கார்ப்பரேட் நலனுக்காக காவிரியில் தமிழகத்திற்
உரிய நீரின் அளவைக் குறைத்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டிப்போம்!
அன்பார்ந்த
உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!
கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி காவிரி
நடுவர்மன்ற இறுதி தீர்ப்பின் மேல்முறையீட்டு வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்த தனது
தீர்ப்பில் தமிழகத்திற்கான 14.75 டி.எம்.சி தண்ணீரைப் பறித்து பெங்களூர் குடிநீர் என்று
கூறி கர்நாடகத்திற்குக் கொடுத்து தமிழகத்தை வஞ்சித்துவிட்டது. கர்நாடக அரசாங்கமோ காவிரி
மேலாண்மை வாரியம் அமைக்கும் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை ஏற்க மறுத்து காவிரி முழுவதும்
தங்களுக்கே சொந்தம் என்று இனவெறியோடு செயல்படுகிறது. உச்சநீதிமன்றமோ, ஹெல்சிங்கி கோட்பாட்டின்
அடிப்படையில் காவிரிபாயும் மாநிலங்களுக்கு சமபங்கீடு, மேலாண்மை வாரியம் என்ற தீர்ப்பை
அளித்துவிட்டு, கேம்பியோன் விதிகள் மற்றும் பெர்லின் விதிகளைக் காட்டி காவிரி நான்கு
மாநிலங்களின் சொத்து என்பதற்குப் பதிலாக தேசிய சொத்து என்று அறிவித்து பன்னாட்டு, உள்நாட்டு
கார்ப்பரேட் நலன்களுக்கு காவிரி நீரை தாரை வார்த்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த
தீர்ப்பு தமிழகத்தை மட்டுமல்ல இந்தியா முழுவதையும் தண்ணீர் பிரச்சினையில் ஒரு கடும்
நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
தமிழகத்தை
வஞ்சிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு!
காவிரி நடுவர்மன்றம் ஹெல்சிங்கி
கோட்பாட்டின் அடிப்படையில் நிலத்தடி நீரை கணக்கில் கொள்ளவில்லை என்றும், காவிரி பாயும்
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீர் 20 டி.எம்.சி நீரையும் கணக்கில்
கொண்டு பெங்களூரு குடிதண்ணீரின் தேவைக்காக என்று கூறி தமிழகத்தின் 14.75 டி.எம்.சி
நீரை எடுத்து கர்நாடகாவுக்கு கொடுத்துள்ளது உச்சநீதிமன்றம்.