2012 - மே நாள் வாழ்க!
அன்பார்ந்த
உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!
அமெரிக்காவின் தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்திய
வாதிகள், உலகமுதலாளித்துவப் பொதுநெருக்கடியின் சுமைகளை, தங்கள் நாட்டுத்
தொழிலாளி வர்க்கத்தின் மீதும், மூன்றாம் உலக நாட்டு மக்களின் மீதும் திணிப்பதை
எதிர்த்து - உலகெங்கிலும் உள்ள தொழிலாளி வர்க்கமும் ஒடுக்கப்பட்ட நாட்டு மக்களும் எழுச்சிமிக்க
போராட்டங்களை நடத்திவரும் ஒரு சூழலில் இவ்வாண்டு மேநாளை சந்திக்கிறோம்.
நெருக்கடியில்
மூழ்கும் முதலாளித்துவ உலகம்
2008ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஏற்பட்ட நிதிநெருக்கடி, முதலாளித்துவ
மிகை உற்பத்தியால் ஏற்பட்ட இந்த நெருக்கடி ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கும்
பரவி நீடித்து வருகிறது. உலகப் பொருளாதார வளர்ச்சியானது 2010ல் 4 சதவீதமாக இருந்தது, 2011ல்
2.8 சதவீதமாக வீழ்ச்சியடைந்து விட்டது. அது மேலும் வீழ்ச்சியடையும் என்று ஐ.நா. ஆய்வு
அறிக்கை அபாயச்சங்கை ஊதியுள்ளது.
அமெரிக்காவின் ஒட்டுமொத்த உற்பத்தி 2010ல்
2.3 சதவீதமாக இருந்தது, 2011ல் 1.8 சதவீதமாக வீழ்ந்துவிட்டது. அங்கு
வேலையின்மையோ வரலாறு காணாத அளவிற்கு 18.4 சதவீதமாக உயர்ந்துவிட்டது. பெருகிவரும் வேலையின்மை, குறைந்து
கொண்டே செல்லும் ஊதியம், மக்களின் வாங்கும் சக்தியை குறைத்து விட்டது.
அமெரிக்கா இன்று உலகின் மிகப்பெரிய கடன்கார நாடாக மாறியுள்ளது. உலகப் பொருளாதாரத்தின்
உந்துசக்தியாக கருதப்படும் அமெரிக்க ஏகாதிபத்தியம் புதை சேற்றில் மூழ்கிவருகிறது.
ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரமோ தற்கொலைப் பாதையை
நோக்கி செல்கிறது. பிரிட்டனின் ஒட்டுமொத்த உற்பத்தி 0.5 சதவீதமாக வீழ்ந்துவிட்டது.
ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளிலும்
மந்தநிலை தொடர்கிறது. கிரீஸ், ஸ்பெயின், இத்தாலி, ஐரிஷ் போன்ற
நாடுகள் கடன் வலையில் சிக்கியுள்ளது என்பது ஐரோப்பிய யூரோ நாணயத்தின் நீட்டிப்பையே
கேள்விக்குறியாக்கியுள்ளது. ஸ்பெயினில் 50 சதவீத இளைஞர்கள் வேலையின்றி தவிக்கின்றனர்.
இவ்வாறு முதலாளித்துவ உலகில் தொடரும் பொருளாதார நெருக்கடிகள் இந்தியா உள்ளிட்ட அனைத்து
நாடுகளையும் கடுமையாக பாதித்துவருகிறது.
தொழிலாளி
வர்க்கத்தின் எழுச்சி
அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் 2008ஆம் ஆண்டின்
நெருக்கடியிலிருந்து அந்நாட்டின் நிதிமூலதன திமிங்கிலங்களை பாதுகாப்பதற்கு நட்ட ஈடு, ஊக்கத்தொகை
என ஆண்டிற்கு 700 பில்லியன் டாலர்கள் மக்களின் வரிப்பணத்தை வாரிவழங்கியது. அதன் விளைவாக
நிதிமூலதனக் கும்பல் கொழுத்தனவே ஒழிய பொருளாதார நெருக்கடி தீரவில்லை. மாறாக நெருக்கடிகளின்
சுமைகள் முழுதும் அந்நாட்டு மக்கள் மீது திணிக்கப்பட்டது. சமூக நலத்திட்டங்கள் கைவிடப்பட்டன.
அரசியல் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டன. ஏற்கனவே வேலையின்றி, போதிய வருமானமின்றி
வாடிக்கொண்டிருக்கும் மக்கள், அரசுக்கு எதிராக போராட்டத்தை துவங்கினர்.
ஐரோப்பிய நாடுகளிலும் இதே நிலைதான் தொடர்கிறது.
