மே நாள் வாழ்க!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!
உழைக்கும்
மக்களின் உரிமைகளுக்காகப் போராடி உயிரையும் கொடுத்த தியாகிகளின் நினைவைப் போற்றும்
நாளே இம் மே நாள். அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கும், இந்தியாவை அமெரிக்காவின்
புதிய காலனியாக மாற்றுவதற்கும் சேவை செய்யும் இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சியை எதிர்த்துப்
போராடுவதுதான் இம்மேநாளின் இந்திய மக்களின் சர்வதேசிய, தேசிய கடமையாகும்.
சரிந்துவரும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கம்
சோவியத்
சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப்பின், தனது தலைமையின் கீழ் ஒற்றைத் துருவ உலக
ஒழுங்கமைப்பைக் கட்டியமைக்கும் அமெரிக்காவின் கனவு தகர்ந்துவிட்டது. பயங்கரவாத எதிர்ப்பு
என்ற பேரில் தனக்கு அடிபணியாத நாடுகள் மீது ஆக்கிரமிப்புப் போர் தொடுத்து, பொம்மை ஆட்சிகளை
நிறுவுவதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் கிடைக்கும் எண்ணெய் வளத்தின் மீது தமது
கட்டுப்பாட்டை நிறுவுவது என்ற அமெரிக்காவின் திட்டம் தோல்வியை தழுவியுள்ளது. அமெரிக்காவின்
ஆக்கிரமிப்புப் போர்கள் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்கவில்லை.