Tuesday, October 22, 2013

இலங்கையில் “காமன்வெல்த் மாநாடு” நடத்துவதை எதிர்த்து ...

ஏகாதிபத்தியவாதிகளே!
  • இராஜபட்சே கும்பலின் இன அழிப்புப் போர்க் குற்றங்களை நியாயப்படுத்துவதற்கான “காமன்வெல்த் மாநாட்டைஇலங்கையில் நடத்தாதீர்!
  • இந்திய அரசே! காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காதே!
  • தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பிற்காகப் போராடுவோம்!



அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!
ஈழத் தமிழின அழிப்புப் போர்க்குற்றவாளி இராஜபட்சே கும்பல் 13வது சட்டத்திருத்தம், வடக்கு மாகாணத் தேர்தல் மூலம் ஜனநாயகம் வழங்குதல் என்ற கபட நாடகத்தின் பின்னால் இன அழிப்பு நடவடிக்கைகளை மூடி மறைக்கிறது.தொடர்ந்து காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவதன் மூலம் தன் மீதான இன அழிப்புப் போர்க்குற்றங்களிலிருந்து தப்பிப்பதற்கு முயற்சிக்கிறது. வரலாறு காணாத இராணுவ மயமாக்கலின் கீழ் வடக்கு மாகாணத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இராஜபட்சேவின் கைக்கூலி விக்னேஸ்வரன் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். ஈழத் தமிழினத்தை ஒரு இனமாகக் கூட அங்கீகரிக்காத, வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து தமிழர் தாயகம் என்பதைக் கூட ஏற்காத, காவல், நிலம் போன்ற முக்கிய அதிகாரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டுவிட்ட ஒரு மாகாண சபையால் எள்முனை அளவுக்குக் கூட ஈழத் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுத்தர முடியாது. மாறாக, இராஜபட்சே கும்பலின் இன அழிப்புக்கு மௌன சாட்சியாகவே வடக்கு மாகாண ஆட்சி அமையும்.

ஈழத் தமிழின அழிப்புத் தொடர்கிறது

உலகில் எந்த ஒரு நாட்டிலும் காணமுடியாத அளவிற்கு இலங்கையில் இன அழிப்பு, மனித உரிமை மீறல், சர்வாதிகார ஆட்சி, தன் நாட்டு மக்களை சொந்த மண்ணிலேயே அகதிகளாக்குதல், முள்வேலி முகாம்கள் என்ற பேரில் மக்களைத் திறந்த வெளிச் சிறையில் அடைத்தல், தமிழர் பகுதிகளை இராணுவ மயமாக்கல், தமிழர்களின் நிலங்களைக் கைப்பற்றி சிங்களர்களைக் குடியேற்றல், பௌத்த மதத்தை பரவலாக்கல் என தமிழ் பேசும் மக்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கைகளை இராஜபட்சே கும்பல் தொடர்கிறது.

அண்மையில் இலங்கைக்கு சென்று ஆய்வு செய்து திரும்பிய ஐ.நா. மனித உரிமைக் கழகத்தின் தலைவர் நவநீதம் பிள்ளை, சென்ற செப்டம்பர் 25ஆம் தேதி ஐ.நா. மனித உரிமைக் கழகத்தில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் உரையாற்றும் போது இலங்கையில் நடக்கும் இன அழிப்புப் பற்றியும், மனித உரிமை மீறல்கள் பற்றியும் பின்வருமாறு கூறியுள்ளார்:

ஈழத் தமிழர்களின் வாழ்விடங்கள் இராணுவ மயமாக்கப்படுவதையும், தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம், பத்திரிக்கைச் சுதந்திரம் பறிப்பு, நீதித்துறைச் சுதந்திரம் பறிப்பு, தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், இலங்கை அரசின் நிர்வாக அமைப்பில் ஜனநாயகம் இல்லைஎன அந்த உரை இராஜபட்சே கும்பலைக் கண்டித்துள்ளது. இவ்வாறு ஐ.நா. மனித உரிமை அமைப்பும், பொது மன்னிப்புச் சபையும் இன்னும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இலங்கையில் நடக்கும் இன அழிப்பு நடவடிக்கைகளையும் மனித உரிமை மீறல்களையும் கண்டிக்கும்போது - இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கு அமெரிக்க-பிரிட்டன் ஏகாதிபத்தியவாதிகளும் விரிவாதிக்க இந்திய அரசும் கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றன.