அமெரிக்க மக்கள் சந்திக்கும் துன்பதுயரங்களுக்குக்
காரணம் நிதி மூலதனக் கும்பல்களே காரணம் என்று கூறி அமெரிக்க மக்கள் வால்ஸ்டீரிட்டை
கைப்பற்றும் போராட்டத்தைத் தொடங்கினர். நிதிமூலதனக் கும்பல்களுக்கு அரசாங்கம் வழங்கும்
சலுகைகளை நிறுத்தவேண்டும் எனவும் முதலாளித்துவம் ஒழிக என்றும் அம்மக்கள் நாடுதழுவிய
அளவில் தொடர்ந்து போராடி வருகின்றனர். அந்தப் போராட்டம் ஐரோப்பா, ஜப்பான்
உள்ளிட்ட 87 நாடுகளில் பரவி தொடர்ந்து நடந்துவருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய
நாடுகள் அத்தகையப் போராட்டங்களை ஒடுக்க கடுமையான அடக்குமுறையை ஏவிவிட்டப் பிறகும் கூட
மக்கள் அஞ்சாமல் போராடி வருகின்றனர். அமெரிக்காவில் இம்மேநாளில் நாடுதழுவிய வேலைநிறுத்தத்திற்கு
அறைகூவல் விடப்பட்டுள்ளது. 80ஆம் ஆண்டுகளின் இறுதியில் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின்
நெருக்கடியைக் காரணம் காட்டி (அதுவும் முதலாளித்துவ நெருக்கடிதான்) அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள்
மற்றும் அவர்களின் தாசர்கள் கம்யூனிசம் ஒழிந்துவிட்டது என்று கூத்தாடினர். ஆனால் இன்று
அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ உலகம் முழுவதும் முதலாளித்துவம் ஒழிக என்று மக்கள்
போர்க்கோலம் பூண்டுள்ளனர்.
அரபு எழுச்சி
அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத்
சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு தமது உலக மேலாதிக்கத்தை நிலைநாட்டவும், மத்திய கிழக்கில்
கிடைக்கும் எண்ணெய் வளத்தின் மீது தமது ஏகபோகத்தை நிறுவவும் நேட்டோ நாடுகளுடன் இணைந்து
தமக்கு அடிபணியாத நாடுகள் மீது தாக்குதல் தொடுத்தது. பயங்கரவாதத்தை ஒழிப்பது, பேரழிவு
ஆயுதங்களை ஒழிப்பது எனும் பேரில் ஆப்கனிலும், ஈராக்கிலும் இராணுவ
ரீதியில் தலையிட்டு தமது பொம்மை ஆட்சிகளை நிறுவியுள்ளது. தற்போது சிரியாவையும், ஈரானையும்
மிரட்டி வருகிறது.
அமெரிக்கா மத்திய கிழக்கிலும், வடக்கு ஆப்பிரிக்க
நாடுகளிலும் தமது ஆதரவு நாடுகளுக்கு இராணுவ ரீதியில் உதவி செய்து அந்நாடுகளின் சர்வாதிகார
ஆட்சியை பாதுகாத்து வந்தது. 2008ஆம் ஆண்டு நெருக்கடிகளின் சுமைகளை அரசியல், பொருளாதார
ஒப்பந்தங்கள் மூலம் இந்நாடுகளின் மீது திணித்தது. இத்தகைய புதியதாராளக் கொள்கைகளால்
ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தாங்கமுடியாமல் அரபு நாட்டு மக்கள் தங்களது கொடுங்கோல் சர்வாதிகார
ஆட்சிகளை எதிர்த்து கலகம் செய்தனர். யேமன் முதல் எகிப்து, லிபியா வரை
மக்கள் வரலாறு காணாத அளவிற்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க ஏகாதிபத்தியமோ மனித
உரிமை காப்பு, ஜனநாயக மீட்பு என்ற பேரில், இந்தப் போராட்டங்களின்
தலைமையை கைப்பற்றி, தமது அடிவருடிகளின் ஆட்சியை அகற்றிவிட்டு
தமது புதிய பொம்மை ஆட்சிகளை நிறுவிவருகிறது. அரபு மக்கள் இத்தகைய பொம்மை ஆட்சிகளை எக்காலத்திலும்
ஏற்கப்போவதுமில்லை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கனவு பலிக்கப்போவதுமில்லை.
இன்று ஏகாதிபத்திய நாடுகளில் ஏற்பட்டுவரும் தொழிலாளி
வர்க்கத்தின் எழுச்சியும், அரபு மக்களின் விடுதலை மற்றும் ஜனநாயகத்திற்கான
கிளர்ச்சிகளும் ஏகாதிபத்தியவாதிகளையும் அவர்களின் தாசர்களையும் எதிர்த்து சோசலிசம்
மற்றும் விடுதலைக்கான பாதையில் நடைப்போடும் என்பது வெகு தொலைவில் இல்லை.
திவாலாகிவரும்
இந்தியப் பொருளாதாரம்
உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி
இந்தியப் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. அமெரிக்காவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும்
தொடரும் பொருளாதார மந்தநிலையால், இந்தியாவின் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி
அதிகரித்து நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 2011ல் மட்டும் 116.8 பில்லியன் டாலர்களை
எட்டியுள்ளது. இதன் விளைவாக ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியுடைந்து பங்குசந்தை முதலீடுகள்
நாட்டை விட்டு வெளியேறுவது அதிகரித்துவருகிறது. நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி
4 சதவீதமாகவும்; வேளாண் உற்பத்தி 2.5 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்து
நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியும் 6.4 சதவீதமாக வீழ்ந்துவிட்டது. 1991ஆம் ஆண்டு தங்கத்தை
அடகு வைத்த நிலைக்கு இன்று நாடு திவாலாகிவிட்டது.
ஆனால் ஐ.மு. கூட்டணி அரசின் நிதி அமைச்சரோ நாடு
திவாலானதற்குக் காரணமான புதிய தாராளக் கொள்கைகளை உலகமய, தனியார்மயக்
கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று கூறுகிறார். நாட்டின் பிரதமர் மன்மோகன்
சிங்கோ அமெரிக்காவை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு தோள்கொடுப்போம் என்று ஜி-20 மாநாட்டில்
அறிவிக்கிறார். அரசியல் பொருளாதார, இராணுவ உடன்படிக்கை
மூலம் இந்தியாவை அமெரிக்காவின் புதியகாலனியாக மாற்றிய இந்த அமெரிக்க அடிவருடியிடமிருந்து
வேறென்ன எதிர்பார்க்க முடியும். இந்திய பொருளாதாரத்தையே மீட்கமுடியாத இந்த மேதை அமெரிக்காவை
காப்பாற்றுவேன் என்பது நல்ல நகைச்சுவைதான்.
அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும்
ஏற்பட்டுள்ள நெருக்கடியால் இந்தியாவின் ஏற்றுமதி சார்ந்த ஆயத்த ஆடைகள், வைரம் மற்றும்
தங்க ஆபரணத்தொழில்கள் முடங்கி கோடிக் கணக்கான பேர் வேலையிழந்துள்ளனர். “டாலர் நகரம்” என்றழைக்கப்பட்ட
திருப்பூர் இன்று “டல் அடிக்கும் நகரமாக” மாறி லட்சக்கணக்கானோர்
வேலையிழந்துள்ளனர். தாராளமாயம், தனியார்மயக் கொள்கைகள் செயல்படுத்தியதால்
நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1998ல் 28.2 கோடியிலிருந்து 2008ல் 27.5 கோடியாக
குறைந்துவிட்டது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் அவுட்சோர்சிங் முறைகள் மூலம் தொழிலாளர்களின்
உரிமைகள் மறுக்கப்பட்டு ஒட்டச் சுரண்டப்படுகின்றனர். 1999-2000ல் 20 சதவீதமாக இருந்த
ஒப்பந்தத் தொழிலாளர்களின் விகிதம் 2008-09ல் 32 சதவீதமாக உயர்ந்து விட்டது. சிறப்புப்
பொருளாதார மண்டலங்களில் அது 80 சதவீதமாக உள்ளது. தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகள்
பறிக்கப்பட்டு கொத்தடிமைகளாக மாற்றப்படுகின்றனர். தொழிலாளர்களின் ஊதியம் 1980களில்
நிகரமதிப்புக் கூட்டலில் 30 சதவீதமாக இருந்தது, 1990களில் 20 சதவீதமாக
குறைந்து, 2008-09ல் அது வெறும் 10 சதவீதமாக வீழ்ச்சியடைந்து
விட்டது. ஆனால் முதலாளிகளின் இலாபமோ 1980களில் இலாபத்தின் பங்கு ஊதியத்தின் பங்கைவிட
20 சதவீதம் குறைவாக இருந்தது. அது 1990களில் உலகமயக் கொள்கைகள் செயல்படுத்தப்பட்டப்பின்
அது 30 சதவீதமாக உயர்ந்து, 2008-09ல் 60 சதவீதத்தை எட்டியுள்ளது. உலகமய, தனியார்மயக்
கொள்கைகளால் பன்னாட்டு முதலாளிகளும், உள்நாட்டுத் தரகுப்
பெருமுதலாளிகளும் கொள்ளைலாபம் அடைந்து தங்களது சொத்துக்களை பன்மடங்கு குவித்துள்ளனர்.
இவ்வாறு குவித்த மூலதனத்தை ஏகாதிபத்திய நாடுகளில் முதலீடு செய்வது பெருகிவருகிறது.
வேளாண்மைத் துறையில் இந்திய அரசு நிலச்சீர்திருத்தத்தை
தொடர்ந்து செயல்படுத்த மறுத்துவருகிறது. தாராளமய, தனியார்மயக் கொள்கைகள்
செயல்படுத்தப்பட்டப் பிறகு நிலமற்ற விவசாயிகளின் எண்ணிக்கை பெருகி தற்போது நாட்டில்
14 கோடி பேர் நிலமற்ற கூலிவிவசாயிகளாக உள்ளனர். ஆனால் மறுபுறம் குழும விவசாயம் எனும்
பேரில் நில உச்சவரம்பு சட்டத்தையும் மீறி 1000 ஏக்கர் பெரும் பண்ணைகள் உருவாக்கி பன்னாட்டு, உள்நாட்டு
முதலாளிகளுக்கு நிலம் வழங்கப்பட்டு நிலக்குவியலுக்கு வழிவகுக்கப்பட்டு வருகிறது. வேளாண்
உற்பத்தி, வேளாண் வணிகம், வேளாண் ஆராய்ச்சியில்
அமெரிக்கக் கம்பெனிகளான கார்கில், மான்சாண்டோ போன்ற நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டு
இந்திய விவசாயத்தின் மீது அமெரிக்காவின் ஆதிக்கம் நிறுவப்பட்டுவருகிறது.
விவசாயிகளுக்கு அளித்துவந்த மானியத்தை வெட்டியதால்
அவர்களின் இடுபொருட்களின் விலை உயர்ந்து போனது; வேளாண் பொருட்களுக்கான
இறக்குமதி கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டு ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து மலிவான விலையில்
பொருட்களை கொட்டிகுவித்தது; அரசாங்கம் நியாயமான விலையில் விவசாயிகளிடம்
இருந்து கொள்முதல் செய்ய மறுத்தது; பொது வினியோகத் திட்டத்தை
சீரழித்து இவை எல்லாம் சேர்ந்துகொண்டு விவசாயிகளின் விளைபொருளுக்கு விலை கிடைக்காமல்
போனதற்கு வழிவகுத்தது. விவசாயிகள் கடன் பொறியில் சிக்கினர். இதன் விளைவாக விவசாயிகள்
2,65,000 பேர் தற்கொலை செய்து மாண்டுபோயினர். இவ்வாறு உலகமய, தனியார்மயக்
கொள்கைகள் இந்திய விவசாயத்தை சீரழித்து, விவசாயிகளின் உயிரை
பறிப்பதுடன் நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கும் உலைவைத்து வருகிறது.
