புதிய காலனிய ஆதிக்கத்திற்கு சேவை செய்யும் இந்துத்துவப் பாசிச மோடி தலைமையிலான பா.ஜ.க.-அ.தி.மு.க. அணியை வீழ்த்துவோம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!
17-வது நாடாளுமன்றத் தேர்தலை நாம் எதிர்நோக்கி உள்ளோம். தமிழகத்தில் பாஜக - அதிமுக ஓரணியாகவும், காங்கிரஸ் - திமுக ஓரணியாகவும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றன.
‘வளர்ச்சி’ முழக்கத்தை முன்வைத்து கடந்த தேர்தலில் ஆட்சிக்கு வந்த இந்துத்துவப் பாசிச மோடி கும்பல் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி அடைந்துவிட்டது. வறுமை, வேலைவாய்ப்பின்மை மற்றும் பாசிச நடவடிக்கைகள்தான் வளர்ச்சியடைந்தன. இதற்குக் காரணம் என்ன?
அமெரிக்காவில் 2008 ஆம் ஆண்டு வெடித்துக் கிளம்பிய உலக முதலாளித்துவ மிகு உற்பத்தி நெருக்கடியிலிருந்து ஏகாதிபத்திய நாடுகள் இன்னும் மீளவில்லை. அமெரிக்கா இராணுவ ரீதியில் பலம் பெற்றிருந்தாலும், வர்த்தகப் பற்றாக்குறையால் பொருளாதார ரீதியாக சரிந்து வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் வளர்ந்து வரும் இரசிய-சீன ஏகாதிபத்தியத்திற்கும் இடையில், உலகை மறுபங்கீடு செய்து பொருளாதார நெருக்கடிகளைத் தீர்த்துக்கொள்வதற்கானப் ‘பனிப்போர்’ முயற்சிகள் துவங்கிய பிறகு அமெரிக்காவின் உலக மேலாதிக்க கனவு தகர்ந்து வருகிறது. எனவே, அமெரிக்க-நேட்டோ முகாமிற்கும் இரசிய-சீன முகாமிற்கும் இடையில் ஈரான், வடகொரியா, சிரியா போன்ற நாடுகளில் செல்வாக்கு மண்டலங்களை நிறுவி எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவதற்கான போட்டியும் முரண்பாடுகளும் கூர்மை அடைந்துள்ளன. இதனால் ஏகாதிபத்திய நாடுகளில் வலதுசாரி பாசிசம் தீவிரம் அடைந்துவருகிறது.
அமெரிக்க முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிகளை எதிர்த்து, அங்கு மக்கள் நடத்திய போராட்டங்களை டிரம்ப் கும்பல் இனவெறி பாசிசத்தின் மூலம் ஒடுக்கிவருகிறது. அமெரிக்கா தனது நெருக்கடிகளின் சுமைகளை மோடி ஆட்சியின் மூலம் இந்திய மக்கள் மீது சுமத்துகிறது; புதிய காலனிய-புதிய பொருளாதார ஒடுக்குமுறைகளைத் தீவிரப்படுத்துகிறது. இந்த ஒடுக்குமுறைகளை எதிர்த்து மக்களின் போராட்டங்கள் அலை அலையாக வெடித்துக் கிளம்பியதை அடுத்து, மோடி கும்பல் இந்துத்துவப் பாசிசத்தைத் தீவிரப்படுத்தி மக்கள் போராட்டங்களைப் பிளவுபடுத்தி நசுக்க முயற்சிக்கிறது. இதுவே இந்தியாவில் பாசிச அடக்குமுறைகள் தீவிரம் பெற்று வருவதற்கான பொருளியல் அடிப்படையாகும்.
