Sunday, July 16, 2017

இந்துத்துவ பாசிச மோடிஅரசே! இறைச்சிக்கான மாடு,ஒட்டகம் விற்பனை தடைச் சட்டத்தைத் திரும்பப் பெறு!


இந்துத்துவ பாசிச மோடிஅரசே!
இறைச்சிக்கான மாடு,ஒட்டகம் விற்பனை
தடைச் சட்டத்தைத் திரும்பப் பெறு!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயக வாதிகளே!
இந்துத்துவ பாசிச மோடி அரசு விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து ஒரு மனிதவதைச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. “கால்நடை விதிகள் ஒழுங்காற்று சட்டம்-2017” எனும் இச்சட்டப்படி பசுக்கள், காளை, எருமை மற்றும் ஒட்டகங்களை இறைச்சிக்காக சந்தையில் விற்கவும், வாங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இளம் கால்நடைகளை சந்தைக்கு கொண்டு வரக்கூடாது. கால் நடைச் சந்தைகளுக்கு கொண்டு வரப்படும் கால்நடைகள் இறைச்சிக்காக விற்கவோ வாங்கவோ வரவில்லை என ஒப்புதல் அளிக்க வேண்டும். கால்நடை விற்பவர், தான் ஒரு விவசாயிதான் என்பதற்கான ஆவணங்களை வைத்திருக்கவேண்டும் என பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது நேரடியாக மாட்டிறைச்சி உண்பதற்கு தடை விதிக்கவில்லை என்றாலும், மறைமுகமாக அதற்குத் தடை விதிப்பதே ஆகும்.
இச்சட்டம் ஒருபுறம் கால்நடைகளின் விற்பனையை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதோடு தோல்தொழிலை நம்பியுள்ள பல லட்சக்கணக்கானோரின் பிழைப்பில் மண்ணை அள்ளிப்போடுகிறது. மறுபுறம் பசு புனிதம் என்று கூறி ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க கும்பலின் இந்துத்துவ ஒற்றைக் கலாச்சாரத்தை இசுலாமியர் உள்ளிட்டு சிறுபான்மை மதத்தினர் மற்றும் தலித் மக்கள் மீது திணிப்பதாகும். ஒருவர் எதை உண்ணவேண்டும், எதை உடுத்தவேண்டும், எதைப் பேசவேண்டும் என அரசே தீர்மானிப்பது பாசிசத்தின் வெளிப்பாடாகும். மோடி கும்பல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஏகாதிபத்திய புதியகாலனிய புதியதாராளக் கொள்கைகளை மூர்க்கத்தனமாக அமல்படுத்துகிறது. அதற்கு எதிரான மக்கள் போராட்டங்களை திசைதிருப்ப இந்துத்துவ பாசிசத்தை ஏவிவருகிறது. பசுவதை தடைச்சட்டம், பொதுசிவில் சட்டம், லவ்ஜிகாத் தடை என பல்வேறு பாசிச சட்டங்களின் தொடர்ச்சியாகவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம், மனித உரிமைகளுக்கு எதிரானதும் இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கும் எதிரானதாகும். இந்திய அரசியல் சட்டத்தின் 48-வது பிரிவு, வேளாண்மை தொழில் முன்னேற்றத்திற்காக பசுக்களையும் காளைகளையும் பாதுகாக்க வேண்டும் என கூறுகிறது. ஆனால், அச்சட்டம் பயன்படாத பசு மற்றும் காளைகளைக் கொல்வதை குற்றமாக்கவில்லை. 1960 ஆம் ஆண்டு விலங்குகள் வதைச் சட்டத்தின்படி மத வழிபாடுகளில் கால் நடைகளை பலியிடுவதும், உணவுக்காக கொல்லப்படுவதும் விதிவிலக்காகும். அத்துடன் விலங்குகள் வதை சட்டம் மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. மோடி அரசோ, சட்ட விரோதமாக எதேச்சதிகார முறையில் மாநில அரசுகளை கலந்துகொள்ளாமல் இந்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இச்சட்டம் அரசியல் சாசானப்படி செல்லாது.
