Sunday, April 7, 2013

அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானம் ஈழத்தமிழருக்கு மாபெரும் துரோகம்!


அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானம்
ஈழத் தமிழருக்கு மாபெரும் துரோகம்!

இலங்கைக்கு எதிராக .நா. மனித உரிமைக் கழகத்தில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின் மீது ஒரு மிகப்பெரும் எதிர்பார்ப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் .நா. தீர்மானம் ஈழத்தமிழருக்கு மாபெரும் துரோகத்தை இழைத்துவிட்டது.

இவ்வாண்டு மார்ச் மாதம் .நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை இலங்கை அரசுக்கு எதிராக ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். “கடந்த ஆண்டு .நா. மனித உரிமைக் கழகம் வலியுறுத்திய தீர்மானத்தின்படி இலங்கை அரசு தமிழர் பகுதிகளில் குவித்துள்ள இராணுவத்தை திரும்பப் பெறவேண்டும்; இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்; புலம் பெயர்ந்த தமிழர்களை வடக்கு, கிழக்கு பகுதியில் குடியமர்த்தி பொதுஜன வாக்கெடுப்பு நடத்தி அரசியல் தீர்வு காணவேண்டும்என்று அந்த அறிக்கை வலியுறுத்தியிருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அமெரிக்காவின் தீர்மானம் இருக்கும் என்ற அடிப்படையில்தான் அதற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

அமெரிக்கா முன்வைத்த வரைவுத் தீர்மானம் ராஜபட்சே கும்பலை இன அழிப்புப் போர்க்குற்றவாளி என்றோ, இலங்கையில் நடந்தது ஒரு இன அழிப்புப் போர்தான் என்றோ குறிப்பிடாமல் ஒரு நீர்த்துப் போன தீர்மானமாகவே முன்வைக்கப்பட்டது. இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் பற்றி சர்வதேச விசாரணை மற்றும் .நா. அதிகாரிகள் கட்டுப்பாடுகள் இன்றி இலங்கையில் விசாரணை மேற்கொள்வது பற்றித்தான் அந்த அறிக்கை கூறியிருந்தது.

ஆனால் அமெரிக்கா முன்வைத்த இறுதித் தீர்மானத்திலோ இவ்விரண்டும் நீக்கப்பட்டுவிட்டது. மனித உரிமைகள், சர்வதேச சட்ட விதிகள் மீறல் குறித்துநம்பத்தகுந்த சர்வதேச விசாரணைக்குழுஎன்பதற்குப் பதிலாக இலங்கை அரசாங்கமேசுதந்திரமான நம்பத்தகுந்த விசாரணை நடத்தவேண்டும்என்பதாக மாற்றப்பட்டுவிட்டது. இலங்கைக்குள் .நா. அதிகாரிகள் தடையின்றி சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவேண்டும் என்பதும் நீக்கப்பட்டு இலங்கை அரசின் அனுமதியுடன் தான் இயங்கவேண்டும் என்று மாற்றப்பட்டுவிட்டது.

அதாவதுஇலங்கை அரசு அமைத்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசு கவனம் செலுத்தவேண்டும். மறுவாழ்வுப் பணிகளில் இலங்கை அரசு முன்னேற்றம் கண்டிருப்பதை வரவேற்கிறோம். மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பான கவலைகளை எதிர்கொள்ள எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளையும் .நா. மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகளையும் மேற்கொள்ள ஊக்கப்படுத்துகிறோம். இந்தப் பணிக்காக உதவி செய்ய அமெரிக்கா தயாராயிருக்கிறது. மேலும் அதனை நடைமுறைப்படுத்த .நா. தொழில்நுட்ப ரீதியான பங்களிப்பை வழங்கவேண்டும். சர்வதேச சமூகமானது இலங்கை எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு உதவவேண்டும். மக்கள் நலன்சார்ந்த அமைப்புகளை இலங்கை அரசு வலுப்படுத்த வலியுறுத்தப்படும்.” என்று அந்த அறிக்கை இலங்கை அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. வரைவு அறிக்கையில் இலங்கை அரசுக்கு எதிரான கண்டனம், வலியுறுத்தல் என்றிருந்த வார்த்தைகளும் நீக்கப்பட்டு ஆலோசனைகள், ஊக்கப்படுத்தல் என்று மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அமெரிக்காவின் .நா. தீர்மானம் இலங்கை அரசுக்கு ஆதரவளித்து ஈழத்தமிழருக்கு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளது.

அமெரிக்கா இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான காரணம் என்ன?

அமெரிக்க ஏகாதிபத்தியம் இலங்கை மீதான மேலாதிக்கத்திற்காக தமிழ் ஈழத்தை எதிர்த்தே வந்துள்ளது. விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தி - தமிழ் ஈழத்தைக் கைவிடச் செய்து - அவர்களைக் கொண்டு இலங்கை அரசைத் தமக்கு அடிபணிய வைக்கும் தந்திரத்தை அமெரிக்கா மேற்கொண்டது. அதற்காகத்தான் விடுதலைப் புலிகள் மீது தடை விதித்து அவர்களுக்கு சர்வதேச ரீதியான நிதி உதவிகளையும், ஆயுத உதவிகளையும் தடைசெய்தது. இலங்கைக்கு தனது அடிவருடி இஸ்ரேல் அரசு மூலம் ஆயுதங்கள் வழங்க உதவியது. இறுதி யுத்தத்தில் ஈழத் தமிழினம் அழிக்கப்படுவதை மௌனமாக அங்கீகரித்தது. எனவே அமெரிக்காவும் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட ஒரு நாடுதான். இலங்கை அரசு அமெரிக்காவின் பேச்சைக் கேட்காமல் இரசியா, சீனா உதவியுடன் விடுதலைப் புலிகளை அழித்தொழித்தது. தற்போது சீனாவின் பக்கம் இலங்கை சாய்வதை தடுத்து நிறுத்தி தன்பக்கம் கொண்டு வரவே அமெரிக்கா மனித உரிமை பற்றிப் பேசுகிறது.

அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா தலையிட்டு சிதைத்ததன் விளைவாகத்தான் அந்தத் தீர்மானம் இந்த அளவுக்கு மாற்றப்பட்டது என்பது ஒரு பகுதிதான் உண்மையாகும். ஆசியா மீதான அமெரிக்காவின் மேலாதிக்க நலன்களும், இலங்கை மீதான இந்தியாவின் துணைமேலாதிக்க நலன்களும்தான் அமெரிக்க-இந்திய-இலங்கை நாடுகளுக்கிடையில் திரைமறைவில் பேரங்கள் நடப்பதற்கும் தீர்மானம் நீர்த்துப் போவதற்கும் காரணங்களாக அமைந்தன.

இந்திய அரசு, .நா தீர்மானம் குறித்து இலங்கை அமெரிக்காவுடன் பேசவேண்டும் என்று ஆரம்பம் முதலே வற்புறுத்தியது. அமெரிக்க அடிவருடி, அரசியல் மாமா சுப்பிரமணிய சாமியை இலங்கைக்கு அனுப்பி - அமெரிக்காவோடு பேசுவதற்கு ஏற்பாடு செய்தது. சுப்பிரமணிய சாமியின் ஏற்பாட்டுடன் இலங்கை அமெரிக்காவுடன் திரைமறைவில் பேரம் பேசியே - இந்தியாவின் ஆலோசனை அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் ஈழத் தமிழருக்கு எதிராக நிறைவேற்றப் பட்டது. அமெரிக்க - இந்திய கூட்டுச் சதியே அதற்கான காரணமாகும். அதிலும் அமெரிக்காதான் முதன்மை பாத்திரத்தை வகித்தது.

அதை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சரே ஒப்புக் கொள்கிறார்: “.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான விவகாரத்தில் இந்த நடைமுறைகள் அனைத்திலும் நாங்கள் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றினோம். இன்னும் சொல்லப்போனால், அதில் இந்தியா மேற்கொண்ட திருத்தங்களை நாங்கள் வரவேற்றோம். எனவே இந்த விசயத்தில் இந்தியா அளித்த ஒத்துழைப்பில் நாங்கள் திருப்தி அடைந்தோம். இலங்கைத் தீவு மீது இந்தியாவுக்கு கணிசமான செல்வாக்கு உள்ள காரணத்தால், இந்த விவகாரத்தில் மேலும் முன்னேற்றத்தை எட்ட இந்தியாவுடன் ஒத்துழைத்துச் செயல்படுவது சர்வதேச சமூகத்துக்கு அவசியமாகும். இந்தியாவின் தாக்கம் காரணமாக இலங்கைக்கு எதிரான தீர்மானம் நீர்த்து போனதாகக் கூறப்படுவதை நான் நிராகரிக்கிறேன்என்று அவர் கூறியுள்ளார். இதிலிருந்து இந்திய-அமெரிக்க கூட்டுச் சதியையும், அமெரிக்காவின் முதன்மையான பாத்திரத்தையும் புரிந்துகொள்ள முடியும்.

அமெரிக்காவின்பசிபிக் நூற்றாண்டுத் திட்டமும்இலங்கையும்

2011ஆம் ஆண்டு அன்றைய அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டன் ஆசியாவை மையமாகக் கொண்டஅமெரிக்காவின் பசிபிக் நூற்றாண்டுகொள்கைத் திட்டத்தை வெளியிட்டார். ஈராக்கின் வெற்றிக்குப் பிறகு அமெரிக்கா ஆப்கனிலிருந்து படைகளைத் திருப்பப்பெற இருக்கும் நிலையில் ஆசிய-பசிபிக் பிராந்தியம் அரசியல் முக்கியத்துவம் உடையதாக மாறிவருகிறது. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, ஆசியப் பகுதியில் குவிந்துள்ள கனிமவளங்கள் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறது. அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை முதல் இந்தோனேசியாவின் மலாக்கா நீர் சந்திப்பு வரையிலான பசிபிக், இந்திய பெருங்கடல்கள் முழுவதும் அமெரிக்காவின் வர்த்தக மற்றும் இராணுவ மேலாண்மையை நிறுவுவதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதற்கு இந்துமகா சமுத்திரம் மையமாக மாறியுள்ளது. எனவே, இலங்கையில் சீனாவின் செல்வாக்கு பெருகிவருவது தனக்கு ஒரு அச்சுறுத்தலாகவே அமெரிக்கா கருதுகிறது.

அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளி நாடுகள் சீனாவின் இராணுவம் நவீனப்படுத்தப்படுவதையும், விரிவுபடுத்தப் படுவதையும் சந்தேகத்துடனேயே பார்க்கின்றன. மத்திய கிழக்கு முதல் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் வரை சீனா, எண்ணெய் மற்றும் ஆதாரவளங்கள் மீது அமெரிக்காவிற்கு போட்டியாகத் திகழ்கிறது. எனவே ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சக்திகளின் சமநிலையில் அமெரிக்காவின் மேல்நிலையைக் கொண்டுவர அமெரிக்கா தனது இராணுவ வலிமையைப் பெருக்க திட்டமிட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவின் இராணுவத்துறைச் செயலாளர் லியோன் பனிட்டாஅமெரிக்கா ஆசியாவில் தனது படைகளை மறு சமனிலைப் படுத்த உள்ளதுஎன அறிவித்தார். பசிபிக்-அட்லாண்டிக் பகுதியில் அமெரிக்காவின் இராணுவம் 50:50 என நிலைகொண்டுள்ளதாகவும் அதை 2020ல் 60:40 என மாற்றியமைப்போம் என்றும் அறிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடலில் அதன் இராணுவம் அதிகப்படுத்தப்பட உள்ளது. அதில்தான் அமெரிக்காவிற்கு இலங்கையின் முக்கியத்துவம் அடங்கியுள்ளது.

ஆசியாவில் சீனாவின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் விதத்தில் அமெரிக்கா ஏற்கெனவே ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளோடு கூட்டணி அமைத்துள்ளது. தற்போது கிழக்கு ஆசியா மற்றும் தென் ஆசியாவில் மேலாதிக்கம் செலுத்துவதற்கு இந்தியாவைத் தனது கூட்டாளியாக மாற்றிவருகிறது. அமெரிக்காவுடனான இந்தியாவின் அணுசக்தி, இராணுவ ஒப்பந்தங்கள் அதற்கான அடிப்படைகளை வகுத்துள்ளது.