அமெரிக்க ஏகாதிபத்திய புதியகாலனிய சேவையில் இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சி
வெள்ளை மாளிகையின் ‘சௌகிதார்’ (காவலாளி) மோடி கும்பல், அமெரிக்காவின் புதிய காலனிய நலன்களுக்கு அனைத்து துறைகளையும் பலி கொடுத்தது மட்டுமின்றி, இந்தியப் பாதுகாப்புத் துறையையும் அமெரிக்காவிற்கு அடகு வைத்ததுவிட்டது. ‘டிஜிட்டல் இந்தியா’, ‘மேக் இன் இந்தியா’, ‘வேக்கப் இந்தியா’ போன்ற ‘இந்தியாக்கள்’ மோடியின் வாய்ச்சவடால்களாக படுதோல்வி அடைந்தன. இந்திய-அமெரிக்க இராணுவ உடன்படிக்கையை 10 ஆண்டுகளுக்கு நீடித்ததை அடுத்து, இந்திய-அமெரிக்கப் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் எனப்படும் நான்கு அடிப்படை ஒப்பந்தங்களில் (Foundational Agreements) மோடி கும்பல் கையெழுத்திட்டுள்ளது. 1) தகவல் பாதுகாப்பு ஒப்பந்தம் (Information Security Agreement - ISA); 2) இராணுவத் தளவாடங்கள் பரிமாற்ற ஒப்பந்தம் (Logistics Exchange Memorandum Agreement - LEMoA); 3) பரஸ்பர ராணுவத் தொலைத்தொடர்பு இணக்கம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் (Communication, Compatability and Security Agreement - COMCASA); 4) அடிப்படை பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்பு சம்பந்தமான ஒப்பந்தம் (Basic Exchange and Co-operation Agreement - BECA). இந்த நான்கு ஒப்பந்தங்கள் மூலம் இந்தியப் பாதுகாப்புத்துறை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டது. இனி பாதுகாப்புத் துறை சம்பந்தமாக எந்த ஒரு முடிவையும் இந்திய அரசு சுயேச்சையாக எடுக்க முடியாது. இந்த நான்கு ஒப்பந்தங்களும், தெற்காசியாவில் சீன மேலாதிக்கத்தை தடுத்து நிறுத்தி அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநிறுத்த உருவாக்கப்பட்ட இந்தோ - பசிபிக் கூட்டமைப்பும் (Indo - Pacific Partnership), இந்திய அமெரிக்க அணுசக்தி, இராணுவ ஒப்பந்தங்களும், நாட்டின் அரைகுறை இறையாண்மையைக் கூட குழிதோண்டிப் புதைத்து, அமெரிக்காவின் உலக மேலாதிக்க யுத்தங்களின் தேர்க்காலில் இந்தியாவைப் பூட்டியுள்ளன. இதுமட்டுமின்றி இந்தியாவின் அனைத்துத் துறைகளும் அமெரிக்க நிதிமூலதன ஆதிக்கத்திற்குப் பலியிடப்படுகின்றன.
- வேளாண் உற்பத்திப் பொருட்கள் இறக்குமதி, கார்ப்பரேட் விவசாயம், மானிய வெட்டு, வங்கிக் கடன் மறுப்பு, இடு பொருட்கள் விலை உயர்வு, நதிகள் தனியார்மயம் போன்ற நடவடிக்கைகளால் விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற்றுவது பெருகிவிட்டது. ‘சுதந்திர தேவி’ மகனின் ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலை 40% அதிகமாகிவிட்டது.
- பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கார்ப்பரேட் கொள்ளை ஊக்குவிக்கப்பட்டு 5 லட்சம் கோடி கருப்புப் பணம் வெள்ளையாக்கப்பட்டுள்ளது; இத்துடன் ஜிஎஸ்டி வரி விதிப்பும் சேர்ந்து பல லட்சம் சிறு - குறு தொழில்களை அழித்து, அமைப்புசாராத் தொழில் துறையைப் பெருமளவில் ஒழித்துக் கட்டியது. மறுபுறம் கார்ப்பரேட்டுகளின் வாராக் கடனை 12 லட்சம் கோடி தள்ளுபடி செய்திருக்கிறது.
