Saturday, October 8, 2011

உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலைப் புறக்கணிப்போம்!

உலகமயக் கொள்கைகளால் வரும் தீமைகளைத் தடுக்க அதிகாரமற்ற உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலைப் புறக்கணிப்போம்!

அன்பார்ந்த விவசாயிகளே, தொழிலாளர்களே, ஜனநாயகவாதிகளே!

மத்திய, மாநில அரசுகள் ஏகாதிபத்திய உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை செயல்படுத்திவரும் இன்றைய சூழலில்; நிலம், நீர், கனிம வளங்களை பன்னாட்டுக் கம்பெனிகளிடமும், டாட்டா, பிர்லா, வேதாந்தா போன்ற உள்நாட்டுத் தரகுப் பெருமுதலாளிகளிடமும் தாரைவார்க்கும் சூழலில்; கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்புகளை கைவிட்டு இவற்றை தனியார்மயம், வணிகமயமாக்கிவரும் சூழலில் மாநகராட்சியிலிருந்து நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளால், மேற்கண்ட தேசவிரோத, மக்கள் விரோதக் கொள்கைகளை முறியடிக்க முடியுமா?

நிலம், நீர், கனிம வளங்களை சமூக உடைமையாக்கப்படும் போது மட்டுமே உள்ளாட்சி அமைப்புகள் ஜனநாயகப் பூர்வமாக – மக்களுக்காக செயல்படமுடியும். கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற அனைத்துத் துறைகளிலும் தனியார்மயம், வணிகமயம் ஒழிக்கப்படும்போது மட்டுமே உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்காக செயல்படும் அமைப்புகளாகத் திகழும்.
உள்ளாட்சித் தேர்தல்களில் இடஒதுக்கீடு மூலம் பொறுப்புக்கு வரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களை உயர்சாதி ஆதிக்க சக்திகள் சுயேச்சையாக செயல்பட அனுமதிப்பது இல்லை. பெண்களுக்கு இட ஒதுக்கீடு எனும் பேரில் பொறுப்புக்கு வரும் பெண்களின் கணவன்மார்களே நடைமுறையில் செயல்படுகின்றனர். எனவே நிலப்பிரபுத்துவ சாதிமுறைகள் மற்றும் ஆணாதிக்கத்தை ஒழித்துக்கட்டுவதன் மூலம் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் அதிகாரம் கிடைக்கும். இட ஒதுக்கீட்டின் உண்மையான நோக்கம் நிறைவேறும்.

தேர்ந்தெடுக்கப்படாத அரசு அதிகார அமைப்புகளான காவல்துறை, நீதிதுறை மற்றும் பிற அதிகாரவர்க்க அமைப்புகளை ஒழித்துக்கட்டி; திட்டங்களைத் தீட்டவும் செயல்படுத்தவும், தேர்ந்தெடுக்கவும் திருப்பியழைக்கவும் மக்களுக்கு அதிகாரம் வழங்கும் சோவியத் வடிவலான மக்கள் கமிட்டிகளே உண்மையில் மக்களுக்கு அதிகாரத்தை வழங்கும்.

எனவே பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரளுமாறு உழைக்கும் மக்கள் அனைவரையும் அறைகூவி அழைக்கிறோம்.

• பன்னாட்டு உள்நாட்டுப் பெருமுதலாளிகளின் மக்கள் மீதான தாக்குதலைத் தடுக்க அதிகாரமற்ற உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலைப் புறக்கணிப்போம்!

• மக்களுக்கு அதிகாரம் வழங்கும் சோவியத் வடிவிலான மக்களாட்சிக்காகப் போராடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
தமிழ்நாடு
அக்டோபர் 2011

No comments:

Post a Comment

விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.