Sunday, September 25, 2011

பரமக்குடியில் 7 பேர் படுகொலை சாதிவெறிப் பாசிசத்தை எதிர்ப்போம்!

பரமக்குடியில் 7 பேர் படுகொலை
சாதிவெறிப் பாசிசத்தை எதிர்ப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே !

பரமக்குடியில் செப்டம்பர் 11ல் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த ஜான்பாண்டியனை கைது செய்ததைக் கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் மீது, தமிழக காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தி, துப்பாக்கி சூடு நடத்தி 6 பேரைக் கொன்று தமது உயர்சாதி வெறியை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. மதுரையிலும் நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் காயமடைந்து மருத்துவ மனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளனர். தேடுதல் வேட்டை எனும் பேரில் தாழ்த்தப்பட்ட மக்களின் பெயர் பட்டியலை வைத்துக்கொண்டு, கிராமம் கிராமமாக காவல் துறையினர் மிரட்டி வருகின்றனர். போலீசுக்குப் பயந்து ஒளிந்து கொண்ட இருவர் பாம்புக்கடித்தும், ஒருவர் தவறி விழுந்தும் மாண்டுவிட்டனர். 144 தடை உத்தரவு தொடர்கிறது. இவ்வாறு இம்மாவட்டம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஜெயலலிதாவின் காவல்துறை ஒரு அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துள்ளது.

மேலும் இச்சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்குமுன் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளுக்கு வருவோரை அச்சுறுத்தும் விதமாக முதுகுளத்தூர் வட்டார பள்ளப்பச் சேரியைச் சேர்ந்த மாணவன் பழனிக்குமாரை உயர்சாதி ஆதிக்க வெறியர்கள் படுகொலை செய்தனர். மேற்கண்ட தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தமிழகக் காவல்துறையின் அரசபயங்கரவாதமும், உயர்சாதி ஆதிக்க வெறியர்களின் தாக்குதல்களும் சாதிவெறிப் பாசிச நடவடிக்கைகளேயாகும்.

சாதிய பூசல்களுக்கும் மோதல்களுக்கும் அடிப்படைக்காரணம்:

பரமக்குடியில் நடந்துவரும் சம்பவங்கள் ஒரு தனித்தப் போக்கு அல்ல. மாறாக தென் தமிழகத்தின் பலபகுதிகளில் தேவர்சாதி மற்றும் உயர்சாதியினருக்கும், தேவேந்திரகுல வேளாளர்களாகிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையிலான பூசல்கள் நீறுபூத்த நெருப்பாக எப்போது வேண்டுமானாலும் சாதிக்கலவரம் வெடிக்கும் என்ற நிலைமை கடந்த பலமாதங்களாக தொடர்கிறது.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான நிலப்பிரபுத்துவ பொருளாதார ஒடுக்குமுறைகளும், தீண்டாமைக் கொடுமைகளும், அதிகாரவர்க்க அரசு இயந்திரமே சாதிவெறியோடு செயல்படுவது போன்றக் காரணங்களே சாதிக் கலவரங்களுக்கு அடிப்படையாக உள்ளன. உள்ளாட்சியிலும் கூட பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள் பொறுப்பு எடுத்துக்கொள்ள உயர்சாதியைச் சார்ந்த ஆதிக்க சக்திகள் அனுமதிக்க மறுக்கின்றனர். இவ்வாறு தாழ்த்தப்பட்ட மக்களின் பொது உரிமை மறுப்பு, மத உரிமை மறுப்பு, தீண்டாமைக் கொடுமைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தல் போன்றக் காரணங்களே சாதியப் பூசல்களுக்கும் மோதல்களுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளன.

பார்ப்பனிய வெறிகொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, பரமக்குடி துப்பாக்கி சூட்டிற்கு காரணம், பள்ளப்பச்சேரியைச் சார்ந்த பழனிகுமார் என்ற மாணவன் முத்துராமலிங்கத் தேவரைப் பற்றி இழிவாக சுவற்றில் எழுதியதே காரணம் என்று கூறுகிறார். காவல்துறையின் துப்பாக்கி சூட்டை நியாயப் படுத்துவது மட்டுமல்ல நடந்து முடிந்த சம்பவங்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் மீதே பழிபோடுகிறார். ஆனால் உண்மை வேறாகும்.

