பழந்தமிழ்ப்
பெருமை பேசி இன்றைய தமிழரின் அவலம் மறைக்கவே செம்மொழி மாநாடு!
நடைபெற இருக்கும் உலகத் தமிழ்ச்
செம்மொழி மாநாடு இதுவரை நடத்தப்பெற்று வந்த எட்டு உலகத் தமிழ் மாநாடுகளிலிருந்து
வேறுபட்டது. உலகத் தமிழ்பேசும் மக்கள் தற்போது எதிர்கொண்டிருக்கும் அரசியல்
பிரச்சினைக்குள் இறங்காமல் தப்பிக்கும் பொருட்டு கலைஞர் கருணாநிதி இம்மாநாட்டை
உலகச் செம்மொழி மாநாடாக நடத்த விரும்புகிறார்.
பரிதிமாற்கலைஞர் தொடங்கிவைத்து, தமிழர் அனைவரும் நூற்றாண்டுக்குமேல்
நடத்தி வந்த போராட்டத்தின் விளைவாக 2004ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் மத்திய
அரசு தமிழ் மொழியைச் செம்மொழி என அறிவித்தது. கிரேக்கம், இலத்தீன்,
எபிரேயம், சீனம், சமஸ்கிருதம்
ஆகிய மொழிகளைக் கொண்ட உலகச் செம்மொழிப் பட்டியலில் தமிழும் சேர்க்கப்பட்டுவிட்டது.
செம்மொழி என்றாலே அது வாழும் மொழி, வளரும் மொழி, அடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெற்ற ஆட்சி மொழி என்று பொருள் அல்ல.
தமிழ் மொழியை போன்று அடிமைப்பட்டிருக்கும் ஒரு மொழியை செம்மொழி என்று அறிவிப்பதால்
அது விடுதலை பெற்றமொழி ஆகிவிடாது.
இச்செம்மொழிகளுள் இலத்தீன், கிரேக்கம், சமஸ்கிருதம் ஆகிய மூன்றும் ‘இறந்தமொழி’ என்பதற்கு எடுத்துக்காட்டு. கிரேக்கம், இலத்தீன்
ஆகிய இருமொழிகளுமே வழக்கிறந்ததற்கு அரசியல் முக்கிய காரணம்.
கிரேக்க நாடு அடிமைப்பட்டிருந்ததால்
கிரேக்க மொழியும் அழியும் நிலைக்குச் சென்றது. ரோமப்பேரரசின் அழிவுக்குப்பின்
பலதேசங்கள் விடுதலைபெற்றதால்,
இலத்தீன் செம்மொழியாக இருந்தாலும் தேசம் இல்லாததால் இலத்தீன் மொழி
அழிந்தது.
ஒரு மொழி வழக்கிறந்து போவதற்கு பல
காரணங்கள் உண்டு. அரசியல் காரணமாக,
பிற இனத்தவர் படையெடுப்பால் தாக்கப்பட்டு, நாடிழந்து
அடிமைகளாய் வாழும் காலத்தில் வேறு வழியின்றி அந்நிய மொழித் திணிப்பினை ஏற்று
மக்கள் தங்கள் மொழியினை காலப்போக்கில் கைவிட்டு புதிய மொழிகளை ஏற்க நேர்கிறது.
தொன்மையான மொழிகள் என்பவை சொல்திறனும்
வளமும் சமுதாய வாழ்க்கை முறையில் செயலற்று நிற்பதாலேயே அவை வழக்கிறந்து நிற்கின்றன.
தமிழில் இறந்த மொழி எனக் கூறுதல் மரபு அன்று. ஆகையால் ‘வழக்கு அழிந்த மொழி’
என்று குறிப்பிடுவர்.
“தமிழின் வாழும் தன்மையை,
ஆரியம் போல் உலக வழக்கு
அழிந்தொழிந்து சிதையா நின்
சீரிளமைத் திறம் வியந்து
செயல் மறந்து
வாழ்த்துதுமே” எனத் தமிழை வாழ்த்தினார், சுந்திரம்பிள்ளை அவர்கள்.
