாளக் கவுண்டர் சாதியைச் சார்ந்த மணிகண்டன் உட்பட 51 சாதி சங்கங்களைச் சேர்த்துத் தமிழக அளவில் சமூக ஜனநாயக முன்னணி என்ற ஒரு தேர்தல் கூட்டணியை இராமதாசு உருவாக்கினார்.

இதுநாள் வரை தமிழகத்தில் பார்ப்பனிய எதிர்ப்பு, வர்ணாசிரம எதிர்ப்பு பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் ஒற்றுமை, சமூக நீதி எனச் சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் இயங்கிவந்தன. இதுநாள்வரை தமிழக அரசியலில் சாதியை எதிர்த்த இயக்கம் என்பது ஒடுக்கும் சாதியை எதிர்த்து ஒடுக்கப்பட்ட சாதிகளின் போராட்டங்களின் வரலாறாக, சமூகச் சீர்திருத்த இயக்கங்களின் வரலாறாக இருந்தது. ஆனால் முதன் முதலில் இராமதாசு தலைமையில் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கும் சாதிகளைச் சார்ந்த ஆளும் வர்க்கப் பிரிவினர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஒடுக்கும் கலவரங்களைத் தூண்டிவிட்டனர். ஒரு எதிர்ப் புரட்சிகரச் சாதிவெறி முன்னணியைக் கட்டியமைத்தார் இராமதாசு. ஆனால் சாதிவெறி முன்னணியினருக்கு இடையில் தேர்தலைச் சந்திப்பதில் ஒற்றுமையுமில்லை. தமிழக மக்கள் மத்தியில் இத்தகைய சாதிவெறிச் சக்திகளுக்கு ஆதரவு பெருகவுமில்லை. தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையையும் இராமதாசு இழந்தார்.

இத்தகைய ஒரு சூழலில்தான் தனது மகனை எப்படியாவது மத்தியில் மந்திரியாக்க வேண்டும், தன் மகன் மீதான ஊழல் வழக்குகளிலிருந்து காப்பாற்றவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவே இந்து மதவெறிப் பாசிசப் பா.ஜ.க.வுடன் இராமதாசு கூட்டணி அமைக்கச் சம்மதித்தார். நடிகன் கட்சி, குடிகாரன் கட்சி என்று எந்தக் கட்சியை இராமதாசு இதுநாள் வரை சாடி வந்தாரோ அதே கட்சியிடம் சரணடைந்தார். தன் மகன் மற்றும் குடும்பத்தின் நிர்ப்பந்தங்களுக்குப் பணிந்து போவது போல் நாடகமாடுகிறார் இராமதாசு. இராமதாசின் இத்தகைய சுயநல வெறியை எதிர்த்து அக்கட்சியிலிருந்து வெளியேறிய தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், பு.த.இளங்கோவன் மற்றும் வன்னியச் சங்கத்தை ஆரம்பித்த ஏ.கே.நடராசன் போன்றோர் வன்னிய மக்களிடம் அம்பலடுத்துகின்றனர். பதவி வெறிபிடித்த பச்சோந்தி ராமதாசின் சாதிவெறி அரசியலை, பா.ம.க.வின் பிற்போக்கு கொள்கைகளை வன்னியச் சாதியைச் சார்ந்த உழைக்கும் மக்களும் அடையாளம் கண்டுவருகின்றனர். எனவே சாதி வெறிக் கட்சியின் நிறுவனர் இராமதாசின் கனவு நிறைவேறப்போவதில்லை.