யுத்ததந்திர ரீதியாக ஆசியாவை தமது கட்டுபாட்டிற்குள் கொண்டுவர அமெரிக்கா மனித உரிமைப் பிரச்சினையை கையில் எடுத்துள்ளது. தனது நட்பு நாடுகள் மீதும் கூட மனித உரிமை பேரால் தலையிட்டு ஆட்சி மாற்றம் மூலம் (Regime Change) தமது பொம்மை ஆட்சியை நிறுவி வருகிறது. ஆப்கன், ஈராக், எகிப்து, லிபியா போன்ற நாடுகளின் ஆட்சியை மனித உரிமைபேரால் கவிழ்த்து தமது பொம்மை ஆட்சியை அமெரிக்கா நிறுவியுள்ளது. ஆனால் பர்மாவில் மனித உரிமையை முன்வைத்து, மிரட்டி இராணுவ ஆட்சியாளர்களுக்கும், எதிர்க்கட்சிக்கும் சமரசம் உருவாக்கி இராணுவ ஆட்சியை தமக்கு சாதகமாக மறு அணிச்சேர்க்கை மூலம் (Regime Realignment) மாற்றிக்கொண்டது. பர்மிய அரசு அமெரிக்காவுடன் உடன்பாட்டிற்கு வந்தவுடன் அந்நாட்டில் பர்மிய அரசு நடத்தும் மனித உரிமை மீறல் பிரச்சினையை அமெரிக்கா கைகழுவி விட்டது. அதே போன்றுதான் மனித உரிமை பேசி இலங்கை இராஜபட்சே கும்பலை மிரட்டி இலங்கை அரசை மறு அணிசேர்க்கை மூலம் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர அமெரிக்கா முயற்சிக்கிறது. மனித உரிமை என்பது அமெரிக்காவைப் பொறுத்தவரை புதிய காலனியத்துக்கான ஒரு கருவியேயாகும். ஈழத் தமிழினத்தைப் பலிகொடுத்து இலங்கையை விழுங்கத் துடிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடுவதன் மூலம் மட்டுமே ஈழத் தமிழினத்தின் விடுதலை சாத்தியமாகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் இரசிய-சீன ஏகாதிபத்திய அணி போர்க்குற்றவாளி இராஜபட்சேவைக் காப்பாற்றுவதோடு, இலங்கை அரசின் இன அழிப்புப் போருக்குத் துணை போகின்றன. எனவே ஏகாதிபத்தியங்களை எதிர்த்துப் போராடுவதன் மூலம் மட்டுமே - தமிழ் ஈழ விடுதலையை வென்றெடுக்க முடியும். இரு ஏகாதிபத்திய அணிகளில் பிரதானமாக அமெரிக்க அணியை எதிர்த்துப் போராடுவதுதான் தமிழ் ஈழம் காண்பதற்கான வழியாகும்.

ஈழத் தமிழின அழிப்புக்குத் துணைபோகும் இந்தியா

இந்திய அரசு திரைமறைவில் அமெரிக்காவோடு பேசி அமெரிக்கத் தீர்மானத்தை இலங்கை அரசுக்கு சாதகமாக மாற்றிய பிறகுதான் அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. தமிழக மாணவர்களின் போராட்டத்தையோ, உலகம் முழுவதும் நடந்த தமிழ் மக்களின் போராட்டங்களின் நிர்ப்பந்தங்களாலோ இந்திய அரசு அந்தத் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தனியாக இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரத் தயாரில்லை. கூட்டணிக் கட்சியான திமுக வெளியேறிய போதும் கூட அதைப் பற்றி மத்திய அரசு கவலைப்படவும் இல்லை.
இந்திய அரசு கடைப்பிடித்து வரும் தென் ஆசிய மேலாதிக்கத்திற்கான விரிவாதிக்க வெளியுறவுக் கொள்கைகள், உள் நாட்டில் தேசிய இன ஒடுக்குமுறைக் கொள்கைகள்தான், இராஜபட்சே அரசுக்கு ஆதரவாக இந்திய அரசு செயல்படுவதற்கான காரணங்களாக உள்ளன.

இந்திய அரசு ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை ஒருபோதும் ஏற்காது என்று கூறுகிறது. ஆனால் இந்திய அரசு அண்டை நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட்டு சிறுசிறு நாடுகளை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது. பாகிஸ்தானில் தலையிட்டு அதை இரண்டாக உடைத்தது. மாலத்தீவின் உள்விவகாரங்களில் அண்மையில் தலையிட்டது. இலங்கையின் மீது தொடர்ந்து கடந்த 30 ஆண்டுகளாக நேரடியாகவும், மறைமுகமாகவும் தலையிட்டு இலங்கை இனவெறி அரசை பாதுகாத்துவருகிறது. ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போரை நசுக்கிவருகிறது.

தனது செல்வாக்கு மண்டலத்தின் கீழ் உள்ள இலங்கையில் சீனாவின் செல்வாக்கைத் தடுத்து நிறுத்துவது என்ற அடிப்படையில்தான் 2009ல் மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களித்து இராஜபட்சேவைக் காப்பாற்றியது. தற்போது இந்தியாவின் இலங்கை மீதான நலன்கள் பாதுகாக்கப்படும் என்ற அமெரிக்காவின் உத்திரவாதத்தின் அடிப்படையில் இராஜபட்சே கும்பலை கட்டுப்படுத்தும் நோக்கத்திற்காகத்தான் இலங்கை அரசை எதிர்த்து வாக்களித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த இலங்கையும் வேண்டும். எனவே ஈழத் தமிழர் மீதான போர்க்குற்றங்களோ, ஈழத்தமிழர்களின் நலன்களோ இந்தியாவுக்கு ஒரு பொருட்டல்ல. எனவேதான் ஈழத்தமிழின அழிப்புக்கு இராஜபட்சே கும்பலுக்கு இந்திய அரசு துணைபோகிறது.

