நவம்பர் 7, தர்மபுரி சாதிக் கலவர நாள்!
தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளைக் காக்கச் சூளுரைப்போம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
தர்மபுரி நாயக்கன் கொட்டாய் பகுதியில் நத்தம், கொண்டம்பட்டி, அண்ணா
நகர் ஆகிய மூன்று தாழ்த்தப்பட்டோர் கிராமங்கள் மீது, வன்னியச் சாதி வெறியர்கள்
சாதி கலவரத்தை நடத்தி நாசப்படுத்தியது வரும் நவம்பர் 7 ஆம் தேதியுடன் ஓராண்டு
காலம் முடிவடைகிறது. கலவரம் நடந்து ஒரு வருடம் முடிந்த நிலையிலும் தமிழக அரசு
பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனரமைப்பு மற்றும் நிவாரணம் வழங்குவது முறையாக
நடக்கவுமில்லை, அம்மக்களைச் சாதி வெறியர்களின் தாக்குதலிலிருந்து பாதுகாக்கவுமில்லை.
சாதிக் கலவரத்தைத் தடுப்பது, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது என்ற பேரில் ஓராண்டு
காலமாகத் தர்மபுரியில் கட்டவிழ்த்துவிட்டுள்ள 144-தடை சாதி வெறியர்களைக்
கட்டுப்படுத்தவில்லை. மாறாகத் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும், புரட்சிகர ஜனநாயக
இயக்கங்கள் மீதும், எதிர்க்கட்சியினர் மீதும் அடக்குமுறைகளை ஏவி ஒரு போலீஸ்
இராஜ்ஜியமே நடந்து வருகிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்கிறோம்,
வன்முறையாளர்கள் சாதிவெறியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறிப்
போராட்டம் நடத்த வேண்டாம் எனத் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் வாக்குறுதி அளித்தது.
ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்காமல், பாதிக்கப்படாதவர்களுக்கு
வழங்குவது; சேதாரங்களைச் சரிவர மதிப்பிடாமல் நிவாரண உதவிகளைக் குறைத்துக்
கொடுப்பதன்மூலம் அம்மக்களிடையே மோதலையும், ஒற்றுமையின்மையையும் உருவாக்கியுள்ளது.
அம்மக்கள் தங்கள் கோரிக்கைகளை வைத்துப் போராடும் உரிமையைக்கூட மறுத்து அவர்களைப்
பிச்சைக்காரர்கள் போல் நடத்துவது. அதே சமயம் அவர்கள் மீதான வன்னியச் சாதி
வெறியர்களின் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
தொடரும் வன்கொடுமை
தாழ்த்தப்பட்ட கிராம மக்களுக்கு முடிவெட்டுதல் கூடாது, துணிச் சலவை
செய்யக்கூடாது, நெல் மற்றும் மாவு அறைத்தல் கூடாது, பால் கூட்டுறவுகளில் பால்
வாங்கக் கூடாது, அரசாங்கம் வழங்கியுள்ள விலையில்லா ஆடுமாடுகளை வன்னியர் நிலங்களில்
மேய்க்கக் கூடாது, தாழ்த்தப்பட்டவர்களின் நிலங்களில் டிராக்டர்கள் உழக்கூடாது,
தாழ்த்தப்பட்டோருக்குக் கடன் கொடுக்கக் கூடாது, தாழ்த்தப்பட்டோருடன் பேசக்கூடாது
என வன்னியச் சாதிவெறியர்களால் சாதியக் கட்டுப்பாடுகள் திணிக்கப்படுகின்றன.