சந்தர்ப்பவாத ம.தி.மு.க

தமிழ் ஈழம், தமிழர் நலன், தமிழ்நாட்டு உரிமை, தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்குவோம் என்று பேசும் ம.தி.மு.க., சாதிவெறிக் கட்சிகளான பா.ம.க., பாரிவேந்தரின் ஐ.ஜே.கே, கொங்கு வேளாளர் கட்சிகளுடனும்; பணம், பதவியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட தே.மு.தி.க.வுடனும் இந்துத்துவப் பாசிசப் பா.ஜ.க. போன்ற சாதிவெறி மதவெறிக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. ஈழத் தமிழினத்தின் அழிவுக்குக் காங்கிரசே காரணம் எனவே காங்கிரசை எதிர்த்துப் பா.ஜ.க.வை ஆதரிக்கிறோம் என்று வைகோ கூறுகிறார். தமிழ் ஈழம் அமையப் பாடுபடுவோம் என்ற ம.தி.மு.க.வின் நிலைப்பாட்டை உடனடியாகப் பா.ஜ.க.வைச் சார்ந்த வெங்கைய நாயுடு மறுக்கிறார். தனி ஈழத்தை ஏற்க முடியாது என்று கூறுகிறார். ஐக்கிய மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கவும், உண்மையான கூட்டாட்சியை உருவாக்க அரசியல் சாசனத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், இந்த நாடு, இந்திய ஒன்றியம் என்றழைக்கப்படுவதற்குப் பதில் இந்திய ஐக்கிய நாடுகள்என்று அழைக்கப்பட வேண்டும் என்றும் கோரிய ம.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைக்கு எதிராக உடனடியாக அக்கட்சியின் தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பதிலளித்தார். பாரத நாடு என்று அழைக்க வேண்டும் என்று இந்து மத வெறியை வெளிப்படுத்தினார். தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கின்ற, இந்தி மொழியைத் திணிக்கின்ற, மொழிவழி மாநிலங்களை உடைத்துத் தேசிய இனங்களை உடைக்கின்ற இந்து மதப் பாசிசப்  பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு தமிழர் நலன், தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்குவேன், மாநிலத்திற்கு அதிக அதிகாரம், தனி ஈழம் எனப் பேசுவது மாபெரும் மோசடியேயாகும்.

அத்துடன் ஈழப் பிரச்சினையில் இராஜபக்சே மீதான சர்வதேசப் போர்க்குற்ற விசாரணை பிரச்சினையிலும், தனித் தமிழ் ஈழம் தனிநாடு அமைப்பது என்ற பிரச்சினையிலும் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையே பா.ஜ.க.வும் கடைப்பிடிக்கிறது. அதை மூடி மறைத்து ஈழப் பிரச்சினையில் தமிழர் நலன் காக்கப் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து மோடியைப் பிரதமராக ஆக்குவது என்று பேசும் வைகோ அந்த மோடியைவிட கேடிஎன்பதைத்தான் நிரூபித்துள்ளார். மோடி தலைமையில் அமையும் இந்துத்துவ ஆட்சி தமிழுக்கும், தமிழ் நாட்டிற்கும், ஈழத் தமிழர்களுக்கும் துரோகத்தையே செய்யும்.

இந்தியாஎன்கின்ற அடிப்படையில்தான் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தோம். பா.ஜ.க. இந்துத்துவாஎன்றால் அக்கட்சியின் கூட்டணியிலிருந்து விலகிவிடுவோம் என்று தமிழருவி மணியன் இந்துத்துவக் கொள்கைகளை எதிர்ப்பது போல் நாடகமாடுகிறார். ஆனால் பா.ஜ.க தனது வளர்ச்சி என்ற முழக்கத்திற்குப் பதிலாக அதன் தேர்தல் அறிக்கையில் இந்துத்துவ முழக்கங்களை ராமர் கோவில் கட்டுவது, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு 370ஐ நீக்குவது, பொதுசிவில் சட்டம் கொண்டுவருவது மற்றும் ராமர் பாலம் என்று கூறிச் சேதுசமுத்திரத் திட்டத்தைக் கைவிடுவது போன்றவைகளை முன் நிறுத்திய போதும் ம.தி.மு.க போன்ற கட்சிகள் அக்கூட்டணியிலிருந்து வெளியேற மறுக்கின்றன. பதவி வெறியின் காரணமாகப் பா.ஜ.க.வின் இந்துத்துவப் பாசிசக் கொள்கைகளுக்குச் சாமரம் வீசுகிறார் வை.கோ. அவரின் இந்தச் சந்தர்ப்பவாதத்திற்குத் தமிழ் மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்.

தலித் கட்சிகளின் நிலைப்பாடு

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சியும், திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தி.மு.க. அணியில் இடம் பெற்றுள்ளன. சென்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. அணியில் இடம் பெற்றிருந்த கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம்கட்சி அ.தி.மு.க.வுடன் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக அணி மாறித் தற்போது தி.மு.க. அணியில் இடம் பெற்றுள்ளது.

