Friday, April 20, 2012

கொடுங்கோல் ஜெயா அரசே!

« பேருந்து, பால், மின்சாரக் கட்டண உயர்வுகளைத் திரும்பப் பெறு!
« ஆட்சிக்கு வந்தப்பின் மக்கள் மீது ஏற்றிய சுமைகள் அனைத்தையும் இறக்கு!
« மூடநம்பிக்கையில் வாக்களித்த மக்களே! இப்போதாவது உணர்ந்துப் போராட முன்வாருங்கள்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!
தமிழகத்தை ஆளும் ஜெயலலிதா அரசாங்கம் அண்மையில் மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளது. இக்கட்டண உயர்வு மூலம் ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த மக்கள் மீது கூடுதலாக ரூ.7,874 கோடி சுமையை சுமத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்குப்பின் வெறும் ரூ.740 கோடியை மட்டும் குறைத்து கண்துடைப்பு நாடகத்தை நடத்தியுள்ளது. தமிழகத்தில் நிலவும் வரலாறு காணாத மின்வெட்டுக் கொடுமையோடு இந்த கட்டண உயர்வும் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் பேருந்துக் கட்டணத்தையும், பால் விலையையும் கடுமையாக உயர்த்தி மக்கள் மீது ரூ.11,000 கோடியை சுமத்தினார். பட்ஜெட்டில் ரூ.1,500 கோடிக்கு புதிய வரியையும் விதித்தார். இவ்வாறு தொடர்ந்து கட்டண உயர்வுகள் மற்றும் விலை உயர்வுகள் மூலம் மக்கள் மீது தாங்கமுடியாத அளவிற்கு சுமைகளைச் சுமத்தியுள்ளார் ஜெயலலிதா. இந்தச் சுமைகளைத் தாங்க முடியாமல் தமிழக மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

ஜெயலலிதா அரசாங்கம் மக்கள் விரோதக் கொள்கைகளை எதேச்சதிகாரமாகவும், சட்டவிரோதமாகவும் செயல்படுத்தி வருகிறது. கட்டண உயர்வுகளையும், மக்கள் விரோதக் கொள்கைகளையும் எதிர்த்து சட்டமன்றத்தில் பேசுவதற்குக்கூட எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பை மறுக்கிறது. கருணாநிதி ஆட்சியில் அமல்படுத்திய அரைகுறையான சமச்சீர்க் கல்வியையும் செயல்படுத்த மறுத்து, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காமல் சட்டவிரோதமாக மாணவர்களையும், பெற்றோர்களையும் வாட்டி வதைத்தது. மேலும் நீதிமன்றத் தீர்ப்பை காலில் போட்டு மிதித்து மக்கள் நலப் பணியாளர்கள் 15 ஆயிரம் குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது. அதில் பலபேர் தற்கொலை செய்துகொண்டார்கள். ஜெயலலிதா அரசின் ஊழல் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களையும், விலைவாசி உயர்வு மற்றும் கட்டண உயர்வுகளை எதிர்த்துப் போராடுபவர்களையும் காவல்துறையை வைத்து சட்டவிரோதமாக ஒடுக்குகிறது. இவ்வாறு ஜெயலலிதா ஆட்சி ஒரு கொடுங்கோல் ஆட்சியாக மாறி வருகிறது. எனவே இந்தக் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து அனைவரும் அணிதிரள வேண்டியது அவசர அவசியக் கடமையாக மாறிவிட்டது.
போக்குவரத்து, மின்சாரம் மற்றும் பால்வளத்துறைகள் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை அழியாமல் பாதுகாப்பதற்குத் தான் இந்தக் கட்டண உயர்வுகள் என்று ஜெயலலிதா கூறுவது உண்மைதானா?
அரசுத்துறை நிறுவனங்களைக் காப்பாற்றவே கட்டண உயர்வு என்பது மோசடியே!