நிதிபற்றாக்குறையைக் காரணம் காட்டி வேளாண்மைத்
துறைக்கு தொடர்ந்து பல ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு வருகிறது. மன்மோகன்
கும்பலோ புதியதாக பாசனத் திட்டத்தையோ, நதிநீர் இணைப்பதன்
மூலம் மாநிலங்களுக்கிடையில் உள்ள நீர் பிரச்சினைகளை தீர்க்கவோ, தமிழகம்
பாலைவனமாக மாறுவதையோ தடுக்கத் தயாரில்லை. முல்லைப் பெரியாறு பிரச்சினையில் உச்சநிதிமன்றத்
தீர்ப்பை செயல்படுத்தவோ, காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்ற ஆணையையோ
செயல்படுத்தத் தயாரில்லை. தற்போது காவிரியில் மீண்டும் ஒரு அணையை கர்நாடகம் கட்ட இருப்பதையும்
பெண்ணையாற்றில் கர்நாடகம் ஒசகோட்டா என்ற இடத்தில் ஒரு அணைக்கட்டி தண்ணீரை தடுப்பதையும்; பாலாற்றில்
ஆந்திரம் புதியதாக கணேசபுரத்தில் ஒரு அணைக்கட்டி தமிழகத்திற்கு நீரை தரமறுப்பதையும்
தடுக்கத் தயாரில்லை. மாறாக தற்போது புதிய ‘வரைவு தேசிய நீர்க்கொள்கை’ என்ற பேரில்
தண்ணீரையும் தனியார்மயமாக்கி பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளிடம் ஒப்படைக்கத் தயாராகிவிட்டது.
இதன் மூலம் இனி பாசனத்திற்கும், குடிநீருக்கும் மக்கள் காசுகொடுத்துதான் பயன்படுத்தவேண்டும்.
இவ்வாறு இயற்கை வழங்கிய கொடையை வணிகப் பொருளாக்கி பன்னாட்டுக் கம்பெனிகளின் கொள்ளைக்கு
வழிவகுத்துள்ளது.
மேலும் பணவீக்கத்தை குறைப்பது, விலைவாசியை
குறைப்பது எனும் பேரில் இவ்வாண்டு பொருளாதார ஆய்வறிக்கை சில்லறை வணிகத்தில் அந்நிய
முதலீட்டை திறந்துவிடுவது என்று கூறுகிறது. இவ்வாறு சில்லறை வணிகத்தை திறந்துவிடுவது, பதுக்கலுக்கும்
ஊக பேரத்திற்கும் சாதகமாகவே முடியும். அதன் விளைவு விலைவாசி உயரவே செய்யும். மேலும்
இந்தியா முழுதும் 4 கோடி வணிகக் குடும்பங்கள் நடுத்தெருவில் நிறுத்தப்படும்.
ஒரு புறம் விவசாயமும், தொழிலும்
சீரழிந்து மக்கள் வேலையின்மையாலும், விலைவாசி உயர்வாலும்
தற்கொலைப் பாதைக்குத் தள்ளப்படும் இந்தச் சூழலில், மன்மோகன் கும்பல்
நிதிப்பற்றாக்குறையை குறைப்பது எனும் பேரில் மக்கள் மீது சுமைகளை சுமத்துகிறது. இவ்வாண்டு
நிதிநிலை அறிக்கையில் நிதிப்பற்றாக்குறை ரூ.5,21,980 கோடி என்று கூறிக்கொண்டே பெருமுதலாளிகளுக்கு
நேரடி வரியை ரூ. 4,500 கோடி குறைத்துள்ளது. ஆனால் மறைமுகவரி ரூ.45,990 கோடிக்கு உயர்த்தி
மக்கள் மீது சுமையை சுமத்தியுள்ளது. மேலும் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு
ரூ. 9000 கோடி நிதியையும் வெட்டிவிட்டது. தொழிலாளர்களின் வைப்புநிதிக்கான வட்டியை அரை
சதவீதம் குறைத்துள்ளது. கல்வி மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கான நிதியும் பெருமளவில்
வெட்டப்பட்டுள்ளது. மறுபுறம் நிதிநிலை அறிக்கையில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தரகுப்பெருமுதலாளிகளுக்கு
ஊக்கத்தொகையாக ரூ.5,29,432 கோடி வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடந்த நான்கு
ஆண்டுகளில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெருமுதலாளிகளுக்கு 20 இலட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு பாதி அளவு வரிபோட்டாலே பற்றாக்குறையை குறைக்கவும், மக்கள் நலத்திட்டங்களை
செயல்படுத்தவும் விலைவாசி உயர்வை தடுக்கவும் முடியும். ஆனால் மன்மோகன் கும்பலோ பெருமுதலாளிகள், வெளிநாட்டு
முதலாளிகளின் நலன்களையே தேசநலன் என்று கருதி தேசத்திற்கு துரோகம் இழைக்கிறது. 90 சதவீதம்
மக்களின் வாழ்வுரிமையைப் பறித்துவருகிறது.