எழுச்சித் தமிழர்என்று பட்டம் சூட்டிக் கொண்ட திருமாவளவன் ஈழத் தமிழர் நலன், தனித் தமிழ் ஈழத்திற்கான ஆதரவு என்று தீவிரமாகப் பேசிக்கொண்டே தி.மு.க.வின் ஈழத் துரோகத்தை மூடிமறைக்கின்ற வேலையைச் செய்கிறார். டெசோவில் சேர்ந்து கருணாநிதியின் துரோகத்திற்குத் துணைப் போகிறார். அத்துடன் இந்து மதவெறி பா.ஜ.க.வை எதிர்த்து, மதச் சார்பின்மை என்ற பேரால் ஈழத் தமிழ் இன அழிப்புப் போர்க்குற்றத்தில் இராஜபட்சேவோடு பங்குபெற்ற காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைக்க வேண்டும் என்று தி.மு.க.விற்கும், காங்கிரசிற்கும் தூது சென்றார். இவ்வாறு அக்கட்சி ஈழ ஆதரவு நிலையில் ஒரு சந்தர்ப்பவாத நிலையையே மேற்கொள்கிறது.

தாழ்த்தப்பட்ட  மக்கள்மீது நடத்தப்படும் சாதிக் கலவரங்களை எதிர்த்துத் தலித் கட்சிகள் ஒன்றுபட்டுப் போராடவில்லை. இராமதாசு தலைமையிலான சாதிவெறி முன்னணியினர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடத்திய சாதிக் கலவரங்களுக்கு எதிராக அனைத்துச் சாதி உழைக்கும் மக்களையும், ஜனநாயகச் சக்திகளையும் ஒன்றிணைத்து ஒரு திட்டத்தின் அடிப்படையில் எதிர் கொள்ளத் தயாரில்லை. மாறாக இக்கட்சிகளும் தாழ்த்தப்பட்ட மக்களைத் தங்களது வாக்கு வங்கிக்காகச் சாதி அடிப்படையிலேயே திரட்டுகின்றன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியலதிகாரம் என்று கூறி ஒருசில சீட்டுகளுக்காகத் தாழ்த்தப்பட்ட மக்களை விலைபேசுகின்றன.பதவிக்காகவும் சுயநலத்திற்காகவும் இக்கட்சிகள் ஆளும் வர்க்கக் கட்சிகளின் தொங்கு சதைகளாக மாறிவிட்டன. சாதி, தீண்டாமை ஒழிப்பில் ஒரு ஜனநாயகப் பாத்திரத்தை ஆற்றும் தகுதியை இக்கட்சிகள் இழந்துவிட்டன.

மேலும் சாதிவாதக் கட்சிகள் அனைத்தும் ஒடுக்கப்பட்ட சாதிகளின் பேரால் ஆட்சி அதிகாரத்திலோ, அல்லது நாடாளுமன்ற, சட்ட மன்றங்களிலோ பங்கு பெற்று நாட்டை நாசமாக்கிவரும் புதிய தாராளக் கொள்கைகளையும், அமெரிக்க மேலாதிக்கத்திற்குச் சேவை செய்யும் கொள்கைகளையும் ஆதரிக்கின்றன. சமூகநீதி பேசுகின்ற பிற்படுத்தப்பட்ட சாதிக் கட்சிகளும்,தலித்தியக் கட்சிகளும் இத்தகைய தேசத் துரோகக் கொள்கைகளை ஆதரிக்கின்றன. எனவே நாட்டின் விடுதலைக்கும், சாதி தீண்டாமை ஒழிப்பிற்கும் சாதியவாதக் கட்சிகளைப் புறக்கணித்துச் சாதி கடந்து உழைக்கும் மக்கள் ஓரணியில் திரளவேண்டும்.

போலிக் கம்யூனிஸ்டுகள் அணி

சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற திருத்தல்வாத கட்சிகள் காங்கிரஸ் அல்லாத, பி.ஜே.பி. அல்லாத, மாநிலக் கட்சிகளைக் கொண்ட ஒரு மூன்றாவது அணியை அமைக்கப் போவதாகக் கூறுகின்றன. தமிழகத்தில் அ.தி.மு.க.-வோடு கூட்டணி அமைத்து மூன்றாவது அணி என்ற கனவில் மிதந்தன. அவ்வாறு மூன்றாவது அணி அமைவது சாத்தியமல்ல, அதில் தாம் பிரதமராக வர வாய்ப்பும் இல்லை என ஜெயலலிதா உணர்ந்தார். எனவே இவ்விரு கட்சிகளையும் கழட்டி விட்டுவிட்டுத் தனியாக அ.தி.மு.க. நிற்கிறது. திருத்தல்வாத கட்சிகளின் மூன்றாவது அணிக் கனவு கலைந்து தனிமைப்பட்டுத் தமிழகத்தில் இக்கட்சிகள் தனி அணியாக நிற்கின்றன.

