ஏகாதிபத்திய யுத்த வெறியன்
ஒபாமா வருகையை எதிர்ப்போம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே ஜனநாயகவாதிகளே!
அமெரிக்க
ஜனாதிபதி பாரக் ஒபாமா, இந்துத்துவ பாசிச மோடியின் அழைப்பை ஏற்று இவ்வாண்டு குடியரசு
தினவிழா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளுகிறார். சாம்ராஜ்ஜிய சக்கரவர்த்திக்கு
குறுநில மன்னன் அளிக்கும் விருந்தைப்போல் தலைநகரமே வெள்ளை மாளிகையாக மாற்றப்பட்டு விழிபிதுங்கி
நிற்கிறது. 2012-ல் இரண்டாம் எலிசபெத் ராணியை வரவேற்க அரசு அலுவலகங்களில் ’சுதந்திர’ தினக் கொண்டாட்டங்களை கைவிட்டது
மன்மோகன் கும்பலின் காங்கிரஸ் ஆட்சி. ‘குடியரசு’ தினத்தன்று எஜமானன் ஒபாமாவை மலர்ப் பல்லக்கில்
சுமந்து வருவதன் மூலம் புதியகாலனிய சேவையில் மன்மோகன் கும்பலையும் விஞ்சிவிட்டது மோடிகும்பல்.
ஒபாமாவின்
இந்திய வருகை மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டதாகும். அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்குப்
போட்டியாக வளர்ந்து வரும் சீனாவை எதிர்த்து இந்தியாவை தனது கூட்டணிக்குள் கொண்டுவருவது;
அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்குச் சேவை செய்யும் அமெரிக்க-இந்திய இராணுவ ஒப்பந்தத்தை
மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது; இந்திய நாட்டின் நிதித்துறை, பாதுகாப்புத் துறை,
அணுசக்தித் துறை போன்ற அனைத்துத் துறைகளையும் அமெரிக்கப் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு
திறந்துவிட நிர்ப்பந்திப்பதுடன் இந்துத்துவ மதவெறிப் பாசிச அமைப்புகளுக்கு ஊக்கம் அளித்தல்
போன்றவைகளே அவை.
அமெரிக்காவின் சரிவும் - சீனாவின் வளர்ச்சியும்
சோவியத்
சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு அமெரிக்கா தனது உலக மேலாதிக்க ஒற்றைத்துருவ
உலக ஒழுங்கமைப்பைக் கட்டியமைப்பதில் படுதோல்வி அடைந்துள்ளது. பயங்கரவாத ஒழிப்பு என்ற
பேரால் தமக்கு அடிபணியாத நாடுகள் (ஆப்கன், ஈராக்) மீது ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்தது.
தனது ஆதரவு
நாடுகளிலும் கூட (எகிப்து, லிபியா, ஏமன்) அந்த சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிரான மக்களின்
கலகங்களைப் பயன்படுத்திக் கொண்டு ‘ஜனநாயகம்’, ‘மனித உரிமை’ என்ற பேரால் ஆட்சிக் கவிழ்ப்பு
செய்து பொம்மை ஆட்சியை உருவாக்கியது. ரஷியாவிலிருந்து பிரிந்து வந்த சின்னஞ்சிறு நாடுகளில்
பலவண்ணப் புரட்சிகள் நடத்தி ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்டது. எனினும் ஆப்கனிலும், ஈராக்கிலும்
தாலிபான் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புகளின் எழுச்சிகளின் விளைவாக அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப்
போர் நீட்டித்துக் கொண்டே செல்கிறது. ஈரான், சிரியா போன்ற நாடுகளில் அமெரிக்காவின்
கனவு பலிக்கவில்லை. இதற்கெல்லாம் தடையாக உள்ள ரஷியா மீது உக்ரைன் பிரச்சினையைக் காட்டி
பொருளாதாரத் தடையை விதித்தது. ஆனால், கொடிய ஆக்கிரமிப்புப் போரும், பொருளாதாரத் தடைகளும்
அமெரிக்க ஏகாதிபத்தையே திருப்பித் தாக்கியுள்ளன.