இன அழிப்புப் போர்க் குற்றவாளிகள் மீது சர்வதேச விசாரணையையோ, தமிழ் ஈழம் அமைப்பதற்கான பொதுஜன வாக்கெடுப்புக் கோரிக்கையையோ இந்திய அரசு ஆதரிக்காததற்கு மற்றொரு காரணம் இந்திய அரசு ஒரு இன ஒடுக்குமுறை அரசாகவும் இருப்பதுதான்.

இந்திய அரசு காஷ்மீரிலும் - வடகிழக்கு மாகாணங்களிலும் அவர்களின் தேசிய சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை மறுத்து இராணுவ ஒடுக்குமுறையின் கீழ் அடிமைப்படுத்தி வருகிறது. காஷ்மீரில் கடந்த 10 ஆண்டுகளில் 1 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆள் கடத்தல், காணாமல்போதல், கற்பழிப்பு, மனித உரிமை மீறல்கள் அன்றாடம் தொடர்கின்றன. வடகிழக்கு மாகாணங்களிலும் இந்திய இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள் எல்லைமீறி நடக்கின்றன.

காஷ்மீர் பிரச்சினையில் .நா. பாதுகாப்புக் குழு 1947ல் கூறியது என்ன? காஷ்மீர் எந்த நாட்டுடன் சேர்ந்திருப்பது என்பதை பொதுவாக்கெடுப்பு நடத்தி தீர்மானிக்க வசதியாக இரு நாடுகளும் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பதுதானே? இதுவரை இந்தியா அதை ஏற்கவில்லை. அப்படி இருக்கையில் தமிழீழம் அமைப்பதற்கான வாக்கெடுப்புக் கோரிக்கையை இந்தியா எப்படி ஏற்கும்? எனவே இன அழிப்புப் போர்க்குற்றம் பற்றியோ, இராஜபட்சே கும்பலை கூண்டிலேற்றுவது பற்றியோ, தமிழீழம் அமைப்பதற்கான பொதுவாக்கெடுப்புக் கோரிக்கையையோ இந்தியா எக்காலத்திலும் ஆதரிக்காது. மாறாக இலங்கை மீதான தமது விரிவாதிக்க நலன்களிலிருந்து ஈழத் தமிழினத்தின் விடுதலைக்கு எதிராகவே செயல்படும். எனவே இந்திய அரசை எதிர்த்துதான் ஈழத் தமிழர்கள் தங்களது விடுதலைக்கான போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது.

தனித் தமிழீழமே தீர்வு

விடுதலைப் புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டப் பிறகு, அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள் மற்றும் இரசியா, சீனா போன்ற நாடுகளின் ஆதரவும் இல்லாத ஒரு சூழலில், .நா. மன்றமும் கைவிரித்துவிட்ட நிலையில் இனி தனித்தமிழ் ஈழம் சாத்தியமில்லை. எனவே தமிழீழ கோரிக்கையை கைவிட்டு அதிக அதிகாரம், அற்பச் சலுகைகளுக்கான உடனடிப் போராட்டங்கள் தான் இன்றைய தேவை என்று ஈழ எதிர்ப்பாளர்கள் ஆலோசனைகளை வாரிவழங்குகின்றனர். எப்படியாவது தமிழீழக் கோரிக்கையை கைவிடச்செய்ய வேண்டும் என்று கனவு காண்கின்றனர்.

ஆனால் ஈழம் ஆசியாவின் அயர்லாந்து என்பதை இவர்களால் உணரமுடியாது. சிங்கள பேரினவாத, புத்தமதவாத இலங்கை அரசிற்குள் ஈழத்தமிழ் தேசிய இனம் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமின்றித்தான் தனி ஈழக் கோரிக்கையை முன்வைத்துப் போராடிவருகிறது. ஈழத் தமிழினம் தனக்கான தனி அரசு அமைத்துக்கொள்ளும் உரிமை என்பது அதன் பிறப்புரிமை ஆகும். அந்த உரிமை, பேரம் பேசுவதற்கான ஒரு பொருள் அல்ல. அது ஈழத் தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையாகும். போரின் வெற்றி தோல்வியால் அதை விலைபேச ஈழத் தமிழ் மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்.

இலங்கையில் வாழும் இரு தேசிய இனங்களுக்கிடையிலான பகைமையையே இலங்கை அரசு தனது வாழ்வுக்கு அடிப்படையாகக் கொண்டுள்ளது. அது தகர்ந்தால் இலங்கை அரசு அமைப்பும் தகர்ந்துவிடும். இலங்கை அரசை தகர்த்தெரியாமல் அரசியல் தீர்வு என்பதே கிடையாது.

ஈழத்தமிழினச் சிக்கலுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு விடுதலைப்புலிகளின் பயங்கரவாதமே தடையாக உள்ளது. விடுதலைப்புலிகளை ஒழித்த பிறகுதான் அரசியல் தீர்வுஎன்று சொன்ன கொலைகாரன் இராஜபட்சே இன்று ஈழமக்களுக்கு வழங்கியுள்ள பரிசு என்ன?

இராஜபட்சேவின் குடும்பம் - இராணுவம், ஆட்சியதிகாரம், நீதித்துறை என அனைத்தையும் முழுமையாகக் கட்டுப்படுத்தி வருகிறது. இலங்கையின் தலைமை நீதிபதி அரசியல் சாசனத்திற்கு விரோதமாக மாற்றப்பட்டுள்ளார். இந்திய-இலங்கை ஒப்பந்தப்படியான வடக்கு, கிழக்கை இணைத்து தமிழர் தாயகம் என்பதை இராஜபட்சே கும்பல் மறுத்துவிட்டது. வரும் செப்டம்பர் மாதம் வடக்கு பகுதிக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஊடகங்களும் மனித உரிமை அமைப்புகளும் முற்றாகத் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. தமிழர் பிரதேசங்கள் முழுமையாக இராணுவ மயமாக்கப் பட்டிருக்கின்றன. தமிழர் வாழ்ந்த பகுதிகளில் இராணுவத்தின் துணையோடு சிங்களர்கள் குடியேற்றப்பட்டு தமிழர் பகுதிகள் சிங்கள மயமாக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு .நா. தீர்மானத்தின்படி எந்தப் போர்க்குற்றமும் விசாரிக்கப்படவில்லை. எல்.எல்.ஆர்.சி என்ற போலி விசாரணை அமைப்பு ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை.