இன அழிப்பை மூடிமறைக்கவே இலங்கையில் காமன்வெல்த் மாநாடு

காமன்வெல்த் அமைப்பின் விதிகளையெல்லாம் காலில் போட்டு மிதித்துவிட்டு இராஜபட்சே கும்பல் ஈழத் தமிழின அழிப்பையும் மனித உரிமை மீறலையும் நடத்தி வருகிறது.காமன்வெல்த் உறுப்பு நாடுகளின் நாடாளுமன்றம், நிர்வாகத் துறைகள், நீதித் துறைகள் போன்றவைகள் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறவேண்டும் போன்ற விதிகளை உறுப்பு நாடுகள் கடைப்பிடிக்க வேண்டும் என அந்த அமைப்பின் விதி கூறுகின்றன. இலங்கை, காமன்வெல்த் அமைப்பின் விதிகளை மீறிவருவதைக் கண்டித்து கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் கண்டித்துள்ளன. கனடா இலங்கையில் நடத்தும் இம்மாநாட்டில் பங்குபெற மறுத்துவிட்டது. கடந்த காலங்களில் இன ஒடுக்குமுறை மற்றும் மனித உரிமை மீறல், ஜனநாயக மறுப்பு போன்ற காரணங்களுக்காக தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா, பாகிஸ்தான், பிஜி போன்ற நாடுகள் காமன் வெல்த் அமைப்பிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்நாடுகளில் நடந்ததைவிடப் பன்மடங்கு கொடூரமான இனப்படுகொலையும், மனித உரிமை மீறல்களும் புரிந்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கு அமெரிக்கா, பிரிட்டன் ஏகாதிபத்திய நாடுகளும் விரிவாதிக்க இந்திய அரசும் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதற்கு காரணம் என்ன?

அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகளும் அவர்களின் கூட்டாளிகளும் மனித உரிமைக் காப்பது என்ற பேரில் எந்த ஒரு நாட்டிலும் தலையிடுவோம் என்று கூறுகின்றனர். அமெரிக்க ஏகாதிபத்தியம் மனித உரிமை மீறல் என்ற பேரால் எகிப்து, லிபியா, ஏமன் போன்ற தன் நட்பு நாடுகளில் கூட தலையிட்டு ஆட்சிமாற்றம் (Regime change) மூலம் பொம்மை அரசுகளை நிறுவிக் கொண்டது. ஆனால் அத்தகைய நடவடிக்கையை இலங்கைக்கு எதிராக அமெரிக்கா எடுக்கவில்லை. மாறாக பர்மாவில் எப்படி அந்நாட்டு இராணுவ அரசு அமெரிக்காவிற்கு இணங்கியவுடன், அந்த அரசுக்கும் அமெரிக்க அடிவருடியான அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவியான ஆங்கான் சூகிக்கும் சமரசம் ஏற்படுத்தி ஆட்சியில் மறு அணிசேர்க்கை(Regime Realignment) செய்ததோ அதே போல, இலங்கையிலும் மனித உரிமை மீறலைக் காட்டி இராஜபட்சே கும்பலை மிரட்டி இலங்கையில் தனக்குச் சாதகமான ஆட்சியில் மறு அணிசேர்க்கையை(Regime Realignment) ஏற்படுத்தி வருகிறது. மனித உரிமை பேரால் ஆட்சி மாற்றம்”, “ஆட்சியில் மறு அணிசேர்க்கைநடத்தி தமக்கு அடிபணியும் நாடுகளில் தலையிட்டு பொம்மை அரசுகளை உருவாக்குவதே அவர்களின் திட்டமாகும்.

இவ்வாறு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஏகாதிபத்தியவாதிகள் இலங்கை முழுவதையும் தமது மேலாதிக்கத்திற்குள் கொண்டுவரவும், திரிகோணமலைத் துறைமுகத்தைக் கைப்பற்றுவதன் மூலம் இந்துமாக்கடல் பகுதி முழுவதிலும் தமது ஆதிக்கத்தை நிறுவுவதற்கும், இலங்கையில் சீனாவின் செல்வாக்கைத் தடுத்து நிறுத்தி தமது ஆசிய-பசிபிக் நூற்றாண்டுத் திட்டமானஆசிய மேலாதிக்கத்தை நிறைவேற்றுவதற்காக இலங்கையை ஒரு கருவியாகப் பயன்படுத்தவும் திட்டமிட்டுச் செயல்படுகின்றனர். அதற்கு இராஜபட்சே இசைவு தெரிவித்த பிறகுதான் சிங்கள இனவெறிப் பாசிச பிற்போக்கு அரசுக்கு ஆதரவாக காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துகின்றனர். ஈழ விடுதலைக்குத் துரோகம் இழைக்கின்றனர். எனவே ஏகாதிபத்தியவாதிகளை எதிர்க்காமல் ஈழத் தமிழினம் சுயநிர்ணய உரிமை பெற முடியாது.