2008ல்
அமெரிக்காவில் உருவான பொருளாதார நெருக்கடி மென்மேலும் ஆழமடைந்து வருகிறது. இன்று அமெரிக்கா,
வரலாற்றில் முன்னுதாரணமே இல்லாத அளவிற்கு பெரும் கடனில் மூழ்கி உள்ளது. 2013ல் 16 டிரில்லியன்
டாலர்களாக இருந்தது 2014-ல் 17 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்துவிட்டது. அதாவது ஆண்டுக்கு
1 டிரில்லியன் டாலர் என அமெரிக்கக் கடன் அதிகரித்து வருகிறது. இத்தகைய கடன் சுமைகள்
டாலரை சர்வதேச நாணயமாக நிலை நிறுத்துவதன் மூலம் உலக மக்களின் தலையில் அமெரிக்காவால்
சுமத்தப்பட்டு வந்தது. ஆனால் ரஷியா, சீனாவின் வளர்ச்சி அமெரிக்காவின் இத்தகைய மேலாதிக்க
நோக்கங்களை சிதைத்து வருகிறது.
இன்று
ஏகாதிபத்திய சக்திகளின் சமனிலையில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலக அளவிலான ஒட்டுமொத்த
உற்பத்தியில் அமெரிக்காவின் பங்கு 1950களில் 50 சதவீதமாக இருந்தது 1980களில் 24 சதவீதம்
என சரிபாதியாக வீழ்ச்சியடைந்தது. அது தற்போது 17.1 சதவீதமாக மேலும் சரிந்துவிட்டது.
ஆனால் சீனாவின் பங்கு 14.9 சதவீதமாக உயர்ந்தது மட்டுமல்ல 2017-ல் அது அமெரிக்காவை விஞ்சிவிடும்
என்ற நிலையில் உள்ளது. அத்துடன் சீனா சோசலிசத்திற்கு துரோகமிழைத்து முதலாளித்துவத்துக்கு
மாறியதோடு கடந்த முப்பது ஆண்டுகளாக 10 சதவீத தொடர் வளர்ச்சியை கண்டுள்ளது. மேலும் பிரேசில்,
ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற ‘பிரிக்ஸ்’ (BRICS) நாடுகள்
உலக உற்பத்தியில் 30 சதவீதத்தையும் தாண்டிவிட்டன.
அமெரிக்கா
மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்திய வாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஐ.எம்.எப்., உலக வங்கி,
உலக வர்த்தகக் கழகம் ஆகியவற்றுக்கு மாற்றாக பிரிக்ஸ் நாடுகள் தனிவங்கியை உருவாக்கியுள்ளன.
சீனா தனது யுவான் நாணயத்தை அடிப்படையாகக் கொண்டு ‘ரென்பின்’ என்ற சர்வதேச நாணயப் பரிவர்த்தனைக்கான
ஏற்பாடுகளை செய்துவருகிறது. ரஷ்யா, சவுதி அரேபியா, ஈரான் போன்ற நாடுகளுடனும், ஜெர்மனி,
இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளுடனும் டாலரை தவிர்த்து தனது சொந்த நாணயத்தின் மூலமே
வர்த்தகத்திற்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. மேலும் சீனா, பெருமளவில் தங்கத்தை வாங்கி
‘ரென்பின்’ மயமாக்கத்தின்
மூலம் ஷாங்காயை மையமாகக் கொண்டு ஒரு மூலதனச் சந்தையை உருவாக்கத் திட்டமிட்டு வருகிறது.
சீனாவின்
இத்தகைய வளர்ச்சிப் போக்கு தனது மேலாதிக்க நலன்களுக்குக் குழிபறிக்கும் செயல் என அமெரிக்கா
கருதுகிறது. எனவே சீனாவை அடக்கி வைப்பதன் அவசியத்திலிருந்து ஆசிய-பசிபிக் திட்டத்தின்
அடிப்படையில் ஆசியாவில் தனது இராணுவத்தைக் குவித்துவருகிறது.
ஆசிய மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் ஆசிய
பசிபிக் திட்டம்
அமெரிக்க
ஏகாதிபத்தியம் பசிபிக் பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு (Trans Pacific Partnership - TPP) உருவாக்குவதன்
மூலமும்; ஆசிய பசிபிக் பகுதியில் தனது இராணுவ வலிமையை கூட்டுவதன் மூலமும் தனது மேலாதிக்கத்திற்கு
போட்டியாக வளர்ந்துவரும் சீனாவை தடுத்து நிறுத்த திட்டமிட்டுள்ளது. பசிபிக் பிராந்திய
நாடுகளின் கூட்டமைப்பு என்ற பேரால் சீனா நீங்கலாக ஜப்பானை இணைத்துக்கொண்டு 11 நாடுகளை
உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பை அமெரிக்கா உருவாக்கி வருகிறது. அதில் இந்தியா நேரடியாக
பங்கேற்க முடியாவிட்டாலும் இருதரப்பு உடன்படிக்கை மூலம் இந்தியாவுடன் தனது வர்த்தக
உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள அமெரிக்கா முயற்சிக்கிறது.