இடது, வலது போலிக் கம்யூனிஸ்டுகள் புதியதாராளக் கொள்கைகளை முற்றாக எதிர்க்கவில்லை. அன்னிய முதலீடுகளை உற்பத்தித்துறையில் பயன்படுத்த வேண்டும் என்று கூறி ஏகாதிபத்திய உலகமயக் கொள்கைகளை ஆதரிக்கின்றன. அயல்நாட்டு கொள்கையில் அமெரிக்கச் சார்பை எதிர்த்து பேசினாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடு ஒரு சமரசவாத போக்கையே இக்கட்சிகள் கடைப்பிடிக்கின்றன. மேலும் இக்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் புதிய தாராளக் கொள்கைகளைச் செயல்படுத்தி மக்கள் மத்தியில் தனிமைப்பட்டுப் போய் அக்கட்சிகள் மே.வங்கத்தில் படுதோல்வி அடைந்தன. அதனால் பிற மாநிலங்களிலும் அதன் தாக்கம் பாதித்துள்ளது.

இக்கட்சிகள் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு என்ற திட்டத்தின் அடிப்படையில் ஒரு புரட்சிகரப் போராட்டத்தை நடத்தும் கட்சிகள் அல்ல. மாறாக ஏகாதிபத்திய ஆதரவு நிலப்பிரபுத்துவ ஆதரவு என்ற அடிப்படையில் மேற்கத்திய சமூக ஜனநாயகவாதக் கட்சிகளாகச் சீரழிந்துவிட்டன. இக்கட்சிகள் பாட்டாளி வர்க்கம், மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தலைமை தாங்கும் தகுதியை இழந்துவிட்டன. இக்கட்சிகளை நம்புவது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறக்குவதைப் போன்றது தான். 

பாசிசக் கட்சிகளின் பாதந்தாங்கிகளாக திராவிடக் கட்சிகள்

16ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மேற்கண்டவாறு ஐந்து அணிகள் போட்டியிட்டாலும் இத்தேர்தலில் தீர்மானகரமான போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க. கூட்டணிக்கும் இடையில்தான் நடக்கிறது. காங்கிரஸ் மற்றும் இடது, வலது திருத்தல்வாதிகளின் அணிகளுக்கு ஒரு தீர்மானகரமான பாத்திரம் ஆற்றும் வலிமை இல்லை. பா.ஜ.க.வின் தலைமையிலான மதவெறி, சாதிவெறி, பதவி வெறி பிடித்த கட்சிகளின் கூட்டணி இத்தேர்தலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அதன் சந்தர்ப்பவாதத்தின் காரணமாகத் தீர்மானகரமான பங்கு வகிக்கும் அணியாக அது இல்லை.

அ.தி.மு.க.வின் தலைவி ஜெயலலிதாவோ, தாங்கள் அதிக இடத்தில் வெற்றிபெற்று மத்தியில் தங்களது செல்வாக்கின் கீழ் ஆட்சி அமைந்தால் தமிழகத்தின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்போம் என்கிறார். தி.மு.க.வோ கருணாநிதி கைகாட்டுபவர்தான் அடுத்த பிரதமர் ஆவார் என்றும் மதச்சார்பற்ற ஆட்சி அமைக்கக் காங்கிரசுக்கு ஆதரவு என்பதை மறைமுகமாகவும் பேசி வருகிறது. இவ்வாறு இவ்விரு கட்சிகளும் மத்திய ஆட்சியில் பங்கு பெறுவதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டுள்ளன.

தற்போதைய நிலவரப்படி மத்தியில் காங்கிரஸ் அல்லது பா.ஜ.க.எந்த ஒரு அணிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்ற நிலையே நிலவுகிறது. ஆனால் பா.ஜ.க. அதிக இடம் பெற்றுத் தனிப் பெரும் கட்சியாக வரும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்தச் சூழ்நிலைமைகளில் பா.ஜ.க. ஆட்சி அமைப்பதற்குத் தனது கூட்டணிக்கு வெளியில் உள்ள கட்சிகளின் ஆதரவை அது கோரலாம். அப்போது அ.தி.மு.க. தனது ஆதரவைப் பா.ஜ.க.வுக்கு வழங்கும் நிலை வரலாம். அது சாத்தியமானதுதான். ஏனெனில் ஜெயலலிதா ஆர்.எஸ்.எஸ்.சின் நம்பகமான கூட்டாளியேயாவார். பார்ப்பனியச் சாதிவெறி மற்றும் இந்துத்துவக் கொள்கைகளில் ஆழ்ந்த பற்று கொண்டவர்தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார். எனவே பா.ஜ.க.வுடனான அ.தி.மு.க. கூட்டணி இயல்பான கூட்டணிதான்.