நிதிப்பற்றாக்குறையைத் தீர்ப்பது என்ற பேரில்
இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில் இலாபமீட்டும் அரசுத்துறை நிறுவனங்களின் பங்கை ரூ.45,000
கோடிக்கு தனியாரிடம் விற்றுவிடுவது என்று கூறுகின்றனர். அவ்வாறு பொதுத்துறை நிறுவனங்களின்
பங்குகள் தனியார்மயமாக்கப்படுவதால் அரசிற்கு பல இலட்சம் கோடிகள் நட்டம் என்று பொதுக்கணக்கு
அதிகாரி அறிவித்துள்ளார். 2ஜி அலைக்கற்றை விற்றதில் ரூ.1.76 இலட்சம் கோடி, நிலக்கரி
சுரங்கம் அமைப்பதற்கு உரிமம் அளித்ததில் ரூ.10.6 இலட்சம் கோடி, இயற்கை எரிவாயு
(கோதாவரி படுகை) எடுப்பதற்கு தனியாரிடம் அனுமதி கொடுத்ததில் ரூ. 2 இலட்சம் கோடி, இரும்பு
சுரங்கம் தனியாரிடம் ஒப்படைத்ததில் ரூ.20 இலட்சம் கோடிக்கு மேல் அரசிற்கு நட்டம் ஏற்பட்டுள்ளது.
இதில் அரசியல்வாதிகளுக்கும், அமைச்சர்களுக்கும் வழங்கிய இலஞ்சம்தான் மாபெரும்
ஊழல் என்று கூறப்படுகிறது. இவ்வாறு நாட்டின் இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும்
பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் சூறையாடுவதை தடுத்து
நிறுத்த வேண்டுமானால், ஊழல் ஒழிக்கப்பட வேண்டுமானால் உலகமயம், தனியார்மயம்
ஒழிக்கப்பட்டு, முதலாளித்துவ ஆட்சிமுறைக்கு முடிவுகட்டவேண்டும்.
எனினும் உடனடியாக இலஞ்சம் வாங்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் மட்டுமல்லாது
இலஞ்சம் கொடுத்த உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளையும் கைது செய்து சிறையிலடைக்கவேண்டும்.
அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு நாட்டுடைமையாக்க வேண்டும். இது ஒன்றுதான்
நாட்டின் நிதிச்சுமையை போக்குவதற்கும் மக்களின் நல்வாழ்வை பாதுகாப்பதற்குமான வழியாகும்.
அதற்கு மாறாக அன்னா அசாரே கூறுகின்ற இலஞ்சம் கொடுக்கும் முதலாளிகளை தண்டிக்காமல், கடுமையான
சட்டங்கள் என்பது ஊழலை ஒழிக்கப் பயன்படாது. அது வெறும் கேலிக்கூத்தாகவே முடியும்.
நெருக்கடிகளின்
சுமைகளை மக்கள் மீது சுமத்தும் ஜெயா ஆட்சி
தமிழகத்தை ஆளும் ஜெயா ஆட்சி, மத்திய அரசு
செயல்படுத்திவரும் புதியகாலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்துவதிலும், மக்கள் மீது
நெருக்கடியின் சுமைகளை சுமத்துவதிலும் இந்தியாவிலேயே முதன்மையான மாநில ஆட்சியாகத் திகழ்கிறது.
பன்னாட்டு, உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கு சேவை செய்வதில்
கருணாநிதியையும் விஞ்சி விட்டது. தமது ஊழல் ஆட்சியை பாதுகாத்துக் கொள்ள, இந்துமதவாத
பாசிச பா.ஜ.க.வுடன் மறைமுகமாக கூட்டணி வைத்துக்கொண்டு இந்துமத பழமைவாதத்தை மீட்டெடுப்பதுடன்
தமது ஊழல் ஆட்சிக்கு எதிராக கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியேயும்
செயல்படுபவர்கள் மீது ஒரு பாசிச ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துவுடன் பேருந்துக் கட்டணத்தை
பெருமளவு உயர்த்தியும், பால்விலையை உயர்த்தியும் ரூ. 11,000 கோடி
அளவிற்கு மக்கள் மீது சுமைகளை சுமத்தினார். தற்போது மின்கட்டண உயர்வு மூலம் சுமார்
7000 கோடி அளவிற்கு மீண்டும் மக்கள் மீது சுமைகளை சுமத்தியுள்ளார். அதுமட்டுமின்றி
இவ்வாண்டு தமிழக நிதிநிலை அறிக்கை மூலம் ரூ.1,500 கோடிக்கு புதிய வரியைப் போட்டு மக்கள்
மீது தொடர்ந்து சுமையை ஏற்றுகிறார். இவை பற்றி எதிர்க் கட்சிகள் பேசுவதற்குக் கூட வாய்ப்பே
அளிக்காமல் எதேச்சதிகார வழிமுறைகளின் மூலம் மக்களின் வயிற்றில் அடிக்கின்றார். ஜெயலலிதா
பொதுத்துறையை காப்பதற்காக இந்த கட்டண உயர்வு என்று கூறுகிறார். ஆனால் அவர் வெளியிட்டுள்ள
“தொலைநோக்குத் திட்டமோ” அனைத்து கட்டமைப்புத் துறைகளிலும் தனியார்மயத்தை
வலியுறுத்தியுள்ளார். எனவே இந்தக் கட்டண உயர்வுகள் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும், உள்நாட்டுத்
தரகு முதலாளிகளுக்கும் சேவை செய்வதற்குத்தான் பயன்படும்.
