மே நாளில் சூளுரைப்போம்!
கருத்தாலும், கரத்தாலும் உழைக்கின்ற மக்களே!
உலக முதலாளித்துவ நெருக்கடி மீளமுடியாமல் மென்மேலும் புதை குழியில் ஆழ்ந்து வருகின்றது. அதே வேளையில் நெருக்கடிகளின் சுமைகள் முழுவதையும் ஏகாதிபத்தியவாதிகள் தங்கள் சொந்த நாட்டு மக்கள் மீதும் ஒடுக்கப்பட்ட நாடுகள் மீதும் மென்மேலும் சுமத்துகின்றனர். தொழிலாளர்கள் போராடிப் பெற்ற அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டுக் கொத்தடிமைகளாக மாற்றப்பட்டு ஒட்டச் சுரண்டப்படுகின்றனர். இத்தகைய சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக ஏகாதிபத்திய நாடுகளின் தொழிலாளி வர்க்கமும், ஒடுக்கப்பட்ட நாட்டு மக்களும் கடுமையாகப் போரிட்டு வருகின்ற ஒரு சூழலில்தான் நாம் இந்த மே நாளை எதிர்கொள்கிறோம்.
கொத்தடிமையாக்கப்பட்டு வரும் தொழிலாளி வர்க்கம்!
மே நாள் வரலாறு என்பது எட்டு மணி நேர வேலை நாளுக்கான போராட்டத்துடன் இணைந்துள்ளது. ஆனால் இன்று இந்தியாவிலுள்ள மொத்தத் தொழிலாளர்களில் 94 சதவீதம் பேர் அமைப்புசாராத் துறைகளில் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு எந்தவிதமான சட்டப் பாதுகாப்பும் இல்லை. அவர்கள் ஒரு நாளில் 12 மணி நேரம் அல்லது அதற்கு அதிகமாகவும் வேலை செய்யும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அவர்களுக்குச் சட்டப்படியான குறைந்தபட்ச சம்பளம் கூட வழங்கப்படவில்லை.
ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. நிரந்தரத் தொழிலாளர்கள் நீக்கப்பட்டு அயல்பணி ஒப்படைப்பும் (ளிut ஷிஷீuக்ஷீநீவீஸீரீ) காண்டிராக்ட் முறையும் அதிகரித்துக் கொண்டேபோகிறது. பத்தாண்டுகளுக்கு முன்வரை தற்காலிகத் தொழிலாளர்களின் எண்ணிக்கை மொத்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதமாக இருந்தது. ஆனால் 2011-க்குப் பிறகு தற்காலிகத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக அதிகரித்துவிட்டது.
ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் மாதத்திற்கு ரூ.6000 சம்பளம் பெறுகிறார். இது நிரந்தரத் தொழிலாளிகள் பெறும் சம்பளத்தில் 5லிருந்து மூன்று மடங்கு வரை குறைந்ததாகும். அதுமட்டுமல்ல நிரந்தரத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் வைப்பூதியம் (றிக்ஷீஷீஸ்வீபீமீஸீt திuஸீபீ) இவர்களுக்குக் கிடையாது. ஏகாதிபத்திய உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகளை இந்திய அரசு செயல்படுத்துவதற்கு முன்பு தொழிலாளர்களின் சம்பள விகிதம் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 35 சதவீதமாக இருந்தது. ஆனால் அதற்குப்பின்பு தற்போது 20 சதவீதமாகக் குறைந்துவிட்டது. சம்பளம் குறைவது மட்டுமல்லாது அமைப்பு சார் தொழிலாளர்கள் மத்தியிலும் எட்டு மணி நேர வேலை நாள் பறிபோய் 12 மணி நேர வேலை நாளாக மாற்றப்பட்டு வருகிறது.
புதிய தாராளக் கொள்கைகள் செயல்படுத்தப் படுவதால் அரசியல் சட்டத்தின்படி தொழிலாளர்கள், சங்கம் அமைத்துக் கொள்வதற்கான உரிமையானது
இப்போது தொழிலாளர்களுக்கு மறுக்கப்படுகிறது. ஒப்பந்தத் தொழிலாளர் முறை எல்லா இடங்களிலும் திணிக்கப்படுகிறது.