கட்டண உயர்வுக்கு ஜெயா சொல்லும் காரணங்கள்: முந்தைய தி.மு.க அரசின் நடவடிக்கைகளாலும், நிர்வாகச் சீர்கேடுகளாலும், தொடர்ந்து உயர்ந்துவரும் டீசல் விலையினாலும் போக்குவரத்துக் கழகங்கள், ஆவின் பால் நிறுவனம், மின்சார வாரியம் ஆகிய அரசுத்துறை நிறுவனங்கள் பெரும் கடன் சுமையில் மூழ்கி திவால் நிலையில் இருப்பதால் அவற்றைக் காப்பாற்றும் பொருட்டு மத்திய அரசிடம் சிறப்பு நிதி கேட்டு கிடைக்காத நிலையில், வேறு வழியே இன்றி கட்டணங்களை உயர்த்தியுள்ளதாகவும், அரசுத்துறை நிறுவனங்கள் மூடப்பட்டால் தனியார் நிறுவனங்களின் கொள்ளைக்கு வாய்ப்பாகிவிடும் என்பதாலேயே இக்கட்டண உயர்வு என்கிறார் ஜெயலலிதா. சமச்சீர்க் கல்வித் திட்டத்தை முடக்கி தனியார் கல்வி நிறுவனங்களின் கொள்ளைக்குத் தொண்டாற்ற வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட்ட ஜெயலலிதா, அரசுத்துறை நிறுவனங்களைக் கப்பாற்றவே இக்கட்டண உயர்வு என்பது மோசடியே.
1991ம் ஆண்டு மன்மோகன் கும்பல் செயல்படுத்தத் தொடங்கிய தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகளைச் சிரமேற்கொண்டு செயல்படுத்தியவர்தான் ஜெயலலிதா. உலக வங்கியின் உத்தரவுகளுக்கு அடிப்பணிந்து அரசின் முதலீடுகளை சேவைத் துறைகளான கல்வி, மருத்துவம், சுகாதாரம், போக்குவரத்து, மின்சாரம், பால்வளம் போன்ற அரசுத்துறைகளிலிருந்து விலக்கிக் கொண்டு இத்துறைகளில் தனியார் முதலாளிகள் நுழைந்து கொள்ளையடிக்க வழிவகை செய்ததுதான் மன்மோகன் கும்பலின் தனியார்மயக் கொள்கை. 91லிருந்து மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஜெயாவும் கருணாவும் இத்தனியார்மயக் கொள்கையினை செயல்படுத்தி வந்ததன் விளைவாகவே அரசுத்துறை நிறுவனங்கள் கடனில் மூழ்கி திவால் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளன. தற்போது ஜெயா அறிவித்துள்ள கட்டண உயர்வுகளும்கூட இத்துறைகளில் செயல்பட்டுவரும் தனியார் முதலாளிகளின் கொள்ளைக்கு ஊக்கம் தரும் நோக்கம் கொண்டதே.
அரசுத்துறை நிறுவனங்கள் திவாலாக தனியார்மயமே காரணம்
அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ 6150கோடி கடன் சுமையில் இருப்பதாகக் கூறுகிறார் ஜெயா. இதற்குக் காரணம் டீசல் விலை உயர்வு மற்றும் உதிரி பாகங்களின் விலை உயர்வு என்கிறார். அப்படி எனில் தமிழ் நாட்டில் தனியார் பேருந்து நிறுவனங்கள் அத்தனையும் இந்நேரம் நட்டத்தில் அழிந்திருக்க வேண்டுமே? மாறாக கொழுத்துச் செழிக்கின்றனவே!