நூறு நாள் வேலைத்திட்டத்தின்படி தாழ்த்தப்பட்ட மக்கள் உயர்
சாதியினரின் பகுதியில் வேலை செய்ய அனுமதிக்க மறுப்பது; மகளிர் சுய உதவிக்
குழுக்களில் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களை நீக்குவது, அரசு பள்ளிகளில் பணிபுரியும்
தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த ஆசிரியர்களை இடை நீக்கம் செய்யவைப்பது அல்லது
இடமாற்றம் செய்வது; சாதி மறுப்புத் திருமணங்கள் செய்து கொண்டவர்களை மிரட்டுவது
போன்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான உயர் சாதி வெறியர்களின் வன்கொடுமைகள்
தொடர்கின்றன.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான சாதியக் கட்டுப்பாடுகளுக்கு
வன்னியச் சாதி மக்களிடம் எதிர்ப்பு உள்ளது. காரணம் தாழ்த்தப்பட்ட மக்களிடம்
பொருட்களை விற்பது, வாங்குவது, வன்னியச் சாதியினரின் நிலங்களில் தாழ்த்தப்பட்ட
மக்கள் கூலி வேலை செய்வது போன்ற பொருளாதார உறவுகளில் தற்போது விரிசல்
ஏற்பட்டுள்ளது. இத்தகைய கட்டுப்பாடுகள் வன்னிய மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதி
மக்களிடம் பொருளாதார ரீதியான பாதிப்புகளை உருவாக்கி உள்ளது. இத்தகைய சாதிக்
கட்டுப்பாடுகளும், கலவரங்களும் ஒரே வர்க்கமாக அக்கம் பக்கத்தில்
வாழ்ந்துகொண்டிருக்கிற இரண்டு சாதிகளின் கணிசமான பிரிவினர் பரஸ்பரம் மோதிக் கொண்டு
இரத்தக் களறி ஏற்பட்டு, நீண்ட காலத்திற்குப் பகைவர்களாக வாழ வேண்டியுள்ளது. எனவே
இக்கட்டுப்பாடுகளை மீறுகின்ற வன்னியக் குடும்பங்களும் இருக்கின்றன. சாதியக்
கட்டுப்பாட்டிற்குக் கட்டுப்படாத புளியம்பட்டியைச் சார்ந்த 10 வன்னியக்
குடும்பங்களைச் சாதி வெறியர்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். சாதியக்
கட்டுப்பாட்டை மீறித் தாழ்த்தப்பட்ட மக்களோடு பேசியதற்காக வன்னியர் ஒருவர் அபராதம்
கட்டவைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு சாதிவெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு
எதிராகவும், அனைத்துச் சாதியிலுள்ள உழைக்கும் மக்களுக்கு எதிராகவும் சாதிய
வன்கொடுமைகளைத் தடையின்றிக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
ஆனால் தமிழக அரசும், தர்மபுரி காவல்துறையும் 144-தடையைக் கொண்டு
தாழ்த்தப்பட்ட அதுவும் பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள்
மீது தாக்குதல் தொடுத்துள்ளது. சாதி தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்துப் போராடும்
புரட்சிகர ஜனநாயக இயக்கங்கள் மீதும் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.
சாதிக் கலவரங்களைக் காரணம் காட்டி வன்னியர் சங்கத்தின் மீதான தமிழக அரசின்
நடவடிக்கைகள்கூட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அல்ல. சாதாரண வழக்குகளின்
கீழ்தான் நடவடிக்கை எடுத்துள்ளது. ஒருபுறம் பாமகவினர் மீது வழக்கு தொடுத்துத்
தாழ்த்தப்பட்ட மக்களின் அனுதாபத்தைப் பெறுவது, மறுபுறம் வன்கொடுமை தடுப்புச்
சட்டத்தைப் பயன்படுத்தாமல் வன்னியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழாமல்
பார்த்துக்கொள்வதன் மூலம் அவர்களின் வாக்குகளை அறுவடை செய்வது என்று ஒரு சந்தர்ப்பவாதத்
தேர்தல் செயல் தந்திரத்தையே ஜெயலலிதா அரசாங்கம் மேற்கொள்ளுகிறது. இதுவே உயர்
சாதிவெறியர்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான
சாதிக் கலவரங்களும், அரசின் ஆசிர்வாதமும், நீதிமன்றங்களின் பாரபட்சமும்
தர்மபுரியில் மட்டுமல்ல அது ஒரு நாடு தழுவிய பிரச்சினையாகவே உள்ளது.