- அமெரிக்க முதன்மை பாதுகாப்புக் கொள்கைக்கு ஏற்ப ‘திறப்புக் கொள்கை’ மூலம் (Open Door Policy) இந்தியாவின் சந்தை வடிவமைக்கப்பட்டு வருகிறது. ஜிஎஸ்டி மூலம் வரிவிதிப்பும் சந்தையும் மையப்படுத்தப்பட்டு மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு மத்தியில் அதிகாரம் குவிக்கப்பட்டு உள்ளது. நீட் சட்டம் மூலம் மாநில அரசுகளின் உயர்கல்வி உரிமைகளைப் பறித்து விட்டது. ஆன்லைன் வர்த்தகத்தில் பிளிப்கார்ட், அமேசான் போன்ற கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கமானது சில்லறை வர்த்தகத்தை ஒழித்து இந்திய வணிகம் மீதான மத்திய மாநில அரசுகளின் கட்டுப்பாடுகளைத் தகர்த்து பல லட்சம் வணிகர்களின் வயிற்றில் அடித்துள்ளது ‘டிஜிட்டல் இந்தியா’ மோடி கும்பல்;
- பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தியதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டிவிட்டது. பொது மக்களின் வருமானமும் வாழ்க்கைத் தரமும் வீழ்ச்சியடைந்து விட்டது. உலகில் சமச்சீரற்ற ஏற்றத்தாழ்வான வளர்ச்சி உள்ள நாடுகளில் இந்தியாவை முதல் இடத்திற்கு தள்ளிவிட்டது ‘ஸ்மார்ட் இந்தியா’ மோடி கும்பல்;
- கல்வி, மருத்துவம், வங்கிகள் உள்ளிட்ட சேவைத் துறைகள் அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டுள்ளது;
- நாட்டின் இயற்கை வளங்கள், மூலப்பொருட்கள், மனித வளங்கள் அனைத்தையும், பன்னாட்டு - உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் ‘ஆதி மூலதன திரட்டல்’ வடிவில் கொள்ளையடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன;
- ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக வாய்ச்சவடால் அடித்த மோடி ஆட்சியில் 4 கோடி பேர் வேலை இழந்துள்ளனர்.
இவ்வாறு மோடி கும்பலின் ஐந்தாண்டு கால ஆட்சியானது, அனைத்துத் துறைகளையும் அமெரிக்காவின் புதிய காலனிய ஆதிக்க நலன்களுக்கும், அம்பானி-அதானி போன்ற கார்ப்பரேட்களின் நலன்களுக்கும் காவு கொடுத்ததால், நெருக்கடிகள் தாளாமல் விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினரும் நாடெங்கும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டங்களை சாதி-மத ரீதியாக பிளவுபடுத்தி நசுக்கவே இந்துத்துவ பாசிச அடக்குமுறைகளை தீவிரப்படுத்தியது மோடி - ஆர்.எஸ்.எஸ் கும்பல்.