பள்ளப்பச்சேரியில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் விருதுநகருக்கோ, கமுதிக்கோ செல்ல வேண்டுமானால் மண்டலமாணிக்கம் ஊர் வழியாகத்தான் போகவேண்டும். பள்ளப்பச் சேரியிலிருந்து மண்டலமாணிக்கத்திற்குள்ள 500 மீட்டர் தூரத்திற்கானப் பாதையை உயர்சாதி ஆதிக்க சக்திகள் கடந்த 30 ஆண்டுகளாக அனுமதிக்க மறுக்கின்றனர். தி.மு.க, அ.தி.மு.க போன்ற கட்சிகளின் கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சி மாறி மாறி வந்தபோதும் பச்சேரி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் உயர்சாதி ஆதிக்கத்திற்கு துணைபோயினர். அதிகார வர்க்கத்திடமும், மாவட்ட ஆட்சியரிடமும் மனுகொடுத்தும் அம்மக்களின் துயரம் நீக்கப்படவில்லை. அன்றாடம் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் உயர்சாதி ஆதிக்கத்தின் இழிவுக்குள்ளாக்கப்படாத நாட்களே இல்லை.

இத்தகைய நிலைமைகளில்தான் பழனிகுமார், தேவரைப் பற்றி தவறாக எழுதினார் என்று கொல்லப்படுகிறார். அவர் எழுதினாரா என்பது நிரூபிக்கப்படவில்லை. அப்படியே அவர் எழுதியிருந்தாலும் அதற்காக கொலை செய்வது நியாயமானதுதானா? அதை தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் நியாயப்படுத்தலாமா? இது உயர்சாதி ஆதிக்க சக்திகளின் சாதிவெறிக்கு துணைபோவது அல்லாமல் வேறு என்ன? தங்கநாற்கர சாலை அமைத்து பன்னாட்டு கம்பெனிகளுக்கு சேவை செய்யும் ஆட்சியாளர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதை அமைத்துக் கொடுக்காதது ஒரு மாபெரும் குற்றமே. குற்றவாளிகளாக ஆட்சியாளர்கள் இருந்து கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களையே குற்றவாளி என்பது ஒரு வன்கொடுமையேயாகும்.

தமிழக காவல்துறையின் சாதிவெறி

தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான உயர்சாதி ஆதிக்க சக்திகளின் ஒடுக்குமுறைக்கு தமிழக காவல்துறை தொடர்ந்து உதவிசெய்தே வந்துள்ளது. தற்போது தமிழக காவல்துறையே சாதிவெறிக்கு உள்ளாகி உள்ளது. தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் ஜான்பாண்டியனை இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளில் பங்கேற்க அனுமதித்தால் அவர் பழனிகுமாருக்கு அஞ்சலி செலுத்த செல்வார். அவ்வாறு சென்றால் அது பெரும் கலவரமாக மாறும். எனவேதான் அவரைக் கைது செய்ய வேண்டிய சூழல் உருவானது என்று காவல்துறையின் கட்டுக்கதையை ஜெயலலிதா வழிமொழிகிறார்.

அப்படியே வன்முறை ஏற்பட்டால் அதற்கு காரணமானவர்களை கைது செய்யவேண்டுமே ஒழிய பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களின் தலைவர்களையும் கைது செய்வது எப்படி நியாயமாகும். எனவே வன்முறையை காரணம் காட்டி இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளில் கலந்து கொள்வதை தடை செய்வதற்கோ, பழனிகுமாரின் அஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொள்வதை தடுப்பதற்கோ எவருக்கும் அதிகாரம் கிடையாது. இதையே தேவர் பூஜையின் போது தாழ்த்தப்பட்ட மக்கள் வன்முறையில் ஈடுபடுவார்கள் எனக் காரணம்காட்டி ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்களுக்கு தடைவிதித்து அவர்களை காவல்துறை கைது செய்திருக்குமா.

ஜான்பாண்டியனின் கைதைக் கண்டித்து சுமார் 500 பேர்தான் மறியல் செய்ததாக காவல்துறையே கூறுகிறது. பல்லாயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தும் வெறும் 500 பேரைக் கலைப்பதற்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதேன்? துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன் இரப்பர் புல்லட்டுகளை பயன்படுத்துவது, வானை நோக்கிச் சுட்டு மக்களை எச்சரிப்பது அதற்கும் கலையவில்லை எனில் முட்டிக்கும் கீழே சுடவேண்டும் என்ற விதிமுறைகளை காவல்துறை கடைபிடிக்காதது ஏன்? எடுத்த உடனேயே தலையைக் குறிவைத்து தாழ்த்தப்பட்ட மக்களை காக்கை குருவி போல் சுட்டுத்தள்ளியது காவல்துறையின் உயர்சாதி வெறியைத்தானே நிரூபித்துள்ளது.