ஜெயலலிதா அம்மையார் தனது ஆதரவை வழங்காவிட்டால் தி.மு.க. பா.ஜ.க.விற்கு ஆதரவு தராது என்று கூறமுடியாது. ஏனெனில் தி.மு.க.வின் மதச்சார்பின்மைக் கொள்கையும் சந்தர்ப்பவாதமானது என்பதை நாடே அறியும். மேலும் மோடி எனது நண்பேன்டாஎன்று கருணாநிதி கூறுகிறார். கடந்த காலங்களில் வாஜ்பாயை தவறான கட்சியில் சரியான மனிதர்என்று கூறித் தி.மு.க. பா.ஜ.க ஆட்சியில் பங்கேற்ற கட்சிதான். தி.மு.க.வுக்கு ஊழல் காங்கிரஸ்தான் இயல்பான கூட்டணி என்றாலும் அது மதவெறி கட்சியோடு கூட்டுச்சேரத் தயங்காது.

தி.மு.க. அ.தி.மு.க. இவ்விரண்டுக் கட்சிகளும் தங்களுக்குள்  அதிகாரத்திற்காகப் போட்டி போட்டுக்கொண்டாலும், தேர்தலுக்குப் பின் பா.ஜ.க. இக்கட்சிகளின் ஆதரவைக் கோருமானால் இவ்விரு கட்சிகளும் அக்கட்சிக்குத் தங்களது ஆதரவை வழங்கத் தயங்காது.இவ்வாறு தமிழகத்தின்   பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள அ.தி.மு.க., தி.மு.க. இரண்டு கட்சிகளுமே மாறிமாறி இந்திய மக்களின் பிரதான எதிரியாகத் திகழ்கின்ற காங்கிரஸ், பா.ஜ.க. என்ற இரண்டு பாசிசக் கட்சிகளை ஆதரிக்கின்ற கட்சிகளாகவே உள்ளன. இத் தேர்தலில் தமிழக மக்கள் வழங்கும் தீர்ப்பு இரு பாசிசச் சக்திகளுக்குப் பயன்படக் கூடிய அபாயத்தையே உள்ளடக்கியுள்ளது.

இத்தகைய சூழலில் இவ்விரு கட்சிகளில் ஏதாவது ஒன்றின் ஆதரவுடனோ அல்லது இரண்டுக் கட்சிகளின் ஆதரவுடனோ அமையப் போகின்ற பா.ஜ.க. ஆட்சி நாட்டு மக்களை வாட்டி வதைக்கின்ற புதிய தாராளக் கொள்கைகளைத் திரும்பப் பெறப்போவதில்லை. அமெரிக்காவின் ஆதரவு வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் இராணுவக் கொள்கைகள் தடுத்து நிறுத்தப்படப் போவதுமில்லை. மேலும் இக்கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள தமிழகத்தின் முக்கியக் கோரிக்கைகளான தமிழ்மொழி ஆட்சி மொழி, கச்சத்தீவை மீட்பது, நதிநீர் இணைப்பு மூலம் தமிழகத்தின் நீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பது, ஈழத் தமிழின அழிப்புப் போர்க்குற்றவாளி இராஜபட்சே மீது சர்வதேச விசாரணையோ, தமிழ் ஈழம் அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு போன்ற எந்த ஒரு கோரிக்கையும் நிறைவேற்றப் போவதில்லை. தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுமே இக்கோரிக்கைகளை நிபந்தனையாக்கி ஆட்சிக்கு ஆதரவு என்ற நிலையை உறுதியாக மேற்கொள்ளாது. இவ்விருக் கட்சிகளின் வெற்றி என்பது புதிய காலனியத்திற்குச் சேவை செய்யவும், பாசிச சக்திகளைப் பலப்படுத்தவுமே பயன்படும். எனவே இத்தகைய பிற்போக்குச் சக்திகளுக்கு எதிராகத் தமிழ் மக்கள் அணிதிரளவேண்டும்.

