இராமதாஸ் கும்பலின், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான
“அனைத்து சமுதாய மக்களின் பாதுகாப்பு முன்னணியை” முறியடிப்போம்!
அன்பார்ந்த
உழைக்கும் மக்களே!
தருமபுரி மாவட்டத்திலுள்ள நத்தம்காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய ஊர்களில்
வசித்துவந்த தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும், அவர்களின் உடைமைகள் மீதும்
பா.ம.க.வைச் சார்ந்த வன்னிய சாதிவெறியர்கள், திட்டமிட்டு ஒரு சாதிவெறித்
தாக்குதலை நடத்தி முடித்தனர். முன்னூறுக்கும் மேற்பட்ட வீடுகளைக் கொளுத்தினர்.
வன்னியச் சாதியைச் சார்ந்த ஒரு பெண், தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த
இளைஞர் ஒருவரை காதலித்து கலப்புமணம் புரிந்துகொண்டதைக் காரணம் காட்டி இந்தக்
கலவரம் நடத்தப்பட்டது.
கடந்த நவம்பர் 7ல், தருமபுரியில் நடந்த அந்தக் கலவரம்
அத்துடன் நிற்கவில்லை. தொடர்ந்து கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக சாதிக் கலவரத்தை வன்னியச் சாதிவெறியர்கள்
கட்டவிழ்த்து விட்டுள்ளனர். குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் மேலிருப்புக்
கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதோடு, அவர்களின் வீடுகளையும் தீவைத்துக்
கொளுத்தியுள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்கின்றன. தர்மபுரி
கலவரத்திற்கு பின்பு பா.ம.க நிறுவனர் இராமதாஸ் தாழ்த்தப்பட்டச் சாதி மக்களுக்கு
எதிராக பிற்படுத்தப்பட்ட சாதிகளின் அமைப்பு ஒன்றை உருவாக்கி தாழ்த்தப்பட்ட
மக்களுக்கு எதிராக அனைத்து மாவட்டங்களிலும் கூட்டங்களை நடத்தி வருகிறார்.