Wednesday, August 20, 2014

புதியகாலனிய தாராளக் கொள்கைகளின் தோல்விகளால் காங்கிரசின் வீழ்ச்சியும் - உலகளாவிய அனுபவங்களும்


நூலினை பெற தொடர்புக்கு
பேசி : 9941611655;
மின் அஞ்சல் :
samaranpublisher@gmail.com;
samaranvelietagam@yahoo.com

உள்ளடக்கம்:

முன்னுரை

இந்தியப் பொருளாதாரத்தை பலவீனமடையச் செய்வது எது?

வெளியுறவு நெருக்கடிகள்
(External Crisis)

வெளிநாட்டுக் கொடுக்கல் வாங்கலுக்கு இடையிலான சமநிலை: அரசியல்- பொருளாதாரப் பின்புலம்

புதிய தாராளமயம் புதிய காலனியச் சார்பு நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது

பிற்சேர்க்கை
முதலீட்டை விட 10 மடங்கு அதிக சலுகைகள்

முன்னுரை

நான்கு ஆங்கிலக் கட்டுரைகளின் தமிழாக்கத்துடன் இந்நூல் வெளியிடப்படுகிறது. இந்தியப் பொருளாதாரத்தைப் பலவீனமடையச் செய்வது எதுஎன்ற முதல் கட்டுரையில், நடந்து முடிந்த 16வது நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு அது கடைப்பிடித்த புதியதாராள பொருளாதாரக் கொள்கைகளே காரணம் என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் முதற்காலப் பகுதியில் அதாவது 2003--2008 ஆண்டுகளின் காலப்பகுதியில் இந்தியா ஒரு உயர் வளர்ச்சியைச் சந்தித்தது. அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDP) சராசரியாக 9 சதவீதம் என்ற என்றுமே காணாத வளர்ச்சியை எட்டியது. ஆனால் ஐ.மு.கூட்டணியின் இரண்டாவது காலப்பகுதியில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் பாதியாகக் குறைந்து வெறும் 4.7 சதவீதம் என்ற அளவிற்கு வீழ்ச்சியைச் சந்தித்தது.


அன்னிய மூலதன வருகைதான் நாட்டின் உயர் வளர்ச்சிக்குக் காரணம் ஆகும். 2000ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, அந்நாடுகளில் மலிவான வட்டிக்குக் கடன் பெற்று அதிக லாபத்தைத் தேடி இந்தியா போன்ற வளர்ந்துவரும் சந்தைகளைநோக்கி (emerging market) மூலதனம் பெருமளவில் குவிந்தது. உலக அளவில் முதலீடுகள் செய்வது பிரம்மாண்டமாக அதிகரித்தது. அத்தகைய சூழலில் மன்மோகன் கும்பலின் ஆட்சி அன்னிய முதலீடுகளைக் கவர்வது என்ற பேரில் ஏராளமான சலுகைகளை அறிவித்தது. அதைப் பயன்படுத்திக் கொண்டு அந்நிய மூலதனம் இரண்டு வழிகளில் இந்தியாவிற்குள் புகுந்தது.
முதலாவதாக, பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சுரங்கம், காடு, நிலம், ஆறு போன்ற இயற்கை வளங்களை அற்ப விலைக்கு வழங்குவதற்கு அரசு உறுதியளித்திருந்தது. ஏகாதிபத்தியவாதிகள் இந்தச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொண்டு மூலப்பொருட்களைக் கைப்பற்றுவதற்காக ஏராளமாக முதலீடு செய்தனர்.
இரண்டாவதாக, கடன் சந்தையில் ஏற்பட்ட மாற்றம் அமெரிக்காவில் குறைந்த வட்டிக்கு கடன் பெற்று இந்தியாவில் பங்குப் பத்திரங்கள், உற்பத்தித்துறை, லேவாதேவி மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் அன்னிய மூலதனம் குவிந்தது. அந்நிய மூலதனம் கடன் சந்தையில் நுழைந்ததால் இந்திய வங்கிகளில் பணப்புழக்கம் அதிகரித்தது. கடன் தருவதன் மூலம் நுகர் பொருட்களின் உற்பத்தி பெருகியது. விலை உயர்ந்த மற்றும் தரம் வாய்ந்த தொலைக்காட்சி பெட்டிகள், மருந்துகள், குளிர்சாதனப் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த ஐ போன்கள் போன்ற பொருட்களின் உற்பத்தியுடன் தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.) போன்ற துறைகள் வளர்ச்சியடைந்தன. கடன் வழங்கல் மற்றும் நுகர் பொருட்களுக்கான கட்டமைப்புத் துறைச் செலவினங்கள் அதிகரித்து உற்பத்தி பெருகியது. இவ்வாறு அந்நிய மூலதன வருகையின் காரணமாக நாடு உயர் வளர்ச்சியடைந்தது.