கார்ப்பரேட் நலன்காக்கும் மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் சட்டம்
இந்தச் சட்டம் உள் நாட்டு இறைச்சி விற்பனைக்குத்தான் தடை விதிக்கிறது. ஆனால் ஏற்றுமதிக்கு தடை விதிக்கவில்லை. அதாவது உரிமம் பெறாத உள்நாட்டு கசாப்புக் கடைகளை மூடிவிடுவது. உரிமம் பெற்று மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்யும் கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யவே இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் கால்நடை வளர்ப்பு மற்றும் உணவு உற்பத்தியில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது எனும் மோடி கும்பலின் அறிவிப்பு பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு மாட்டுக் கறி ஏற்றுமதியை ஒப்படைப்பதாகும். நாடு தழுவிய அளவில் அரசே நடத்திவரும் ஆட்டுத்தொட்டி, தனியார் நடத்துகின்ற இறைச்சிக் கூடங்களுக்கு மூடுவிழா நடத்துவதுதான் உண்மையான நோக்கமாகும். இதனால், மாடு வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள், இறைச்சி மற்றும் தோல் பதனிடும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெரும்பான்மையான தலித் மற்றும் இஸ்லாமிய மக்கள், வர்த்தகர்கள், கால் நடைகளை கொண்டு செல்லும் வாகன தொழிலில் ஈடுபடுபவர்கள் என பல கோடி பேர் வாழ்வாதாரங்களை இழந்து நடுத்தெருவில் நிறுத்தப்படுவர். தோல் பொருள் ஏற்றுமதி கழகத்தின் அறிக்கைப்படி நாடுமுழுவதும் சுமார் 25 லட்சம் பேர் பாதிக்கப்படுவர். இதில் பெரும்பான்மையினர் தலித் மக்களேயாவர். தமிழகத்தில் ஆம்பூர், வாணியம்பாடி,வேலூர் மற்றும் திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இத்தொழில் மூடப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழப்பர். செல்லாக்காசு அறிவிப்பை தொடர்ந்து விவசாயிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் மீது மோடி கும்பல் தொடுத்துள்ள மற்றுமொரு தாக்குதல் இது.  உண்மையில் இது மக்களுக்கு சுகாதாரமான இறைச்சி வழங்குவது எனும் பெயரால், இறைச்சி வணிகம் முழுவதையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் தந்திரமேயாகும். 
கோமாதாவைக்’ கொன்று டாலர்களாக்கும் இந்துத்துவ கார்ப்பரேட்டுகள்
 ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வினரின் பசுபாதுகாப்பு என்ற முழக்கம் ஒரு கபட நாடகம்தான். உண்மையில் பா.ஜ.க-வை சார்ந்தவர்களும், அவர்களின் நண்பர்களும் முஸ்லிம் பெயர்களில் கம்பெனிகளைத் துவங்கி பசு உள்ளிட்ட மாட்டிறைச்சி ஏற்றுமதியில் ஈடுபடுகின்றனர். மோடியின் “கோமாதா அரசு, மாட்டிறைச்சி ஏற்றுமதியில் ஆறாவது இடத்திலிருந்த இந்தியாவை முதலிடத்திற்கு உயர்த்தியுள்ளது. பசுவதையில் உலகின் நம்பர் ஒன் நாடக இந்தியாவை மாற்றிய பெருமை மோடியைத்தான்சேரும். அல்கபீர், அரேபியன் எக்ஸ்போர்ட், விரிஸி, கிளிஙி, அல்நூர் மற்றும் ஸ்டாண்டார்ட் எக்ஸ்போர்ட் போன்ற இஸ்லாமிய பெயர்களை வைத்துக்கொண்டு, முறையே சபர்வால், சுனில்கபூர், மதன், அரோரா, சுனில்தத், கமல்வர்மா போன்ற இந்துமதத்தைச் சார்ந்த கார்ப்பரேட் முதலாளிகளால் நடத்தப்படும் நிறுவனங்கள்தான் இறைச்சி ஏற்றுமதியில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவை அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் பாஜக ஆசியுடன் செயல்படும் நிறுவனங்கள் ஆகும்.