கருணாநிதி கொண்டுவந்த அரைகுறையான சமச்சீர்க்
கல்வியையும் நீதிமன்றத் தீர்ப்புகளுக்குப் பிறகும் சட்ட விரோதமாக செயல்படுத்த மறுத்ததும், மக்கள் நலப்பணியாளர்கள்
15 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்கவேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை மறுத்து சட்டவிரோதமாக
அம்மக்களின் வாழ்க்கையை நசுக்கிவருவது, பரமக்குடியில் தாழ்த்தப்பட்ட
மக்கள் மீது தாக்குதல் நடத்திய சாதிவெறிப்பிடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது
மட்டுமல்லாது அந்த துப்பாக்கிச் சூட்டை ஆதரித்து சட்டசபையில் பேசினார். காவல்துறையினரின்
போலி மோதல்களை நியாயப்படுத்துவதோடு அன்றாடம் நடக்கும் காவல்நிலைய படுகொலைகளைக் கண்டிப்பதுகூட
கிடையாது. இவ்வாறு ஜெயலலிதா ஒரு சட்டவிரோத
பாசிச கொடுங்கோல் ஆட்சியை தமிழகத்தில் கட்டியமைத்து வருகிறார். கட்டண உயர்வுகளுக்கும், சட்டம் ஒழுங்கு
சீர்குலைவுக்கும் முந்தைய கருணாநிதி ஆட்சியின் மீது பழிபோடுகிறார் ஜெயலலிதா. ஆனால்
கருணாநிதி கடைபிடித்தக் கொள்கைகளைத்தான் ஜெயலலிதாவும் செயல்படுத்துகிறார். கருணாநிதியின்
மீது பழி போட்டுவிட்டு மக்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள முயற்சிக்கிறார்.
ஜெயலலிதா தம்மீது பெங்களூரில் நடந்துவரும் சொத்துக்குவிப்பு
வழக்கிலிருந்து தப்பித்துக்கொள்ள இந்துமதவாத பாசிச பா.ஜ.க.வோடு மதவாதக் கூட்டணிக்கு
முயற்சிக்கிறார். அரசியல் தரகன் சோ மூலம் மோடியையும், அத்வானியையும்
சென்னைக்கு வரவழைத்து அவர்களுடன் உறவுக்கு முயற்சிக்கிறார். அவர்களை வைத்து கர்நாடக
பா.ஜ.க. மூலம் தமது வழக்கை நடத்திவரும் ஆச்சார்யாவை மிரட்டுகிறார். தமது ஊழல் ஆட்சிக்கு
எதிராக தமது கட்சிக்குள்ளேயே செயல்பட்ட சசிகலா குடும்பத்தினர் மீதும், எதிர்க்
கட்சிகள் குறிப்பாக தி.மு.கவினர் மீதும் பொய்வழக்குப் போட்டு காவல்துறையை ஏவி ஒடுக்குகிறார்.
இவ்வாறு தமிழகத்தில் போலீஸ் ஆட்சியை நடத்திவருகிறார்.
மறுபுறம் கோவிலில் அன்னதானம் வழங்குவது, ஆறுகால பூஜைகளுக்கு
ஏற்பாடு செய்வது, சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து அதை
இராமர் பாலம் என்று கூறி நினைவுச் சின்னமாக்கத் துடிப்பது, தமிழர் புத்தாண்டை
ஆகம விதிகளின்படி சித்திரை முதல்நாள்தான் என்று கூறுவதன் மூலம் இந்துமத பழமைவாதத்தை
மீட்க துடிக்கிறார் ஜெயலலிதா. தமிழர் தேசிய இன உணர்வுகளையும், தமிழர் பண்பாட்டையும்
அழித்து ஆரிய, பார்ப்பனிய வர்ணாசிரம பண்பாட்டை மீட்டெடுக்க
முயற்சிக்கிறார் ஜெயலலிதா.
தொகுத்துப் பார்க்கும்போது தமிழகத்தை ஆளும் ஜெயலலிதா
அரசாங்கம் புதியகாலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்தி நெருக்கடியின் சுமைகளை
மக்கள் மீது திணிப்பதை எதிர்ப்போரை நசுக்குவதற்கும்; தமது ஊழல் ஆட்சிக்கு
எதிராக கட்சிக்குள்ளும், வெளியேயும் வரும் எதிர்ப்புகளை ஒடுக்கவும்; இந்துமதவாத
பார்ப்பனிய வர்ணாசிரமத்தை மீட்டெடுப்பதற்கும் தமிழகத்தில் ஒரு கொடுங்கோல் ஆட்சியை கட்டியமைத்து
வருகிறார். எனவே நாட்டின் மீதான அமெரிக்க ஏகாதிபத்திய ஆதிக்கத்தை ஒழிக்கவும், நெருக்கடியின்
சுமைகளை எதிர்த்துப் போராடவும், ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தை தொடர்வதற்கும்
ஜெயா அரசின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து போராடுவதில்தான்
முக்கியத்துவம் அடங்கியுள்ளது.
ஈழத் தமிழர்களின்
ஜனநாயக உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்
சிங்கள இனவெறி இராஜபட்சே அரசு 2009ஆம் ஆண்டு
ஈழத் தமிழின அழிப்புப்போரை முடிவுக்கு கொண்டுவந்த பிறகு ஈழத்தமிழர்களுக்கான ஒரு அரசியல்
தீர்வை காண மறுத்து வருகிறது. தமிழர் பகுதிகளான வடக்கையும் கிழக்கையும் இணைத்து தமிழர்
தாயகம் என்பதையும் ஏற்க மறுக்கிறது. ஈழத் தமிழர்கள் பகுதிகள் முழுவதும் சிங்கள இராணுவம்
ஆக்கிரமித்துள்ளது. அது மக்களின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள
இலட்சக்கணக்கான தமிழ்மக்களை அவர்களின் சொந்த வாழ்விடங்களில் குடியமர்த்த மறுப்பதுடன், தமிழர் பகுதிகளில்
சிங்கள குடியேற்றத்தைத் திட்டமிட்டு நிறைவேற்றி வருகிறது. சிறைபிடிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான
போராளிகள் கதி என்னவாயிற்று என்பதே தெரியவில்லை. இராஜபட்சே கும்பல் தமிழர்கள் மீது
மட்டுமல்லாது தமது ஆட்சிக்கு எதிரான சிங்கள எதிர்க்கட்சியினர், மனித உரிமை
அமைப்புகள், பத்திரிக்கையாளர்கள் மீது கடும் தாக்குதலை
நடத்திவருகிறது. அது இலங்கை முழுவதையும் ஒரு இராணுவ சர்வாதிகார ஆட்சியின் கீழ் கொண்டுவந்துள்ளது.