மொழி என்பது மக்கள் தொடர்புக்காக
ஏற்பட்டது. சமுதாயக் கூட்டு வாழ்க்கையில் பயன்படுத்தப்படாத போது அது இறந்ததாகக்
கருதப்படுகிறது.
சமூக உற்பத்தி, வாணிபம், விஞ்ஞானம், கல்வி, கலை,
வரலாறு, சமயம் ஆகிய எல்லாத் துறைகளிலும் மொழி
பின்னிப் பிணைந்திருக்கிறது. எனவே மொழியின் வளர்ச்சி இலக்கியத்துறையை மட்டும்
சார்ந்ததாகாது. மொழி ஆக்கம் தரவேண்டுமானால், சில காலம்
தேங்கிய இடைவெளிக்குப் பிறகு அதனை முன்னேறச் செய்யவேண்டுமானால், எல்லாத் துறைகளிலும் அதனை வளம்பெறச் செய்தல் வேண்டும்.
தமிழ் செம்மொழி என அறிவித்திருந்தாலும், இந்தியாவின் தரகுப்
பெருமுதலாளித்துவ பெருநிலப்பிரபுத்துவ கூட்டுச் சர்வாதிகார அரசு ஆங்கிலத்தையும்
இந்தியையும் திணித்து எல்லாத் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும், மொழியையும் அடக்குகிறது.
இத்தகைய சூழ்நிலையில் செம்மொழி மாநாடு
பற்றி தமிழாய்வாளரான மா.இலா.தங்கப்பா பின்வருமாறு கூறுவது மனங்கொள்ளத்தக்கது:
“தமிழுக்குச் செய்யவேண்டிய அடிப்படை ஆக்க
வேலைகள் இன்னும் செய்யப்படவில்லை. தமிழகத்திலேயே தமிழ் கட்டாயப் பாடமாக இல்லை.
தமிழ் பயிற்று மொழியாக இல்லை. ஆட்சி மொழியாக இல்லை. தேவையற்ற ஆங்கில வெறியும்,
ஆங்கில வாணிகமும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன. வேற்று
மொழியாளரின் வேட்டைக்காடாகத் தமிழகம் கிடந்து கொடிய சுரண்டலுக்கு உட்பட்டு
உழலுகின்றது. உயிர் நிலையான அடிப்படை வேலைகள் எல்லாவற்றையும் செய்யாமல் வெறும்
பகட்டான மேற்பூச்சு வேலைகளிலேயே ஈடுபட்டுவருவது தமிழக முதல்வரை பல்லாண்டு
காலமாய்ப் பிணித்துள்ள ஒரு நோய் எனலாம். இப்பெருநோயின் மற்றோர் அறிகுறிதான்
நடக்கவிருக்கும் செம்மொழி மாநாடு என்பதில் கடுகளவும் ஐயமில்லை.”
அந்நிய
ஆதிக்கமும் ஆட்சிமொழியும்:
தமிழ் மொழியானது, கிரேக்கம், சீனம் போன்ற செவ்வியல் மொழிகளுக்கு நிகரான இலக்கிய வளமுடையது. நம் தமிழகப்
பகுதியைப் பொறுத்து நீண்ட காலமாகவே அந்நிய மொழிகளே ஆட்சி மொழிகளாக இருந்து
வந்துள்ளன. சோழர் காலத்திலும் ஆட்சிமொழியில் வடமொழிக்கு இருந்த செல்வாக்கை நாம்
குறைத்து மதிப்பிட முடியாது. அதற்குப் பின்னர் ஆண்ட தெலுங்கர், மராத்தியர், இசுலாமியர் ஆகியோரின் ஆட்சிக்காலங்களில்
மைய நிர்வாக மொழிகளில் தெலுங்கு, மராத்தி, உருது, பாரசீகம் ஆகியன செல்வாக்கு செலுத்தின. தமிழ்
தனித்த அடையாளத்துடன் விளங்கிடப் பெரும்பாடுபட்டது. தமிழ் தனித்து இயங்கும் ஆற்றல்
மிக்கது என்று காலந்தோறும் நிரூபிக்க வேண்டிய அவலத்திற்குள்ளாகியுள்ளது.