2013-14 நாடாளுமன்றத் தேர்தலில் கார்பரேட் கும்பல் பல்லாயிரம் கோடி ரூபாய்களை செலவழித்து மோயை பிரதமராக்கின. மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு ரூபாய் 2.5 கோடி தேர்தல் நிதி கொடுத்துள்ளன. தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் இந்த கார்ப்பரேட்டுகள் நலன்களுக்காக சட்டம் கொண்டுவந்து, மக்களின் வாழ்வாதாரங்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்துகிறார் மோடி. மேலும், இத்தகைய சட்டங்கள் மூலம் ஆர்.எஸ்.எஸ் கும்பல் கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வது மட்டுமல்ல, தங்களது இந்துராஷ்ட்டிரக் கொள்கைகளை நிறைவேற்ற நடத்தும் மத சாதிவெறி கலகங்களை சட்டபூர்வமாக்கிக் கொள்கின்றன. கார்ப்பரேட்டுக்கள் ஊதும் மகுடிக்கு ஆடும் நச்சுப் பாம்புகள்தான் சங்பரிவாரங்கள். சொல்லிலே பசு பாதுகாப்பு. செயலிலே பசு கறி ஏற்றுமதி. இதுவே சங்பரிவாரங்களின் உண்மை முகம்.
நாடுமுழுதும் ‘பசுகாப்பாளர்களின்’ கொலைவெறித் தாக்குதல்கள்
மோடிக் கும்பல்  ஆட்சிக்கு வந்த பிறகு உணவுக்குத் தடை, புத்தகங்களுக்குத் தடை,திரைப்படங்களுக்குத் தடை, பகுத்தறிவு மற்றும் சீர்திருத்தக் கருத்துக்களை எழுதும் எழுத்தாளர்களை கொலை செய்வது போன்ற பாசிச தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. பாஜக ஆளும் மாநில அரசுகளின் கீழ், “பசு பாதுகப்பாளர்கள்(நிஷீuஸிணீளீsலீணீளீs) என தம்மைத்தாமே அறிவித்துக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்.கொலைகார குண்டர்படை, தமது இந்துத்துவ அரசியல் பண்பாட்டை இஸ்லாமியர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் மீது திணிப்பதற்கு சட்டவிரோத கொலைவெறித் தாக்குதல்களில் ஈடுபடுகின்றன. மத, சாதி கலவரங்களை நடத்துகின்றன.
2015ல் உ.பி.யில் ஆட்டுகறி வைத்திருந்த அக்லாக் எனும் இஸ்லாமியரை, மாட்டுக்கறி வைத்திருந்ததாக சங்பரிவார் கும்பல் கொலை செய்தது. மார்ச் 2016ல் ஜார்கண்டில் இரண்டு இஸ்லாமிய கால்நடை வர்த்தகர்கள் இக்கும்பலால் தூக்கில் தொங்கவிடப் பட்டார்கள். அதே ஆண்டு ஜூலை மாதம் குஜராத்தின் ஊனான் மாவட்டத்தில் செத்த மாட்டின் (பசு) தோலை உரித்ததற்காக தாழ்த்தப்பட்டவர்கள் ஏழு பேர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது இந்த குண்டர்படை. ராஜஸ்தானில் ஏப்ரல் 2017ல் பசுவை ஏற்றிச் சென்றார் என பெலுகான் எனும் இசுலாமியர் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளானார். அண்மையில் கூட, டெல்லியில் ஜூனைத் எனும் 19-வயதே நிரம்பிய இளைஞரை மாட்டுக்கறி தின்பவன்தானே என்று இழிவு படுத்தி துடிக்க துடிக்க கத்தியால் குத்தி கொன்றுள்ளது இந்த கொலைக்கார கும்பல். நாட்டின் புனித விலங்கு என பசுவை அடையாளப்படுத்தி, சட்ட விரோதமாக யாரை வேண்டுமானாலும் கொல்ல இந்த குண்டர் படை அலைகிறது. நாடு முழுதும் இக்கும்பலின் சட்டவிரோத கொலைகளும் சூறையாடல்களும் அதிகரித்து வருகின்றன.
பல்வேறு மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ்-ன் பசுகாப்பாளர்கள் எனும் இக்கொலை காரகும்பல் மாடுகளை விற்பனைக்கு கொண்டு செல்பவர்கள் மீது நடத்தி வரும் தாக்குதல்கள், கொலைகள், சூறையாடல்களின் பின்னால் பொருளாதார நலன்கள் அடங்கியுள்ளன. இந்துத்துவ இறைச்சி கார்ப்பரேட்டுகளுக்கு போட்டியாளர்களை ஒழிப்பதுதான் அவர்களின் நோக்கமாகும்.