மாறாக, இன்னமும் தமிழர்கள் மீது தாக்குதல்கள் தொடர்கின்றன. ஆள்கடத்தல், காணாமல்போதல், பாலியல் வன்முறை போன்றவை இன்றும் நீடித்து வருகின்றன. சிங்களப் பேரினவாதிகளின் கிறிஸ்துவர்கள் மற்றும் முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. ஈழத்தமிழினத்தின் மீதான வெற்றியை அரசு விழாவாக நடத்துகிறது.

இத்தகைய ஒரு சூழலில் ஈழத்தமிழர்களின் மீதான தாக்குதல்களைக் கண்டிக்கவோ, இராணுவமயமாக்கப்பட்ட இலங்கை அரசை எதிர்த்து ஜனநாயகத்துக்கான போராட்டத்தை நடத்துவதற்கோ, ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை உண்மையில் ஆதரிப்பதற்கோ எந்தவொரு இயக்கமும் சிங்களர்கள் மத்தியில் இல்லை. எனவே தமிழீழ மக்கள் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சிங்களப் பேரினவாத ஒடுக்கு முறையிலிருந்து விடுபடுவதற்கு தனித் தமிழ் ஈழம் காண்பதைத் தவிர வேறு வழியில்லை. நீண்டகாலம் பிடித்தாலும், சிரமமானது என்றாலும் அவசியமானது, உறுதியானது, சரியானது என்பதும் தனித்தமிழ் ஈழம் அடைவது ஒன்றுதான் ஈழத்தமிழர்களுக்கான ஒரே அரசியல் தீர்வாகும்.

தனித்தமிழ் ஈழம் அமைப்பதற்குத் தடையாக இருப்பது இலங்கை அரசு மட்டுமல்ல. ஏகாதிபத்தியவாதிகள் குறிப்பாக அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகளும், துணை மேலாதிக்க இந்திய அரசும் தடையாக இருக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட தேச மக்கள், பாட்டளி மக்கள் அனைவரும் தமிழ் ஈழத்திற்கான நட்பு சக்திகளாகும். ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான முரண்பாடு மறைமுக சேமிப்பு சக்தியாக இருந்தாலும், ஈழ மக்கள் அதை பயன்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளனர். எனவே தமிழ் ஈழத்திற்கானப் போராட்டத்தை உலக மக்களின் ஆதரவோடு நடத்துவதற்கான வழியையே கடைப்பிடிக்க வேண்டும்.

அந்த லட்சியத்தின் அடிப்படையில் உடனடிப்பணியாக சிங்கள இராணுவத்தை ஈழப்பகுதியிலிருந்து வெளியேற்றவும், தமிழர் பகுதிகளை சிங்களமயமாக்குவதைத் தடுத்து நிறுத்தவும் இன அழிப்புப் போர்க்குற்றவாளிகளை கூண்டிலேற்ற போராடுவதும் அவசியமாகும். அதற்கு உலகத் தொழிலாளர்களும், ஒடுக்கப்பட்ட தேசங்களும் குரல்கொடுப்பது அவசியமானதாகும். மாறாக உடனடிப் பிரச்சனையை மட்டும் முன்வைத்து இறுதி இலட்சியத்தை காவு கொடுப்பதோ அல்லது இறுதி இலட்சியத்தை பேசிக்கொண்டு உடனடிக் கடமைகளை உதாசீனப்படுத்துவதோ எதுவானாலும் அது ஈழத்தமிழினத்தின் தற்கொலைக்கு சமமாகும்.

தமிழீழத்திற்கு ஆதரவான மாணவர் போராட்டம்

இன அழிப்புப் போர்க்குற்றவாளி ராஜபட்சேவை கூண்டிலேற்றவும், தமிழீழம் அமைப்பதற்கான ஒரு பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானத்தை இந்தியா .நா.வில் கொண்டு வரவேண்டும் என்ற மாணவர்களின் போராட்டம் இந்திய அளவிலும் உலக அளவிலும் நல்ல விளைவுகளை உருவாக்கியுள்ளது. இந்திய அரசோ, .நா. மன்றமோ இத்தகைய கோரிக்கைகளை எக்காலத்திலும் ஏற்கப் போவதில்லை என்ற நிலைமையில் மாணவர் இயக்கம் அடுத்தகட்டமாக எந்தத்திசையில் செல்ல வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

.நா சபை மூலமாகவோ, அமெரிக்காவையும் இந்தியாவையும் நிர்ப்பந்தம் கொடுப்பதன் மூலமாகவோ தமிழீழத்தை அடைந்துவிட முடியும் என்ற மாயையிலிருந்து மாணவர்கள் விடுபட வேண்டும். அமெரிக்காவையும், இந்தியாவையும் எதிர்த்து ஒரு மக்கள் இயக்கத்தை கட்டியமைப்பதன் மூலம் மட்டுமே, தமிழீழத்திற்கான உருப்படியான ஆதரவை நம்மால் வழங்க இயலும்.

தமிழீழத்திற்கான போராட்டத்தை ஈழத்தமிழர்கள்தான் போராடிப் பெறமுடியும். நம்மால் அந்தப் போராட்டத்திற்கு ஆதரவைத்தான் தரமுடியும். இன்றைய சூழலில் தமிழீழத்திற்கு ஆதரவான உலக மக்களின் குறிப்பாக தமிழக மக்களின் போராட்டம் அதற்கு ஒரு உந்து சக்தியாக அமையும்.

தமிழீழத்திற்கு ஆதரவாக நாம் செய்ய வேண்டிய பணி என்ன? இந்திய அரசு தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும். விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் அகதிகள் அந்தஸ்தையும், அரசியல் உரிமையையும் வழங்க வேண்டும். தமிழக மீனவர்களின் மீன் பிடிப்பு உரிமையை மீட்பதற்காக கச்சத்தீவை மீட்கவேண்டும். இலங்கை அரசு ஈழப்பகுதியிலிருந்து ராணுவத்தை விலக்கிக்கொள்ள வேண்டும். தமிழ்ப் பகுதி சிங்கள மயமாக்கப்படுவதை தடுத்து நிறுத்துவதற்கு ஆதரவாக மாணவர்களின் போராட்டம் அமையவேண்டும்.