· விவசாயிகளின் போர்க்குணமிக்க போராட்டங்களை நசுக்கி படுகொலை செய்தது. டெல்லியில் விவசாயிகளை நிர்வாணமாக நிறுத்தியது;
· அனைத்து தொழிலாளர் நலச் சட்டங்களையும் திருத்தி, தொழிலாளர்களை கொத்தடிமை முறைக்கு ஆட்படுத்தியதைத் தொடர்ந்து தீவிரமடைந்த போராட்டங்களை ஒடுக்கியது;
· தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்த துணை இராணுவப் படைக்கு சிறப்பு அதிகாரச் சட்டம் வழங்கி, வடகிழக்கு மாகாணங்கள் மீதும் காஷ்மீர் மீதும் உள்நாட்டு யுத்தம் நடத்தியது;
· வெமுலாக்களும், அனிதாக்களும் தற்கொலைக்கு தள்ளப்பட்டு ஆசிபாக்களும், கோவை நிதன்யஸ்ரீக்களும் வண்புணரப்பட்டு ‘கிளீன் இந்தியாவின்’ குப்பைத் தொட்டிகளில் குப்பையாக வீசப்பட்டது;
· இந்து மதவெறியை தேசபக்தியாக உருவகப்படுத்துவது, முத்தலாக் தடை, லவ் ஜிகாத் எதிர்ப்பு, மாட்டுக் கறித் தடை, இந்துத்துவத்தை எதிர்த்த எழுத்தாளர்கள் படுகொலைகள், ‘பசு பாதுகாப்பு’ எனும் பெயரில் இஸ்லாமியர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் கூட்டுப் படுகொலை செய்யப்படுவது;
· சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் (UAPA), எஸ்மா-டெஸ்மா மற்றும் தேசவிரோதச் சட்டங்களை ஏவியது;
· இந்தி-சமஸ்கிருத-ஆங்கில மொழித் திணிப்புகள் மூலம் தேசிய மொழிகளை நசுக்கி வருவது;
· ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே சந்தை, ஒரே வரி, இறுதியாக ஒரே ‘சுடுகாடு’ என்று அனைத்து மாநில அதிகாரங்களும் மத்திய அரசுகளின் கைகளில் குவிக்கப்பட்டு பன்னாட்டு - உள்நாட்டு கார்ப்பரேட் நலன்களுக்காக பாசிச அடக்குமுறைகளைத் தீவிரப்படுத்தியது ‘பாரத மாதா கி ஜே’ மோடி ஆட்சி.
இவ்வாறு நாட்டைச் சுடுகாடாக்கிய மோடி கும்பல் இந்தத் தேர்தலிலும் வெற்றி பெறும் பொருட்டு ‘புதிய இந்தியா’ என்று போலி முழக்கத்தை முன்வைத்துள்ளது.
காங்கிரஸ் அணி, மோடி அணிக்கு மாற்றாக மதச்சார்பற்ற அணியாக முன் நிறுத்தப்பட்டு வருகிறது. மோடியின் காலாவதியான ‘வளர்ச்சி’ என்ற முழக்கத்தை ராகுல் இப்போது முழங்குகிறார்.
பாஜக அணிக்கு மாற்று காங்கிரஸ் அணி அல்ல!!
காங்கிரசும் பாஜகவும் இந்தியப் பாசிசத்தின் இரு முகங்களே!
காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில், வறுமை ஒழிப்பு, குறைந்தபட்ச வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், வேளாண்மைக்கான தனி பட்ஜெட், எதிர்ப்புள்ள மாநிலங்களில் நீட் ரத்து போன்ற பல ‘வர்ணமய’ வாக்குறுதிகளை அளித்துள்ளது. ஆனால் புதிய பொருளாதாரக் கொள்கைக்கான மாற்றுத் திட்டமோ, மதச்சார்பற்ற அரசை உருவாக்குவதற்கானத் திட்டமோ ஏதும் வைக்கவில்லை. புதிய காலனிய - புதிய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்திக் கொண்டே காங்கிரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா? எனில் நிச்சயம் முடியாது.