1857க்குப் பின் பிரிட்டிஷ் அரசாங்கம்
இந்தியப் பகுதிகளை நேரடியாகத் தன் ஆட்சி அதிகாரத்துக்கு கொண்டு வந்த பின்னரே, இந்தியா என்ற ஒரு காலனி
நாடு உருவானது. அதற்கு முன்னர் இந்தியா என்ற ஒரு நாடு இருந்ததில்லை. அன்று முதல்
இன்றுவரை இந்தியாவில் ஆங்கிலமே ஆதிக்கத்தில் உள்ளது.
தமிழன் இன்று தமிழகத்தில் மட்டுமில்லை, மொரீஷியஸ், பிஜித்தீவு, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா,
மலேசியா, சிங்கப்பூர், கனடா,
ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இங்கிலாந்து
என உலகெங்கும் தமிழர்கள் பரவியுள்ளனர். இலங்கையில் தமிழீழம் உள்ளது, மற்றும் மலையக மக்கள் வாழ்கின்றனர். 18ஆம் நூற்றாண்டு தொடங்கி உலகமெங்கும்
பிழைப்பதற்காகப் போன தமிழர்களின் புலம்பெயர் வாழ்க்கை துயரமானது. இன்று இந்த
நாடுகளில் வாழும் தமிழர்கள் சிறுபான்மை இனத்தவராகவோ, மொழிச்
சிறுபான்மையினராகவோ வாழ்கின்றனர். இந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழைப் பேச
அறியாது உள்ளனர். அவர்களின் வாழ்க்கையில் தமிழ்ப் பண்பாடு இன்னும் எந்த அளவில்
இருக்கிறது என்பது ஆய்வுக்குறியது.
இரண்டாம் உலகப் பெரும்போருக்குப்
பின்னர் இந்தியா போன்ற ஆசிய,
ஆப்பிரிக்க, இலத்தீன்அமெரிக்க நாடுகளில்
ஏகாதிபத்தியவாதிகளின் ஆதிக்கம் புதியகாலனிய ஆதிக்கம் என்ற வடிவில் மறைமுகமாகத்
தொடர்ந்து இருக்கிறது.
இத்தகைய புதியகாலனிய ஆதிக்கம், மொழியிலும்
காணப்படுகிறது. இந்தநாடுகள் மூலதனத்துக்கும் தொழில் நுட்பத்துக்கும்
ஏகாதிபத்தியவாதிகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையில் உள்ளன. ஏகாதிபத்திய நாடுகள்
கனிவளங்களையும் மனித உழைப்பையும் இந்தச் சார்பு நாடுகளிலிருந்து அபகரிப்பதை
இன்றளவும் காண்கிறோம். இத்தகைய பின்புலத்தில் இந்த நாடுகளின் அதிகாரப்பூர்வ
ஆட்சிமொழியாகவோ அதிகாரப்பூர்வமற்ற ஆட்சிமொழியாகவோ முதன்மொழியாகவோ சமூகக் கௌரவமிக்க
மொழியாகவோ ஏகாதிபத்திய நாடுகளின் மொழிகள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன. இது
மொழிவழியிலான ஏகாதிபத்திய ஆதிக்கம். இந்தியாவில் இது ஆங்கில மொழியின் ஊடாகப் பயணம்
செய்கிறது.
1802 முதல் ஏகாதிபத்திய நலன்களுக்கு
ஏற்ற விதத்தில் இந்தியப் பகுதிகள் அனைத்தும் நிர்வாக, அரசியல், இராணுவ, பொருளாதார நிலைகளில் வலுக்கட்டாயமாகவும்
வன்முறையாகவும் ஒருங்கிணைக்கப்பட்டன. இது ஏகாதிபத்திய நலன்களுக்கான அனைத்திந்திய
உருவாக்கமாகும். இதற்கு ஒற்றை அரசாங்க வடிவமும் (Unitary State) மையப்படுத்தப்பட்ட அதிகாரமும் தேவைப்பட்டன. அனைத்து தேசிய இனங்களும் சம
உரிமையைப் பெறாத அனைத்திந்தியப் போக்கு, தேசிய இனங்களின்
மொழிகள் ஆட்சி மொழியாவதற்கும் பயிற்று மொழியாவதற்கும் பெரும் தடையாக உள்ளது.