நாடுதழுவிய சாதிக் கலவரங்கள்
முதுகுளத்தூர் கலவரம் முதல் தர்மபுரி வரை பல கலவரங்கள் தமிழகத்தில்
நடத்தப்பட்டுள்ளது. அண்மைக் காலத்தில் 2011ல் பரமகுடியில் ஜெயலலிதா ஆட்சி
காவல்துறையினரைக் கொண்டே இமானுவேல் சேகரனின் குரு பூஜையின்போது தாழ்த்தப்பட்ட
மக்களை 7 பேரைச் சுட்டுக் கொன்றது. அதை விசாரித்த நீதிபதி சம்பத் கமிட்டி தற்போது
துப்பாக்கி சூடு சரிதான் எனத் தீர்ப்பளித்துள்ளது. அதே சமயம் பீகாரில்,
தாழ்த்தப்பட்டோரை இதுபோன்ற படுகொலை செய்த சாதி வெறியர்களை நிரபராதிகள் என உச்ச நீதிமன்றம்
விடுதலை செய்துள்ளது. அத்துடன் அண்மை காலங்களில் அரியானா, உத்திரப் பிரதேசம்,
மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சாதியப் பஞ்சாயத்துகள் கௌரவக் கொலை எனும் பேரில்
சாதி மறுப்புத் திருமணங்கள் புரிந்துகொள்வோரைப் படுகொலை செய்து வருகிறது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான சாதியத் தீண்டாமை வன்கொடுமைகளைக்
கட்டவிழ்த்துவிடுகின்றன. தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான சாதிக் கலவரங்களுக்குத்
தீர்வுகாணப்படாமலே தொடருகின்றன.
இவ்வாறு தமிழகத்திலும், நாடு முழுவதிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான
பிற்படுத்தப்பட்ட சாதியினர் மற்றும் உயர் சாதியினர் நடத்தும் தாக்குதலுக்கான
நோக்கம் என்ன?
பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த ஆளும் நிலப்பிரபுத்துவ மற்றும்
ஊர் ஆதிக்க சக்திகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பண்ணையடிமை முறைகளைத் திணிப்பது;
ஊர்க்கட்டுப்பாடுகளுக்கும், சாதிக் கட்டுப்பாடுகளுக்கும் அவர்களை அடிபணியச்
செய்வது; ஜனநாயக மறுப்புக்கு எதிரான குரலை நசுக்குவது; நாடாளுமன்ற முறையிலான
அதிகார அமைப்புகளில் இடம் பிடிப்பதற்காகச் சாதிய வாக்கு வங்கிகளை உருவாக்குவது;
உள்ளூர் அளவில் தங்கள் அரசியல், பொருளாதார, சமூக ஆதிக்கத்தை நிலை நிறுத்தி கொள்வது
ஆகியன பிற்படுத்தப்பட்ட சாதி ஆளும் வர்க்கக் கும்பல்களின் நோக்கமாக இருக்கின்றன.
பிற்படுத்தப்பட்ட சாதியில் உள்ள ஆளும் வர்க்கக் கும்பல்கள் அரசு அதிகார
அமைப்புகளில் பங்கு பெறுவதற்குப் பரந்துபட்ட மக்களின் ஆதரவைத் திரட்டும்
நோக்கத்தில் பார்ப்பனரை எதிர்த்துத் தாழ்த்தப்பட்ட சாதியினர் உட்படப் பார்ப்பனர்
அல்லாதோர் முன்னணி என்ற முழக்கத்தை முன்வைக்கின்றனர். ஆனால் இன்று தமிழகத்தில்
இராமதாஸ் தலைமையிலான 51 சாதிச் சங்களைச் சேர்ந்த முன்னணி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு
எதிராக ஒடுக்கும் சாதிகளை ஒன்றிணைத்து ஒரு எதிர்ப் புரட்சிகர தாக்குதலை
தொடுத்துள்ளது, பிற்போக்கு சக்தியாக சீரழிந்துள்ளது. அரசு அதிகார அமைப்புகளில்
பங்கு பெறுவதற்கு வாய்ப்புக் கிட்டும்போது கிடைத்த அதிகாரத்தை நிலைநிறுத்திக்
கொள்வதற்காகவும், தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் மீது தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கும்
தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதிக் கலவரங்களையும், தீண்டாமைக் கொடுமைகளையும்
கட்டவிழ்த்து விடுகின்றனர்.