மேலும் சென்னை மாநகரத்திலும், தமிழக அரசின் முக்கியப் பதவிகளிலும் முக்குலத்தோர் சமூகத்தை சார்ந்த காவல்துறை அதிகாரிகளே நியமிக்கப்படுகின்றனர் என்பதே உண்மை. பிற உயர்சாதி அதிகாரிகளும் கூட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இவர்களுடன் கூட்டு சேர்ந்து கொள்கிறார்கள் என்பதும் உண்மை. அத்துடன் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திலும் 75 சதவீதம் பேர் முக்குலத்தோர் இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதும் மறுக்கமுடியாது. இவ்வாறு தமிழகக் காவல்துறை மெல்ல, மெல்ல உயர்சாதி ஆதிக்க சக்திகளாலேயே தலைமை தாங்கப்பட்டு சாதிவெறிக்கு ஆளாக்கப்பட்டு வருகிறது. அதன் வெளிப்பாடுதான் பரமக்குடி சம்பவம்.

உயர்சாதி ஆதிக்கத்திற்குத் துணைபோகும் முதலாளித்துவ அரசியல்கட்சிகள்

உயர்சாதி ஆதிக்க சக்திகளோடு அதிகார வர்க்கமும் கூட்டுச் சேர்ந்து தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தங்களது தாக்குதல்களை நடத்துவதற்கு தமிழக அரசியல் கட்சிகள் துணைபோகின்றன. தமிழகத் தரகுமுதலாளித்துவ அரசியல் கட்சிகளான அதிமுகவும், திமுகவும் போட்டிப்போடுக்கொண்டு முக்குலத்தோர் சாதி வெறிக்கு சேவை செய்கின்றன. ஜெயலலிதா காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டையும், உயர்சாதி ஆதிக்க வெறியையும் சட்டசபையில் ஆதரித்துப் பேசுகிறார். கருணாநிதியோ காவல்துறைக்கு துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாம் என ஆலோசனை வழங்குகிறார். உயர்சாதி ஆதிக்க சக்திகளையும், துப்பாக்கிச் சூட்டையும் கண்டிக்கவில்லை. கிராமப்புற பெரும்பான்மை மக்களாக உள்ள முக்குலத்தோரின் வாக்கு வங்கிக்காக மட்டுமல்ல. அக்கட்சிகளில் உள்ள கிராமப்புற நிலப்பிரபுத்துவ ஆதிக்க வர்க்கங்கள் கட்சி வித்தியாசம் பாராமல் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு கூட்டு சேர்ந்து கொள்ளுகிறது. அண்மையில் குஜராத் இந்து மதவெறி பாசிஸ்டான நரேந்திர மோடியின் உண்ணாவிரதத்திற்கு ஜெயலலிதா, அதிமுக பிரதிநிதிகளை அனுப்பி வாழ்த்துச் சொல்லுகிறார். கருணாநிதியோ மோடியை ஆதரித்து அறிக்கை விடுகிறார். இவ்வாறு இவ்விருக் கட்சிகளும் இந்து மதவெறி பாசிசத்திற்கும், உயர் சாதி வெறிப் பாசிசத்திற்கும் சேவை செய்யும் பிற்போக்குக் கட்சிகளாக மாறி விட்டதன் விளைவுதான் தென் மாவட்ட சாதிகலவரங்கள்.

ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியின்போது தான் கள்ளர், மறவர், தேவர் என்ற சாதிகள் ஒன்றிணைத்து முக்குலத்தோர் எனப்பட்டம் சூட்டப்பட்டது. முத்துராமலிங்கத் தேவருக்கு அரசு செலவிலேயே சென்னையில் சிலைவைத்தனர். 1991லும், 2001லும் ஜெயலலிதாவின் ஆட்சியின்போது தேவர் இன மக்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டது. தேவர் சமூகத்தினர் ஆட்சி அதிகாரத்தில் பெரும்பங்கு வகித்தனர். மேலும் ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதெல்லாம், உயர்சாதி ஆதிக்க வெறியர்களும், அதிகார வர்க்கத்தில் உள்ள முக்குலத்தோரைச் சார்ந்த அதிகாரிகளும் உத்வேகம் அடைகின்றனர். தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்களை எவ்வித அச்சமுமின்றி நடத்துகின்றனர். இவ்வாட்சியை தங்களது ஆட்சியாகவே கருதுகின்றனர்.