மோடியோ இக்கொலைகளை கண்டிக்க மறுக்கிறார். பாஜகவும் , பாஜக ஆளும் மாநில அரசுகளும் இந்த கொலைக்கார கும்பலுக்கு ஆதரவு தருகின்றன. பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன்சிங் பசுவை துன்புறுத்துவோரை தூக்கில் போடவேண்டும் என பகிரங்கமாகவே அச்சுறுத்துகிறார். குஜராத் முதல்வரோ மாட்டைக் கொல்வதும் மனிதனைக் கொல்வதும் ஒன்றே என்று கூறுகிறார். ராஜஸ்தான் மாநில மந்திரியும், அம்மாநில காவல்துறை தலைவரும் பெலுகானை கொன்ற கொலைக்காரர்களை அறிவியல் பூர்வ ஆதாரம் இல்லை என்று கூறி பாதுக்காக்கின்றனர். மாடுகளைக் கொல்வது மனிதரைக் கொல்வதை விட பெரும் குற்றம் என்று கூறி மனிதர்களை வதை செய்வதை நியாயப்படுத்துகின்றனர். யார் பாதிக்கப்பட்டார்களோ அவர்கள் சட்டத்தின் முன்பு குற்றவாளிகளாக ஆக்கப்படுகிறார்கள். யார் கொலைக்காரர்களோ அவர்கள் சட்டத்தால் பாதுக்கப் படுகிறார்கள். சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு வன்முறையில் ஈடுபடுவதே சட்டமாக்கப்பட்டு வருகின்றது. பாஜக மந்திரிகள் வழங்கிவரும் மேற்கண்ட சட்டவிரோத தீர்ப்புகள், சட்டத்தையே கேவலப்படுத்துகிறது. கொலைகாரர்களுக்கு அரசாங்கம் அளித்து வரும் ஆதரவு , கொலைக்கார கும்பல் சட்டத்தையே தன் கையில் எடுத்துக்கொள்ளும் தைரியத்தை தந்துள்ளது. நாடுமுழுவதும் இக்கும்பல் கொலைவெறி தாக்குதலை தீவிரப்படுத்துகின்றன. இந்தப் பாசிச படுகொலைகள் அனைத்தும் பசு புனிதம் என்ற பெயரால் நடத்தப்படுகின்றன.
பசு புனிதம் எனும் மோசடி
ஆரம்ப காலத்தில் இருந்தே இந்துக்கள் பசுவை புனிதமாக கருதி வணங்கிவந்தார்கள் எனவும், மாட்டிறைச்சி உண்ணும் பழக்கத்தை இஸ்லாமியர்கள்தான் துவக்கி வைத்தார்கள் எனவும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் குற்றம் சுமத்துகிறது. இது உண்மைதானா? பார்ப்பனர்கள் பசுவைக் கொன்று தின்றார்கள் என்பதற்கான ஆதாரத்தை வரலாற்று ஆய்வாளர் திரு டி.என்.ஜா இந்தக் கூற்றை மறுத்து பின்வருமாறு கூறுகிறார்.
வேத காலங்களில் விலங்குகளை பலி கொடுப்பது பொதுவான பழக்கமாக இருந்தது. அசுவமேத யாகத்தின் முடிவில் 21 பசுக்கள் பலியிடப்பட்டன. மகாபாரதத்தில் தினமும் இரண்டாயிரம் பசுக்கள் வெட்டப்பட்டு அவற்றின் இறைச்சி தானியங்களுடன் பார்ப்பனர்களுக்கு விநியோகிக்கப்பட்டதை அது குறிப்பிடுகிறது. மனுஸ்மிருதி, (கிமு 200-கிபி 200) பட்டினியில் இருந்து தப்பிக்க மாட்டு இறைச்சி மற்றும் நாய் இறைச்சியை சாப்பிட்ட பார்ப்பனர்கள் பற்றிய ஆதாரங்களைத் தருகின்றது. மேலும், 19ஆம் நூற்றாண்டில் கூட, சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் தங்கி இருந்தபோது மாட்டிறைச்சி சாப்பிட்டதாக சொல்லப்படுகிறது. உண்மையில் இன்றும் கூட மாட்டிறைச்சியை உலகில் அதிகமாக கிறித்துவர்களும், ஹீப்ருக்களும்தான் சாப்பிடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் கும்பல் இஸ்லாமியர்களும் தாழ்த்தப் பட்டவர்களும்தான் அதிகமாக மாட்டிறைச்சி சாப்பிடுவதாகவும் பொய் பேசுகிறது. பசு புனிதம் என்று கூறி இந்துமத பார்ப்பனிய மேலாதிக்கத்தை இசுலாமியர்கள் மீதும் தலித்துகள் மீதும் திணிக்கிறது.