பாட்டாளி வர்க்கத்தின் பணிகள்

இன்று இந்திய அரசு செயல்படுத்திவரும் புதிய தாராளக் கொள்கைகள் மற்றும் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு சேவை செய்யும் கொள்கைகளை காங்கிரஸ், பா.ஜ.க. மட்டுமல்ல அனைத்து நாடாளுமன்றவாதக் கட்சிகளும் ஆதரிக்கின்றன என்பதை பார்த்தோம். மத்தியில் அதிகாரத்தில் இல்லாத தரகுமுதலாளித்துவக் கட்சிகள், மாநில அளவிலான தரகு முதலாளித்துவக்கட்சிகள், சமூக நீதி மற்றும் தலித்தியம் பேசுகின்ற சாதிவாதக் கட்சிகள் என அனைத்து நாடாளுமன்றவாதக் கட்சிகளுக்குள் மேற்கண்ட தேசவிரோத, மக்கள் விரோதக் கொள்கைகளை செயல்படுத்துவதில் வேறுபாடுகள் இல்லை.

இக்கட்சிகளுக்குள் உள்ள வேறுபாடு என்னவென்றால், ஆளும் வர்க்கக் கட்சிகளை சார்ந்தக் கும்பல் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பதிலும், எத்தகைய அரசாங்கம் அமைப்பது என்பதிலும்தான் மாறுபடுகின்றன. அதாவது இந்திய அரசை ஒரு இந்துத்துவ பாசிச அரசைக் கட்டியமைப்பதா அல்லது பெரும் தேசியவாத பாசிச அரசாகக் கட்டியமைபதா என்பதுதான் பா.ஜ.க.வுக்கும் காங்கிரசுக்கும் உள்ள வேறுபாடு ஆகும்.

மோடி தலைமையிலான இந்துத்துவப் பாசிச பா.ஜ.க. கும்பல் இந்தத் தேர்தலில் இதுவரை தனது இந்துத்துவா கொள்கைகளை பின்னுக்கு வைத்து வளர்ச்சிஎன்ற முழக்கத்தை முன்வைத்து முழங்கிவந்தது. இந்துத்துவா கொள்கைகளை முன்வைத்தால் எங்கே கூட்டணி அமையாமல் ஆட்சியமைக்க முடியாமல் போய்விடுமோ என அஞ்சித்தான் இந்துத்துவா முழக்கத்தை பின்னுக்கு தள்ளியிருந்தது. ஆனால் மோடியின் வளர்ச்சிமுழக்கம் எடுபடவில்லை. குஜராத் மாதிரி வளர்ச்சி என்ற பித்தலாட்டம் நாட்டு மக்களிடம் எடுபடவில்லை. மோடி அலை எழும்பவும் இல்லை. எனவே தற்பொழுது பா.ஜ.க. தேர்தலில் வெற்றி பெற தனது இந்துத்துவக் கொள்கைகளை முதன்மைப்படுத்தி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

16வது நாடாளுமன்றத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப் பதிவு அன்றுதான் பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையை காலம் தாழ்த்தி வெளியிட்டது. காரணம் ஆர்.எஸ்.எஸ். கும்பல் இந்துத்துவ பாசிச கொள்கைகளை முதன்மைபடுத்தி தேர்தல் அறிக்கையை வெளியிடவேண்டும் என்று நிர்ப்பந்தம் கொடுத்ததேயாகும். அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவோம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப் பிரிவு 370ஐ நீக்குவோம், பொதுசிவில் சட்டம் கொண்டுவருவோம், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றவிடமாட்டோம் என்ற இந்துத்துவப் பாசிசக் கொள்கைகளை பா.ஜ.க. முதன்மைப்படுத்தி இத்தேர்தலை சந்திக்கிறது.

இந்துத்துவ பாசிச பா.ஜ.க இந்து மதவெறியைத் தூண்டி இந்திய அரசை ஒரு இந்துமதவாத பாசிச அரசாகக் கட்டியமைக்கவும், நாடாளுமன்ற ஆட்சிமுறையை ஒழித்துக்கட்டிவிட்டு அதனிடத்தில் ஜனாதிபதி ஆட்சி முறையைக் கொண்டுவரவும் முயற்சிக்கிறது. புதிய காலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளைத் தொடரவும், நெருக்கடிகளின் சுமைகளை மக்கள் மீது திணிக்கவும், நெருக்கடிகளிலிருந்து ஆளும் வர்க்கங்களைக் காப்பாற்றவும் பா.ஜ.க. ஒரு இந்துத்துவ பாசிச ஆட்சியைக் கட்டியமைக்க முயற்சிக்கிறது. அத்துடன் பெரும்பான்மை இந்து மதவெறியை தூண்டியும், சாதிவெறியை பயன்படுத்தியும் மக்களை மோதவிட்டு பிளவுபடுத்த முயற்சிக்கிறது. மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களை திசைதிருப்பவும் முயற்சிக்கிறது. எனவே நாட்டை நாசமாக்கும் புதியகாலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதும், இந்துத்துவப் பாசி சத்தை எதிர்த்துப் போராடுவதும் பிரிக்க முடியாததாகும்.