அதே நேரத்தில் அன்னிய மூலதன வருகையைச் சார்ந்த இந்த வளர்ச்சியானது நாட்டின் ஏற்றுமதியைவிடப் பன்மடங்கு இறக்குமதியை அதிகரித்து விட்டது. நாட்டின் உயர் வளர்ச்சிக் காலப்பகுதியில் மட்டுமல்ல நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோதும் கூட இறக்குமதி அதிகரித்துக் கொண்டே போகிறது குறையவே இல்லை. எனவே நாட்டின் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் உள்ள நடப்புக்கணக்குப் பற்றாக்குறை பன்மடங்கு அதிகரித்தது. இந்தப் பற்றாக்குறை அந்நிய நிதி மூலதனம் என்ற வடிவத்தில் அன்னியக் கடன் மூலமே ஈடுகட்டப்பட்டது. அதாவது அன்னிய மூலதன வருகையால் நாட்டின் கடன் சுமை அதிகரித்தது. நாட்டின் வருமானத்தின் கணிசமான பகுதி அன்னியக் கடன்களுக்காக ஒதுக்கப்பட்டது. அதன் விளைவாக வரவு செலவுத் திட்டத்தில் நிதிப்பற்றாக்குறை கட்டுக்கடங்காமல் அதிகரித்து பணவீக்கம் இரட்டை இலக்கத்தைத் தொட்டது. இவ்வாறு இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியைச் சந்தித்தது.

இந்தியாவின் உயர் வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியைச் சந்தித்ததற்கான காரணம் நான்கு என இக்கட்டுரை சுட்டுகிறது. முதலாவதாக, இந்த வளர்ச்சிப் போக்கின் அடித்தளம் விசாலமானதாகப் பரந்த அளவிலானதாக இல்லை. மக்கள் தொகையில் விலை உயர்ந்த நுகர்பொருள்களை நுகரும் பகுதி மிகவும் குறுகியது. இரண்டாவதாக, வழங்கும் பக்கத்திலிருந்து (supply side) பெட்ரோலியம், டீசல் போன்ற எரிபொருள்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்ததினால் விழுந்த அடி பணவீக்கத்தைக் கொண்டு வந்து பொருளாதார வளர்ச்சியின் மீது பாதிப்பை உருவாக்கியது. மூன்றாவதாக, ஐ.டி. போன்ற ஒரு சில முக்கியத் துறைகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கியதால் அத்துறைகளில் மிகை உற்பத்தி ஏற்பட்டு பிற துறைகளிலும் சுணக்கத்தை ஏற்படுத்தியது. நான்காவதாக, பல்வேறு திட்டப்பணிகளை நிறைவேற்றுவது மக்களின் எதிர்ப்பு காரணமாகச் செயல்பாட்டுக்கு வரவில்லை. அதாவது கட்டமைப்புத் துறைகள் தடைபட்டன.
எனவே, நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி வீழ்ச்சி, அன்னியக் கடன் சுமை அதிகரிப்பு, பணவீக்கம் இரட்டை இலக்கத்திற்கு அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, என்று காங்கிரஸ் ஆட்சியின் கொள்கைகள் கடும் பொருளாதார நெருக்கடியைக் கொண்டுவந்தது. பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறி காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்டது மட்டுமின்றி ஒரு எதிர்க்கட்சி என்ற தகுதியையும் இழந்து படுதோல்வி அடைந்தது.