புதிய தாராளக் கொள்கைகள் அமல்படுத்தப் படுவதன் விளைவாகத் தொழிலாளர்கள் அமைப்பாக ஒன்று சேரும் சுதந்திரமும், கூட்டு பேர உரிமையும் பறிக்கப்படுகிறது. இவ்வாறு தொழிலாளர்களின் உரிமை பறிக்கப்படுவது என்ற உத்திரவாதத்தின் மீதுதான் பன்னாட்டு முதலாளிகளுக்கும் அரசுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படுகிறது.
இந்திய அரசு கடைப்பிடித்துவரும் புதிய தாராளக் கொள்கையின் தொழிலாளர் விரோதப் போக்கின் பிரதான அம்சங்கள்: 12 மணி நேர வேலை நாள், ஒப்பந்தக் கூலி முறை, குறைந்த கூலி, தொழிலாளர்களை நிரந்தரமாக்க மறுத்தல், சங்கமாகச் சேரும் உரிமையையும், கூட்டு பேர உரிமையையும் மறுத்தல் உள்ளிட்ட இன்னும் பல அம்சங்களைக் கொண்டதாகும்.
நாடுதழுவிய தொழிலாளர்களின் போராட்டம்!
இந்திய அரசின் இந்த தொழிலாளர் விரோதக் கொள்கைகளை எதிர்த்துச் சென்ற ஆண்டு தொழிலாளர்கள் வரலாறு காணாதளவுக்கு நாடு தழுவிய ஒரு வேலை நிறுத்தத்தைச் செய்தனர். இந்த வேலை நிறுத்தத்தில் 120 மில்லியன் தொழிலாளர்கள் பங்கு கொண்டனர்.
சி.ஐ.டி.யூ, எ.ஐ.டி.யூ.சி ஆகிய இரண்டு திருத்தல்வாத கட்சிகளின் தலைமையிலான தொழிற்சங்கங்களிலிருந்து ஆளும் வர்க்கக் கட்சிகளின் தலைமையிலான ஐ.என்.டி.யு.சி, மற்றும் பி.எம்.எஸ் தொழிற்சங்கங்கள் வரையிலான பல்வேறு தொழிற்சங்கங்களின் ஒரு பரந்த தொழிற்சங்க முன்னணி இந்த வேலை நிறுத்தத்தை நடத்தின.
இத்தகைய முன்னணியின் சாராம்சம் வர்க்கச் சமரசம்தான். எனினும் இத்தகைய தொழிற்சங்க முன்னணி நடத்தும் வேலை நிறுத்தம் தொழிலாளர்களின் உண்மையான அபிலாஷைகளைப் பிரதிபலிப்பனவையாக இருக்கின்றன. ஆகையால் இத்தகைய வேலை நிறுத்தங்களில் புரட்சிகர ஜனநாயக இயக்கத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் பங்கு கொள்ளவேண்டும். அதே சமயம், தொழிலாளி வர்க்கம் இப் போராட்டத்தை முன்னுக்கு எடுத்துச் செல்வதற்கான வழியையும் எடுத்துரைக்க வேண்டும்.
இன்று இந்திய அரசும் ஆளும் வர்க்கக் கட்சிகளும் அமல்படுத்திவரும் புதிய காலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளையும், அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்குச் சேவை செய்யும் கொள்கைகளையும் முடிவுக்குக் கொண்டுவராமல் தொழிலாளர்களின் அபிலாஷைகள் எதார்த்தமானதாக்க முடியாது. அரசியல் மாற்றம் இல்லாமல் தொழிலாளர்கள் தங்களின் உடனடி கோரிக்கைகளைப் பெறமுடியாது. எனவே, நாம் தொழிலாளர்களின் இத்தகைய போராட்டங்களில் பங்கு கொள்ளும்போதே ஒரு புரட்சிகரமான அரசியல் மாற்றத்தின் அவசியத்தை எடுத்துக்காட்ட வேண்டும்.