மோடி தலைமையிலான இந்துத்துவப் பாசிச கும்பலை எதிர்த்து மதசார்பற்ற சக்திகள் ஒன்றுபட வேண்டும் என்று சோனியா காந்தி அழைப்பு விடுக்கிறார். நாட்டை நாசமாக்கி வரும் புதிய காலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்துவதில் காங்கிரசுக்கும் பா.ஜ.க.வுக்கும் வேறுபாடு இல்லை. நெருக்கடிகள் முற்றும்போது கடந்த 10 ஆண்டுகளாக சிறுபான்மை ஆளும் கட்சியாக இருந்த காங்கிரசுக்கு பா.ஜ.க. ஆதரவளித்ததால்தான் பல சட்டங்களை காங்கிரஸ் இயற்ற முடிந்தது. அதுபோல நாளைக்கு காங்கிரஸ் எதிரணியில் இருந்தாலும் முக்கிய நேரத்தில் பா.ஜ.கவுக்கு ஆதரவளிக்கும். மேலும் மிகவும் பிரச்சினை முற்றுமானால் ஒரு தேசிய அரசு அமைக்க இரு கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் ஆச்சரியபடுவதற்கு ஒன்றுமில்லை. வாஜ்பாய் காலத்திலேயே தேசிய அரசு என்ற திட்டத்தை பா.ஜ.க.வினர் முன்வைத்தனர்.

இந்திய அரசை பாசிச மயமாக்குவதில் பா.ஜ.க. இந்து மதவாதத்தை பயன்படுத்துகிறது என்றால், காங்கிரஸ் கட்சி பெரும் தேசியவாதத்தை பயன்படுத்துகிறது. மேலும் காங்கிரஸ் கட்சி மதவாதத்தை காரியவாத அடிப்படையில் பயன்படுத்தும் கட்சியே. காங்கிரசும், பா.ஜ.க.வும் இந்திய பாசிசத்தின் இரண்டு முகங்களேயாகும். இந்து மதவாத பாசிசத்திற்கு மாற்று காங்கிரஸ் கட்சியல்ல. அது மதவாத பாசிசத்தை எதிர்த்த அணியில் பங்கு பெறுவதற்கு தகுதி வாய்ந்ததுமல்ல. இவ்விரு கட்சிகளை எதிர்த்துதான் இந்திய மக்கள் புதிய காலனியாதிக்கத்தையும், பாசிசத்தையும் முறியடிக்கமுடியும். எனவே காங்கிரசும், பா.ஜ.க.வும் இந்திய மக்களின் முதன்மையான எதிரிகளாகும்.

இடது, வலது போலிக் கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் அல்லாத பா.ஜ.க. அல்லாத கட்சிகளைக் கொண்டு ஒரு மூன்றாவது அணியை உருவாக்கப் போவதாக கூறுகின்றனர். காங்கிரஸ் அல்லாத கட்சிகள், பா.ஜ.க. அல்லாத கட்சிகள் மதவாத எதிர்ப்புக் கட்சிகள் என்று எப்படி கூறமுடியும். அல்லது புதியகாலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்க்கின்ற கட்சிகள் என்று எப்படிக் கூறமுடியும். அக்கட்சிகள் மாறிமாறி காங்கிரஸ் அல்லது பி.ஜே.பி.யுடன் கூட்டு சேரும் கட்சிகளேயாகும். எனவே இவர்கள் கூறுகின்ற மூன்றாவது அணி காங்கிரசுக்கும், பா.ஜ.க.வும் மாற்று அணியாக இருக்காது. மேலும் இக்கட்சிகள் மதவாதத்தை எதிர்த்தும் புதியதாராளக் கொள்கைகளை எதிர்த்தும் ஒரு குறிப்பானத் திட்டத்தின் அடிப்படையில் ஒரு அணியைக் கட்ட முயற்சிக்கவில்லை. அவ்வாறு கட்டவும் முடியாது. கடந்தகால அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது மூன்றாவது அணி என்பது காளான்களைப் போன்றதுதான். அது நிலைத்து நிற்காது. மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்க முடியாது.