மாணவர்கள் இயக்கம் தமிழீழத்திற்கு ஆதரவாக போராடுவதோடு, தங்களுக்கென ஒரு கொள்கைத்திட்டத்தை வகுத்துச் செயல்பட வேண்டும். இந்திய அரசின் தென் ஆசிய துணை மேலாதிக்கக் கொள்கைகளை எதிர்த்தும், இந்தியாவில் உள்ள தமிழ் தேசிய இனம் உள்ளிட்ட அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்காக போராடும் திட்டத்தோடு மாணவர் இயக்கத்தை கட்டியமைக்கவேண்டும்.

காஷ்மீரில் இந்திய அரசு இராணுவத்தை திரும்பப்பெற்று அங்கு ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தவும், வடகிழக்கு மாகாணங்களில் இந்திய இராணுவம் புரிந்துவரும் மனித உரிமை மீறல்களை எதிர்த்தும் மாணவர் இயக்கம் போராட முன்வரவேண்டும். தமிழ் தேசிய இனம் உள்ளிட்ட இந்தியாவின் பிற தேசிய இனங்கள் மீது இந்திய அரசு நடத்திவரும் அரசியல், பொருளாதார, பண்பாட்டு ஒடுக்கு முறைகளுக்கு எதிராகப் போராட மாணவர் இயக்கம் முன்வர வேண்டும். சொந்த நாட்டில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் மக்களின் இயக்கம் ஒன்றுதான் ஈழத்தமிழர்களுக்கு இறுதி வரை ஆதரவளிக்கும் என்பதை மாணவர்கள் உணர்ந்து போராட வேண்டும்.

அடுத்தகட்டமாக மாணவர்கள் அனைத்து மாநில மாணவர்களையும் இணைத்துப் போராடப் போவதாக அறிவித்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். அத்துடன் மேற்கண்ட கோரிக்கைகள்தான் அத்தகைய மாணவர் அமைப்பு உருவாவதற்கு அடிப்படையாக அமையும் என்பதை மாணவர்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். மேலும் தேசிய ஒடுக்குமுறையை எதிர்த்த போராட்டத்தில் விவசாயிகளின் பங்கு மகத்தானதாகும். எனவே மாணவர்கள் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் அணிதிரட்டும் போதுதான் ஈழத்தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க முடியும் என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு தங்களது அடுத்தகட்ட போராட்டத்தை திட்டமிடவேண்டும். மேலும் மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டம் மட்டுமே நடத்தாமல் பல்வேறு போராட்ட வடிவங்களை மேற்கொள்ளத் தயாராக வேண்டும். அத்தகைய ஒரு மாணவர் இயக்கமே தமிழகத்திற்கு அவசியமாக உள்ளது.

போர்க்குற்றம் மற்றும் தமிழ் ஈழம் குறித்து அரசியல் கட்சிகளின் நிலைபாடு

அகில இந்திய தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவக் கட்சிகளான காங்கிரஸ் கட்சியும், பா..கவும் இந்திய அரசின் விரிவாதிக்கக் கொள்கைகளையும், தேசிய ஒடுக்குமுறைக் கொள்கைகளையும் செயல்படுத்தும் கட்சிகளாகும். தொடர்ந்து இக்கட்சிகள் சிங்களப் பேரினவாத அரசைக் காப்பாற்றவும், ஈழத்தமிழினத்தின் விடுதலைக்கான போராட்டத்தை நசுக்கியும் வந்துள்ளன. காங்கிரஸ் கட்சி ஈழத்தமிழின அழிப்புப் போருக்கு மறைமுகமாகத் துணைபோனது. சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் போர்க்குற்றவாளிகளே. அண்மையில் இலங்கை அரசு மேற்கொண்ட போர்க்குற்றம் மற்றும் இன அழிப்பைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர பா.. மறுத்துவிட்டது. அதுவும் காங்கிரஸ் கட்சியை போலவேதமிழ் மக்கள் நலன்என்று தமிழகத்தில் நாடகமாடுகிறது.

காங்கிரஸ், பா.. மட்டுமல்லாது முலாயமின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன் சமாஜ், மம்தாவின் திரிணாமுல் போன்ற மாநில அளவிலான தரகு முதலாளித்துவக் கட்சிகளும் ஈழத்தமிழர்களின் பிரச்சனையை நியாயமற்றவகையிலும், எதிரான வகையிலும் அணுகுகின்றன. இலங்கை அரசை கண்டித்து பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவதை இக்கட்சிகளும் நிராகரித்துவிட்டன. தரகுமுதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் நலன்காக்கும் எந்தவொரு அரசியல் கட்சியும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை ஆதரிக்க மாட்டா. எனேவேதான் இக்கட்சிகள் தமிழீழக் கோரிக்கையை எதிர்த்து செயல்படுகின்றன.

சி.பி., சி.பி.எம் போன்ற திருத்தல்வாத கம்யூனிஸ்டுக் கட்சிகள் தமிழ் ஈழத்தை எல்லாக் காலங்களிலும் எதிர்த்தே வந்துள்ளன. சி.பி. கட்சியானது .நா.வில் அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்று கூறிவிட்டது. இவ்விரு கட்சிகளும் இலங்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவதை எதிர்த்தன.

சி.பி.எம் கட்சியானது ஈழத்தமிழர் பிரச்சனைக்கு ஆயுத மோதல் தீர்வாகாது என்கிறது. தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளை இணைத்து அதிகபட்ச சுயாட்சியே அது முன்வைக்கும் அரசியல் தீர்வாகும். தமிழீழத்திற்கான (தனி நாடு) பொது வாக்கெடுப்பு நடத்தக் கோருவதோ, இலங்கை நட்பு நாடு இல்லை என்று அறிவிப்பதோ இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண வழிவகுக்காது என்பது மட்டுமல்ல தமிழ் மக்களின் பிரச்சனை மேலும் சிக்கலுக்கு இட்டுசெல்லும் என்கிறது.