தன்னை சமூக நீதிக்காவலன் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களின் நண்பன் என்றும், சமத்துவமே தமது மூச்சு என்று கூறிக்கொள்ளும் கருணாநிதி ஆட்சியின் போதுதான் முத்துராமலிங்கத் தேவரின் 100ஆம் ஆண்டு நினைவு நாள் அரசு விழாவாக நடத்தப்பட்டது. 3 நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டு, பலத்தப் பாதுகாப்போடு அரசு இயந்திரத்தை முழுவதுமாகப் பயன்படுத்தி படு விமரிசையாக இவ்விழா நடத்தப்பட்டது. தேவர் சாதி ஆதிக்க சக்திகளும், அரசும் கூட்டுசேர்ந்து நடத்தினர். ஜெயலலிதா அதற்கிணையாக மதுரையில் தேவருக்கு 100 அடி உயர சிலை வைக்கவும், ‘இரண்டாம் படைவீடு’ என்ற பேரில் தேவருக்கு கோயில் கட்ட அடிக்கல் நாட்டியும், தன்பங்கிற்கு காணிக்கை செலுத்தினார்.

அதே நேரத்தில் அன்று பா.ம.கவில் இருந்த ஜான்பாண்டியன் அவர்கள், இம்மானுவேல் சேகரனுக்கு பரமக்குடியில் ஒரு சிலை வைக்க வேண்டும் என்று கோரி மறியல் செய்ததற்காக, துப்பாக்கி சூடு நடத்தி 4 தாழ்த்தப்பட்ட மக்களை கொன்றது அன்றைய கருணாநிதி ஆட்சி. அத்துடன் 1999-ல் தாமிரபரணி ஆற்றங்கரையில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களான தாழ்த்தப்பட்ட மக்கள் 17 பேரை கருணாநிதி ஆட்சிசுட்டுக் கொன்றதையும் மக்களால் மறக்க முடியாது.

பெயர் அடையாளமோ, சிலை மரியாதையோ, துளியளவு சமூக அங்கீகாரமோ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கிடைத்துவிடக் கூடாது பண்ணையடிமை முறையிலிருந்து தாழ்த்தப்பட்ட மக்கள் விடுபட்டுவிடக் கூடாது என்பதில் உயர்சாதி ஆதிக்க சக்திகளோடு அதிகார வர்க்கத்தினரும், ஆட்சிக்கு வருகின்ற அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்படுகின்றன. தேவர் பெயர் சூட்டுவதும், மணிமண்டபம் கட்டுவதும், பொதுப்பெயர் சூட்டி ஒரு குறிப்பிட்ட சாதியை வலிமைப் படுத்துவதில் அதிமுக, திமுகவின் போக்கிற்கு எதிராகவே தாழ்த்தப்பட்ட மக்கள் கிளர்ந்தெழுகின்றனர். தங்கள் தலைவன் இம்மானுவேல் சேகரனை கொலை செய்வதற்குக் காரணமான முத்துராமலிங்கத் தேவருக்கு இணையாக, தங்கள் தலைவனுக்கு சிலை வைக்கவும், விழாக் கொண்டாடவும் தொடங்கினர். கடந்த நான்கு ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட மக்கள் எழுச்சியோடு விழாக் கொண்டாடுவதற்கு மேற்கண்ட நிலைமைகளே காரணமாகும். ஆனால் உயர்சாதி ஆதிக்க சக்திகளுக்கு இது கோபத்தை உருவாக்குகிறது. இனி தாழ்த்தப்பட்ட மக்கள் இப்படி விழா எடுப்பதையும், அவர்கள் அமைப்பாக அணிதிரள்வதையும் தடுக்கும் பொருட்டுத்தான் இன்று காவல்துறை ஊர் ஊராக தேடுதல் வேட்டை எனும் பேரில் தாழ்த்தப்பட்ட மக்களை நரவேட்டையாடுகிறது. ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களை பொய்வழக்கில் கைது செய்துவருகிறது. காவல் படையைக் குவித்து அம்மக்களின் மீது அரசு பயங்கரவாத அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுகிறது.

அகில இந்திய தரகு முதலாளித்துவக் கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.கவும் துப்பாக்கிச் சூட்டை பெயரளவில் கண்டிக்கின்றன. உண்மையில் உயர் சாதி ஆதிக்கத்திற்கு துணை போகின்றன. திமுக, அதிமுகவிற்கு மாற்று என்று கூறிக்கொண்ட விஜயகாந்த் கட்சி மட்டும்தான் இந்த காவல்துறை துப்பாக்கி சூட்டிற்கு ஆதரவாக விசாரணை கமிசனே தேவையில்லை என்று சட்டசபையிலேயே வாதிட்டது. நேற்று பெய்த மழையில் முளைத்து திடீர் விபத்தால் எதிர்க்கட்சியாகிவிட்ட அந்தக் கட்சிக்கு எத்தனை சாதிவெறி பாருங்கள்?