காங்கிரசு ஆட்சியில்தான் அரசு எந்திரம் முதலில் மதவாத மயமாக்கப்பட்டது; ஆர்.எஸ்.எஸ் - மதவாத சக்திகள் வலிமை பெற்றனர்; பாபர் மசூதி இடிப்பிற்கு கள்ளத்தனமாக ஆதரவு தந்தது; இடித்தவர்களை விடுதலை செய்தது; குஜராத் கலவரம், கோத்ரா இரயில் எரிப்பு குற்றவாளிகளை தண்டிக்க மறுத்தது; “இந்துத்துவமே மதச்சார்பின்மைக்கு மிகச்சிறந்த சக்தி வாய்ந்த பாதுகாவலன்” என்று காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றியது; காரியவாத அடிப்படையில் மதவாதத்தை கையாள்வது, 2000 சீக்கியர்களைக் கொன்றது; ஒரு லட்சம் ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்வதற்குத் தலைமைத் தாங்கியது; காஷ்மீர், வட கிழக்கு மாகாணங்கள் மீது உள்நாட்டு யுத்தம் நடத்தி பல லட்சம் பேரைக் கொன்றது, பல ஆயிரம் பெண்களை வன்புணர்வு செய்தது, சாதி, மதக் கலவரங்களுக்கு தலைமைத் தாங்குவது என காங்கிரஸ் கட்சியும் அரசு பயங்கரவாதத்தையும், தேசிய வெறியையும், தேசிய சுயநிர்ணய உரிமை மறுப்புக் கொள்கையையும், இன்னும் பல ஜனநாயக விரோத பாசிசக் கொள்கைகளையும் கடைபிடித்து வரும் கட்சிதான். சுருங்கக் கூறின், பாஜக இந்தியப் பாசிசத்தின் ஒருபக்கம் எனில், காங்கிரஸ் அதன் மறுபக்கம் ஆகும். காங்கிரசும், பாஜகவும் இந்தியப் பாசிசத்தின் இரு முகங்கள் ஆகும்.
காட் ஒப்பந்தம், டங்கல் திட்டம், உலகமய, தனியார்மய, தாராளமயக் கொள்கைகள், இந்திய - அமெரிக்க இராணுவ மற்றும் அணுசக்தி ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல புதிய காலனிய அடிமை ஒப்பந்தங்களை பாராளுமன்ற முறைகளை தூக்கி எறிந்துவிட்டு அமல்படுத்தி நாட்டை நாசமாக்கியதும், அதற்கேற்ப காரியவாத மதவாதம் மற்றும் பெருந்தேசியவெறி பாசிசத்தை முதன் முதலில் கட்டியமைத்ததும் காங்கிரஸ் கும்பல்தான். அண்மையில் மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு, பசு திருட்டு எனும் பெயரில் இஸ்லாமிய இளைஞர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏவியுள்ளது. ராகுல் அமைக்கப் போவதாக சொல்லும் மதச்சார்பற்ற அரசின் லட்சணம் இதுதான். எனவே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் அது மோடி ஆட்சியின் தொடர்ச்சியாகவே இருக்கும்; அதனால்தான் காங்கிரஸ் அணி மாற்று அல்ல என்கிறோம்.
மாநில தரகு முதலாளித்துவக் கட்சிகளின் நிலைபாடுகள்
மோடி கும்பலின் எடுபிடி ஆட்சியாக செயல்பட்டு வரும் எடப்பாடி கும்பல் எதிர்பார்த்தபடியே பாஜக அணியில் இடம் பெற்று தேர்தலைச் சந்திக்கிறது. ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு, மீத்தேன் - ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டம் என அனைத்துப் போராட்டங்களிலும், மோடி கும்பலின் அடியாளாக செயல்பட்டு ஒடுக்கியது; தமிழக நலன்களைக் காவு கொடுத்து; அதிமுகவின் தேர்தல் அறிக்கை மாநில உரிமைகள் பெரும்பாலும் பறிக்கப்பட்டுள்ளதை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது.
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மத்திய அரசுக்கு ஒத்தடம் தரும் அறிக்கையே ஆகும். தமிழீழ விடுதலைப் போரை கருவறுத்த காங்கிரசுக்கு வாலாட்டுவது; எழுவர் விடுதலைப் பற்றி நாடகம் ஆடுவது; தமிழ் மொழியை இணை மொழியாக்கும் கோரிக்கை; ஸ்டெர்லைட், எட்டு வழிச் சாலை மற்றும் மீத்தேன் திட்ட அனுமதியில் மத்திய அரசுக்குத் துணை போனது போன்ற பித்தலாட்டங்களும், ‘வரலாற்றுச் சிறப்புமிக்க’ துரோகங்களும்தான் கருணாநிதி-ஸ்டாலின் கும்பலின் உடன்பிறப்பாகும். திமுக, அதிமுக உள்ளிட்ட எல்லா மாநிலங்களின் தரகு முதலாளித்துவக் கட்சிகளும், புதிய காலனிய தாராளக் கொள்கைகளுக்கும், பாஜகவின் இந்துத்துவ பாசிசத்திற்கும், காங்கிரசின் பெருந் தேசிய வெறிப் பாசிசத்திற்கும் துணைபோகும் கட்சிகள்தான். இவை மத்திய அரசின் தொங்கு சதைகளாக விளங்கும் கட்சிகளே. காங்கிரஸ் - பாஜக தேர்தல் வாக்குறுதிகளே கார்ப்பரேட்களின் கண் அசைவிற்கு காத்திருக்கும்போது, பிராந்தியக் கட்சிகளின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.