மேலும் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் உள்ள ஆளும் வர்க்கக் கும்பல்களின்
அரசியல், பொருளாதாரச் சமூக ஆதிக்கத்திற்கு எதிராகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட
சாதிகளில் உள்ள உழைக்கும் மக்களும், பிற ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டுப்
போராடுவதைத் தடுத்து நிறுத்துவதற்காகவும், இரு பிரிவு சாதிகளையும் சார்ந்த
உழைக்கும் மக்கள் ஒரே வர்க்கமாக அணிதிரண்டு தம்மை எதிர்க்கும் ஆற்றல் பெற்ற
சக்திகளாக மாறுவதைத் தடுத்து அவர்களைப் பிளவுபடுத்தி மோத விடுவதற்காகவும் சாதிக்
கலவரங்களை நடத்துகின்றனர். எனவே சாதியம் நிலவுவதற்கான நிலப்பிரபுத்துவத்தையும்,
சாதி தீண்டாமையையும் ஒழிக்காமல் சாதிக் கலவரங்களுக்கு முடிவுகட்ட முடியாது.
நிலப்பிரபுத்துவத்தையும் – சாதியையும் பாதுகாக்கும் இந்திய அரசு
இந்திய அரசு அரை நிலப்பிரபுத்துவத்தைப் பாதுகாத்துக்கொண்டே
ஏகாதிபத்தியவாதிகளைச் சார்ந்து நின்று தரகு முதலாளித்துவ வளர்ச்சிக்கான
கொள்கைகளையே செயல்படுத்திவருகிறது. இந்திய அரசு செயல்படுத்திய நிலச்சீர்திருத்தம்
என்பது கூடப் பிற்படுத்தப்பட்ட சாதியில் உள்ள ஆதிக்க சக்திகளுக்கே நிலத்தை
வழங்கியது. நிலமற்ற கூலி விவசாயிகளாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலம்
வழங்கப்படவே இல்லை. மேலும் இந்திய அரசு வேத ஆகமங்களையும், வர்ணாசிரமத்தையும்
பாதுகாப்பதாகவே உள்ளது. தீண்டாமைக் குற்றம், வன்கொடுமைச் சட்டம் எல்லாம் தாழ்த்தப்பட்ட
மக்களை ஏமாற்றுவதற்குத்தான்.
மேலும் அண்மைக் காலங்களில் இந்திய அரசு செயல்படுத்திவரும்
ஏகாதிபத்தியவாதிகளுக்கு நாட்டைத் திறந்துவிடும் புதிய காலனிய உலகமய அரசியல்
பொருளாதாரக் கொள்கைகள் நாட்டின் அனைத்துத் துறைகளையும் சீரழித்து நாட்டை
ஒட்டாண்டியாக்கி வருகிறது. குறிப்பாக வேளாண் துறையைப் பன்னாட்டு முதலாளிகளுக்குத்
திறந்துவிட்டுக் கார்ப்பரேட் விவசாயத்தை அமல்படுத்துவதால் வேளாண்மை அழிந்து நாடு
முழுவதும் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு மாண்டுவிட்டனர். அத்துடன்
இன்றைய ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடிகளை மக்கள் மீது சுமத்துவதன் மூலம்
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு; கல்வி, மருத்துவம், சுகாதாரம் ஆகியவை
தனியார்மயமாதலால் பிற்படுத்தப்பட்ட சாதி உள்ளிட்ட அனைத்துச் சாதி உழைக்கும் மக்கள்
மீதும் அரசாங்கம் போர்த்தொடுத்துள்ளது. காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டு கட்சிகளும்
நாட்டை அடிமை படுத்தும் தேசத்துரோகத்திற்காகப் போட்டி போடுகின்றன. காங்கிரஸ்
துரோகத்தை எதிர்த்து மோடியின் குஜராத்தை மாற்றாகப் பா.ஜ.க. கும்பல் முன்வைக்கிறது.