இலங்கை இராணுவம் இழைத்திட்ட போர்க்குற்றங்கள் (கவனிக்க இராஜபட்சே அல்ல) மீது சர்வதேச புலன் விசாரணை நடத்துவதற்கு பதிலாக, சர்வதேச நீதிபதிகளைக்கொண்ட சுயேட்சையான நம்பகமான விசாரணை செய்து தண்டனை கொடுக்க இராஜபட்சேவை ஏற்கவைக்க இந்தியாவையும் .நா.வையும் நிர்ப்பந்தத்திக்கப் போராட வேண்டுமாம். இவ்வாறு இவ்விரு திருத்தல்வாதக் கட்சிகளும் தமிழ் ஈழத்தை எதிர்ப்பதுடன் ராஜபட்சே கும்பலுக்கும், இந்திய அரசின் விரிவாதிக்கக் கொள்கைகளுக்கும் சேவை செய்கின்றன. இலங்கையின் இறையாண்மையைக் காப்பது எனும் பேரில் சிங்கள இனவெறி அரசுக்குத் துணைபோகின்றன.

தரகுமுதலாளித்துவ மற்றும் திருத்தல்வாதிகளின் அணி வரிசையில் புரட்சி பேசும் புதிய ஜனநாயகம் மற்றும் ... குழுவினர் இராஜபட்சே கும்பலுக்கு ஆதரவாக அணிவகுத்துள்ளனர். “இன்றைய ஈழம், இலங்கை மற்றும் அனைத்து நாட்டு அரசியல் நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டவையல்ல. இன்றைய ஈழப்பிரச்சனையின் யதார்த்த நிலையில் உடனடியான, தற்காலிகத்தீர்வு எதுவும் கிடையாது. எல்லாவற்றையும் அரிச்சுவடியிலிருந்து தொடங்கி அமைப்பையும் இயக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. இனவாத நோக்கில் உலகின் பிற்போக்கு, பாசிச அரசுகளின் தயவை நம்புவதற்கு மாறாக, சிறியவையானாலும் இராஜபட்சேக்களின் பாசிசத்திற்கு எதிராகப்போராடும்சிங்கள ஜனநாயகவாதிகள் உட்பட உலகின் முற்போக்கு, புரட்சிகர சக்திகள் வர்க்க ஒற்றுமையைக் கட்டிப்போராடுவதுதான்தீர்வு என்று பு.. கூறுகிறது.

அதாவது, ஈழம் புதிய சூழ்நிலை, புதிய பாதை என்று கூறி தனி ஈழம் சாத்தியமில்லை என்றும் அக்கோரிக்கையை கைவிடவேண்டும் என்றும் பு.. மற்றும் ... குழுவினர் கூறுகின்றனர். அவர்கள் இன்று மட்டுமல்ல கடந்த 30 ஆண்டு காலமாகவே உதட்டில் ஈழத்தை உச்சரிப்பதும் உண்மையில் ஈழ கோரிக்கைக்கு குழிபறிக்கும் வேலையைத்தான் செய்துவருகின்றனர். தமிழீழத்தை ஆதரிப்பதுபோல் பேசுவது மறுபுறம் இலங்கை அரசின் பாசிசப்போக்கையும் விடுதலைப் புலிகளின் பாசிசப் போக்கையும்  சமப்படுத்தி பேசினர். இறுதியில் புலிகளின் பாசிசப்போக்கை எதிர்த்துப் போராடுவதையே முதன்மைப் பணியாகக் கொண்டனர். இவ்வாறு ஈழப்போராட்டத்துக்கு துரோகம் இழைத்து வந்தனர். அதையேதான் இன்றைய சூழலிலும் அவர்கள் தொடர்கின்றனர்.

இராஜபட்சேவை போர்க்குற்றங்களுக்காக .நா. அவை மூலம் தண்டிக்கவேண்டும் என்று போராடும் மாணவர்களை எள்ளிநகையாடும் ....வினர், “நூரம்பர்க்போன்ற விசாரணைமன்றம் தேவை என புரட்சி வேடம் போடும் ....வினர் ராஜபட்சேவை தண்டித்தால் ஈழத்தமிழர்களுக்கு இன்னல் அதிகரிக்கும் என்று பயமுறுத்துகின்றனர்.

அப்படி ஒரு நடவடிக்கை வந்தால் இராஜபட்சேவை போன்ற ஒரு நரித்தனமான பாசிஸ்டு அதை எப்படி எதிர்கொள்வான் என்பதை நாம் பார்க்கவேண்டும். அதை இலங்கையின்  இறையாண்மை மீது தாக்குதலாக, சிங்கள மக்களுடைய கவுரவத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாக அதை ராஜபட்சே சித்தரிக்கப் போகிறார். அதையட்டி மீண்டும் தேசவெறியும், இனவெறியும் தூண்டப்படும். ஏற்கனவே இலங்கையின் இறையாண்மையில் இந்தியா அல்லது அமெரிக்கா தலையிடுகிறது என்ற கோணத்திலேதான் அங்கேயிருக்கிற சிங்கள இனவெறியர்கள் அதை எழுதுகிறார்கள்,பேசுகிறார்கள்.”என்று ....வினர் எழுதுகிறார்கள்.

அதாவது ராஜபட்சேவை தண்டிப்பதுகூட தமிழர்களுக்கு ஆபத்து என்று அவர்கள் வாதிடுகின்றனர். இதைவிட ராஜபட்சேவுக்கு ஆதரவாக யாராவது பேசமுடியுமா?

அடுத்து ராஜபட்சேவின் இராணுவப் பாசிசத்திற்கு எதிராக சிங்களப்பகுதியில் ஒரு அமைப்பும் போராட முன்வராத ஒரு சூழலில், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்துப் போராட அங்கே ஒரு அமைப்பும் முன்வராத ஒரு சூழலில், இரு இன மக்களும் ஒன்றுசேர்ந்து வர்க்கப்போராட்டம் நடத்தவேண்டும் என்று கூறுவது தமிழீழக் கோரிக்கையை கைவிடச்செய்வதற்கான தந்திரமின்றி வேறென்ன?

