Thursday, July 11, 2013

இளவரசனின் மரணம் தற்கொலை அல்ல, கொலை!



«  இளவரசனின் மரணம் தற்கொலை அல்ல, கொலை!

« கொலையாளிகள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடு!


அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே! 

காதலித்துக் கலப்புமணம் புரிந்த இளவரசனின் உடல், கடந்த 4ஆம் தேதியன்று தர்மபுரியில் இரயில் தண்டவாளம் அருகில் கண்டெடுக்கப்பட்டது. உடனடியாகக் காவல்துறையும், ஊடகங்களும் அது தற்கொலைதான் என்ற பிரச்சாரத்தை முடுக்கிவிட்டன. ஆனால் இளவரசனின் மரணம் விபத்தோ அல்லது தற்கொலையோ அல்ல; அது ஒரு திட்டமிட்ட படுகொலைதான் என்று அனைவராலும் கருதப்படுகிறது. 

இளவரசன் மரணம் என்பது ஒரு தனித்த சம்பவம் அல்ல. இராமதாசு, குரு போன்றோரின் தலைமையிலான பா.ம.க.வினரும், வன்னியர் சங்கக் காடையர்களும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தொடுத்துவரும் சாதிவெறித் தாக்குதல்களின் ஒரு பகுதியேயாகும்.

இராமதாசு கும்பலின் சாதிவெறி 

இராமதாசு கும்பல், அரசியலில் தான் இழந்துவிட்ட செல்வாக்கை மீண்டும் பெறுவதற்கும், உள்ளூர் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகச் சாதிவெறிக் கலகங்களைத் திட்டமிட்டு நடத்திவருகிறது. வன்னியர் வாக்கு வங்கியை உருவாக்க சாதி மோதல்களைத் தயாரிக்கிறது. இளவரசனின் காதல் திருமணத்தை அழிப்பதற்குத் திவ்யாவின் தந்தை நாகராஜை பலிகடாவாக்கி, நாய்க்கன் கொட்டாய் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களின் 300 குடிசைகளைக் கொளுத்தி அவர்களின் சொத்துகளையும் சூறையாடியது. அதற்குப் பிறகு 51 சாதிகளை ஒன்றிணைத்து “அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை” தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான ஒரு சாதிவெறி முன்னணியை உருவாக்கி தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகக் கலகத்தைத் தூண்டிவருகிறது. 

நாடகக் காதலை எதிர்ப்பது என்ற பேரில் தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களைக் குறிவைத்துத் தாக்குவது, காதல் மணம் கலப்பு மணத்தை எதிர்ப்பது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைத் திருத்த கோருவதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகளைத் தொடர வழிவகுத்தது; இட ஒதுக்கீடுகளை இரத்துசெய்யக் கோருவது என்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான ஒரு எதிர்ப்புரட்சிகர வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. தர்மபுரிக்குப் பிறகு பண்ருட்டியிலும், சித்ராபவுர்ணமி அன்று மரக்காணத்திலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதானத் தாக்குதல் தொடர்கின்றன. அண்மையில் சேத்தியாத்தோப்பு அருகில் வன்னியப் பெண்ணைக் காதலித்தான் என்பதற்காகத் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த கோபாலகிருஷ்ணன் என்ற மாணவரை வெட்டிக் கொன்றனர். அதன் தொடர்ச்சிதான் இளவரசனின் கொலையும். காதல் மணம், கலப்பு மணம் புரிபவர்களை வடநாட்டில் கௌரவக் கொலைகள் புரிவதைப் போல் தமிழகத்திலும் கௌரவக் கொலைகளை வன்னியச் சாதிவெறியர்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். 