பசுவதை தடைச் சட்டத்தையும், இறைச்சி விற்பனைக்கான தடைச் சட்டத்தையும் எதிர்த்துப் போராடுவோம்
ஆர்.எஸ்.எஸ் கும்பல் கூறுவது போல பசு புனிதமானதும் அல்ல. அல்லது அக்கும்பல் பசு நலனுக்காக போராடுகிறோம் என்பதும் உண்மையல்ல. அருணாச்சலப் பிரதேசம், கோவாவிலும், மேகாலயாவிலும் பா.ஜ-கட்சியே இச்சட்டத்தை எதிர்க்கிறது. அவர்களுக்குள்ளேயே கடும் முரண்பாடுகள் நிலவுகிறது. உண்மையில் பாஜகவும், சங்பரிவாரங்களும் காரப்பரேட் நலன்களுக்காத்தான் போராடுகிறார்கள். ஆனால் அதை மூடிமறைத்து பசுவின் பேரால் தங்கள் இந்துத்துவக் கொள்கைகளை அமல்படுத்த இசுலாமியர்கள் மீதும் தலித்துகள் மீதும் பாசிச தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுகின்றனர்.
50ஆம் ஆண்டுகளில் இந்திய அரசியல் சட்டம் எழுதும்போது, இந்திய வேளாண்துறையின் வளர்ச்சிக்காகவே, பசு காளைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என கூறப்பட்டது. ஆனால், இன்று எந்திரமயமாக்கல் வளர்ச்சி அடைந்துள்ளதன் காரணமாக மாடுகள் உழவுத் தொழிலில் ஈடுபடுத்தப்படுவது பெருமளவில் குறைந்துவிட்டது. எனவே இன்று மாடுகள் பாலுக்காகவும் இறைச்சிக்காகவும் மட்டுமே தேவைபடுகிறது.
மாடுகளை கொல்வதைத் தடைசெய்வதால் மாட்டுவளம் பெருகும் என்ற சங்பர்வாரங்களின் வாதம் ஒரு மோசடியேயாகும். மாறாக இறைச்சிக்காக மாடுகள் வளர்ப்பதை அனுமதிக்கும்போதுதான் மாட்டு வளம் பெருகும் என்பதே உலகின் பல நாடுகளின் அனுபவமாகும். பசுவதை தடை அமலில் உள்ள மகராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தீனி கிடைக்காமல் பல ஆயிரம் மாடுகள் வீதிகளிலும் கோசாலைகளிலும் எலும்பும் தோலுமாய் மாறி மாண்டுவருகின்றன. ஒரு புறம் தீனிகிடைக்காமல் மாடுகள் மாள்வதால் புரதச் சத்து வீணாகி சுற்றுச்சூழலையும் மறுபுறம் உலகிலேயே இந்தியாவில்தான் அதிகமாக அதாவது பல லட்சம் பச்சிளம் குழந்தைகளும் சிறார்களும் புரதச்சத்தின்றி இறக்கின்றன. இறைச்சி தடைச்சட்டத்தால் மாட்டை விற்க முடியாத சூழல் ஏற்பட்டால், பெரும்பாலான விவசாயிகள் மாடு வளர்ப்பையே விட்டுவிடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஏற்கனவே விவசாய வீழ்ச்சியால் தற்கொலைக்கு தள்ளப்படும் விவசாயிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இதனால் , இறைச்சிக்கும் பாலுக்கும் அன்னிய நாடுகளிடம் கையேந்தும் நிலை ஏற்படும். இதுவே ஆர் எஸ் எஸ் கும்பலின் உண்மையான குறிக்கோளும் ஆகும். மாடுகளும், மனிதர்களும் செழித்து வளர வேண்டுமானால் இறைச்சிக்காக கால்நடைகளை விற்பதற்கான தடைகளை உடைத்தெறியப்பட வேண்டும். சங் பரிவாரங்களின் சதிகள் முறியடிக்கப்பட வேண்டும்.
இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ வாங்கவோ கூடாது என்று மோடி அரசு கொண்டுவந்துள்ள சட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அச்சட்டத்திற்கு தடைவிதித்து பின்வருமாறு உத்தரவிட்டது.