இவ்வாறு பு..குழு மற்றும் ....வினர்  உருவாக்கியுள்ள ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர்கள் கூட்டமைப்பும் தமிழீழத்துக்கு துரோகம் செய்வதை மாணவர்கள் புரிந்துகொண்டு புறந்தள்ள வேண்டும். அவர்கள் ராஜபட்சேவுக்கும் இந்திய அரசுக்கும் துணைபோகும் சந்தர்ப்பவாதத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவேண்டும்.

தமிழீழமும்-தமிழக சட்டமன்றத் தீர்மானமும்

மாணவர்களின் போராட்டம் தமிழக மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள எழுச்சியைக்  கண்டு ஜெயலலிதா அரசாங்கம் தமிழக சட்டமன்றத்தில் போர்க்குற்றவாளி இராஜபட்சேவை கூண்டிலேற்ற சர்வதேச விசாரணை, பொதுவாக்கெடுப்பு மூலம் தனி ஈழம் அமைப்பதற்கான ஆதரவு என்ற தீர்மானத்தை இயற்றியுள்ளது. ஏற்கனவே இலங்கை அரசின் மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும் என்று சட்டமன்றத்தில் ஜெயலலிதா  தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

ஆனால் தரகு முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் நலன் காக்கும் மத்திய அரசாங்கம்தான் இந்தத் தீர்மானங்களை நிறைவேற்றும் அதிகாரம் பெற்றுள்ளது. எனவே ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை இந்திய அரசு செயல் படுத்துமா? ஈழத்தில் தமிழர்கள் தனிநாடு அமைத்துக்கொள்ளும் உரிமையை இந்திய ஆளும் வர்க்கங்களும் அரசும் ஆதரிக்குமா? ஏற்கனவே இக்கோரிக்கைகளை ஆதரிக்கமுடியாது என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது. எனவே தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களை செயல்படுத்த ஜெயலலிதா என்னசெய்யப் போகிறார்? மத்திய அரசிடம் அந்தக்கோரிக்கைகளை முன் வைத்துப் போராட வேண்டும். மத்திய அரசு பணியவில்லை என்றால் ஆட்சி அதிகாரத்தை தூக்கியெறிந்துவிட்டு தமிழக மக்களோடு கைகோர்த்துப் போராட தமிழக முதல்வர் தயாராவாரா? கருணாநிதி போலவே கடிதம் எழுதிவிட்டு அமைதியாக இருப்பதை இனி தமிழ் மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள். எப்படி இருப்பினும் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேறியுள்ள தீர்மனங்களை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசை எதிர்த்துப் போராட தமிழக மக்கள் தயாராக வேண்டும்

.தி.மு.கவின் வை.கோ, நெடுமாறன், தமிழ்த்தேசப் பொதுவுடமைக் கட்சியின் மணியரசன் போன்ற தமிழ் தேசியம் பேசுபவர்கள் இது நாள்வரை அமெரிக்காவின் ஆதரவோடு தமிழீழம் பெற்றுவிட முடியுமென்று கூறி வந்தனர். அமெரிக்காவின் ஆதரவை நம்பி கடந்தகாலத்தில் நெடுமாறன் அமெரிக்க தூதுவருக்கு பூச்செண்டுக் கொடுத்தார். வை.கோ ஒபாமாவைப் பாராட்டி புத்தகம் எழுதினார். சென்ற ஆண்டு .நா. மனித உரிமைத் தீர்மானத்தை இவர்கள் ஆதரித்தனர். தற்போது அந்தத் தீர்மானத்தை மாணவர்கள் அம்பல படுத்தியப் பிறகு அதை எதிர்ப்பதாகக் கூறுகின்றனர். ஈழம் உள்ளிட்ட உலகில் எந்த ஒரு ஒடுக்கப்பட்ட தேசிய இனமும் தன்னுடைய சுயநிர்ணய உரிமையை ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடித்தான் பெற முடியும் என்பதை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். தற்போதும்கூட நெடுமாறன், ஈழவிரோத பா.. வின் கூட்டத்தில் பங்கேற்கிறார். இவையெல்லாம் ஏகாதிபத்தியம் பற்றிய இவர்களின் மாயைகளையும், மத்திய ஆளும்வர்க்கங்களுடன் சமரசம் செய்து கொள்வதையும் காட்டுகின்றன. இவர்கள் தங்களது நிலையை மாற்றிக் கொள்ளவேண்டும். மாணவர்களும் இதுபோன்ற சமரசவாத சக்திகளால் ஈழப்போராட்டம் எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகவும்; ஈழத்திற்கு எதிரான அமெரிக்க - இந்திய கூட்டுச்சதியை முறியடிக்கவும்; இந்திய அரசின் விரிவாதிக்க மற்றும் தேசிய ஒடுக்குமுறைக் கொள்கைகளை எதிர்த்துப்போராடவும்; போர்க்குற்றவாளியான இராஜபட்சேவை கூண்டிலேற்றவும்; ஒரு ஒன்றுபட்ட மக்கள் இயக்கத்தை கட்டியமைக்க மாணவர்கள், தமிழ்தேசிய மற்றும் புரட்சிகர சக்திகள் கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் ஓரணியில் அணிதிரளுமாறு அறைகூவி அழைக்கின்றோம்.

«  அமெரிக்காவின் .நா. தீர்மானம் ஈழத்தமிழருக்கு மாபெரும் துரோகம்!

«  போர்க்குற்றவாளிகள் மீதான சர்வதேச விசாரணைக் கோரிக்கைக்கு எதிரான அமெரிக்க-இந்திய கூட்டுச்சதியை முறியடிப்போம்!

«  ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை பேரத்திற்கான ஒன்றல்ல!

«  தமிழீழமே ஈழமக்களின் அரசியல் விடுதலைக்கு ஒரே வழி!

«  ஈழத்தை சிங்களமயமாக்கவும் இராணுவமயமாக்கவும் இலங்கைக்கு இந்தியா துணைபோவதை முறியடிப்போம்!

«  ஈழத்திலிருந்து சிங்கள இராணுவத்தை வெளியேற்றவும், ஈழத் தமிழர்களை சொந்த மண்ணில் குடியமர்த்தவும் உலக மக்கள் ஒன்றுபட்டுப் போராடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
ஏப்ரல் 2013

No comments:

Post a Comment

விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.