இளவரசன் - திவ்யாவின் காதலுக்கு எதிரான கொலைவெறி 

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதி நாய்க்கன் கொட்டாயில் நடந்த சாதியப் பஞ்சாயத்திலேயே இளவரசனையும், திவ்யாவையும் வன்னியர் சங்கத்தினரும், பா.ம.க.வினரும் கௌரவக்கொலை செய்யத் திட்டமிட்டார்கள். ஆனால் அப்போது அந்தக் குடும்பம் தப்பித்துவிட்டது. “இளவரசன் என்னைக் கடத்தவில்லை, நான் விரும்பிதான் அவரைத் திருமணம் செய்து கொண்டேன்” என்று நீதிமன்றத்தில் கூறி, திவ்யா இந்தச் சாதிவெறியர்களின் முகத்தில் கரியைப் பூசினார். அதை அவர்களால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. எனினும் இத்திருமணத்தைப் பிரிப்பதற்குத் தொடர்ந்து முயற்சி செய்தனர். 

திவ்யாவின் தாயாரின் உடல்நிலையைக் காரணம்காட்டி அழைத்துவந்து மிரட்டி, இளவரசனிடம் இருந்து பிரித்து அந்தக் குடும்பத்தை அழிப்பது என்று திட்டமிட்டு செயல்பட்டனர். ஆட்கொணர்வு வழக்கில் உயர்நீதிமன்றத்தில் நேர்நின்று நீதிபதிகளிடம் “எனது தாய் விரும்பினால், இளவரசனோடு சேர்ந்து வாழ்வேன்” என்று முதல்நாள் கூறிய திவ்யா, அதற்கு அடுத்த நாளே “நான் அவரோடு சேர்ந்து வாழத் தயாரில்லை” என்று கூறுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார், மிரட்டப்பட்டார் என்பதற்கு உயர்நீதிமன்றமே சாட்சி. திவ்யா, இளவரசன் மீதோ அவரின் குடும்பத்தினர் மீதோ எந்த ஒரு குற்றச்சாட்டையும் இதுவரை வைக்கவில்லை. இத்தகைய ஒரு சூழலில்தான் இளவரசன் உயிரோடு இருக்கும்வரை அந்தத் திருமணத்தை அழிக்க முடியாது என்று கருதித்தான் வன்னிய சாதிவெறிக் காடையர்கள் திட்டம்போட்டு இளவரசனைக் கொன்று தண்டவாளத்தில் போட்டுள்ளனர். 

இளவரசனின் மரணம் தற்கொலை அல்ல, கொலை

இளவரசனின் மரணத்தை தற்கொலைதான் என்று முடித்துவிட உடல் கூறுவியல் ஆய்வை அவசர அவசரமாகச் செய்து முடித்தது தர்மபுரி காவல்துறை. அதை ஏற்க மறுத்து இளவரசனின் உறவினர்களும் பொதுமக்களும் புரட்சிகர ஜனநாயக சக்திகளும் கடுமையாக எதிர்த்துப் போராடினர். பின்னர், இளவரசன் தற்கொலைதான் செய்துகொண்டார் என்பதை நிரூபிக்க தர்மபுரி காவல்துறைக் கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க் தற்கொலைக் கடிதத்தைத் தேடி நான்கு நாட்கள் அலைந்தார். இளவரசனின் நண்பர்களைச் சாதிக் கலவரத்திற்குத் திட்டம் போட்டீர்கள், உங்களை உள்ளேத் தள்ளிவிடுவேன் என்று மிரட்டி கடிதத்தை வாங்கியுள்ளார். இளவரசன் கொலைக்குப் பிறகு அமைதியாகப் பிரச்சினையைத் தீர்ப்பேன் என்று மேலதிகாரிக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றத் துடிக்கிறார் அஸ்ரா கர்க். நீதியையும் உண்மையையும் சட்டத்தையும் காக்கவேண்டியவர் சாதிவெறியர்களைத் திரைபோட்டு மறைக்கிறார். 

இளவரசனோடு இனி சேர்ந்து வாழமாட்டேன் என்று திவ்யா கூறுவதற்கு முன்பே அதாவது ஜூலை 1ஆம் தேதிக்கு முன்பே இளவரசன் தற்கொலைக் கடிதம் எழுதியதுதான் மிகவும் வினோதம். காவல்துறையால்தான் இப்படி ஒரு திரைக்கதையை எழுதமுடியும். “அக்கடிதத்தில் உள்ளது எனது மகனின் கையெழுத்துமல்ல, தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு எனது மகன் கோழையுமல்ல” என்று இளவரசனின் தந்தை அந்தக் கடிதத்தை நிராகரித்துவிட்டார். 