இலங்கையில் வாழும் ஈழத் தமிழ்த் தேசிய இனச் சிக்கலுக்கு
அரசியல் தீர்வு என்பது ஈழத்தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை வழங்குவதன் மூலம்
மட்டுமே காணமுடியும். அதைவிடுத்து எந்த ஒரு அதிகாரபரவலும் சிங்கள இனவெறி அரசின் கீழ்
சாத்தியமே இல்லை. ஆனால் உடனடியாக அம்மக்களின் ஜனநாயக உரிமையை வென்றெடுப்பதுதான் அனைத்திற்கும்
முதன்மையானதாக மாறியுள்ளது. வடக்கையும் கிழக்கையும் இணைத்து அதை தமிழர் தாயகமாக அங்கீகரிப்பது, தமிழர் பகுதிகளிலிருந்து
சிங்கள இராணுவத்தை திரும்பப் பெறுவது, சிங்கள குடியேற்றங்களை
அகற்றுவது, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் தமிழர்கள்
தங்கள் உரிமையை பெறுவது போன்ற கோரிக்கைகளை உடனடியாக போராடிப் பெறுவது அவசியமாகும்.
இத்தகைய ஜனநாயக உரிமைகளை பெறுவதற்கு இலங்கையில் வாழும் இரு தேசிய இன மக்களும் ஒன்றிணைந்து
போராடுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இவ்வாறு ஈழத்தமிழ் மக்களின் அரசியல் ஜனநாயக
உரிமைகளை வென்றெடுப்பதற்கானப் போராட்டத்திற்கு உலகெங்கிலுமுள்ள தொழிலாளி வர்க்க இயக்கங்களும், ஒடுக்கப்பட்ட
தேசங்களும் ஆதரவளிக்கவேண்டும்.
அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் ஐ.நா. மனித உரிமை
அமைப்பில் இலங்கைக்கு எதிராக கொண்டுவந்துள்ள தீர்மானம் சிங்கள இன வெறியன் இராஜபட்சே
கும்பலை இன அழிப்புப் போர்க்குற்றவாளி என்று அறிவிக்கக் கோருவதல்ல. 2010ஆம் ஆண்டில்
டப்ளின் மக்கள் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்புகளிலிருந்து உலக மக்களை திசைதிருப்பி, இலங்கையின்
மீது அமெரிக்காவின் மேலாதிக்கத்தை கொண்டுவருவதற்கானதேயாகும். குற்றவாளியான இராஜபட்சேவையே
நீதிபதியாகக் கொண்டு “கற்றுக்கொண்ட பாடம் மற்றும் மறுசீரமைப்பு” என்ற இலங்கை
அரசாங்கம் தயாரித்த அறிக்கையை செயல்படுத்துவது என்பதேயாகும்.
டப்ளின் தீர்ப்பாயம், அமெரிக்கா, பிரிட்டன்
போன்ற நாடுகள் இலங்கை அரசுடனான விடுதலைப் புலிகளின் பேச்சு வார்த்தையை சீர்குலைத்ததன்
மூலமும், இலங்கை அரசுக்கு ஆயுத மற்றும் பொருளாதார உதவிகள்
செய்ததன் மூலமும் இலங்கை அரசின் இன அழிப்புப் போருக்கு துணைபோயின என்று கூறியது. போர்
நடக்கும் போது இந்நாடுகள் வேடிக்கைப் பார்த்தன என்றும் எனவே இந்நாடுகள் போர்க் குற்றத்திற்கு
துணை போயின என்று குற்றம் சுமத்தியிருந்தது. எனவே இதையெல்லாம் மூடி மறைத்து இலங்கை
அரசையும், இராஜபட்சே கும்பலையும் மிரட்டி பணிய வைகக்வே
தற்போது அமெரிக்கா மனித உரிமை பேசி இலங்கையில் தலையிடுகிறது. இந்திய அரசாங்கமோ அந்தத்
தீர்மானத்திலும் திருத்தம் கொண்டுவந்து ஆதரித்தது. இராஜபட்சேவுக்கு சாதகமாகத்தான் நாங்கள்
செயல்பட்டோம் என்று மன்மோகன் சிங் கடிதம் எழுதி தமது விசுவாசத்தைக் காட்டிக் கொண்டார்.
மேலும் இந்தப் போரை இந்தியாவிற்காக நாங்கள் நடத்தினோம் என்று இராஜபட்சே கும்பல் கூறியது.
இந்திய அரசு போரை முன்னின்று நடத்தியது. இவர்களும் போர்க்குற்றவாளிகளே. இந்தியாவை பொறுத்தவரை
சீனாவின் பக்கம் இலங்கை சாய்ந்துவிடுவதை தடுப்பது ஒன்றுதான் நோக்கமாகும். இந்தத் தீர்மானத்தால்
ஈழத் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அரசியல் தீர்வும் கிடைக்கப் போவதில்லை. சுஷ்மா சுவராஜ்
தலைமையிலான இந்தியத் தூதுக்குழுவின் நடவடிக்கைகளே இதற்கு நல்லதொரு சான்றாக அமைந்துள்ளது.