மேலும்
அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளை மத்திய கிழக்கிலிருந்து ஆசிய மையத்திற்கு மாற்றுகிறது.
அமெரிக்காவின் கப்பற்படை, விமானப்படைகளின் 60 சதவீதத்தை ஆசிய பசிபிக் பகுதியில் குவித்து
வருகிறது. இப்பிரதேசத்தில் அமெரிக்காவின் இராணுவக் கூட்டுக்களை நீட்டிப்பது, அமெரிக்க
இராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களை ஏற்றுமதி செய்வது, இப்பிராந்தியத்தில் இராணுவ
பயிற்சிகள் மேற்கொள்வது என்று ஆசியாவை ஒரு போர்க்களமாக மாற்றுவதற்கு முயற்சி செய்கிறது.
ஏகாதிபத்திய வாதிகளின் போட்டியின் விளைவாக ஆசியாவை போர்மேகம் சூழ்ந்துவருகிறது.
அமெரிக்காவின்
தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியங்களுக்கும் ரஷிய, சீன ஏகாதிபத்திய வாதிகளுக்கும்
இடையிலான போட்டி உலகத்தை மறுபங்கீடு செய்வதற்கான போட்டியேயாகும். ரஷியா சீனா போன்ற
நாடுகள் தற்காப்புக்காக அல்ல உலக மறுபங்கீட்டிற்காகவே போராடுகின்றன. எனவே உலகை மறுபங்கீடு
செய்து கொள்வதற்கான இவ்விரு அணிகள¤ல்
எந்த ஒரு அணியின் பக்கமும் சர்வதேச பாட்டாளி வர்க்கமும் ஒடுக்கப்பட்ட நாடுகளும் அணிசேர
முடியாது. ஆனால் இந்துத்துவ மோடி கும்பலோ கூட்டுசேராக் கொள்கைகளைக் கைவிட்டு அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் அணியில் சேருவதற்கு தயாராக உள்ளது. அதனடிப்படையில் தான் மோடி தனது
அமெரிக்கப் பயணத்தின் போது அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு சேவை செய்யும் அமெரிக்க-இந்திய
இராணுவ ஒப்பந்தத்தை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.
அமெரிக்க - இந்திய இராணுவ ஒப்பந்தம்
இவ்வொப்பந்தமானது,
அமெரிக்காவின் ஆசிய மேலாதிக்கத்திற்காக சீனாவுக்கு எதிராக இந்தியாவை பயன்படுத்துவது;
பயங்கரவாத எதிர்ப்பு என்ற பேரால் உலக மேலாதிக்கதிற்காக அமெரிக்கா தொடுக்கின்ற ஆக்கிரமிப்புப்
போர்களுக்கு இந்தியா ஆதரவளிப்பது; பேரழிவு ஆயுதங்களைத் தடுப்பது என்ற பேரில் சர்வதேசக்
கடல் எல்லையில் மூன்றாவது நாட்டுக் கப்பலை அமெரிக்காவுடன் சேர்ந்து இந்தியா சோதனையிடுவது;
ஆசிய பசிபிக் கடல் எல்லையில் அமெரிக்காவின் வர்த்தக மற்றும் இராணுவக் கப்பல்களுக்கு
இந்தியா காவல்காப்பது; இந்தியா அமெரிக்காவிடமிருந்து ஆயுதத் தளவாடங்களை கொள்முதல் செய்வது
போன்ற அம்சங்களை உள்ளடக்கியதாகும். சுருங்கச் சொன்னால் இந்திய இராணுவம் அமெரிக்காவின்
உலக மேலாதிக்கத்திற்கு சேவை செய்யும் ஒரு எடுபிடி இராணுவமாக மாறவேண்டும் என்பதே இந்த
ஒப்பந்தத்தின் சாரம். இந்த ஒப்பந்தத்தை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது என்ற மோடி
கும்பலின் முடிவு அமெரிக்காவின் மேலாதிக்கப் போர் என்ற தேர்காலில் இந்தியாவை பிணைப்பதே
யாகும். இது இந்திய மக்களுக்கும், உலக மக்களுக்கும் செய்யும் மாபெரும் துரோகமாகும்.