இன்று தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் அதற்கான வேலை நிறுத்தங்கள் பொருளாதாரப் போராட்டங்கள்தான். உழைக்கும் மக்கள் பொருளாதாரக் கோரிக்கைகள் இன்றி நாட்டின் பொதுவான முன்னேற்றத்தைப் பற்றி நினைக்க ஒருபோதும் உடன்பட மாட்டார்கள். உழைப்பாளர்களின் பொருளாதார நிலையினை உயர்த்தும்போது மட்டும்தான், மக்கள் இயக்கத்தினால் ஈர்க்கப்படுவார்கள். தீவிரமான முறையில் இதில் பங்குகொள்வார்கள். ஓர் இயக்கத்தை உயர்ந்ததாகக் கருதுவார்கள். வீரத்தையும், சுயத் தியாகத்தையும் விடா முயற்சியையும் பற்றுறுதியையும் அந்த மகத்தான
நோக்கத்திற்காகக் காட்டுவார்கள். உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலையின்றி, சாதாரணக் காலங்களில் நம்பமுடியாத அளவிற்கு மோசமானதாக இருக்கும்பொழுது இது வேறுவிதமாக இருக்கமுடியாது.
தன்னுடைய வாழ் நிலையை உயர்த்தி கொள்ளும் அதே வேளையில், தொழிலாளி வர்க்கமானது கருத்து ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முன்னேறுகிறது. மேலும் அடிமை நிலையிலிருந்து விடுவித்துக்கொள்ளும் தன்னுடைய உயர்ந்த நோக்கங்களைச் சாதிக்கும் திறன் பெற்றதாகவும் மாறுகிறது.
ஆனால், பொருளாதாரப் போராட்டத்தின் மூலமாக-தொழிற்சங்கப் போராட்டத்தின் மூலமாக மட்டுமே தொழிலாளி வர்க்கம் தனது அடிமைத் தளைகளை அறுத்தெறிய முடியாது. தனது அடிமைத் தளைகளை அறுத்தெறிய வேண்டுமானால் ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான அரசியல் போராட்டம் - அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்தின் மூலமாக மட்டுமே சாதிக்கமுடியும். அத்தகைய அரசியல் போராட்டத்தைத் தொழிலாளி வர்க்கம் தனித்துப் போராடி வெற்றியடைய முடியாது. எனவே இந்திய அரசு அமல்படுத்தி வரும் புதியகாலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுவரும் அனைத்துச் ஜனநாயக வர்க்கங்களையும் அணிதிரட்டுவதன் மூலம்தான் அதைச் சாதிக்கமுடியும்.
நாட்டை ஓட்டாண்டியாக்கும் புதிய காலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகள்
இந்திய அரசு கடைப்பிடித்துவரும் புதிய காலனிய வேளாண் கொள்கைகள் நிலச் சீர்திருத்தத்தை மறுத்துப் பன்னாட்டு கம்பெனிகளின் கைகளில் நிலக் குவியலுக்கு வழிவகுத்துள்ளது. குழும விவசாயம் என்ற பெயரால் வேளாண்மை துறையில் பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் பெருகிவருகிறது. விவசாயிகள் நிலத்தைவிட்டு விரட்டப்படுகின்றனர்.
அத்துடன் விவசாய விளைபொருள்களுக்கான இறக்குமதிக்கு இருந்த தடைகள் அகற்றப்பட்டு விட்டன. வளர்ச்சியடைந்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகள் தங்களது நாடுகளில் விவசாயத்துறைக்கு மிக அதிகமான மானியங்களை வழங்கி, இந்தியா போன்ற நாடுகளில் தங்களது வேளாண் பொருட்களை மலிவான விலைக்குக் கொட்டிக்குவிக்கின்றனர். மறுபுறம் இந்திய அரசோ விவசாயிகளுக்கு அளித்து வந்த மானியத்தை வெட்டியதாலும், இடுபொருள்களின் விலை உயர்வாலும், விளைபொருள்களுக்கு ஆதாரவிலையை வெட்டியதாலும் இந்திய விவசாயிகள் பன்னாட்டு கம்பெனிகளோடு போட்டி போடமுடியாமல் நட்டம் அடைகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக 3 லட்சம் விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை புரிந்து மாண்டுள்ளனர்.
விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத உற்பத்திப் பொருட்களின் இறக்குமதியின் காரணமாகக் குளிர்பானங்கள் முதல் பொம்மைகள் வரை அனைத்துப் பொருட்களும் ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதாலும், இடுபொருள்களின் விலை உயர்வு, ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள மந்தம், மின்வெட்டு, மின்சாரக் கட்டண உயர்வு போன்ற காரணங்களால் சிறுதொழில்கள், குறுந்தொழில்கள், நெசவுத் தொழில்கள் ஆகியவை அழிந்து வருகின்றன. அதன் விளைவாகக் கோடிக்கணக்கானோர் வேலையிழந்து வாழ வழியின்றி வாடி நிற்கின்றனர்.