வன்னிய சாதிவெறி ராமதாஸ் கும்பலும், பச்சோந்தி வைகோவும், கிருஷ்ணசாமி, திருமாவளவன் தலைமையிலான தலித்திய அமைப்புகளும், சிபிஎம் சிபிஐ போன்ற திருத்தல்வாதக் கட்சிகளும், ஏதாவது ஒரு பாசிசக் கட்சிக்கு முட்டுக்கொடுக்கும் கட்சிகளே ஆகும்.
பிற அமைப்புகளின் நிலைபாடுகள்
பு.இ.மு பாசிச மோடியின் இந்து பார்ப்பனிய தேசியமே பிரதான எதிரி என்று கூறி பாசிச காங்கிரசு, திமுக அணியை ஆதரித்து பிரச்சாரம் செய்வது என்ற திருத்தல்வாத நிலைபாட்டை எடுத்துள்ளது. மக்கள் அதிகாரம் ‘கார்ப்பரேட்-காவி பாசிசம் எதிர்த்து நில்‘ என்று கூறி மறைமுகமாக பாசிச காங்கிரசு, திமுக அணியை ஆதரித்து வந்த நிலையில் தற்போது கட்டமைப்பை மாற்றுவது என்ற தன்னியல்பு செயல்தந்திரத்தை முன்வைத்து, காங்கிரசு மிதவாத-பாதி இந்துத்துவா என்று சொல்லி பாசிச காங்கிரசு அணிக்கு முட்டுக்கொடுக்கிறது. பாராளுமன்றத்திற்கு வெளியே கட்டியமைக்கப்படும் பாசிசத்துக்கு பாராளுமன்றமே ஒரு ஜனநாயக திரையாக விளங்குகிறது; பாசிசத்தை பாராளுமன்றத்திற்கு வெளியே பாட்டாளிவர்க்கத் தலைமையில் கட்டப்படும் ஒரு பாசிச எதிர்ப்பு முன்னணியால்தான் வீழ்த்தமுடியும்.
பாட்டாளி வர்க்க நிலைபாடு
மோடி கும்பல் செயல்படுத்தி வந்த அமெரிக்க ஏகாதிபத்திய புதிய காலனிய ஆதரவு அரசியல் பொருளாதாரக் கொள்கைகளும், பாசிச நடவடிக்கைகளும் பத்தாண்டுகால மன்மோகன்-சோனியா கும்பலின் பாசிச ஆட்சியின் தொடர்ச்சியே ஆகும். அமெரிக்க ஏகாதிபத்திய நிதி மூலதனச் சர்வாதிகாரத்தை நிலை நிறுத்தி வாழ விரும்பும் இந்திய தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையே இந்திய அரசு பாசிச வடிவம் எடுப்பதற்கான பொருளியல் அடிப்படையாகும். பாசிசத்தின் வடிவங்களை மட்டுமே இவ்விரு கட்சிகளும் தீர்மானிக்க முடியும். இந்திய அரசை ஒரு இந்துத்துவப் பாசிச அரசாகக் கட்டமைப்பதா அல்லது பெருந்தேசிய வெறி பாசிச அரசாக கட்டமைப்பதா என்பதில்தான் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் உள்ள வேறுபாடு ஆகும். அவற்றை ஆதரிக்கின்ற கட்சிகளுக்கு இடையிலான வேறுபாடும் அதுவே ஆகும்.