இரயிலில் பாய்ந்து இளவரசன் தற்கொலை செய்துகொண்டது உண்மையெனில், இரயில் என்ஜின் டிரைவர்கள் அடுத்த இரயில் நிலையத்தில் வழக்கம்போல் அதுபற்றிப் பதிவு செய்திருக்கவேண்டும். தென்மேற்கு ரயில்வே மண்டல பெங்களூர் பிரிவு மேலாளர் அருண்குமார் அகர்வால் குர்லா எக்ஸ்பிரசில் யாரும் அடிபட்டார் என்பதோ அதற்குப் பின்னால் வந்த இரண்டு இரயில் டிரைவர்கள் இளவரசனின் உடலைப் பார்த்ததாகவோ பதிவுசெய்யவில்லை என்று கூறுகிறார். மேலும் காவல்துறையினர் அவசர அவசரமாகச் செய்த உடற்கூறு ஆய்வின்படி இளவரசன் மரணம் அடைந்ததாகக் கூறப்படும் நேரத்தில் எந்த இரயிலும் அந்தப் பாதையில் செல்லவே இல்லை. மேலும் இரயிலில் அடிபட்டதற்கான எந்த ஒரு அறிகுறியும் இளவரசனின் உடலில் இல்லை. எனவே இது ஒரு திட்டமிட்ட படுகொலைதான் என்று மனித உரிமைக் கமிஷனின் ஆய்வும், கீற்று இணையத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையும் தெளிவாகக் கூறுகின்றன. இது தற்கொலை மரணம்தான் என்று கூறி தர்மபுரி காவல்துறை சாதிவெறியர்களை ஏன் காப்பாற்றத் துடிக்கிறது? தாழ்த்தப்பட்ட மக்கள் பிணங்களின் மீதுதான் சட்ட ஒழுங்கையும் அமைதியையும் பாதுகாப்பதா? 

இன்று நாட்டில் சுமார் 2.5 லட்சத்திற்கும் மேல் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு மாண்டுள்ளனர். அவ்வாறு அவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணம் என்ன? மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடித்துவரும் புதியகாலனிய வேளாண்மைக் கொள்கைகள்தான், விவசாயத்தை அழித்து, விவசாயிகளைக் கடனாளியாக்கி அவர்களைத் தற்கொலைக்குத் தள்ளுகிறது. அரசாங்கம் நேரடியாக அவர்களைத் தற்கொலை செய்துகொள்ளச் சொல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்தத் தற்கொலைக்கு அரசாங்கம்தான் பொறுப்பு என்று நாம் கூறுவதில்லையா? அதேபோல இளவரசன் மரணம் தற்கொலைதான் என்று ஒரு வாதத்திற்கு ஒப்புக்கொண்டாலும் கூட, அவர் அவ்வாறு தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் என்ன? அவ்வாறு அவரைத் தூண்டியது யார்? அவர் குடும்பத்தை அழித்த பா.ம.க.வும், வன்னியர் சங்கக் காடையர்களும்தானே காரணம். அதற்குத் தண்டனை இல்லையா? எனவே இளவரசனின் கொலைக்குக் காரணமான கொலையாளிகளைக் கண்டுபிடித்துச் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதே அனைத்து மக்களின் கோரிக்கையாகும். 

