நாடாளுமன்றவாத மாயையில் மக்களை ஆழ்த்தும்
தமிழக சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்!
முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து மக்களை மீட்க
மேநாளில் சூளுரைப்போம்!!
அன்பார்ந்த
உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!
உலகப் பொருளாதாரம் தொடர்ந்து மந்த நிலையில் நீடிப்பதோடு, அது இந்தியப் பொருளாதாரத்தைக் கடுமையாக
பாதித்து வருகின்ற ஒரு சூழலில்; தமிழக சட்டமன்றத்திற்கான பொதுத்
தேர்தலை எதிர்கொண்டுள்ள ஒரு சூழலில் இவ்வாண்டு மேநாளை எதிர்கொள்கிறோம். பலமுனைப் போட்டிகள் நிலவும் இத்தேர்தலில் பல்வேறு கூட்டணிகள் வேலைவாய்ப்பைப்
பெருக்குவோம், விலைவாசியைக் குறைப்போம், விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்போம் என வாக்குறுதிகளை வாரி வழங்குகின்றன.
இவ்வாறு இக்கட்சிகள் வழங்கும் வாக்குறுதிகளை அவர்கள் ஆட்சி அமைத்தால்
நிறைவேற்றுவார்களா? அல்லது அவர்கள் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும்
அதிகாரம் தமிழக சட்டமன்றத்திற்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ உள்ளதா? என்பதை இன்றைய சர்வதேசிய, தேசிய அரசியல் பொருளாதார நிலைமைகளை
ஆய்வு செய்வதன் மூலமாகத்தான் புரிந்துகொள்ள முடியும்.
எட்டு ஆண்டுகளாகத் தொடரும் முதலாளித்துவ நெருக்கடி
2008-ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெடித்துக்
கிளம்பிய நிதி நெருக்கடி என்ற முதலாளித்துவ மிகு உற்பத்தி நெருக்கடியிலிருந்து மீள
முடியாமல் உலகப் பொருளாதாரம் இருண்டு வருகிறது. இன்றைய உலகப்
பொருளாதாரத்தின் தேக்கநிலை குறித்து, அண்மையில் (ஏப்ரல் 3) ஐ.எம்.எப். செயலாளர் கிறிஸ்டின் லாகர்டே கூறியதாவது:
“உலகப் பொருளாதாரத்தின் இயக்கம் நின்றுவிட்டது, அரசாங்கங்கள் நடவடிக்கையில் உடனடியாக இறங்க வேண்டும்” என்று எச்சரித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, “2007-2009 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில்
ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து உலகப் பொருளாதாரம் மீளவில்லை. மீட்சி
என்பது மிகவும் மெதுவாகவும், மிகவும் பலவீனமாகவும் உள்ளது.
வளர்ச்சியடைந்த நாடுகள் 2007-09 ஆம் ஆண்டுகளின்
நிதி நெருக்கடியின் பின் விளைவுகளை இன்னமும் எதிர்கொள்கின்றன. அதிகரித்துக் கொண்டே செல்லும் அரசாங்கக் கடன்கள், முதலீடுகள்
குறைந்துக் கொண்டே போவது, வேலையின்மை பெருகிக்கொண்டே செல்வது
எனும் வடிவில் எதிர்கொள்கின்றன. உலகப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த
வளர்ச்சி விகிதம் முந்தைய கணிப்புகளைவிட அதாவது 3.4 சதவீதத்தை
விட வீழ்ச்சியடையும்” என்று கூறுகிறார். அத்துடன் அரசாங்கங்கள் சீர்திருத்தக் கொள்கைகளைத் தொடர்வதுடன் கட்டமைப்புத்
துறைகளில் அரசாங்கமே முதலீடு செய்வதுதான் வளர்ச்சிக்கு வழி என வலியுறுத்துகிறார்.