இந்தியாவின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அயலுறவுக் கொள்கைகளை மக்களவைப் பிரதிநிதிகளுக்குக் கூடத் தெரியாமல், உயர் அமைச்சரவைக் குழுவும் அதன் அதிகாரவர்க்கக் குழுவும் இணைந்த சிறு கும்பல்தான் பாராளுமன்ற முறைகளைத் தூக்கியெறிந்துவிட்டு தீர்மானித்து செயல்படுத்துகிறது. பாராளுமன்றத்திற்கு இதன் மீது வாக்கெடுப்பு நடத்தக் கூட அதிகாரம் இல்லை. இதை அரசியல் சட்டமே கூட அனுமதிக்கிறது. உதாரணமாக காங்கிரஸ் ஆட்சியில் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் மீது பாராளுமன்றம் ஓட்டெடுப்புடன் கூடிய வாதத்தை நடத்தக் கூட அரசியல் சட்டப்படி அனுமதியில்லை என்று மறுக்கப்பட்டது. மோடி ஆட்சியில் பணமதிப்பு நீக்க நடவடிக்கைப் பற்றிய அறிவிப்பு பாராளுமன்றத்திற்கும், ரிசர்வ் வங்கிக்கும் கூட தெரியாமல் அறிவிக்கப்பட்டது.
நடப்பில் இருக்கும் பிற்போக்கான தொகுதிவாரி பிரதிநிதித்துவ தேர்தல் முறையே ஒரு சிறு கும்பலின் எதேச்சதிகாரத்திற்கு வித்திடுவதாக உள்ளது. பா.ஜ.க. கடந்த தேர்தலில் 31 சதவீத வாக்குகளை மட்மே பெற்று ஆட்சியமைத்தது. மாறாக விகிதாச்சார தேர்தல் முறை இருக்குமானால் சென்ற தேர்தலில் பா.ஜ.க. வாங்கியுள்ள வாக்குகளில் சதவீத அடிப்படையில் அக்கட்சிக்கு வெறும் 169 இடங்கள் மட்டுமே கிடைத்திருக்கும். காங்கிரஸ் கட்சிக்கு 44க்குப் பதில் 105 இடங்களும், மாயாவதியின் கட்சிக்கு ‘0’க்குப் பதில் 23 இடங்களும், தி.மு.க.விற்கு 10 இடங்களுக்கு மேலும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு 9க்குப் பதில் 18 இடங்களும் கிடைத்திருக்கும். அ.தி.மு.க.வுக்கு 37க்குப் பதில் 13 இடங்கள், திரிணாமுல் காங்கிரசுக்கு 34க்குப் பதில் 21 இடங்கள் மட்டுமே கிடைத்திருக்கும். எனவே விகிதாச்சார தேர்தல் முறை என்பது ஒப்பீட்டளவில் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும், அரசியல் பிரிவினருக்கும் வாக்குகளின் சதவீதத்திற்கேற்ப எந்தளவுக்குப் பிரதிநிதித்துவம் பரவலாகக் கிடைக்குமோ அந்தளவுக்கு எதேச்சதிகார ஆட்சி முறையைக் கட்டுப்படுத்தப் பயன்படும்.
விகிதாச்சாரத் தேர்தல் முறை மட்டுமில்லாமல், முதலாளித்துவ நாடுகளில் உள்ள தேர்ந்தெடுக்கவும் திருப்பி அழைக்கவுமான உரிமை, பொதுவாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கும் முறைகளும் கூட இங்கில்லை. இதைக் கூட திருத்தல்வாத கட்சிகளோ, முதலாளித்துவ கட்சிகளோ, பாராளுமன்ற பங்கேற்பு பற்றி பேசுகிற மா-லெ அமைப்புகளோ கோருவதற்குத் தயாராக இல்லை.
விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையும், தேர்ந்தெடுக்கவும் திருப்பி அழைக்க உரிமையும் எவ்வளவுதான் பரந்த ஜனநாயகத் தன்மை கொண்டிருப்பினும் அது எதேச்சதிகார முறையை முற்றாக ஒழிக்கப் பயன்படாது. அந்த முறையும் முதலாளித்துவ அமைப்பை பாதுகாக்கக் கூடியதுதான். ஏனெனில் பாராளுமன்ற ஜனநாயக முறைக்கு மட்டுமே இது செயல்படுத்தப்படுகிறது. நிர்வாகத்துறை, நீதித்துறை போன்றவற்றிற்கு இது செயல்படுத்தப்படுவதில்லை. எனவே இதுவும் முற்றாக ஜனநாயகத்தை வழங்காது. மக்களுக்கு உண்மையில் அதிகாரம் வழங்கக் கூடிய, உண்மையான ஜனநாயக அமைப்பு முறை என்பது சோவியத் ஜனநாயக ஆட்சி முறையே ஆகும்.
இன்றைய நமது கடமை என்ன?
பாசிச எதிர்ப்பு முன்னணி ஒன்றைக் கட்டி பாசிசத்தை எதிர்த்துப் போராடவும், அதைப் புதிய ஜனநாயகப் புரட்சிக்கான முன்னணியாக வளர்த்தெடுக்கவும் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசபக்த முன்னணியை உருவாக்க வேண்டும். ஏனெனில் பாசிச எதிர்ப்பும் ஏகாதிபத்திய எதிர்ப்பும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாததாகும். அவ்வாறு பிரிப்பது பாசிச எதிர்ப்பு முன்னணி கட்டுவதற்கும் அதை புதிய ஜனநாயகப் புரட்சிக்கான அணியாக வளர்த்தெடுப்பதற்கும் தடையாக மாறும். புதிய காலனி ஆதிக்க ஒடுக்குமுறைகள் மற்றும் பாசிச அடக்குமுறைகளாலும் பாதிக்கப்பட்டு உழல்கின்ற வர்க்கங்களான விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள் மாணவர்கள், மீனவர்கள், பெண்கள், சிறு குறு முதலாளிகள், பணக்கார விவசாயிகள், தேசிய முதலாளிகள் மற்றும் பிற பரந்துபட்ட ஜனநாயக சக்திகளை உள்ளடக்கிய ஒரு முன்னணியே பாசிச எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தும். எனவே இத்தகைய ஒரு முன்னணியை உருவாக்கி பாசிசத்தை எதிர்த்துப் போராடவும், புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்கவும் பின்வரும் முழக்கங்களின் பால் அணிதிரளுமாறு மேற்கண்ட அனைத்து பிரிவினரையும் அறைகூவி அழைக்கிறோம்.
புதிய காலனிய ஆதிக்கத்திற்கு சேவை செய்யும் இந்துத்துவப் பாசிச மோடி தலைமையிலான பா.ஜ.க.-அ.தி.மு.க. அணியை வீழ்த்துவோம்!
« மோடி அணிக்கு மாற்று பாசிச காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அல்ல!
« தொழிலாளர்கள், விவசாயிகள், பரந்துபட்ட ஜனநாயகச் சக்திகளை ஒன்றிணைத்து
பாசிச எதிர்ப்பு முன்னணியைக் கட்டியமைப்போம்!
« தேர்ந்தெடுக்கவும் திருப்பி அழைக்கவும் அதிகாரமுள்ள சோவியத் வடிவிலான
மக்கள் ஜனநாயகக் குடியரசமைக்கப் புரட்சிப் பாதையில் அணிதிரள்வோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
தொடர்புக்கு: தோழர் ஸ்டாலின், 3/20, அண்ணா தெரு, மேட்டுக் குப்பம், வானகரம், சென்னை-98 செல்: 8903847800
ஏப்ரல் 2019
No comments:
Post a Comment
விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.