இருபது ஆண்டுகளுக்கு முன்புவரையில் பேருந்துகளுக்கு கூண்டு (Body) கட்டுவது, அவற்றைப் பராமரிப்பது உட்பட அனைத்துப் பணிகளையும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களே செய்தன. நாகர்கோவில், பொள்ளாச்சி, திருச்சி, சென்னை உட்பட பல இடங்களில் அதற்கான பணிமனைகள் இயங்கின. வர்ணக் கலவைகள் (பெயின்ட்) கூட சொந்தமாக உற்பத்தி செய்யப்பட்டன. முழுக்க முழுக்க போக்குவரத்துக் கழகங்கள் தங்கள் சொந்தக் கால்களிலேயே நின்றன. இந்தப் பணிகள் எல்லாம் படிப்படியாக ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டன. இதனால் போக்குவரத்துக் கழகங்களின் பணம் பெருமளவு விரயமாகியது. தவிர உபரியான உயர் அதிகாரிகளின் பெருக்கமும் அவர்கள் செய்யும் ஊழலும் சேர்ந்துகொண்டு போக்குவரத்துக் கழகங்களை நட்டத்தில் தள்ளி தற்போது கடன் சுமையில் ஆழ்த்தியுள்ளன. இலாபமீட்டும் வழித்தடங்களை (ரூட்) தனியார் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்ததும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இழப்பைச் சந்திக்க முக்கியக் காரணமாகும்.
அதுபோலவே பத்தாண்டுகளுக்கு முன்பு வரை இலாப மீட்டும் நிறுவனமாக இருந்தது ஆவின்பால் நிறுவனம். 2000ஆம் ஆண்டில் அது ரூ 5 கோடி இலாப மீட்டியது. அதன்பின் அது படிப்படியாகச் சரிந்து இன்று மரணப்படுக்கையில் இருக்கிறது. இப்போது மாதாமாதம் ரூ 16 லட்சம் அரசிடமிருந்து மானியம் பெறும் நிறுவனமாகச் சீரழிந்து நிற்கிறது. காரணமென்ன?
அரசுப்பால் பண்ணைகளில் கால் நடைகள் வளர்ப்பது கைவிடப்பட்டது. கால் நடைகளுக்குத் தேவையான தீவனங்களை ஆவின் நிறுவனமே உற்பத்தி செய்துவந்ததையும் கைவிட்டுவிட்டது. சென்னை, ஆம்பூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுவந்த தீவன உற்பத்தி நிறுத்தப்பட்டது. இத்துறையில் தனியார் ஈடுபட்டு கொள்ளை இலாபம் அடித்துவருகின்றனர். ரூ 300க்கு விற்றுவந்த கால் நடைத் தீவனத்தின் விலை தற்போது ரூ.675 முதல் 800 என்ற அளவில் உயர்த்தி தனியார் முதலாளிகள் கொள்ளையடிக்கின்றனர். பால் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயில் 65 சதவீதத்தை தீவினத்திற்காகச் செலவிட வேன்டிய கட்டாயத்திர்கு பால் உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுக்க வேண்டிய கட்டாயம். தவிர தனியார் பால் நிறுவனங்கள் இத்துறையில் புகுந்து கொள்ளையடிக்க வழியமைத்துக் கொடுத்துள்ளது அரசு. எனவேதான் இலாபமீட்டி வந்த ஆவின் பால் நிறுவனம் தற்போது கடனில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மின்சாரத் துறையிலும் அரசு தனியார்மயத்தைப் புகுத்தியது. மின் உற்பத்தித் திட்டங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்தது. அரசு எந்தவொரு மின் உற்பத்தித் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. கடந்த கருணாநிதி ஆட்சியில் ஏழு தனியார் மின் உற்பத்தித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மாநிலத்தின் மின்சாரத் தேவையில் அத்தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு வெறும் 9 சதவீதம் மட்டுமே. ஆனால் மின்சார வாரியத்தின் மொத்த வருவாயில் 35 சதவீதத்தை அத்தனியார் நிறுவனங்கள் கபளீகரம் செய்துவிடுகின்றன. தமிழகத்தில் உள்ள பன்னாட்டுப் பெருமுதலாளித்துவ நிறுவனங்களுக்கு தமிழக அரசு மலிவு விலையில் மின் விநியோகம் செய்து வருகிறது. தனியார் மின் உற்பத்தியாளரிடமிருந்து ஒரு யூனிட்டிற்கு ரூ 18.54 கொடுத்து வாங்கி, சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கு ரூ 1.85 வீதம் வழங்குகிறது. தமிழகத்தில் 70 சதவீத மின்சாரத்தை 2.1 கோடிப்பேர் பகிர்ந்துகொள்ள 10 ஆயிரத்திற்குக் குறைவான பெரும் நிறுவனங்கள் 30 சதவீத மின்சாரத்தை எடுத்துக் கொள்கின்றன. இவர்களுக்கு மின்வெட்டும் கிடையாது. இந்தக் கணக்கிற்கு அப்பாற்பட்டு ஊழியர் பற்றாக்குறை, அரதப்பழசான இயந்திரங்களால் ஏற்படும் மின் விரயம், மின் திருட்டு என 30 சதவீதம் மின்சாரம் காணாமல் போகிறது. மேற்கூறிய சீர் கேடுகளைக் களையாமலும், மின் உற்பத்தித் திட்டங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்தும் அவர்களிடமிருந்து கூடுதல் விலை கொடுத்து வாங்கி பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு வழங்குவதாலுமே மின் வாரியம் நட்டத்தைச் சந்தித்து மரணப்படுக்கையை நோக்கிச் சென்றுள்ளது.