இந்த அனைத்திந்தியப் போக்கு என்பது
உள்நாட்டில் இந்தி மொழிக்கான மேலாதிக்கத்துடன் வெளிப்படுகிறது. அரசியல் சட்டத்தில்
இந்தி மொழிக்கும் சிறப்புத் தகுதி கொடுக்கப்பட்டுள்ளது. பலவழிகளில் தேசிய இன
மொழிகளுக்குரிய சமத்தகுதி அரசியல் சட்டத்தில் மறுக்கப்பட்டுள்ளது. இது தேசிய
இனங்களுக்கு இடையிலான சமத்துவமற்ற நிலையை அடிப்படையாகக் கொண்ட அனைத்திந்தியப்
போக்கின் வெளிப்பாடு.
நமக்குத் தேவை தேசிய இனங்களின்
சமத்தகுதியும், சம உரிமையும், சுயநிர்ணய உரிமையும் கொண்ட
அனைத்திந்தியத் தன்மையாகும். இத்தகைய அமைப்பில் அந்நிய மொழியின் மேலாதிக்கம் ஒரு
தேசிய இனத்தின் மீது இராது.
தாய்மொழிதான்
என்றும் நம் ஆட்சிமொழி
நம் தாய்மொழியாம்
தமிழ்மொழி, இங்கு
ஆட்சிமொழியாக, கல்விமொழியாக, தொடர்புமொழியாக
இல்லை. நமக்கான ஆட்சி, நமக்கான கல்வி நம் தாய் மொழியில்தான்
இருக்கவேண்டும். மாறாக ஆங்கிலமும் இந்தியுமே இந்திய அரசின் ஆட்சிமொழியாக
இருக்கின்றன.
இன்று அரசின் அனைத்துத் துறைகளிலும்
ஆங்கிலமே அதிகாரத்திலிருக்கிறது. மக்கள் தம் கருத்துக்களை வெளியிடவும் நிலைநாட்டவும், அரசின் போக்கை
புரிந்துகொள்ளவும், விமர்சிக்கவும், அரசியல்
அதிகாரத்தில் பங்குகொள்ளவும் ஆட்சிமொழி அம்மக்களின் தாய்மொழியாக இருக்கவேண்டும்
என்பது உயிராதாரமான கோரிக்கையாகும். இக்கோரிக்கை இங்கு நிறைவேற்றப்படவில்லை.
அரசுத் துறையின் கீழ்நிலைப் பணியாளர்களை வேலைவாங்குவதற்காக மட்டும்தான் தமிழ்
ஓரளவு பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலை சரிதானா?
இங்கு ஆரம்பக் கல்வியும் ஆங்கிலத்தில்; உயர் கல்வியும்
ஆங்கிலத்தில்; ஆங்கில வழியில் கற்றவர்களே மூளை
உழைப்பாளர்களாக நியமிக்கப்படுவது என்கிற இந்தச் சூழலை மாற்றாமல் - ஆங்கிலத்தை அகற்றாமல்
- தமிழ் மொழியைத் தமிழர்களின் முழுமையான வாழ்க்கை மொழியாக்க முடியாது. தமிழை
முழுமையான அளவில் ஆட்சிமொழியாக பயிற்றுமொழியாக மாற்றாமல் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தை
அகற்ற முடியாது.
புதியகாலனியும்
பயிற்று மொழியும்
தமிழகத்தில் இன்று மழலையர் பள்ளி
முதல் பல்கலைக் கழகம் வரை ஆங்கில வழியிலேயே கல்வி கற்பிக்கப்படுகிறது. மழலையர்
பள்ளி முதல் உயர்கல்வி கல்லூரி வரை எங்கும் ஆங்கிலம், எதிலும் ஆங்கிலம்.