மேற்கண்ட நிலைமைகளை வைத்துப் பார்க்கும்போது புதிய தாராளக் கொள்கைகளை எதிர்த்தும், அமெரிக்காவின் மேலாதிக்கக் கொள்கைகளை எதிர்த்தும், இந்திய அரசை பாசிச மயமாக்குவதை எதிர்த்த ஒரு தேசபக்த ஜனநாயக முன்னணியை அமைப்பது உடனடி அவசியமாகும். தொழிலாளர்கள், விவசாயிகள், தேசிய முதலாளிகள் மற்றும் பணக்கார விவசாயிகள் உள்ளிட்ட ஒரு தேசிய ஜனநாயக முன்னணியை உருவாக்க வேண்டும். அத்தகைய ஒரு முன்னணிதான் கீழ்க்கண்ட பணிகளை நிறைவேற்றும்.

- உலகமய, தனியார்மய புதிய தாராளக் கொள்கைகளை திரும்பப் பெறுதல்;

- அமெரிக்காவுடனான அரசியல், பொருளாதார, இராணுவ உடன்படிக்கைகளை இரத்து செய்தல்;

அன்னிய மூலதனங்களை பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்குதல்; உள்நாட்டுத் தரகுப் பெருமுதலாளிகளின் சொத்துக்களை அரசுடைமையாக்கல்;

- அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல்;

- அனைத்து தேசிய மொழிகளையும் ஆட்சிமொழி, பயிற்றுமொழி, நீதிமன்ற மொழியாக மாற்றுதல்;
சிறப்பு இராணுவச் சட்டம் முதல் அனைத்து கருப்புச் சட்டங்களையும் திரும்பப் பெறுதல். காஷிமீரில் வாக்கெடுப்பு நடத்தி அவர்களின் தனிநாட்டு உரிமையை அங்கீகரித்தல்;

நிலச் சீர்திருத்தம் செய்தல் மற்றும் சாதித் தீண்டாமையை ஒழித்தல்;

- மதச் சார்ப்பற்ற அரசை நிறுவுதல்; எம்மதத்தையும் பின்பற்றவோ அல்லது நாத்திகனாக இருக்கவோ மக்களுக்குச் சுதந்திரம்; அரசு அதிகார அமைப்புகளில் உயர் சாதியினரின் ஆதிக்கத்தை ஒழித்தல்; ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சார்ந்த மக்கள் அரசு அதிகார அமைப்பில் எல்லா மட்டங்களிலும் பங்குகொள்ளும் உரிமையை உத்திரவாதம் செய்தல்

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகார வர்க்க ஆட்சி முறையை ஒழித்துக் கட்டுதல்;

மக்கள் கமிட்டிக்கு அதிகாரம் கொண்டுவரும் சோவியத் ஆட்சிமுறையை நிறுவுதல்;

மேற்கண்ட அனைத்துத் திட்டங்களையும் நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்பதன் மூலமாக நிறைவேற்ற முடியாது. மாறாக நிலவுகின்ற இந்த அரசு அமைப்பு முறையை ஒரு புரட்சியின் மூலம் தூக்கியெறிந்து மக்கள் ஜனநாயகக் குடியரசை படைக்கும் போதுதான் இத்திட்டங்களை செயல்படுத்த முடியும். அத்தகைய ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசுதான் பாசிசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து ஜனநாயகத்திற்கு பாதை அமைக்கும். எனவே மக்கள் ஜனநாயகக் குடியரசமைக்க கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரளுமாறு அறைகூவி அழைக்கிறோம்.

புதிய காலனிய பொருளாதாரக் கொள்கைகளுக்கும் அமெரிக்காவின்-- மேலாதிக்கத்திற்கும் சேவை செய்யும் நாடாளுமன்றத்திற்கான தேர்தலைப் புறக்கணிப்போம்!
ê  புதிய காலனிய ஆதிக்கத்திற்கு சேவை செய்யும் காங்கிரஸ் பாசிச அணியை முறியடிப்போம்!
ê  ஈழ விடுதலைக்கும் தமிழ்த் தேசியத்திற்கும் எதிரான இந்துத்துவப் பாசிச பா.ஜ.க. கூட்டணியை முறியடிப்போம்!
ê  அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இரு பாசிக அணிகளுடன் சேரும் பச்சோந்திகளே!
ê  புதியகாலனிய ஆதிக்கத்தையும், பாசிசத்தையும் முறியடிக்க மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!.

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
ஏப்ரல் 2014

No comments:

Post a Comment

விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.