ஆக, கடந்த 20 ஆண்டு காலமாக மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடித்துவரும் தனியார்மயக் கொள்கைகளே அரசுத்துறை நிறுவனங்கள் சீரழிந்து சிதையக் காரணமாகும். ஜெயாவும் கருணாவும் இக்கொள்கைகளைத் தொடர்ந்து அமல்படுத்தி பன்னாட்டு, உள்நாட்டுப் பெருமுதலாளிகளுக்குச் சேவை புரிந்துவிட்டு, அதனால் ஏற்பட்ட நட்டத்தைக் காட்டி மக்கள் மீது கட்டணச் சுமைகளை ஏற்றுவதை நியாயப்படுத்த, அரசுத்துறை நிறுவனங்களைக் காப்பாற்றவே கட்டண உயர்வு என்று பசப்புவது மோசடியானது. கண்டிக்கத்தக்கது.
பெருமுதலாளிகளுக்கு ஊக்கத்தொகை, வரிச்சலுகை! மக்கள் தலையிலோ கட்டணச் சுமை!
மரணப் படுக்கையிலிருக்கும் அரசுத்துறை நிறுவனங்களைக் காப்பாற்ற மத்திய அரசிடம் சிறப்பு நிதி கோரினேன், மத்திய அரசு வழங்கவில்லை. எனவே கட்டண உயர்வு என்கிறார் ஜெயா.
பன்னாட்டு, உள்நாட்டுப் பெருமுதலாளிகள் நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்கவும், பொதுத்துறை நிறுவனங்களைக் கைப்பற்றிக் கபளீகரம் செய்யவும் வழிவகை செய்வதற்காக தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகளை மூர்க்கத் தனமாகச் செயல்படுத்தி வரும் மன்மோகன் கும்பல், அரசுத்துறை நிறுவனங்களைக் காப்பாற்ற மாநில அரசுகளுக்கு சிறப்பு நிதியை நிச்சயமாக வழங்காது. அரசின் வருவாயில் பெரும்பகுதியை பன்னாட்டு, உள்நாட்டுப் பெருமுதலாளிகளுக்கு வாரி வழங்கி விட்டால், மாநில அரசுகளுக்கு - மக்கள் நலத்திட்டங்களுக்கு எப்படி நிதி வழங்க முடியும்?