இந்தியாவின் மீதான அமெரிக்காவின் புதியகாலனிய
ஆதிக்கம்
அமெரிக்க
ஒபாமா இந்திய வருகையின் போது நிதித்துறை, பாதுகாப்புத் துறை, அறிவுசார் சொத்துரிமை
(IPR), விவசாயம், வர்த்தகம், பசுமைத் தொழில்நுட்பம், அணுமின்சக்தி மற்றும் விண்வெளி
போன்ற அனைத்துத் துறைகளையும் அமெரிக்காவின் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு திறந்துவிடுவதற்கான
பேச்சுவார்த்தைகள் நடக்க இருக்கிறன.
ஏற்கனவே
மோடி அரசாங்கம் “வளர்ச்சி”,
“இந்தியாவை உற்பத்தி கேந்திரமாக”
மாற்றுவது என்ற ஜனரஞ்சகமான முழக்கங்களின் மூலம் அமெரிக்க பன்னாட்டுக் கம்பெனிகளின்
வேட்டைக்கு இந்தியாவைத் திறந்துவிடுகிறது. நாடாளுமன்ற அங்கீகாரம் இல்லாமலேயே காப்பீடு,
நிதித்துறை, பாதுகாப்பத் துறையில் 49 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிப்பதற்கும்; நிலக்கரிச்
சுரங்கங்களை ஏலம் விடுவதற்கும்; விவசாய விளைநிலங்களை அபகரித்து சிறப்புப் பொருளாதார
மண்டலம் அமைப்பதற்கும் அவசரச் சட்டத்தின் மூலம் அனுமதி அளித்துவிட்டது. மேலும் அறிவுசார்
சொத்துரிமைச் சட்டத்தை திருத்துவதோடு மருந்து தயாரிப்பிலும், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பதிலும்
100 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் நிர்ப்பந்தத்துக்கு
அடிபணிந்து விட்டது. இவ்வாறு ஆளும் தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்க நலன்களிலிருந்து
அனைத்துத் துறைகளையும் அமெரிக்க முதலாளிகளின் கொள்ளைக்குத் திறந்துவிட்டு நாட்டை சுடுகாடாக
மாற்றிவருகிறது.
மேலும்
அமெரிக்காவின் அணுமின் உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் அமைக்க இருக்கும் அணுமின்
நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் அந்த விபத்துக்கான நட்ட ஈட்டை வழங்க வேண்டும் என்பதை
மறுத்து வருகின்றன. இந்தியாவின் அணு உலை விபத்து சட்டத்தின் 17(b) பிரிவை முழுமையாக
நீக்க வேண்டும் என ஒபாமாவின் வருகையின்போது நிர்ப்பந்தம் கொடுக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே
போபால் விஷவாயு விபத்தில் பல்லாயிரக் கணக்கானோர் உயிரிழந்ததற்கே அமெரிக்க நிறுவனமோ,
அரசாங்கமோ இழப்பீடு எதுவும் வழங்காமல் ஏமாற்றியது. தற்போது அணு உலை விஷயத்தில் ஏமாற்றுவதையே
சட்டமாக்க நிர்ப்பந்தம் செய்கிறது. “அணு உலை என்றாலே ஆபத்து”, “கூடங்குளம் அணு உலையை இழுத்து
மூடவேண்டும்” என கூக்குரலிட்ட
உதயகுமார் கும்பல் அமெரிக்காவின் அடாவடித் தனத்தை மௌனமாக அங்கீகரிக்கிறது. இதன் மூலம்
அமெரிக்காவின் தொண்டு நிறுவனங்களின் துரோகம் அம்பலப்பட்டுவிட்டது.
இவ்வாறு
ஒபாமாவின் இந்திய வருகை, அனைத்துத் துறைகளிலும் அமெரிக்கப் பன்னாட்டுக் கம்பெனிகளின்
ஆதிக்கத்தை திணித்து இந்தியாவை அமெரிக்காவின் புதியகாலனி என்ற நுகத்தடியில் பூட்டுகிறது.
மோடி கும்பலோ வளர்ச்சி என்று பேசி அமெரிக்காவின் மேலாதிக்கத்துக்கும், இந்தியாவைப்
புதியகாலனியாக மாற்றுவதற்கும் சேவை செய்கிறது. இந்தத் துரோகத்தை மூடி மறைக்க இந்துத்துவப் பாசிசக் கொள்கைகளைத் தீவிரப்படுத்திவருகிறது.
மக்களை மத ரீதியாக மோதவிட்டு, பிளவுபடுத்திப் புதிய காலனி ஆதிக்கத்திற்கு சேவை செய்கிறது.