ஈழத் தமிழின அழிப்பை ஆதரிக்கும் இந்தியா

இந்திய அரசு இலங்கையின் மீதான தனது துணை மேலாதிக்கத்தை நிலைநாட்டவே ஈழத் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை நசுக்குவதற்கு சிங்கள இனவெறி அரசுக்குத் தொடர்ந்து உதவி வருகிறது. இந்தியாவின் தென்னாசியா மீதான துணை மேலாதிக்கத்தை அமெரிக்கா அங்கீகரிப்பது, சீனாவை எதிர்த்த அமெரிக்காவின் ஆசிய மேலாதிக்கத்திற்கு இந்தியா சேவை செய்வது என்ற அமெரிக்க-இந்திய உடன்பாட்டின் படி அமெரிக்காவுடன் இணைந்து இராஜபட்சே கும்பலுக்கு இந்திய அரசு ஆதரவளிக்கிறது. தற்போதும் கூட மத்தியில் ஆளும் மன்மோகன் சோனியா கும்பலின் காங்கிரஸ் ஆட்சி இராஜபட்சே கும்பலுக்கு அரசியல் பொருளாதார இராணுவ உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறது. இலங்கை இராணுவத்திற்கு இந்தியாவில் போர்ப்பயிற்சி அளிப்பதோடு இலங்கைக்கு போர்க்கப்பல் வழங்கவும் திட்டமிட்டுள்ளது. இக்கப்பல்கள் மூலம் சிங்கள இனவெறி இராணுவத்தைப் பலப்படுத்துவதுடன், தமிழக மீனவர்களின் மீது தாக்குதல் நடத்த இலங்கை கடற்படைக்கு உதவி செய்கிறது. இறுதியாக இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கு ஆதரவு அளிப்பதன் மூலம் இன அழிப்புப் போர்க்குற்றவாளி இராஜபட்சே கும்பலைப் பாதுகாக்கிறது. உலகம் முழுவதுமுள்ள தமிழர்களின் கோரிக்கைகளை உதாசீனப்படுத்துகிறது.

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டைஎதிர்ப்போம்

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது; அப்படியே நடத்தினாலும் அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து தோழர் தியாகு தொடங்கிய சாகும்வரை உண்ணாநிலை போராட்டத்திற்கு ஆதரவும் எழுச்சியும் முன்பு போல தமிழகத்தில் இல்லை. இந்த நிலையை கருணாநிதியின்  டெசோஅப்படியே தனக்கு சாதகமாக திருப்பிக் கொண்டது. கருணாநிதி எழுதிய கடிதத்திற்கு பிரதமர் பதிலளிக்கும்போது தமிழர்களின் உணர்வுகளை கணக்கில்கொண்டுதான் பங்கேற்பது பற்றி முடிவு எடுப்பேன்என்ற பிரதமரின் கடிதத்தைக் காரணமாக காட்டி உண்ணாநிலை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. பிரதமர், தான் பங்கேற்காமல் தனது பரிவாரங்களை அனுப்பி இந்தியா பங்கேற்பதை நியாயப் படுத்துவார். இந்த துரோகத்திற்கும் கருணாநிதி எப்போதும் போல துணை போவார்.

சென்ற மார்ச்சில் தமிழகத்தில் எழுந்த எழுச்சியை போல், தற்போது இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இயக்கத்திற்கு எழுச்சி இல்லை. அவ்வாறு எழுச்சி இல்லாமல் இருப்பதற்கு தமிழக அரசியல் கட்சிகளிடையே நிலவும் ஒற்றுமையின்மையே காரணமாகும். இந்த ஒற்றுமையின்மைக்குக் காரணம் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு அரசியல் கட்சிகளுக்கிடையே ஏற்பட்டுவரும் சந்தர்ப்பவாத கூட்டணிகளே ஆகும். ஈழத் தமிழினத்தை அழிப்பதற்குத் துணைபோன காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பது என்ற பேரில் வைகோ, நெடுமாறன், சீமான், தமிழருவி மணியன் போன்றோர் இந்துத்துவப் பாசிச பா.ஜ.க அணியில் சேர்வதும்; மதவாதத்தை எதிர்ப்பது, “இந்திய இராஜபட்சேமோடியை எதிர்ப்பது எனும் பேரில் காங்கிரஸ் துரோகிகளுடன் சேர்ந்து இன அழிப்புக்குத் துணைபோகும் டெசோ மற்றும் இடது, வலது போலிக் கம்யூனிஸ்டுகளின் சந்தர்ப்பவாத அரசியலும்தான் இந்த மந்த நிலைக்கு காரணங்களாக உள்ளன.

எனவே புரட்சிகர, ஜனநாயக சக்திகளும், தமிழ்த் தேசிய உணர்வாளர்களும் இந்தச் சந்தர்ப்பவாத அரசியலிலிருந்து விலகி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஓரணியில் அணிதிரள வேண்டும். இன அழிப்புப் போர்க்குற்றவாளி இராஜபட்சே கும்பலைப் பாதுகாப்பதற்காக இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தும் அமெரிக்க, பிரிட்டன் ஏகாதிபத்தியவாதிகளை எதிர்த்தும்; அதில் இந்திய அரசு பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தியும் அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஈழத் தமிழர்களுக்கான ஒரே அரசியல் தீர்வு தமிழீழமே. அதை அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடவேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து வரும் நவம்பர் 8இல் சென்னையில் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு புரட்சிகர, ஜனநாயக சக்திகளையும், தமிழின உணர்வாளர்களையும் அறைகூவி அழைக்கிறோம்.

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை எதிர்த்து ...
கண்டன ஆர்ப்பாட்டம்
நாள் : 08.11.2013, வெள்ளி மாலை 4 மணி

இடம்: சென்னை, மெமோரியல் ஹால்

தலைமை : தோழர் ஞானம்


மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

No comments:

Post a Comment

விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.