வரிச்சுமைகள் மூலம் மக்களைக் கசக்கிப் பிழிந்து திரட்டப்படும் வருவாயில் 28.5 சதவீதத்தை மட்டுமே மாநிலங்களுக்கு வழங்கிவிட்டு மற்றவற்றயெல்லாம் பன்னாட்டு, உள்நாட்டுப் பெருமுதலாளிகளுக்கு ஊக்கத் தொகைகளாகவும், வரிச்சலுகைகளாகவும் வாரி வழங்குகிறது மத்தியில் ஆளும் மன்மோகன் அரசு. 2008ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஐரோப்பாவிலும், ஜப்பானிலும் பரவிவந்த நிலையில், இந்தியாவில் செயல்படும் பன்னாட்டு, உள்நாட்டுப் பெருமுதலாளிகள் அந்நெருக்கடியால் பாதித்துவிடக் கூடாது என்கிற அக்கறையோடு, “பால் நினைந்தூட்டும் தாயினைப் போலபதறியடித்துக் கொண்டு ரூ 5 லட்சம் கோடியை அவர்களுக்கு வாரி வழங்கியது மன்மோகன் அரசு. தொடர்ந்து கடந்த ஆண்டுகளில் அந்நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ 15 லட்சம் கோடியைத் தாரைவார்த்துள்ளது. அத்தோடு கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் எக்சைஸ் வரிக் குறைப்பு, கஸ்டம்ஸ் வரிக்குறைப்பு என ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாயை வரிச்சலுகையாக அந்நிறுவனங்களுக்கு அளித்துள்ளது. பாதுகாப்புத் துறைக்கென மொத்த பட்ஜெட்டில் 21 சதவீதத்திற்குமேல் ஒதுக்கி, அதில் பெரும்பகுதியை ஏகாதிபத்திய அரசுகளிடமிருந்து காலாவதியான இராணுவத் தளவாடங்களை வாங்கச் செலவிட்டுள்ளது மன்மோகன் அரசு. இதன் மூலம் அமெரிக்க ஆயுதத் தளவாட உற்பத்தி முதலாளிகளை நெருக்கடியிலிருந்து மீட்டுச் சேவை புரிந்துள்ளது மன்மோகன் கும்பல்.
இப்படி மத்திய அரசு, வருவாயில் பெரும்பகுதியை பன்னாட்டு உள்நாட்டுப் பெருமுதலாளிகளுக்கு இலவசமாகவழங்குவதன் விளைவாக மாநில அரசுகளுக்கு ஒதுக்கும் நிதி குறைந்து போகிறது. மாநில அரசுகளோ இதனை எதிர்க்காமல் - ஆதரித்துக்கொண்டே மாநில அரசுகளின் செலவினங்களுக்காக மடிப்பிச்சை ஏந்தி மண்டியிடுகின்றன. நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியோ மாநில அரசுகள் தாங்களாகவே வருவாயைப் பெருக்கிக்கொள்ள வேண்டும்; மத்திய அரசிடம் கேட்கக் கூடாது என்கிறார். அதாவது மக்கள் தலையில் மிளகாய் அறைக்க வேண்டும் என்கிறார். இதை எதிர்த்துப் போராடத் தயாரில்லாத மாநில அரசுகள், கட்டணச் சுமைகளையும் வரிச்சுமைகளையும் மக்கள் மீது சுமத்திக் கசக்கிப் பிழிகின்றன.
பன்னாட்டு, உள்நாட்டுப் பெருமுதலாளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் இத்தகைய ஊக்கத் தொகைகளும், வரிச் சலுகைகளும் இங்குள்ள முதலாளித்துவ ஊடகங்களுக்கும், முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்களுக்கும் இலவசங்களாகத் தெரிவது இல்லை. மாறாக மக்களுக்கு வழங்கப்படும், இலவசத் திட்டங்களால்தான் கஜானா காலியாகிறது; குடியே முழுகிப் போகிறது; இதனால்தான் கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிலைக்கு அரசுகள் தள்ளப்படுகின்றன என்று ஆட்சியாளர்களுக்கு வக்காலத்து வாங்குகின்றனர். கிரைண்டர், மிக்சிபோன்ற இலவசங்களை மக்கள் யாரும் கேட்கவில்லை. மக்களின் நியாயமான எதிர்பார்ப்பு - கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர், போக்குவரத்து, மின்சாரம் போன்றவற்றை இலவசமாக வழங்கவேண்டும் என்பதையே. மத்திய, மாநில அரசுகள் பன்னாட்டு, உள்நாட்டுப் பெருமுதலாளிகளுக்கு வழங்கிவரும் ஊக்கத் தொகைகளையும், வரிச் சலுகைகளையும் நிறுத்தி, அந்நிதியை மக்களின் நல்வாழ்வுத் திட்டங்களுக்குத் திருப்புவதன் மூலம் மட்டுமே அரசுத்துறை நிறுவனங்கள் காப்பாற்றப்படும். இது மக்கள் நல அரசுகளின் கடமையும் கூட.