ஆனால் கார்ப்பரேட்டின் கள்ளக் குழந்தை மோடி கும்பல் பன்னாட்டு கம்பெனிகளின்
வேட்டைக்காடாகக் குஜராத்தை மாற்றுவதையும் ஆயிரக்கணக்கான விவசாயிகளைத்
தற்கொலைக்குத் தள்ளுவதையும், மத மோதல்கள் மூலம் மூடிமறைத்துவிட்டது. மோடியே
பிரதமரானாலும் கூட விவசாயிகளின் துயரம் தீரப்போவதில்லை. மத மோதல்களும் சாதிக்
கலவரங்களும் தலைவிரித்தாடும். இந்துத்துவப் பாசிசம் எழுச்சியுறும். இத்தகைய ஒரு
சூழலில் தாழ்த்தப்பட்ட சாதி உள்ளிட்ட அனைத்துச் சாதி உழைக்கும் மக்களும்,
புரட்சிகர ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு ஏகாதிபத்தியத்தை எதிர்த்த தேசிய விடுதலை,
நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த ஜனநாயகம், சாதி, தீண்டாமை ஒழிப்பு என்ற திட்டத்தைச்
செயல்படுத்த ஒரு புதிய ஜனநாயக அரசைப் புரட்சி மூலம் படைக்க வேண்டும். அத்தகைய அரசு
ஒன்றுதான், நிலப்பிரபுத்துவத்தை ஒழித்துச் சாதி, தீண்டாமையை ஒழிப்பதோடு சாதிக்
கலவரங்களுக்கும் முடிவுகட்டும். ஆனால் சாதிவாத அமைப்புகள் அனைத்தும் ஆளும்
வர்க்கங்களின் தொங்கு சதைகளாக மாறி நாட்டு மக்களுக்குத் துரோகமிழைக்கின்றன.
அண்மைக் காலத்தில் சில்லறை வணிகத்தில் அந்நிய மூலதனத்திற்குத் திறந்துவிடுவதற்குப்
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த லல்லு, முலாயம்சிங் யாதவ்,
மாயாவதி, திருமாவளவன் போன்றோர் ஆதரவளித்தது அதற்கு நல்ல உதாரணமாகும்.
பா.ம.க உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த சாதிவாத
அமைப்புகள் சமூகநீதி என்று கூறிக்கொண்டு ஏகாதிபத்தியவாதிகளின் அரசியல் பொருளாதார
ஆதிக்கத்திற்குச் சேவை செய்வதன் மூலம் இந்தியத் தரகுப் பெருமுதலாளிகளுடன் சமரசம்
செய்துகொண்டு அதை அண்டிப் பிழைப்பதன் மூலம் தாங்களும் தரகுப் பெருமுதலாளிகளாக
வளர்ந்துவிடலாம் எனக் கருதுகின்றனர். ஏகாதிபத்திய நாடுகளில் நிதி உதவி பெற்று
அன்புமணி ராமதாஸ் பசுமைத் தாயகம் நடத்திவருகிறார். ஏகாதிபத்தியங்களுக்குத்
தொண்டூழியம் புரிந்து வருகிறார். அதே சமயம் பெரியாறியம், அம்பேத்காறியம் போன்ற
பார்ப்பன எதிர்ப்பு சமூகநீதி என்ற முதலாளித்துவச் சீர்திருத்த கொள்கைகளைக்
கைவிட்டு – தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான ஒரு எதிர்ப்புரட்சிகரப் பிற்போக்குக்
கொள்கைகளைக் கடைபிடித்து வன்னிய வாக்கு வங்கியை உருவாக்குகிறது. சாதி மோதல்களைத்
திட்டமிட்டு அரங்கேற்றுகிறது. வன்னியச் சாதியைச் சார்ந்த உழைக்கும் மக்களுக்குச்
சாதி வெறியை ஊட்டுகிறது. இந்தப் பிற்படுத்தப்பட்ட சாதிய அமைப்புகளை நம்புவதால்,
அதன் பின்னால் அணிதிரள்வதால் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் உள்ள 90 சதவீத உழைக்கும்
மக்களுக்குத் திருவோடும் மண்டை ஓடும்தான் பரிசாகக் கிடைக்கும். ஆளும்
வர்க்கங்களுக்கோ பதவியும் பணமும் பொக்கிஷங்களும் ஏராளமாய்க் கிடைக்கும்.
தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த நடுத்தர வர்க்கத்தினர் குறிப்பாகத்
தலித் இயக்கத்தினர் சாதி சீர்திருத்த பாதையைப் பின்பற்றுகின்றனர். அவர்கள்
நிலப்பிரபுத்துவச் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான கோரிக்கைகளை – கோயில் நுழைவு,
தனித் தேநீர் குவளை ஒழிப்பு, சுடுகாட்டு பாதை – மட்டுமே முன்வைத்துப்
போராடுகின்றனர். ஆனால் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த அரசியல், பொருளாதாரக்
கோரிக்கைகளை முன்வைக்கவில்லை. மேலும் ஏகாதிபத்திய மூலதனம் இந்தியாவிற்குள்
வருவதால் முதலாளித்துவ வளர்ச்சியடையும், சாதி ஒழியும் எனக் கருதி அந்நிய
மூலதனத்திற்கு ஆரத்தி எடுத்து வரவேற்கின்றன. இதன் காரணமாகத்தான் ஆளும்
வர்க்கங்களுக்கும் அரசுகளுக்கும் எதிராக அனைத்துச் சாதிகளையும் சேர்ந்த உழைக்கும்
மக்கள் ஒன்றுபட்டுப் போராட்டத்தின் அவசியத்தை மறுக்கின்றனர். நாடாளுமன்ற,
சட்டமன்றங்களில் ஒன்றிரண்டு சீட்டுக்காகத் தாழ்த்தப்பட்ட மக்களைப்
பலிகடாவாக்குகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக அண்மையில் தமிழகத்தில் நடந்த சாதிக்
கலவரங்களுக்கு எதிராகத் தலித் அமைப்புகள் ஒன்றுபட்டுப் பலமான குரல் எழுப்பத் தவறிவிட்டன.
அந்த அளவுக்குத் தேர்தல் அரசியல் என்ற சந்தர்ப்பவாதத்தில் திளைக்கின்றனர். எனவே
தலித் அமைப்புகள் எதுவும் சாதி, தீண்டாமையை ஒழிக்கவோ, சாதிக் கலவரங்களைத் தடுக்கவோ
வக்கற்றவைகளாக மாறிவிட்டன.
நாட்டை ஓட்டாண்டியாக்கி, விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளும் தேசத்
துரோகக் கொள்கைகளை எதிர்த்து அனைத்து மக்களின் விடுதலையை வென்றெடுக்க
வேண்டுமானால், மக்களைச் சாதி ரீதியாக மோதவிடும் சாதிக் கலவரங்களை எதிர்த்தும்;
தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்தும் போராடுவது முன்
நிபந்தனையாக உள்ளது. குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்களின் மனித உரிமை மறுப்பு, மத
உரிமை மறுப்பு, பொது உரிமை மறுப்பு, தீண்டாமை வன்கொடுமைகளை எதிர்த்துப்
போராடுவதில் அனைத்துச் சாதி உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய
வேண்டும். இத்தகைய அடிப்படையில் அமையும் உழைக்கும் மக்களின் ஒற்றுமைதான் அனைத்து
விதமான அடிமைத் தளைகளையும் அறுத்தெறியும். எனவே சாதிவாத இயக்கங்களைப்
புறந்தள்ளுவோம், சாதிக் கலவரங்களை எதிர்த்திடுவோம். சாதி, தீண்டாமையை ஒழித்து
உழைக்கும் மக்கள் யாவரும் ஓரணியில் கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில்
அணிதிரள்வோம்.
- சாதிக் கலவரங்களை எதிர்ப்போம், தாழ்த்தப்பட்ட உரிமைகளைக் காக்கச் சூளுரைப்போம்!
- கலவரம் நடந்து ஓராண்டாகியும் தொடரும் 144 தடையை நீக்கு!
- நிலப்பிரபுத்துவமும் சாதியமும் இருக்கும் வரை, தீண்டாமையும் சாதிக் கலவரங்களும் ஓயாது!
- ஆளும் வர்க்கங்களின் தொங்கு சதைகளான சாதிவாத அமைப்புகளால் சாதி, தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவுகட்ட முடியாது!
- நாட்டை ஓட்டாண்டியாக்கும் விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளும் உலகமயக் கொள்கைகளை எதிர்த்து அனைத்துச் சாதி உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் ஒன்றுபடுவோம்!
- நிலப்பிரபுத்துவச் சாதியச் சமூக அமைப்பைத் தகர்க்க மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
நவம்பர் 2013
No comments:
Post a Comment
விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.