மறுபுறம் அமெரிக்காவை எதிர்ப்பதாக கூறும் ரசிய
ஏகாதிபத்தியவாதிகளும், சீனாவும் இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிடக்
கூடாது என்றும், நாடுகளின் இறையாண்மையை காப்பது என்ற ஐ.நா
சாசனத்தை மீறக்கூடாது என்றும், அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்ப்பதாகவும்
கூறுகின்றன. ஆனால் இவ்வாறுக் கூறிக்கொண்டு மனித உரிமையை மீறி ஒரு இனத்தையே அழித்துவரும்
இராஜபட்சேக் கும்பலை இவர்கள் ஆதரிப்பது ஏற்கத் தகுந்தது அல்ல. இவர்களும் இலங்கை மீதான
தங்களது செல்வாக்கு மண்டலத்தை விரிவுப்படுத்துவதற்காகத்தான் இலங்கை அரசுக்கு துணைபோகின்றனர்.
எனவே இரண்டு ஏகாதிபத்திய முகாம்களின் சதியை எதிர்த்து இலங்கையில் இரு தேசிய இன மக்களும்
இராஜபட்சேவின் இராணுவ சர்வாதிகாரத்தை எதிர்த்தப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதே ஒடுக்கப்பட்ட
நாட்டு மக்களின் உடனடிக் கடமையாகும்.
எனவே இவ்வாண்டு மேநாளில், முதலாளித்துவ
நெருக்கடியிலிருந்து மக்கள் தொகையில் ஒரு சதவீதமே உள்ள நிதிமூலதன கும்பல்களையும், ஒடுக்கப்பட்ட
நாடுகளின் பிற்போக்கு ஆளும் வர்க்கங்களையும் பாதுகாக்கும் அமெரிக்காவின் தலைமையிலான
ஏகாதிபத்தியவாதிகளையும், அவர்களின் எடுபிடிகளின் கூட்டத்தை முறியடிக்கவும், உலகத் தொழிலாளர்கள்
மற்றும் ஒடுக்கப்பட்ட நாடுகளின் விடுதலையை வென்றெடுக்கவும் கீழ்கண்ட முழக்கங்களின்
அடிப்படையில் ஒன்றுபடுவோம் என அறைகூவி அழைக்கிறோம்.
« மரணப்படுக்கையிலிருக்கும் முதலாளித்துவத்தைக்
காப்பாற்ற உலக மக்களை பலிகொடுக்கும் ஏகாதிபத்தியவாதிகளை எதிர்த்துப் போராடுவோம்!
« சரிந்துகொண்டிருக்கும் ஏகாதிபத்திய மூலதனத்திற்கு
தோள்கொடுக்கும் மன்மோகன் கும்பல், புதிய காலனியப்
பொருளாதாரச் சீர்திருத்தங்களை தீவிரப்படுத்துவதை முறியடிப்போம்!
« புதிய பொருளாதாரக் கொள்கைகளால் ஆழப்படும்
தமிழகப் பொருளாதார நெருக்கடிகளை - கருணாநிதி மீது பழிபோட்டு - தமிழக மக்கள் மீது சுமத்தும்
ஜெய ஆட்சியை எதிர்ப்போம்!
«
ஊழல் மலிந்த ஆட்சியைப் பாதுகாக்கவும் மக்கள் விரோதக் கொள்கைகளைத் தொடர்வதற்காகவும் ஜெயா
பின்பற்றும் பாசிசக் கொள்கைகளை முறியடிப்போம்!
« ஜெயா அரசு மக்கள் மீது சுமத்தியுள்ள கட்டண
உயர்வு, விலை உயர்வு, வரிச்சுமைகளைத் திரும்பப் பெறப் போராடுவோம்!
« ஜெயா அரசின் சாதிவெறிப் பாசிச தீண்டாமைக்
கொடுமைகளை எதிர்த்துப் போராடுவோம்!
« பன்னாட்டுக் கம்பெனிகளின் கொள்ளை இலாபத்திற்காக
தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக்கும் மன்மோகன் கும்பலின் ஆட்சியை எதிர்த்துப் போராடுவோம்!
« தொழிலாளர்களின் தொழிற்சங்க, ஜனநாயக, அரசியல் உரிமைகளுக்காகப் போராடுவோம்!
« விவசாயிகளை தற்கொலைக்கும், பட்டினிச் சாவுக்கும் தள்ளிவிடும் இந்திய
அரசின் புதிய காலனிய வேளாண் கொள்கைகளை முறியடிப்போம்!
« பன்னாட்டு, உள்நாட்டுப் பெருமுதலாளிகளின் கையில் நிலங்கள்
குவிவதை எதிர்ப்போம்! நிலச்சீர்திருத்தற்காகப் போராடுவோம்!
« தண்ணீரைத் தனியார்மயமாக்கி தமிழகத்தை பாலைவனமாக்கும்
மன்மோகன் கும்பலின் ‘தேசிய நீர்க்கொள்கையை’ முறியடிப்போம்!
«
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்போம்!
«
உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே, ஒன்றுபடுவோம்!
«
மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையை உயர்த்திப்
பிடிப்போம்!
மக்கள்
ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
ஏப்ரல்
2012
No comments:
Post a Comment
விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.