எனவே, பரமக்குடி துப்பாக்கி சூட்டிற்குக் காரணமான காவல்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்யவும்; தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான பொய்வழக்குகளை திரும்பப் பெறுவதோடு காவல்படையினரையும் திரும்பப் பெறக் கோரியும்; காவல்துறையில் மலிந்துவரும் உயர்சாதிவெறியை போக்குவதற்கான தக்க நடவடிக்கைகள் கோரியும்; உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சமும். காயமடைந்தவர்களுக்கு தலா 3 லட்சமும் நட்ட ஈடு கோரியும்; கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலைச் செய்யக் கோரியும்; துப்பாக்கிச் சூட்டிற்கும்; தடியடிக்கும் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது, தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் 1999, 1995 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்து கைது செய்ய வேண்டும் எனவும் போராடுவது உடனடிப்பணியாக அமைந்துள்ளது.

அதேசமயம், சாதிய பூசல்களுக்கும் மோதல்களுக்கும் முடிவுகட்ட நிலப்பிரபுத்துவ பொருளாதார சுரண்டலுக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் பொது உரிமை, வழிபாட்டு உரிமை போன்ற சம உரிமைக்காக அனைத்து சாதியிலுள்ள உள்ள உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் வர்க்க ரீதியாக ஒன்றுபட்டுப் போராடுவதற்கு தயாராக வேண்டும். இது ஒடுக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சனை மட்டுமல்ல நாட்டின் ஜனநாயகப் பிரச்சனையும் ஆகும். உயர்சாதி ஆதிக்க வெறியர்களையும், உயர்சாதி வெறிப்பிடித்த அதிகார வர்க்கத்தினர் மற்றும் அரசியல் கட்சிகளை எதிர்த்து சாதிகளற்ற சமதர்ம சமுதாயம் படைப்பதற்கும், சாதிக்கலவரங்களை முற்றாக ஒழிப்பதற்கும் கீழ்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் ஓரணியில் அணிதிரள அறைகூவி அழைக்கிறோம்.

  • பழனிக்குமார் படுகொலையும், இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களும் சாதிவெறிப் பாசிசமே!
  • பார்ப்பனிய ஜெயாவே! உயர்சாதி ஆதிக்கவெறிப்பிடித்த அதிகாரவர்க்கத்தின் ஒடுக்குமுறைக்குப் பரிந்துபேசாதே!
  • துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்!
  • தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான பொய்வழக்குகளைத் திரும்பப்பெறு!
  • தேடுதல்வேட்டையை நிறுத்து! காவல் படையைத் திரும்பப்பெறு!
  • தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான நிலப்பிரபுத்துவ பொருளாதார ஒடுக்குமுறைகளும், தீண்டாமைக் கொடுமைகளுமே சாதிப் பூசல்களுக்கும், மோதல்களுக்கும் காரணம்!
  • பார்ப்பனிய எதிர்ப்பு, சமூகநீதி, சமத்துவம் பேசிக்கொண்டே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதிய ஒடுக்குமுறையில் ஈடுபடும் கட்சிகளின் சந்தர்ப்பவாதத்தை முறியடிப்போம்!
  • தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்தும், தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல், ஜனநாயக சமூக உரிமைகளுக்காகவும் போராடுவோம்!


ம.ஜ.இ.க தமிழ்நாடு
செப்டம்பர் 2011.

1 comment:

  1. மிகவும் சரியான கருத்து. இன்னொரு முக்கியமான கருத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.1996 -ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்ற கொடியங்குளம் கலவரத்தில், முக்குலத்தோர் 44 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.அதன் பின் நேரிடையாக தேவேந்திர குல வெள்ளாளர் மக்களுடன் மோதாமல், அரசு இயந்திரத்தை தங்கள் சமூக மக்களான சானார்,முக்குலத்தோர்,பிள்ளை ஆகிய இனங்கள் காவல்துறை கயவர்கள் மூலம் படுகொலை நடத்துகின்றனர்.அதுக்கு 1999 -ம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில் நடந்த தாமிரபரணி படுகொலையில் 17 பேரும்(2 பெண்கள், 1 குழந்தை), 2011 -ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் 7 பேரும் படுகொலை செய்யப்பட்டனர்.
    -----------------************---------------
    நக்கசேலம் செ.ரா.செல்வக்குமார் சோழன் - பெரம்பலூர் மாவட்டம்

    ReplyDelete

விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.