19.07.1854ல் இந்தியாவில் நவீன
கல்வியை அறிமுகப்படுத்திய சார்லசு உட் குழுவின் நவீனக் கல்வியின் நோக்கங்களாகவும், பயிற்று மொழி
முறைகளாகவும் எழுதிய பரிந்துரைகளில், ஏகாதிபத்திய நலனும்
ஆங்கில மேலாதிக்கமும் அடிப்படையாக உள்ளன. இன்றைய கல்வியிலும் இவை தொடர்கின்றன.
பயிற்றுமொழி என்பது கல்வியைக்
கற்றுத்தரும் ஊடகம். கல்வியை உற்பத்தி முறையின் தேவையோடு தொடர்புபடுத்திக் காண
வேண்டும். இன்றைய ஏகாதிபத்தியச் சார்பான உற்பத்தி முறைக்கு ஏற்பவே நம் கல்வியின்
உள்ளடக்கம் அமைந்துள்ளது. அந்நிய ஏகாதிபத்திய நாடுகளுடனான கூட்டை அடிப்படையாகக்
கொண்ட உற்பத்தியே இன்றைக்கு இந்திய முதலாளிய உற்பத்தியையும் நிலப்பிரபுத்துவ
உற்பத்தியையும் மேலாதிக்கம் செலுத்துகிறது. இந்தியாவின் உற்பத்தியில் அந்நிய
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திவரும் உற்பத்தி இன்று அதிகமாக பெருகியுள்ளது.
ஏகாதிபத்திய உலகமயக் கொள்கையும் இப்பொழுது அறிவிக்கப்பட்ட புதிய தொழில் கொள்கையும்
ஏகாதிபத்திய நலன்களுக்கு உகந்ததாக உள்ளன. இது புதியகாலனிய முறை தொடர்வதையே நமக்குக்
காட்டுகிறது. இத்தகைய உற்பத்திமுறைக்கேற்ற கல்வியே கீழிருந்து மேல்நிலை வரை
அமைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய உற்பத்தி முறைக்குச் சார்பான
கல்வியின் சாராம்சம்: கொடுக்கப்படும் கல்வி ஏகாதிபத்தியச் சார்பானது; பரந்து பட்ட இந்திய
மக்களுக்கானதாக இல்லை. இத்தகைய கல்வியின் பயிற்றுமொழி அந்நிய மொழியின் ஆதிக்கத்தை
உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பயிற்று மொழியின் ஆணிவேர் ஏகாதிபத்தியச் சார்புத்
தன்மையில் அடங்கியுள்ளது. இந்தக் கல்வியின் பயிற்றுமொழி இந்திய மக்கள்விரோத
உள்ளடக்கத்தின் வெளிப்பாடு.
கல்வியின் ஏகாதிபத்தியச் சார்பு
உள்ளடக்கத்தை, தாய்மொழியை பயிற்றுமொழியாக ஆக்குவதற்குத் தடையாகக் கருதாமல் பயிற்றுமொழி
என்ற வடிவத்தை மட்டுமே மாற்றக் கோருதல், உள்ளடக்கத்தைப்
புறக்கணித்துவிட்டு வடிவத்தை மட்டுமே கருத்தில் கொள்வதாகும். ஏகாதிபத்திய
எதிர்ப்பு அரசியல் நோக்கமற்ற விதத்திலும் ஒரு தேசிய மொழியைப் பயிற்றுமொழியாக்கிவிட
இயலும் என்ற தவறான அரசியல் நம்பிக்கையை ஊட்டுவதற்கு துணைபோவதாகும்.
தாய்மொழிக்
கல்விக்கு ஈடு இணை ஏதுமில்லை
நமக்கென்று ஒரு தாய்மொழி
இருக்கும்போது அந்நிய மொழியில் கல்வி கற்பது தேவையே இல்லாத ஒன்று. தாய்மொழிக்
கல்வியின் மூலம்தான் சுயசிந்தனை வளரும். ஆக்கப்பூர்வமான அறிவு கிட்டும்.