இந்தியாவில் 1960-ல் கொண்டு வரப்பட்ட மத்திய விலங்குகள் வதை தடை சட்டத்தின் பின்புலத்தை பார்க்கும்போது மனுதாரர்கள் தரப்பு வாதத்தில் வலு இருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது. மத்திய அரசின் வாதத்தை முழுமையாக ஏற்க இயவில்லை. ஏனெனில் இந்த தடை சட்டத்தின் மூலம் பிறப்பிக் கப்படவில்லை. நிர்வாக உத்தரவின் மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாட்டிறைச்சிக்குத் தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க போதுமான அடிப்படை முகாந்திரம் உள்ளது.
விலங்குகள் வதை தடுப்பு மத்திய, மாநில அரசுகள் இணைந்த பொதுப்பட்டியலில் (கன்கரன்ட்) உள்ளது. அதே நேரத்தில் விலங்குகளை பலியிடுவது மாநில அரசின் தனிப்பட்டியலில் உள்ளது. இந்த பின்புலத்தில் புதிதாக கொண்டுவரப்பட்ட விதி மதசார்பற்ற நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்ட விதிகளுக்கு உட்பட்டதா என்று பார்க்க வேண்டியதுள்ளது. மேலும் இந்தச் சட்டம் மத்திய, மாநில அரசுகள் இணைந்த பொதுப்பட்டியல் இருப்பதையும் கவனிக்க வேண்டியதுள்ளது. இத னால் மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டியது அவசியம் என நீதிமன்றம் கருதுகிறது” என உத்தரவிட்டது.
இந்த நீதிமன்ற தடைய நீக்கவேண்டும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது. 
அதில் மதுரை நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை விதிக்க முடியாது என்றும் மத்திய அரசு தனது உத்தரவை யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் திருத்த வேண்டும் என்றும் தலைமை நீதிபதி ஜே.எஸ். கெஹர் தலைமையிலான அமர்வு, மத்திய அரசின் புதிய உத்தரவை அமல்படுத்த அண்மையில் தடை விதித்தது. சட்டம் தடை விதிக்கப்பட்டாலும் பா ஜ க ஆளும் மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பேரில் ஆர் எஸ் எஸ் காடையர்களின் தாகுதல்கள் தொடர்கின்றன.
அருணாச்சலப்பிரதேசம், மேகாலயா, கோவா போன்ற பாஜக ஆளும் மாநில அரசுகளே இச்சட்டத்தை எதிர்க்கும்போது - தமிழகத்தை ஆளும் எடப்பாடி ஆட்சி மோடி கும்பல் கொண்டுவந்துள்ள இச்சட்டத்தை எதிர்க்க மறுக்கிறது. ஊழலில் தமிழகத்தை நம்பர் ஒன் மாநிலமாக மாற்றிய கிரிமினல் மாஃபியா அம்மா-வின் சீடர்களான ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், தினகரன் கோஷ்டியினர் ஊழல் வழக்கிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள இந்துத்துவ மோடி கும்பலின் எடுபிடியாக மாறி விட்டன. இந்துத்துவ பாசிச கும்பல் இசுலாமியர் மற்றும் தலித்துகளுக்கு எதிராக நடத்தி வரும் வன்முறைகளையும் கண்டிக்கக் கூட தயாரில்லை. தங்களின் ஊழல் மலிந்த ஆட்சியை பாதுகாத்துக் கொள்ள, தமிழகத்தையும் தமிழக மக்களையும் இந்துமத வெறி பாசிச கும்பலுக்கு பலியிட தயார் ஆகிவிட்டது.
எனவே, மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள விலங்குகள் வதைசட்டத்தை திரும்பப் பெற கோரி இச்சட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள், இசுலாமிய கிறித்துவ மதச் சிறுபான்மையினர், தாழ்த்தபட்ட-பழங்குடி மக்கள், பால் உற்பத்தியாளர்கள், தோல்சார்ந்த சிறு வணிகர்கள், இறைச்சி வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் கீழ்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் ஓரணியில் திரளுமாறு அறைகூவி அழைக்கிறோம்.
இந்துத்துவப் பாசிச மோடி அரசே!
·        இறைச்சிக்கான மாடு,ஒட்டகம் விற்பனை தடைச் சட்டத்தை திரும்பப் பெறு!
·        கார்ப்பரேட் நலன்களைக் காக்கும் மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் சட்டத்தை எதிர்த்துப் போராடுவோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
தமிழ்நாடு.
10, ஜூலை -2017

No comments:

Post a Comment

விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.