இந்து மதவாத ஆர்.எஸ்.எஸ். காவி கூட்டம் இந்திய அரசாங்கத்தில் கோலோச்சுகின்றன.
இந்துத்துவப் பாசிச சக்திகளுக்கு ஊக்கமளிக்கும்
ஒபாமா வருகை
இந்தியா
இந்துக்களின் நாடு என்றும், கிறிஸ்தவ இசுலாமிய சிறுபான்மை மதத்தினரும் கம்யூனிஸ்டுகளும்
தேசபக்தி இல்லாதவர்கள் என்றும் ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள் தேசபக்திக்கு விளக்கம் கொடுக்கின்றன.
ஆனால் அமெரிக்க கிறிஸ்துவ ஒபாமாவையும் அமெரிக்க முதலாளிகளையும் ராமனுக்கு இணையாக போற்றி
வரவேற்கின்றன. அமெரிக்க நிதி உதவி பெற்று தாய் நாட்டுக்குத் துரோகம் இழைக்கின்றன. மக்களின்
“முதன்மை” எதிரியான
அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய புதியகாலனி ஆதிக்கத்தை நடைமுறைப் படுத்துவதற்கு உதவுமென்ற
கண்ணோட்டத்துடன் உருவாக்கி வளர்ந்துவரும் பெரும் எண்ணிக்கையிலான இறை அருளாளர்களாலும்
அவர்களின் அமைப்புகளாலும் விரைந்து பல்கிப் பெருகிவரும் இவர்களின் நடவடிக்கைக்கு சர்வதேச அளவில் நிழற்குடையாக
இருந்து உதவி வருவது அதே அமெரிக்க ஏகாதிபத்தியம்தான்.
ஆர்.எஸ்.எஸ்.,
வி.எச்.பி. போன்ற இந்துத்துவ அமைப்புகளுடன் மறைமுகமாக உறவுகளுடைய சிறிய, நடுத்தர அளவிலான
நூற்றுக்கணக்கான அமைப்புகளுடன் இராமகிருஷ்ணா மிஷன், சின்மயா மிஷன், மாதா அமிர்தானந்தாமயி
அறக்கட்டளை, சாய்பாபாவின் பெரும் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு இந்து மதவாத நிறுவனங்கள்
அமெரிக்காவிடம் இருந்து ஏராளமாக நிதி உதவி பெறுகின்றன. இந்துத்துவச் சக்திகளின் உழைக்கும்
வர்க்க எதிர்ப்பு, ஏகாதிபத்திய அடிமைத்தனம் உள்ளிட்ட அரசியல் ஆழ்மனக் குரலுடன் தன்னார்வ
போர்வையில் உலாவந்து கொண்டிருக்கும் எண்ணற்ற இந்து அமைப்புகள் அமெரிக்க ஆதரவு திசையில்
பயணித்துக் கொண்டுள்ளன. ஆர்.எஸ்.எஸ். இன் பிதா மகனான கோல்வால்கரின் கனவும் இதுதான்.
எனவே இந்தியாவை
அமெரிக்காவின் புதிய காலனியாகவும், அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு சேவைசெய்யும் ஒரு
எடுபிடி நாடாகவும் மாற்றியமைக்க வருகைதரும் ஒபாமாவின் இந்திய பயணத்தையும், ஒபாமா -
மோடி கும்பலின் கூட்டுச் சதி திட்டங்களையும் எதிர்த்து கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில்
ஜனநாயக சக்திகளும் தேசபக்தர்களும் ஓர் அணயில் திரள அறைகூவி அழைக்கிறோம்.
ê அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை எதிர்ப்போம்!
ê ஜனநாயகத்தின் பேரால், மேலாதிக்கத்திற்குப்
பணிய மறுக்கும் அரசுகளைக் கவிழ்ப்பதை எதிர்த்துப் போராடுவோம்!
ê ஆசிய-பசிபிக் மண்டலத்தில் அமெரிக்க மேலாதிக்கத்தை
நிறுவ முயலும் ஒபாமாவின் கனவைத் தகர்ப்போம்!
ê புதிய தாராளக் கொள்கைகள் மூலம் இந்தியத் துணைக்
கண்டத்தை புதிய காலனியாக்கும் முயற்சிகளை முறியடிப்போம்!
ê ஏகாதிபத்திய யுத்த வெறியன் ஒபாமா - இந்துத்துவப்
பாசிச மோடி கூட்டணியை முறியடிப்போம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்,
தமிழ்நாடு
ஜனவரி 2015
No comments:
Post a Comment
விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.