அந்நியமொழிக் கல்வி சுமைமிக்கது. மேலும் மக்கள் மயமாவது இல்லை. எல்லோருக்கும்
கல்வி கிடைப்பதற்கு ஒரே வழி தாய்மொழிக் கல்விதான்.
முன்பு வேதங்களை பார்ப்பனர்களின்
ஏகபோகமாக வைப்பதற்காக, பிறர் வேதம் படிக்கத் தடை இருந்தது. பார்ப்பன-சத்திரியன் அரசியல்
அதிகாரத்தைப் பேணிப் பாதுகாப்பதற்காகச் சூத்திரனுக்கு இம்மைக்கு உபயோகமான அர்த்த
சாஸ்திரத்தைச் சொல்லி வைக்கலாகாது என இருந்தது போல, இப்போது
உழைக்கும் வர்க்கத்திடமிருந்து கல்வியைப் பறித்து, மேல்தட்டுப்
பிரிவினரின் ஏகபோகமாக்கிட அந்நியமொழிக் கல்வி உதவுகிறது. ஆரம்பக் கல்வி முதல்
ஆராய்ச்சிக் கல்வி வரை தாய்மொழியே பயிற்றுமொழியாக இருக்கவேண்டும் எனக் கோருவது
நமது அடிப்படை உரிமையாகும். இந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம்தான் பயிற்றுமொழியாக
ஆரம்பக்கல்வி முதலே ஆதிக்கம் செலுத்துகிறது. தமிழ்வழிப் பள்ளிகள் ஏதோ பெயருக்கு
இருக்கின்றன.
தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய
உரிமைக்கும், தமிழ்மொழி ஆட்சிமொழியாவதற்கும், பயிற்றுமொழியாவதற்கும்,
அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ இந்திய அரசு தடையாக இருக்கிறது.
ஏகாதிபத்திய நலன்களுக்குச் சேவை செய்யும் இந்திய அரசு தேசிய இனங்கள் சுயநிர்ணய
உரிமைக்காக மக்கள் நடத்தும் போராட்டங்களைப் பாசிச முறையில் ஒடுக்குகிறது.
கட்டாய ஆட்சிமொழியாக ஆங்கிலத்தையும்
இந்தியையும் தேசிய இனங்களின் மீது திணிக்கிறது. மாநில ஆட்சிகளும் மாநில அளவிலான
தரகுமுதலாளியக் கட்சிகளும் கட்டாய ஆட்சிமொழியாக ஆங்கிலமே இருக்கவேண்டும் என
வலியுறுத்தின. இனச் சமத்துவத்தையும்,
மொழிச் சமத்துவத்தையும் மறுத்து, மைய அரசு
செயல்படுத்திவரும் தேசிய இன ஒடுக்கு முறைகளை ஏற்றுக் கொண்டே மாநில ஆட்சிக்கு அதிக
அதிகாரம் கோருவதோடு தம்மைக் குறுக்கிக் கொண்டன. தமிழகத்திலும் இதுதான் நடந்தது.
தமிழை முழுமையாக ஆட்சிமொழியாக, பயிற்றுமொழியாக
மாற்றுவதற்கு எந்த ஒரு கட்டத்திலும் முயற்சிசெய்யப்படவில்லை. மாறாக, ஆங்கிலத்தின் ஆதிக்கம் தொடர்வதற்காகத்தான் இங்குள்ள திராவிடக் கட்சிகள்
அரும்பாடுபட்டன.
செம்மொழி மாநாடு
தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய
உரிமைக்காகவும், தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்கவும் பயிற்றுமொழியாக்கவும் போராடக்
கிளர்ந்தெழும் மக்களைத் திசை திருப்புவது இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
நடத்தப்படுவதற்கான நோக்கங்களில் ஒன்று.