இரண்டாவது கட்டுரையான வெளியுறவு நெருக்கடிகள்மூன்றாவது கட்டுரையான வெளிநாட்டு கொடுக்கல் வாங்கலுக்கு இடையிலான சமநிலை: அரசியல் பொருளாதாரப் பின்புலம்ஆகிய கட்டுரைகள் அந்நிய மூலதனம் பற்றி ஏகாதிபத்தியவாதிகளும், அவர்களின் எடுபிடிகளான இந்திய ஆளும் வர்க்கங்களும் அவர்களின் அரசியல் கட்சிகளும் உருவாக்கிய மாய பிம்பங்களைத் தவிடுபொடியாக நொறுக்குகின்றன.

1991-ஆம் ஆண்டிலிருந்து இந்த அரசாங்கம் முழு அளவில் அமல்படுத்தி வரும் தாராளமயமாக்கல் கொள்கைகள் இந்தியாவைச் சர்வதேச அளவில் போட்டியிடக் கூடிய நாடாகவும்; 1950ஆம் ஆண்டுகளின் மத்தியிலிருந்து ஏதாவது ஒரு வடிவில் இந்தியாவைச் சிக்கலுக்குள்ளாக்கி வரும் அந்நியச் செலாவணிசிக்கல்களிலிருந்து மீளவும் உதவி செய்யும் என்று கூறப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக இந்த நடவடிக்கைகள் இந்தியா அந்நிய மூலதனத்தைச் சார்ந்திருப்பதை ஆழமாக்கவும், இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளில் அந்நியர்களின் ஆணைகளை வலுப்படுத்தவும் வகை செய்கிறது. 1991-ஆம் ஆண்டுகளில் சர்வதேச நிதியமும் (IMF) உலக வங்கியும் (WB) ஆற்றிய பாத்திரத்தை இன்று கடன்களைத் திருப்பிச் செலுத்தக்கூடிய தகுதியை நிர்ணயம் செய்யும் நிறுவனங்கள் (Credit Rating Agencies) எடுத்துக் கொண்டுள்ளன. அதன் ஊழியர்கள் இந்தியாவில் திட்டங்கள் தீட்டப்படுவதையும் உருவாக்கப்படுவதையும் மிகப்பெரிய அளவில் கண்காணிக்கவும் ஒழுங்குபடுத்தவும் செய்கின்றனர். அந்நிய மூலதனத்தின் தேவைகளை வெளிப்படுத்தவும், அதற்குச் சேவை செய்யவும் வற்புறுத்துகின்றனர். நாட்டின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு போன்ற அனைத்துத் துறைகளிலும் அந்நிய ஆதிக்கம் பெருகி நாட்டின் இறையாண்மை முழுவதுமாக ஏகாதிபத்தியவாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இது பற்றி ஆதாரபூர்வமாக இரண்டாவது கட்டுரை விளக்குகிறது.