சில்லறை வணிகத்தில் அமெரிக்காவின் வால்மார்ட், பிரான்சின் கேரிபோர், பிரிட்டனின் டெஸ்கோ போன்ற பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளை அனுமதித்து, அவர்களின் வேட்டைக்காடாக இந்தியா மாற்றப்பட்டு வருவதால் இந்தியாவில் சில்லறை வணிகத்தைச் சார்ந்து வாழ்கின்ற 20 கோடி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய அரசாங்கம் நிதிப் பற்றாக்குறையைத் தீர்ப்பது என்ற பேரில் கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற மக்களுக்கு இலவசமாக வழங்கவேண்டிய சேவைத் துறைகளைத் தனியாரிடம் ஒப்படைத்து வணிகமயமாக்கி வருகிறது. அதேசமயம் பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்கு நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஆண்டிற்கு ஐந்து இலட்சம் கோடி ரூபாயை அரசாங்க கஜானாவிலிருந்து அள்ளிக் கொடுக்கிறது. ஆனால் நிதி பற்றாக்குறை தீர்ப்பது என்ற பேரால் இந்திய அரசு கோடானு கோடி மக்களின் நல் வாழ்வுத் திட்டங்களுக்கு வேட்டு வைக்கிறது. ஏழை எளிய மக்களுக்குக் கல்வி வழங்குவதை மறுப்பதோடு மருத்துவ வசதியின்றி
நோயால் சாகும் நிலைமையை உருவாக்கி வருகிறது.
அமெரிக்காவின் புதியகாலனியாக இந்தியா!
இந்திய அரசு அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் செய்துகொண்டுள்ள இராணுவ மற்றும் அணுசக்தி ஒப்பந்தங்களின் மூலம் இந்திய நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாகவும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்குச் சேவைசெய்யும் ஒரு எடுபிடி நாடாகவும் மாற்றிவிட்டது. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவில் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்ற அணு உலை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ரூ.1,60,000 கோடி மதிப்புள்ள இந்தியச் சந்தையைத் திறந்துவிட்டுள்ளது. அத்துடன் இந்தியாவின் சுயேச்சையான அணுமின் திட்டங்களுக்கு வேட்டு வைத்துவிட்டது. இந்தியா அணுகுண்டு செய்யக்கூடாது என்ற நிபந்தனையை ஏற்றதன் மூலம் நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் வேளாண்மை, விண்வெளி, நிதித்துறை என அனைத்துத் துறைகளிலும் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவி வருகிறது.
மேலும் இந்த அணுசக்தி ஒப்பந்தம் பொருளாதாரத் துறையில் மட்டுமல்லாது அரசியல் துறையிலும் இந்தியாவில் வெளியுறவுக் கொள்கைகளை அமெரிக்காவின் மேலாதிக்க நலன்களுக்குச் சேவைசெய்வதற்கு உகந்த வகையில் மாற்றி கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் தமது மேலாதிக்கத்தை நிலைநாட்ட மத்தியக் கிழக்கு நாடுகளில் கிடைக்கும் எண்ணெய் வளத்தைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு ஈரான் மீதான தாக்குதலுக்குத் தயாரிக்கிறது. அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைவிதித்து அங்கிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என நிர்ப்பந்தம் செய்கிறது. இந்திய அரசு அதற்கு அடிபணிந்து போவதால் இந்தியாவில் எண்ணெய் விலை உயர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கும் வழிவகுத்துவிட்டது.