தமிழீழ மக்கள் மீதான போரை நிறுத்தச்
சொல்லி தங்கள் கோரிக்கையை இந்தியாவுக்கு எடுத்துரைத்துப் போராடினார்கள் தமிழ்
மக்கள். ஆயினும் சிங்களப் பேரினவாத பவுத்த மதவாத இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை.
இந்திய அரசு போரை நிறுத்தச் சொல்வதற்கு மாறாக, ஆயுதம் கொடுத்தும், பண
உதவி செய்தும், போரில் மறைமுகமாகப் பங்குகொண்டு தமிழீழ
மக்களின் விடுதலைப் போரை முறியடிப்பதிலும் மக்களைக் கொன்று குவிப்பதிலும் பெரும்
பங்காற்றியது. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி இரட்டைவேடம் பூண்டு இந்தப் போரில்
இலங்கை அரசுக்கு மறைமுக ஆதரவுகொடுத்து தமிழீழ மக்களுக்குத் துரோகம் செய்தார்.
இந்தத் துரோகத்தை மறைத்தல் இந்த உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்படுவதற்கு
மற்றொரு நோக்கமாகும்.
பழந்தமிழ்ப்
பெருமை பேசி இன்றைய தமிழன் அவலம் மறைக்கவே
வேறுவிதமாகச் சொன்னால், பழந்தமிழ்ப் பெருமைபேசி
இன்றைய தமிழன் அவலம் மறைக்கவே செம்மொழி மாநாடு. இதுதான் கலைஞர் கருணாநிதியின்
தந்திரம் சுந்திரம்பிள்ளை, பரிதாமாற்கலைஞர் ஆகியோர் இவருக்கு
வழிகாட்டிகள்.
ஆரியம் வழக்கொழிந்து போகத் தமிழ் இளமை
மாறாதிருப்பதகாக் கூறிச் செல்கிறார் சுந்தரம்பிள்ளை அவர்கள். இது பின்னோக்கிப்
பார்த்து பழமை பேசும் செயலாகும். சென்ற காலத்தின் சிறப்புப் பற்றிய குரல் இது. அதே
தமிழ் மொழி தனது காலத்தில் அறிவியல் துறையில் பின்தங்கி இருப்பதைக் காணவில்லை.
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் தமிழ்மொழி அனைத்துத் துறைகளிலும் ஆங்கில மொழி
ஆதிக்கத்திற்குட்பட்டிருப்பதைப் பற்றியும் கவலையில்லை. தமது காலத்து விவகாரங்களில்
வெள்ளைக்கார ஆட்சியையும் சமஸ்தான மன்னராட்சியையும் சுந்தரம்பிள்ளை
ஏற்றுக்கொண்டார். நிலவிய அரசியல் வரம்பிற்குள் மொழி, இலக்கியம் முதலியவற்றை பேணுவதே இலட்சியமாகக்
கொண்டார்.
கலைஞர் கருணாநிதி அவர்களும்
பழந்தமிழ்ப் பெருமை பேசுகிறார். ஆனால் அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ அரசினால்
ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை, குறிப்பாகத் தமிழ்தேசிய இனத்தின் சுயநிர்ணய
உரிமை, தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்குவது, பயிற்றுமொழியாக்குவது ஆகியவற்றிற்கான போராட்டத்தைக் கைவிட்டு எங்கும்
எதிலும் ஆங்கிலமயப்படுத்துகிறார்.
சுந்தரம்பிள்ளை போன்றோர் மீது பாரதி
வைத்த விமர்சனம் கலைஞருக்கும் பொருந்தும்.
“மறைவாகத் தமக்குள்
பழங்கதைகள்
சொல்வதிலோர் மகமை இல்லை”
அதுமட்டுமல்ல.
முக்காலத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டுமென்றும் கூறுகிறார்.