மூன்றாவது கட்டுரை, இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நியச் செலாவணிப் பற்றாக்குறை என்பது புதிதல்ல என்பதை எடுத்துக்காட்டி அதன் வரலாற்றை முன்வைத்துள்ளது. அத்துடன் இந்திய ஆளும் வர்க்கத்தினர் இந்தியாவில் ஒரு சுயேட்சையான முதலாளித்துவ வளர்ச்சிக்குத் திட்டமிடாமல் ஆரம்பம் முதலே அன்னிய மூலதனத்தைச் சார்ந்திருப்பதை எடுத்துக்காட்டுகிறது.அதுவே நாட்டின் அந்நியச் செலாவணி பிரச்சினைக்குக் காரணம் என்பதை எடுத்துக்காட்டுகிறது. அவ்வாறு சுயேட்சையான முதலாளித்துவ வளர்ச்சிக்கு நிரந்தரமான தடைகளாக உள்ள மூன்று காரணிகளை எடுத்துக்காட்டுகிறது. அரைநிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகள், கட்டமைப்புத் துறை வளர்ச்சியின் போதாமை, அன்னிய மூலதனம் நாட்டின் சொத்துகளை ஏகாதிபத்திய நாடுகளுக்கு உறிஞ்சிக் கொண்டு போதல் அதாவது மூலதனம் நாட்டை விட்டு பறந்தோடுதல் போன்ற காரணிகளை எடுத்துக்காட்டுகிறது. இத்தகைய பிரச்சினைகளைத் தூய பொருளதாரக் கண்ணோட்டத்தில் அரசியலற்ற அடிப்படையில் முன்வைத்திருப்பதும், அன்னிய மூலதனத்திற்கு மாற்றான ஒரு சுதேசியத் திட்டத்தை முன்வைப்பதிலும் இக்கட்டுரைகள் பலவீனமாகவே உள்ளன. எனினும் நாட்டின் பொருளாதாரப் போக்குகளைப் புரிந்து கொள்ளுவதற்கு இவை பெருமளவில் உதவி செய்யும்.

நான்காவது கட்டுரையானது, ஜெர்மன் கம்யூனிஸ்டுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஸ்டீபன் ஏஞ்சல் என்பவரால் எழுதப்பட்டது. இக்கட்டுரை இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் ஏகாதிபத்தியவாதிகள் பழைய காலனியத்திலிருந்து புதிய காலனியத்திற்கு மாறியது பற்றியும்; 1970களில் புதிய காலனியம் நெருக்கடியில் சிக்கியபோது, நெருக்கடியிலிருந்து மீள ஏகாதிபத்திய வாதிகள் புதிய தாராளக் கொள்கைகளை உலகம் முழுவதும் திணித்ததையும் (கீன்சிய சமூக நல அரசு என்ற கோட்பாடுகளைத் தூக்கியெறிந்து சந்தைப் பொருளாதாரத்திற்கு மாறியது); மூன்றாம் உலக, ஒடுக்கப்பட்ட நாடுகளை மென்மேலும் அடிமை நிலைக்கு ஆட்படுத்துவதையும் புதிய தாராளக் கொள்கைகள் முதலாளித்துவ நெருக்கடியை உலகம் முழுவதும் கொண்டு சென்று எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் மூன்றாம் உலக நாடுகளின் அனுபவங்களை முன்வைத்து இக்கட்டுரை தெளிவாக எழுதப்பட்டுள்ளது. ஏகாதிபத்திய உலகமயமாக்கல் கொள்கைகளை எதிர்த்து உலகந் தழுவிய அளவிலான போராட்டங்கள் கூர்மை அடைவதை எடுத்துக்காட்டுகிறது.


இக்கட்டுரைகள் அனைத்தும் புதிய காலனிய மற்றும் புதிய தாராளக் கொள்கைகளின் அமலாக்கத்தின் விளைவாகத்தான் நாட்டில் பொருளதார நெருக்கடி வந்தது; அதன் விளைவாகத்தான் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. அத்துடன் காங்கிரஸ் ஆட்சி புதிய தாராளக் கொள்கைகளைச் செயல்படுத்திய கொள்கை முடக்கமும் (policy paralise) ஊழலும்தான் நெருக்கடிக்குக் காரணம் என்று கூறி, பா.ஜ.க. ஆட்சி நாட்டை நாசமாக்கிவரும் புதிய தாராளக் கொள்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்திவருகிறது. அந்நிய மூலதனத்திற்கு நாட்டை மென்மேலும் திறந்துவிடும் இக்கொள்கைகள் பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தவே செய்யும் என்பதைப் புரிந்து கொள்ள இக்கட்டுரைகள் பயன்படும். பா.ஜ.க. உள்ளிட்ட ஆளும் வர்க்கக் கட்சிகள் முன்வைக்கும் அந்நிய மூலதனத்திற்கு ஆதரவான வாதங்களை முறியடிப்பதற்கான ஆதாரங்களை இக்கட்டுரைகள் வழங்குகின்றன.

No comments:

Post a Comment

விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.