விசாரணைக் கமிஷன்கள் வெறும் கண்துடைப்புகளே

“தற்கொலைக்குக் காரணம் நான் தான் வேறு யாரும் காரணமல்ல?” என்று இளவரசன் எழுதியதாக ஒரு அனாமதேய கடிதத்தைக் தர்மபுரி காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க் கண்டுபிடித்துள்ளார். காவல்துறை ஆய்வாளர் சம்பத் தலைமையில் ஒரு விசாரணைக்குழுவுக்கு ஆணையிடுகிறார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவோ ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் தனிநபர் கமிஷன்  ஒன்றை நியமிக்கிறார். தற்கொலை என்று ஒரு மொட்டைக் கடிதத்தை வெளியிட்டப்பின் ஆய்வுக்குழு எதற்கு? சட்டப்பூர்வமாகக் கொலையாளிகளைத் தப்புவிக்கும் தந்திரமா? அல்லது காலம் தாழ்த்தி காயடிக்கும் தந்திரமா? உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்பு மகன் சதிஷ்குமாரின் கொலையைக் காவல்துறையினர் தற்கொலை என்றே கடைசிவரை சாதித்தனர். தமிழக அரசு அமைத்த விசாரணைக் கமிஷனோ, சி.பி.ஐ. - விசாரணையோ இன்றுவரை குற்றவாளிகளைக் கண்டுபிடித்துக் கைதுசெய்ய மறுக்கிறது. அதுபோல இளவரசன் கொலையை மூடிமறைக்கவே விசாரணைக் குழு பயன்படும். 

ஜெயலலிதா அரசாங்கம், பா.ம.க.வினரும் வன்னியர் சங்கத்தினரும் தாழ்த்தப்பட்ட மக்கள்மீது தொடுத்துள்ள தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்க மறுக்கிறது. பொதுச் சொத்துகளுக்குச் சேதாரம் விளைவித்ததாகவே வழக்குத் தொடுத்துள்ளது. அதன் மூலம் வன்னியர் வாக்குவங்கிக்குச் சேதாரம் இல்லாமல் பார்த்துக்கொள்கிறது. பெரும்பான்மையினராக உள்ள சாதியினரின் வாக்குகளுக்காக அவர்கள் சிறுபான்மையினர் மீது நடத்தும் தாக்குதலைக் கண்டும் காணாமல் விட்டுவிடுகிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்படும்போது அவர்களின் எதிர்ப்புகளை 144 தடை ஆணைப் போட்டு நசுக்குகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாய்ப்பூட்டு போடுகிறது. மறுபுறம் தி.மு.க.வின் கருணாநிதியோ சாதிவெறியன் இராமதாசு மீது ‘மனிதாபிமான’ பரிவுகாட்டுகிறார். தமது மகள் கனிமொழியை இராஜ்யசபா எம்.பி.யாக்க சாதிவெறியர்களுடன் சரசமாடுகிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. இவ்வாறு தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளும் சாதிவெறிக்குத் துணைபோகின்றன. அகில இந்திய ஆளும் வர்க்கக் கட்சிகளான காங்கிரசும் பா.ஜ.க.வும் சாதி வெறியை எதிர்த்தோ கவுரவக் கொலைகளை எதிர்த்தோ எதையும் செய்யவில்லை. மேலும் கடந்தகாலங்களைப் போல் அல்லாமல் தற்போது புரட்சிகர ஜனநாயக சக்திகள் பலவீனமடைந்திருப்பதுதான் இத்தகைய சாதிக் கலவரங்களுக்கும், படுகொலைகளுக்கும் காரணமாக இருக்கின்றன. புரட்சிகர மற்றும் ஜனநாயக இயக்கங்களைப் பலப்படுத்துவது ஒன்றுதான் இத்தகைய நிலைமைகளை மாற்றியமைக்கும். 

எனவே, கவுரவக் கொலைகளை தடுத்து நிறுத்தவும் சாதி, தீண்டாமைக் கொடுமைகளை ஒழித்துக்கட்டவும் பின்வரும் முழக்கங்களின் பின்னால் அணிதிரள அறைகூவி அழைக்கிறோம். 

« இளவரசனின் மரணத்திற்கு காரணமான கொலையாளிகள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடு!

« தமிழக அரசே! தாழ்த்தப்பட்டோரை கொலைசெய்யும் மேல்சாதி கொலை வெறிக்குத் துணைபோகாதே!

« தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான இராமதாசு கும்பலின், சாதிவெறித் தாக்குதலுக்கு எதிராகவும், சாதி, தீண்டாமையை எதிர்த்தும் அனைத்து சாதி உழைக்கும் மக்களும் ஜனநாயகசக்திகளும் ஒன்றுபட்டுப் போராடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு



ஜூலை 2013


No comments:

Post a Comment

விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.