“முன்னர் நாடு திகழ்ந்த
பெருமையும்
மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியும் தேர்திலார்
பேடிக்கல்வி
பயின்றுழப் பித்தர்கள்”
கலைஞர் கருணாநிதி, மூண்டிருக்கும்
இந்நாளின் நிகழ்ச்சியை நன்கறிந்தவர்தான். ஆனால் கண்முன் கண்ட நிகழ்ச்சிக்கும்
வீழ்ச்சிக்கும் விமோசனம் தேடுவதற்குப் பதிலாக அகில இந்திய தரகுமுதலாளித்துவத்துடன்
சமரசப் பாதையைப் பின்பற்றுகிறார். எனவே பழந்தமிழ்ப் பெருமைபேசி இன்றைய தமிழரின்
அவலத்தை மறைக்க செம்மொழி மாநாடு கூட்டுகிறார்.
தேசிய இன
விடுதலைக்கு புரட்சிகர ஜனநாயக மக்கள் இயக்கம் தேவை
காலங்காலமாக ஆளப்படுவோருக்கு எது நலன்
என்பதை ஆளுவோர்தான் தீர்மானிக்கிறார்கள். தங்களுக்கு எது நல்லதோ அதனைச்
சமுதாயத்திற்கும் நல்லது எனச் சொல்லித்தான் நிலைநிறுத்துவார்கள். அப்படித்தான்
புதியகாலனியாதிக்கவாதிகளும் அவர்களது அடிவருடிகளும் தமிழ்த் தேசிய இனத்திற்கு
உகந்த ஆட்சி மொழியும், பயிற்று மொழியும் ஆங்கிலம்தான் எனக் கூறுகிறார்கள்.
சீனமும் செம்மொழிப் பட்டியலில்
இருந்தது. அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றதும்
சீனமொழி உள்ளிட்ட 56 தேசிய இன மொழிகளும் பாதுகாக்கப்பட்டு வளர்ந்து வந்தன.
தமிழ் செம்மொழிப் பட்டியலில்
இருந்தாலும் இந்தியத் தரகுப்பெருமுதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசு எல்லாத் தேசிய
இனங்களின் மீதும் ஆங்கிலத்தையும் இந்தியையும் திணிக்கிறது; எல்லாத் தேசிய
இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமையை (அரசியல் உரிமையை) மறுக்கிறது. எனவே தமிழ்த்
தேசிய இனம் சுயநிர்ணய உரிமை பெறவும், தமிழ்மொழி ஆட்சிமொழி,
பயிற்றுமொழி, பண்பாட்டு மொழியாகவும், அதற்குத் தடையாக உள்ள இந்த அரசுக்குப் பதிலாக மக்கள் ஜனநாயக அரசு
நிறுவப்படவேண்டும்.
இப்பணியை நிறைவேற்றப்
பாட்டாளிவர்க்கத்தின் தலைமையிலான புரட்சிகர ஜனநாயக இயக்கம் தேவை. எனவே, அத்தகைய ஒரு இயக்கத்தைக்
கட்டியமைப்பது நமது உடனடிப்பணியாகும்.
புரட்சிகர ஜனநாயக
இயக்கத்தைக் கட்டியமைக்கப் பின்வரும் முழக்கங்களின் பின் அணிதிரள்வோம்.
« அரைக்காலனிய-அரைநிலபிரபுத்துவ
ஆட்சியின் கீழ் ஆங்கிலம்,
இந்தி ஆதிக்கம் தொடர்கையில் தமிழ் செம்மொழியானாலும், தமிழ், தமிழினம், தமிழ்நாட்டின்
மீதான அடிமைத்தளை நீங்காது !
« தமிழினம் சுயநிர்ணய உரிமை
பெறவும்,
ஆட்சி மொழியாய்,
பயிற்று மொழியாய்,
வழிபாட்டு மொழியாய்
அன்னைத் தமிழை அரியணையேற்றவும் மக்கள் ஜனநாயகப்
புரட்சிக்கு அணிதிரள்வோம்!
« ஈழத்தமிழருக்கு இழைத்த துரோகம்
செம்மொழி மாநாட்டால் மறைந்துவிடாது!
« உலகத்தொழிலாளர்களே! ஒடுக்கப்பட்ட
தேசங்களே! ஒன்றுபடுவோம்!!
ஜூன்
2010
No comments:
Post a Comment
விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.