ஆக மத்திய, மாநில அரசுகள் கடந்த இருபது ஆண்டு காலமாகச் செயல்படுத்திவரும் ஏகாதிபத்திய உலகமய, தாராளமாய, தனியார்மயக் கொள்கைகளே மக்கள் மீது சுமத்தப்படும் கட்டணச் சுமைகளுக்குக் காரணம். இக்கொள்கைகளை தொடர்ந்து செயல்படுத்திவரும் மன்மோகன் கும்பலின் மத்திய ஆட்சியை எதிர்த்தும், மாநிலத்தை ஆளும் கொடுங்கோல் ஜெயா ஆட்சியை எதிர்த்தும் போராடி முறியடிக்காமல் தீர்வு காண முடியாது.
நாடாளுமன்றவாத முதலாளித்துவக் கட்சிகளின் சந்தர்ப்பவாதம்
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கும்பலுக்கு மாற்று என்று பீற்றிக்கொள்ளும் பா.ஜ.க., உள்ளிட்ட அகில இந்திய கட்சிகள் ஆனாலும் மாநிலத்தை ஆளும் கொடுங்கோல் ஜெயா கும்பலுக்கு மாற்று நாங்கள்தான் என மார்தட்டும் தி.மு.க, ம.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க, உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் ஆனாலும் தேச விரோத உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை எதிர்ப்பது இல்லை. மாறாக ஆட்சிப் பீடம் ஏறினால் இவைகளும் அக்கொள்கைகளையே செயல்படுத்துகின்றன, மக்கள் மீது சுமைகளை ஏற்றுகின்றன. திருத்தல்வாத போலிக் கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சியில் இல்லாதபோது இக்கொள்கைகளுக்கு எதிராக மறியல், பொரியல்போராட்டங்களை நடத்துகின்றன. ஆட்சியமைக்கும் மாநிலங்களில் அதே உலகமயக் கொள்கைகளைப் செயல்படுத்திவதில் பிற மாநில அரசுகளுடன் போட்டி போடுகின்றன. இத்தகைய கட்சிகளை நம்பிப் பயனில்லை.
ஆகவே புரட்சிகர இயக்கங்கள் பின்னால் உழைக்கும் மக்கள் ஓரணியில் திரண்டு உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளின் அடிப்படையில் - உலகவங்கி, ஐ.எம்.எப் ஆகியவற்றின் ஆணைகளுக்கு அடிபணிந்தும் கொடுங்கோல் ஜெயா அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள கட்டணச் சுமைகளைத் திரும்பப் பெற பின்வரும் முழக்கங்களின் கீழ் அணிதிரண்டு போராட அறைகூவுகிறோம்.
« பன்னாட்டு, உள்நாட்டுப் பெருமுதலாளிகளுக்கு வழங்கும் சலுகைகளை நிறுத்து! அவர்கள் மீது வரிகளைப் போடு!
« சேவைத் துறைகள் அனைத்தையும் தனியார்மயமாக்குவதை நிறுத்து! மீண்டும் அரசுடைமையாக்கு!
« உலகவங்கியின் ஆணைகளுக்கு அடிபணிந்து மக்கள் மீது கட்டணச் சலுகைகளை ஏற்றும் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்துப் போராடுவோம்!
« மக்கள் வயிற்றில் அடிக்கும் கொடுங்கோல் ஜெயா ஆட்சியை எதிர்த்து அணிதிரள்வோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
ஏப்ரல் 2012

No comments:

Post a Comment

விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.