இந்திய -அமெரிக்க இராணுவ ஒப்பந்தம் ஆசியாவில் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்குச் சவாலாகத் திகழும் சீனாவிற்கு எதிராக இந்தியாவைப் பயன்படுத்துவது; பயங்கரவாத எதிர்ப்பு; மனித உரிமை மீறல் என்ற பேரில் தனக்கு அடிபணியாத நாடுகளின் மீது நடத்தும் அமெரிக்காவின் இராணுவத் தலையீட்டிற்கு இந்தியா ஆதரவு தரவேண்டும்; பேரழிவு ஆயுதங்கள் பரவுவதைத் தடுப்பது என்ற பேரால் சர்வதேசக் கடல் எல்லையில் மூன்றாவது நாட்டு கப்பலை அமெரிக்காவுடன் சேர்ந்து சோதனையிடுவது; ஆசிய- பசிபிக் கடல் எல்லையில் அமெரிக்காவின் வர்த்தக மற்றும் போர்க்கப்பல்களுக்கு இந்தியா காவல்காக்கும் பணியை மேற்கொள்வது போன்ற அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. இத்தகைய ஒப்பந்தம் இந்திய நாட்டின் இறையாண்மையை முழுமையாகப் பறிப்பதுடன் தென் ஆசியப் பிராந்தியத்தில் இந்தியாவிற்கும் அருகாமையிலுள்ள நாடுகளுக்கும் இடையில் பகைமையை உருவாக்கி இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.
இவ்வாறு இந்திய அரசு கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடைப்பிடித்துவரும் புதியதாராளக் கொள்கைகளும், அமெரிக்காவின் புதியகாலனிய ஆதிக்கத்திற்கு சேவைசெய்யும் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளும் நாட்டை நாசமாக்கி வருவதுடன் தொழிலாளர்கள், விவசாயிகள் (பணக்கார விவசாயிகளின் ஒரு பிரிவு உள்ளிட்டு), தேசிய முதலாளிகள், சிறு வணிகர்கள் உள்ளிட்ட பெரும்பகுதி மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து வருகின்றது. மறுபுறம் பன்னாட்டு கம்பெனிகளும், உள்நாட்டு தரகு பெருமுதலாளித்துவ வர்க்கங்கள் மற்றும் நிலப்பிரபுத்துவ வர்க்கங்களும் மென்மேலும் கொழுத்து வளர்கின்றன.
அடிமை விலங்கொடிக்க புதிய ஜனநாயக அரசமைக்க அணிதிரள்வோம்!
தொழிலாளி வர்க்கம் எட்டு மணி நேர வேலை நாளை வென்றெடுக்கவும், ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்து நிரந்தர வேலை வாய்ப்பை உருவாக்கவும், தொழிற்சங்க உரிமைகளை வென்றெடுக்கவும் குறைந்த கூலியில் தமது உழைப்பைச் சூறையாடுவதைத் தடுத்து நிறுத்தவும் புதிய தாராளக் கொள்கைகளையும், அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்குச் சேவை செய்யும் கொள்கைகளையும் திரும்பப் பெறுவதன் மூலம்மட்டுமே சாதிக்க முடியும். அத்தகைய கோரிக்கைகளை நாட்டில் ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்கும்போது மட்டுமே சாதிக்க முடியும்.
அதாவது ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு அடிப்படையிலான தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர், தேசிய முதலாளிகள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்ட வேண்டும். தொழிலாளர் வர்க்கத் தலைமையிலான ஒரு மக்கள் ஜனநாயக முன்னணியை அமைத்துப் புரட்சியின் மூலம் ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசை நிறுவுவதன் மூலம் மட்டுமே தொழிலாளி வர்க்கம் தனது கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். அத்தகைய அரசியல் மாற்றத்திற்கான போராட்டம்தான் தொழிலாளி வர்க்கத்தின் அபிலாஷைகளுக்குத் தீர்வளிக்கும். எனவே தொழிலாளி வர்க்கம் தனது அடிமை விலங்கொடிக்க அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுடன் ஒன்று சேர்ந்து கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரளுமாறு இம் மே நாளில்
அறைகூவி அழைக்கிறோம்!
« போராடிப் பெற்ற உரிமைகளைப் பறித்து தொழிலாளர்களை கொத்தடிமைகளாக்கியுள்ள உலகமய, தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை முறியடிப்போம்!
« அடிமை விலங்கொடிக்க அமெரிக்காவின் புதியகாலனிய ஆதிக்கத்திற்கு முடிவுகட்டுவோம்!
« மக்கள் ஜனநாயக அரசமைக்க புரட்சிப் பாதையில் அணிதிரள்வோம்!
« உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுவோம்!
« மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை வெல்க!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
No comments:
Post a Comment
விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.